உனக்கு கடற்கரை ஞாபகம் வருமா?
காதல் கரை சேர காதலர்கள் சேரும் இடம் கடற்கரையாம்
நாமும் அப்படித்தான் நினைத்தோம்
காலைச்சூரியன்,பளிச்சிடும் பனித்துளிகள்
ஆனால் இரவுகள் நரகம்
நினைப்பாயா என்று கேட்டால் உன் மனசு திறக்கிறாய்
ஆனால் உன்னை நான்…
* இலங்கையைப்பொறுத்தவரை பல்வேறு கல்வித்தகைமையுடைய சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் பேர் ஒவ்வொரு வருடமும் தொழில் சந்தையில் நுழைய ஆயத்தமாகின்றனர். ஆனால் இவர்களில் எத்தனைபேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கின்றது?
‘காலநிலை மாற்றமானது இன்று உலகை அச்சுறுத்தும் ஒரு விடயமாக மாறியுள்ளது. இந்த பூமி பந்தை பாதுகாப்பான எவ்வித சூழல் பாதிப்புகளும் இல்லாத ஒன்றாக மாற்றுவதற்குரிய வழிவகைகளை முன்னெடுத்துச்செல்ல இளைஞர்கள் தமது சக்தியை முதலீடு செய்ய முன் வரவேண்டும், காலநிலை மாற்றங்குறித்து விழிப்புணர்வை பெறவேண்டும்.அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் உள்ள இளையோர்,குறிப்பாக இளம்யுவதிகளும் பெண்களும் விவசாயம், உணவு, நீர்,விறகு சேகரித்தல் என்பவற்றில் கூடுதல் பங்காற்றுகின்றனர். ஆனால் எதிர் காலத்தில் இதற்கு பற்றாக்குறை நிலவும் அபாயம் அதிகமாகவே உண்டு.ஆகவே புதிய தொழில்நுட்பம் மற்றும் பழக்கவழக்கங்களை (கல்வியறிவு) கொண்டு இளையோர் எதிர்கால அபாயமான காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் இப்போதிருந்தே தமது பங்களிப்பை நல்க வேண்டும்’
பான் கீன் மூன் (செயலாளர் நாயகம் ஐக்கிய நாடுகள் சபை)
சர்வதேச இளையோர் தினமான ஓகஸ்ட் 12 ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அவர்கள் தனது விசேட அறிக்கையில் தெரிவித்திருந்த கருத்துக்களின் சாரமே இது.அவர் ஏன் காலநிலை மாற்றம் குறித்து உலக வாழ் இளையோருக்குக்கூறியுள்ளார்? காரணம் இல்லாமலில்லை. இவ்வாண்டு அனுஷ்டிக்கப்பட்ட சர்வதேச இளையோர் தினத்தின் பிரதான கருப்பொருள் என்ன தெரியுமா? ‘ இளையோரும் காலநிலை மாற்றமும் ; செயற்படுத்துவதற்கன தருணம் (YOUTH AND CLIMATE CHANGE: TIME FOR ACTION) என்பதாகும். ஐக்கிய நாடுகள் சபையினால் வருடாவருடம் குறிப்பிட்ட ஒரு கருப்பொருள் பிரகடனப்படுத்தப்பட்டு அதற்கேற்ப அவ்வருடம் செயற்றிட்டங்கள் முன்னெடுத்துச்செல்லப்படும். சரி இதை ஏன் இச்சந்தர்ப்பத்தில் கூற வந்தேன் என்கிறீர்களா? ஐக்கிய நாடுகள் சபையானது தனது மில்லேனிய அபிவிருத்தி இலக்குகளுக்கேற்பவே திட்டங்களை முன்னெடுத்துச்செல்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் அங்குள்ள நாடுகளுக்கும் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதே நோக்கு. ஆனால் அபிவிருத்திடைந்து வரும் நாடுகளில் உள்ள இளைஞர் யுவதிகள் இன்று எதிர்நோக்கியுள்ள பெரும் பிரச்சினை வேலையின்மையாகும். இது ஒரு பூகோள பிரச்சினை என ஐ.நாவும் ஏற்றுக்கொள்கிறது.
