Monday, November 28, 2011

அதிகரித்து வரும் பெண்களுக்கெதிரான வன்முறைகள்


மிரபல் சகோதரிகள்











சர்வாதிகாரி ட்ரூஜிலோ












பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள் நேற்று 25 ஆம் திகதி சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் என்பது (International Day for the Elimination of Violence against Women) ஒரு துன்பியல் நிகழ்வை ஞாபகப்படுத்தும் விதத்தில், ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் , 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படல் வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவ்வாண்டு 17 ஆம் திகதி பொதுச்சபை கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. அந்த துன்பியல் நிகழ்வு என்ன என்பதை பலரும் அறிந்து கொள்ள வேண்டும்.


மிரபல் சகோதரிகள் (Mirabal sisters)


930 1960 இற்கு இடைப்பட்ட காலகட்டம் அது . டொமினிக்கன் குடியரசை ராபெல் ட்ரூஜிலோ (Rafael Trujillo) சர்வாதிகாரி ஆண்டு வந்தான். இவனது ஆட்சிக்கு எதிராக குரல் கொடுப்போர் யாராக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்படுவர். ட்ரூஜிலோவின் ஆட்சியில் பெண்கள் சொல்லணாத்துயரை எதிர்நோக்கினர். பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்து மிரபல் என்ற குடும்பப்பெயரை கொண்ட மூன்று சகோதரிகள் குரல் கொடுத்தனர். இச்சகோதரிகள் ஒன்றிணைந்து சர்வாதிகாரியின் ஆட்சிக்கு எதிராக அரசியலிலும் குதித்தனர். இதை ஒடுக்க நினைத்த ட்ரூஜிலோ அவர்களை கொல்வதற்கு உத்தரவிட்டான். 1960 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி மிரபல் சகோதரிகள் கொடூரமாக ஒரே இடத்தில் கொல்லப்பட்டனர். இதை நினைவு கூறும் முகமாகவே ஐக்கிய நாடுகள் சபையினால் அந்த நாள் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாளாக பிரகடனமாயிற்று. பின்னாளில் இவர்கள் மறக்க முடியாத வண்ணத்துப்பூச்சிகள் என்று அழைக்கப்பட்டனர். 1980 ஆம் ஆண்டு முதல் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட நாளானது பால் நிலை வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு தெரிவு செய்யப்பட்டது.
பெண்களுக்கெதிரான வன்முறைகள்எமது நாட்டின் சனத்தொகையில் அரைவாசியானோர் பெண்கள் தான்.எனினும் பல்வேறு வகையில் இன்று பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. உள,.உடல் ரீதியான கொடுமைகள் நாளுக்கு நாள் வித்தியாசப்படுவதையும் இங்கு குறிப்பிடல் வேண்டும். என்னென்ன கொடுமைகள் பெண்களுக்கெதிரானவை என பட்டியல் படுத்தப்பட்டுள்ளன .இதில் பிரதானமானவை இவை:



1) திராவகம் வீசுதல்


2) சீதனக்கொடுமைகள்


3) வீட்டில் மனைவியை,சகோதரியை,தாயை பிள்ளையை துன்புறுத்தல்


4) பாலியல் துன்புறுத்தல்கள்


5) விபசாரத்திற்கு நிர்பந்தித்தல்


6) கர்ப்பிணிகளை கொலை செய்தல்


7) பெண் உறுப்பை சிதைத்தல் ( Female Genital Mutilation)



