Thursday, December 29, 2011

கொல வெறி பாடல் வரிகள் தமிழில்ஹலோ போய்ஸ் ஐ எம் சிங்கிங் ஸோங்...
சூப் ஸோங்..புளொப்
வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?
வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?
ரிதம் கெரக்ட்…
வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?
மெயிண்டெய்ன்
திஸ்வை திஸ் கொல வெறி? டி..
டிஸ்டன்ஸ்ல மூனு மூனு
மூனு கலரு வைட்டு..
வைட் பேக்கிரவுண்ட் நைட்டு நைட்டு
நைட்டு கலரு பிளக்கு..
வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?
வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?
வைட்டு ஸ்கின்னு கேர்ள்ளு கேர்ள்ளு..
கேர்ள்ளு ஹார்ட்டு பிளக்கு..!
ஐஸ்சு ஐஸ்சு மீட்டு மீட்டு..
மை பியூட்சர் டார்க்கு..!
வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?
வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?
மாமா நோட்ஸ் எடுத்துக்கோ ..
அப்படியே கைல ஸ்னெக்ஸ் எடுத்துக்கோ..
பாபா பா பா பாபா பாபா பா பா…
சரியா வாசி..
சூப்பர் மாமா ரெடி ரெடி 1 2 3 4..
வட் எ சேஞ்ச் ஓவர் மாமா..
ஓ கே மாமா நவ் டியூன் சேஞ்சு..
கைல கிளாசு.. ஒன்லி இங்கிலிஷ்சா..
ஹேண்ட்ல கிளாசு..
கிளாஸ்ல ஸ்கொட்ச்சு..
ஐஸ்ல புல்லா டியரு..!
எம்டி லைப்பு கேர்ள் கம்மு..
லைப்பு ரிவர்சு கியரு..
லவ்வு லவ்வு ஓ மை லவ்வு
யூ ஷோ டு மீ பவ்வு..!
கவ்வு கவ்வு ஹொலி கவ்வு
ஐ வோண்ட் யூ ஹியர் நவ்வு..!
கோட் ஐயாம் டையிங் நவ்வு..
ஷீ இஸ் ஹெப்பி ஹவ்வு..!
திஸ் ஸோங்கு போர் சூப் போய்சு..
வீ டோண்ட் ஏவ் ச்சொய்சு..
வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?
வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?
வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?
வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?
புளொப் ஸோங்..
நோ டமில் ஒன்லி இங்கிலிசு..!Tuesday, December 27, 2011

இந்திய வம்சாவளி மக்களை அடிமைகளாக சித்திரிக்கும் போக்கு மாற வேண்டும்
இந்திய வம்சாவளி மலையக மக்கள் என்போர் பல்வேறு நெருக்குவாரங்களுக்கு மத்தியில் வாழந்து வருகின்றனர் என்பதை மறுக்க முடியாது தான் . தென்னிந்தியாவிலிருந்து தொழில் தேடி வந்த இந்த மக்கள் கூட்டத்தினாலேயே மலையகம் எனும் பிரதேசம் உருவாகியது. தமது இடைவிடாத உழைப்பின் மூலம் காடுகளை அழித்து பெருந்தோட்டங்களை உருவாக்கினர். எனினும் இவர்களை அடிமைகளாக சித்திரிக்கும் அதே நேரம் இன்னமும் இந்த மக்கள் கூட்டம் எந்த வித அடிப்படை உரிமைகளும் இன்றியே வாழ்ந்து வருகின்றனர் என்றும் இவர்கள் அரசியல் அனாதைகள் என்றும் பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இச்செய்கை ஒரு விதத்தில் இந்த மக்கள் கூட்டத்தினரை பரிதாபமாக பார்க்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. மலையகத்திலிருந்து உருவான இலக்கியவாதிகள் சிலரும் பத்திரிகையாளர்களும் கூட இன்னமும் இந்த மக்கள் அடிமை வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் என்ற போக்கிலேயே பேசியும் எழுதியும் வருகின்றனர். இலங்கையின் ஏனைய சமுகத்தினரைப்போல அல்லாது எல்லா அம்சங்களுமே இந்த மக்களுக்கு மிக தாமதமாகவே கிடைத்தன என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு நாட்டில் வாழ்வதற்குரிய பிரஜா உரிமை கிடைத்ததே இம்மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். கல்வி ,குடியிருப்பு,சுகாதாரம் மற்றும் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்ட காலகட்டத்தில் கூட எதிர் நீச்சல் போட்டு முன்னேறி இன்று பெயர் சொல்லும் படியான ஒரு அந்தஸ்த்தை இந்த மக்கள் பெற்றுள்ளதை மறுக்க முடியாது.எனினும் பல சந்தர்ப்பங்களில் இந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய, படுத்தி வரும் தலைவர்களை கேலிக்குரிய பொருளாக்கி பார்ப்பதிலும் ஏனைய பிரதேச தலைவர்களின் சேவைகளை இவர்களோடு ஒப்பிட்டு விமர்சனம் செய்வதுமாக தமது காலத்தை போக்கி வருகின்றனர் சிலர். இந்தளவிற்கு இவர்களுக்கு பேசுவதற்குரிய சுதந்திரமும் கல்வியும் அந்த பழைய தலைவர்களாலேயே கிடைத்தது என்பதை இவர்கள் எக்காலமும் ஏற்றுக்கொள்வதில்லை.

தேங்காயும் மாசியும் ஒரு பொய்யான தகவல்
இலங்கையின் பெருந்தோட்டப்பயிர்ச்செய்கையில் பிரதான இடத்தை வகிப்பது தேயிலை. தேயிலை பயிரிடுவதற்கு முன்பாக கோப்பி,கொக்கோ மற்றும் சிங்கோனா ஆகிய பயிர்களே பெருந்தோட்டப்பகுதிகளை அலங்கரித்தன. வரலாற்றை எடுத்துப்பார்த்தோமானால் 1769 இல் இருந்து 1830 வரை கறுவாவே இலங்கையின் பிரதான ஏற்றுமதி பயிராக இருந்தது. எனினும் இது எதிர்பார்த்தளவு இலாபத்தை கொடுக்காததால் 1825களிலேயே மாற்றுப்பயிராக கோப்பியை பயிரிடுவது என முடிவாயிற்று. ஒரு சில இடங்களில் பரீட்சார்த்தமாக கோப்பி பயிரிடப்பட்டிருந்தது. அதன் படி வர்த்தக நோக்கிற்காக இலங்கையில் முதன் முதலாக கோப்பியானது காலி மாவட்டத்தின் பத்தேகம எனும் இடத்தில் பயிரிடப்பட்டது. தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு மக்கள் வருகை தரத்தொடங்கியது இக்காலகட்டத்தில் தான். 1824 களிலேயே அவர்கள் வந்தமைக்கான சான்றுகள் இருந்தாலும் 1827 ஆம் ஆண்டே அவர்கள் இங்கு வந்ததற்கான பதிவுகளும் குறிப்புகளும் இருக்கின்றன. அதற்குப்பிறகு 1867 ஆம் ஆண்டு தேயிலை பயிர்ச்செய்கை பற்றிய எண்ணக்கரு ஆரம்பிக்கும் வரை இலங்கைக்கு வந்த இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்துக்கும் மேல். இவர்களில் பெரும்பாலானோர் நேரடியாக கோப்பிப்பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்தப்பட்டனர். 1824ஆம் ஆண்டு சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தேயிலைச்செடி ஒன்று பேராதனை பூங்காவில் நடப்பட்டது. 1934 களில் கிழக்கிந்திய கம்பனி (பிரிட்டிஷ்) மூலம் இந்தியாவின் அசாம் மற்றும் கல்கத்தா ஆகிய இடங்களில் தேயிலை வர்த்தக பயிராக பயிரிடப்பட்டது.அதே முயற்சியை இலங்கையிலும் மேற்கொண்டால் என்ன என்று பிரித்தானியருக்கு தோன்றியது. கோப்பிப் பயிரை ஒரு வித நோய் தாக்கியதால் மாற்றுப்பயிர் ஒன்றுக்கான அவசியம் எழுந்தது. அதன் படி ஜேம்ஸ் டெயிலரினால் கண்டி மாவட்டத்தின் லூல்கந்துர எனும் இடத்தில் 19 ஏக்கர்களில் தேயிலை பயிரிடப்பட்டது. வர்த்தக நோக்கிற்காக தேயிலை பயிரிடப்பட்ட முதல் சந்தர்ப்பம் அதுவாகும். வரலாறு இப்படியிருக்க தேயிலைக்கடியில் மாசியும் தேங்காயும் பருப்பும் இருப்பதை நம்பி தான் தென்னிந்தியாவிலிருந்து மக்கள் இலங்கைக்கு வந்தனர் என்ற கட்டுக்கதையை இன்றளவும் சிலர் சொல்லி வருகின்றனர். தேயிலையே பயிரிடப்படாத காலகட்டத்தில் அது குறித்து எவ்வாறு பேசப்பட்டிருக்கும்? தேயிலைபயிரிடப்படுவதற்கு 40 வருடங்களுக்கு முன்னரே இந்த மக்கள் இலங்கைக்கு வந்து விட்ட சான்றுகள் தாராளமாகவே உள்ளனவே? ஆகவே வரலாற்றை ஆராயாமல் எதையுமே அறுதியிட்டு சொல்ல முன் வரக்கூடாது. தென்னிந்தியாவில் அக்காலகட்டத்தில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் மழையின்மை காரணமாகத்தான் மக்கள் வேறு தேசங்களுக்கு தொழில் தேடி பயணித்தனர். இலங்கைக்கு மட்டுமல்லாது இக்காலகட்டத்தில் அவர்கள் மலேசியா, மொரிஷியஸ்,மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளுக்கும் பயணித்தனர்.

மலையக மக்கள் அடிமைகளா?
அடிக்கடி இந்திய வம்சாவளி மலையக மக்களை பற்றி கூறப்படும் வாக்கியம் அடிமைகள் என்பதாகும். முதலில் அடிமைகள் என்றால் என்ன என்பதை பலரும் விளங்கிக்கொள்ளல் அவசியம். புராதன கிரேக்க,ரோம எகிப்து நாடுகளில் அடிமை முறை நிலவியது. ஒரு மனிதனை அவனது அனுமதி இல்லாது வலுக்கட்டாயமாக பிடித்து வைத்து வேலை வாங்குவது அவனை கொடுமை படுத்துவது அவனின் குடும்பத்தையும் ஆட்டிப்படைத்தல் தான் அடிமை தொழில்.அடிமைகள் என்றதுமே எமக்கு ஞாபகத்திற்கு வருவது ஆபிரிக்கா தான் . மத்திய ஆபிரிக்காவின் கொங்கோ எனும் நாட்டை தன் வசம் வைத்திருந்த பெல்ஜியம் இலட்சக்கணக்கானோரை அடிமைகளாக நடத்தியது. கைகள் கால்களை சங்கிலிகளால் பிணைத்து வேலை வாங்கப்பட்டது. இங்கிருந்து பல நாடுகளுக்கு அடிமைகள் விற்கப்பட்டனர். இடையில் தப்பித்து சென்று விடக்கூடாது என்பதற்காக சங்கிலியால் பிணைத்தே அழைத்துச்செல்லப்பட்டனர். 19 ஆம் நூற்றாண்டின் மத்திய காலகட்டத்திற்கு முன்பாகவே அடிமை முறை கிட்டத்தட்ட 95 வீதம் ஒழிக்கப்பட்டு விட்டது, 1835 ஆம் ஆண்டு காலகட்டம் எனலாம்.இலங்கைக்கு தொழில் தேடி வந்த மக்கள் இப்படியா வந்தனர் அல்லது இப்படியா அழைத்து வரப்பட்டனர்? அவர்கள் சுதந்திரமாக வருகை தந்தனர்,பிற்பாடு தேயிலை தொழிற்றுறைக்கு அதிக தொழிலாளர்கள் தேவைப்பட்டதால் கப்பல்களில் அழைத்து வரப்பட்டனர். பின்னர் கால்நடையாக மாத்தளை ,கண்டி ,நுவரெலியாவுக்கு வந்தனர். இவர்களை அழைத்து வருவதில் பெரும்பங்காற்றிய பெரியகங்காணிமார்களே இவர்களை தமது அதிகாரத்தால் நசுக்கி பிழிந்தனர். ஆனால் அடிமையாக நடத்தினர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா? 1960களில் பெரியகங்காணி முறையும் ஒழிக்கப்பட்டு விட்டது.

இப்போதைய காலகட்டம்
தென்னிந்தியாவிலிருந்து தொழில் தேடி இலங்கை வந்த இந்திய வம்சாவளினர் அல்லது தொழிலாளர் வர்க்கத்தினர் இங்கு குடியேறி சுமார் 188 ஆண்டுகள் ஓடி விட்டன. எனினும் இலங்கை சுதந்திரத்திற்கு பிற்பட்ட காலத்திலேயே இவர்களுக்கு ஓரளவிற்கேனும் சலுகைகள் கிடைக்கப்பெற்றன. அது வரையிலும் இவர்கள் அரசியல் அனாதைகளாக இருந்திருக்கலாம்.ஆனால் இப்போது அப்படியல்ல கல்வி உட்பட பல துறைகளில் இச்சமூக மக்கள் பெயர் சொல்லும் படியாக முன்னேற்றம் கண்டிருக்கின்றனர்.இவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதங்கள் சலுகைகளின் காலகட்டங்களை வைத்துப்பார்த்தால் இது ஒரு மிகப்பெரிய வளர்ச்சி தான். எனினும் பழைய பஞ்சாங்கங்களையே கூறிக்கொண்டு காலங்கழித்து வரும் ஒரு சில அரைவேக்காட்டு நபர்களினால் இம்மக்களின் முன்னேற்றமும் வளர்ச்சியும் கிடப்பிலேயே போடப்படுகிறது. ஒரு சிலர் வடபகுதி மக்களை இவர்களோடு ஒப்பிட்டு எழுதுகின்றனர்.யுத்த சூழ்நிலைக்குப்பின்னர் வடபகுதி வாழ் மக்கள் பீனிக்ஸ் பறவைகளாக உயிர்த்தெழுந்திருக்கின்றனராம்.அது போல் இவர்களும் விழித்தெழ வேண்டுமாம் இது எவ்வளவு அபத்தமான விடயம்? வடபகுதி வாழ் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் மலையக மக்களின் பிரச்சினைகளையும் விளங்கிக்கொள்ளாத முட்டாள்களின் உளறல்களாகவே இவற்றை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. மலையகத்தைப்பொறுத்த வரை அமரர் தொண்டமானுக்குப்பிறகு ஒரு தலைவர் உருவாகவில்லை என்கின்றனர் ஒரு சிலர்.உலகத்தில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மகாத்மா காந்திக்குப்பிறகு தன்னலமற்ற ஒரு தலைவர் ஏன் உருவாகவில்லை? இதற்கு விடை கூறுவார்களா? காலம் தான் அனைத்தையும் தீர்மானிக்கின்றது. காலமாற்றத்திற்கேற்ப சமூகம் .அரசியல் , பொருளாதாரம் ,கல்வி என அனைத்தும் மாறிக்கொண்டிருக்கும் போது மக்களின் மாற்றங்களுக்கேற்ப புதிய தலைமைத்துவங்களும் உருவாகும் ,மாற்றம்பெறும். இதை உணர்ந்து கொண்டு செயற்படுதலே சாணக்கியமாகும். முதலில் ஒரு குறிப்பிட்ட சமுகத்தின் பிரச்சினைகளை விளங்கிக்கொள்ளல் அவசியம் .அதை விடுத்து ஏனைய சமுகங்களோடு ஒப்பீடு செய்து இதை ஏன் இந்த சமுகத்திற்கு செய்யமுடியாது என்று கேள்வி கேட்பது இயலாமையின் வெளிப்பாடாகவே அமையும். மலையகத்திலோ , தலைநகரிலோ அல்லது இலங்கையின் எப்பாகத்திலேனும் இந்திய வம்சாவளி மலையகத்தமிழர்களைப்பற்றி கொச்சையாகப்பேசுவது சிலருக்கு வாடிக்கையாகி விட்டது. இம்மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை ஒன்றுமே கிடைக்கவில்லை என்று கூறுபவர்கள் இந்த சமுகத்திற்கு என்ன பங்காற்றியிருக்கின்றனர் என்பதை கூற மாட்டார்கள்.காரணம் இப்படி கதைத்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருப்பது தான் இவர்களின் தொழில். அரசியல் ரீதியாக இம்மக்கள் அனாதைகளாக இருக்கின்றனர் என்று கூறுபவர்கள் இம்மக்களுக்கு தலைமை தாங்க முன் வருவார்களா? மலையக இலக்கியம் இம்மக்களின் சோக வரலாற்றையே இசைக்கிறது என்பவர்கள் இம்மக்களின் மகிழ்ச்சியான பக்கத்தை எழுதுவார்களா? முதலில் வரலாற்றை தெரிந்து புரிந்து சில விடயங்களை கதைக்கவும் எழுதவும் முன் வர வேண்டும். அதை விடுத்து ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக ஆதாரமில்லாமல் உளறக்கூடாது. இந்த நாட்டில் மூவின மக்களுக்கும் ஏதோ ஒரு பிரச்சினை இருந்து கொண்டு தான் இருக்கிறது.இதில் மலையக மக்கள் மட்டும் விதிவிலக்கல்லர் என்பதை புரிந்து கொள்ளல் அவசியம்.

சிவலிங்கம் சிவகுமாரன்

Monday, December 19, 2011

இலங்கையில் மிக உயரமான சிவனின் சிலை

இலங்கையில் திருஞான சம்பந்தரின் பாடல் பெற்ற திருத்தலம் என்ற பெருமையும் தட்சிண கைலாயம் என்ற நாமத்துடன் விளங்கும் திருகோணமலை திருக்கோணேஸ்வரத்தின் பெருமையை இன்னும் ஒரு படி ஓங்கச்செய்யும் வகையில் அண்மையில் 33 அடி உயரமான சிவபெருமானின் தியான நிலை சிலை திறப்பு வைபவம் இடம்பெற்றது. இம்மாதம் 15 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இச்சிலை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இலங்கையைப்பொறுத்தவரை மிக உயரமான சிவனின் சிலை இதுவாகும். பக்தர்கள் மனதை ஒரு முகப்படுத்தும் ஒரு சக்தி மிக்க ஞான நிலையை சிவனின் முகம் கொண்டிருக்கின்றது என்பது சிலையை வடித்த சிற்பியின் கைவண்ணமா அல்லது கோணேச்சர பெருமானின் சக்தியா என்பது தெரியவில்லை. சிலையை உற்றுப்பார்த்தால் இது விளங்கும். இந்த சிலையை உருவாக்கியவர் தமிழகம் காரைக்காலைச்சேர்ந்த சிற்பாசிரியர் கலியபெருமான் விஜயன் என்பவராவார். சிவனின் சிலை மட்டுமல்லாது இராவணன் வெட்டு எனும் கோயிலின் வாயிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள இடத்தில் தியான மண்டபமும் அன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. இதில் கடலில் கண்டெடுக்கப்பட்ட ஒரு லிங்கம் ஏனைய விக்ரகங்களுடன் கிடைத்த லஷ்மி சமேத நாராயண விக்ரமும் வைக்கப்பட்டுள்ளன. சிலை திறக்கப்பட்ட அன்று பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருகோணமலை நகரத்திலிருந்து பார்த்தாலும் சிவனின் அந்த கம்பீரமும் சாந்தமும் கலந்த முகம் தெரிகிறது. பக்தர்களுக்காக அங்கு எடுக்கப்பட்ட படங்களைத்தருகிறோம்.

Monday, November 28, 2011

உள்ளுறுப்புகளை இழந்து உயிரை விடவா எம் நாட்டு பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்?
இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு மற்றும் ஏனைய நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வோர் குறித்து கடந்த காலங்களில் பல அதிர்ச்சிகரமாக தகவல்களை ஊடகங்கள் வாயிலாக மக்கள் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. உடம்பில் ஆணிகள் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட பெண்மணிகளிலிருந்து மர்மமான முறையில் மரணித்தவர்கள் பற்றியும் தகவல்கள் வெளிவந்தன. ஒரு சில மரணங்கள் விசாரிக்கப்படாமல் அப்படியே மூடி மறைக்கப்பட்டன. மரணத்தை தழுவியவர்களின் உறவினர்களோ தமக்கு இறந்தவரின் உடல் கிடைத்தாலே போதும் என்ற ரீதியில் அதற்கான முயற்சிகளிலேயே ஈடுபட்டனர்.இதற்காக அவர்கள் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மற்றும் வேலைக்கு அனுப்பிய முகவர்களிடம் அலைந்து திரிவதிலேயே தமது காலத்தை கழிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டனர். ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக கடமையாற்றுவோரின் மரணத்தின் மற்றொரு பக்கம் கடந்த வாரம் வெளிவந்து பலரை பீதியடையச்செய்துள்ளது. குவைத் நாட்டில் வீட்டுப்பணிப்பெண்ணாக பணியாற்றச்சென்ற 28 வயதுடைய சியாமலி குமாரி குணவர்தன என்ற பெண் மர்மமான முறையில் மரணத்தை தழுயுள்ளார்.இவரது உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போதே அவரது உள்ளுறுப்புகள் பல மாயமாகியிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.இது அவரது உறவினர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. மேற்படி யுவதியின் சகோதரர் பிரியந்த பண்டார குணவர்தன தனது சகோதரியின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்தே நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு தனது சகோதரியின் உடலை பிரேத பரிசோதனைக்குட்படுத்த வேண்டும் என தமது குடும்ப வைத்தியரின் உதவியை நாடியுள்ளார். மரணித்தமைக்கான காரணத்தை ) அறியவே அவர் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார். நீர் கொழும்பு வைத்தியசாலையின் பணிப்பாளர் ஏ.தயாபாலவினால் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது இந்த யுவதியின் உள்ளுறுப்புகள் குவைத்தில் வைத்தே அகற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குவைத் வைத்தியசாலையில் சியாமலி குமாரியின் உடல் பிரேத பரிசோதனைக்கு ( Post Mortem) உட்படுத்தப்பட்டதாயினும் பரிசோதனை அறிக்கையில் உள்ளுறுப்புகள் அகற்றப்பட்டமை குறித்து எந்த வித குறிப்புகளும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.இதுவே இந்த மரணத்தில் சந்தேகம் ஏற்பட பிரதான காரணமாகும். கலாவௌ விஜித புர என்ற இடத்தைச்சேர்ந்த சியாமலி குமாரி 7 வயது சிறுமியின் தாயாராவார். கடந்த ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி இவர் திடீரென மரணித்ததாக குவைத்தில் பணி புரியும் வேறு ஒரு பணிப்பெண் மூலமாகவே இவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. சியாமலியின் உடல் கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கை வந்துள்ளது. இவர் அனுராதபுரத்திலுள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் ஒருவரின் மூலமாக கடந்த வருடம் ஏப்ரல் 23 ஆம் திகதி குவைத் சென்றுள்ளார். இவரின் பரிதாபகரமான மரணம் மத்திய கிழக்கில் பணி புரியும் ஏனைய பெண்களுக்கு உள்ள ஆபத்தினையும் பாதுகாப்பின்மையையும் அப்பட்டமாக இலங்கைக்கு தெரிவித்துள்ளது என்றே கூற வேண்டியுள்ளது.இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகமானது தம்மிடம் பதிவு செய்து கொள்ளாத முகவர்கள் மூலமாக வெளிநாடு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்தாலும் பலர் அதை உதாசீனப்படுத்துவதை மறுக்க முடியாது,எனினும் பதிவு செய்து கொள்ளாது இயங்கும் வேலை வாய்ப்பு முகவரமைப்புகளுக்கு எதிராக பணியகம், கடந்த காலங்களில் என்ன சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை ஆராய்ந்தால் பலன் பூஜ்யமே. இவ்வாறு இயங்கும் போலி முகவர்களை தடை செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே பலரினதும் கோரிக்கைகளாகும்.வெளிநாடுகளில் இலங்கை பணிப்பெண்கள்இலங்கைக்கு அந்நிய செலவாணியை பெற்றுத்தரும் முக்கியமான தொழிற்றுறையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது. இதில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வோர் பிரதான இடத்தை வகிக்கின்றனர். எனினும் இவர்களில் பணம் சம்பாதித்து சுகபோக வாழ்க்கை வாழ செல்லவில்லை , தமது குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாகவே சொந்த பந்தங்களை விட்டு தொலை தூரம் உழைக்கச்செல்கின்றனர். எனினும் இவர்களுக்கு அங்கு உரிய தொழில் பாதுகாப்பு வழங்கப்படுகின்றதா என்பது குறித்து குறிப்பிட்ட நாடுகளிலுள்ள இலங்க தூதரகங்கள் அக்கறையுடன் செயற்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. சியாமலியின் மரணம் கூட குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் மூலம் அவரது உறவினர்களுக்கு அறிவிக்கப்படவில்லை ,அதை அவர்கள் அறிந்திருந்தார்களா என்பதும் அவர்களுக்கே வெளிச்சம். தற்போது அங்குள்ள இலங்கை தூதரகம் மூலமாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவித்திருந்தாலும் சியாமலியின் மரணத்திற்கான காரணம் வெளியிடப்படுமா என்பது சந்தேகமே. இதற்கு முன்னர் உடம்பில் ஆணிகள் ஊசிகள் ஏற்றப்பட்டு வந்த பணிப்பெண்கள் குறித்து விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. மத்திய கிழக்கு நாடுகளைப்பொறுத்தவரை சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலேயே இலங்கை பணிப்பெண்கள் அதிகமாக பணியாற்றுகின்றனர். இவ்விரு நாடுகளில் மட்டும் சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வீட்டுப்பணிப்பெண்களாக பணியாற்றுகின்றனர். அதற்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு இராஜ்யம், மற்றும் கட்டார்,லெபனான் ஆகிய நாடுகளில் பணியாற்றுகின்றனர்.கூடுதலாக கிராம மற்றும் மலையகப்பகுதிகளிலிருந்து பல பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக உழைத்து வருகின்றனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் கடுமையான சட்டதிட்டங்கள் அமுலில் இருந்தாலும் வெளிநாடுகளில் இருந்து பணியாற்ற வருவோர் மீது தான் இவை செயல்படுத்தப்படுகின்றன என்று தான் கூற வேண்டியுள்ளது. காரணம் பணியாளர்கள் மீது மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்ளும் எஜமானர்களோ அல்லது எஜமானிகள் மீதோ இந்த சட்டங்கள் இது வரையில் பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்றால் இல்லை என்பதே பதில். மேலும் இதற்கு முன்பு குறிப்பிட்ட நாடுகளில் பணிபுரிந்து மர்மமான முறையில் மரணத்தைத் தழுவியவர்களின் உடலில் இருந்து உறுப்புகள் அகற்றப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இலங்கையின் பல பாகங்களிலிருந்து பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்றாலும் குறிப்பிட்ட சில இடங்களில் மாத்திரமே வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தனது பிராந்தி ய நிலையங்களை கொண்டுள்ளது. இதன் காரணமாக வெளிநாடுகளில் தொழில் புரியும் தமது பிள்ளைகள் குறித்த தகவல்களை உடனடியாக பெற்றுக்கொள்ள முடியாத நிலை பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு ஏற்படுகின்றது. ஆகவே இது தொடர்பில் பணியகம் அக்கறை செலுத்துமா என்பதையும் அறிய வேண்டும். அந்நிய செலாவணியைப்பெற்றுத்தரும் தொழில் என்ற வகையில் வெளிநாட்டு வேலை வாய்ப்புப்பெற்றுச்செல்லும் பெண்களின் பாதுகாப்பு குறித்து இலங்கை அரசாங்கத்திற்கும் பாரிய கடப்பாடு உள்ளதை மறுக்க முடியாது. காரணம் கடந்த காலங்களை எடுத்து நோக்கினால் வெளிநாடு செல்லும் பெண்களின் தொகை அதிகரித்து வண்ணமே உள்ளது. அந்த வகையில் அந்நிய செலாவணி அதிகரிப்புக்கும் இவர்கள் பங்களிப்பை நல்குவதை மறுக்க முடியாது. மறுபக்கம் இந்த விவகாரத்தை மனிதாபிமான ரீதியில் கையாள முன் வர வேண்டும். வறுமை சூழல் காரணமாக வெளிநாடு செல்லும் பெண்கள் எந்தளவிற்கு மன உளைச்சலுடன் இரவு பகல் பாராமல் உழைக்கின்றனர் என்பதை சொல்லி புரிய வைக்க வேண்டியதில்லை. மேலும் இவர்களின் ஊதியத்தில் எத்தனை பேர் தங்கியிருக்கின்றனர் என்பதும் முக்கிய விடயம். புதிதாக வெளிநாடு செல்வோர் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நலன் கருதி இவ்விடயத்தை சற்று கூடுதல் அக்கறை கொண்டு அரசாங்கம் அணுக வேண்டும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாத அனைத்து முகவர்கள் குறித்தும் உடன் நடவடிக்கைகள் எடுக்கப்படுதல் அவசியம்.இல்லாவிடின் எதிர் காலத்தில் பல சியாமலிகள் உறுப்புகளை இழந்து உயிரற்ற சடலங்களாகவே வர வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படுவதை தடுக்க முடியாது.

அதிகரித்து வரும் பெண்களுக்கெதிரான வன்முறைகள்


மிரபல் சகோதரிகள்சர்வாதிகாரி ட்ரூஜிலோ
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள் நேற்று 25 ஆம் திகதி சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் என்பது (International Day for the Elimination of Violence against Women) ஒரு துன்பியல் நிகழ்வை ஞாபகப்படுத்தும் விதத்தில், ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் , 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படல் வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவ்வாண்டு 17 ஆம் திகதி பொதுச்சபை கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. அந்த துன்பியல் நிகழ்வு என்ன என்பதை பலரும் அறிந்து கொள்ள வேண்டும்.


மிரபல் சகோதரிகள் (Mirabal sisters)


930 1960 இற்கு இடைப்பட்ட காலகட்டம் அது . டொமினிக்கன் குடியரசை ராபெல் ட்ரூஜிலோ (Rafael Trujillo) சர்வாதிகாரி ஆண்டு வந்தான். இவனது ஆட்சிக்கு எதிராக குரல் கொடுப்போர் யாராக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்படுவர். ட்ரூஜிலோவின் ஆட்சியில் பெண்கள் சொல்லணாத்துயரை எதிர்நோக்கினர். பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்து மிரபல் என்ற குடும்பப்பெயரை கொண்ட மூன்று சகோதரிகள் குரல் கொடுத்தனர். இச்சகோதரிகள் ஒன்றிணைந்து சர்வாதிகாரியின் ஆட்சிக்கு எதிராக அரசியலிலும் குதித்தனர். இதை ஒடுக்க நினைத்த ட்ரூஜிலோ அவர்களை கொல்வதற்கு உத்தரவிட்டான். 1960 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி மிரபல் சகோதரிகள் கொடூரமாக ஒரே இடத்தில் கொல்லப்பட்டனர். இதை நினைவு கூறும் முகமாகவே ஐக்கிய நாடுகள் சபையினால் அந்த நாள் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாளாக பிரகடனமாயிற்று. பின்னாளில் இவர்கள் மறக்க முடியாத வண்ணத்துப்பூச்சிகள் என்று அழைக்கப்பட்டனர். 1980 ஆம் ஆண்டு முதல் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட நாளானது பால் நிலை வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு தெரிவு செய்யப்பட்டது.
பெண்களுக்கெதிரான வன்முறைகள்எமது நாட்டின் சனத்தொகையில் அரைவாசியானோர் பெண்கள் தான்.எனினும் பல்வேறு வகையில் இன்று பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. உள,.உடல் ரீதியான கொடுமைகள் நாளுக்கு நாள் வித்தியாசப்படுவதையும் இங்கு குறிப்பிடல் வேண்டும். என்னென்ன கொடுமைகள் பெண்களுக்கெதிரானவை என பட்டியல் படுத்தப்பட்டுள்ளன .இதில் பிரதானமானவை இவை:1) திராவகம் வீசுதல்


2) சீதனக்கொடுமைகள்


3) வீட்டில் மனைவியை,சகோதரியை,தாயை பிள்ளையை துன்புறுத்தல்


4) பாலியல் துன்புறுத்தல்கள்


5) விபசாரத்திற்கு நிர்பந்தித்தல்


6) கர்ப்பிணிகளை கொலை செய்தல்


7) பெண் உறுப்பை சிதைத்தல் ( Female Genital Mutilation)8) கடத்தல் சம்பவங்கள்9) கௌரவ கொலைகள்


