Friday, December 5, 2008

இது உண்மையா?



நீண்ட நாட்களுக்குப்பிறகு பதிவொன்றை இட சந்தர்ப்பம் கிடைத்தாலும் இப்படியும் நடக்கின்றதா என்று அதிர்ச்சியிலும் பயத்திலும் எம்மை உறைய வைக்கும் விடயமொன்று தான் கிடைத்தது. எனது தோழி டயனா ஜோர்ஜ் அனுப்பி வைத்துள்ள மின்னஞ்சலின் உபயம் தான் இந்த விடயம். ரஷ்யாவின் ஒரு இடத்தில் மனித உறுப்புகளை தரம்பிரித்து அதை தேவைக்கேற்றாற்போல் விற்பனை செய்யும் ஒரு மனித பாகங்கள் தொழிற்சாலை இயங்கி வருகிறதாம்.சரி இந்த மனித பாகங்களைப்பெற உடம்புகளை எங்கு இவர்கள் பெறுகிறார்கள்? மது அருந்தி விட்டு வீதி விபத்துக்களில் மரணமாவோர், தனியாக வசித்து வருவோரில் குளிர்காலங்களில் மரணிப்போர், காரணம் குறிப்பிட முடியாத மரணங்களில் சிக்குவோர், உரிமை கோரப்படாத அனாதை சடலங்கள், இவ்வாறு இந்த தொழிற்சாலைக்கு கிடைக்கும் உடல்களின் பாகங்களில் சில பல்கலைகழகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றதாம்.கால் எலும்புகள் விசேடமாக அயர்லாந்து மற்றும் ஜேர்மனிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.காரணம்? இவ்வெலும்புகளின் மூலம் தயாரிக்கப்டும் ஒரு வகை பசை தான் பற்குழிகளை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படுகின்றனவாம். இந்த பசை ஐரோப்பிய நாடுகளில் பிரபலமானதாகும்.ஆகவே நண்பர்களே நீங்கள் உங்கள் குடும்பம் சகிதம் வெளிநாடுகளுக்குச்செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும் என்கிறது இந்தத்தகவல். இலங்கையில் கூட அண்மையில் குளியாபிட்டிய பகுதியில் இறந்து போன ஒரு குழந்தையின் உடம்பிலிருந்து பல உள்ளுறுப்புகள் மாயமாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனக்கு வந்த இந்தப்படங்களை பார்த்தபோது ஏதோ கிராபிக்ஸ் வேலை போன்றும் தெரியவில்லை.எவ்வளவு ஆறுதலாக வேலைப்பார்க்கின்றார்கள் பாருங்கள். இன்னொரு சந்தேகமும் தோன்றுகிறது.முக்கியமான உறுப்பொன்று தேவையென பெருந்தொகை பணம் தருவதாக எவரும் இந்த தொழிற்சாலைக்கு ஓடர் கொடுத்தால் இங்கு பணியாற்றுபவர்களை கொலை செய்து விட்டு அதை எடுத்தாலும் யாருக்குத்தெரியப்போகிறது?

