


இலங்கையில் திருஞான சம்பந்தரின் பாடல் பெற்ற திருத்தலம் என்ற பெருமையும் தட்சிண கைலாயம் என்ற நாமத்துடன் விளங்கும் திருகோணமலை திருக்கோணேஸ்வரத்தின் பெருமையை இன்னும் ஒரு படி ஓங்கச்செய்யும் வகையில் அண்மையில் 33 அடி உயரமான சிவபெருமானின் தியான நிலை சிலை திறப்பு வைபவம் இடம்பெற்றது. இம்மாதம் 15 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இச்சிலை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இலங்கையைப்பொறுத்தவரை மிக உயரமான சிவனின் சிலை இதுவாகும். பக்தர்கள் மனதை ஒரு முகப்படுத்தும் ஒரு சக்தி மிக்க ஞான நிலையை சிவனின் முகம்
கொண்டிருக்கின்றது என்பது சிலையை வடித்த சிற்பியின் கைவண்ணமா அல்லது கோணேச்சர பெருமானின் சக்தியா என்பது தெரியவில்லை. சிலையை உற்றுப்பார்த்தால் இது விளங்கும். இந்த சிலையை உருவாக்கியவர் தமிழகம் காரைக்காலைச்சேர்ந்த சிற்பாசிரியர் கலியபெருமான் விஜயன் என்பவராவார். சிவனின் சிலை மட்டுமல்லாது இராவணன் வெட்டு எனும் கோயிலின் வாயிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள இடத்தில் தியான மண்டபமும் அன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. இதில் கடலில் கண்டெடுக்கப்பட்ட ஒரு லிங்கம் ஏனைய விக்ரகங்களுடன் கிடைத்த லஷ்மி சமேத நாராயண விக்ரமும் வைக்கப்பட்டுள்ளன. சிலை திறக்கப்பட்ட அன்று பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருகோணமலை நகரத்திலிருந்து பார்த்தாலும் சிவனின் அந்த கம்பீரமும் சாந்தமும் கலந்த முகம் தெரிகிறது. பக்தர்களுக்காக அங்கு எடுக்கப்பட்ட படங்களைத்தருகிறோம்.