10) ஹித்திரவதைகள்12) வேலைத்தளங்களில் வன்முறைகள்13) பெண் சிசு கொலை
14) தரக்குறைவாக நடத்துதல் மற்றும் போர்க்குற்றங்கள்15) இன ரீதியான ஒடுக்குமுறை
இவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ள வன்முறைகளை இன்று உலகெங்கினும் உள்ள பெண்கள் அனுபவித்து வருகின்றனர். பெண்களை பாதுகாக்கவும் அவர்களின் உரிமைகளை இனங்காணவுமே சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் என்பன அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. எனினும் குறிப்பிட்ட நாள் மட்டுமே இவர்கள் ஞாபகப்படுத்தப்படுகின்றார்களோ என்ற சந்தேகமும் நிலவுகின்றது. அண்மைக்காலமாக வீட்டு வன்முறைகளுக்கு பெண்கள் அதிகமாக முகங்கொடுத்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. கடந்த மாதம் மலையகப்பகுதியில் மாமனார் ஒருவர் மருமகளை தீ வைத்து கொளுத்திய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச்செய்தது. வெளி உலகுக்கு வராத எத்தனையோ கொடுமைகளை இன்று எமது சகோதரிகள் அனுபவித்து வருகின்றனர். குடும்ப சூழ் நிலை, கௌரவம் , குழந்தைகள் என்ற வட்டத்திற்குள் இவர்கள் இருப்பதால் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டும் மனதுக்குள் அழுது கொண்டும் இருக்கும் இவர்கள் இறுதியில் மனஉளைச்சலுக்கு ஆளாகி மனநிலை பாதிப்படைகின்றனர்.ஒரு சில சந்தர்ப்பங்களில் பெண்களே பெண்களை கொடுமைப்படுத்தும் அநியாயங்களும் இடம்பெறுகின்றன. அதே போல் வேலைத்தளங்களிலும் உயர் அதிகாரிகளின் வக்கிர எண்ணங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் பலியாகின்றனர். வீட்டிலிருந்து வேலைக்கு செல்லும் போது பஸ்ஸிலோ இரயிலிலோ அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் வெளியில் சொல்ல முடியாதவை. ஆபிரிக்க நாடுகளில் இன்று வரை வழமையில் உள்ள பெண்ணுறுப்பை சிதைத்தல் , மனித உரிமை ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் விடயமாகும். மத அனுட்டானங்களின் ஒரு அங்கமாக இதை அங்குள்ளவர்கள் கருதினாலும் இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்றும் பெண் பிள்ளைகளுக்கு உடல் ,உள ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் அதே வேளை பல சிறுமிகள் அதிக இரத்தப்போக்கினால் இதில் உயிராபத்தையும் சந்தித்துள்ளனர் என்பதும் சோகமான விடயம். இந்தியாவில் பல மாநிலங்களில் இளவயது திருமணங்கள் இன்றும் வழக்கில் உள்ளன. பருவம் எய்த முன்னர் சிறுமிகளை இவ்வகையில் திருமணம் செய்து கொடுத்தலானது அந்த சிறுமிக்கு எதிரான வன்முறையே என்பதில் ஐயமில்லை. அதே போல் பெண் சிசுக்கொலை மற்றும் சாதி ரீதியாக பெண்களை ஒடுக்குதல் , அவர்களை துஷ்பிரயோகம் செய்தல் ,கொலை செய்தல் ,உடன் கட்டை ஏறச்செய்தல் போன்றன இன்றும் இந்தியாவில் இடம்பெற்று வரும் அக்கிரமங்களாகும். காதல் என்ற போர்வையில் இன்று பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகளும் எல்லையில்லாது போய் விட்டது. தனது இச்சைகளுக்கு இணங்காத பெண்களின் முகம் மீது திராவகம் வீசுதல் அல்லது இணைய அரட்டை, சமூக வலை தளம் மூலம் தகவல்களைப்பெற்று அவர்களுக்கு நெருக்குதல் தருதல் போன்றனவும் இன்று பெருகி விட்டன. கடந்த வாரம் தமிழ் நாட்டில் ஏற்பட்ட இவ்வாறான சம்பவம் முழு இலக்கிய உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிரபல எழுத்தாளர் தனது வாசகர் வட்டத்தைச்சேர்ந்த ஒரு இளம் பெண்ணிடம் வக்கிரமான முறையில் இணைய அரட்டையில் ஈடுபட்டு அது அம்பலமாகி தற்போது தமிழ் நாட்டில் அதிகம் பேசப்பட்டு வரும் விடயமாகி விட்டது. நாம் நேரில் பார்க்கும் சில மனிதர்களின் மறு பக்கம் மிக மோசமானது என்பது இவ்வாறான விடயங்களில் அம்பலமாகின்றது. மனரீதியாக பாதிக்கப்பட்ட அந்த இளம் வாசகி இவ்விடயத்தை மற்றுமொரு பெண் இலக்கியவாதியாகவும் சமூக ஆர்வலராகவும் விளங்கும் ஒருவரிடம் தைரியமாக எடுத்துக்கூறியதாலேயே இந்த சம்பவம் வெளி உலகுக்கு தெரிய வந்தது.முதற்கண் பெண்கள் தமக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் குறித்து வாய் திறக்க வேண்டும். தனக்கு ஏற்பட்ட துன்பங்கள் மற்றுமொரு பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது என்ற உத்வேகமே இப்படியான சம்பவங்களை முடியுமானவரை தடுக்க வழி கோலும். சகோதரிகளே எத்தனை காலம் தான் வாய் மூடி மௌனியாக இருக்கப்போகின்றீர்கள்? பெண் கொடுமையை எதிர்த்து சர்வாதிக்கெதிராக குரல் கொடுத்து மரணத்தை தழுவிய மிரபல் சகோதரிகள் போன்று தியாகம் செய்யச்சொல்லவில்லை. உங்களுக்கோ அக்கம் பக்கத்தில் உங்களுக்குத்தெரிந்த தெரியாதவர்களுக்கோ ஏற்படும் வன்முறைகள் குறித்து சரி வாய் திறக்கலாமே!

Friday, October 14, 2011

கல்வித்துறையில் அதிகரித்துள்ள இலஞ்ச ஊழல் செயற்பாடுகள்இலங்கையில் பதிவாகும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளில் 70 வீதத்திற்கும் மேலானவை கல்வித்துறையோடு சம்பந்தப்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளமையானது இலங்கை கல்வித்துறையில் எந்தளவிற்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது என்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது.கூடுதலாக பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதிலேயே அதிபர்கள் இலஞ்சம் வாங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணமாகவோ அல்லது பொருளாகவோ அதிபர்கள் இலஞ்சம் பெறுகிறார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த கால முறைப்பாடுகளை பார்த்தால் இலங்கையைப்பொறுத்தவரை இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்களில் அதிகமானோர் பொலிஸ் அதிகாரிகளாவும் , அரசாங்க திணைக்களங்களைச்சேர்ந்தவர்களாகவுமே இருந்துள்ளனர்.எனினும் அண்மைக்காலமாக இலஞ்சம் மற்றும் ஊழல்களில் முதலாவது இடத்தை கல்வித்துறை பிடித்துள்ளது. சமுதாய மாற்றத்திற்கான ஒரே ஆயுதமாக கூறப்படும் கல்வித்துறையில் எட்ட வேண்டிய இலக்குகள் எத்தனையோ இருக்க இப்போது எட்டியிருக்கும் இலக்கை பார்க்கும் போது வெட்கித்தலை குனிய வேண்டிய நிலை தான் ஏற்பட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவானது (Commission to Investigate Allegations of Bribery or Corruption) நாளாந்தம் 15 இற்கும் குறையாத கல்வித்துறையோடு சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தமக்கு கிடைப்பதாகத் தெரிவிக்கின்றது. இதில் கூடுதலாக முதலாமாண்டுக்கு மாணவர்களை சேர்க்கும் போது பாடசாலை அதிபர்கள் பெற்றோர்களிடம் இருந்து பணம் பெறுவது தொடர்பாகவே இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் நீதிபதி எஸ்.பாலபட்டபெந்தி விளங்குகிறார். அண்மையில் இவர் கல்வித்துறையோடு சம்பந்தப்பட்ட ஊழல் செயற்பாடுகள் பற்றி தனது விசனத்தையும் வெளிப்படுத்த தவறவில்லை.
இலஞ்சம் என்றால் என்ன?

இலங்கையில் பிரித்தானியர் ஆட்சி காலத்திலேயே இலஞ்சம் பெறல் வாங்குதல் குற்றவியல் தண்டனை சட்டக்கோவையில் கீழ் தண்டனை வழங்கப்படும் குற்றங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. (1883ஆம் ஆண்டிலிருந்து ) 1958 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்கச்சட்டத்தின் மூலம் திணைக்களமாக நீதி அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டது.இலஞ்ச சட்டத்தை மீரும் வகையில் சட்ட விரோதமாக அவா நிறைவொன்றை கொடுத்தல், கேட்டல், பெற்றுக் கொள்ளுதல் அல்லது அவ்வாறு ,இலஞ்ச சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் செய்யப்படும் செயற்பாடுகள் ,இலஞ்சமாக கருதப்படும். இதே சந்தர்ப்பத்தில் ஊழல் தொடர்பாகவும் கூறப்பட்டுள்ளதுஊழல் சம்பந்தமாக ,இலஞ்ச சட்டத்தின் 70ஆம் பிரிவின் கீழ் விபரிக்கப்பட்டுள்ளது. அதாவது அரச ஊழியர் ஒருவர் தனது பதவியின் பிரகாரம் தனக்கு பணிக்கப்பட்டுள்ள கடமையை நிறைவேற்றும் பொது அரசுக்கு நடத்தை ஏற்படுத்துவதற்கு தனக்கு நன்மையை அல்லது வேறு ஒருவருக்கு நன்மையை அல்லது தீமையை ஏற்படுத்தும் நோக்குடன் தெரிந்து செயற்படுதல் ஊழலாகக் கருதப்படும்.
பாடசாலைகளில் இலஞ்சம்மாணவர்களை முதலாம் தரத்திற்கு அனுமதிக்கும் போது ஒரு சில அதிபர்கள் தேசிய கல்விக்கொள்கைகளை மீறும் வகையில் ஒரு வகுப்பிற்கு அதிக மாணவர்களை அனுமதிக்கின்றனர். அச்சந்தர்ப்பத்தில் வெளி பிரதேச மாணவர்களை பிரபலமான நகர்ப்புற பாடசாலைகளுக்கு இந்த அதிபர்கள் உள்வாங்கும் போது அவர்களின் பெற்றோரிடமிருந்து இலஞ்சமாக பெருந்தொகை பணத்தை பெறுகின்றனர். மேலும் முதலமாண்டு மட்டுமின்றி உயர்தர அனுமதியிலும் அதிகமாக பணம் பெறுகின்றனர். இதில் முக்கியமான விடயம் என்னவெனில் பணமாகப்பெற்றால் சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொள்வோம் என்ற பயத்தில் பொருளாகவும் இலஞ்சம் பெறும் முறை பல மலையக பாடசாலைகளில் நடைமுறையில் இருக்கின்றது. பாடசாலைக்கு புதிய அலுமாரி தேவை என மாணவர் அனுமதிக்கு வரும் பெற்றோரிடம் அதிபர் கூறுவார்.பின்னர் நகரத்தில் அமைந்துள்ள குறிப்பிட்ட தளபாட வர்த்தக ஸ்தாபனத்தை கூறி அங்கு பணம் செலுத்தும் படியும் தாம் அதை பெற்றுக்கொள்வோம் என்றும் கூறி பின்னர் குறிப்பிட்ட வர்த்தக ஸ்தாபனத்திற்குச் சென்று ஒரு தொகையை ஸ்தாபனத்திற்கு செலுத்தி விட்டு மீதியை வாங்கிக்கொண்டு வந்து விடுவார் அதிபர். ஒரு சில பாடசாலைகளில் அபிவிருத்திச்சங்க செயலாளர்களே இந்த பண வசூலிப்பு விடயத்தில் முன்னிற்கின்றனர்.இதன் காரணமாக பல வருடங்களாக ஒரே சங்க செயலாளர்களே தொடர்ந்தும் பதவியில் இருக்கின்றார்கள். பல அதிபர்கள் அபிருத்திச்சபை கூட்டத்தை ஏற்பாடு செய்யாமல் இருப்பதும் இந்த பின்னணயிலே தான். பல பெற்றோர்களிடம் தளபாடங்கள் அலுமாரிகள் வாங்க வேண்டும் என்று கூறி பணத்தை வாங்கிக்கொண்டு அதிபர்கள் வாங்குவதோ ஒரே அலுமாரியைத்தான்இதே வேளை பல பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் கூட வெளி மாவட்ட மாணவர்களை பணம் கொடுத்து சேர்ப்பதில் ஒரு சில அதிபர்களுக்கு உதவி ஆசிரியர்களாக செயற்படுகின்றனர். மேலும் தவணை முடியும் சந்தர்ப்பத்திலும் இடையில் பல வகுப்புகளுக்கு மாணவர்களை பணம் வாங்கிக்கொண்டு சேர்க்கும் விடயம் பல பாடசாலைகளில் இடம்பெறுகிறது.

பெற்றோர்களின் அக்கறையின்மைதமது பிள்ளைகளின் கல்விச்செயற்பாடுகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்ற காரணத்தினால் தாம் இலஞ்சம் கொடுப்பதையும் அதிபர்கள் இலஞ்சம் வாங்குவதையும் வெளியில் கூறுவதற்கு பெற்றோர்கள் விரும்புவதில்லை. இந்த காரணங்களினாலேயே பல அதிபர்கள் எவ்வித இடையூறும் இன்றி இலஞ்சம் பெற்று வருகின்றனர். இச்செயற்பாடுகளே இவர்களை ஊக்குவிப்பதாக இருக்கின்றது. இதே வேளை பாடசாலைகளில் இடம்பெறும் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டிய வலயக்கல்வி காரியாலயங்களிலும் அதிகார துஷ்பிரயோகங்கள் ,ஊழல்கள் இடம்பெறுவதால் பாடசாலைகளைப்பற்றி கண்டு கொள்ளப்படுவதில்லை என்பதே உண்மையாகும். தமக்கு தேவையானவர்களின் பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்ப்பதற்கு சில வலயக்கல்வி பணிப்பாளர்களும் ,அதிகாரிகளும் கூட இலஞ்சம் பெறுவதை மறுப்பதற்கில்லை. இவர்களின் சிபாரிசுகளுடன் வரும் மாணவர்களை சேர்க்கும் அழுத்தத்திற்கும் சில நேர்மையான அதிபர்கள் உட்படுகின்றனர். ஆகவே கல்வித்துறை இலஞ்சம் மற்றும் ஊழல் என்பது பாடசாலைகளில் மட்டும் தங்கியிருக்கும் விடயமல்ல என்பதை பலரும் உணர்ந்து கொள்ளல் அவசியம்.
யார் குற்றச்சாட்டுக்கு உட்படுவர்? இலஞ்ச குற்றச்சாட்டுகளின் கீழ் அமைச்சரவை அமைச்சர்கள் , சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர் , குழுக்களின் பிரதித் தலைவர் , பிரதி அமைச்சர்கள் , மாகாண ஆளுனர்கள் மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதிமன்ற உறுப்பினர்கள் , மாகாண, உள்ளுõராட்சி நிலையங்களின் அல்லது ,லஞ்ச சட்டத்தின் கீழ் பட்டியல்படுத்தப்பட்டநிறுவனங்களில் நூற்றுக்கு 50 விதத்திற்கு மேற்பட்ட பங்குகள் அரசுடமையாகவுள்ள 1982ஆம் ஆண்டின் 17 ஆம் ,இலக்க கம்பனிகளின் தலைவர்கள், பணிப்பாளர்கள், ஆளுனர்கள், உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் ஊழியர்கள், ஜூரி சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க முடியும். இலஞ்ச சட்டத்தின் கீழ் ,இலஞ்சம் வாங்குவதைப் போல் ,இலஞ்சம் கொடுப்பதும் சமமான தண்டனைக்குரிய குற்றங்களாகும். என்ற போதிலும் ,இலஞ்சம் கொடுத்த நபர் முறைப்பாட்டாளராகும் சந்தர்ப்பங்களில் சட்டம் குறிப்பிட்ட நபரைக் குற்றவாளியாக அல்லது ,இலஞ்சம் கேட்ட நபரின் சூழ்ச்சியால் சிக்கிய அப்பாவியாகவே கருதும்.இருந்த போதிலும் ஒருவர் ,இலஞ்சம் கேட்கும் போது அதைக் கொடுப்பதற்கு முன்பாக ,இலஞ்ச ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்தல் காலச் சிறந்த செயற்பாடாகும்.
தண்டனைகள்இலஞ்சம் கேட்டல், ஏற்றுக் கொள்தல், கொடுத்தல் அல்லது ,இதில் ஏதும் ஒன்றைச் செய்ய எத்தனித்தல், சூழ்ச்சி செய்தல் போன்ற குற்றங்களின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகளுக்கு குறையாத சிறைத் தண்டனையுடன் ரூபா 5000 இற்கும் மேற்படாத தண்டப் பணம் அபராதமாக விதிக்கப்படும். ஏதும் ஆதனமொன்று ,இலஞ்சத்தின் மூலம் பெற்றுக் கொன்டதாக நிரூபிக்கப்படும் போது மேற் குறிப்பிட்ட தண்டனைக்கு மேலதிகமாக ,இலஞ்சத்தால் பெற்றுக் கொண்டதாக தீர்மானம் செய்யப்பட்ட ஆதனத்தின் பெருமதிக்கு குறையாத அல்லது மும்மடங்கிற்கு குறையாத தொகையைத் தணடப் பணமாக நியமித்தல் அல்லது குறிப்பிட்ட ஆதனத்தை அரசுடமையாக்குதல்.
ஊழல் குற்றச்சாட்டுக்கான தண்டனைகள்ஊழல் குற்றமொன்றில் குற்றவாளியாக்கப்படின் 10 ஆண்டுகளுக்கு குறையாத காலத்திற்குச் சிறைத் தண்டனையும் ஒரு ,இலட்சம் ரூபாவை விஞ்சாத தண்டப் பணம் அல்லது மேற் கூறிய ,இரண்டும் வழங்கப்படும்.தனது தொழிலை அல்லது பதவியை இழப்பதோடு ஓய்வூதியம் பணிக் கொடைக்கான உரித்தும் ,ரத்துச் செய்யப் படும்.பாராளுமன்றத் தேர்தல் எனின் 7 ஆண்டுகளுக்கும், உள்ளுõராட்சி மன்றத் தேர்தல் உனில் 5 ஆண்டுகளுக்கும் வாக்காளராக பதிவு செய்வதற்கு, வாக்களிப்பதற்கு, தெரிவு செய்யப்படுவதற்கும் தகைமையை இல்லாதாக்கலாம்.அரசின் அல்லது ,இலஞ்ச சட்டத்தின் கீழ் பட்டியல் படுத்தப்பட்ட நிறுவனங்களில் தொழில் ஒன்றை அல்லது பதவியைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை முற்று முழுதாக ,இழத்தல் என்பன அடங்கும். கல்வித்துறைக்கு அப்பாற்பட்டு பல அரசாங்க நிறுவனங்கள் திணைக்களங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் தலைவிரித்தாடுவதை அனைவரும் அறிவர். மேலும் தனியார் நிறுவனங்கள் மீதான இலஞ்ச செயற்பாடுகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் சட்டத்தில் இடமில்லை. அண்டைய நாடான இந்தியாவில் தலை விரித்தாடும் ஊழல்கள் இன்று உலகப்பிரசித்தி பெற்று விட்டன. எனினும் சமூக அக்கறை என்ற விடயத்தில் கல்வி சமுகத்திற்கு பாரிய கடப்பாடு உள்ளது.எதிர்கால இலங்கையை கருத்திற்கொண்டு தமது இலக்குகளை இவர்கள் உணர்ந்து கொள்வார்களாக.

வெளிநாட்டு பறவைகளின் மோகத்தால் உள்ளூர் சிட்டுகுருவிகளை மறந்து விடுகிறோம்


காய்கறிகளில் இரசாயனம் கலந்த விஷங்களே இன்று உள்ளன.ஆகவே விஷம் நிறைந்த உணவுகளை உண்டு தான் இன்று பல மனிதர்கள் விஷமிகளாகி விட்டனர்.


தர்மம் குன்றி வரும் இக்காலகட்டதில் மக்கள் தங்களுக்கு முடிந்த வரை தான தருமங்கள் செய்ய வேண்டும். முக்கியமாக அடுத்த வேளை உணவுக்கு அல்லல்படுவோருக்கு அன்னம் வழங்க வேண்டும். தவங்களில் காலத்தை ட்டாமல் தரும நெறி சிந்தனையில் கவனத்தை திருப்ப வேண்டும். எவர் ஒருவர் தருமத்தை கடமையாக நினைத்து செய்கிறாரோ அந்த தருமம் அவரை காப்பாற்றும் இதுவே கீதையின் தத்துவம் என்கிறார் பிரம்மரிஷி காகபுஜண்டரின் சீடராகிய பிரம்மரிஷி மலை அன்னை சித்தர் இராஜ்குமார் குருஜி அவர்கள். மக்கள் நலன் கருதி அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சித்தர்கள் மகா யாகத்தின் போது பக்தர்களுக்கு அருளுரை வழங்கிய போது அவர் தரும நெறி சிந்தனைகளை பக்தர்கள் மனதில் விதைத்தார். மிகவும் எளிமையாகவும் அதே நேரம் மனதில் பதியும் வண்ணமும் அற்புதமான பல கருத்துக்களை அன்றைய தினம் அன்னை சித்தர் அவர்கள் வெளிப்படுத்தினார். அவரின் கருத்துக்களை தொகுத்து தருகிறோம்.
சக்தி பிறக்கும் நகரிலிருந்து ஒரு யாகம்அட்டன் மாநகரில் இந்த யாகத்தை நடத்துவது என்பது எமது கைகளிலோ அல்லது இந்த யாகத்தை ஒழுங்கு செய்தவர்களின் கைகளிலோ இல்லை. இது சித்தர்களின் எண்ணம் போல நடக்கிறது என்பதே உண்மை. காரணம் இந்த அட்டன் மாநகரின் அருகாமையில் அமைந்திருக்கும் மஸ்கெலியா நகருக்கு செல்லும் வாய்ப்பு எனக்குக்கிடைத்தது .இங்கு அமைந்திருக்கும் நீர் மின் நிலையங்களை அறிந்தேன். ஆஹா, இங்கிருந்து தான் இலங்கையின் பல பாகங்களுக்கு மின்சாரம் எனும் சக்தி செல்கிறது,மின்சாரத்தின் மூலம் பல இடங்களுக்கு வெளிச்சம் கிடைக்கிறது. ஆகவே இது சக்தி உருவாகும் பிரதேசம். இங்கிருந்து யாம் செய்யும் இந்த யாகத்தின் பயன் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்றடையும் .இது உண்மை. உள்ளன்போடு 210 சித்தர்களை இங்கு வரவழைத்து செய்யப்படும் இந்த யாகத்தில் எவரும் இலகுவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்காது. ஆகவே இங்கு வந்திருக்கும் அனைவரும் அனுக்கிரகம் பெற்றவர்கள்.
தானத்தின் பயன்
எத்தனை கோடி செல்வங்களை அள்ளிக்கொடுத்தாலும் எந்த வகையில் உதவிகளை வழங்கினாலும் அன்னதானத்திற்கு ஈடான தானம் எதுவும் கிடையாது இது சித்தர்களின் வாக்கு. ஆகவே அன்பர்களே உங்களுக்கு முடிந்த வரை அடுத்தவருக்கு அன்னதானம் செய்யுங்கள். இது கலியுகமாகும். படித்தவர்கள் படிக்காதவர்கள் செல்வந்தர்கள் ஏழைகள் அனைவருக்கும் வழிகாட்டுபவர்களாக சித்தர்கள் விளங்குகிறார்கள். சித்தர்கள் எந்த உருவிலும் நடமாடுவார்கள். பிச்சைகாரர்களாக ,பைத்தியம் பிடித்தவர்களாகக்கூட இருக்கலாம். எவரையும் அலட்சியம் செய்யாதீர்கள். எந்த சித்தராவது உங்களிடம் யாசகம் பெற்று விட்டால் நீங்கள் இந்த பிறவிப்பயனை அடைவீர்கள்.
உங்களிடம் வருபவர்கள் யார்?இது கலியுகம் என்று ஆரம்பத்திலேயே நான் கூறினேன்.இக்காலத்தில் செல்வந்தர்கள்,அரசியல்வாதிகள்,அதிகாரம் மிக்கவர்கள் எவரும் சாதாரண மக்களை தேடி வருவதில்லை மாறாக மக்களே அவர்களை தேடிப்போக வேண்டிய நிலைமை உண்டாகியுள்ளது. ஆனால் சித்தர்கள் அப்படியல்ல அவர்கள் சாதாரண மக்களிடத்தே வருவார்கள் அனுக்கிரகம் செய்வார்கள். ஆரம்பத்தில் 18 ஆக இருந்த சித்தர்களின் எண்ணிக்கை மீண்டும் மீண்டும் அவர்கள் இப்பூவுலகில் அவதரித்து 210 அவதாரங்களை எடுத்திருக்கிறார்கள். சித்தர்கள் இயற்கையை மிகவும் நேசிப்பவர்கள். உயிரினங்களிடம் அன்பு செலுத்துபவர்கள். ஆகவே எந்த உயிரையும் வதைப்பதோ அதை உணவாக உண்ணுவதோ சித்தர் வழிபாட்டுக்கு ஏற்பாகாது.
மோகம்யாருக்கு நாம் உதவி செய்ய வேண்டும் என்பது சிலருக்கு விளங்குவதில்லை. பல நாடுகளைச்சேர்ந்த பல அழகிய பறவைகளைப்பற்றி பேசுகிறோம்,ஆனால் எமக்கு அருகாமையில் இருந்து அடிக்கடி கீச்சிடும் அந்த சிட்டுகுருவிகளை மறந்து விடுகின்றோம். அருகில் உள்ள அந்த சிட்டுகுருவிகளுக்கு உணவிடுங்கள்,அருகிலுள்ள உயிர்களை ,மனிதர்களை நேசியுங்கள். தானம் செய்யும் போது உள்ளன்போடு செய்யுங்கள். பலனை எதிர்ப்பார்த்து செய்யாதீர்கள்.
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் என்று சித்தர் சிவபாக்கியர் கூறியிருக்கிறார். ஆக நாதன் எங்கிருக்கிருக்கிறார் என்ற சூட்சுமம் உங்களுக்கு விளங்க வேண்டும். நீங்கள் நாதனாக இருக்கிறீர்கள் ஆக உங்கள் மனதிலிருக்கும் தெய்வாம்சம் விழிப்புற வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் ? சித்தர்களை நாடுங்கள்.
ஓம் ஜெய் குருவே துணை என்ற மந்திரத்தை கூறுங்கள்
அப்போது உங்களுக்குரிய குரு தென்படுவார் அவரை பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்
விஷமும் விஷமிகளும்இன்றைய உலகம் மிகவும் உஷ்ணம் நிறைந்தது. விஞ்ஞானிகள் கூட மெய்ஞானத்தின் தெளிவை பெறாது அதை அறிய விரும்பாது உலக மாறுதல்களுக்கு பல காரணங்களை கூறி வருகின்றனர். உஷ்ணம் காரணமாகவே இன்று மனிதனுக்கு பல நோய்கள் உருவாகின்றன. நீங்கள் உண்ணும் ஒவ்வொரு உணவும் ஒரு மூலிகை தான் .எல்லா காய்கறிகளும் மூலிகைகளே. ஆனால் இன்று எல்லா காய்கறிகளிலும் விஷம் நிரம்பியே உள்ளது. வேதியல் இரசாயனங்கள் கலந்த காய்கறிகளையே நாம் இன்று உண்கிறோம். எனவே விஷம் நிறைந்த உணவுகளை உண்டு தான் இன்று மனிதர்களில் பலர் விஷமிகளாகி விட்டனர். ஆனால் உலகத்தில் நிகழவிருக்கும் மாற்றங்களை பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே சித்தர்கள் கூறி விட்டனர். 2010 இற்குப்பிறகு இந்த உலகத்தில் இயற்கை சீரழிகள் எப்படியெல்லாம் இடம்பெறும் என்பதை பிரும்மரிஷி காகபுஜன்டர் கூறி விட்டார்.

Monday, September 26, 2011

உலகின் மிகப்பெரிய பௌத்த ஆலயம்உலகத்தில் மிகப்பெரிய பௌத்த ஆலயம் அமைந்துள்ள நாடானது உலகில் அதிக இஸ்லாமியர்கள் வசிக்கும் நாடான இந்தோனேசியா என்பது பலருக்கு தெரியாத விடயம் தான். ஆனால் அது தான் உண்மை.தென்கிழக்காசிய நாடுகளில் மகாயான பௌத்தம் வேரூன்றி இருந்த காலத்திலேயே அதாவது எட்டாம் நூற்றாண்டிலேயே போராபுதூர் என்ற இந்த பிரமாண்டமான பௌத்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது. இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.இந்த பௌத்த ஆலயமானது ஆறு சதுர வடிவிலான மேடை அமைப்புக்களையும், அதன்மேல் அமைந்த மூன்று வட்ட வடிவ மேடைகளையும் கொன்டது. இவை, 2,672 புடைப்புச் சிற்பங்களைக் கொண்ட
Sir Thomas Stamford Bingley Raffles
, 504 புத்தர் சிலைகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன் உச்சியில் அமைந்துள்ள மேடையின் நடுவில், குவிமாடமும் அதனைச் சுற்றி துளைகள் கொண்ட தாது கோபுரங்களுக்குள் அமர்ந்த நிலையிலான 72 புத்தர் சிலைகளும் காணப்படுகின்றன. பௌத்தருக்கான ஆலயமாக மட்டுமல்லாது யாத்திரைக்குரிய இடமாகவும் உள்ளது. புனிதப்பயணம் செய்வோர், இதன் அடியில் தொடங்கி, இதைச் சுற்றியபடியே மூன்று தளங்களுõடாக மேலேறுவர். இம் மூன்று தளங்களும்,கா
மதாது
, ரூபதாது, அரூபதாது எனப்படும் பௌத்த அண்டக் கோட்பாட்டில் கூறியுள்ளவாறு மூன்று நிலைகளைக் குறிக்கின்றது. இந்தப் பயணத்தின்போது, புனிதப்பயணிகள், 1,460 புடைப்புச் சிற்பங்களைக் கொண்ட சுவர்கள், காப்புச் சுவர்கள் ஆகியவற்றுடன் அமைந்த படிக்கட்டுகள், நடைவழிகள் என்பவற்றினூடாகச் செல்வர் என்பது முக்கிய விடயம்.
வரலாறுபோராபுதூர் பௌத்த ஆலயமானது கிறிஸ்துவுக்குப்பின் 800 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் என வரலாற்றுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. தென்கிழக்காசிய நாடுகளில் மகாயான பௌத்தத்தை பரப்புவதில் முன்னின்ற சைலேந்திர மன்னர் வம்சம் மற்றும் சுமாத்ரா பகுதியில் ஆட்சி செலுத்தி ஸ்ரீ விஜயன் ஆகியோரின் காலப்பகுதிகளே இவை. இம்மன்னர்களின் இருவருமே இவ்வாலயத்தை நிர்மாணிப்பதில் செல்வாக்கு செலுத்தியுள்ளனர்.இந்த ஆலயத்தின் கட்டுமானப்பணிகள் சுமார் 75 வருடங்களாக இடம்பெற்றுள்ளன. சைலேந்திர மன்னர் வம்சத்தில் வந்த சமரதுங்காவின் ஆட்சி காலத்தில் இந்த கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளன. இக்காலகட்டத்திலேயே சுமாத்ரா ,ஜவா பகுதிகளில் இந்து சமயத்தை பரப்பும் வகையில் இந்து ஆலயங்களும் அமைக்கப்பட்டுள்ளன என வரலாற்றாசிரியர்களும் தொல்லியலாளர்களும் தெரிவிக்கின்றனர். மேலும் சைலேந்திர வம்சமானது ஆரம்பத்தில் மகாயான பௌத்தத்தில் முனைப்பு காட்டினாலும் பின்னர் இந்து மதத்தில் ஆர்வம் காட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. காரணம் இதே காலப்பகுதியில் போராபுதூருக்கு 10 மைல் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட சிவன் ஆலயம் தான் சிவபிரம்மனன். சைலேந்திர மன்னர்களின் ஆதரவில்லாமல் இவ்வளவு பிரமாண்ட சிவன் ஆலயத்தை அமைத்திருக்க முடியாது என்பது வரலாற்று குறிப்புகளின் தகவல்.
மறைந்து கிடந்த ஆலயம்14 ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவில் பௌத்த மற்றும் இந்து சாம்ராஜ்யங்கள் னீழ்ச்சியுற்றன.இதற்கு காரணம் இஸ்லாம் தலை தூக்கியதாகும். இதன் காரணமாக இந்து ,பௌத்த ஆலயங்களின் பராமரிப்பு கைவிடப்பட்டது. மேலும் இக்காலகட்டத்தில் இப்பகுதியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகள் காரணமாக எரிமலை சாம்பரால் மேற்படி போராபுதூர் ஆலயம் முற்றாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கதொன்று. பின்னர் காடுகள் மூடியதால் கிட்டத்தட்ட இப்பிரதேசமே மறைந்து விட்டது. இதை வரலாறுகள் தான் சொல்கின்றன.எனினும் இவ்வளவு பிரமாண்ட ஆலயமும் அதன் சுற்றுபுறமும் மறைந்தமையை வரலாற்று மர்மம் என்கின்றனர் தொல்லியலாளர்கள்.மீண்டும் கண்டி பிடிப்பு 1811 இலிருந்து 1816 வரை ஜவாவானது பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இக்காலகட்டத்தில் ஜவாவின் கவர்னராக இருந்தவர் சேர் தோமஸ் ஸ்டென்போர்ட் பிங்லே ரபல்ஸ்ஸ் என்பவராவார்.( Sir Thomas Stamford Bingley Raffles) இவர் ஜாவாவின் வரலாற்றை அறிய மிகவும் அக்கறை காட்டினார். இதற்காக நெருந்தூர பயணங்களை மேற்கொண்டார். கோர்னலியஸ் என்ற டச்சு பொறியியலாளரை தலைமைத்துவமாக கொண்டு 200 பேர் கொண்ட குழுவினர் போராபுதூர் பகுதியை சுத்தம் செய்து மீண்டும் இந்த ஆலயத்தை கண்டு பிடித்தனர்.பின்பு முழுமையான ஆலயத்தை கண்டு பிடிக்க சுமார் 50 ஆண்டுகள் வரை சென்றன. மரங்களை வெட்டி இவ்விடத்தை சுத்தம் செய்வது இலகுவாக இருக்க வில்லை. இந்தோனேசிய அரசும், யுனஸ்கோவும் இணைந்து செயற்படுத்திய பெரிய அளவிலான மீளமைப்புத் திட்டம் ஒன்று 1975 ஆம் ஆண்டுக்கும் 1982 ஆம் ஆண்டுக்கும் இடையில் முன்னெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த நினைவுச்சின்னம் யுனஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்தின் கட்டிட அமைப்புகள் மற்றும் புடைப்புச்சிற்பங்கள் பலரை திகைக்க வைக்கின்றன. உச்சியில் அமர்ந்த நிலையில் இருக்கும் புத்தர் சிலையானது தர்ம சக்கர முத்திரையடன் உள்ளது. வாயிலில் அமைக்கப்பட்டுள்ள காவற்சிங்க சிலைகள் மற்றும் புடைப்புச்சிற்பங்கள் என்பன அதிசயிக்க வைக்கின்றன. கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் புடைப்புச்சிற்பங்களும் இந்த ஆலயத்தை இன்னும் மதிப்பால் உயர்த்துகிறது.உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள அதே வேளை பௌத்த யாத்ரீகர்கள் மற்றும் உல்லாசப்பயணிகள் விரும்பி வருகை தரும் இடமாகவும் இது விளங்குகிறது.

Tuesday, September 20, 2011

தேயிலை ஏற்றுமதி வர்த்தக நெருக்கடி எப்படி மீளப்போகிறது இலங்கை ?


தேயிலை ஏற்றுமதி 2010 ஆம் ஆண்டு (கி.கி மில்லியன்களில்)
கென்யா 441,021இலங்கை 314,500சீனா 302,419இந்தியா 191,490ஆர்ஜன்டீனா 98,025உகண்டா 50,834மாலவி 48,579பங்களாதேஷ் 913


இலங்கையின் பிரதான ஏற்றுமதி பொருளாகவும் அந்நிய செலாவணியைப்பெற்றுத்தருவதில் கணிசமான பங்கையும் வகிக்கும் தேயிலை ஏற்றுமதி வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் குறித்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. உண்மையில் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைகள் காரணமாகவே தேயிலை ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பது என்பது உண்மை,எனினும் இதை காரணமாக முன்வைத்து தொழிலாளர்களின் வேதனம் குறைக்கப்பட வேண்டும் என்றும் அல்லது அவர்களின் வேலை நேரத்தை அதிகரித்து அதில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இலங்கை தேயிலை வர்த்தக சங்கம் இந்த ஏற்றுமதி வர்த்தக நெருக்கடி விடயத்தை பி.பி.சி செய்தி சேவை வரை கொண்டு சென்று தொழிலாளர்களின் வேதனத்தை நூறு ரூபா வரை குறைக்க வேண்டும் என்று கூறியதால் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் மத்தியில் ஒரு வித குழப்ப நிலை தோன்றியது என்னவோ உண்மை .எனினும் தொழிலாளர் வேதனத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பிரதான தொழிற்சங்கங்கள் தொழிலாளர் வேதனம் எந்த வகையிலும் குறைக்கப்பட மாட்டாது என்று ஊடகங்கள் மூலம் தெரிவித்ததையடுத்தே தொழிலாளர்கள் மத்தியில் ஓரளவிற்கு நிம்மதி பிறந்தது. எனினும் ஒரு சில தோட்டக்கம்பனிகள் தொழிலாளர் வேதனம் குறைக்கப்படாவிட்டாலும் உற்பத்தி அளவை கூட்ட வேண்டும் என்றும் அதற்காக அவர்களின் பணி நேரங்களில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்து பணி நேரமானது அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் பிரசாரம் செய்து வருவதாக சில தொழிற்சங்கங்கள் விசனம் தெரிவித்துள்ளன.
நெருக்கடி ஏன், எப்படி?உலகளாவிய ரீதியில் தற்போதைய நிலையில் தேயிலை ஏற்றுமதி வர்த்தகத்தில் மூன்றாமிடம் பிடிக்கின்றது இலங்கை. இலங்கையிடமிருந்து தேயிலையை இறக்குமதி செய்வதில் மத்திய கிழக்கு நாடுகளான சிரியா,லிவியா ,ஈரான் ,ஈராக் ஆகிய நாடுகள் பிரதான இடத்தை வகிக்கின்றன. ஆண்டு தோறும் இலங்கை சுமார் 300 மில்லியன் கிலோ கிராம் தேயிலையை ஏற்றுமதி செய்கிறது. இதில் 78 வீதமானவை மேற்குறிப்பிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கே ஏற்றுமதியாகின்றது. அதைவது கிட்டத்தட்ட 235 மில்லியன் கிலோ கிராம்களாகும். எனினும் இந்த ஆண்டின் ஜனவரி மாதத்திலிருந்து 6 மாதம் வரை இலங்கை மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு 55 மில்லியன் கிலோ கிராம் தேயிலையையே ஏற்றுமதி செய்துள்ளது. லிபியா ,சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு நிலை காரணமாக அங்குள்ள துறைமுகங்களுக்கு கப்பல்கள் செல்ல முடியாத சூழநிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தேயிலை ஏற்றுமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நஷ்டத்திலிருந்து மீள வேண்டிய நிலையில் இலங்கை உள்ளது.
தொழிலாளர் வேதனமும் கூட்டுஒப்பந்தமும்இந்நிலையில் நஷ்டத்தை ஈடு கட்ட தொழிலாளர் வேதனத்திலிருந்து நூறு ரூபா வரை குறைக்க வேண்டும் என தேயிலையை ஏற்றுமதி செய்யும் ஒரு சில வர்த்தக சங்கங்கள் இலங்கை தேயிலைச் சபையிடமும் தோட்டக்கம்பனிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வருடம் செய்து கொள்ளப்பட்ட புதி ய கூட்டு ஒப்பந்தத்தின் படி தொழிலாளி ஒருவருக்கு நாளொன்றுக்கு எல்லாம் அடங்களாக 515 ரூபா வழங்கப்பட வேண்டும்.இதில் நூறு ரூபாவை குறைக்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை,எனினும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்கள் முதலாளிமார் சம்மேளனமும் இ.தொ.கா,இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு என்ற அமைப்புகளாகும். இச்சந்தர்ப்பத்தில் கூட்டு ஒப்பந்தம் என்பது இரண்டு வருடங்களுக்கு கைச்சாத்திடப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று .அந்த இரண்டு வருடங்களுக்கு இதில் எவ்வித மாற்றங்களும் செய்ய முடியாது. ஆகவே தொழிலாளர் வேதனம் என்பது எவ்விதத்திலும் குறைக்கப்பட சந்தர்ப்பங்களில்லை என தெரிவித்திருக்கும் பிரதான தொழிற்சங்கங்கள் இது குறித்து முதலாளிமார் சம்மேளனம் மாத்திரமே தம்முடன் பேச்சு நடத்துவதற்குரிய உரிமையைக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தேயிலை வர்த்தக நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக சிலர் விஷமத்தனமான பிரசாரங்களை ஆங்கில மற்றும் சிங்கள ஊடகங்கள் மூலமாக முன்னெடுத்து வருவதாக பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து இதன் தலைவரும் சிரேஷ்ட தொழிற்சங்க வாதியுமான ஓ.ஏ.இராமையா கருதுத்தெரிவிக்கையில் தொழிலாளர் வேதனத்தை குறைக்க பலர் பிரசாரம் செய்து வந்தனர்.ஆனால் அதற்கு சந்தர்ப்பமில்லை என்று தெரிந்தவுடன் தற்போது வேறு விதமான கருத்துக்களை ஊடகங்கள் மூலம் பரப்பி வருகின்றனர். அதாவது
1) தோட்டங்களில் உற்பத்தி திறன் மிகவும் குறைந்துள்ளது


2) தோட்டத்தொழிலாளர்களுக்கு ஏனைய தனியார் துறையினரை விட வேதனம் மற்றும் இதர சலுகைகள் அதிகம்


3) ஆண் தொழிலாளர்கள் குறைவான நேரமே பணியில் ஈடுபடுகின்றனர்சில மாதங்களுக்கு முன்னர் கூட ஒரு சில தோட்டங்களில் பெண்களை அதிகளவு எடைக்கு கொழுந்து பறிக்கச்கூறி நிர்பந்திக்கப்பட்டது. இதன் பின்னணியிலுள்ள காரணமும் தேயிலை வர்த்தகத்தில் ஏற்பட்ட பாதிப்பு தான். மறு பக்கம் ஆண் தொழிலாளர்கள் மேல் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து பார்க்க வேண்டும். ஒரு தொழிலாமி பகல் உணவு நேரம் தவிர்த்து 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் .எனினும் பெருந்தோட்டப்பகுதிகளில் குறிப்பாக ஆண் தொழிலாளர்கள் தமக்கு வழங்கப்படும் வேலை அளவுக்கு ஏற்ப (கூஅகுஓ) குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடித்து விட்டு வேறு வேலைகளுக்கு சென்று விடுவர்.இதற்குக்காரணம் வேறு வருமானத்தை தேடிக்கொள்ளல் பகுதி நேர வேலைகளில் இணைந்து கொள்ளல் போன்றவை தான். இது அக்காலத்திலிருந்து பாரம்பரியமாக இருந்து வரும் ஒரு விடயமே தவிர இதில் இரகசியங்கள் இல்லை என்றார்.
உற்பத்தித் திறனை அதிகரிக்க அரசாங்கத்தின் முயற்சிசகல வேலைத்தளங்களிலும் உற்பத்தித்திறனை கூட்டுவதற்கு அரசாங்கத்தினால் புதிய செயற்றிட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உற்பத்திறன் மற்றும் தொழிற்றிறனை அதிகரித்தல் எனும் தலைப்பில் இது குறித்த கலந்துரையாடல்களை சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர முன்னின்று நடத்தி வருவதாக சிரேஷ்ட தொழிற்சங்கவாதி ஒருவர் தெரிவிக்கிறார்.
இதே வேளை இந்த விவகாரம் பிரதான தொழிற்சங்கங்களிடையே அதிருப்தியை தோற்றுவித்துள்ளது. தொழிலாளர் நலன் பேணும் விடயங்களில் அக்கறை செலுத்தாது உற்பத்தித்திறனை அதிகரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபாடு காட்டுவதா என சில தொழிற்சங்க பிரமுகர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். தொழிலாளர் சம்பந்தப்பட்ட விடயங்களை தொழில் அமைச்சே கையாள வேண்டும் என்றும் இதை ஒரு சிரேஷ்ட அமைச்சர் மூலம் கொண்டு நடத்துவதன் உள்நோக்கம் என்ன என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சகல வேலைத்தளங்களிலும் இது அமுல்படுத்தப்பட்டாலும் தொழிலாளர் வர்க்கமே இதன் மூலம் பாதிப்பை எதிர்நோக்கவுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.
கூட்டு ஒப்பந்தத்தில் வேலை நேரத்தை கூட்ட முடியுமா?தொழிலாளர்களின் பணி நேரம் என்பது தனித்து நோக்கப்பட வேண்டிய விடயமல்ல. தோட்டத்தொழிலாளர்களைப்பொறுத்த வரை தொழிற்சட்டம் ,கைத்தொழில் பிணக்குச்சட்டம் மற்றும் கூட்டும் ஒப்பந்தம் இந்த மூன்றையும் பார்க்க வேண்டும். பணி நேரத்தை அதிகரிப்பது அல்லது கட்டாயமாக்குவது என்பது நிர்வாகங்களுக்கும் தொழிலாளர்களுக்குமிடையில் விரிசலை ஏற்படுத்தும். கூட்டு ஒப்பந்தத்திற்குள் இதை கொண்டு வர முடியாவிட்டாலும் வேறு ஏதாவது ஒரு முறையில் இது கொண்டு வரப்படலாம் என்பதே பலரினதும் எதிர்ப்பார்ப்பு .
தற்போதைய நிலை என்ன?
கடந்த ஆறு மாத காலங்களில் ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் அளவு மிகக்குறைவாக உள்ள நிலையில் எங்ஙனம் இந்த சரிவிலிருந்து இலங்கை மீளப்போகிறது என்பது கேள்விக்குறியே. இந்த நிலைமை தொடர்ந்தும் இருப்பதாகவே பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் மாலனி பீரிஸ் தெரிவிக்கிறார். இதன் காரணமாக நாம் வேறு நாடுகளுக்கு அதிகளவான தேயிலையை ஏற்றுமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகத் தெரிவிக்கிறார்.இலங்கை தேயிலை சபையும் பெருந்தோட்ட அமைச்சும் இது குறித்து கலந்துரையாடி சீனா ,அமெரிக்கா ஜப்பான் ஆகிய நாடுகளின் உள்ளூர் தேவையை அறிந்து அங்கு தேயிலையை சந்தைப்படுத்தலாமா என யோசித்து வருவதாக அவர் தெரிவிக்கிறார். முக்கியமாக சீனாவில் இலங்கை பிளக் டீயிற்கு அதிக கிராக்கி நிலவுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
உலக சந்தையை இழக்கிறதா இலங்கை?
தேயிலை ஏற்றுமதியில் உலகில் முன்னணியில் இருந்த இலங்கையை தற்போது ஆபிரிக்க நாடான கென்யா பின் தள்ளியுள்ளது. இருப்பினும் சிறந்த இரகம் மற்றும் விலை உயர்ந்த தேயிலையை ஏற்றுமதி செய்யும் நாடுகளுள் இலங்கை முன்னணியிலுள்ளது. தேயிலை தொழிற்றுரையை நம்பி நேரிடையாகவும் மறைமுகமாவும் இலட்சக்கணக்கானோர் உள்ளனர்.எனினும் சில கம்பனிகள் மீள் நடுகையில் அதிக அக்கறை காட்டுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக பழைய தேயிலை மலைகள் இன்று பாகம் பாகமாக பிரிக்கப்பட்டு வெளியாருக்கு விற்கும் நிலை தோன்றியுள்ளதை மறுக்க முடியாது. அந்நிய செலாவணியை பெற்றுத்தரும் முக்கிய பயிர் இது என்பதிலும் பார்க்க தொழிலாளர் வர்க்கத்தின் பெருமை கூறும் ஒரு வர்த்தக பொருளாக இன்று தேயிலை விளங்குகிறது. தொழிலாளர் வர்க்கத்தின் சமூக நலன்களை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச்சென்றால் மட்டுமே இத்தொழிற்றுரையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல முடியும்.

Tuesday, May 3, 2011

ராஜபக்ச -பிரபாகரன் , ஒபாமா - பின்லேடன்


அல்கைதா தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க துருப்புக்களால் கொல்லப்பட்ட செய்தி சர்வதேச ஊடகங்களில் பரபரப்பாக ஒளிஒலிபரப்பாகி கொண்டிருந்த போது ஒரு தொழிற்சங்க முக்கியஸ்த்தர் திடீரென எனக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினார். ஒசாமா கொல்லப்பட்ட விடயத்தை சர்வசாதாரணமாகவே இன்று உலக மக்கள் எடுத்துக்கொள்வர் என்று தெரிவித்த அவர் அமெரிக்காவிற்கு வேண்டுமானால் இது மகிழ்ச்சி தரும் விடயமாக இருக்கலாம் காரணம் ஒசாமாவால் அவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள். மற்றையோருக்கு இது சாதாரண விடயம் தான் என்றார்.ஏன் என்று கேட்டேன் அதற்கு அவர் சொன்ன பதில் இது. ஒசாமா ஒரு சர்வதேச தீவிரவாதியாக அடையாளம் காணப்பட்டவன். ஆகவே அவனுக்குள் பல திறமைகள் இருக்க வேண்டும் முக்கியமாக அமெரிக்க துருப்புகளின் கண்களில் படாமல் உலகெங்கும் அவர் சுற்றி வந்திருக்கிறான்.அப்படி இருக்கும் போது பாகிஸ்தானில் ஒரு வீட்டில் இருக்கும் போது அவன் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறான் என்றால் சந்தேகமேயில்லை அவனை யாரோ காட்டிக்கொடுத்துள்ளனர். இது காட்டிக்கொடுக்கும் மக்கள் அதிகரித்துள்ள உலகம். ஆகையால் இதை சாதாரணமாகத்தானே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது ? என்று திருப்பிக்கேட்டார்.
அது அவரது சொந்த கருத்து. இருப்பினும் மேற்குல நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாய் இருந்த ஒசாமா கொல்லப்பட்டு விட்டான். ஆனால் அவனது அமைப்பு பூரணமாக அழிக்கப்படவில்லை. அல்கைதா அமைப்பின் இரண்டாம் நிலை தலைவர் அய்மன் அல்சௌகாரி ஒசாமாவின் இடத்தை நிரப்ப காத்திருக்கிறார்.மேலும் தமது புனித யுத்தம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். இது அமெரிக்க உட்பட பல மேற்குலக நாடுகளுக்கு அபாய எச்சரிக்கை தான். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷை கசாப்பு கடைக்காரன் என்று சொன்னவர் தான் இந்த அல் சௌகாரி. தனது ஆட்சி காலத்தில் ஈராக் மீதான ஆக்கிரமிப்பால் உலகம் முழுக்க விமர்சிக்கப்பட்டவர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ். சதாம் உசேனை தூக்கிலிட்ட பிறகும் கூட ஈராக்கில் இரசாயன ஆயுதங்கள் இருப்பதை அவரால் கண்டு பிடிக்கமுடியவில்லை. மறுபுரம் இவரது ஆட்சி காலத்திலேயே அமெரிக்கா இரட்டை கோபுரத்தையும் அல்கைதாவின் தாக்குதலில் பறி கொடுத்தது. இரண்டு தடவைகள் பதவியிலிருந்தும் உருப்படியான எந்த வேலையும் செய்யாமல் போன புஷ்ஷின் இடத்திற்கு வந்த பராக் ஒபாமாவின் நுணுக்கமான வியூகத்திற்குக் கிடைத்த வெற்றியே ஒசாமாவின் மரணம்.
இனி ஒபாமா தான் சில காலங்களுக்கு ஹீரோவாக ஜோலிக்கப்போகிறார். சரி அதிருக்கட்டும் தலைப்பிற்கு இன்னமும் வரவில்லையே? இலங்கையிலும் சுமார் 20 ஆண்டு கால யுத்தத்தை தனது இரும்புப்பிடியினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவர் இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட பலரை அழித்து புலிகள் இயக்கம் ஒன்றே இன்று இலங்கைக்குள் இல்லை என்று கூறப்படுகிறது. புலிகள் இராணுவ ரீதியாக தோல்வியை தழுவியதும் ஜனாதிபதி ராஜபக்ச நாயகனாக வலம் வந்தார்.இரண்டாவது தடவை அவர் பெரும்பான்மையுடன் ஜனாதிபதி பதவியை கைப்பற்றவும் அவரது கட்சி பாராளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மை பெற்று அரசியல் அமைப்பை மாற்றுமளவிற்கு முன்னேறவும் அவருக்கு வலிமையை கொடுத்தது இந்த வெற்றி தான்.மறுபுரம் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் உட்படாமலில்லை. ஐ.நாவின் போர்க்குற்றச்சாட்டு அறிக்கைக்கு பதில் கொடுக்கும் கடப்பாட்டில் இலங்கை உள்ளது.
இலங்கை இராணுவத்திற்கும் விடுதலை புலிகளுக்குமிடையிலான யுத்தத்தின் இறுதி கட்டத்தில் பல பொது மக்கள் கொல்லப்பட்டதாகத் தான் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால் இது ஒபாமாக்களின் விடயத்தில் எல்லாம் எடுபடாது.காரணம் வியட்நாம்,ஈரான் மற்றும் ஆப்கான் மீதான ஆக்கிரமிப்பு காலத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நேசப்படைகள் செய்த அட்டூழியங்கள் பற்றி யார் தான் வாய் திறப்பார்கள்?
வாய் திறப்பவர்கள் இருக்கிறார்கள் ஆனால் யாராவது காட்டிக்கொடுக்க வேண்டுமே ? என்ன புரியவில்லையா? ஆரம்ப பந்தியை முதலிலிருந்து வாசிக்கவும்.