Tuesday, September 20, 2011

தேயிலை ஏற்றுமதி வர்த்தக நெருக்கடி எப்படி மீளப்போகிறது இலங்கை ?


தேயிலை ஏற்றுமதி 2010 ஆம் ஆண்டு (கி.கி மில்லியன்களில்)
கென்யா 441,021



இலங்கை 314,500



சீனா 302,419



இந்தியா 191,490



ஆர்ஜன்டீனா 98,025



உகண்டா 50,834



மாலவி 48,579



பங்களாதேஷ் 913


இலங்கையின் பிரதான ஏற்றுமதி பொருளாகவும் அந்நிய செலாவணியைப்பெற்றுத்தருவதில் கணிசமான பங்கையும் வகிக்கும் தேயிலை ஏற்றுமதி வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் குறித்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. உண்மையில் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைகள் காரணமாகவே தேயிலை ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பது என்பது உண்மை,எனினும் இதை காரணமாக முன்வைத்து தொழிலாளர்களின் வேதனம் குறைக்கப்பட வேண்டும் என்றும் அல்லது அவர்களின் வேலை நேரத்தை அதிகரித்து அதில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இலங்கை தேயிலை வர்த்தக சங்கம் இந்த ஏற்றுமதி வர்த்தக நெருக்கடி விடயத்தை பி.பி.சி செய்தி சேவை வரை கொண்டு சென்று தொழிலாளர்களின் வேதனத்தை நூறு ரூபா வரை குறைக்க வேண்டும் என்று கூறியதால் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் மத்தியில் ஒரு வித குழப்ப நிலை தோன்றியது என்னவோ உண்மை .எனினும் தொழிலாளர் வேதனத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பிரதான தொழிற்சங்கங்கள் தொழிலாளர் வேதனம் எந்த வகையிலும் குறைக்கப்பட மாட்டாது என்று ஊடகங்கள் மூலம் தெரிவித்ததையடுத்தே தொழிலாளர்கள் மத்தியில் ஓரளவிற்கு நிம்மதி பிறந்தது. எனினும் ஒரு சில தோட்டக்கம்பனிகள் தொழிலாளர் வேதனம் குறைக்கப்படாவிட்டாலும் உற்பத்தி அளவை கூட்ட வேண்டும் என்றும் அதற்காக அவர்களின் பணி நேரங்களில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்து பணி நேரமானது அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் பிரசாரம் செய்து வருவதாக சில தொழிற்சங்கங்கள் விசனம் தெரிவித்துள்ளன.




நெருக்கடி ஏன், எப்படி?



உலகளாவிய ரீதியில் தற்போதைய நிலையில் தேயிலை ஏற்றுமதி வர்த்தகத்தில் மூன்றாமிடம் பிடிக்கின்றது இலங்கை. இலங்கையிடமிருந்து தேயிலையை இறக்குமதி செய்வதில் மத்திய கிழக்கு நாடுகளான சிரியா,லிவியா ,ஈரான் ,ஈராக் ஆகிய நாடுகள் பிரதான இடத்தை வகிக்கின்றன. ஆண்டு தோறும் இலங்கை சுமார் 300 மில்லியன் கிலோ கிராம் தேயிலையை ஏற்றுமதி செய்கிறது. இதில் 78 வீதமானவை மேற்குறிப்பிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கே ஏற்றுமதியாகின்றது. அதைவது கிட்டத்தட்ட 235 மில்லியன் கிலோ கிராம்களாகும். எனினும் இந்த ஆண்டின் ஜனவரி மாதத்திலிருந்து 6 மாதம் வரை இலங்கை மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு 55 மில்லியன் கிலோ கிராம் தேயிலையையே ஏற்றுமதி செய்துள்ளது. லிபியா ,சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு நிலை காரணமாக அங்குள்ள துறைமுகங்களுக்கு கப்பல்கள் செல்ல முடியாத சூழநிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தேயிலை ஏற்றுமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நஷ்டத்திலிருந்து மீள வேண்டிய நிலையில் இலங்கை உள்ளது.




தொழிலாளர் வேதனமும் கூட்டு



ஒப்பந்தமும்இந்நிலையில் நஷ்டத்தை ஈடு கட்ட தொழிலாளர் வேதனத்திலிருந்து நூறு ரூபா வரை குறைக்க வேண்டும் என தேயிலையை ஏற்றுமதி செய்யும் ஒரு சில வர்த்தக சங்கங்கள் இலங்கை தேயிலைச் சபையிடமும் தோட்டக்கம்பனிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வருடம் செய்து கொள்ளப்பட்ட புதி ய கூட்டு ஒப்பந்தத்தின் படி தொழிலாளி ஒருவருக்கு நாளொன்றுக்கு எல்லாம் அடங்களாக 515 ரூபா வழங்கப்பட வேண்டும்.இதில் நூறு ரூபாவை குறைக்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை,எனினும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்கள் முதலாளிமார் சம்மேளனமும் இ.தொ.கா,இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு என்ற அமைப்புகளாகும். இச்சந்தர்ப்பத்தில் கூட்டு ஒப்பந்தம் என்பது இரண்டு வருடங்களுக்கு கைச்சாத்திடப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று .அந்த இரண்டு வருடங்களுக்கு இதில் எவ்வித மாற்றங்களும் செய்ய முடியாது. ஆகவே தொழிலாளர் வேதனம் என்பது எவ்விதத்திலும் குறைக்கப்பட சந்தர்ப்பங்களில்லை என தெரிவித்திருக்கும் பிரதான தொழிற்சங்கங்கள் இது குறித்து முதலாளிமார் சம்மேளனம் மாத்திரமே தம்முடன் பேச்சு நடத்துவதற்குரிய உரிமையைக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தேயிலை வர்த்தக நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக சிலர் விஷமத்தனமான பிரசாரங்களை ஆங்கில மற்றும் சிங்கள ஊடகங்கள் மூலமாக முன்னெடுத்து வருவதாக பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து இதன் தலைவரும் சிரேஷ்ட தொழிற்சங்க வாதியுமான ஓ.ஏ.இராமையா கருதுத்தெரிவிக்கையில் தொழிலாளர் வேதனத்தை குறைக்க பலர் பிரசாரம் செய்து வந்தனர்.ஆனால் அதற்கு சந்தர்ப்பமில்லை என்று தெரிந்தவுடன் தற்போது வேறு விதமான கருத்துக்களை ஊடகங்கள் மூலம் பரப்பி வருகின்றனர். அதாவது
1) தோட்டங்களில் உற்பத்தி திறன் மிகவும் குறைந்துள்ளது






2) தோட்டத்தொழிலாளர்களுக்கு ஏனைய தனியார் துறையினரை விட வேதனம் மற்றும் இதர சலுகைகள் அதிகம்






3) ஆண் தொழிலாளர்கள் குறைவான நேரமே பணியில் ஈடுபடுகின்றனர்



சில மாதங்களுக்கு முன்னர் கூட ஒரு சில தோட்டங்களில் பெண்களை அதிகளவு எடைக்கு கொழுந்து பறிக்கச்கூறி நிர்பந்திக்கப்பட்டது. இதன் பின்னணியிலுள்ள காரணமும் தேயிலை வர்த்தகத்தில் ஏற்பட்ட பாதிப்பு தான். மறு பக்கம் ஆண் தொழிலாளர்கள் மேல் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து பார்க்க வேண்டும். ஒரு தொழிலாமி பகல் உணவு நேரம் தவிர்த்து 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் .எனினும் பெருந்தோட்டப்பகுதிகளில் குறிப்பாக ஆண் தொழிலாளர்கள் தமக்கு வழங்கப்படும் வேலை அளவுக்கு ஏற்ப (கூஅகுஓ) குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடித்து விட்டு வேறு வேலைகளுக்கு சென்று விடுவர்.இதற்குக்காரணம் வேறு வருமானத்தை தேடிக்கொள்ளல் பகுதி நேர வேலைகளில் இணைந்து கொள்ளல் போன்றவை தான். இது அக்காலத்திலிருந்து பாரம்பரியமாக இருந்து வரும் ஒரு விடயமே தவிர இதில் இரகசியங்கள் இல்லை என்றார்.




