Friday, October 14, 2011

வெளிநாட்டு பறவைகளின் மோகத்தால் உள்ளூர் சிட்டுகுருவிகளை மறந்து விடுகிறோம்


காய்கறிகளில் இரசாயனம் கலந்த விஷங்களே இன்று உள்ளன.ஆகவே விஷம் நிறைந்த உணவுகளை உண்டு தான் இன்று பல மனிதர்கள் விஷமிகளாகி விட்டனர்.


தர்மம் குன்றி வரும் இக்காலகட்டதில் மக்கள் தங்களுக்கு முடிந்த வரை தான தருமங்கள் செய்ய வேண்டும். முக்கியமாக அடுத்த வேளை உணவுக்கு அல்லல்படுவோருக்கு அன்னம் வழங்க வேண்டும். தவங்களில் காலத்தை ட்டாமல் தரும நெறி சிந்தனையில் கவனத்தை திருப்ப வேண்டும். எவர் ஒருவர் தருமத்தை கடமையாக நினைத்து செய்கிறாரோ அந்த தருமம் அவரை காப்பாற்றும் இதுவே கீதையின் தத்துவம் என்கிறார் பிரம்மரிஷி காகபுஜண்டரின் சீடராகிய பிரம்மரிஷி மலை அன்னை சித்தர் இராஜ்குமார் குருஜி அவர்கள். மக்கள் நலன் கருதி அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சித்தர்கள் மகா யாகத்தின் போது பக்தர்களுக்கு அருளுரை வழங்கிய போது அவர் தரும நெறி சிந்தனைகளை பக்தர்கள் மனதில் விதைத்தார். மிகவும் எளிமையாகவும் அதே நேரம் மனதில் பதியும் வண்ணமும் அற்புதமான பல கருத்துக்களை அன்றைய தினம் அன்னை சித்தர் அவர்கள் வெளிப்படுத்தினார். அவரின் கருத்துக்களை தொகுத்து தருகிறோம்.
சக்தி பிறக்கும் நகரிலிருந்து ஒரு யாகம்அட்டன் மாநகரில் இந்த யாகத்தை நடத்துவது என்பது எமது கைகளிலோ அல்லது இந்த யாகத்தை ஒழுங்கு செய்தவர்களின் கைகளிலோ இல்லை. இது சித்தர்களின் எண்ணம் போல நடக்கிறது என்பதே உண்மை. காரணம் இந்த அட்டன் மாநகரின் அருகாமையில் அமைந்திருக்கும் மஸ்கெலியா நகருக்கு செல்லும் வாய்ப்பு எனக்குக்கிடைத்தது .இங்கு அமைந்திருக்கும் நீர் மின் நிலையங்களை அறிந்தேன். ஆஹா, இங்கிருந்து தான் இலங்கையின் பல பாகங்களுக்கு மின்சாரம் எனும் சக்தி செல்கிறது,மின்சாரத்தின் மூலம் பல இடங்களுக்கு வெளிச்சம் கிடைக்கிறது. ஆகவே இது சக்தி உருவாகும் பிரதேசம். இங்கிருந்து யாம் செய்யும் இந்த யாகத்தின் பயன் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்றடையும் .இது உண்மை. உள்ளன்போடு 210 சித்தர்களை இங்கு வரவழைத்து செய்யப்படும் இந்த யாகத்தில் எவரும் இலகுவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்காது. ஆகவே இங்கு வந்திருக்கும் அனைவரும் அனுக்கிரகம் பெற்றவர்கள்.
தானத்தின் பயன்
எத்தனை கோடி செல்வங்களை அள்ளிக்கொடுத்தாலும் எந்த வகையில் உதவிகளை வழங்கினாலும் அன்னதானத்திற்கு ஈடான தானம் எதுவும் கிடையாது இது சித்தர்களின் வாக்கு. ஆகவே அன்பர்களே உங்களுக்கு முடிந்த வரை அடுத்தவருக்கு அன்னதானம் செய்யுங்கள். இது கலியுகமாகும். படித்தவர்கள் படிக்காதவர்கள் செல்வந்தர்கள் ஏழைகள் அனைவருக்கும் வழிகாட்டுபவர்களாக சித்தர்கள் விளங்குகிறார்கள். சித்தர்கள் எந்த உருவிலும் நடமாடுவார்கள். பிச்சைகாரர்களாக ,பைத்தியம் பிடித்தவர்களாகக்கூட இருக்கலாம். எவரையும் அலட்சியம் செய்யாதீர்கள். எந்த சித்தராவது உங்களிடம் யாசகம் பெற்று விட்டால் நீங்கள் இந்த பிறவிப்பயனை அடைவீர்கள்.
