Wednesday, January 18, 2012
நடராஜா டீச்சர்....! சில நினைவுகள்
நமது வாழ்க்கையில் சிறு வயது ஞாபகங்கள் என்பதை பொறுத்த வரை நம்மோடு அதிகமாக அன்போடு பழகியவர்கள் அல்லது வழிநடத்தியவர்கள் ,இவர்களுக்கு அப்பாற்பட்டு எம்மோடு கடுமையாக நடந்து கொண்டவர்களையும் மறக்க முடியாது. எனினும் பாடசாலை வாழ்க்கையில் எமக்கு கல்வி போதித்தவர்களில் எக்காலமும் மறக்க முடியாத ஒரு சிலரே மனதை தொட்டு செல்கின்றனர்.எங்கு கண்டாலும் மனம் நெகிழ்ச்சியடையும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்துபவர்கள் ஒரு சிலரே அந்த வகையில் அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியில் எ னக்கு அரிவரி சொல்லிக்கொடுத்த ஆசிரிய அன்னை தான் நடராஜா டீச்சர் என்று நாங்கள் வாய் ஓயாமல் அழைக்கும் ராஜேஸ்வரி டீச்சர். எனக்கு மிக நன்றாக ஞாபகம் இருக்கிறது . தரம் 2 மற்றும்தரம் 3 களில் எமது வகுப்பாசிரியராக இருந்து எமக்கு அற்புதமான கல்வியைப் புகட்டியவர். இந்த சின்ன வகுப்பில் நடந்த சம்பவங்கள் எப்படி ஞாபகம் இருக்கும் என்று பலரும் நினைக்கக்கூடும் அதற்கு வழிசமைத்தது எங்கள் கல்லூரிதான். மிகச்சிறந்த ஒழுக்க பண்புகளை போதித்து ஆசிரியர்களை தெய்வமாக மதிக்கக் கற்று கொடுத்த அதே நேரம் எவருக்கும் கிடைக்காத அற்புதமான ஆசிரியர்களை பெற்று ஒரு பொற்காலத்தை உருவாக்கித்தந்தது எமது கல்லூரி. நடராஜா டீச்சர் ... ஒரு ஆசிரியையாக அல்லாது தனது பிள்ளைகளாக எம்மை வளர்த்த விதம் பசுமரத்தாணியாக பதிந்துள்ளது. எமக்கு சைவசமய பாடம் எடுக்கும் நேரம் தேவாரத்தை ஒரே மூச்சில் நான் கூறுவதை கேட்டு நல்ல பிள்ளை என்று கூறியதை எப்படி மறக்க முடியும் ? எவரிடமும் பேதம் காட்டாது அனைவரையும் ஒரே பிள்ளைகளாக கருதி பாடம் போதித்தார். தரம் 5 இற்குப்பிறகு நாம் ஆரம்பப்பிரிவு கட்டிடத்தை விட்டு பிரதான கல்லூரி மண்டபத்திற்கு செல்லும் போது கண்கலங்கி டீச்சர மறந்துடாதிங்கடா இங்க வந்து பார்க்கனும் சரியா என சொன்ன காட்சி மனதை விட்டு அகல மறுக்கிறது. உயர்கல்வி கற்று பாடசாலையை விட்டு பிரிந்து சென்று பிறகும் எங்கு கண்டாலும் அதே பாசப்பிணைப்போடு கதைக்கும் பாங்கு ஒரு சில ஆசிரியர்களுக்கு உரித்தானது . அதில் முதன்மையான இருவரில் ஒருவர் நடராஜ் டீச்சர் மற்றவர் மரியதாஸ் டீச்சர். நான் கடமையாற்றும் வீரகேசரி காரியாலத்திற்கு வருகை தந்து பெருமை பொங்க என் மாணவன் நீ ,உன்னுடைய ஆக்கங்கள் ஒன்றை கூட நான் வாசிக்காமல் இருந்ததில்லை என்று சொல்லிய அந்த நாளை எனக்கு மறக்க முடியாது டீச்சர். நீங்கள் மரித்தாலும் உங்கள் ஆசிர்வாதங்கள் எங்களை மென்மேலும் உயர்த்தும்.
அரிவரி சொல்லிக்கொடுத்தாய் அன்னையாய் விளங்கினாய்உன்னால்அறிவேற்றங்கொண்டோர் கண்டு உளம் மகிழ்ந்தாய்என் பிள்ளைகள் என்று சொல்லி மனம் பூரித்தாய்இன்று எம்மை விட்டு நிரந்தரமாய் பிரிந்து விட்டாய் உன்னால்ஏற்றம் கண்ட நாம் இப்போது கண்ணீர் துளிகளைகாணிக்கை மாலைகளாக தர வேண்டிய சூழல் !உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கின்றோம்துயரங்களுடன்,
அன்பு மாணவன்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Thank you Sivakumaran for writing about my mother - Bawani
Post a Comment