இச்சந்தர்ப்பத்தில் முதலாம் உலக நாடுகளிலும் இப்பிரச்சினை இல்லை என்று கூறமுடியாது ஆனால் அங்குள்ளவர்கள் மூன்றாம் உலக நாடுகளில் வாழும் இளம் சமுதாயத்தினர் போல் பொருளாதார ரீதியிலும் அடக்குமுறையிலும் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்பதே உண்மை. இந்நிலையில் ஐ.நா கூட தனது இலக்குகளை முன்னெடுத்துச்செல்ல இளையோரை எவ்வாறு அதில் பங்குகொள்ளச்செய்கிறது என்பதை அறியக்கூடியதாகவுள்ளது. உதாரணமாக மேலே கொடுக்கப்பட்டுள்ள சர்வதேச இளையோர் தினத்தின் இவ்வருட கருப்பொருளும் ஐ.நாவின் பிரகடனமும்.ஆனால் எமது இலங்கை போன்ற நாடுகளில் வாழும் இளம் சமுதாயத்தினருக்கு இது பொருந்துமா என்பதை நினைத்துக்கூட பார்க்கமுடியாதுள்ளது. நமது நாட்டின் பொருளாதார சூழல், யுத்த நிலைமை,அரசியல் ஸ்திரமற்ற தன்மை என்பவற்றால் ஏற்பட்டிருக்கும் வேலையில்லா திண்டாட்டம் அது தொடர்பில் இளைஞர் யுவதிகளின் ஏக்கம், போராட்டம் என்பன குறித்து புதிதாக ஒன்றும் கூறத்தேவையில்லை. இப்படி ஒரு நிலையில் இருக்கும் இளைஞர் கூட்டத்திடம் சென்று காலநிலை மாற்றத்திற்கு உதவுங்கள் என்றால் என்ன நடக்கும் ? இச்சந்தர்ப்பத்தில் நாம் ஐ.நாவை குற்றம் கூறவில்லை. மாறாக பல நாடுகளில் வசிக்கும் இளையோர் பலர் தன்னிறைவு பெற்ற பொருளாதார சூழலில் வாழ்ந்து இன்று உலகம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆயத்தமாகிக்கொண்டிருக்கும் போது நாம் இது வரையிலும் வேலையில்லா பிரச்சினைக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.
இலங்கையும் இளையோரும்இலங்கையின் மொத்த சனத்தோகையில் கால் பங்கினர் இளையோராவர்.இளையோரை எந்த வயதுக்குள் அடக்கலாம் என்பது பல நாடுகளுக்கும் உள்ள ஒரு தடுமாற்றம்.எனினும் 1529 வயதுக்குட்பட்டோரே இளையோர் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கணக்கு. இளைஞர் யுவதிகள் இலங்கையின் அபிவிருத்தியில் எந்தளவிற்கு பங்களிப்பை வழங்குகின்றனர் என்பது ஒரு பக்கம் இருக்க மறுபுறம் கல்வி கற்று பட்டதாரிகளாகியும் வேலையில்லாதவர்களின் நிலையும் கணக்கிலெடுக்கப்படவேண்டியதொன்று. இவர்களின் தொடர்ச்சியான போராட்டத்தை நாம் அவ்வப்போது ஊடகங்கள் வாயிலாக அவதானித்துக்கொண்டு தான் வருகிறோம் ஆனால் என்ன பயன்? இறுதியில் நாட்டின் அபிவிருத்தியில் பங்களிப்பு நல்காது இருக்கும் ஒரு கூட்டம் என்ற பெயர் தான் இவர்களுக்கு கிட்டப்போகின்றதா என்று கவலையுடன் நினைக்கத்தோன்றுகின்றது. இதற்கு அரசாங்கங்களின் உரிய கொள்கை வகுப்பின்மையே என காரணங்காட்டப்படுகிறது. தொடர்ச்சியாக இவர்கள் அலட்சியப்படுத்தப்பட்டுக்கொண்டே வந்தால் இவர்களுக்கு அடுத்தபடியாக களமிறங்க காத்திருக்கும் கூட்டத்திற்கு என்ன பதில் சொல்வது? இவர்கள் கற்க கல்வி ஒரு சதவீதத்திற்கும் பயன்படாமல் போகப்போகின்றதா? 2006ஆம் ஆண்டு அமைச்சரவை தீர்மானத்தின் படி இளைஞர் வேலை வாய்ப்பிற்கான தேசிய செயற்பாட்டு திட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. இதன் பிரதான திட்டங்களில் ஒன்று 2010 ஆம் ஆண்டில் வேலையில்லாத இளையோர் தொகையை 15 வீதமாக குறைத்தல்,இதுவே 2015ஆம் ஆண்டில் 8 வீதமாக்கப்படவேண்டும் என்பதாகும்.இந்த திட்டமானது ஐ.நாவின் YEN எனப்படும் பூகோள இளையோர் வேலைவாய்ப்பு வலைப்பின்னல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் அமுல் படுத்தப்பட்டதொன்றாகும். இதற்கு சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனமும் உலக வங்கியும் ஆதரவு வழங்குகின்றன. 2007ஆம் ஆண்டின் படி இலங்கையில் வேலையில்லா இளையோரின் சதவிகிதம் 20 ஆகும். ஆக இன்னுமொரு சர்வதேச இளையோர் தினமும் வந்து போய்விட்டது,நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?இத்திட்டத்தை ஒரேடியாக நாடு முழுவதிலும் செயற்படுத்த முடியாது எனக்கூறப்படுகிறது. சர்வதேச தொழில் ஸ்தாபனம் நாடு முழுவதிலும் முதலில் இது தொடர்பான ஆய்வொன்றை மேற்கொள்ள வேண்டும் என இளைஞர் விவகார அமைச்சு கூறியுள்ளது.
இலங்கையைப்பொறுத்தவரை பல்வேறு கல்வித்தகைமையுடைய சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் பேர் ஒவ்வொரு வருடமும் தொழில் சந்தையில் நுழைய ஆயத்தமாகின்றனர். ஆனால் இவர்களில் எத்தனைபேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கின்றது? 2008 ஆம் ஆண்டின் ஒரு ஆய்வின் படி இலங்கையில் வேலையற்றிருப்போரில் அரைவாசி பேர் இளையோர் தானாம்.இது சதவிகிதத்தில் 41 ஆகும். இவர்கள் 1524 வயதுக்கிடைப்பட்டவர்கள் என்பது இன்னுமொரு சோகம்.
வேலையில்லாதோரின் கல்வித்தராதரங்களைப்பார்க்கும் போது இலங்கையில் வேலை வாய்பொன்றை பெற்றுக்கொள்ளும் வகையில் தொழிற்கல்வி முறை இல்லாதது ஒரு பிரதான குறைபாடாகத்தெரிகிறது. வேலையில்லாதிருப்பவர்களில் க.பொ.த சா/ தரத்திற்கு குறைந்த தகைமை கொண்டோர் 3.2 வீதமாகும். க.பொ.த சா/தரம் கொண்டவர்கள் 6.4 வீதம்ஆனால் வேலையில்லா இளையோரில் உயர் தரம் மற்றும் அதற்கு மேலான தகைமைகளை கொண்டோர் 11 வீதமென் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அப்படி பார்க்கும் போது வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டம் நியாயமாகவே படுகின்றது.
கல்வி கற்று வீட்டில் இருக்கும் யுவதிகள்இலங்கையில் வேலையில்லாதோர் தொகையில் இளைஞர்களின் தொகையை விட (14.9%) இருமடங்கு இளம் யுவதிகளின் தொகையாகும் (28.4%வயது 1524) இது ஒரு பாரதூரமான விடயம்.இதில் குறிப்பிட்டுக்கூறவேண்டிய மற்றுமோர் விடயம் ஒரே பணியே இருபாலருக்கும் கொடுக்கப்பட்டாலும் பெண்ணிற்கு வழங்கப்படும் ஊதியத்தொகை குறைவாகும்.இதனால் இவர்களில் பலர் உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாததால் வேலைக்குச்செல்லாமல் வீட்டில் இருக்கின்றனர். நிர்மாணம் மற்றும் விவசாயத்தோட தொடர்புபட்ட பல தொழில் வாய்ப்புகள் பெண்களுக்கென்று இருந்தாலும் அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொதுவாக இன்று இளையோர் அரசாங்க வேலைகளை மட்டும் எதிர்ப்பார்த்திருப்பதாக ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது.ஆனால் அதை விட ஊதியம் கிடைக்கும் தனியார் துறை வேலைக்கு ஏற்றவாறு தங்களை உருவாக்கிக்கொள்ள பல தடைகள் உள்ளதாகத்தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் அரச மற்றும் தனியார் துறை இரண்டும் இணைந்ததாக முன்னெடுத்துச்செல்லப்படும் வேலைத்திட்டங்கள் மூலம் இவர்களின் கனவை நனவாக்கலாம் என்கின்றனர் சில ஆய்வாளர்கள். அரசாங்க தொழில் வாய்ப்புகள் மூலம் ஏனைய சலுகைகளையும் பெறலாம் ஆனால் தற்போதுள்ள இளையோர் ஊதியம் மற்றும் தொழில் பாதுகாப்பு போன்ற விடயங்களில் மாத்திரம் அக்கறை காட்டுபவர்கள் அல்ல என்கின்றது ஒரு ஆய்வு. எனினும் அரசாங்கமும் ஒவ்வொரு வருடமும் தொழில் சந்தைக்கு உள் நுழைய காத்திருக்கும் இளையோரின் எண்ணிக்கையைப்பார்த்து சரி அவர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத்தரும் திட்டங்களை முன்னெடுக்கவேண்டும். இதில் வெளி நாட்டு வேலை வாய்ப்பும் முக்கிய இடத்தைப்பிடிக்கலாம். இல்லாவிடின் அடுத்த தலைமுறை வாரிசுகளும் போராட்டத்தில் தான் காலத்தை கடத்த வேண்டியேற்படும்.