Sunday, February 6, 2022

என்று தணியும் இந்த…!

பிறருக்கு சுதந்திரத்தை வழங்க மறுப்பவர்கள் சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு எவ்வகையிலும் தகுதியுடையவர்கள் அல்லர்.

–ஆபிரகாம் லிங்கன்


 

அபிவிருத்தி என்றால் என்ன என்பதற்கு நாம் அனைவரும் கூறும் வரைவிலக்கணம் என்ன? ஒரு நாடு சகல துறைகளிலும் கொண்டிருக்கக் கூடிய தன்னிறைவே அபிவிருத்தி என்பதாகும். அப்படியானால் சுதந்திரம் என்றால் என்ன? சுதந்திர தினம் பற்றி பாடசாலை மாணவர்களை கட்டுரை எழுதக் கூறினால், அவர்கள் என்ன எழுதுவார்களோ அதைத்தான் இன்று எமது நாட்டில் சில அரசியல்வாதிகள் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

பல்லின மக்கள் வாழ்ந்து வரும் நாட்டில், அனைத்துத் தரப்பினரும் அனுபவிக்கக்கூடிய சுதந்திரம் என்று மலர்கின்றதோ அன்றைய நாளே சுதந்திரம் தினமாக இருக்கும். ஒரு பிரிவினைரை மட்டும் இனம்,மதம், மொழி என சகல அம்சங்களிலும் ஒதுக்கி வைத்து விட்டு மற்றொரு சாரார் கொண்டாடுவது சுதந்திர தினமாக இருக்குமா என்ற கேள்வி இலங்கையைப் பொறுத்தவரை 1948 பெப்ரவரி 4 ஆம் திகதியிலிருந்து இன்று வரை எதிரொலித்துக்கொண்டு தான் இருக்கின்றது.

சுதந்திரம் கிடைத்த அதே ஆண்டு இலட்சக்கணக்கான இந்திய வம்சாவளி மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டது. அவர்களின் பிரஜா உரிமையைப் பறித்தது சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கமான ஐக்கிய தேசிய கட்சி. அதன் பின்னர் மலையக பிரதேசத்தைத் தவிர்த்து நாட்டின் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் வாழ் மக்களின் சுதந்திரங்கள் என்ன அடிப்படையில் பறிக்கப்பட்டன என்பதை இங்கு விலாவாரியாக கூறத்தேவையில்லை. ஆனால் பேரினாவாத சிந்தனை கொண்டவர்கள் எமது நாட்டின் சுதந்திர தினத்தை இரண்டு காலகட்டங்களாகப் பார்க்கின்றனர். முதலாவது 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி. இரண்டாவது 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி.

ஆனால் ஜனநாயக சிந்தனை கொண்டவர்களால் கொண்டாடப்பட்டு வந்த இலங்கையின் குடியரசு தினமான மே மாதம் 22 ஆம் திகதி இன்று இலங்கை மக்களால் மறக்கப்பட்டுள்ளது. அது பற்றிய பிரக்ஞையின்மையானது இன்று பாடசாலை மாணவர்களிடமிருந்து கற்றோர் வரை உள்ளது. ஏனென்றால் அந்தளவுக்கு இன்று இலங்கையின் வரலாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பாடசாலை பாட புத்தகங்களில் கூட இலங்கையின் இரண்டாவது சுதந்திர தினம் 2009 மே மாதம் 18 ஆம் திகதி என்று எதிர்காலத்தில் கொண்டு வரப்படலாம். இலங்கை முழுமையான சுதந்திரம் பெற்ற தினமாக குடியரசு தினமே விளங்குகின்றது. 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த பின்னரும் கூட சிலோன் என்றே எமது நாடு அழைக்கப்பட்டு வந்தது.

1972 ஆம் ஆண்டு வரை அரசியலமைப்பு என ஒன்று இல்லாத நிலையில் நாட்டின் தலைவராக பிரித்தானிய மகாராணியே விளங்கினார். நாட்டின் இராணுவத் தளபதியாக பிரித்தானிய தளபதியே இருந்தார். நீதிமன்ற இறுதித் தீர்ப்பின் முடிவுகளை பிரித்தானிய நீதிமன்றமே மேற்கொள்ளும். ஆகவே எமக்கு உண்மையான சுதந்திர தினம் எப்போது கிடைத்தது என்பதை நாட்டு மக்களும் அரச தலைவர்களும் மறந்து விட்டனர். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா கூட தனது குடியரசு தினத்தை, சுதந்திர தினம் போன்று கோலாகலமாகக் கொண்டாடுகின்றது. ஆனால் நாமோ 2009 ஆம் ஆண்டுக்குப்பிறகு மே மாதம் 18 ஆம் திகதியை யுத்த வெற்றி தினமாகவும் இரண்டாவது சுதந்திர தினமாகவும் கொண்டாடி விட்டு, அதே மாதத்தின் 22 ஆம் திகதியை கடந்துபோய்க்கொண்டிருக்கிறோம்.