உங்களிடம் வருபவர்கள் யார்?இது கலியுகம் என்று ஆரம்பத்திலேயே நான் கூறினேன்.இக்காலத்தில் செல்வந்தர்கள்,அரசியல்வாதிகள்,அதிகாரம் மிக்கவர்கள் எவரும் சாதாரண மக்களை தேடி வருவதில்லை மாறாக மக்களே அவர்களை தேடிப்போக வேண்டிய நிலைமை உண்டாகியுள்ளது. ஆனால் சித்தர்கள் அப்படியல்ல அவர்கள் சாதாரண மக்களிடத்தே வருவார்கள் அனுக்கிரகம் செய்வார்கள். ஆரம்பத்தில் 18 ஆக இருந்த சித்தர்களின் எண்ணிக்கை மீண்டும் மீண்டும் அவர்கள் இப்பூவுலகில் அவதரித்து 210 அவதாரங்களை எடுத்திருக்கிறார்கள். சித்தர்கள் இயற்கையை மிகவும் நேசிப்பவர்கள். உயிரினங்களிடம் அன்பு செலுத்துபவர்கள். ஆகவே எந்த உயிரையும் வதைப்பதோ அதை உணவாக உண்ணுவதோ சித்தர் வழிபாட்டுக்கு ஏற்பாகாது.
மோகம்யாருக்கு நாம் உதவி செய்ய வேண்டும் என்பது சிலருக்கு விளங்குவதில்லை. பல நாடுகளைச்சேர்ந்த பல அழகிய பறவைகளைப்பற்றி பேசுகிறோம்,ஆனால் எமக்கு அருகாமையில் இருந்து அடிக்கடி கீச்சிடும் அந்த சிட்டுகுருவிகளை மறந்து விடுகின்றோம். அருகில் உள்ள அந்த சிட்டுகுருவிகளுக்கு உணவிடுங்கள்,அருகிலுள்ள உயிர்களை ,மனிதர்களை நேசியுங்கள். தானம் செய்யும் போது உள்ளன்போடு செய்யுங்கள். பலனை எதிர்ப்பார்த்து செய்யாதீர்கள்.
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் என்று சித்தர் சிவபாக்கியர் கூறியிருக்கிறார். ஆக நாதன் எங்கிருக்கிருக்கிறார் என்ற சூட்சுமம் உங்களுக்கு விளங்க வேண்டும். நீங்கள் நாதனாக இருக்கிறீர்கள் ஆக உங்கள் மனதிலிருக்கும் தெய்வாம்சம் விழிப்புற வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் ? சித்தர்களை நாடுங்கள்.
ஓம் ஜெய் குருவே துணை என்ற மந்திரத்தை கூறுங்கள்
அப்போது உங்களுக்குரிய குரு தென்படுவார் அவரை பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்
விஷமும் விஷமிகளும்இன்றைய உலகம் மிகவும் உஷ்ணம் நிறைந்தது. விஞ்ஞானிகள் கூட மெய்ஞானத்தின் தெளிவை பெறாது அதை அறிய விரும்பாது உலக மாறுதல்களுக்கு பல காரணங்களை கூறி வருகின்றனர். உஷ்ணம் காரணமாகவே இன்று மனிதனுக்கு பல நோய்கள் உருவாகின்றன. நீங்கள் உண்ணும் ஒவ்வொரு உணவும் ஒரு மூலிகை தான் .எல்லா காய்கறிகளும் மூலிகைகளே. ஆனால் இன்று எல்லா காய்கறிகளிலும் விஷம் நிரம்பியே உள்ளது. வேதியல் இரசாயனங்கள் கலந்த காய்கறிகளையே நாம் இன்று உண்கிறோம். எனவே விஷம் நிறைந்த உணவுகளை உண்டு தான் இன்று மனிதர்களில் பலர் விஷமிகளாகி விட்டனர். ஆனால் உலகத்தில் நிகழவிருக்கும் மாற்றங்களை பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே சித்தர்கள் கூறி விட்டனர். 2010 இற்குப்பிறகு இந்த உலகத்தில் இயற்கை சீரழிகள் எப்படியெல்லாம் இடம்பெறும் என்பதை பிரும்மரிஷி காகபுஜன்டர் கூறி விட்டார்.

No comments: