Sunday, February 22, 2009

பற்றிக்கொண்டோரும் பறிகொடுத்தோரும்

இடம்பெற்று முடிந்த மத்தியமாகாணசபை தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் பாரிய அளவிலான விமர்சனங்கள் எழாமலிருப்பதற்குக்காரணம் இந்த முடிவுகள் எதிர்ப்பார்க்கப்பட்டவை என்பதுதான்.ஒரே சமூகத்திற்கு சேவை செய்வதற்கு அச்சமூகத்தை கூறு போட்டு பிரித்து அதே சமூகத்தைச்சேர்ந்தவர்கள் வெவ்வேறு அணிகளில் திரண்டு நின்றால் பெறுபேறுகள் எப்படியிருக்கும் என்பதை சிறுகுழந்தை கூட சொல்லி விடும். இதைத்தான் இம்முறை இடம்பெற்ற தேர்தல் முடிவுகள் காட்டி நிற்கின்றன. அதே வேளை எதிர்காலத்தில் மலையகத்தில் இருந்து அரசியல் பிரதிநிதித்துவம் ஒன்றை பெறுவதற்கு எந்த வகையில் எப்படி வியூகங்கள் வகுக்க வேண்டும் என்பதை இத்தேர்தல் முடிவுகள் உணர்த்தி நிற்கும் அதே வேளை தமிழ் பிரதிநிதித்துவம் எதிர்நோக்கியுள்ள அபாயகரமான சூழ்பிலையையும் இத்தேர்தல் முடிவுகள் காட்டி நிற்க தவறவில்லை.
மேலும் மலையகத்தின் பிரதான கட்சிகளான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி என்பன தமது ஸ்திர அரசியல் நிலை குறித்து கடுமையாக சிந்தித்து செயலாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என்றே கூற வேண்டும்.அரசாங்கத்திற்கு வேண்டுமானால் கடந்த முறையை விட இது பெருவெற்றி என்றுக்கூறலாம் ஆனால் குறிப்பாக பெருந்தோட்ட தமிழ் சமூகத்திற்கு என்ன கிடைத்துள்ளது என்பது குறித்து பார்த்தல் அவசியம். அதை விட இம்முறை மத்திய மாகாணத்தில் தேசிய அடையாள அட்டை பிரச்சினை மற்றும் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை வாக்களிக்க முன்வராதோரின் நிலை என்பன மிகவும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்று.
காரணம் இக்குறிப்பிட்ட பிரச்சினைகளை மட்டும் தெரிந்தெடுத்து தீர்த்திருந்தால் எந்த கட்சியாவது மேலதிகமாக 4 ஆசனங்களை சரி பெற்று தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரித்திருக்கலாம் என்பதே தேர்தல் ஆய்வுகளின் முடிவு.காரணம் மத்திய மாகாணத்தின் கண்டி ,மாத்தளை,நுவரெலியா மாவட்டங்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தொட்டுள்ளது.மேலும் மத்திய மாகாணத்தில் 5இலட்சத்து 75 ஆயிரம் பேர் பல்வேறு காரணங்களுக்காக வாக்களிக்கவே தவறியுள்ளதையும் இங்கு சுட்டிக்காட்டல் அவசியம்.இதில் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களின் தொகையே இரண்டு இலட்சத்துக்கும் மேல்.
பறிகொடுத்தவர்கள்இ.தொ.கா மற்றும் மலையக மக்கள் முன்னணி என்ற இரண்டு பிரதான கட்சிகளும் இம்முறை கனிசமான வாக்குகளை தேர்தலில் இழந்துள்ளன.அதிலும் நுவரெலியா மஸ்கெலியா தொகுதியில் மலையக மக்கள் முன்னணி நிறுத்திய மூன்று வேட்பாளர்களும் படுதோல்வியை தழுவியுள்ளனர்.இம்முறை மத்திய மாகாணசபையில் ஒரு ஆசனத்தையும் இக்கட்சி பெறவில்லை. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணி இரண்டு ஆசனங்களையாவது பெறும் என்று பலரும் எதிர்ப்பார்த்திருந்த வேளை அதிர்ச்சியளிக்கும் முகமாக தேர்தல் முடிவுகள் அமைந்து விட்டன. கட்சியில் தலைதூக்கியுள்ள உட்பூசல்கள் தலைமைத்துவ போட்டிகள் என்பன தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்துள்ளது என்றால் மிகையாகாது. இ,தொ.காவிற்கு அடுத்தபடியாக மலையக மக்களின் வாக்கு வங்கியை தன் வசம் வைத்திருந்த மலையக மக்கள் முன்னணியின் நிலை கவலைக்குரியது. கட்சியின் தலைவர் பெ.சந்திரசேகரன் இத்தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது அரசின் பங்காளியாக இருந்து கொண்டு தனது ஆதரவை குறிப்பிட்ட பகுதியில் இழந்துள்ளார். மலையக மக்கள் முன்னணியின் கோட்டையாக கருதப்படும் தலவாக்கலை மற்றும் அதனை அண்டியுள்ள தோட்டப்பகுதிகளில் கூட கட்சிக்கு ஆதரவு இல்லை என்பது சிந்திக்க வேண்டிய விடயம். மேலும் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பிரதான வேட்பாளர்கள் தம்மிடையே ஒற்றுமையை பேணாதது துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள்.
இ,தொ.காவானது தான் நிறுத்திய ஆறு வேட்பாளர்களில் மூன்று பேரை தட்டுத்தடுமாறி காப்பாற்றியுள்ளது. மலையகத்தின் அசைக்கமுடியாத சக்தியாக விளங்கிய இ.தொ.கா இம்முறை வெற்றிலை சின்னத்தில் கேட்டதால் தான் வாக்குகள் குறைந்துள்ளன என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய பேச்சுக்கள் அல்ல. காரணம் இதில் போட்டியிட்ட சிரேஷ்ட உறுப்பினர் வீ.ராதாகிருஷ்ணன் 18 ஆயிரம் வாக்குகளையே நெருங்கியுள்ளார்.மத்தியமாகாணசபையில் தமிழ் கல்வி அமைச்சராக இருந்து சிறந்த சேவையாற்றியவர் என்ற பெருமையுட்பட நுவரெலியா பிரதேச சபை தலைவராகவும் இருந்து இப்பிரதேச மக்களின் அபிமானத்தை வென்றவர்.ஆகவே சிறப்பான சேவை செய்த ஒரு மக்கள் பிரதிநிதிக்கு தேர்தல் சின்னம் ஒரு பொருட்டே அல்ல.இதை ஏனைய கட்சி வேட்பாளர்கள் நிரூபித்துள்ளனர்.இவருடன் போட்டியிட்ட அனுஷா சிவராஜா.சக்திவேல் .சிங் பொன்னையா ஆகியோர் தோல்வியை தழுயுள்ளனர்.எனினும் போனஸ் ஆசனங்கள் இரண்டில் இ.தொ.காவில் போடியிட்ட ஒருவருக்கு ஒரு ஆசனம் கிடைக்கக்கூடிய சாத்தியகூறுகள் உள்ளன.அனேகமாக சிங்.பொன்னையாவிற்கு ஒரு ஆசனம் கிடைக்கலாம். இதே வேளை கண்டியில் கடந்த முறை இருந்த பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டுள்ளது.எனினும் நுவரெலியா மாவட்டத்தில் இ.தொ.கா தான் நிறுத்திய ஆறு பேரும் ஏன் வெற்றி பெறவில்லை என்பதை ஆராய்ந்து பார்த்தல் அவசியம். காங்கிரஸ் மீது பல்வேறு தரப்பினரும் வெறுப்பு கொள்ள என்ன காரணம் குறிப்பாக இக்கட்சியின் வாக்கு வங்கிகளாக செயற்பட்ட கொட்டகலை, அட்டன்,பொகவந்தலாவை,மஸ்கெலியா,நுவரெலியா ஆகிய இடங்களில் ஏன் வாக்குள் கிடைக்கவில்லை என்பது விவாதத்திற்குரியது. பிரசார நடவடிக்கைகளுக்காக அமைச்சர் ஆறுமுகன் நியமித்தவர்களில் ஒரு சாரார் அதிகாரத்தை தமது கைகளில் எடுத்து கொண்டு மக்களுக்கு வெறுப்பூட்டும் விதத்தில் நடந்து கொண்டமையை பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.இதுவே கட்சிக்கும் அவப்பெயரை சம்பாதித்துக்கொடுத்துவிட்டது என்பது பலரது வாதம். இந்த விடயங்கள் அமைச்சர் ஆறுமுகனை எட்டியதா என்பது கேள்விக்குறியே. சில பிரச்சினைகளை எடுத்துக்கூறுவதற்கு அமைச்சர் ஆறுமுகனை குறிப்பிட்ட சாரார் நெருங்க விடவில்லை என்பது மற்றுமொரு சாராரின் குற்றச்சாட்டு. இவ்விடயத்தில் அமைச்சர் சரியான தீர்மானங்களை எடுக்காவிடின் எதிர்காலத்தில் இ.தொ.கா சார்பில் நிறுத்தப்படும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கும் ஆபத்து ஏற்படப்போகின்றது என்பதே உண்மை.
அடுத்ததாக முன்னாள் கல்வி அமைச்சராக இருந்த எஸ் .அருள்சாமியின் தோல்விகுறித்து பார்த்தல் அவசியம்.தேர்தலுக்கு முன்பாகவே அருள்சாமிக்கு கணிசமான வாக்குகள் கிடைப்பது கடினம் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழத்தொடங்கி விட்டது என்னவோ உண்மை. எனினும் தனது பதவியின் மூலம் அருள்சாமி யாரை வசீகரித்திருக்கிறார் என்ற கேள்வி எழும்போது விடை பூச்சியமாகவே உள்ளது. மேலும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் இவர் தீவிரமாக ஈடுபடவில்லை என்பது மற்றுமொரு விடயம். கல்விச்சேவைகள் மூலம் பலருக்கு வாய்ப்புகள் பெற்றுக்கொடுத்திருக்கிறார் என்றாலும் அவை உரியோரை சென்றடைந்ததா என்பது தேர்தல் பெறுபேறுகளைப்பார்க்கும் போது தெரிந்துவிட்டது.
ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட அம்பகமுவ பிரதேச சபை முன்னாள் தலைவரும் மாகாணசபை உறுப்பினருமான ரவீந்திரன் தோல்வி கண்டு தனது மாகாணசபை உறுப்புரிமையையும் இழந்துள்ளார். தொழிலாளர் தேசிய சங்கத்துடன் இணைந்து இவர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் இவருக்கு வாக்குகள் குறைவாகவே கிடைத்துள்ளன. எனினும் இம்முறை போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களில் இவருக்கு மட்டுமே உள்ள தனிப்பெருமை என்னவென்றால் கட்சி மாறாது தொடர்ச்சியாக ஐக்கிய தேசிய கட்சியிலேயே அங்கம் வகித்து வரும் நபர் என்பதாகும்.
பற்றிக்கொண்டோர்.இம்முறை தேர்தலில் பல புதிய முகங்கள் அதிலும் மலையகமக்களுக்கு புதிய முகங்கள் தமது வெற்றியை பதிவு செய்துகொண்டுள்ளன.இதில் விசேடமாக குறிப்பிடப்படவேண்டியவர் பிரகாஷ் கணேசன். கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது இளைய சகோதரர் பிரகாஷ் கணேசனை ஜனநாயக மக்கள் முன்னணி சார்பாக ஐக்கிய தேசிய கட்சியில் மலையகத்தில் முதல் தடவையாக களமிறக்கி அதில் வெற்றியும் கண்டுள்ளார். உண்மையில் தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என முதுமொழியை அண்ணன் உடையான் படைக்கு அஞ்சான் என மாற்றி அமைக்கும் அளவிற்கு மனோ கணேசனின் குரலுக்கு அவரது சகோதரர் பிரகாஷ் கணேசனுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன. 38 ஆயிரம் வரையான வாக்குகளை பெற்றுள்ள பிரகாஷ் கணேசன் அரசியல் பின்புலம் முள்ள குடும்பமொன்றிலிருந்து வந்தாலும் மலையக அரசியலுக்கு அவர் புதியவர். தனது நேர்மை அரசியலுக்குக்கிடைத்த வெற்றி என மனோகணேசன் பெருமிதப்பட்டாலும் அதை தொடர்ச்சியாக கட்டிக்காக்க வேண்டிய கடப்பாடு அவருக்கு உண்டு. தனது முதல் வரவின் மூலம் மலையக அரசியலில் கால் பதித்துள்ள பிரகாஷ் கணேசன் இங்குள்ள மக்களுக்கு தனது சேவையை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
அடுத்ததாக தொழிலாளர் தேசிய சங்கத்தலைவர் திகாம்பரம் மற்றும் அவரின் வர்த்தக பங்காளி உதயா ஆகியோர் ஆரவார வெற்றியை பற்றிக்கொண்டனர்.திகாம்பரத்தின் வெற்றி எதிர்ப்பார்க்கப்பட்டது தான்.இம்முறை அச்சு ஊடகங்களை தனது பிரசார செயற்பாடுகள் விளம்பரங்கள் செய்திகள் என ஆக்கிரமிப்பு செய்தவர். எனினும் நுவரெலியாவுக்குப்புதியவரான உதயாவின் வெற்றி குறிப்பிடத்தக்கது. தான் மக்களுக்காக அரசியல் செய்ய மட்டுமே தேர்தலில் போட்டியிடுவதாக கூறியுள்ள திகாம்பரம் ஏனைய சலுகைகள் தனக்கு தேவையற்றவை என்று முழங்கியுள்ளார். இதே வேளை பிரதான கட்சிகள் இரண்டிற்கும் சவாலாக இருக்கவும் தொழிலாளர் தேசிய சங்கம் தவறவில்லை. இவ்வெற்றி மூலம் தனது பாராளுமன்ற பிரவேசத்தையும் உறுதிபடுத்தியுள்ளார் திகாம்பரம். எனினும் பணத்தை இறைத்து மக்களை கவர்ந்து இவர் பெற்ற வெற்றி என விமர்சனங்கள் எழுந்தாலும் எதிர்காலத்தில் இவர் தனக்கு வாக்களித்த மக்களுக்கு செய்யப்போகும் சேவைகளிலேயே விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கமுடியும். இதை இவர் எதிர்கட்சியிலிருந்து எப்படி செய்யப்போகிறார் என்பது பலரின் கேள்வி.
இதே வேளை அரசாங்க பக்கம் இருந்து ஐக்கிய தேசிய கட்சியின் மூலம் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் முன்னணியின் பொது செயலாளர் எஸ்.சதாசிவம் மற்றும் கணபதி கனகராஜ் ஆகியோர் சத்தமில்லாத வெற்றியை பற்றிக்கொண்டுள்ளனர். ஜனாதிபதியின் ஆலோசகராக செயற்பட்டவர் சதாசிவம்.மறுபுறம் கணபதி கனகராஜ் மின்சக்தி எரிசக்தி அமைச்சின் மலையக இணைப்பாளராக செயற்பட்டவர். எனினும் இவர்களின் வெற்றி பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.காரணம் இவர்களும் தேர்தல் பிரசார நடவடிக்ககைளில் ஆராவாரம் காட்டவில்லை ஊடகங்களில் கூட இவர்களின் தேர்தல் கால செய்திகள் பெரிதாக இடம்பெறவில்லை.எனினும் கட்சியை கட்டியெழுப்ப இவ்வெற்றி இவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

அதை விட இம்முறை தேர்தலில் சுட்டிக்காட்டப்படவேண்டிய ஒரு விடயம் நுவரெலியா மாவட்டம் முழுக்க பிரவாகம் எடுத்து ஓடிய மது பற்றியது. எல்லா கட்சிகளுமே இதில் பங்கெடுத்திருந்தன என்பது முக்கிய விடயம். இப்பகுதிகளில் தற்போது குடிநீர் பஞ்சம் நிலவிவருகிறது,ஆனால் மது போத்தல்களுக்கு மட்டும் தட்டுப்பாடில்லை. ஆரம்பத்தில் இவ்விவகாரத்தில் வயது போன தோட்டகமிட்டி தலைவர்களை இளைஞர்கள் குறை கூறி வந்தனர்.ஆனால் இப்போது பல தோட்டப்புறங்களில் தோட்டக்கமிட்டி தலைவர்களாக இருந்து வரும் இளையோரே தேர்தல் காலத்தில் சாராயப்பங்கிடுதலை முன்னின்று செயற்படுத்தினர்.மலைகத்தில் மாற்றம் வர வேண்டும் என்று முழங்கியவர்களும் தாராளமாக இதற்கு செலவழித்தனர். மாற்றம் என்பது தடுமாற்றம் தானா என்று கேட்கத்தோன்றுகின்றது.
மத்தியமாகாண தேர்தல் முடிவுகளை வைத்துப்பார்க்கும் போது சிறுபான்மையின பிரதிநிதித்துவம் குறித்து கேள்வி எழுப்பாமல் இருக்க முடியாது. இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் அளவில் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டங்களை வகுத்துள்ளதாக தெரியவருகிறது.அதற்கு முன்பதாக மலையக மக்களின் மற்றுமோர் பிரதேசமான ஊவா மாகாணசபையும் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியகூறுகள் அதிகரித்துள்ளன. சப்ரகமுவ மாகாணசபை தேர்தல் முடிவுகள் மத்திய மாகாணசபை தேர்தலுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று கூறப்பட்டாலும் எவரும் அது குறித்து அக்கறை கொண்டதாக தெரியவில்லை.தற்போது மத்தியமாகாணசபை தேர்தல் முடிவுகள் சரி ஊவா மாகாணசபை தேர்தலுக்கு பலருக்கு பல பாடங்களை கற்றுக்கொடுக்கட்டும்.
சிவலிங்கம் சிவகுமாரன்

நன்றி: வீரகேசரி வாரவெளீயீடு (1-02-2009)

Friday, December 5, 2008

இது உண்மையா?



நீண்ட நாட்களுக்குப்பிறகு பதிவொன்றை இட சந்தர்ப்பம் கிடைத்தாலும் இப்படியும் நடக்கின்றதா என்று அதிர்ச்சியிலும் பயத்திலும் எம்மை உறைய வைக்கும் விடயமொன்று தான் கிடைத்தது. எனது தோழி டயனா ஜோர்ஜ் அனுப்பி வைத்துள்ள மின்னஞ்சலின் உபயம் தான் இந்த விடயம். ரஷ்யாவின் ஒரு இடத்தில் மனித உறுப்புகளை தரம்பிரித்து அதை தேவைக்கேற்றாற்போல் விற்பனை செய்யும் ஒரு மனித பாகங்கள் தொழிற்சாலை இயங்கி வருகிறதாம்.சரி இந்த மனித பாகங்களைப்பெற உடம்புகளை எங்கு இவர்கள் பெறுகிறார்கள்? மது அருந்தி விட்டு வீதி விபத்துக்களில் மரணமாவோர், தனியாக வசித்து வருவோரில் குளிர்காலங்களில் மரணிப்போர், காரணம் குறிப்பிட முடியாத மரணங்களில் சிக்குவோர், உரிமை கோரப்படாத அனாதை சடலங்கள், இவ்வாறு இந்த தொழிற்சாலைக்கு கிடைக்கும் உடல்களின் பாகங்களில் சில பல்கலைகழகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றதாம்.கால் எலும்புகள் விசேடமாக அயர்லாந்து மற்றும் ஜேர்மனிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.காரணம்? இவ்வெலும்புகளின் மூலம் தயாரிக்கப்டும் ஒரு வகை பசை தான் பற்குழிகளை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படுகின்றனவாம். இந்த பசை ஐரோப்பிய நாடுகளில் பிரபலமானதாகும்.ஆகவே நண்பர்களே நீங்கள் உங்கள் குடும்பம் சகிதம் வெளிநாடுகளுக்குச்செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும் என்கிறது இந்தத்தகவல். இலங்கையில் கூட அண்மையில் குளியாபிட்டிய பகுதியில் இறந்து போன ஒரு குழந்தையின் உடம்பிலிருந்து பல உள்ளுறுப்புகள் மாயமாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனக்கு வந்த இந்தப்படங்களை பார்த்தபோது ஏதோ கிராபிக்ஸ் வேலை போன்றும் தெரியவில்லை.எவ்வளவு ஆறுதலாக வேலைப்பார்க்கின்றார்கள் பாருங்கள். இன்னொரு சந்தேகமும் தோன்றுகிறது.முக்கியமான உறுப்பொன்று தேவையென பெருந்தொகை பணம் தருவதாக எவரும் இந்த தொழிற்சாலைக்கு ஓடர் கொடுத்தால் இங்கு பணியாற்றுபவர்களை கொலை செய்து விட்டு அதை எடுத்தாலும் யாருக்குத்தெரியப்போகிறது?

Monday, November 17, 2008

லோஷனின் கைது

வெற்றி எப் எம் நிகழ்சி முகாமையாளரும் அறிவிப்பாளருமான எனது இனிய நண்பன் லோஷனின் கைதானது இலங்கையில் சர்வசாதாரணமாகிப்போய்விட்ட ஊடக அடக்குமுறை மற்றும் அது சார்ந்த கைதுகளின் வரிசையில் இடம்பிடித்துவிட்ட ஒரு சம்பவமாகிப்போய்விட்டதில் வருத்தம் அதிகம் தான்.ஆனால் அதை விட வருத்தம் என்னவென்றால் ஒரு சிரேஷ்ட தமிழ் அறிவிப்பாளரின் கைது தொடர்பில் தமிழ் ஊடகங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லையே என்பதுதான். லோஷன் ஆரம்பத்தில் சக்தி எப்.எம்மில் பணிபுரிந்து அதற்குப்பின்னர் சூரியன் எப்.எம்மில் இணைந்து தனது அசாத்திய சகலதுறை திறமையினால் சூரியன் எப்.எம் நிகழச்சி முகாமையாளராக உயர்ந்தவர்.தற்போது வெற்றிகரமாக வெற்றி எப்.எம்மில் பொறுப்பான பணியில் இருக்கும் போது இப்படி நடந்து விட்டது.இலங்கையில் ஊடகத்துறையினர் கைது செய்யப்படுவது அல்லது தாக்கப்படுவது கொலைசெய்யப்படுவது என்பது அண்மைக்காலமாக சாதாரணமாகிவிட்ட விடயம். இது தொடர்பில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஊடக அமைப்புக்கள் ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டு விட்டு கோட்டை புகையிரத நிலையம் அருகில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்துவதோடு முடிந்து விடும். இலங்கை ஊடகத்திற்கு இது ஒரு சாபக்கேடான காலம் போல் உள்ளது.எனினும் ஊடக சொந்தங்கள் அனைவரும் ஒன்றிணைந்து லோஷனின் விடுதலைக்காக பிரார்த்திப்பதை தவிர வேறு வழியில்லை. ஊடகத்தாண்டவம் ஊழித்தாண்டவமாக சற்று பொறுத்துத்தான் இருக்கவேண்டியுள்ளது.கவலை வேண்டாம் லோஷன் வெற்றி பெறுவீர்கள் நீங்கள்.

Wednesday, November 12, 2008

தமிழ் சிற்பிகளால் நிர்மாணிக்கப்பட்டு வரும் புத்த பெருமானின் சிலை


முன்னுரை: இலங்கையில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு மத்தியில் அண்மைக்காலமாக இராணுவத்தளபதி உட்பட அரசாங்கத்தரப்பு அமைச்சர்கள் பலர் இலங்கை ஒரு பௌத்த நாடு என்றும் அது சிங்களவர்களுக்கே சொந்தம் என்றும் கூறி வருகின்றனர். இந்நிலையில் சிங்களவர்கள் பூஜிக்கும் புத்த பெருமானின் சிலை நிர்மாணம் பற்றிய செய்து ஒன்று எனக்குக்கிடைத்தது.மேற்படி சிலை நிர்மாணிக்கப்பட்டு வரும் விகாரையின் பிரதம சாதுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இச்சிலை பற்றிய பல தகவல்கள் படங்களை அனுப்பும்படி கூறினேன். அதைக்கொண்டு இக்கட்டுரையை வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வரைந்தேன். இந்த விடயத்தை நான் எழுத எடுத்துக்கொண்டதற்கு பிரதான காரணமாக அமைந்த விடயங்கள் பல ,அதில் முக்கியமாக நான் கூற விழைந்தது என்னவென்றால் எந்த தமிழர்களை வந்தேறு குடிகள் என்றும் இலங்கையில் அவர்களுக்கு இடமில்லை என்றும் இனவாத சக்திகள் குறிப்பிடுகின்றனவோ அந்த இனவாத சக்திகள் பூஜிக்கும் புத்த பெருமான் சிலையை நிர்மாணிப்பது ஒரு தமிழன் தான். இது அவர்களுக்கு விளங்குமா?


*சமாதி நிலையில் அமைந்தவாறு செதுக்கப்பட்டு வரும் இச்சிலை 67.5 அடி உயரத்தில் அமையுமாறு நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.


*இந்தியாவின் பிரபல சிற்பகலாமணி பத்மஸ்ரீ எம்.முத்தையா ஸ்தபதியின் ஆலோசனையின் கீழ் அவரது குழுவினர் இச்சிலையை செதுக்கி வருகின்றனர்.



* 2001ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் உள்ள புத்தர் சிலை சேதமாக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாகவே இச்சிலை உருவாக்கும் எண்ணம் இப்பகுதி கிராம மக்களுக்கு எழுந்துள்ளது.






இலங்கையில் பௌத்த மதம் வேரூன்றிய பிறகு பௌத்தத்தை வளர்த்தெடுப்பதற்காக பண்டைய மன்னர்கள் நிர்மாணித்த விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகளை நாம் இன்று கண்குளிர கண்டு வருகிறோம். பண்டைய காலத்திலிருந்து அதாவது கி.பி 1235 ஆம் ஆண்டுக்குப்பிறகு அனுராத புரம் ,பொலனறுவை யுகங்கள் என அழைக்கப்பட்ட காலங்களே பௌத்தம் தலை தூக்கிய பொற்காலம் என குறிப்புகள் சொல்கின்றன. 12 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்திலும் மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்ட அவுகன புத்தர் சிலை, வெல்லவாயபுதுருவாகல சிலை, புத்தலமாளிகாவில சிலை, என்பவற்றை உதாரணங்களாகக்கூறலாம்.பண்டைய கால பௌத்த பாரம்பரியங்களை எமக்கு எடுத்துக்கூறும் வகையில் அமைந்துள்ள புத்தர் சிலைகள் மற்றும் விகாரைகள் என்பன இலங்கையின் பௌத்த வரலாற்றையும் பண்டையகால கட்டிடகலை நுணுக்கங்களையும் எமக்கு பாறை சாற்றுகின்றன.
இந்நிலையில் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மிக உயர்ந்து கருங்கல் சமாதி புத்தர் சிலை பற்றிய தகவல்களை இங்கு குறிப்பிடுதல் அவசியம். குருணாகல் பகுதியில் அமைந்துள்ள ரம்படகல,ரிதிகமமொனராகலை விகாரையில் அமைந்துள்ள கருங்கற்பாறையில் ஒரு சமாதி நிலை புத்தர் சிலை நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. 2001 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பணிகள் தற்போது முடிவடையும் கட்டத்தில் உள்ளதாக மேற்படி விகாரையின் பிரதம குருவான வணக்கத்துக்குரிய அமரமௌலி தேரோ எமக்குத்தெரிவித்தார்.




சிலை செதுக்கப்பட முன்னர் கருங்கற் பாறையின் உருவம்





இதில் குறிப்பிடப்படவேண்டிய முக்கிய அம்சம் என்னவெனில் இச்சிலையை இந்தியாவின் பிரபல சிற்பக்கலைஞரான பத்மஸ்ரீ சிற்ப கலாமணி எம்.முத்தையா ஸ்தபதியின் ஆலோசனையின் பேரில் அவரது குழுவினரே நிர்மாணித்து வருகின்றனர். சமாதி நிலையில் அமைந்தவாறு செதுக்கப்பட்டு வரும் இச்சிலை 67.5 அடி உயரத்தில் அமையுமாறு நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இச்சிலையை நிர்மாணிப்பதற்கு இரண்டரை கோடி ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தாலும் இவ்விடத்தை சீர்படுத்தி தனியான தியான மண்டபங்கள் அமைப்பதற்கு மேலும் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாவரை செலவாகும் என பிரதம குரு அமரமௌலி தேரோ தெரிவிக்கிறார். இது குறித்து அவர் கருத்துத்தெரிவிக்கையில் செலவீனத்தை பார்க்காமல் இந்த புத்தர் சிலையை நிர்மாணிப்பதற்குறிய வேலைகளை சிற்பக்குழுவினர் 2002 ஆம் ஆண்டு மனத்திடத்துடன் ஆரம்பித்து விட்டனர்.


வரலாற்றில் இடம்பிடிக்கப்போகும் இச்சிலை நிர்மாணப்பணிகளுக்காக அப்போதைய இந்தியத்தூதுவர் நிருபமா ராவ் ரூபா 25 இலட்சத்தை மனமுவந்து கொடுத்துதவினார். மேலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் ஒரு இலட்சததையும்,மலீக் சமரவிக்ரம ரூபா 5 இலட்சத்தையும், மற்றும் தாராள சிந்தையுடையோர் பலர் இந்நிர்மாணப்பணிகளுக்காக மனமுவந்த நிதியுதவி செய்துள்ளனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 25 இலட்சம் ரூபா கொடுத்துதவியதையும் எம்மால் மறக்க முடியாது.


இச்சிலை பற்றி குறிப்பிட்டுக்கூறவேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால் பண்டை காலத்திலிருந்து அதாவது 12 ஆம் நூற்றாண்டுக்கு பிற்பட்ட காலத்தில் வெளிநாட்டவரின் ஆதிக்கத்தின் கீழ் அக்காலப்பகுதியில் ஏற்பட்ட சமூக ,பொருளாதார மாற்றங்களினால் எமது பண்பாடு கலாசாரத்துடன் இணைந்து கலைகளும் படிப்படியாக வீழ்ச்சியுறத்தொடங்கின. சுதந்திரத்துக்கு பிற்பட்ட காலப்பகுதியில் குறிப்பிட்டுக்கூறப்படவேண்டிய கலைப்படைப்பு என்றால் 1950 களில் நிர்மாணிக்கப்பட்ட விகேரஹேன புத்தர் சிலையைக்குறிப்பிடலாம். இச்சிலையானது கருங்கல்லில் நிர்மாணிக்கப்படாதபோதும் சுதந்திரத்தின் பின்னர் உருவாகிய எமது கலைப்பண்பாட்டை எடுத்துக்கூறும் குறிப்பிடத்தக்க ஒரு வராற்று சின்னமாக விளங்குகிறது. இதற்குப்பின்னர் எமது இலங்கை தீவில் பரவலாக இச்சிலையை ஒத்த சிலைகள் ,கருங்கல்லில் செதுக்கப்படாத சிலைகள் என்பன எழுந்தள்ளதை அவதானிக்கமுடிகின்றது.


தற்போது எமது வித்தியா சாகர பிரிவென விகாரையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சமாதி நிலை புத்தர் சிலை அமைக்கப்படுவதற்கு பின்புலமாய் இருந்த காரணங்களை இவ்விடத்தில் கூறுவது சாலச்சிறந்தது என்றே நான் கருதுகிறேன்.2001 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள பாமியன் புத்தர் சிலைகள் தலிபான்களால் சேதமாக்கப்பட்ட சம்பவம் எமது கிராமத்தில் உள்ள மக்களை வெகுவாக பாதித்தது.இக்கசப்பான நிகழ்வினால் ஏற்பட்ட மனத்தாக்கத்தின் வெளிப்பாடே இம்மக்கள் திடசங்கற்பத்துடன் இக்கருங்கல் புத்தர் சிலை செதுக்கும் பணிக்கு ஆதரவளிக்க ஏதுவாயிற்று. இச்சிலையை நிர்மாணிக்கும் வேலைப்பணிகளுக்கு இக்கிராம மக்கள் அடிக்கடி தமது உடல் உழைப்பை வழங்கி அருஞ்சேவையாற்றி வருகின்றனர்.மேலும் சிலர் பண உதவிக்கு அப்பாற்பட்டு இப்பணிக்குத்தேவையான இயந்திர உபகரணங்களையும் வழங்கி உதவி செய்து வருகின்றனர் என்று கூறினார்.
எதிர்கால செயற்பாடுகள்இக்கருங்கல் சமாதி புத்தர் சிலை தொடர்பான எதிர்கால செயற்றிட்டங்கள் குறித்து அமரமௌலி தேரர் கூறுகையில் ‘இச்சிலை செதுக்குவதற்கு ஒதுக்கப்பட் பகுதியைச்சூழவுள்ள பாறையின் ஏனைய பகுதிகள் அகற்றப்பட்டுவிட்டன.குறிப்பிட்ட பாறையில் சிலையின் மேற்பகுதி அதாவது சிரசு பாகம் முழுமையாக செதுக்கப்பட்டு விட்டது. இச்சிலையை 2009ஆம் ஆண்டளவில் முழுமையாக செதுக்கி முடித்து விட முடியும் என பிரதான சிற்பி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இச்சிலை நிர்மாணம் தொடர்பில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்களும் கூட மிக உற்சாகத்துடன் தமது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றார்கள்.


இங்கு இன்னுமோர் விடயத்தை கூற வேண்டும். எமது பண்டைய மன்னர்கள் கற்பாறைகளில் செதுக்கி வைத்ததும்,இன்று சிதைவடைந்த நிலையில் உள்ளதுமான அனுராதபுரம் பொலன்னறுவை கால சிலைகள் உங்கள் பார்வையில் படும் போது ஏற்படும் மகிழ்சி உணர்வை உங்களால் மதிப்பிட முடியுமா? அதன் பெறுமதியை வெறும் பண அடிப்படையில் எடை போட முடியுமா? மொனராகலை பிரிவெனா விகாரையில் உள்ள இளம்பிக்குமாரும்,கிராமத்தவர்களும் அனுபவம் மிக்க இந்திய சிற்ப கலைஞர்களின் உதவியுடன் மொனராகலை இரம்பொடகலையில் அமைந்துள்ள ஓர் உயிரற்ற பாறைக்கு உயிரூட்டி மிகப்பிரமாண்டமான தனிக்கருங்கற் புத்தர் சிலை ஒன்றை உருவாக்கி வருகின்றனர். ஆகவே உயிரற்ற ஒரு பாறை புத்த பெருமானின் மேன்மையான இயல்புகள் வெளிப்படும் விதமாக படிப்படியாக உயிரூட்டப்படுவதை பார்த்து ஆனந்தமடைய உங்கள் அனைவரையும் குடும்பம் சகிதம் அன்போஐ அழைக்கின்றோம். தேசிய பொக்கிசமாகவும் எம் எதிர்காலச் சந்ததியினரின் சொத்தாகவும் விளங்கப்போகும் இப்பிரமாண்டமான சிலையை வெற்றிகரமாகக்செதுக்கி முடிக்க தங்கள் அனைவரதும் தாராளமான பங்களிப்பையும் பெறுமதி மிக்க ஒத்துழைப்பையும் இக்கருங்கற்சிலை நிர்மாண குழு மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றது’ என்கிறார் தேரர்.இலங்கையின் வரலாற்றில் இடம்பெறப்போகின்ற இக்கருங்கற் சமாதி புத்தர் சிலைநிர்மாணப்பணிகள் சிறப்பாக இடம்பெற நாமும் பிரார்த்திப்போம்.இச்சிலையின் நிர்மாணப்பணிகள் மற்றும் விகாரையின் வரலாறு குறித்து அறிந்து கொள்ள http://www.samadhibuddhastatue.org/ எனும் இணையத்தளத்தில் பிரவேசித்து தகவல்கள் படங்களை பெறமுடியும்.

Friday, November 7, 2008

காட்டு யானைகள், ஆதிவாசிகளை விட கேவலமாகப்போய் விட்ட மலையக மக்கள்

தலைப்பில் உதாரணம் காட்டி விட்டு விளைவுகளை கூறும் விதமாக அமையப்போவதில்லை இக்கட்டுரை. இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2009 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் மலையக மக்கள் எந்தளவுக்கு புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை விட எந்தளவிற்கு கேவலப்படுத்தப்பட்டிருக்கின்றனர் என்பது தான் இங்கு பேசப்பட வேண்டிய விடயம்.

இது ஒரு யுத்தகால வரவு செலவு திட்டம் என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயமே. இம்முறை பாதுகாப்பு செலவீனங்களுக்காக என்றுமில்லாதவாறு அதிக தொகையை ஒதுக்கியிருக்கும் அரசாங்கம் மக்களின் மீதான சுமையை அதிகப்படுத்தியுள்ளது. பொதுவாக அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் வரவு செலவு திட்டத்தில் தனியார் துறைக்கான ஒதுக்கீடுகள் எதுவும் இல்லாவிட்டாலும் யோசனைகள் சமர்ப்பிக்கப்படும்.ஆனால் இம்முறை அப்படியான ஒரு வாசகம் கூட இடம்பெறவில்லை. இதில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது பெருந்தோட்டத்தொழிலாளர்கள் தான். இலங்கையின் தேசிய வருமானத்தில் முக்கிய இடத்தைப்பெறும் தேயிலை ஏற்றுமதி தொழிற்றுறையோடு தொடர்பு பட்டுள்ள இவர்களின் எதிர்கால அபிவிருத்தி அல்ல இவர்களின் வேதன உயர்வு குறித்து எவ்வித யோசனைகளும் சமர்ப்பிக்கப்படவில்லை.


இதில் என்ன வேதனையான விடயம் எனில் நிதி அமைச்சராக இருக்கும் ஜனாதிபதிக்கு இலங்கையின் காட்டு யானைகள் மற்றும் ஆதிக்குடிகளின் மேல் இருக்கும் அக்கறை நூறு வருடங்களுக்கும் மேலாக இலங்கைக்கு அந்நிய செலாவணியை பெற்றுத்தருவதில் முன்னணியில் இருக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் மேல் இல்லை.


இலங்கையின் காட்டு யானைகளை பாதுகாக்கவென எதிர்வரும் வரும் வரவு செலவு திட்டத்தில் 300 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ள அரசாங்கம் இலங்கையின் ஆதிவாசிகளான வன்னியலா எத்தோக்களின் (வேடர்கள்) எதிர்காலம் மற்றும் அவர்களின் கிராமங்களை பாதுகாக்கவென 50மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இலங்கையின் இயற்கை வளம் தொடர்பிலும் ஆதிவாசிகளின் பால் அரசாங்கத்திற்கு உள்ள அக்கறையை வரவேற்கிறோம். மலையக மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? காலம் காலமாக தமது உயிரையும் உதிரத்தையும் மண்ணுக்கு காணிக்கையாக்கி ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கத்தையும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள். இவ்வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்ட பகுதி மக்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் பாரிய உபத்திரவம் ஒன்றை கொடுத்திருக்கின்றது அரசாங்கம்.
அது தான் கோதுமை மா மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு.


மலையக மக்களை பொறுத்தவரை அவர்களின் மூன்று நேர உணவாக இருப்பதே கோதுமை மாவின் மூலம் செய்யப்படும் உணவு பதார்த்தங்கள்;குறிப்பாக ரொட்டி. தற்போது அதிகரித்திருக்கும் வரியினால் அவர்களின் அன்றாட உணவு முறைகளிலும் மண் விழப்போகின்றது. கூட்டு ஒப்பந்தம் என்ற சங்கிலியினால் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பான உரிமைகளும் கட்டிப்போடப்பட்டுள்ளன.விலைவாசி என்பது அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் உயர்வர்க்கத்தினருக்குமான விடயம் அல்லவே.எல்லா பிரிவினரும் ஒரே அளவு பணம் கொடுத்துத்தானே பொருட்களை கொள்வனவு செய்யப்போகின்றனர்? அப்படியிருக்கும் போது மிக மோசமான வறுமை கோட்டுக்குள் தள்ளப்பட்டிருக்கும் மலையக மக்களிடம் மட்டும் ஏன் இந்த அரசாங்கம் இப்படி பாரபட்சமாக நடந்து கொள்கிறது?

இதற்கு பதில் இருக்கிறது.மலையக மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டிருக்கும் சிலர் அரசாங்கத்தின் அமைச்சர் பதவி எனும் பிச்சையைப்பெற்றுக்கொண்டு வாய் மூடி மௌனியாக இருக்கும் வரை மலையக மக்களுக்கு விமோசனம் என்பதே கிடையாது. மேலும் தமக்குரிய உரிமைகளை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் வழங்கத்தவறும் பட்சத்தில் தொழிலாளர்களை அது போராட்ட களத்தில் குதிக்கவே ஆயுத்தப்படுத்துகிறது என்று தான் கூற வேண்டியுள்ளது. தொழிலாளர்களுக்கு இந்த சம்பளம் தான் வழங்கப்படவேண்டும் என்று வரையறை செய்ய எவருக்கும் உரிமையில்லை . ஆனால் தேயிலை தோட்டங்களின் உரிமையாளர்களான முதலாளிமார் சம்மேளனத்துடன் குறிப்பிட்ட தொழிற்சங்கங்கள் இந்த கூட்டு ஒப்பந்தத்தை செய்து கொண்டு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை புதிப்பித்துக்கொண்டு இந்த நாடகங்களையெல்லாம் அந்த இறைவனும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்.


அமெரிக்கர்கள் கறுப்பினத்தவரை அடிமைகளாக நடத்திய காலம் போய் அதே அமெரிக்கர்கள் இன்று ஒரு கறுப்பினத்தவரையே ஜனாதிபதியாக தெரிவு செய்யும் காலமும் வந்து விட்டது.
ஆனால் உலகில் தமது இனத்தை தாமே ஆண்டு அவர்களை அடிமைப்படுத்தி அவர்களுக்கு சுதந்திர காற்றை சுவாசிக்க விடமுடியாது முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருக்கும் நிலை இலங்கையில் மலையகத்தில் மட்டும் தான் உள்ளது.

Thursday, October 30, 2008

இலங்கை தமிழ் அமைச்சர்கள் பதவி விலகுவார்களா?

இலங்கையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் யுத்தத்தின் காரணமாக அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு ஆதரவாக தமிழக அரசு இந்திய மத்திய அரசிடம் முன்வைத்த கோரிக்கைகள்,நிபந்தனைகள் ,பதவி விலகல் மிரட்டல்கள்,பேச்சுவார்த்தைகள் போன்றனவும் தமிழ் திரை உலகத்தினரின் இராமேஸ்வர ஆர்ப்பாட்டங்களும் ஆவேச பேச்சுகளும், தமிழகத்தின் ஏனைய அமைப்புக்கள் நடத்திய ஆர்ப்பாட்ட பேரணிகள் அது தொடர்பான கைதுகள் இவை தான் இலங்கையில் வெளி வரும் மும்மொழி பத்திரிகைகளில் கடந்த இரண்டு வார கால தலைப்புச்செய்திகள்.
செய்திகளுக்கு என்ன பலன் என்று ஆராய்வதோ அது தொடர்பான விமர்சனமோ அல்ல இவ்வாக்கம். நேரடியாக விடயத்திற்கு வந்து விடுகிறேன்.



இலங்கையில் வடக்கு கிழக்கு பிரதசேத்திலும் மத்திய பிரதேசமான பெருந்தோட்டப்பகுதிகளிலும் தமிழர்கள் செறிந்து வாழ்வது அனைவரும் அறிந்த விடயம் தான். அண்மைக்காலமாக மிகவும் ஆக்ரோஷமாக முன்னெடுத்துச்செல்லப்படும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள, கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்காக எமது அண்மைய நாடும் ஆசிய பொலிஸ்காரனாக உருவெடுக்க துடித்துக்கொண்டிருக்கும் இந்திய நாட்டின் தமிழக மாநிலத்தில் ஏற்பட்ட உணர்ச்சிக்கொந்தளிப்புகள் பற்றி உலகமே அறியும்.

இதில் உச்சகட்டமாக மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழக கட்சிகளை சார்ந்த 40 பேர் தமது நாடாளுமன்ற பதவிகளை துறக்கவும் தயார் என்று அறிவித்தமையை குறிப்பிடலாம். இதன் பிறகு இலங்கையிலிருந்து டெல்லி பறந்த பசில் இராஜபக்ச பற்றியோ தமிழக முதல்வர் கருணாநிதி திடீரென நாற்பதாண்டு கால பிரச்சினையை நான்கு நாட்களில் தீர்க்க முடியுமா? என்று அறிக்கை விட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு இலட்சம் தருகிறேன் என்று பல்டி அடித்ததை பற்றியும் நான் பேச வரவில்லை.


இலங்கையில் துயருறும் தமிழ் மக்களுக்காக தமிழகத்தில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவோம் என்று அறிவித்தபோது இலங்கை அரசிடம் ஒட்டிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் என்ன செய்து கொண்டிருந்தன? அவற்றின் நிலைப்பாடு தான் என்ன?தற்போதுள்ள அரசாங்கமே கொடிய யுத்தத்தை கட்டவிழ்த்து விட்டு தமிழினத்தை அழிக்கும் கைங்காரியத்தை செய்து கொண்டிருக்கின்றது என்றால் அந்த அரசாங்கத்திற்கு முட்டு கொடுத்துக்கொண்டு அமைச்சுப்பதவிகள் மூலம் சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு மாதம் மாதம் தமது இன மக்களுக்கு எதிரான அவசரகால சட்ட நீடிப்புக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் கையை உயர்த்திக்கொண்டிருக்கும் இவர்கள் பதவி விலகத்தயாரா?


எத்தனை அவமானங்களுக்கு உட்பட்டும் இந்த அரசாங்கத்திடம் தான் ஒட்டிக்கொண்டிருப்போம் என்பது இவர்களது எந்த இன ஜனநாயகமோ தெரியவில்லை. தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகித்து அமைச்சர் பிரதி அமைச்சர் பதவிகளை வகித்துக்கொண்டிருக்கும் சிறுபான்மை இன மக்கள் பிரதிநிதிகள் இந்திய வம்சாவளியினர் என்று கூறவே கேவலமாகவுள்ளது என ஒரு மூத்த மலையக கலைஞர் என்னிடம் கூறி வேதனையுற்றார்.


வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் பிரச்சினைகள் பற்றி சூடாக விவாதம் நடந்துக்கொண்டிருந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினை வேறு மலையகம் வாழ் தமிழ் மக்களின் பிரச்சினைகள் வேறு என்று கூறியே காலங்கடத்திவிட்டார்களே, மலையக மக்களின் பிரச்சினைகள் என்னவென்று இத்தனை நாட்களாய் பட்டியல் போட்டுக்கொண்டா இருந்தார்கள் இவர்கள்? யுத்த சூழ்நிலையில் வடக்கு கிழக்கு மக்கள் அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் காலகட்டங்களில் நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக மக்கள் மகிழ்ச்சியாகவா வாழ்ந்துக்கொண்டிருந்தனர்?

ஐயா பிரித்தானிய காலத்து லயங்களும் மாட்டுக்கொட்டில்களும் தானே ஐயா இங்குள்ள மக்கள் சிலருக்கு இது வரை வீடுகளாக இருக்கின்றன. இதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்
இலங்கையின் மத்திய பிரதேசமான மலையகத்தில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளி மக்கள் 21 வருட கால யுத்தத்தினால் பாதிக்கப்படவில்லை என்பது எவ்வளவு முட்டாள்தனமான கருத்து?இன்றைய தினத்தில் யுத்தம் மற்றும் 1983 வன்செயல்களால் இந்தியாவில் அகதிகளாக இருக்கும் இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களின் தொகை 28,500 என்று சொன்னால் சந்தேகமேயில்லை நீங்கள் நம்பமாட்டீர்கள். இலங்கை தமிழர்களுக்காக இந்தியாவில் ஏற்பட்ட எழுச்சி இப்படியிருக்க நீங்கள் உள்ளூரில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் ஒன்றுமே சொல்ல மாட்டீர்கள் தமிழர்கள் வந்தேறு குடிகள் என பெரும்பான்மை இனத்தவரால் ஒவ்வொரு நாளும் பாராளுமன்றத்தில் துவேஷம் அள்ளி வீசப்படும் போது கூட புன்சிரிப்போது அதை ஏற்றுக்கொண்டவர்கள் தானே நீங்கள். பாவம் உங்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தவர்கள். இருந்தாலும் ஒன்றை மற்றும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள் வரலாற்றில் நீங்கள் என்ன பெயர் கொண்டு அழைக்கப்படப்போகின்றீர்கள் என்று அறிந்து நான் உண்மையில் மனவேதனை அடைகின்றேன்,காரணம் நான் ஒரு தமிழன்!

Wednesday, October 29, 2008

தெரிந்த கிரிக்கெட்டில் தெரியாத விடயங்கள் (3)

டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான இளம் வீரர்கள் பற்றி நாம் அறிவோம். எனினும் அதிக வயது வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்கள் எவரையாவது அறிந்திருக்கிறீர்களா? அவர்களைப்பற்றி பார்ப்போம். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 50 வயதுக்கு மேல் விளையாடியவர்கள் நான்கு பேரே உள்ளனர்.இதில் முதலிடம் பிடிப்பவர் இங்கிலாந்தின் முன்னாள் சகல துறை வீரர் வில்பிரட் ரோட்ஸ். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக கிங்ஸ்டனில்1929ஆம் ஆண்டு தனது இறுதிப்போட்டியில் விளையாடும் போது அவரது வயது 52 வருடங்கள் 165 நாட்களாகும்.


இதே போட்டியில் விளையாடிய மற்றுமோர் இங்கிலாந்து வீரரான ஜோர்ஜ் கன்னுக்கு அப்போது வயது 50 வருடங்கள் 303 நாட்கள். ஆனாலும் இந்தப்பட்டியலில் முதன் முதலில் 50 வயது வரை கிரிக்கெட் விளையாடிய வீரர் என்ற பெருமையைப்பெறுகின்றவர் இங்கிலாந்து அணியின் பிரபல வீரர் டபிள்யூ கிரேஸ். அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக 1899 ஆம் ஆண்டு தனது இறுதி டெஸ்டில் விளையாடும் போது அவரது வயது 50 வருடங்கள் 320 நாட்கள். இறுதியாக இப்பட்டியலில் இணைந்து கொள்கிறார் அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் பேர்ட் ஐயர்ன்மோர்கர். 1932 ஆம் ஆண்டு சிட்னியில் இடம்பெற்ற பொடிலைன் தொடரில் அவர் தனது இறுதிப்போட்டியில் விளையாடும் போது அவரது வயது 50 வருடங்கள் 327 நாட்கள்.ஆக இதற்குப்பிறகு இது வரை கிரிக்கெட் விளையாடிய எந்த வீரரும் 50 வயது வரை ஏன் 41 வயதைக்கூட தாண்டி விளையாடியதில்லை.
பின் குறிப்பு: இடது பக்க மேல் மூலையில் தாடியுடன் இருப்பவர் தான் டபிள்யூ கிரேஸ்.முதல் தர போட்டிகளில் இவரது சாதனைகள் மூர்ச்சையடைய வைக்கும். 870 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 54,211 ஓட்டங்களை குவித்துள்ளார்.சதங்கள் 124,அரைச்சதங்கள் 251.மேலும் 2809 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.