Monday, September 13, 2010

மலையக மக்களை நாம் மறக்க வில்லை…!இலங்கையில் வடக்கு கிழக்கு தவிர்ந்த மத்திய மலை பிரதேசத்தில் செறிந்து வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களை நாம் மறக்க வில்லை. மறக்கவும் முடியாது.தென்னிந்தியாவிலிருந்து அவர்கள் உழைக்கும் மக்களாக இங்கு வந்த காலம் முதல் இப்போதுள்ள சூழல் வரை எல்லாம் அறிந்து வைத்துள்ளோம். இப்படி ஒரு மக்கள் கூட்டம் இருப்பதை அறியாமலில்லை என்று கூறுகிறார் பாடகர் பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி ஜி.சிவசிதம்பரம்.வீரகேசரி பத்திரிகையின் 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தலைநகர் கொழும்பு ,யாழ்ப்பாணம் ,மற்றும் மலையகத்தில் கொட்டகலை ஆகிய இடங்களில் இன்னிசை கச்சேரிகள் நடத்தி இசை ஆர்வலர்களை மட்டுமன்றி தனது அமைதியான அன்பான குணத்தின் மூலம் பலரினதும் மனதில் இடம்பிடித்து விட்டார் டாக்டர் சீர்காழி ஜி.சிவசிதம்பரம். சரீரத்தில் மட்டுமன்றி சாரீரத்திலும் தனது தந்தை சீர்காழி கோவிந்தராஜனை எமது கண் முன் கொண்டு வந்து ஆச்சரியப்படுத்திய அவரை சூரியகாந்தி பத்திரிகைக்காக அட்டனில் சந்தித்த போது அவர் தெரிவித்த கருத்துக்கள்.
மலையகம் என்ற சொற்பதம் எமக்கு புதியதல்ல அதன் தரைத்தோற்றம் மக்கள் ,அவர்களின் பண்புகள் எல்லாம் அறிந்து தான் வைத்துள்ளோம். எனது தந்தைக்கு எந்தளவிற்கு இங்கு இரசிகர்கள் உள்ளனரோ அதே போல் எனக்கும் எனது குழுவினருக்கும் இங்கு கிடைத்த வரவேற்பு நெகிழ்ச்சியைத் தருகிறது. 80 வருடம் தொடர்ச்சியாக ஒரு தமிழ் பத்திரிகை இலங்கையில் வந்து கொண்டிருப்பது ஆச்சரியம் அந்த பத்திரிகை நிறுவனத்தின் அழைப்பின் பேரில் என்னையும் எனது குழுவினரையும் அழைத்து இன்னிசை கச்சேரி நடத்தி எமக்கு மாபெரும் கௌரவத்தை அளித்து விட்டனர். என்று தான் கூற வேண்டும்.
மேலும் இவ்வாறான இசை நிகழ்வுகள் எமது உறவை மேலும் வலுப்படுத்துகின்றன. கலைகளுக்கு மொழியோ மதமோ ஒரு தடையாக இருப்பதில்லை. அதை பலமுறை பல சந்தர்ப்பங்களில் நாம் அவதானித்துள்ளோம் அனுபவித்துள்ளோம். இவ்வாறான நிகழ்வுகள் எம்மை மட்டுமல்லாது அனைத்து மொழி பேசும் மக்களுக்கும் உள அமைதியையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகின்றன. இன்னிசை கச்சேரிக்காக இலங்கை மண்ணில் கால் பதித்த நாள் முதல் எமக்குக்கிடைத்த வரவேற்பும் அன்பும் மறக்க முடியாதவை. எனது தந்தையின் குரல் எனக்கு இருப்பதாக பலரும் கூறி ஆச்சரியப்படுகின்றனர்.இது எனக்குக்கிடைத்த வரம் என்றே கூற வேண்டும். குரலை வளப்படுத்த நான் விசேடமாக எதுவும் செய்வது கிடையாது. அதை அப்படியே விட்டு விட வேண்டும் என்று தான் கூறுவேன்.குரலை கடினப்படுத்தி பாடல்கள் என்ற பெயரில் சத்தமிடுவதை தவிர்த்தாலே போதும்.
மலையகத்தில் கொட்டகலை நகரில் நான்கு மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக இன்னிசை கச்சேரி நடந்தது.அனைவரும் அமைதியாக அமர்ந்து மெய்மறந்து இரசித்து பார்த்தது மட்டுமன்றி தமக்கு விருப்பமான பாடல்களை எழுதி தந்தனர். அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றினோம். எம்மேல் அவர்கள் வைத்திருந்த அன்பின் வெளிப்பாட்டை மனமகிழந்து ஏற்றோம் என்றார்.
உங்களது தந்தை பக்தி பாடல்களால் புகழ் பெற்றவர் நீங்கள் விரும்பி வணங்கும் தெய்வம் யார் என்று கேட்டதற்கு சட்டென தாய் தான் என்று பதில் வந்தது. அதற்கு காரணமும் கூறினார். தந்தை தாயை விட வேறு தெய்வங்கள் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை. அதிலும் சிறுவயதில் சோறுட்டி ,பாலூட்டி ,தாலாட்டி ,சீராட்டி வளர்ப்பதில் தாயின் பங்கை எவரும் நிரப்பி விட முடியாது. பிள்ளையின் முதல் சொந்தம் தாய் தானே? நான் இன்றும் எனது தாயுடன் தான் வசித்து வருகிறேன் என்கிறார் சீர்காழி .ஜி.சிவசிதம்பரம். வித்தியாசமான அதே நேரம் மலையக மக்களையும் ஞாபகத்தில் வைத்திருக்கும் ஒரு இன்முகக் கலைஞரை சந்தித்ததில் மனம் நிரம்பியிருந்தது.
சிவலிங்கம் சிவகுமாரன்

Monday, July 19, 2010

இந்திய வம்சாவளியினரா மலையகத்தமிழர்களா நாங்கள்?

இத்தனை காலமும் இல்லாத சந்தேகம் இப்போது ஏன் திடீரென ஏற்பட வேண்டும் என்று பலர் நினைக்கக்கூடும் ஆனால் தமிழர்கள் என்ற பொதுவான அடையாளப்படுத்துதலின் கீழ் மலையக மக்கள் என்று கூறப்படுவோர் இன்று இல்லை அல்லது அவர்கள் வேறு விதமாக புரிந்து கொள்ளப்படுகின்றார்கள் என்ற சர்ச்சைகளுக்கு மத்தியிலேயே இப்படி ஒரு கேள்வியை கேட்கத்தோன்றியது. அண்மையில் கோவையில் இடம்பெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கூட மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்து கொண்ட குழுவினருக்கும் இதே அனுபவம் தான் ஏற்பட்டிருக்கிறது. நாங்கள் மலையகத்தமிழர்கள் என்று ரீதியில் ஒரு சமுக அந்தஸ்த்தோடு கூற விழைந்த போது மலையகமாக அது எங்குள்ளது நீங்கள் மலைச்சாதியினரா என்ற வகையில் வினா எழுப்பப்பட்டுள்ளது. மேற்படி குழுவுக்கு தலைமை தாங்கிய கவிஞர் சு.முரளிரதன் இச்சம்பவத்தை ஒரு நிகழ்வில் வேதனையோடு கூறியதை எவர் அலட்சியப்படுத்தினாலும் எம்மால் இருக்க முடியாது என்ற நிலையிலேயே விவாதத்திற்குரிய இவ்விடயம் பற்றி எல்லோரும் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறோம், காரணம் இன்னும் ஆயிரம் வருடங்களுக்குப்பிறகு நாம் குறிப்பிடும் மலையக சமுகம் அந்தப்பெயருடனேயா அல்லது வேறு பெயருடனேயா இருக்கப்போகின்றது, இயங்கப்போகின்றது என்பதை தீர்மானிக்கும் சக்திகளாக ஏன் இப்போதுள்ளவர்கள் விளங்கக்கூடாது என்ற கேள்வியும் எழாமலில்லை.
இச்சந்தர்ப்பத்தில் மேற்கூறிய விடயம் பற்றி அலசி ஆராய்வதற்குப் பல காரணங்கள் முன்னிற்கின்றன.

1)தென்னிந்தியாவிலிருந்து உழைக்கும் வர்க்கமாக இலங்கை வந்த ஒரு மக்கள் கூட்டம் இன்னமும் இங்கு வாழ்ந்து கொண்டிருப்பது பற்றி இந்தியாவில் உள்ள பெரும்பாலனவர்களுக்கு ஏன் தமிழ் நாட்டினருக்கே தெரியாமலிருப்பது.


2) இலங்கை தமிழர்கள் அல்லது இலங்கை தமிழ், இலக்கியம்,கலாசாரம்,பாரம்பரியம் என்றால் அது ஒன்று தான் இருக்கின்றது இருக்க வேண்டும் என்ற ரீதியில் இன்று உலகம் முழுக்க பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றமை.


3)இப்படி ஒரு தமிழ் பேசும் சமுகம் இருக்கும் பட்சத்தில் அவர்களின் எங்கிருந்து வந்தார்கள் அவர்களின் அடையாளப்படுத்தல் என்ன ஏன் அப்படி இருக்க வேண்டும் என்ற அக்கறை எவருக்கும் இல்லாது போனமை.


4) இந்நிலையில் மலையகம் என்ற பதம் பலருக்கு விளங்காத ஒரு சொல்லாகவும் கேலிக்குரிய விடயமாகவும் ஆக்கப்பட்டிருக்கின்றமை.


அண்மையில் புதிதாக வெளிவந்திருக்கும் ஒரு தமிழ் வாரமலரின் ஆசிரியத்தலையங்கத்திலேயே மலையக மக்கள் மலைபிரதேச மக்கள் என்று விளிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் ஒரு மக்கள் கூட்டத்தினரை அப்பிரதேச புவியியல் அம்சங்களை வைத்து பெயர் சூட்டி அழைக்கும் பண்பு என்பது வேறு அதை இதோடு ஒப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். சங்க காலத்தில் மலையும் மலை சார்ந்த மக்களை குறிஞ்சி நில மக்கள் என்று அழைத்ததுண்டு. இப்போது அப்படியல்லவே? ஆபிரிக்காவின் சகாரா பகுதி வாழ் மக்களை பாலைவனக்கூட்டம் என்றா அழைக்கிறோம் அல்லது இமயமலை நேபாளம் பகுதி வாழ் மக்களை பனி மலை பகுதி வாழ் மக்கள் என்றா அழைக்கிறோம்? தமிழ் நாட்டைப்பொறுத்த வரை மலைசாதியினர் அல்லது மலைப்பகுதி மக்கள் என்று குறிப்பிடப்படுவோர் பூர்வீகக்குடிகள் அல்லது ஆதிவாசிகள் என்றே பொருள்படும். இந்தியாவில் 416 வகையான ஆதிவாசிகள் உள்ளனர். சரி விடயத்திற்கு வருவோம். மலையக மக்கள் என்ற பதம் எவ்வாறு உருவானது?
1844 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து இலங்கை கோப்பி தோட்டங்களில் பணி செய்வதற்காக லுதினன் கேர்னல் ஹென்றி சி.போர்ட் என்பவர் 14 பேரை அழைத்து வந்ததோடு வரலாறு ஆரம்பிக்கின்றது. ( ஆனால் 1818 ஆம் ஆண்டே இந்தியாவிலிருந்து இலங்கையின் மத்திய மலைப்பிரதேசத்திற்கு மக்கள் வந்ததாக ஒரு குறிப்பு கூறுகிறது)
இவர்கள் இலங்கையின் மத்திய மலைப்பிரதேசங்களுக்கே முதன் முதலில் வந்தனர் என்று வரலாறு கூறுகிறது.மலைகள் சூழந்த பிரதேசமாகையால் இப்பகுதி வாழ் மக்கள் மலைய மக்கள் என்று அழைக்கப்பட்டனர் என குறிப்பிடப்பட்டாலும் 1950 களுக்குப்பிறகே மலையகம் என்ற பதம் தோற்றம் பெற்றது. புவியியல் ரீதியில் சப்ரகமுவ குன்றுகளை தவிர்த்து கடல் மட்டத்திலிருந்து 300 மீற்றருக்கு மேல் அமைந்துள்ள பகுதிகள் மலையகம் என வரையறுக்கப்படுகிறது. ஆனால் சமுகம் சார்ந்து பார்க்கும் போது மாத்தளை,கண்டி,பதுளை,இரத்தினபுரி,கேகாலை, ஏன் தென் பகுதியின் காலி மாவட்டத்திலும் தென்னிந்தியாவிலிருந்து வந்த மக்கள் வாழ்கின்றார்கள். அப்படியானால் அவர்களை மலையகத்தவர்கள் என்று அழைப்பது சரியாகுமா?
மலையகம் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வருகின்றன ஆனால் எமது அடையாளம் என்பது இந்திய வம்சாவளி தமிழர்கள் தான் அதை எப்படி மாற்ற முடியும் என்ற பதில் குரல்களும் எழாமலில்லை.இந்தியாவின் அடைமொழியோடு நாம் வாழ விரும்பவில்லை இப்படி ஒரு மக்கள் கூட்டம் இருப்பதை அவர்கள் அறியாமலிருக்கும் போது ஏன் அந்தப்பெயரை நாம் சூட்டிக்கொள்ள வேண்டும் என்ற இளந்தலைமுறையினரின் கோபத்திலும் நியாயம் இல்லாமலில்லை. இது குறித்து ஒரு சந்தர்ப்பத்தில் சிரேஷ்ட தொழிற்சங்கவாதியான ஓ.ஏ.இராமையாவுடன் கலந்துரையாடிக்கொண்டிருக்கும் போது அவர் சில விளக்கங்களை கூறினார்.
‘ஒவ்வொரு சமுகத்திற்கும் ஒரு வரலாறு உண்டு ,வரலாற்றை திரிபுபடுத்த எவராலும் முடியாது.தென்னிந்தியாவிலிருந்து பணி செய்வதற்காக வந்த மக்கள் இலங்கைக்கு மட்டுமா வந்தார்கள்? மலேஷியா ,மொரிஷியஸ் நாடுகளுக்கும் சென்றார்கள்.அவர்கள் தாம் வாழ்ந்த பிரதேசத்திற்கு ஏற்ப சமுகப்பெயர்களை சூட்டிக்கொள்ள வில்லை.இன்றும் மலேஷியாவில் இந்திய வம்சாவளி தமிழர்கள் என்ற பதத்தை தான் பாவிக்கின்றனர். ஆகவே எமது வேர் இந்தியா தான் என்பதில் சந்தேகமில்லை. தொழில் ரீதியாக பார்க்கும் போது பெருந்தோட்டத்தொழிலாளர்கள் என்று கூறுவதில் தப்பில்லை. ஆனால் மலையகத்தவர் என்ற பதத்தை எப்படி ஏற்றுக்கொள்வது? இன்னும் ஆயிரம் வருடங்கள் சென்றாலும் எம்மை இந்திய வம்சாவளி தமிழர்கள் தான் என்றே வரலாறு கூறும் காரணம் அது தான் உண்மை. ஏன் எமது பிறப்பத்தாட்சி சான்றிதழ்களில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது? மலையகத்தமிழர் என்றா உள்ளது? அப்படி மலையக சமுகம் என்று நாம் கூறிக்கொண்டாலும் அதை அரசாங்கத்திடம் கூறி சான்றிதழலில் மாற்றிக்கொள்ளத்தான் முடியுமா? இந்திய வம்சாவளி மக்களை ஓரங்கட்டுவதற்கும் அவர்களை கேலிப்பொருளாக சித்திரிப்பதற்கும் பலர் இன்று முனைப்பாக உள்ளனர்.ஒரு பேராசிரியர் சி.வி.வேலுப்பிள்ளையை தோட்டக்கவிஞர் என்று வர்ணிக்கிறார் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியுமா? எமக்கென்று ஒரு வரலாறு உள்ள போது இடையில் ஏற்படுத்திக்கொண்ட ஒரு பெயரை வைத்துக்கொண்டு வாழ்தல் சரியா என்பதை சிந்திக்க வேண்டும்” என்றார்
எங்கள் சமுகத்தை நாம் எப்பெயர் கொண்டு அழைக்க வேண்டும் என்பது வாத பிரதிவாதங்களுக்கு உட்டபட்ட விடயம் எனினும் காலத்தின் தேவை அறிந்து இது குறித்து நாம் உடனடியாக செயற்பட வேண்டிய விடயமாகி விட்டது. கல்விமான்கள் ,புத்தி ஜீவிகள் , அரசியல் தொழிற்சங்க பிரதிநிதிகள் இது குறித்து ஆக்கபூர்வமான கருத்துகளை முன் வைக்க வேண்டும் என்பது எமது தாழ்மையான வேண்டுகோள்.


சிவலிங்கம் சிவகுமாரன்

Monday, March 8, 2010

இலங்கை அரசியலும் பெண்களின் பங்களிப்பும்.
* இலங்கையின் சனத்தொகையில் 52 வீதமானோர் பெண்களாவர்.


* 1931 ஆம் ஆண்டே வாக்களிக்கும் உரிமையை இலங்கை வாழ் பெண்கள் பெற்றனர் எனினும் இது வரையில் அவர்களின் அரசியல் பங்களிப்பு மோசமாகவே உள்ளது.


இலங்கை பாராளுமன்றத்தில் பெண்கள்
ஆண்கள் 212
பெண்கள் 13
மொத்தம் 225*1931 ஆம் ஆண்டு பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியதன் மூலம் ஆசியா,ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவைச்சேர்ந்த நாடுகள் வரிசையில் இலங்கை இவ்விடயத்தில் முதல் நாடு என்ற பெருமையைப்பெற்றது.


*1960 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையோடு பதவியேற்றார்.


*1994 ஆம் ஆண்டு இலங்கையின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை சந்திரிகா குமாரதுங்க பெற்றார்.


பல்வேறு காலகட்டங்களில் பல தேர்தல்களை சந்தித்த நாடு என்ற வகையில் இலங்கையைப்பொறுத்தவரை சுதந்திரத்திற்கு பிற்பட்ட காலத்திலிருந்து இன்று வரை அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பதாக கொழும்பு லிப்டன் சதுக்கத்தில் இடம்பெற்ற ஒரு பெண்கள் ஒன்றுகூடல் நிகழ்வில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை வலியுறுத்தியதோடு அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும்படியும் கோரிக்கைகளை முன்வைத்தனர். பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவருக்கும் இப்பெண்கள் எழுத்து மூலமான தமது கோரிக்கைகளை சமர்ப்பித்திருந்தனர் என்பதும் முக்கிய அம்சம்.எனினும் எதிர்காலத்தில் இது எந்த விதத்தில் சாத்தியப்படப்போகிறது என்பது கேள்விக்குறியே. இலங்கை நாட்டைப்பொறுத்தவரை அரசியலில் பெண்களின் பங்கு என்று பார்க்கும் போது உலகின் முதல் பெண் பிரதமர் மற்றும் இலங்கையின் முதல் பெண் ஜனாதிபதி என்ற வரையறையோடு அது நின்று விட்டதை காணக்கூடியதாக உள்ளது.
1931 ஆம் ஆண்டு இலங்கையில் பெண்கள் வாக்களிக்கும் உரிமையைப்பெற்றனர். இதன் மூலம் ஆசியா,ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகள் வரிசையில் பெண்களுக்கு இவ்வரிமையை அளித்த முதல் நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றது. 1960 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைப்பெற்றார். 1994 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையையும் பெற்றார். வெவ்வேறு காலகட்டத்தில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் ஒரு சில தேர்தல் தொகுதிகளைப்பிரதிநிதித்துவப்படுத்தி பெண்கள் சிலர் பாராளுமன்ற பிரவேசம் செய்தாலும் இலங்கை அரசியலில் முத்திரைப்பதித்த பெண் அரசியல்வாதிகள் என்ற வரையறைக்குள் எவரையும் அடக்க முடியாத நிலைமையே உள்ளது.இதற்கு என்ன காரணம் என்பது முக்கிய விடயம்.
இலங்கையை விட பெண்கள் விடயத்தில் இறுக்கமான கலாசார பின்புலத்தைக்கொண்ட ஏனைய நாடுகளில் அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்பது அதிகமாக உள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. உதாரணமாக பங்களாதேஷ் பாராளுமன்றத்தில் உள்ள மொத்த உறுப்பினர்களில் 18.6 வீதமானோர் பெண்களாவர். தென்கிழக்காசிய நாடுகளை வரிசைப்படுத்தினால் இலங்கை பாராளுமன்றமே மிகக்குறைவான வீதத்தில் பெண்களைக்கொண்டிருக்கின்றது 225 உறுப்பினர்களில் 13 பேர் மட்டுமே பெண்கள்.
முதலில் உள்ளூராட்சி தேர்தல்களில் பெண்களின் பங்களிப்பை ஈடு செய்யும் வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும். ஆனாலும் இலங்கையைப்பொறுத்தவரை உள்ளூராட்சி அமைப்புகளில் (பிரதேச,நகர ,மாநகர சபைகள்) பெண்களின் உறுப்புரிமை 1.8 வீதமாகவே உள்ளது. மாகாணசபைகளில் 4.1 ஆகவும் பாராளுமன்றத்தில் 5.8 ஆக உள்ளது.
இதன் காரணமாகவே காலாகாலமாக பெண்களின் அரசியல் பிரவேசம் குறித்து குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இங்கு ஏற்படவில்லை. வேட்பாளர் பட்டியலில் 30 வீதம் பெண்கள் இருக்க வேண்டும் என்பது ஒரு சில பெண்கள் சார் அமைப்புகளின் கோரிக்கை. இருப்பினும் இந்த முறையில் தேர்தல்களில் பெண் வேட்பாளர்களை களமிறக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளோ தொழிற்சங்கங்களோ தமக்குரிய பெரும்பான்மை இல்லாது போய்விடும் என்ற மறைமுக அச்சத்தை கொண்டிருக்கின்றன. இதன் காரணமாகவே தொழிற்சங்கமோ அரசியல் கட்சியோ பெண்கள் தலைமைத்துவத்தைப்பொறுத்தவரை வெறும் மாவட்ட தலைவி,மகளிர் அணித்தலைவி என்ற வரையறைக்குள் மட்டும் அவர்களை வைத்துக்கொள்வதில் திருப்தி காண்கின்றன. இது மலையக அரசியலில் மட்டும் காணப்படும் ஒரு சாபக்கேடாகும். பெரும்பான்மை இனத்தைப்பொறுத்தவரை பெண்கள் தலைமைத்துவம் என்ற விடயத்தை அவர்கள் கையாளும் முறை பற்றி தமிழ் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது. இன்று கிராமப்புறங்களில் கூட பல அரசியல் கட்சிகளுக்கு உந்துசக்தியாக பெண்கள் இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.
அரசியலில் பெண்கள் அங்கத்துவத்தை அதிகரிக்க தொகுதி வாரியாக பெண்களின் இருப்பை உறுதி செய்யும் முறையிலான அம்சங்களை அறிமுகப்படுத்தினோலே போதுமானது.உதாரணமாக இந்தியாவில் மாநிலங்களில் இடம்பெறும் உள்ளூராட்சி தேர்தல்களைக்கூறலாம். இங்குள்ள தொகுதிகளில் மூன்றில் ஒரு பகுதி தொகுதிகள் பெண்களுக்காக பதிவு செய்யப்பட்டிருக்கும்.கட்டாயமாக பெண்களே இத்தொகுதியில் போட்டியிட வேண்டும். இந்த முறை காரணமாக கிராமப்புறங்களிலிருந்து இலட்சக்கணக்கான பெண்கள் உள்ளூராட்சி மன்றங்களுக்குத்தெரிவு செய்யப்படுவதோடு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஆரம்பகட்ட வாய்ப்பினை உறுதி செய்கின்றனர். இதனூடாக தமது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கின்றனர்.
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 52 வீதமானோர் பெண்கள்,அதே வேளை வாக்களிக்கும் உரிமையைப்பெற்றிருப்பவர்களிலும் 56 வீதமானோர் பெண்களே. இதை வைத்துப்பார்க்கும் போது எமது நாடு அரசியலில் எந்தளவிற்கு பெண்களை உள்ளீர்த்திருக்க வேண்டும் என்பதை சொல்லிப்புரியவைக்க வேண்டியதில்லை.
மேலும் தற்போதுள்ள அரசியல் செயற்பாடுகளை கருத்திற்கொண்டு பல படித்த பெண்கள் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கிப்போகின்றனர் எனலாம். வன்முறை அரசியல் தலைதூக்கியுள்ள இச்சந்தர்ப்பத்தில் பெண்கள் எங்ஙனம் அரசியலில் ஈடுபட அக்கறை காட்டுவர்?
எனினும் பாராளுமன்ற அரசியல் வரை உடனடியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை.முதலில் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வழிவகைகள் துரிதப்படுத்தப்படவேண்டும் என்பதே பலரினதும் அவா.இது குறித்த அழுத்தங்களை மேற்கொள்ள பெண்கள் தான் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் முன்வருவீர்களா சகோதரிகளே?