8) கடத்தல் சம்பவங்கள்



9) கௌரவ கொலைகள்


10) ஹித்திரவதைகள்



12) வேலைத்தளங்களில் வன்முறைகள்



13) பெண் சிசு கொலை




14) தரக்குறைவாக நடத்துதல் மற்றும் போர்க்குற்றங்கள்



15) இன ரீதியான ஒடுக்குமுறை
இவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ள வன்முறைகளை இன்று உலகெங்கினும் உள்ள பெண்கள் அனுபவித்து வருகின்றனர். பெண்களை பாதுகாக்கவும் அவர்களின் உரிமைகளை இனங்காணவுமே சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் என்பன அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. எனினும் குறிப்பிட்ட நாள் மட்டுமே இவர்கள் ஞாபகப்படுத்தப்படுகின்றார்களோ என்ற சந்தேகமும் நிலவுகின்றது. அண்மைக்காலமாக வீட்டு வன்முறைகளுக்கு பெண்கள் அதிகமாக முகங்கொடுத்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. கடந்த மாதம் மலையகப்பகுதியில் மாமனார் ஒருவர் மருமகளை தீ வைத்து கொளுத்திய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச்செய்தது. வெளி உலகுக்கு வராத எத்தனையோ கொடுமைகளை இன்று எமது சகோதரிகள் அனுபவித்து வருகின்றனர். குடும்ப சூழ் நிலை, கௌரவம் , குழந்தைகள் என்ற வட்டத்திற்குள் இவர்கள் இருப்பதால் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டும் மனதுக்குள் அழுது கொண்டும் இருக்கும் இவர்கள் இறுதியில் மனஉளைச்சலுக்கு ஆளாகி மனநிலை பாதிப்படைகின்றனர்.ஒரு சில சந்தர்ப்பங்களில் பெண்களே பெண்களை கொடுமைப்படுத்தும் அநியாயங்களும் இடம்பெறுகின்றன. அதே போல் வேலைத்தளங்களிலும் உயர் அதிகாரிகளின் வக்கிர எண்ணங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் பலியாகின்றனர். வீட்டிலிருந்து வேலைக்கு செல்லும் போது பஸ்ஸிலோ இரயிலிலோ அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் வெளியில் சொல்ல முடியாதவை. ஆபிரிக்க நாடுகளில் இன்று வரை வழமையில் உள்ள பெண்ணுறுப்பை சிதைத்தல் , மனித உரிமை ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் விடயமாகும். மத அனுட்டானங்களின் ஒரு அங்கமாக இதை அங்குள்ளவர்கள் கருதினாலும் இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்றும் பெண் பிள்ளைகளுக்கு உடல் ,உள ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் அதே வேளை பல சிறுமிகள் அதிக இரத்தப்போக்கினால் இதில் உயிராபத்தையும் சந்தித்துள்ளனர் என்பதும் சோகமான விடயம். இந்தியாவில் பல மாநிலங்களில் இளவயது திருமணங்கள் இன்றும் வழக்கில் உள்ளன. பருவம் எய்த முன்னர் சிறுமிகளை இவ்வகையில் திருமணம் செய்து கொடுத்தலானது அந்த சிறுமிக்கு எதிரான வன்முறையே என்பதில் ஐயமில்லை. அதே போல் பெண் சிசுக்கொலை மற்றும் சாதி ரீதியாக பெண்களை ஒடுக்குதல் , அவர்களை துஷ்பிரயோகம் செய்தல் ,கொலை செய்தல் ,உடன் கட்டை ஏறச்செய்தல் போன்றன இன்றும் இந்தியாவில் இடம்பெற்று வரும் அக்கிரமங்களாகும். காதல் என்ற போர்வையில் இன்று பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகளும் எல்லையில்லாது போய் விட்டது. தனது இச்சைகளுக்கு இணங்காத பெண்களின் முகம் மீது திராவகம் வீசுதல் அல்லது இணைய அரட்டை, சமூக வலை தளம் மூலம் தகவல்களைப்பெற்று அவர்களுக்கு நெருக்குதல் தருதல் போன்றனவும் இன்று பெருகி விட்டன. கடந்த வாரம் தமிழ் நாட்டில் ஏற்பட்ட இவ்வாறான சம்பவம் முழு இலக்கிய உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிரபல எழுத்தாளர் தனது வாசகர் வட்டத்தைச்சேர்ந்த ஒரு இளம் பெண்ணிடம் வக்கிரமான முறையில் இணைய அரட்டையில் ஈடுபட்டு அது அம்பலமாகி தற்போது தமிழ் நாட்டில் அதிகம் பேசப்பட்டு வரும் விடயமாகி விட்டது. நாம் நேரில் பார்க்கும் சில மனிதர்களின் மறு பக்கம் மிக மோசமானது என்பது இவ்வாறான விடயங்களில் அம்பலமாகின்றது. மனரீதியாக பாதிக்கப்பட்ட அந்த இளம் வாசகி இவ்விடயத்தை மற்றுமொரு பெண் இலக்கியவாதியாகவும் சமூக ஆர்வலராகவும் விளங்கும் ஒருவரிடம் தைரியமாக எடுத்துக்கூறியதாலேயே இந்த சம்பவம் வெளி உலகுக்கு தெரிய வந்தது.முதற்கண் பெண்கள் தமக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் குறித்து வாய் திறக்க வேண்டும். தனக்கு ஏற்பட்ட துன்பங்கள் மற்றுமொரு பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது என்ற உத்வேகமே இப்படியான சம்பவங்களை முடியுமானவரை தடுக்க வழி கோலும். சகோதரிகளே எத்தனை காலம் தான் வாய் மூடி மௌனியாக இருக்கப்போகின்றீர்கள்? பெண் கொடுமையை எதிர்த்து சர்வாதிக்கெதிராக குரல் கொடுத்து மரணத்தை தழுவிய மிரபல் சகோதரிகள் போன்று தியாகம் செய்யச்சொல்லவில்லை. உங்களுக்கோ அக்கம் பக்கத்தில் உங்களுக்குத்தெரிந்த தெரியாதவர்களுக்கோ ஏற்படும் வன்முறைகள் குறித்து சரி வாய் திறக்கலாமே!

No comments: