Sunday, February 22, 2009

பற்றிக்கொண்டோரும் பறிகொடுத்தோரும்

இடம்பெற்று முடிந்த மத்தியமாகாணசபை தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் பாரிய அளவிலான விமர்சனங்கள் எழாமலிருப்பதற்குக்காரணம் இந்த முடிவுகள் எதிர்ப்பார்க்கப்பட்டவை என்பதுதான்.ஒரே சமூகத்திற்கு சேவை செய்வதற்கு அச்சமூகத்தை கூறு போட்டு பிரித்து அதே சமூகத்தைச்சேர்ந்தவர்கள் வெவ்வேறு அணிகளில் திரண்டு நின்றால் பெறுபேறுகள் எப்படியிருக்கும் என்பதை சிறுகுழந்தை கூட சொல்லி விடும். இதைத்தான் இம்முறை இடம்பெற்ற தேர்தல் முடிவுகள் காட்டி நிற்கின்றன. அதே வேளை எதிர்காலத்தில் மலையகத்தில் இருந்து அரசியல் பிரதிநிதித்துவம் ஒன்றை பெறுவதற்கு எந்த வகையில் எப்படி வியூகங்கள் வகுக்க வேண்டும் என்பதை இத்தேர்தல் முடிவுகள் உணர்த்தி நிற்கும் அதே வேளை தமிழ் பிரதிநிதித்துவம் எதிர்நோக்கியுள்ள அபாயகரமான சூழ்பிலையையும் இத்தேர்தல் முடிவுகள் காட்டி நிற்க தவறவில்லை.
மேலும் மலையகத்தின் பிரதான கட்சிகளான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி என்பன தமது ஸ்திர அரசியல் நிலை குறித்து கடுமையாக சிந்தித்து செயலாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என்றே கூற வேண்டும்.அரசாங்கத்திற்கு வேண்டுமானால் கடந்த முறையை விட இது பெருவெற்றி என்றுக்கூறலாம் ஆனால் குறிப்பாக பெருந்தோட்ட தமிழ் சமூகத்திற்கு என்ன கிடைத்துள்ளது என்பது குறித்து பார்த்தல் அவசியம். அதை விட இம்முறை மத்திய மாகாணத்தில் தேசிய அடையாள அட்டை பிரச்சினை மற்றும் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை வாக்களிக்க முன்வராதோரின் நிலை என்பன மிகவும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்று.
காரணம் இக்குறிப்பிட்ட பிரச்சினைகளை மட்டும் தெரிந்தெடுத்து தீர்த்திருந்தால் எந்த கட்சியாவது மேலதிகமாக 4 ஆசனங்களை சரி பெற்று தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரித்திருக்கலாம் என்பதே தேர்தல் ஆய்வுகளின் முடிவு.காரணம் மத்திய மாகாணத்தின் கண்டி ,மாத்தளை,நுவரெலியா மாவட்டங்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தொட்டுள்ளது.மேலும் மத்திய மாகாணத்தில் 5இலட்சத்து 75 ஆயிரம் பேர் பல்வேறு காரணங்களுக்காக வாக்களிக்கவே தவறியுள்ளதையும் இங்கு சுட்டிக்காட்டல் அவசியம்.இதில் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களின் தொகையே இரண்டு இலட்சத்துக்கும் மேல்.
பறிகொடுத்தவர்கள்இ.தொ.கா மற்றும் மலையக மக்கள் முன்னணி என்ற இரண்டு பிரதான கட்சிகளும் இம்முறை கனிசமான வாக்குகளை தேர்தலில் இழந்துள்ளன.அதிலும் நுவரெலியா மஸ்கெலியா தொகுதியில் மலையக மக்கள் முன்னணி நிறுத்திய மூன்று வேட்பாளர்களும் படுதோல்வியை தழுவியுள்ளனர்.இம்முறை மத்திய மாகாணசபையில் ஒரு ஆசனத்தையும் இக்கட்சி பெறவில்லை. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணி இரண்டு ஆசனங்களையாவது பெறும் என்று பலரும் எதிர்ப்பார்த்திருந்த வேளை அதிர்ச்சியளிக்கும் முகமாக தேர்தல் முடிவுகள் அமைந்து விட்டன. கட்சியில் தலைதூக்கியுள்ள உட்பூசல்கள் தலைமைத்துவ போட்டிகள் என்பன தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்துள்ளது என்றால் மிகையாகாது. இ,தொ.காவிற்கு அடுத்தபடியாக மலையக மக்களின் வாக்கு வங்கியை தன் வசம் வைத்திருந்த மலையக மக்கள் முன்னணியின் நிலை கவலைக்குரியது. கட்சியின் தலைவர் பெ.சந்திரசேகரன் இத்தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது அரசின் பங்காளியாக இருந்து கொண்டு தனது ஆதரவை குறிப்பிட்ட பகுதியில் இழந்துள்ளார். மலையக மக்கள் முன்னணியின் கோட்டையாக கருதப்படும் தலவாக்கலை மற்றும் அதனை அண்டியுள்ள தோட்டப்பகுதிகளில் கூட கட்சிக்கு ஆதரவு இல்லை என்பது சிந்திக்க வேண்டிய விடயம். மேலும் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பிரதான வேட்பாளர்கள் தம்மிடையே ஒற்றுமையை பேணாதது துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள்.
இ,தொ.காவானது தான் நிறுத்திய ஆறு வேட்பாளர்களில் மூன்று பேரை தட்டுத்தடுமாறி காப்பாற்றியுள்ளது. மலையகத்தின் அசைக்கமுடியாத சக்தியாக விளங்கிய இ.தொ.கா இம்முறை வெற்றிலை சின்னத்தில் கேட்டதால் தான் வாக்குகள் குறைந்துள்ளன என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய பேச்சுக்கள் அல்ல. காரணம் இதில் போட்டியிட்ட சிரேஷ்ட உறுப்பினர் வீ.ராதாகிருஷ்ணன் 18 ஆயிரம் வாக்குகளையே நெருங்கியுள்ளார்.மத்தியமாகாணசபையில் தமிழ் கல்வி அமைச்சராக இருந்து சிறந்த சேவையாற்றியவர் என்ற பெருமையுட்பட நுவரெலியா பிரதேச சபை தலைவராகவும் இருந்து இப்பிரதேச மக்களின் அபிமானத்தை வென்றவர்.ஆகவே சிறப்பான சேவை செய்த ஒரு மக்கள் பிரதிநிதிக்கு தேர்தல் சின்னம் ஒரு பொருட்டே அல்ல.இதை ஏனைய கட்சி வேட்பாளர்கள் நிரூபித்துள்ளனர்.இவருடன் போட்டியிட்ட அனுஷா சிவராஜா.சக்திவேல் .சிங் பொன்னையா ஆகியோர் தோல்வியை தழுயுள்ளனர்.எனினும் போனஸ் ஆசனங்கள் இரண்டில் இ.தொ.காவில் போடியிட்ட ஒருவருக்கு ஒரு ஆசனம் கிடைக்கக்கூடிய சாத்தியகூறுகள் உள்ளன.அனேகமாக சிங்.பொன்னையாவிற்கு ஒரு ஆசனம் கிடைக்கலாம். இதே வேளை கண்டியில் கடந்த முறை இருந்த பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டுள்ளது.எனினும் நுவரெலியா மாவட்டத்தில் இ.தொ.கா தான் நிறுத்திய ஆறு பேரும் ஏன் வெற்றி பெறவில்லை என்பதை ஆராய்ந்து பார்த்தல் அவசியம். காங்கிரஸ் மீது பல்வேறு தரப்பினரும் வெறுப்பு கொள்ள என்ன காரணம் குறிப்பாக இக்கட்சியின் வாக்கு வங்கிகளாக செயற்பட்ட கொட்டகலை, அட்டன்,பொகவந்தலாவை,மஸ்கெலியா,நுவரெலியா ஆகிய இடங்களில் ஏன் வாக்குள் கிடைக்கவில்லை என்பது விவாதத்திற்குரியது. பிரசார நடவடிக்கைகளுக்காக அமைச்சர் ஆறுமுகன் நியமித்தவர்களில் ஒரு சாரார் அதிகாரத்தை தமது கைகளில் எடுத்து கொண்டு மக்களுக்கு வெறுப்பூட்டும் விதத்தில் நடந்து கொண்டமையை பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.இதுவே கட்சிக்கும் அவப்பெயரை சம்பாதித்துக்கொடுத்துவிட்டது என்பது பலரது வாதம். இந்த விடயங்கள் அமைச்சர் ஆறுமுகனை எட்டியதா என்பது கேள்விக்குறியே. சில பிரச்சினைகளை எடுத்துக்கூறுவதற்கு அமைச்சர் ஆறுமுகனை குறிப்பிட்ட சாரார் நெருங்க விடவில்லை என்பது மற்றுமொரு சாராரின் குற்றச்சாட்டு. இவ்விடயத்தில் அமைச்சர் சரியான தீர்மானங்களை எடுக்காவிடின் எதிர்காலத்தில் இ.தொ.கா சார்பில் நிறுத்தப்படும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கும் ஆபத்து ஏற்படப்போகின்றது என்பதே உண்மை.
அடுத்ததாக முன்னாள் கல்வி அமைச்சராக இருந்த எஸ் .அருள்சாமியின் தோல்விகுறித்து பார்த்தல் அவசியம்.தேர்தலுக்கு முன்பாகவே அருள்சாமிக்கு கணிசமான வாக்குகள் கிடைப்பது கடினம் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழத்தொடங்கி விட்டது என்னவோ உண்மை. எனினும் தனது பதவியின் மூலம் அருள்சாமி யாரை வசீகரித்திருக்கிறார் என்ற கேள்வி எழும்போது விடை பூச்சியமாகவே உள்ளது. மேலும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் இவர் தீவிரமாக ஈடுபடவில்லை என்பது மற்றுமொரு விடயம். கல்விச்சேவைகள் மூலம் பலருக்கு வாய்ப்புகள் பெற்றுக்கொடுத்திருக்கிறார் என்றாலும் அவை உரியோரை சென்றடைந்ததா என்பது தேர்தல் பெறுபேறுகளைப்பார்க்கும் போது தெரிந்துவிட்டது.
ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட அம்பகமுவ பிரதேச சபை முன்னாள் தலைவரும் மாகாணசபை உறுப்பினருமான ரவீந்திரன் தோல்வி கண்டு தனது மாகாணசபை உறுப்புரிமையையும் இழந்துள்ளார். தொழிலாளர் தேசிய சங்கத்துடன் இணைந்து இவர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் இவருக்கு வாக்குகள் குறைவாகவே கிடைத்துள்ளன. எனினும் இம்முறை போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களில் இவருக்கு மட்டுமே உள்ள தனிப்பெருமை என்னவென்றால் கட்சி மாறாது தொடர்ச்சியாக ஐக்கிய தேசிய கட்சியிலேயே அங்கம் வகித்து வரும் நபர் என்பதாகும்.
பற்றிக்கொண்டோர்.இம்முறை தேர்தலில் பல புதிய முகங்கள் அதிலும் மலையகமக்களுக்கு புதிய முகங்கள் தமது வெற்றியை பதிவு செய்துகொண்டுள்ளன.இதில் விசேடமாக குறிப்பிடப்படவேண்டியவர் பிரகாஷ் கணேசன். கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது இளைய சகோதரர் பிரகாஷ் கணேசனை ஜனநாயக மக்கள் முன்னணி சார்பாக ஐக்கிய தேசிய கட்சியில் மலையகத்தில் முதல் தடவையாக களமிறக்கி அதில் வெற்றியும் கண்டுள்ளார். உண்மையில் தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என முதுமொழியை அண்ணன் உடையான் படைக்கு அஞ்சான் என மாற்றி அமைக்கும் அளவிற்கு மனோ கணேசனின் குரலுக்கு அவரது சகோதரர் பிரகாஷ் கணேசனுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன. 38 ஆயிரம் வரையான வாக்குகளை பெற்றுள்ள பிரகாஷ் கணேசன் அரசியல் பின்புலம் முள்ள குடும்பமொன்றிலிருந்து வந்தாலும் மலையக அரசியலுக்கு அவர் புதியவர். தனது நேர்மை அரசியலுக்குக்கிடைத்த வெற்றி என மனோகணேசன் பெருமிதப்பட்டாலும் அதை தொடர்ச்சியாக கட்டிக்காக்க வேண்டிய கடப்பாடு அவருக்கு உண்டு. தனது முதல் வரவின் மூலம் மலையக அரசியலில் கால் பதித்துள்ள பிரகாஷ் கணேசன் இங்குள்ள மக்களுக்கு தனது சேவையை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
அடுத்ததாக தொழிலாளர் தேசிய சங்கத்தலைவர் திகாம்பரம் மற்றும் அவரின் வர்த்தக பங்காளி உதயா ஆகியோர் ஆரவார வெற்றியை பற்றிக்கொண்டனர்.திகாம்பரத்தின் வெற்றி எதிர்ப்பார்க்கப்பட்டது தான்.இம்முறை அச்சு ஊடகங்களை தனது பிரசார செயற்பாடுகள் விளம்பரங்கள் செய்திகள் என ஆக்கிரமிப்பு செய்தவர். எனினும் நுவரெலியாவுக்குப்புதியவரான உதயாவின் வெற்றி குறிப்பிடத்தக்கது. தான் மக்களுக்காக அரசியல் செய்ய மட்டுமே தேர்தலில் போட்டியிடுவதாக கூறியுள்ள திகாம்பரம் ஏனைய சலுகைகள் தனக்கு தேவையற்றவை என்று முழங்கியுள்ளார். இதே வேளை பிரதான கட்சிகள் இரண்டிற்கும் சவாலாக இருக்கவும் தொழிலாளர் தேசிய சங்கம் தவறவில்லை. இவ்வெற்றி மூலம் தனது பாராளுமன்ற பிரவேசத்தையும் உறுதிபடுத்தியுள்ளார் திகாம்பரம். எனினும் பணத்தை இறைத்து மக்களை கவர்ந்து இவர் பெற்ற வெற்றி என விமர்சனங்கள் எழுந்தாலும் எதிர்காலத்தில் இவர் தனக்கு வாக்களித்த மக்களுக்கு செய்யப்போகும் சேவைகளிலேயே விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கமுடியும். இதை இவர் எதிர்கட்சியிலிருந்து எப்படி செய்யப்போகிறார் என்பது பலரின் கேள்வி.
இதே வேளை அரசாங்க பக்கம் இருந்து ஐக்கிய தேசிய கட்சியின் மூலம் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் முன்னணியின் பொது செயலாளர் எஸ்.சதாசிவம் மற்றும் கணபதி கனகராஜ் ஆகியோர் சத்தமில்லாத வெற்றியை பற்றிக்கொண்டுள்ளனர். ஜனாதிபதியின் ஆலோசகராக செயற்பட்டவர் சதாசிவம்.மறுபுறம் கணபதி கனகராஜ் மின்சக்தி எரிசக்தி அமைச்சின் மலையக இணைப்பாளராக செயற்பட்டவர். எனினும் இவர்களின் வெற்றி பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.காரணம் இவர்களும் தேர்தல் பிரசார நடவடிக்ககைளில் ஆராவாரம் காட்டவில்லை ஊடகங்களில் கூட இவர்களின் தேர்தல் கால செய்திகள் பெரிதாக இடம்பெறவில்லை.எனினும் கட்சியை கட்டியெழுப்ப இவ்வெற்றி இவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

அதை விட இம்முறை தேர்தலில் சுட்டிக்காட்டப்படவேண்டிய ஒரு விடயம் நுவரெலியா மாவட்டம் முழுக்க பிரவாகம் எடுத்து ஓடிய மது பற்றியது. எல்லா கட்சிகளுமே இதில் பங்கெடுத்திருந்தன என்பது முக்கிய விடயம். இப்பகுதிகளில் தற்போது குடிநீர் பஞ்சம் நிலவிவருகிறது,ஆனால் மது போத்தல்களுக்கு மட்டும் தட்டுப்பாடில்லை. ஆரம்பத்தில் இவ்விவகாரத்தில் வயது போன தோட்டகமிட்டி தலைவர்களை இளைஞர்கள் குறை கூறி வந்தனர்.ஆனால் இப்போது பல தோட்டப்புறங்களில் தோட்டக்கமிட்டி தலைவர்களாக இருந்து வரும் இளையோரே தேர்தல் காலத்தில் சாராயப்பங்கிடுதலை முன்னின்று செயற்படுத்தினர்.மலைகத்தில் மாற்றம் வர வேண்டும் என்று முழங்கியவர்களும் தாராளமாக இதற்கு செலவழித்தனர். மாற்றம் என்பது தடுமாற்றம் தானா என்று கேட்கத்தோன்றுகின்றது.
மத்தியமாகாண தேர்தல் முடிவுகளை வைத்துப்பார்க்கும் போது சிறுபான்மையின பிரதிநிதித்துவம் குறித்து கேள்வி எழுப்பாமல் இருக்க முடியாது. இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் அளவில் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டங்களை வகுத்துள்ளதாக தெரியவருகிறது.அதற்கு முன்பதாக மலையக மக்களின் மற்றுமோர் பிரதேசமான ஊவா மாகாணசபையும் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியகூறுகள் அதிகரித்துள்ளன. சப்ரகமுவ மாகாணசபை தேர்தல் முடிவுகள் மத்திய மாகாணசபை தேர்தலுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று கூறப்பட்டாலும் எவரும் அது குறித்து அக்கறை கொண்டதாக தெரியவில்லை.தற்போது மத்தியமாகாணசபை தேர்தல் முடிவுகள் சரி ஊவா மாகாணசபை தேர்தலுக்கு பலருக்கு பல பாடங்களை கற்றுக்கொடுக்கட்டும்.
சிவலிங்கம் சிவகுமாரன்

நன்றி: வீரகேசரி வாரவெளீயீடு (1-02-2009)

No comments: