Monday, October 25, 2021

புத்தர் பரிநிர்வாணமடைந்த நகரமும் பகவத் கீதையும்....!

 

உத்தரபிரதேசத்தின் குஷிநகரில் சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவுக்கு முதன் முதலாகச் சென்று  தரையிறங்கியவர்கள்   என்ற பெருமையை எமது  நாட்டின் அமைச்சர் நாமலும் அவரோடு சென்ற சுமார் 100 பௌத்த பிக்குகளும் பெற்றிருக்கின்றனர். இந்த பயணத்தில் தமிழ்ப்பிரதிநிதியாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இ.தொ.கா பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானும் கலந்து கொண்டிருக்கிறார்.

உத்தர பிரதேசத்திலமைந்த குஷி நகர் ஆனது அனைத்துலக பௌத்தர்களின் (  பௌத்த சிங்களவர்களினது மட்டுமல்ல) புனித தலமாக விளங்குகின்றது.  பௌத்த கோட்பாட்டை உருவாக்கிய சித்தார்த்த கௌதமர், பிறந்த இடம் நேபாள நாட்டின் லும்பினி எனும் இடமாகும். பின்பு ஞானம் பெற்று புத்தர் ஆன பிறகு தனது 80 ஆவது வயதில் அவர் பரிநிர்வாணம் அடைந்த நகரமே உத்தர பிரதேசத்தின் குஷி நகரம்.

அங்கு அமைக்கப்பட்ட விமான நிலையத்தின் திறப்பு விழாவுக்கே இலங்கையிலிருந்து சுமார் 110 பேர் விசேட விமானத்தில் சென்றிருந்தனர். இவ் விமான நிலையத்தை கடந்த 20 ஆம் திகதி  இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.  குஷி நகரத்தின் சிறப்புகள் என்னவென்றால் புத்தர் பரிநிர்வாணம் அடைந்த  கோவில், அவரது உடல் தகனம் செய்யப்பட்ட இடம், அவரது அஸ்தி பாதுகாக்கப்படும் பகுதி என முக்கியமான அம்சங்கள் உள்ளன.  புத்தர் பிறந்த நேபாள நாட்டின் எல்லைப்புறத்தின் மிக அருகே இந்த நகர் அமைந்துள்ள அதே நேரம்  இராமர் பிறந்ததாக கூறப்படும் அயோத்யா நகரமும் அருகிலேயே உள்ளது.

மட்டுமின்றி இந்த உத்தரபிரதேசமானது  நாட்டின் மிகப்பெரிய மாநிலமாகும். முதல்வராக இருப்பவர் யோகி ஆதித்யநாத் என்ற துறவியாவார்.

இந்த நிகழ்வில் இலங்கை நாட்டின் பிரதிநிதியாக கலந்து கொண்ட அமைச்சர் நாமல் இந்திய பிரதமர் மோடிக்கு மும்மொழி பகவத் கீதை நூலை அன்பளிப்பாக வழங்கினார். இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே 2500 வருடங்களாக காணப்படும் நட்புறவின் அடையாளமாகவும் பாரத தேசம் இந்த உலகிற்கு தந்த மிக புனிதமான நூாலாகவும் விளங்கும் பகவத் கீதை மும்மொழி வெளியீட்டின் முதற் பிரதியாகவும் இந்த பகவத் கீதை நூல் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.

 பாரத தேசம் தந்த பகவத் கீதையானது சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக இது இருக்கலாம். ஆனால் அது உலகெங்கினும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. குருஷேத்திர போரின் போது தனது எதிரணியில் உறவினர்களையும் , வித்தைகள் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களையும் எதிர்ப்பதா என அருச்சுணன் மனங்கலங்கி நின்றபோது அவனது தேரோட்டியாக செயற்பட்ட கிருஷ்ணன் வாழ்க்கையின் தத்துவங்களை உபதேசமாக கூறி அருச்சுணனை தேற்றி போருக்கு தயார்ப்படுத்துவதே கீதா உபதேசமாக விளங்குகின்றது. மகாபாரதம் ஏராளமான உபகதைகளையும் சம்பவங்களையும் கொண்ட ஒரு திரட்டு. அதில் யுத்த களத்தில் அருச்சுணனுக்கு கிருஷ்ணன் உபதேசிக்கும் சம்பவமே கீதாஉபதேசமாகியது.

'தர்மத்தை நிலைநாட்டவும் அதர்மத்தை எதிர்க்கவும் சூழ்நிலைகள் தோன்றும் போது   உறவினர், நண்பர், குரு என்றெல்லாம் பார்ப்பது நியாயமில்லை. நீ உனது கடமையையே செய்கிறாய் ' என்கிறார் கிருஷ்ணர்.

ஆனால் குருஷேத்திர போர் உருவாக பின்னணி காரணம் என்ன என்று கேட்டால்  அது மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை என மிக சுருக்கமாக மூன்று விடயங்களை மாத்திரமே கூறுவர் ஆன்றோர். ஆகவே கௌதம புத்தர் பரிநிர்வாணம் அடைந்த குஷிநகரில் இந்த நூலை அமைச்சர் நாமல் வழங்கியதற்கும் புத்தருக்கும் தொடர்புகள் இருக்கின்றன. ஏனென்றால் இளவரசராக இருந்த அவரும் அற்ப ஆசைகளை வெறுத்து ஒதுக்கி  ராஜபோக வாழ்க்கையை தவிர்த்து துறவறம் பூண்டார். ஆனால் தன்னைப் போன்று அனைவரும் செயற்பட வேண்டும் என்று கூறவில்லை. ராஜபோகத்தை வெறுத்து ஒதுக்கி வந்ததால் தான் பல தத்துவங்களை அவரால் கூற முடிந்தது.   அளவிற்கு அதிகமான ஆசையே துன்பத்துக்கு காரணம் என்ற ஞானத்தையே புத்தர் பெற்றார்.

உத்தர பிரதேச மாநிலத்திலமைந்த குஷி நகருக்கு உலகெங்கினும் பௌத்த மதத்தை பின்பற்றுவோர் வந்து செல்கின்றனர். அந்த நாடுகளுடன்  ஒப்பிடும் போது, பௌத்த மதத்தை பின்பற்றும் குறைவானவர்களை கொண்ட நாடாகவே இலங்கை விளங்குகின்றது. ஆனால் புத்தர் பிறந்தவுடனேயே  இந்திய -இலங்கை தொடர்புகள் உருவானதென்றும்  அதற்கும் முன்னர் இரு நாடுகளுக்குமிடையில் எந்த தொடர்புகளுமே இல்லை என்ற அடிப்படையிலேயே தவறான கருத்தியல்கள் இப்போதும்  முன் வைக்கப்பட்டு வருகின்றன. அதில் இந்த சம்பவமும் ஒன்று.

  அதைத்தான் ஜனாதிபதியும் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான 2500 வருட தொடர்புகள் என்று அழுத்தி கூறுகிறார். பகவத் கீதையை தந்த பாரத தேசம் தான் இராமாயணத்தையும் தந்தது. ஆனால் இராமாயணம் இலங்கையோடு மிகவும் தொடர்புடைய காவியம்.  இராமாயண சம்பவங்களோடு தொடர்புடைய பல இடங்கள் இலங்கையில் இருக்கின்றன. எனினும் இங்குள்ள கடும்போக்கு சிங்கள பௌத்த பிக்குகள் இராமரை, அந்நிய தேசத்திலிருந்து இலங்கைக்கு  படையெடுத்து வந்த ஒரு சக்தியாக பார்க்கும் அதே வேளை இலங்கையை மீட்க போராடி உயிர்நீத்த மன்னராகவும் மண்ணின் மைந்தனாகவும்  இராவணனை போற்றுகின்றனர். அதன் விளைவாகவே இராவண பல சேனா போன்ற அமைப்புகளும் தோற்றம் பெற்றன.

கூறப்போனால் இராமாயணம் மகாபாரதத்துக்கு முந்தியது என்றே கூற வேண்டும். ஏனென்றால் மகாபாரதத்தின் 18 காண்டங்களில் மூன்றாவது காண்டமான ஆரண்ய காண்டத்தில், அதாவது பாண்டவர்களின் வனவாச காலத்தில், மார்க்கண்டேய முனிவர் இராமாயண நிகழ்வுகளை தருமனுக்கு எடுத்துரைக்கின்றார் என்பது முக்கிய விடயம். ஆனால் மகாபாரதத்துக்கும் இலங்கைக்கும் தொடர்புகள் இருக்கின்றதா இல்லையா என்பதை கூற முடியாதுள்ளது. அல்லது உறுதியான வரலாற்று தகவல்கள் இல்லை. ஆகையால் தான் அது மும்மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதோ தெரியவில்லை.

  இது வரை ஏன் கம்பராமாயணம் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்படவில்லையென எவரும் கேள்வி கேட்க முடியாது. ஏனென்றால் புத்தர் பிறப்பதற்கு முன்னரே இராமர் இலங்கை வந்து சென்று விட்டாரா ? இராவணன் என்ற தமிழ் மன்னன் ,சிவபக்தன் இலங்காபுரியை ஆண்டானா என கடும்போக்குவாதிகள் கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவர்.

எது எப்படியானாலும் இங்கு வாழ்ந்து வரும் பௌத்த சிங்கள மக்களினதும் அவர்களின் மனவோட்டத்தை புரிந்து அரசியல் செய்யும் பிரதான கட்சிகளினதும் நிலைப்பாடு என்னவென்றால் கௌதம புத்தர் பிறந்து பிறகே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது என்பதாகும். இதன் காரணமாகவே அவர் பிறந்த தினமான புத்த பூர்ணிமா அல்லது புத்த ஜெயந்தியை இலங்கை வாழ் மக்கள்  தமது வரலாற்றின் தினமாக கொண்டாடுகின்றனர்.

அதே போன்று இலங்கை வரலாறு என்பது மகாவம்சத்திலிருந்தே ஆரம்பிக்கின்றது என கடும்போக்கு வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் இன்று வரை கூறி வருகின்றனர். அதற்கு முன்பு இங்கிருந்த அரசியல், கலாசார ,பண்பாட்டு விடயங்கள் பற்றிய ஆய்வு அவர்களுக்கு முக்கியமில்லை. தேவையுமில்லை.

இப்போது குஷிநகர் என்பது இலங்கையுடன் மிகவும் தொடர்புடைய நகரமாக மாறி விட்டது. புத்தர் பரிநிர்வாணம் அடைந்த நகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலைய ஓடுதளத்தை,  முதன் முதலில் முத்தமிட்டது  இலங்கை விமானம் என்றும் வந்திறங்கியவர்கள் இலங்கை பௌத்த சிங்கள மக்கள் என்றும் வரலாற்று ஏடுகளில் பதியப்படப்போகின்றன. 

அடுத்ததாக இதே உத்தரபிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரில் இராமர் ஆலயம் உருவாகி வருகின்றது.  இராமாயண காலத்தையும் இலங்கையுடனான தொடர்பையும் நினைவு கூருவதற்கும் சில மாதங்களுக்கு முன்பு நுவரெலியா சீதையம்மன் ஆலயத்திலிருந்து பூஜிக்கப்பட்ட கல் ஒன்று அயோத்தி இராமர் ஆலய கட்டுமானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.   அயோத்தி இராமர் ஆலயப் பணிகள் பூர்த்தியாகியவுடன் அந்நிகழ்வில் பங்கேற்பதற்காக உத்தர பிரதேசம் அயோத்தி நகருக்கு யார் இலங்கையிலிருந்து செல்லப்போகின்றார்கள், மற்றும்  பிரதமர் மோடிக்கு என்ன புத்தகத்தை கையளிக்கப்போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

Tuesday, October 19, 2021

எதிர்ப்பலைகளை தடுத்தாடும் கலை…!


 

அத்தியாவசிய பொருட்களின்   நிர்ணய விலை கட்டுப்பாட்டை நீக்கியதால் கடந்த வாரம் பல உணவு பொருட்கள் உட்பட அதைச் சார்ந்த ஏனைய பொருட்களும் சமையல் எரிவாயுவும் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் விலை அதிகரிப்பை கண்டிருந்தன. நாட்டில் பஞ்சம் ஏற்பட இடமளிக்க மாட்டோம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்சகூறுகிறார். மத்திய வங்கி ஆளுநரோ 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டுகடன்களாக 11.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளோம், கையிருப்பில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இருக்கின்றன என்கிறார்.

மட்டுமின்றி இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 8 ஆக இருந்தது. ஆனால் இப்போது இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி இலக்கு 5 சதவீதமாக எதிர்ப்பார்க்கப்படும் அதே வேளை அடுத்த ஆண்டில் 6 இலிருந்து 6.5 வீத வளர்ச்சியை அடைய முடியும் என்கிறார்.

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பை எம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை,ஆனால் வர்த்தகர்கள் முன்வைத்த விலைபட்டியலை விட குறைந்த அளவில் விலை அதிகரிப்பை மேற்கொள்ளவே அரசாங்கம் அனுமதியளித்துள்ளது என வழமையான தனது சமாளிப்பு கதையை கூறுகிறார் வர்த்தக அமைச்சர் பந்துல. மறுபக்கம் வெள்ளைப்பூண்டு சர்ச்சையில் பல சதோச அதிகாரிகள் கைதாகி வருகின்றனர். இதற்கும் தனக்கும் எவ்விதத்திலும் தொடர்பில்லை என்று கூறி வரும் வர்த்தக அமைச்சர்,உண்மையான கள்வர்களின் முகத்திரையை அகற்றுவதற்கு முன்னின்று செயற்பட்டால் மாத்திரமே நம்பப்படுவார்.

சில முக்கியமான அத்தியாவசிய பொருட்களின் நிர்ண விலை கட்டுப்பாட்டை நீக்கியதால் வர்த்தகர்களும் நிறுவனங்களும் தமதிஷ்டப்படியே விலை அதிகரிப்பை மேற்கொண்டிருந்தன. அரசாங்கத்துக்குத் தெரியாமல் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்ட பொருட்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன.

அரசாங்கத் தரப்பு அமைச்சர்கள் கூறும் விளக்கங்கள் ஒரு பக்கமிருக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவோ புதிய அரசியலமைப்பு மற்றும் தேர்தல் முறைகள் பற்றியும் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற தனது கொள்கையை வலியுறுத்தும் வகையில் இலங்கை இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு நிகழ்வு பூர்த்தியின் போது உரையாற்றியிருந்தார்.

நாடு இப்போதிருக்கும் நிலைமையில் புதிய அரசியலமைப்போ அல்லது தேர்தல் முறை மாற்றங்களோ பொருளாதார நெருக்கடியை தீர்க்கப்போவதில்லை. இப்போது நாட்டுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து செயற்படுதலே அரசாங்கத்துக்கு அழகு. இருப்பினும் தனக்கு வாக்களித்த பெளத்த சிங்கள மக்களை எப்படியாவது திருப்திபடுத்த வேண்டிய நோக்கத்திலேயே ஜனாதிபதி இருக்கின்றார்.

நாட்டில் அரசாங்கத்துக்கு எதிராக என்ன எதிர்ப்பலைகள் உருவாகினாலும் அதை இலாவகமாக சமாளித்து மக்களின் உணர்வுகளை தூண்டும் வகையில் பேசி சாமர்த்தியமாக காய்கள் நகர்த்தும் திறனை ஜனாதிபதி கொண்டிருக்கின்றார். அவர் ஒரு பாரம்பரிய அரசியல்வாதியாக இல்லாவிட்டாலும் தற்போது அந்த வித்தையை நன்கு கற்று வரும் ஒருவராக விளங்குகின்றார் என்றால் மிகையாகாது.

அதற்கு உதாரணமாக புதிய அரசியலமைப்பு மற்றும் தேர்தல் முறை குறித்து 9 ஆம் திகதி தனது முகநூல் பக்கம் அவர் தெரிவித்திருந்த விடயம் முக்கியமானது.

“நேற்று மாலை, ருவன்வெலிசாயவை வழிபட நான் சென்றிருந்தேன். அங்கு நான் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருக்கும் போது - இளம் வயது பிக்கு ஒருவரைச் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் கேட்டார், ஜனாதிபதி அவர்களே, ஒரே நாடு, ஒரே சட்டத்தை உருவாக்குவதாகக் கூறினீர்களே. அதனை நாம் மிகவும் எதிர்பார்த்திருக்கிறோம்  என்று.

இந்த வருட இறுதிக்குள் அந்த வாக்குறுதியை நான் நிறைவேற்றுவேன். அத்தோடு  அன்று நான் உறுதியளித்தவாறு, புதிய அரசமைப்பு ஒன்றைஉருவாக்குவதற்கும், அடுத்த வருடத்துக்குள் நடவடிக்கை எடுப்பேன்.மக்களின் எதிர்பார்ப்புக்கமைய, புதிய தேர்தல் முறைமையொன்றையும் அடுத்த வருடத்துக்குள் உருவாக்குவேன்.

 இவ்வாறு தெரிவித்திருந்தார். இந்த கதையில் ஏன் பிக்கு வந்தார் என்பதைப் பற்றி புதிதாக ஒன்றும் கூறத்தேவையில்லை. ஏனென்றால் அவர்கள் வராவிட்டால் தான் ஆச்சரியம். நாட்டின் தற்போதைய பல பிரச்சினைகளுக்கும் மத்தியில் ஒரு இளம் பிக்கு ஜனாதிபதியிடம் ஒரே நாடு ஒரே சட்டம் பற்றி கேள்வி எழுப்புகிறார். ஏற்கனவே இருக்கும் அரசியலமைப்பும் இந்த நாட்டில் வாழ்ந்து வரும் அனைத்து இன மக்களும் சமாதானத்தோடும் செளஜன்யத்தோடும் வாழும் பொதுநலத்தோடு உருவாக்கப்பட்டிருந்தால், இன்று அது 20 திருத்தங்களை கண்டிருக்காது. மட்டுமின்றி புதிய ஒரு அரசியலமைப்பு பற்றிய பேச்சுக்கும் அது இடமளித்திருக்காது. பல்லின மக்கள் வாழ்ந்து வரக்கூடிய எல்லா நாடுகளினதும் அரசியலமைப்பும் யாராவது ஒரு சாராரின் சுயலநலத்துக்காகத்தான் தான் உருவாக்கப்படுகின்றது.

அதே போன்று பல்லின மக்களில் சிறுபான்மையினத்தவர்களின் பிரதிநிதித்துவத்தை எவ்வகையிலும் கட்டுப்படுத்தி வைத்திருக்கவே தேர்தல் முறை மாற்றம் பற்றி பேசப்படுகின்றது. அல்லது சிறுபான்மை மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு நசுக்கப்படுகின்றன. இதை பகிரங்கமாக இந்த நாட்டின் பார்த்து அனுபவித்தவர்கள் இந்திய வம்சாவளி மலையக மக்கள். இம்மக்களின் சனத்தொகைக்கேற்பவும் அப்போதைய தேர்தல் முறையின் அடிப்படையிலும் இந்த சமூக மக்களின் பிரதிநிதித்துவம் பாராளுமன்றில்அதிகரித்து விடும் என்ற அச்சம் காரணமாகவே சுதந்திரம் கிடைத்த 1948 ஆம் ஆண்டில் ,இம்மக்களின் வாக்குரிமையும் குடியுரிமையும் ஐ.தே.கவால் பறிக்கப்பட்டன.

தற்போதைய ஜனாதிபதியை ஆட்சியில் அமர்த்த பல்வேறு பிரயத்தனங்களை எடுத்து பெளத்த சிந்தனைகளை பெரும்பான்மை மக்களின் மனதில் பதிய வைக்க செயற்பட்ட முருத்தட்டுவே ஆனந்த தேரர் மற்றும் ஒமல்பே சோபித தேரர் ஆகியோர், அண்மைக்காலமாக ஜனாதிபதியை பற்றி மிகவும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். விலை அதிகரிப்பு விவகாரத்தில் சில வர்த்தகர்கள் ஜனாதிபதியை மண்டியிட வைத்து விட்டனர் என்றும் இந்நாட்டில் தீர்மானங்களை எடுக்கும் சக்தியாக அரசாங்கம் இல்லையென்றும் முருத்தட்டுவே ஆனந்த தேரர் கூறுகிறார். மிதமிஞ்சிய அதிகாரங்கள் இப்போதுள்ள ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும் அவரால் உறுதியான தீர்மானம் ஒன்றை நாட்டு மக்கள் நலன் தொடர்பாக எடுக்க முடியாதுள்ளது என ஒமல்பே சோபித தேரர் கூறியிருக்கிறார்.