உற்பத்தித் திறனை அதிகரிக்க அரசாங்கத்தின் முயற்சி



சகல வேலைத்தளங்களிலும் உற்பத்தித்திறனை கூட்டுவதற்கு அரசாங்கத்தினால் புதிய செயற்றிட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உற்பத்திறன் மற்றும் தொழிற்றிறனை அதிகரித்தல் எனும் தலைப்பில் இது குறித்த கலந்துரையாடல்களை சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர முன்னின்று நடத்தி வருவதாக சிரேஷ்ட தொழிற்சங்கவாதி ஒருவர் தெரிவிக்கிறார்.
இதே வேளை இந்த விவகாரம் பிரதான தொழிற்சங்கங்களிடையே அதிருப்தியை தோற்றுவித்துள்ளது. தொழிலாளர் நலன் பேணும் விடயங்களில் அக்கறை செலுத்தாது உற்பத்தித்திறனை அதிகரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபாடு காட்டுவதா என சில தொழிற்சங்க பிரமுகர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். தொழிலாளர் சம்பந்தப்பட்ட விடயங்களை தொழில் அமைச்சே கையாள வேண்டும் என்றும் இதை ஒரு சிரேஷ்ட அமைச்சர் மூலம் கொண்டு நடத்துவதன் உள்நோக்கம் என்ன என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சகல வேலைத்தளங்களிலும் இது அமுல்படுத்தப்பட்டாலும் தொழிலாளர் வர்க்கமே இதன் மூலம் பாதிப்பை எதிர்நோக்கவுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.




கூட்டு ஒப்பந்தத்தில் வேலை நேரத்தை கூட்ட முடியுமா?



தொழிலாளர்களின் பணி நேரம் என்பது தனித்து நோக்கப்பட வேண்டிய விடயமல்ல. தோட்டத்தொழிலாளர்களைப்பொறுத்த வரை தொழிற்சட்டம் ,கைத்தொழில் பிணக்குச்சட்டம் மற்றும் கூட்டும் ஒப்பந்தம் இந்த மூன்றையும் பார்க்க வேண்டும். பணி நேரத்தை அதிகரிப்பது அல்லது கட்டாயமாக்குவது என்பது நிர்வாகங்களுக்கும் தொழிலாளர்களுக்குமிடையில் விரிசலை ஏற்படுத்தும். கூட்டு ஒப்பந்தத்திற்குள் இதை கொண்டு வர முடியாவிட்டாலும் வேறு ஏதாவது ஒரு முறையில் இது கொண்டு வரப்படலாம் என்பதே பலரினதும் எதிர்ப்பார்ப்பு .




தற்போதைய நிலை என்ன?
கடந்த ஆறு மாத காலங்களில் ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் அளவு மிகக்குறைவாக உள்ள நிலையில் எங்ஙனம் இந்த சரிவிலிருந்து இலங்கை மீளப்போகிறது என்பது கேள்விக்குறியே. இந்த நிலைமை தொடர்ந்தும் இருப்பதாகவே பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் மாலனி பீரிஸ் தெரிவிக்கிறார். இதன் காரணமாக நாம் வேறு நாடுகளுக்கு அதிகளவான தேயிலையை ஏற்றுமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகத் தெரிவிக்கிறார்.இலங்கை தேயிலை சபையும் பெருந்தோட்ட அமைச்சும் இது குறித்து கலந்துரையாடி சீனா ,அமெரிக்கா ஜப்பான் ஆகிய நாடுகளின் உள்ளூர் தேவையை அறிந்து அங்கு தேயிலையை சந்தைப்படுத்தலாமா என யோசித்து வருவதாக அவர் தெரிவிக்கிறார். முக்கியமாக சீனாவில் இலங்கை பிளக் டீயிற்கு அதிக கிராக்கி நிலவுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
உலக சந்தையை இழக்கிறதா இலங்கை?
தேயிலை ஏற்றுமதியில் உலகில் முன்னணியில் இருந்த இலங்கையை தற்போது ஆபிரிக்க நாடான கென்யா பின் தள்ளியுள்ளது. இருப்பினும் சிறந்த இரகம் மற்றும் விலை உயர்ந்த தேயிலையை ஏற்றுமதி செய்யும் நாடுகளுள் இலங்கை முன்னணியிலுள்ளது. தேயிலை தொழிற்றுரையை நம்பி நேரிடையாகவும் மறைமுகமாவும் இலட்சக்கணக்கானோர் உள்ளனர்.எனினும் சில கம்பனிகள் மீள் நடுகையில் அதிக அக்கறை காட்டுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக பழைய தேயிலை மலைகள் இன்று பாகம் பாகமாக பிரிக்கப்பட்டு வெளியாருக்கு விற்கும் நிலை தோன்றியுள்ளதை மறுக்க முடியாது. அந்நிய செலாவணியை பெற்றுத்தரும் முக்கிய பயிர் இது என்பதிலும் பார்க்க தொழிலாளர் வர்க்கத்தின் பெருமை கூறும் ஒரு வர்த்தக பொருளாக இன்று தேயிலை விளங்குகிறது. தொழிலாளர் வர்க்கத்தின் சமூக நலன்களை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச்சென்றால் மட்டுமே இத்தொழிற்றுரையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல முடியும்.