Tuesday, January 10, 2012

அரபு, இஸ்லாமிய நாடுகளில் பெண்களுக்கெதிரான வன்முறைகள்


ஷகார் குல் மீட்கப்பட்ட போது


மரியம்அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளில் எந்தளவிற்கு இறுக்கமான கலாசாரம் பேணப்படுகின்றதோ அந்தளவிற்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் கொடுமைகளும் தலைவிரித்தாடுவதை கூறாமல் இருக்க முடியாது. பெண்கள் கல்வி கற்பதற்கு தடை, உடலின் எப்பாகமும் வெளியே தெரியும் படி ஆடைகள் அணிந்தால் கடுமையான தண்டனை , பெண்கள் என்றால் வீட்டில் மட்டுமே இருக்க வேண்டும் இப்படி பல கடுமையான சட்ட திட்டங்களை வகுத்த தலிபான்களால் கூட ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக மிக மோசமாக நடந்து கொள்ளும் ஆண்களுக்கெதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதுள்ளது. இதற்கு இவர்கள் பெண்களுக்கு எதிராக வகுத்த கடுமையான சட்டங்களே காரணமாகிவிட்டன. கடந்த வாரம் ஆப்கானிஸ்தானில் 15 சிறுமிக்கு இடம்பெற்ற சம்பவம் வெளிவந்ததையடுத்து உலகெங்கும் உள்ள மனித உரிமை அமைப்புக்கள் அரபுலகம் மற்றும் இஸ்லாமிய நாடுகளில் இடம்பெறும் பெண்களுக்கெதிரான சித்திரவதைகள் ,கொடுமைகள் போன்றவற்றை பகிரங்கப்படுத்தி இந்தப்பெண்கள் சிறுமிகள் படும் அவஸ்த்தைக்கு முற்றுப்புள்ள வைக்கப்பட வேண்டும் என குரல் எழுப்பியுள்ளன. அப்படி என்ன தான் நடந்தது ஆப்கானில் ?ஆப்கானிஸ்தானின் வட பிராந்திய மாநிலம் தான் பக்லான் . இங்கு வாழும் 30 வயதுடைய ஒரு நபருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டவள் தான் 15 வயது சிறுமியான ஷகார் குல். ஏழு மாதத்திற்கு முன்னர் தமது பெண்ணை திருமணம் செய்து கொடுத்ததாகவும் அதன் பின்னர் தமது மகள் தொடர்பான எந்த தகவல்களும் கிடைக்க வில்லையென ஷகார் குல்லின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்தனர். விசாரணைகளின் பின்னர் ஷகாரை தேடி கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்கினர் பொலிஸார். இறுதியில் பக்லான் பிராந்தியத்தின் ஒரு வீட்டின் கீழ்த்தளத்தில் மலசலகூட அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஷகாரை கண்டு பிடித்தனர் பொலிஸார். ஆனால் அந்த சிறுமியைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர், காரணம் நகங்கள் பிடுங்கப்பட்டு உடம்பெங்கும் சிகரட்டுகளால் சுடப்பட்ட காயம் மற்றும் பலமாக தாக்கியதால் தலை மற்றும் கண் பகுதிகளில் இரத்தம் வழிந்தோடிய நிலையில் கிட்டத்தட்ட அரைவாசி இறந்த விட்ட நிலையிலேயே அவர்கள் ஷகாரை மீட்டுள்ளனர். விசாரித்துப்பார்த்ததில் ஷகார் அரை குறையாக சொன்ன தகவல்கள் பொலிஸாரை திடுக்கிட வைத்தன. தனது கணவர் தன்னை கட்டாய விபசாரத்தில் ஈடு பட சொன்னதாகவும் மறுத்ததால் அடித்து உதைத்ததாகவும் கூறிய இவர் பின்னர் தனது கணவனின் சகோதரிகள் அனைவரும் தன்னை விபசாரத்தில் ஈடுபடுமாறும் அதன் மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் எனவும் வற்புறுத்தி அடித்து சித்திரவதை செய்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவர்களின் கட்டாயத்திற்கு தான் மறுத்த காரணத்தினாலேயே தன்னை கடந்த 5 மாதங்களாக வீட்டின் கீழ்த்தளத்திலுள்ள மலசலகூடத்தில் அடைத்து வைத்ததாகவும் சிறிதளவு உணவு நீரே வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். நினைத்த நேரத்தில் அறைக்குள் புகுந்து தனது கணவன் மற்றும் கணவனின் சகோதரிகள் தன் மீது மிருகத்தனமாக தாக்குதல் நடத்தியதாக தெரிவித்திருக்கும் ஷகாரின் முழு வாக்குமூலத்தையும் பெறும் முயற்சியில் பொலிஸார் இறங்கியுள்ளனர். தற்போது இச்சிறுமி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஷகாரின் கணவன் தலைமறைவாகி விட அவரின் சகோதரிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். இஸ்லாமிய நாடுகளில் பெண்களைப்பொறுத்தவரை ஏற்படுத்தப்பட்டுள்ள கடுமையான சட்ட திட்டங்களை தமக்கு சாதகமாகப்பயனபடுத்திக்கொள்ளும் குற்றச்சம்பவங்களே நாள் தோறும் இடம்பெறுகின்றன.இதில் பெண்களும் சம்பந்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கும் விடயமாகும். ஆப்கானிஸ்தானின் சுதந்திர மனித உரிமை ஆணைக்குழுவின் புள்ளி விபரங்களின் படி கடந்த ஆண்டின் இரண்டாது காலாண்டு வரை பெண்களுக்கெதிராக 1026 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கிறது.

இஸ்லாமிய நாடுகளில் பின்பற்றப்படும் மற்றுமோர் கடுமையான வழிமுறை தான் கௌரவக்கொலைகள். ஒரு குடும்பத்தில் உள்ள பெண் கலாசார விதிமுறைகளை மீறி நடந்ததாகவோ ,அல்லது நடந்ததாக குற்றம் சுமத்தப்பட்டாலோ குடும்பத்தினரே அப்பெண்ணை கொலை செய்யும் முறைகள் உள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் குடித்தொகை நிதியத்தின் அறிக்கைகளின் படி வருடந்தோறும் இவ்வாறு தமது சொந்த குடும்ப உறுப்பினர்களாலேயே கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கை ஐயாயிரத்துக்கும் மேலாகும். அதிகமாக மத்திய கிழக்கு மற்றும் தென் மேற்கு ஆசிய நாடுகளிலேயே இந்த கொடுமைகள் இடம்பெறுகின்றன.இதில் துயரமான சம்பவம் என்னவெனில் குறித்த பெண்ணுக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் நடந்து கொண்ட அல்லது காரணமான ஆணுக்கு எந்த தண்டனையும் இல்லை என்பதே. எனினும் இதில் மத கோட்பாடுகள் ,சட்டங்கள் செல்வாக்கு செலுத்துவதால் பலரும் இது குறித்து பேசத்தயங்குகின்றனர்.

“ நூறு முறை கொல்வேன்

“2011 ஆம் ஆண்டு வெளிவந்த சம்பவம் இது. ஆப்கானிஸ்தான் நாட்டைச்சேர்ந்த மொகமட் சாபியா என்பவர் தனது மூன்று மகள்மார் ஆண் நண்பர்களுடன் தொடர்பு வைத்திருந்தனர் என்பதை அறிந்து 2009 ஆம் ஆண்டு அவர்களை கொலை செய்து புதைத்துள்ளார். அவர் இப்போது கனடாவில் வசிக்கிறார். எனினும் கடந்த ஆண்டே இந்த விடயம் வெளிஉலகுக்கு வந்தது. இவர் மீது வழங்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் கனடா பொலிஸார். தான் செய்ததை நியாயப்படுத்தும் சாபியா தனது மகள்மார் மூவரும் நூறு தடவைகள் உயிர் பெற்று வந்தாலும் நூறு தடவைகள் கொலை செய்வேன் என வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். தனது குடும்பத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய காரணத்தினாலேயே தான் இந்த முடிவுக்கு வந்ததாக அவர் தெரிவிக்கிறார். நான் ஒன்றும் கெட்டதை செய்ய வில்லையே என்கிறார். கொலை செய்யப்பட்ட மூன்று பேரும் முறையே 13,17,19 வயதையுடையவர்கள்.இந்தியாவிலும் இடம்பெறுகிறதுஎமது அண்டைய நாடான இந்தியாவில் கூட கௌரவக்கொலைகள் இடம்பெறுகின்றன.இதுவும் கடந்த வருடம் மே மாதம் இடம்பெற்ற ஒரு சம்பவம். இஸ்லாமிய மதத்தவர்கள் ஏனைய மதத்தவர்களுடனான திருமண பந்தத்தை அனுமதிப்பதில்லை. தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் ஆணோ பெண்ணோ இஸ்லாமிய மதத்தை தழுவ வேண்டும்.அதன் பிறகே அனுமதி குறித்து பேசப்படும். இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தின் பாக்பாத் எனும் இடத்தில் தமது மகள்மார் இருவரும் இந்து மதத்து இளைஞர்களை திருமணம் முடித்த சம்பவத்திற்காக இரு இஸ்லாமிய மதத்தை சேர்ந்த தாய்மார்கள் மகள்மாரை கொலை செய்துள்ளனர்.அவர்களது கழுத்தில் கயிற்றை கட்டி வலுக்கட்டாயமாக தூக்கிட்டு கொன்றுள்ளனர் இத் தாய்மார்.கௌரவக்கொலைகள் மூலமாக மட்டுமே அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் இடம்பெறுகின்றன என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது தான். வன்முறைகளில் இதுவும் ஒரு பகுதியே, முக்கியமாக அரபு நாடுகளில் கடுமையாக அமுல்படுத்தப்படும் இஸ்லாமிய ஷரீயா சட்டம் மூலம் பொது இடங்களில் கல்லெறிந்து கொல்லப்படும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன. இதில் ஆண்களும் உள்ளடக்கப்படுவர் என்றாலும் சந்தர்ப்பங்கள் குறைவே. மதத்தோடு சார்ந்து சட்ட முறைகளாக இவற்றை பின்பற்றுவதால் மேற்குல மனித உரிமை ஆர்வலர்கள் என்ன தான் கத்தினாலும் இவற்றை அரபுலக ஆட்சியாளர்கள் கண்டு கொள்வதில்லை. இதே வேளை உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் ,சிரியா, ஆகிய நாடுகளிலும் கூட பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. வீட்டு வன்முறைகளில் இவை தங்கியுள்ளதால் அதிகமாக பொலிஸ் முறைப்பாடுகளும் செய்யப்படுவதில்லை. மிக இறுக்கமான கலாசாரத்தை பேணும் ஈரான் நாட்டிலும் பெண்கள், குழுக்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் சம்பவங்கள் அதிகரிகத்துள்ளன. இதை விட பாதிக்கப்பட்ட பெண்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை முன் வந்து சொல்வதற்கு அங்கு சுதந்திரமில்லை. உதாரணத்திற்கு ஒரு விடயத்தை இங்கு சுட்டிக்காட்டலாம். ஈரானின் சமத்துவத்தை பேணல் அமைப்பின் உறுப்பினர் மரியம் பார்மன். கடந்த வருடம் மார்ச் மாதம் நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐ.நா கூட்டத்தொடரில் பெண்கள் நிலை பற்றிய இவர் உரையாற்றியிருந்தார். இதில் இவர் ஈரானில் இடம்பெறும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை சுட்டிக்காட்ட தவறவில்லை. ஆனால் நாடு திரும்பிய இரண்டு மாதங்களுக்குள் இவர் கைது செய்யப்பட்டார். நாட்டின் இறைமைக்கு எதிராக செயற்பட்டமை, ஈரான் தொடர்பான தவறான தகவல்களை உலகம் அறியச்செய்தமை, போராட்டங்களில் பங்கெடுத்தமை, அதை விட நாட்டின் அதிஉச்சபீடத்திற்கு அபகீர்த்திடைய ஏற்படுத்தியமை போன்ற காரணங்களுக்காக இவர் மீது வழங்கு பதிவு செய்யப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டது. தற்போது சிறைப்படுத்தப்பட்ட மரியமை விடுதலை செய்யக்கோரி உலகெங்கினும் இருந்து கோரிக்கைகள் விடப்பட்டு வருகின்றன.

உங்கள் சூரியகாந்தி இன்று முதல் இணையத்தில்!

மலையகத்தின் தனித்துவ குரலாக வலம் வரும் சூரியகாந்தி பத்திரிகையை இன்று முதல் வாகர்கள் இணையத்தில் இ.பேப்பர் வடிவில் (E-Paper) www.sooriyakanthi.lk என்ற முகவரியில் கண்டு மகிழழாம்.இதன் மூலம் உலகத்தின் பல பாகங்களிலும் உள்ள தமிழ் பேசும் மக்கள் சூரியகாந்தியையும் எமது மக்களைப்பற்றியும் அறியக்கூடியதாகவிருக்கும் அதே நேரம் கருத்துக்களையும் பரிமாறிக்கொள்ள ஏது வ.ாக அமையும் நவீன தொழிற்நுட்பத்திற்கேற்ப சூரியகாந்தி பத்திரிகையின் மற்றுமொரு பரிணாமமாக இது விளங்குகிறது. தென்னிந்தியாவிலிருந்து தொழில் தேடி பல நாடுகளுக்கு புலம் பெயர்ந்து சென்ற இந்திய வம்சாவளி மக்களில் பெருந்தொகையானோரைக்கொண்டு குறிப்பிடத்தக்க சமூகமாக விளங்கும் மலைய மக்களுக்கென தனியானதொரு முதல் பத்திரிகையாக பரிணமிக்கும் சூரியகாந்தியின் வளர்ச்சியில் தொடர்ந்தும் வாசகர்களின் பங்களிப்பை எதிர்ப்பார்க்கிறோம்.