ஆனால் இதற்கெல்லாம் சளைத்தவரா ஜனாதிபதி? ஆகையால் தான் ருவன்வெலிசாயவை வழிபட சென்ற இடத்தில் ஒரு இளம் பிக்குவை வைத்தே புதியஅரசியலமைப்பு மற்றும் தேர்தல் மாற்றம் பற்றிய கதையை கூறியிருக்கிறார். அவரது இந்த தமிழ் முகநூல் பதிவுக்கு பின்னூட்டங்களை வழங்கியிருந்த நாட்டு மக்கள் அனைவருமே பொருட்களின் விலை அதிகரிப்பு, நாட்டின் தற்போதைய நெருக்கடி சூழல் உட்பட பல விடயங்களை சுட்டிக்காட்டி கிண்டலும் கேலியுமாக பதிவிட்டிருந்தனர். ஜனாதிபதியான புதிதில் அவரது பதிவுக்கு மிக நம்பிக்கையான பதிவுகளையும் வாழ்த்துக்களையும் அள்ளி தந்த மக்களின் தற்போதைய நிலைமாற்றத்தில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இலங்கையின் 72ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு - அநுராதபுரம், சாலியபுர, கஜபா படையணி தலைமையகத்தில் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அங்கு கிரிக்கட்டும் விளையாடினார். துடுப்பாட்டத்தின் போது தனக்கு வீசப்பட்ட பந்தை சிறப்பாக தடுத்தாடினார். அவர் எப்போதும் கிரிக்கெட் விளையாடிய ஒருவராக இருந்திருக்க மாட்டார். எனினும் அவரது துடுப்பாட்டம் சிறப்பானதொன்றாக இருந்தது. தனது ஆட்சிக்கு எதிராக வீசப்படும் எந்த எதிர்ப்பையும் சிறப்பாக தடுப்பதில் வல்லவர் என்பதை எதிரணியினருக்கு காட்டுவதற்கு அவர் அவ்வாறு செயற்பட்டாரா என்பது தெரியவில்லை. எனினும் நாட்டின் தற்போதைய மோசமான நிலைமையை ஏற்றுக்கொண்டதாகவே அவரது அன்றைய உரை அமைந்திருந்தது. என்மீதும் எமது அரசாங்கத்தின் மீதும் மக்கள் வெறுப்படைந்துள்ளதை ஏற்றுக்கொள்வதாக கூறிய அவர் அமைச்சர்களும் இந்த பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் எனினும் அரசியல்வாதி அல்லாத ஒருவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாகவும் முப்படைகளின் தலைவராகவும் இருப்பது பெருமை என்றும் கூறியிருந்தமை முக்கியவிடயம். நாட்டின் பல முக்கிய பொறுப்புகள் கூடுதலாக இராணுவ தரப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் சூழ்நிலையில் அரசியல்வாதி அல்லாத இராணுவ அதிகாரி ஒருவர் ஜனாதிபதியானால் ஆட்சி இப்படித்தான் இருக்கும் என்பதையும் தனது உரையின் மூலம்
நாட்டு மக்கள் விளங்கிக்கொண்டிருப்பர் என்பதை அவர் மறந்து போனார் போலும் !

Monday, October 11, 2021

இராணுவ பிரசன்னத்தை கோருவதன் மூலம் தொழிலாளர்களை தீவிரவாதிகளாக சித்திரிக்க முயற்சியா?

 


பெருந்தோட்டப்பகுதிகளில் ஆயிரம் ரூபாய் நாட்சம்பளமானது சம்பள நிர்ணய சபையின் ஊடாக வழங்கப்பட்ட காலத்திலிருந்து, தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகங்களுக்கும் முரண்பாடுகள் அதிகரித்து தற்போது உச்ச நிலையை எட்டியுள்ளன.

தோட்ட முகாமையாளர்கள், சேவையாளர்களுக்கும் தோட்டத்தொழிலாளர்களுக்குமிடையிலான இந்த சம்பள முரண்பாடுகள், வாய்த் தர்க்கத்தில் ஆரம்பித்து  கைகலப்புகள் வரை சென்று பின்பு பொலிஸ் முறைப்பாடு, கைதுகள், தடுத்து வைப்பு, வழக்கு விசாரணை என தொடர்கின்றன.

ஆனால் தொழிற்சங்கங்களோ அரசாங்கமோ இவற்றை கண்டு கொள்வதில்லை. ஆயிரம் ரூபாய் பிரச்சினை தீர்ந்து விட்டது என  இருதரப்பினரும் மறுபக்கம் முகத்தை திருப்பி வைத்துக்கொண்டு சம்பவங்களை கண்டும் காணாதது போன்றும் கடந்து செல்கின்றனர். நீதிமன்றில் வழக்கு இருப்பதை காரணம் காட்டியே இவர்களின் மெளனமும் அலட்சியம் தொடந்தாலும் மறுபக்கம் தொழிலாளர்களின் தொழில் மற்றும் அடிப்படை உரிமைகள் என்ற விடயத்தை பிரதானமாக வைத்தாவது ஏதாவது பேசப்படுகின்றதா என்றால் அதுவும் இல்லை.

சில வாரங்களுக்கு முன்பு தலவாக்கலை பிரதேச கட்டுக்கலை தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவத்துக்கு அடிப்படை காரணமே இந்த சம்பள  விவகாரமேயாகும். 20 கிலோ கொழுந்து பறித்தால் மட்டுமே ஆயிரம் ரூபாய் நாட்சம்பளம் வழங்கப்படுகின்றது. அதற்கு ஒரு கிலோ குறைவாக இருந்தால் பறிக்கப்படும் கொழுந்தின் எடைக்கேற்ப, கொழுந்து ஒரு கிலோவுக்கு வழங்கப்படும் 40 ரூபாய் படியே தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்றது.

அதே வேளை ஆண் தொழிலாளர்கள் மாலை 4 மணி வரை பணிபுரியாவிட்டால் அரை பேர் வழங்கப்படுகின்றது. ஒரு நாளைக்கு 15 கிலோ வரை பறிக்கப்படும் கொழுந்தில் கழிவுக்காக ஒரு தொழிலாளியிடமிருந்து குறைக்கப்படுகின்றது. அப்படிப் பார்க்கும் போது ஒரு தொழிலாளி தினந்தோறும் 35 கிலோ வரை பறிக்க வேண்டியுள்ளது. கழிக்கப்படும் கொழுந்து தொழிற்சாலைக்கே அனுப்பப்படுகின்றது. ஆகவே இதில் தோட்ட நிர்வாகங்கள் எவ்வாறு இலாபத்தை பார்க்கின்றன என்பதை அறியலாம்.

இவற்றையெல்லாம் முன்வைத்தே தலவாக்கலை தோட்டத்தின் கட்டுக்கலை பிரிவு தொழிலாளர்கள் தோட்ட முகாமைத்துவம் மற்றும் சேவையாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு முகாமையாளர், தொழிலாளர்களைப் பார்த்து தகாத வார்த்தை பிரயோகத்தை வெளிப்படுத்தியதாலேயே முரண்கள் உருவாகி கைகலப்பு வரை சென்றுள்ளது. இந்த சம்பவத்தில் 4 பெண் தொழிலாளர்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இராணுவ  பிரசன்னத்தை கோரும்  முகாமையாளர்கள்

இச்சம்பவத்தையடுத்து தோட்ட முகாமையாளர்கள் சங்கமானது பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தி தாம் பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக விலகிக்கொள்ளப்போவதாகவும் தமது பிரச்சினை குறித்து ஜனாதிபதி உடன் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தது. மேற்படி சங்கத்தின் தலைவரான தயா குமாரகே ஒரு படி மேலே சென்று, தொழிலாளர்களிடமிருந்து முகாமையாளர்களை பாதுகாக்க இரவு நேரங்களில் இராணுவ ரோந்த தோட்டப்பகுதிகளில் அவசியம் என பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

யுத்த காலப்பகுதிகளில் தீவிரவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்தவும் மக்கள் பாதுகாப்பு கருதியும்  நாட்டின் பல பகுதிகளில் இராணுவ ரோந்து பணிகள் இடம்பெற்றமை வழமையானதொன்று. அதுவும் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளிலேயே இராணுவ ரோந்து நடவடிக்கைகள் அதிகமாக காணப்பட்டன. அதற்கு அப்பால் நாட்டின் தலைநகரம், முக்கியமான பாதுகாப்பு கேந்திர பகதிகளில்  சோதனைச் சாவடிகள், காவலரண்கள் போன்றன காணப்பட்டன. யுத்த காலத்தில் கூட பெருந்தோட்டப்பகுதிகளில் இராணுவ நடமாட்டம் இருந்ததில்லை.

அப்படியிருக்கும் போது தொழிலாளர்களிடமிருந்து பாதுகாப்பு கோரி தோட்டப்பகுதிகளில் இராணுவ பிரசன்னத்தை கோரியிருக்கும் முகாமையாளர்கள் சங்கம் தொழிலாளர்களை தீவிரவாதிகள் போன்று சித்திரிப்பது வேதனையான விடயம். அந்தளவுக்கு அவர்கள் மோசமாக நடந்து கொள்கின்றனர் என்ற ஒரு மாயத்தோற்றத்தை இவர்கள் ஏற்படுத்தவே முனைகின்றனர். ஏற்கனவே இவ்வாறான சம்பவத்தையடுத்து சாமிமலை ஓல்ட்டன் தோட்டத்துக்குள் பொலிஸ் நிலையமொன்றை அமைப்பதற்கான பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளன.

இதை அனைத்தும் தெரிந்தும் தமக்கு வாக்களித்த மக்களுக்கு ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் கைகளை பிசைந்து கொண்டு அரசாங்கத்திடமோ அல்லது கம்பனிகளிடமோ பேச முடியாது தத்தளித்துக்கொண்டிருக்கின்றனர் மலையக பிரதிநிதிகள்.

கொட்டகலையில் இராணுவ முகாம்

மக்கள் செறிவாக வாழ்ந்து வரும் பகுதிகளில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதில்லை. ஆனால் கடந்த வருடம் கொரோனா நிலைமைகள் காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் கொட்டகலை கொமர்ஷல் கம்பனியின் கட்டிடங்களுக்குள்  வலுக்கட்டாயமாக இராணுவத்தினர் அத்துமீறி குடியேறியிருந்தனர். பின்பு அவ்விடத்தை ஆக்கிரமித்து தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இது தொடர்பாக இராணுவத்தினருக்கு எதிரான வழக்கு அட்டன் நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. இது இராணுவ முகாம் அல்ல, அனர்த்த முகாமைத்துவ நிலையமே என இராணுவத் தளபதி கூறினாலும் குறித்த பகுதியில்  படைப்பிரிவின் பெயர்க்கல் அங்கு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அங்கு சில எண்ணிக்கையான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். இந்த சம்பவத்துக்கும் மலையக பிரதிநிதிகள் வாய் திறக்கவேயில்லை. ஆனால் ஒரு பிரதிநிதி இலங்கையின் பாதுகாப்புக்காக எங்கு வேண்டுமானலும் இராணுவ முகாம்களை அமைப்பதற்கு அரசாங்கத்துக்கு அதிகாரமும் உரிமைகளும் உள்ளன என அதை நியாயப்படுத்தினார். இத்தனை நாட்கள் இல்லாத இராணுவ பிரசன்னம் அதுவும் யுத்தம் முடிவுற்ற பிறகு, யுத்தத்துக்கும் சற்றும் சம்பந்தமேயில்லாத இடத்துக்கு  எதற்கு என்ற கேள்விக்கு அவர் பதில் கூறவில்லை. யுத்தம் முடிவுற்று  ஒரு தசாப்தம் கடந்த நிலையில் இன்று வடக்கு கிழக்குப்பகுதிகளில் நிலை கொண்டுள்ள இராணுவ பிரசன்னத்தை குறைக்கும்படி சர்வதேச ரீதியாகவே அழுத்தங்கள் உள்ள நிலையில், மக்கள் நடமாட்டம் உள்ள ஒரு பகுதிக்குள் புதிய இராணுவ முகாம்கள் எதற்கு என்ற கேள்வியை எவருமே எழுப்ப முடியாத நிலையிலுள்ளனர்.

இப்போது நகர்களுக்கு மிக அருகில் இராணுவ முகாம்கள் வந்து விட்ட நிலையில் அடுத்ததாக தோட்ட முகாமையாளர்கள் கோருவது போன்று தோட்ட எல்லைப்புறங்களிலும் முகாம்கள் அமைக்கப்படுமா என்று தெரியவில்லை.  எது எப்படியானாலும் இறுதி யுத்த காலப்பகுதியில் வட பகுதி மக்களை பிரதிநிதிகள் கைவிட்டு , தமது உயிரை காப்பாற்றி கொள்ள அங்கிருந்து வெளியேறியது போன்று, மலையக மக்களை ஏற்கனவே பிரதிநிதிகள் கைவிட்டு தலைநகர் சென்று தங்கி விட்டனர் என்று தான் கூற வேண்டியுள்ளது.   இதில் எதிர்த்தரப்பினரும் அடங்குகின்றனர்.

ஏனென்றால் சாமிமலை ஓல்ட்டன் தோட்டம் மற்றும் தலவாக்கலை கட்டுக்கலை தோட்ட சம்பவங்கள் எதையுமே ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு மலையக பிரதிநிதிகள் கண்டு கொள்ளவே இல்லை. எவரும் அந்த பக்கம் எட்டியும் பார்க்கவில்லை. கட்டுக்கலை தோட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள 11 பேரும் பிணையில் வெளிவந்து அவர்களுக்கும் தோட்ட நிர்வாகம் பணி வழங்கினால்  ஒழிய தாம் வேலைக்கு திரும்பப் போவதில்லையென தோட்ட மக்கள் உறுதியாக இருக்கின்றனர்.

அப்படியான உறுதியும் கட்டுக்கோப்பும் இன்று மலையக பிரதிநிதிகளிடம் இல்லையே என எண்ணும் போது வெட்கமாக உள்ளது. எனினும் கம்பனிகளும் தோட்ட முகாமையாளர்களும் தோட்டத்தொழிலாளர்கள் எதற்காக முரண்படுகின்றார்கள் என்ற விடயத்தை மறைத்து அவர்களை மிக மோசமான மனிதர்களாக சித்திரிப்பதில் கவனம் செலுத்துகின்றனர். இவர்கள் மூர்க்கமானவர்கள் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

நாட்சம்பள விவகாரத்துக்குப் பிறகு பெருந்தோட்டப்பகுதிகளில் தொழிற்சங்க செயற்பாடுகள் முற்றும் முழுவதுமாக செயலிழந்து போயுள்ள நிலையில் தொழிற்சங்க காரியாலயங்களும் வெறிச்சோடியுள்ளன. தொழிற்சங்க பிரமுகர்களையும்  அரசியல்வாதிகளையும் காணக்கிடைக்கவில்லை.    தேர்தல் என ஏதாவதொன்று வந்தால் அப்போது மக்களை காண பிரதிநிதிகள் வரும் போது இந்த நிர்வாக –தொழிலாளர் மோதல்கள் எந்தளவுக்கு உச்சத்தை தொட்டிருக்கும் என்று கூற முடியாதுள்ளது.  

சிவலிங்கம்  சிவகுமாரன்

 

Monday, September 6, 2021

சொந்த நாட்டின் அகதிகள்….!

 


 தமிழகத்தின் ஆளும் திராவிட முன்னேற்ற கழகமானது கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தனது மாநிலத்திலமைந்துள்ள  முகாம்களில் தங்கி வாழ்ந்து வரும் இலங்கை அகதிகளுக்கு பல நலனோம்பு திட்டங்களை அறிவித்துள்ளது.

ஒரு தலைமுறையை கடந்து வாழ்ந்து வரும் அந்த மக்கள் இன்னும் அகதிகள் என்ற பெயரிலேயே வாழ்க்கையை கடத்துகின்றனர். இதன் காரணமாக மத்திய அரசாங்கத்தின் சட்டரீதியான பல உரிமைகளை அவர்கள் அனுபவிக்க முடியாத சூழ்நிலைகள்  மூன்று தசாப்த காலமாக தொடர்கின்றன. இந்த மக்களுக்கு இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு சட்ட சிக்கல்கள் உள்ளன.

மனிதாபிமான ரீதியில் அதைப்பெற்றுக்கொள்ளும் வகையில் கடந்த கால மத்திய அரசாங்கங்கள் எதுவும் நகர்வுகளை மேற்கொண்டிருக்கவில்லை. உண்மையில் தமிழக முகாம்களிலும் மாநிலத்தின் வேறு இடங்களிலும் வாழ்ந்து வரக்கூடிய அகதிகளின் எண்ணிக்கை 90 ஆயிரத்துக்கும் அதிகமாகும். இவர்கள் தமது சொந்த நாட்டுக்கு திரும்புவதற்கு விரும்புகின்றார்களா , அதை இலங்கை அரசாங்கம் எவ்வாறு பார்க்கின்றது போன்ற கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் இல்லை.

 1983 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆயிரக்கணக்கில் அங்கு சென்றவர்களின் பிள்ளைகள் அங்குள்ளவர்களை மணம் முடித்து தனியார் நிறுவனங்களில் பணி புரிந்து வருகின்றனர். ஆனால் இவர்களின் மீது இன்னும் அகதிகள் என்ற  பரிதாப பார்வையே நிலவி வருகின்றது.

தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மக்களுக்காக அறிவித்திருக்கும் திட்டங்கள் உண்மையில் வரவேற்கத்தக்கது. ஆனால் அதை இலங்கையிலுள்ள அரசியல் பிரமுகர்கள் எவ்வாறு பார்க்கின்றனர் என்பது முக்கிய விடயம். மிக முக்கியமாக மலையக அரசியல் பிரதிநிதிகள் பலர் நேரடியாக அங்கு சென்று தமிழக முதலமைச்சர் உட்பட தி.மு.க பிரதிநிதிகளை சந்தித்துள்ளனர். தமிழகத்தில் வாழ்ந்து வரும் அகதிகளுக்கு தி.மு.க எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து பாராட்டுதல்களை தெரிவித்துள்ளனர்.

ஆனால் தமக்கு  வாக்களித்து அழகு பார்த்த, சொந்த நாட்டின் அகதிகளாக வாழ்ந்து வரும் மலையக பெருந்தோட்ட சமூகம் பற்றி அவர்கள் சிந்திக்கின்றார்களா என்று பார்த்தல் அவசியம். இங்கிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக சென்றவர்கள் கூட 30 வருடங்களுக்கு மேல் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அதே தமிழக கிராமங்களிலிருந்து இங்கு வந்த உழைக்கும் வர்க்கத்தினர் கடந்த 200 வருடங்களாக முகாம்களை விட மோசமான லயன் குடியிருப்புகளில் காலத்தை தள்ளுகின்றனர்.

வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுவிட்டால் இவர்கள் இந்த நாட்டின் பிரஜைகளாகி விடமாட்டார்கள். ஏனென்றால் இன்னும் இவர்கள் இந்நாட்டின் பதிவுபிரஜைகளாகவே சான்றிதழை வைத்துக்கொண்டிருக்கின்றனர். இலங்கை பிரஜைகள் என்ற அந்தஸ்த்து இவர்களுக்கு இன்னும் அரசியலமைப்பில் வழங்கப்படவில்லை.

அவர்களின் தலைமுறையினருக்கும் இதே வேதனை தொடர்கின்றது. இந்த சமூகத்துக்கு நேரடியாக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெற்று அரை  நூற்றாண்டு  நெருங்குகின்றது. அதற்கு இன்னும் 6 வருடங்கள் இருக்கின்றன. இத்தனை வருடங்களாக இந்த மக்களின் வாக்குகளைப் பெற்று அதிகார பீடங்களின் ஆசியுடன் அமைச்சர் ,பிரதி அமைச்சராக வலம் வந்தவர்கள் எவருக்குமே  லயன் குடியிருப்பை முற்றாக ஒழிக்க முடியவில்லை.

இந்த மக்களுக்கு சொந்தம் என்று கூறக் கூடிய சட்ட ரீதியான காணித்துண்டுகள் இல்லை. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தை விட மிக மோசமான அழுத்தங்களுக்கும் கொடுமைகளுக்கும் முகங்கொடுத்து வரும் சூழ்நிலைக்கு தற்போது இந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

சில நேரங்களில் தமிழக அரசியல் பிரமுகர்கள் இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டால் அங்குள்ள அகதி முகாம் மக்கள் நன்றாக வாழ்கின்றனர் என திருப்திபட்டுக்கொள்வர். அதன் காரணமாகத்தான் கடந்த 4 தசாப்த காலமாக இச்சமூக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றை அலங்கரித்து வந்த மலையக பிரதிநிதிகள் எவரும் தமிழக அரசியல்வாதிகளை இலங்கையின் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு அழைத்துச்சென்றதில்லை.

