Tuesday, May 3, 2011

ராஜபக்ச -பிரபாகரன் , ஒபாமா - பின்லேடன்














அல்கைதா தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க துருப்புக்களால் கொல்லப்பட்ட செய்தி சர்வதேச ஊடகங்களில் பரபரப்பாக ஒளிஒலிபரப்பாகி கொண்டிருந்த போது ஒரு தொழிற்சங்க முக்கியஸ்த்தர் திடீரென எனக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினார். ஒசாமா கொல்லப்பட்ட விடயத்தை சர்வசாதாரணமாகவே இன்று உலக மக்கள் எடுத்துக்கொள்வர் என்று தெரிவித்த அவர் அமெரிக்காவிற்கு வேண்டுமானால் இது மகிழ்ச்சி தரும் விடயமாக இருக்கலாம் காரணம் ஒசாமாவால் அவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள். மற்றையோருக்கு இது சாதாரண விடயம் தான் என்றார்.ஏன் என்று கேட்டேன் அதற்கு அவர் சொன்ன பதில் இது. ஒசாமா ஒரு சர்வதேச தீவிரவாதியாக அடையாளம் காணப்பட்டவன். ஆகவே அவனுக்குள் பல திறமைகள் இருக்க வேண்டும் முக்கியமாக அமெரிக்க துருப்புகளின் கண்களில் படாமல் உலகெங்கும் அவர் சுற்றி வந்திருக்கிறான்.அப்படி இருக்கும் போது பாகிஸ்தானில் ஒரு வீட்டில் இருக்கும் போது அவன் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறான் என்றால் சந்தேகமேயில்லை அவனை யாரோ காட்டிக்கொடுத்துள்ளனர். இது காட்டிக்கொடுக்கும் மக்கள் அதிகரித்துள்ள உலகம். ஆகையால் இதை சாதாரணமாகத்தானே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது ? என்று திருப்பிக்கேட்டார்.
அது அவரது சொந்த கருத்து. இருப்பினும் மேற்குல நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாய் இருந்த ஒசாமா கொல்லப்பட்டு விட்டான். ஆனால் அவனது அமைப்பு பூரணமாக அழிக்கப்படவில்லை. அல்கைதா அமைப்பின் இரண்டாம் நிலை தலைவர் அய்மன் அல்சௌகாரி ஒசாமாவின் இடத்தை நிரப்ப காத்திருக்கிறார்.மேலும் தமது புனித யுத்தம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். இது அமெரிக்க உட்பட பல மேற்குலக நாடுகளுக்கு அபாய எச்சரிக்கை தான். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷை கசாப்பு கடைக்காரன் என்று சொன்னவர் தான் இந்த அல் சௌகாரி. தனது ஆட்சி காலத்தில் ஈராக் மீதான ஆக்கிரமிப்பால் உலகம் முழுக்க விமர்சிக்கப்பட்டவர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ். சதாம் உசேனை தூக்கிலிட்ட பிறகும் கூட ஈராக்கில் இரசாயன ஆயுதங்கள் இருப்பதை அவரால் கண்டு பிடிக்கமுடியவில்லை. மறுபுரம் இவரது ஆட்சி காலத்திலேயே அமெரிக்கா இரட்டை கோபுரத்தையும் அல்கைதாவின் தாக்குதலில் பறி கொடுத்தது. இரண்டு தடவைகள் பதவியிலிருந்தும் உருப்படியான எந்த வேலையும் செய்யாமல் போன புஷ்ஷின் இடத்திற்கு வந்த பராக் ஒபாமாவின் நுணுக்கமான வியூகத்திற்குக் கிடைத்த வெற்றியே ஒசாமாவின் மரணம்.
இனி ஒபாமா தான் சில காலங்களுக்கு ஹீரோவாக ஜோலிக்கப்போகிறார். சரி அதிருக்கட்டும் தலைப்பிற்கு இன்னமும் வரவில்லையே? இலங்கையிலும் சுமார் 20 ஆண்டு கால யுத்தத்தை தனது இரும்புப்பிடியினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவர் இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட பலரை அழித்து புலிகள் இயக்கம் ஒன்றே இன்று இலங்கைக்குள் இல்லை என்று கூறப்படுகிறது. புலிகள் இராணுவ ரீதியாக தோல்வியை தழுவியதும் ஜனாதிபதி ராஜபக்ச நாயகனாக வலம் வந்தார்.இரண்டாவது தடவை அவர் பெரும்பான்மையுடன் ஜனாதிபதி பதவியை கைப்பற்றவும் அவரது கட்சி பாராளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மை பெற்று அரசியல் அமைப்பை மாற்றுமளவிற்கு முன்னேறவும் அவருக்கு வலிமையை கொடுத்தது இந்த வெற்றி தான்.மறுபுரம் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் உட்படாமலில்லை. ஐ.நாவின் போர்க்குற்றச்சாட்டு அறிக்கைக்கு பதில் கொடுக்கும் கடப்பாட்டில் இலங்கை உள்ளது.
இலங்கை இராணுவத்திற்கும் விடுதலை புலிகளுக்குமிடையிலான யுத்தத்தின் இறுதி கட்டத்தில் பல பொது மக்கள் கொல்லப்பட்டதாகத் தான் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால் இது ஒபாமாக்களின் விடயத்தில் எல்லாம் எடுபடாது.காரணம் வியட்நாம்,ஈரான் மற்றும் ஆப்கான் மீதான ஆக்கிரமிப்பு காலத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நேசப்படைகள் செய்த அட்டூழியங்கள் பற்றி யார் தான் வாய் திறப்பார்கள்?
வாய் திறப்பவர்கள் இருக்கிறார்கள் ஆனால் யாராவது காட்டிக்கொடுக்க வேண்டுமே ? என்ன புரியவில்லையா? ஆரம்ப பந்தியை முதலிலிருந்து வாசிக்கவும்.