இப்படி தேசிய ரீதியில் கிடைத்த சுதந்திரம் பற்றி பிரஸ்தாபிக்கையில் சமூக மற்றும் கலாசார ரீதியாக இந்த நாட்டின் அனைத்து மக்களும் சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனரா என்பது மிக முக்கியமான கேள்வி. நாம் இன்னும் அபிவிருத்தியடைந்து வரும் மூன்றாம் உலக நாடாக இருக்கின்றோம். அப்படியானால் எமது நாட்டில் வறுமை கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும் ஒரு வர்க்கம் உள்ளது. ஆகவே வறுமையிலிருந்து அந்த வர்க்கம் மீளும் வரை அவர்கள் எவ்வாறு சுதந்திர காற்றை சுவாசிப்பர்? நாட்டை அந்நிய சக்திகளிடமிருந்து மீட்டல் அல்லது விடுபடல் உண்மையான சுதந்திரம் என்றால் , தீவிரவாதத்தை முறியடித்து வெற்றிக்கொடிநாட்டுதல் சுதந்திரம் என்றால், குடியரசாதல் சுதந்திரம் என்றால் பொருளாதார மீட்சிக்காக மீண்டும் எம்மை அந்நிய தேசங்களிடம் அடகு வைத்தலை என்னவென்று கூறுவது?

இங்கு இன, மத ரீதியாக ஒடுக்கப்பட்டு வரும் சிறுபான்மையினமொன்று உள்ளது.அவர்களின் உரிமைகளை தட்டிப்பறிக்கும் செயற்பாடுகள் பேரினவாத சிந்தனைகளுடன் நிகழ்ச்சி நிரல்படுத்தப்பட்டுள்ளன. எந்த தேசிய கட்சி ஆட்சியமைத்தாலும் அதையே பின்பற்றும் வகையில் அது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் பெரும்பான்மையின மக்களுக்கு கிடைக்கும் சகல வளங்களும் ஏனைய சிறுபான்மை சமூகங்களுக்கு மறுக்கப்படுமாயின் அவர்கள் எந்த உணர்வுடன் இந்நாட்டின் தேசிய கொடிகளை ஏற்றுவர் அல்லது தமது பிள்ளைகளின் கைகளில் அதை வழங்கி அசைக்கச் சொல்வர்?

யாருடைய ஆட்சியாக இருந்தாலும் சுதந்திர தினமன்று அரச அலுவலகங்களிலும் , வீடுகளிலும் கொடிகளை பறக்கச்செய்தல் வேண்டும் என அரசாங்கம் ஒரு உத்தரவாகவே கூற வேண்டிய நிலையில் நாம் சுதந்திர தினத்தை வரவேற்றுக்கொண்டிருக்கின்றோம். உணர்வு பூர்வமாக எமது நாட்டில் எத்தனைப்பேர் சுதந்திர தினத்தை அனுஷ்டிக்கின்றனர்? அல்லது அப்படி அனுபவிக்கும் சூழல் எப்போது ஏற்படும்?

சுதந்திரம் பெற்ற ஆண்டுகள் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இம்முறை நாம் சுதந்திரம் பெற்று 74 வருடங்களைப் பூர்த்தி செய்கிறோம் என கூறிக்கொள்ளலாம். ஆனால் அந்த 74 வருடங்களில் நாம் எதைப்பெற்றோம் எதை இழந்தோம் என்பது குறித்து எவரும் தேடிப்பார்ப்பதில்லை. அந்நிய தேசத்திடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக இன்னுயிரை இழத்தல் தியாகம் எனப்படுகின்றது. ஆனால் இங்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் ஏற்பட்ட வன்முறைகளும் உயிரிழப்புகளும் அந்நிய தேசத்தாரால் ஏற்பட்டதல்ல. இந்நிலை 74 வருடங்களை கடந்தும் தொடர்கின்றது என்றால், இதில் பாதிக்கப்பட்ட தரப்பினர் எங்ஙனம் உணர்வுபூர்வமாக சுதந்திர தினத்தை வரவேற்பர்? உண்மையான சுதந்திரம் என்றால் என்னவென்பதை எடுத்துக்கூறுவதில் நாம் பாடசாலை மாணவர்களையும் ஏமாற்றி வருகின்றோம்.

அவர்களின் பாடத்திட்டத்தில் இலங்கையின் சுதந்திர தின வரலாறு எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்தால் விளங்கும். சுதந்திரம் என்பது இன,மத ,மொழிகளை கடந்த ஒரு உணர்வு என்பதை இலங்கையில் சகல மக்களுக்கும் உணர்த்தும் செயற்பாடுகளை கடந்த கால தலைவர்கள் முன்னெடுத்திருக்கவில்லை. ஒரே மதம் ஒரே மொழி என்ற அடிப்படையின் நீட்சியே இன்று ஒரே நாடு ஒரே சட்டம் என்ற புதிய அத்தியாயத்தை தோற்றுவித்துள்ளது. இதன் காரணமாகவே இன்று இலங்கையில் நாம் மட்டுமே சுதந்திர தினத்தை கொண்டாட தகுதியானவர்கள் என்ற உணர்வு பெளத்த சிங்கள மக்களிடம் உருவாகியுள்ளது. சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம்பாடப்படல் வேண்டும் என்று பேரினவாதம் நினைக்கும் போது , அதையும் மீறி தமிழில் பாடப்பட்டால் அது தேசியத்துக்கு செய்யப்படும் அகெளரவமாகவே நோக்கப்படுகின்றது. 

ஒரு சாராருக்கு மட்டும் மறுக்கப்படும் சுதந்திரத்தை மற்றுமொரு சாரார் கொண்டாடுவதில்
என்ன தாற்பரியங்கள் உள்ளன?