தமிழகத்தின் சுமார் 108 முகாம்களில் தங்கியுள்ள அகதிகளின் நலன்கள்  மற்றும் அவர்களின் பிள்ளைகளின் கல்வி எதிர்காலத்துக்காக  தமிழக அரசு அறிவித்துள்ள  சில நலனோம்புகை திட்டங்களை பார்க்கும் போது, மலையக பெருந்தோட்டப் பிரதேசங்களில் வறுமை கோட்டுக்குக் கீழ் கல்வி கற்க போராடும் மாணவர்கள் , போராட்டம் தோற்ற நிலையில் இடைவிலகியோர், பின்பு தலைநகரங்களுக்கு பணியாற்றச் சென்று மர்மமான முறையில் உயிரிழந்தோர் பற்றிய ஞாபகங்கள் வந்து போவதை தடுக்க முடியாதுள்ளது.

இது வரை எந்த மலையக தொழிற்சங்கமும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு எந்த வித புலமை பரிசில்களையும் கல்விக்காக வழங்கியதாக சரித்திரம் இல்லை. மாறாக தொழிலாளர்களின் சந்தாவைப் பெற்றும் அதற்கு கணக்கு காட்டாதவர்களாகவே இன்று வரை இவர்கள் காலந்தள்ளுகின்றனர். உயிர் அச்சம் காரணமாக  வேறு ஒரு   நாட்டிலிருந்து வந்த தமது இன மக்களை  மனிதாபிமானத்தோடு அரவணைத்து அவர்களுக்கான நலன்களை கவனிக்கும் தமிழக அரசின் செயற்பாடுகளைப் பார்த்துச் சரி மலையக பிரதிநிதிகள் பாடங்கற்றுக்கொள்ள வேண்டும். இன்னொரு வகையில் கூறப்போனால் தாம் தமது மக்களை எவ்வாறு வைத்திருக்கிறோம் என்பதை நினைத்து வெட்கி தலை குனிய வேண்டும்.

அகதிகளுக்கு இவ்வாறெல்லாம் செய்திருக்கின்றீர்கள் எமது மக்களையும் கவனியுங்கள் என ஒவ்வொரு முறையும் இவ்வாறு ஓடோடிச்சென்று தமிழக அரசிடமோ இந்திய அரசிடமோ உதவிகளை கேட்பது எந்த வகையில் நியாயம் என்பது தெரியவில்லை. அப்படியானால் இந்த மக்களை அழைத்து வந்து பெருந்தோட்டங்களை உருவாக்கிய பிரித்தானியரிடமும் அல்லவா சென்று உதவி கேட்க வேண்டும்? தொப்புள் கொடி உறவென்ற விடயத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு அதை உதவிகளைப் பெற்றுக்கொள்ள பயன்படுத்துவது நாகரிகமாகாது என்பதை இந்த பிரதிநிதிகள் புரிந்து கொள்வார்களாக. அகதிகளுக்காக ஒரு மாநில அரசு நிதி ஒதுக்கும் போது இங்கு சொந்த நாட்டில்  அகதி வாழ்க்கை வாழ்ந்து வரும் மலையக பெருந்தோட்ட சமூகத்தின் நலன்களுக்கு ஏன் ஒதுக்கீடுகளை செய்ய முடியாது என இலங்கை அரசாங்கத்திடம் கேள்வி கேட்கும் தைரியம் யாருக்குத் தான் உள்ளது?  

 

 

 

அகதிகளுக்கு பிரஜைகள் என்ற அந்தஸ்த்து கிடைப்பது எப்போது ?


தமிழகத்தின்  ஆளும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் நிர்வாக செயற்பாடுகள் குறித்து திருப்திகரமான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வருவதை மறுக்க முடியாது. அதில் தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகள் குறித்த அவரது நகர்வு குறித்து பலரும் தமது பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள அகதிகளில் நலனோம்பல் திட்டத்துக்கு தமிழக அரசால் 317 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் இனி அவர்கள் அவர்கள் வசிக்கும் இடங்கள் அகதி முகாம்கள் என்று அழைக்கப்படாதென்றும் ‘இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்’ என்றே அழைக்கப்படும் என்றும் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் சட்டசபையில் அறிவித்துள்ளார். 

இதற்கு இலங்கை தமிழ் அரசியல்வாதிகளிடமிருந்து வரவேற்பும் வாழ்த்துக்களும் தமிழகத்தை சென்றடைந்துள்ளன. தமிழக தொடர்பு என்பது இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின்  தொப்புள் கொடி உறவு என்பதை வலியுறுத்தஇ இந்த சம்பவத்துக்குப்பிறகு  மலையக அரசியல் பிரமுகர்கள் சிலரும் தமிழகத்தை நோக்கி பறந்துள்ளனர் என்பது முக்கிய விடயம். 

1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை கலவரத்துக்குப்பிறகே இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகத்துக்குச் செல்லும் மக்கள் தொகை அதிகரித்தது. அந்த ஆண்டு முதல் அதன் பின்னரான யுத்த சூழல் காரணமாகவும் சுமார் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் தமிழகத்துக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.

தமிழகத்தின்   29 மாவட்டங்களில் உள்ள 108 முகாம்களில் தங்க வைக்கப்பட்டோரின் எண்ணிக்கை சராசரியாக 59 ஆயிரம் பேராகும். அதில் 34 ஆயிரம் பேர் உரிய பதிவுகளுக்குப்பிறகு வேறு இடங்களில் வசித்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலினால் சட்டசபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களுக்கான பல அடிப்படை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு மாணவர்களுக்கான கல்வி வசதிகள் மற்றும் உதவிகள் மெச்சத்தக்க வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக முதற்கட்டத்தில் 55 மாணவர்களுக்கான கல்வி மற்றும் விடுதி கட்டணத்தை தமிழக அரசே செலுத்துவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்டதாரி மாணவர்களுக்கான புலமை பரிசில் தொகைகள் 5 ஆயிரம் இந்திய ரூபாயிலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

இந்த திட்டங்களை வரவேற்றிருந்த பா.ஜ.க எம்.பியான வானதி சீனிவாசன் கூடஇ மாநில அரசு அனுமதியளித்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான படகு சேவை போக்குவரத்தை ஆரம்பிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக சட்டசபையில் கருத்துத் தெரிவித்திருந்தமை முக்கிய விடயம். இந்த நலனோம்பு திட்டங்கள் மூலம் தமிழக அரசுக்கும் இலங்கை அரசுக்குமிடையிலான ஒரு அரசியல் ரீதியான இமனிதாபிமான ரீதியிலான நட்பை முதலமைச்சர் ஸ்டாலின் புதுப்பித்திருக்கிறார் எனலாம். 

தொடர்ந்தும் அகதிகளாக…?

தமிழக அரசின் இந்த திட்டங்கள் வரவேற்பை பெற்றிருந்தாலும் அகதி முகாம்களை தமிழர் மறுவாழ்வு முகாம் என முதலமைச்சர் மாற்றியமைத்தாலும்  இந்திய குடியுரிமை சட்டத்தின் படி இவர்கள்  இந்திய பிரஜைகள் அல்லர். அகதிகள் தான் என்பது கசக்கும் உண்மையாகும். இவர்களுக்கு மறுவாழ்வு என்பது அகதிகள் என்ற பதத்திலிருந்து இந்திய பிரஜைகள் என்ற அந்தஸ்த்தை வழங்குவதேயாகும். எனினும் இங்கு முக்கியமான விடயம் என்னவெனில் இந்தியாவானது அகதிகள் தொடர்பான சர்வதேச சாசனத்தில் இது வரை கைச்சாத்திடாத நாடாக உள்ளது.  ஆகவே இந்தியா இவர்களை பிரஜைகள் அல்லாத நபர்களாகவே பார்க்கின்றதுஇ உபசரிக்கின்றது. நாட்டின் பிரஜைகள் அல்லாத நபர்கள் அகதிகளாகவே பார்க்கப்படுகின்றனர். இதன் காரணமாக அவர்களுக்கு மேலதிக வரப்பிரசாங்களை சட்டத்தின் படி வழங்க முடியாது. அதாவது இவ்வாறு முகாம்களில் வாழ்ந்து வருபவர்களுக்கு அரசாங்க வேலை வாய்ப்புகளை பெற முடியாது. வாக்குரிமை இல்லை. அசையா சொத்துக்களையும் வைத்திருக்க உரிமையில்லை. 

ஆகவே இவர்களை  அகதிகளாகவே வைத்திருப்பதா அல்லது குடிரிமை சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வந்து இவர்களுக்கு இந்திய பிரஜைகள் என்ற அந்தஸ்த்தை வழங்க முடியுமா என இந்த விவகாரத்தை புது டெல்லி தான் கையிலெடுத்து பரிசீலனை செய்ய வேண்டும். அதே வேளை 1977 களில் பல்வேறு காரணங்களுக்காக தமது தாயக பூமியை நோக்கி இடம்பெயர்ந்த இலங்கையில் வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை உட்பட வாக்குரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன என்பது முக்கிய விடயம். அவர்களில் பெருந்தொகையானோர் பல அரச பதவிகளில் கோலோச்சி தற்போது ஓய்வும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இவர்கள் அகதிகள் என்ற பெயரோடும் அந்த சூழ்நிலையிலும் இடம்பெயர்வை மேற்கொண்டிருக்கவில்லை.  இந்நிலையில்  இந்திய அரசானது 2005 ஆம் ஆண்டில் இந்திய குடியுரிமை சட்டத்தில் அறிமுகப்படுத்திய வெளிநாட்டு இந்திய குடியுரிமை (Overseas Citizenship of India (OCI)  என்ற சட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

உலகின் பல நாடுகளிலும்  பரந்து வாழ்ந்து வரக்கூடிய இந்திய வம்சாவளி மக்களை ஒன்றிணைக்கவும் அவர்களின் மூலம் இந்தியாவில் முதலீடுகள் மற்றும் ஏனைய வர்த்தக தொடர்புகளை பேணவும்இ கலாசார உறவுகளை தக்க வைக்கவுமே இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் நான்கு தலைமுறைகளுக்கு முற்பட்ட காலத்தில் கூட இந்தியாவில் தமது வேர்களைக் கொண்டிருந்த இந்திய வம்சாவளியினர் அதை நிரூபிக்கும் ஆவணங்களை கொண்டிருந்தால் வெளிநாட்டு இந்திய குடியுரிமை என்ற அந்தஸ்த்தை கொண்ட அட்டையை பெற தகுதியுள்ளவர்களாக கணிக்கப்பட்டனர். இது ஓர் மட்டுப்படுத்தப்பட்ட இரட்டை குடியுரிமை சலுகை என வர்ணிக்கப்பட்டது. இதன் மூலம் இவ் அட்டையை கொண்டிருப்பவர்கள் எந்த நாட்டிலிருந்தாலும் விசா இன்றி இந்தியாவுக்குள் உட்பிரவேசிக்கலாம். எவ்வளவு நாட்களும் தங்கலாம். ஆனால் வாக்களிக்கும் உரிமை கிடையாது. அசையா சொத்துக்களை வாங்க வேண்டுமானால் ஏற்கனவே அவர்களது இரத்த வழி உறவினர்கள் அங்கு சொத்துக்களை வைத்திருப்பவர்களாக இருத்தல் வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இதன் மூலம் இலட்சக்கணக்கானோர் பயனடைந்தனர். தமது பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளை இந்தியாவில் முன்னெடுத்தனர். வர்த்தக தொடர்புகளை இலகுவாக மேம்படுத்தினர். 

ஆனால் இதில் முரண்பாடுகள் நீடித்தன. ஏனென்றால் 1823 ஆம் ஆண்டளவில் தமிழகத்தின் தென்னிந்திய கிராமங்களிலிருந்து உழைக்கும் வர்க்கமாக மத்திய மலை நாட்டின் பல பிரதேசங்களுக்கு வருகை தந்த தோட்டத்தொழிலாளர்களுக்கு இந்த வரப்பிரசாதங்களை அனுபவிக்க முடியாது போயிற்று. காரணம் அக்காலத்தில் தமது மூதாதையர்களின் பிறப்பு சான்றிதழ் மற்றும் கடவுச்சீட்டு போன்றவற்றை இவர்கள் பாதுகாத்து வைக்கவில்லை. இரண்டாவது 83 ஜுலை கலவரத்தில் பலர் இவற்றை இழந்தனர். அனைத்தும் சாம்பராகிப் போனது. 

 ஆதலால் இந்த  வெளிநாட்டு இந்திய குடியுரிமையைப் பெற இவர்களுக்கு விண்ணப்பிக்க முடியாது போனது. எனினும் இவர்கள் சார்பாக சில ஊடகங்கள் கண்டியிலமைந்துள்ள உதவி இந்திய தூதரகத்தை அணுகின. 1948 ஆம் ஆண்டு முற்றிலுமாக வாக்குரிமை பறிக்கப்பட்டு நாடற்றவர்களாகிய இவர்களில் கணிசமானோர் சிறிமா– சாஸ்த்ரி ஒப்பந்தத்தின் கீழ் மீண்டும் தாயகம் நோக்கிச் செல்ல மிகுதியானோருக்கு பதிவு பிரஜை என்ற அந்தஸ்த்து சான்றிதழ் வழங்கப்பட்டது. (இன்றும் அப்படித்தான் உள்ளது)  இவர்கள் இந்திய வம்சாவளி தமிழர்கள் என்ற அடையாளத்துடன் இலங்கையில் வாழ்ந்து வரும் வதிவிட பிரஜைகளே. இவர்களுக்கு  இலங்கை பிரஜைகள் என்ற அந்தஸ்த்தை அரசியலமைப்பின் ஊடாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டே வருகின்றன. இவ்வாறான வதிவிட பிரஜைகள் என்ற பெயரோடு வாழ்பவர்கள் இந்திய வம்சாவளியினரே ஒழிய வேறு நாட்டினர் இல்லை. ஆகவே குறித்த அந்த ஆவணத்தை ஏன் வெளிநாட்டு இந்திய குடியுரிமையைப் பெற இவர்களால் பயன்படுத்த முடியாது என்பது தான் கண்டி  இந்திய உதவி தூதரகத்தில் எழுப்பப்பட்ட கேள்வி. இதை ஒரு தனிப்பட்ட விவகாரமாக எடுத்து ஆலோசனைகளைப் பெற புது டெல்லிக்கு தகவல்கள் அனுப்பப்பட்டாலும் அங்கிருந்து சாதகமான பதில்கள் இது வரை கிடைக்கவில்லையென்பது முக்கிய விடயம்.

இதே வேளை 2019 ஆம் ஆண்டு டிசம்பம் மாதம் மோடி அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டஇ   பாகிஸ்தான்இ ஆப்கானிஸ்தான்இ பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்க வழி செய்யும் இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா  குறித்தும் பல கண்டனக்குரல்கள் எழுந்திருந்தன. இதில் ஏன் இலங்கை அகதிகளை சேர்க்க முடியாது? அவர்களுக்கு இலங்கை பெளத்தர்களால் துன்புறுத்தப்பட்டு உயிரை காப்பாற்ற கடல் கடந்து வந்தவர்கள் தாம்இ அதுவும் மது துன்புறுத்தல்களே. அப்படியானால் ஏன் கடந்த 30 வருடங்களுக்கு மேல் அகதிகளாக உள்ள இலங்கையர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என நாடாளுமன்றத்தில் விழுப்புரம் எம்.பி.ரவிக்குமார் அப்போது கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் வழங்கிய உள்துணை இணை அமைச்சர் நித்தியானந்தராய்இ "  இந்தியக் குடியுரிமை என்பது இ 1955 ஆம் ஆண்டு சட்டம் மற்றும்  குடியுரிமை விதிகள் 2009 இன் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. அந்த சட்டத்தின் பிரிவு 5 இன் படி பதிவு செய்துகொண்ட அயல்நாட்டவர் எவரும் இந்திய குடியுரிமை பெற முடியும். அந்த சட்டத்தின் பிரிவு 6 இன் படி இயல்புரிமை (யெவரசயடணையவழைn ) அடிப்படையில் குடியுரிமையைப் பெற முடியும். சட்டவிரோதமாகக் குடிபெயர்ந்தவர்கள் இந்த இரு விதத்திலும் இந்திய குடியுரிமையைப் பெற முடியாது" என்று தெரிவித்துள்ளார். 

அப்படியானால் இலங்கை அகதிகளை இ “அகதிகள் “  என்று அழைப்பதிலும் பார்க்க சட்டவிரோத குடியேறிகள் என்ற பெயரிலும் வைத்திருப்பதை இந்திய அரசு விரும்புகின்றதா என கேள்வி எழுப்பத்தோன்றுகின்றது. 

தமிழகத்தில் அகதிகளாக இருப்பவர்களில் பலர் அங்கேயே பிறந்து முதல் தலைமுறையை தாண்டியுள்ளனர். அவர்களுக்கு  இலங்கை என்பது அருகிலிருக்கும் ஒரு நாடு அவ்வளவு தான். இவர்களில் எத்தனைப்பேர் மீண்டும் இலங்கை வந்து இந்த நாட்டின் பிரஜைகளாக இருக்கப்போகின்றனரோ தெரியாது. ஆனால் ஒரு நாட்டில் அகதி என்ற பெயரோடு இருப்பதிலும் பார்க்க ஒரு நாட்டின் பிரஜை என்ற அந்தஸ்த்தோடு இருப்பதைத் தான் எவரும் விரும்புவர் என்பதை கூறத்தேவையில்லை. தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் இவர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யத் தயாரா அல்லது இதைத் தவிர்ப்பதற்கு இவர்களுக்கு இந்திய குடியுரிமையைப்பெற்றுத்தர டில்லியை ஏதாவதொரு வகையில் அணுகுமா? 

சிவலிங்கம் சிவகுமாரன்

Wednesday, August 25, 2021

பயங்கரவாதத்தை தோற்கடித்த தலைவர்கள் கொரோனாவை கண்டு அஞ்சுகின்றனர்…!

 

  யுத்த காலத்தில் யாருக்கும்   தெரியாதபடி திடீரென குண்டுகள் வெடித்தன. எவரும் எதிர்பாராத முறையில் பல உயிர்கள் கொல்லப்பட்டன. அதன் காரணமாக பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன.  ஆனால் இப்போது தெரிந்தே தினமும் நூற்றுக்கணக்கான  உயிர்களை எமது நாடு பலிகொடுத்துக்கொண்டிருக்கின்றது. எனினும் இதை தடுப்பதற்குரிய எந்த வித ஏற்பாடுகளையும் செய்யாது நீங்களே உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்று ஒரு அரசாங்கம்  கூறலாமா?

 

 ஆங்கில மருத்துவ முறையான அலோபதியின் தந்தை என போற்றப்படுபவர்  கிரேக்க நாட்டின் மருத்துவர் ஹிப்போகிரடிஸ். இன்றைய நவீன உலகை   ஆங்கில மருத்துவமான அலோபதியே ஆக்கிரமித்துள்ளது. இந்த முறையில் மருத்துவர்களாக உருவாகுபவர்கள் நோயாளர்களின் நன்மைக்காக பணியாற்றுவதாக உறுதி எடுத்துக்கொள்ளும்  முறையை தான்  ஹிப்போகிரடிஸ் சத்தியபிரமாணம் என்பர். (Hippocratic Oath) தற்போதைய கொரோனா சூழலில் உலகெங்கினும் உள்ள மருத்துவர்களின் மருத்துவ சேவையாளர்களின் பணியை இலகுவில் வர்ணித்து விட முடியாது.

கிட்டத்தட்ட எல்லா நாடுகளையும் ஆக்கிரமித்து உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தியுள்ள கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க வைத்தியர்கள் இரவு பகலாக போராடி வருகின்றனர். அது அவர்களின்   சத்தியபிராமாணத்துக்கு வழங்கும் கெளரவமாகும்.  தொற்றால் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில்  இது உயிர் காக்கும் தொழில் என்பதால் அவர்களுக்கு வழங்க வேண்டிய சகல வசதிகளையும் அந்தந்த நாட்டின் அரசாங்கங்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தையும் வழங்கியுள்ளன.  

ஆனால் அதிலிருந்து மாறுபட்ட ஒரே ஒரு நாடாக இலங்கை விளங்குகின்றது. நோய்த்தொற்று , அது தொடர்பான சுகாதார வழிகாட்டல் திறன்கள் , நிர்வாக செயற்பாடுகளில்  தேர்ச்சியும் முதிர்ச்சியும் பெற்ற வைத்திய குழாம் எமது நாட்டில் உள்ளது. எல்லாவற்றையும் விட இப்படியானவர்கள் தற்போதைய அரசாங்கத்திலும் இருக்கின்றனர். ஆனால் இவை எல்லாவற்றையும் ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து விட்டு சுகாதாரத் துறையுடன் சம்பந்தப்படாதவர்களுக்கு இத்துறையை வழங்குவதில் அக்கறை காட்டி வருகின்றது அரசாங்கம். தேர்ச்சி பெற்ற வைத்தியரான சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சராக மட்டுமே விளங்குகிறார். அவரது அனைத்து ஆலோசனைகளும் புறக்கணிக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் சுகாதார அமைச்சராக பவித்ரா வன்னியாராய்ச்சி நியமிக்கப்பட்டவுடன் பலத்த விமர்சனங்கள் எழுந்தன. இத்தொற்றை கட்டுப்படுத்துவதற்குரிய எந்த வித நடவடிக்கைகளையும் அவரால் எடுக்க முடியாதிருந்தது. ஏனென்றால் ஜனாதிபதி கொவிட் செயலணியை இராணுவ தளபதியின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார். அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கமானது தொடர்ச்சியாக நாட்டின் நிலைமை குறித்து அரசாங்கத்துக்கு விளங்கப்படுத்தி வந்தாலும் இதையெல்லாம் ஒரு பொருட்டாக எவரும் எடுத்துக்கொள்ளவில்லை.  

நாளுக்கு நாள் அதிகரித்த விமர்சனங்கள் காரணமாக கடந்த வாரம் அமைச்சரவையில் மாற்றங்கள் இடம்பெற்றாலும் சுகாதார அமைச்சானது மீண்டும் அது தொடர்பில்  எந்த வித அனுபவங்களோ இல்லாத முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கே வழங்கப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்னர்  நாட்டின் நிலைமைகள் குறித்து இவர் கூறிய கருத்து பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. ‘ஒன்றும் முடியாவிட்டால் நாட்டை கடவுளிடம் தான் ஒப்படைக்க வேண்டும்’ என இவர் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார். இப்போது நாட்டின் சுகாதாரத் துறையை ஜனாதிபதி இவரிடம் ஒப்படைத்திருக்கின்றார்.  கடந்த வருடம் ஒரு சந்தர்ப்பத்தில் இவர் தான் ‘புலிகளை தோற்கடித்த எங்களுக்கு கொரோனா எல்லாம் ஒரு பொருட்டே அல்ல’ என்று வீர வசனம் பேசியிருந்தார்.

ஆரம்பத்தில் தேசிய சுகாதார சேவைகள் பணிப்பாளராக விளங்கிய டாக்டர் அனில்  ஜாசிங்க  சம்பந்தமில்லாது தற்போது சுற்றாடல் அமைச்சின் செயலாளராக பணி புரிகின்றார்.நோயாளிகளை எந்த நிலையிலும் பாதுகாப்பேன் அவர்களின் உயிரை இறுதி முயற்சிவரை  காப்பாற்ற போராடுவேன் என ஒரு வைத்தியராக சத்தியபிரமாணம் எடுத்துக்கொண்ட இராஜாங்க அமைச்சர்  டாக்டர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே  ஒரு கட்டத்தில் நாட்டு மக்களுக்கு விடுத்திருந்த செய்தி மிக முக்கியமானது. ‘அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிக்கும் என்று எதிர்ப்பார்ப்பதற்கு முன்பதாக மக்கள் தாமே தமது உயிர்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” என்று அவர்  கூறியிருந்தார். தனது மனசாட்சியை ஒரு பக்கம் கழற்றி வைத்து விட்டு அவர் அப்படி கூறியிருக்கின்றார். ஏனென்றால் அப்படித்தான் அவருக்கு சொல்லப்பட்டிருக்கின்றது.

  கொரோனா நிலைமைகள் பற்றிய எந்த ஒரு அறிவையும் கொண்டிராத சில அரசியல்வாதிகள் வைத்தியர்களாக மாறி மறு பக்கம் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அது பற்றிய பூரணமான தெளிவும் அறிவும் கொண்ட அரசாங்கத்தின் பக்கம் இருக்கக் கூடிய வைத்தியர்கள், நோயியல் நிபுணர்கள், பேராசிரியர்களோ மக்களிடம் நீங்களே உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்று மனதுக்குள் அழுதபடி ஒலிவாங்கியின் முன்பாக சிரித்து பேச முயற்சிக்கின்றனர்.

 மனசாட்சியின் படி வைத்தியர்களாக சத்தியபிரமாணம் எடுத்துக்கொண்ட வைத்தியர்களுக்கு இதை விட அவமானத்தையும் மன உளைச்சளையும் அரசாங்கத்தால் தந்து விட முடியாது. ஆனாலும் ஆரம்பத்தில் தமது உரிமைகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் வேலை நிறுத்த போராட்டங்கள் மற்றும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும் வைத்தியர்கள் இப்போது மெளனமாக இருப்பது ஏனோ என்ற கேள்வி எழுகின்றது. இவர்களுக்கு பாரிய பொறுப்புள்ளது.யுத்த காலத்தில் யாருக்கும்   தெரியாதபடி திடீரென குண்டுகள் வெடித்தன. எதிர்பாராத முறையில் பல உயிர்கள் கொல்லப்பட்டன. அதன் காரணமாக பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன.  ஆனால் இப்போது தெரிந்தே தினமும் நூற்றுக்கணக்கான  உயிர்களை எமது நாடு பலிகொடுத்துக்கொண்டிருக்கின்றது. எனினும் இதை தடுப்பதற்குரிய எந்த வித ஏற்பாடுகளையும் செய்யாது நீங்களே உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்று ஒரு அரசாங்கம் கூறலாமா? எந்தளவுக்கு அரச யந்திரம் விபத்துக்குள்ளாகி செயலற்று போகியிருக்கின்றது என்பதற்கு இது ஒன்றே போதுமே?

போரை முடிவுக்கு கொண்டு வந்தோம் என்ற கோஷங்களுடன் மாத்திரமே  ஆரம்பத்தில் மஹிந்தவும் தற்போது கோத்தாவும் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். ஆனால் யுத்த காலத்தில் தினந்தோறும் கொல்லப்பட்டவர்களை விட யுத்தமில்லாத இந்த காலத்தில் நாட்டு மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிகின்றனர். இதற்கு பாதுகாப்பு அரணாக செயற்பட வேண்டியது இராணுவ ஜெனரல்களின் வியூகங்களல்ல…..மாறாக வைத்தியர்களின் ஆலோசனைகளே. அரசாங்கத்தின் பக்கமிருக்கும் விசேட நோயியல் தொடர்பான பேராசிரியர் திஸ்ஸ விதாரண மற்றும் டாக்டர்  சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே இருவருக்கும் அந்த வாய்ப்புகளை நிச்சயமாக அரசாங்கம் வழங்கப்போவதில்லை. ஏனென்றால் யார் எந்த துறையை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை அரசியல்வாதிகளாக வைத்திருக்கவே அரசாங்கம் விரும்புகின்றது. ஒலிவாங்கிகளின் முன்பதாக அவர்கள் தமது துறை சார்ந்தவர்களாக சில உண்மைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு இந்த அரசாங்கம் விரும்பாது. அது இன்னும் அரசாங்கத்தை பலவீனமாக்கும்.   புதிய சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய,  மஹிந்த காலத்திலேயே ‘கோயபல்ஸ்’ என வர்ணிக்கப்பட்டவர். மக்களுக்கு எதிரான சம்பவங்களையும் செய்திகளையும் ஏன் பொய்களையும்  கூட,  மக்கள் நம்பும்படியாக அவர்களிடம் கொண்டு சேர்க்கும் கலையை ஹிட்லரின் பிரசார செயலாளராக விளங்கிய கோயபல்ஸ் முன்னெடுத்திருந்தார். ஆக அப்படியான ஒருவரே இன்று சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார். 

இறுதி நேரத்தில் அமைச்சர் பவித்ரா நேரடியாகவே ஜனாதிபதியிடம் நாட்டின் நிலைமை குறித்து எடுத்துக் கூறியும் கிண்டல் தொனியில் ஜனாதிபதியிடமிருந்து பதில் கிடைத்ததாகவே தெரியவருகின்றது. தனது அமைச்சுப் பதவியை விட்டு போகும் போது பவித்ரா “நடப்பதெல்லாம் நன்மைக்கே ‘ என்ற பொருள் பட ஒரு குட்டிக்கதையையும் கூறி விட்டுச் சென்றிருக்கிறார்.  தொற்றை கட்டுப்படுத்த ஆரம்பத்தில் எடுக்க வேண்டிய சில முக்கியமான முடிவுகளை விடுத்து தற்போது அரசாங்கம் திருமண நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடு விதித்தல், போக்குவரத்து கட்டுப்பாடுகள் என சிறுபிள்ளைகளும் சிரிக்கும் வண்ணம் உத்தரவுகளை பிறப்பிக்கின்றது. நாட்டின் அனைத்து அரச வைத்தியசாலைகளும் செயலற்ற நிலையில் உள்ள அதே வேளை . மக்கள் தமது தலை விதியை நினைத்து தமது உறவினர்களை பறிகொடுத்து வருகின்றனர்.  பொறுப்பான ஒரு சுகாதார அமைச்சர் என்ற பதவியிலிருந்த பவித்ரா அம்மணி தனக்கு பதவி பறி போனதை மட்டும் சுட்டிக்காட்டி நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று கூறியிருப்பது எவ்வளவு சுயநலமிக்க வார்த்தைகள்? அப்படியானால் நாள்தோறும் சராசரியாக இருநூறு பேர் வரை இறந்து கொண்டிருக்கின்றனரே? அதுவும் நன்மைக்குத் தான் என்று நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?  உயிரை காக்கும் வைத்தியர்கள் ஏற்றுக்கொள்வார்களா? எப்படியானதொரு அரசியல்வாதிகள் மத்தியில் நாடு அகப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதை இப்போது மக்கள் உணர்ந்திருப்பர். ஆனால் நாம் கூற வேண்டியது ஒன்று தான். காலம் கடந்த விட்டது !

சிவலிங்கம் சிவகுமாரன்

 

 

Sunday, June 6, 2021

சிங்கள மன்னர்களின் வரலாற்றையே சீண்டி பார்க்கும் சீனா....! 

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் சீனாவின் ஆதிக்கம் தொடர்பில் சர்வதேச நாடுகள் எதிர்ப்பை வெளிப்படுத்தினாலும் குறித்த நாடுகளே அதை ஏற்றுக்கொள்ளும் நிலை வரும் போது சர்வதேசம் வாய் மூடி மௌனமாகத்தான் இருக்க வேண்டியுள்ளது. பட்டபிறகு தெளியுங்கள் என்பது தான் சீனாவின் விடயத்தில் பல நாடுகளின் தத்துவமாக இருக்கின்றது.
இலங்கை விடயத்திலும் அப்படியே நடந்தது , நடந்து கொண்டிருக்கின்றது, நடக்கப்போகின்றது. . பௌத்தத்தை பின்பற்றும் உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடு என்ற ஒரே விடயமே இலங்கையை பல வழிகளிலும் சீனா கால்பதிக்கக் காரணம். இங்கு வாழ்ந்து வரும் தீவிர பௌத்த சிந்தனை கொண்டவர்களுக்கு அது ஒன்றே போதுமானதாக இருந்தது. ஆனால் சீனாவுக்குள்ளே
சென்று பார்த்தால் அது மதச்சார்பற்ற கம்யூனிச நாடு என்பதை சிறுகுழந்தையும் கூறும்.
தற்போதைய சீனாவின் வெளியுறவுக்கொள்கைகள் மற்றும் திறந்த பொருளாதார அணுகுமுறைகளைப்பார்த்தால் அதை கம்யூனிச நாடு என்று ஏற்றுக்கொள்வது கடினம்.
1949 ஆம் ஆண்டு புரட்சியாளர் மாவோ தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. அதிலிருந்து இன்று வரை 70 ஆண்டுகளையும் கடந்து ஒரே கட்சி ஒரே நாடு என்ற தொனிப்பொருளிலேயே சீனா பயணித்துக்கொண்டிருக்கின்றது.. அந்த கொள்கையை தொடர்ந்தும் தக்க வைக்கும் திட்டமே ஒரே பாதை ஒரே மண்டலம். இதை பட்டுப்பாதை திட்டம்
என்று அழைக்கின்றனர். பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு ஐரோப்பா கடந்து சீனா மேற்கொண்ட வணிகப் பாதையை ஒன்றிணைக்கும் திட்டமே இது. இதில் இலங்கையும் உள்ளடங்குகிறது. இதை முன்வைத்தே சீனாவானது, பட்டுப்பாதை திட்டம் ;முன்முயற்சியின் இலங்கை என்ற ( Belt & Road Initiative Sri Lanka (BRISL) என்ற பெயரில் இலங்கையை பிரபல்யப்படுத்தும் முயற்சியை ஆரம்பித்துள்ளது. இதற்கென பிரத்தியேகமான இணையத்தளம், சமூக ஊடக செயற்பாடுகளை அது முன்னெடுத் து வருகின்றது. இந்த பி.ஆர்.ஐ.எஸ்.எல் ஆனது கலாசார, வணிக மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் நிபுணத்துவம் பெற்ற ஒரு கல்வி மற்றும் ஆலோசனை தளம் என்று சீனா கூறுகின்றது.
இந்த வலைதளத்தின் ஓரிடத்தில் இவ்வாறான வாசகங்கள் ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளன.

 சீனாவிலுள்ள உலகின் மிகப்பெரிய சந்தைகளில் வாய்ப்புகளைப் பெற இலங்கையில் தயாரிக்கப்பட்ட உற்பத்திகளை இப்பகுதியில் விளம்பரம் செய்யவும் ......உங்களுக்கு சேவை செய்ய இங்கு நாம் தயாராக இருக்கின்றோம்........”

மெல்ல மெல்ல இலங்கையை ஆக்கிரமித்து வரும் சீனா அதன் வர்த்தக தலைநகரத்திலேயே துறைமுக நகர் என்ற பெயரில் தனது கால்களைப் பதித்துள்ளது. இனி இலங்கையின் எந்த பாகத்தையும் அது தடையின்றி தனது ஆதிக்கத்தால் கை வைக்கலாம். அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக இலங்கையை ஆக்கிரமித்து விட்ட சீனா, தற்போது வரலாற்றிலும்
கைவைக்க ஆரம்பித்துள்ளது. இது ஓரளவுக்கு சீனாவை ஏற்றுக்கொண்ட பௌத்த சிங்கள மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் வெசாக் நிகழ்வுகள்
கடந்த மே மாதம் 26 ஆம் திகதி சீனாவின் தலைநகர் பீஜிங்கில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தில் அனுஷ்டிக்கப்பட்ட வெசாக் கொண்டாட்டங்களின் படம் ஒன்றை, பி.ஆர்.ஐ.எஸ்.எல் தனது டுவீட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளது.. சீனாவிற்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கோகன்ன உட்பட சீன அதிகாரிகளுக்கு மத்தியில் ஒரு பெண்ணும் நிற்கிறார். இலங்கை கோட்டை இராஜ்ஜியத்தை ஆண்ட 6 ஆம் பராக்கிரமபாகுவின் 19 ஆவது
தலைமுறை வாரிசான இலங்கை இளவரசி சூ ஷி ஹின் உம் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டார் என அதில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
இந்த டுவீட்டர் பதிவு இலங்கை மட்டுமல்லாது வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் பௌத்த சிங்கள மக்களிடையே கடும் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளன. அவர்களில் பலர் இந்த பதிவுக்கு எதிர்ப்பதிவிட்டு இதற்கு ஆதாரம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளனர். எனினும்
சீனா குறிப்பிடும் அந்த இலங்கை இளவரசியான சூ ஷி ஹின் இலங்கை மக்களுக்கு புதியவரல்லர். இதற்கு முன்பதாக இரு சந்தர்ப்பங்களில் அவர் இலங்கை வருகை தந்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஊடகக்குழுவினர்களும்
இவரைப்பற்றிய செய்திகளை இலங்கை ஆங்கில ஊடகங்களுக்கு வழங்கியிருந்தனர். 
அப்போதெல்லாம் இலங்கையின் மன்னர் பரம்பரையுடன் தொடர்புடைய இலங்கை இளவரசி என்று தான் கூறப்பட்டிருந்தது.. இவர் மன்னர் பரம்பரை வாரிசு என்பதை சீனாவே பல வருட காலங்கள் மறைத்து வைத்திருந்தமை அவரிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணலின் மூலம் தெரிய
வருகின்றது. ஆனால் எந்த மன்னர் என்ற விடயத்தை இப்போது தான் சீனா
வெளிப்படுத்தியுள்ளது.. நான் ஒரு மன்னர் பரம்பரையில் வந்த இளவரசி என்பதை முன்பே அறிந்து வைத்திருந்தேன். எனது பரம்பரையினர் தேவையற்ற சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமலிருக்கவே அது இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது என்று கூறும் இந்த இளவரசி இலங்கைக்கு தான் வந்த போது பல வரலாற்றாசிரியர்களை சந்தித்து தனது பூர்விகம்
பற்றி அறிய முயன்றதாகவும் இலங்கையர்களை சந்திக்கும் போதெல்லாம் தான் அவ்வாறே உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

1990 களில் வெளிவந்த இரகசியம்
1990களில் சீனாவானது ஒரு அபிவிருத்தித் திட்டத்துக்காக சிஹிஜா பிராந்தியத்தின் குவிங்யுவான் மலைப்பிரதேசத்திலமைந்துள்ள கல்லறைகளை அகற்ற முடிவு செய்த போதே இந்த இரகசியம் வெளிப்பட்டது. இது மன்னர் ஒருவரின் வாரிசுகளை பல ஆண்டு காலமாக அடக்கம் செய்யப்பட்ட இடம் என்பது தெரியவந்தது.. மட்டுமன்றி அந்த மன்னர் சீன பெண்ணை
மணந்த இலங்கை இளவரசர் என்ற கதைகளும் வெளிப்பட்டன.. அவர் ஷி என்ற பெயருடன் சீனாவிலேயே தங்கி விட்டார். அதற்குக் காரணம் அரசியல் அல்ல காதல் என்பதே உண்மை  என்கிறார் இப்போதைய இளவரசி சூ ஷி ஹின். குறித்த கல்லறைகளில் சிங்கம் மற்றும் சீன ட்ராகனின் உருவாங்கள் உள்ளன.
15 ஆம் நூற்றாண்டில் கோட்டை இராஜதானியை ஆண்ட திறமை மிக்க அரசனாக 6 ஆம் பராக்கிரமபாகு மன்னர் விளங்குகிறார். இவர் 1415 முதல் 1467 வரை ஆண்டதாக வரலாறு கூறுகின்றது. எனினும் சீன ஊடகங்கள் இவ்வாறானதொரு கதையைக் கூறுகின்றன. சீனாவின் மிங் சக்கரவர்த்தியின் யுகத்தில் 15 ஆம் நூற்றாண்டில் கோட்டை இராஜதானியை
அலகேஷ்வரா என்ற துணிச்சலான இளவரசர் ஆண்டு வந்ததாகவும் மிங் சக்கரவர்த்தியின் தளபதிகளால் அவர் கடத்தப்பட்டு சீனா கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் அங்கு சீன பெண்ணிடம் காதல் வயப்பட்டு அங்கேயே தங்கி விட்டதாகவும் பின்பே மிங் சக்கரவர்த்தி
கோட்டைக்கு 6 ஆம் பராக்கிரமபாகுவை மன்னராக்கியதாகவும் கூறப்படுகின்றது. . ஆனால் இந்த கதைகளை எவரும் அங்கீகரிக்கவும் நம்புவதற்கும் தயாராக இல்லை. 15 ஆம் நூற்றாண்டில் இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கம் குறித்து எமது வரலாற்றாசிரியர்களிடம் ஒரு கனத்த மௌனமே நிலவுகிறது. எனினும் இந்த சம்பவம் குறித்த
பதிவுகள் , குறிப்புகள் வரலாற்றாசிரியகளினால் திரட்டப்பட்டுள்ளன.. இந்த குறிப்புகள் இலங்கையை மட்டுமல்லாது சீனாவின் கடற்படை விரிவாக்கம் குறித்த சூழல்களையும் அரசியலையும் பிரதிபலிப்பதாக உள்ளன என்று தெற்காசிய பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் சசங்கா பெரேரா இந்த சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.. எனினும் மேற்படி டுவீட்டர் பதிவுக்கு கேலியும் கிண்டலும் கலந்த பரிகாச பதில்களை இலங்கையர்கள் வழங்கி வருகின்றனர். இந்த வரலாறு தொடர்பில் மர்மம் நிலவுகின்றதா அல்லது இது கட்டுக்கதையா என்பதை அரசாங்கமே தெளிவுபடுத்த வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளது.

ஆனாலும் இது வரை இது குறித்து அரசாங்கம் எந்த கருத்துக்களையும் வெளிப்படுத்தவில்லை