Monday, November 17, 2008

லோஷனின் கைது

வெற்றி எப் எம் நிகழ்சி முகாமையாளரும் அறிவிப்பாளருமான எனது இனிய நண்பன் லோஷனின் கைதானது இலங்கையில் சர்வசாதாரணமாகிப்போய்விட்ட ஊடக அடக்குமுறை மற்றும் அது சார்ந்த கைதுகளின் வரிசையில் இடம்பிடித்துவிட்ட ஒரு சம்பவமாகிப்போய்விட்டதில் வருத்தம் அதிகம் தான்.ஆனால் அதை விட வருத்தம் என்னவென்றால் ஒரு சிரேஷ்ட தமிழ் அறிவிப்பாளரின் கைது தொடர்பில் தமிழ் ஊடகங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லையே என்பதுதான். லோஷன் ஆரம்பத்தில் சக்தி எப்.எம்மில் பணிபுரிந்து அதற்குப்பின்னர் சூரியன் எப்.எம்மில் இணைந்து தனது அசாத்திய சகலதுறை திறமையினால் சூரியன் எப்.எம் நிகழச்சி முகாமையாளராக உயர்ந்தவர்.தற்போது வெற்றிகரமாக வெற்றி எப்.எம்மில் பொறுப்பான பணியில் இருக்கும் போது இப்படி நடந்து விட்டது.இலங்கையில் ஊடகத்துறையினர் கைது செய்யப்படுவது அல்லது தாக்கப்படுவது கொலைசெய்யப்படுவது என்பது அண்மைக்காலமாக சாதாரணமாகிவிட்ட விடயம். இது தொடர்பில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஊடக அமைப்புக்கள் ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டு விட்டு கோட்டை புகையிரத நிலையம் அருகில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்துவதோடு முடிந்து விடும். இலங்கை ஊடகத்திற்கு இது ஒரு சாபக்கேடான காலம் போல் உள்ளது.எனினும் ஊடக சொந்தங்கள் அனைவரும் ஒன்றிணைந்து லோஷனின் விடுதலைக்காக பிரார்த்திப்பதை தவிர வேறு வழியில்லை. ஊடகத்தாண்டவம் ஊழித்தாண்டவமாக சற்று பொறுத்துத்தான் இருக்கவேண்டியுள்ளது.கவலை வேண்டாம் லோஷன் வெற்றி பெறுவீர்கள் நீங்கள்.

Wednesday, November 12, 2008

தமிழ் சிற்பிகளால் நிர்மாணிக்கப்பட்டு வரும் புத்த பெருமானின் சிலை


முன்னுரை: இலங்கையில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு மத்தியில் அண்மைக்காலமாக இராணுவத்தளபதி உட்பட அரசாங்கத்தரப்பு அமைச்சர்கள் பலர் இலங்கை ஒரு பௌத்த நாடு என்றும் அது சிங்களவர்களுக்கே சொந்தம் என்றும் கூறி வருகின்றனர். இந்நிலையில் சிங்களவர்கள் பூஜிக்கும் புத்த பெருமானின் சிலை நிர்மாணம் பற்றிய செய்து ஒன்று எனக்குக்கிடைத்தது.மேற்படி சிலை நிர்மாணிக்கப்பட்டு வரும் விகாரையின் பிரதம சாதுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இச்சிலை பற்றிய பல தகவல்கள் படங்களை அனுப்பும்படி கூறினேன். அதைக்கொண்டு இக்கட்டுரையை வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வரைந்தேன். இந்த விடயத்தை நான் எழுத எடுத்துக்கொண்டதற்கு பிரதான காரணமாக அமைந்த விடயங்கள் பல ,அதில் முக்கியமாக நான் கூற விழைந்தது என்னவென்றால் எந்த தமிழர்களை வந்தேறு குடிகள் என்றும் இலங்கையில் அவர்களுக்கு இடமில்லை என்றும் இனவாத சக்திகள் குறிப்பிடுகின்றனவோ அந்த இனவாத சக்திகள் பூஜிக்கும் புத்த பெருமான் சிலையை நிர்மாணிப்பது ஒரு தமிழன் தான். இது அவர்களுக்கு விளங்குமா?


*சமாதி நிலையில் அமைந்தவாறு செதுக்கப்பட்டு வரும் இச்சிலை 67.5 அடி உயரத்தில் அமையுமாறு நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.


*இந்தியாவின் பிரபல சிற்பகலாமணி பத்மஸ்ரீ எம்.முத்தையா ஸ்தபதியின் ஆலோசனையின் கீழ் அவரது குழுவினர் இச்சிலையை செதுக்கி வருகின்றனர்.



* 2001ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் உள்ள புத்தர் சிலை சேதமாக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாகவே இச்சிலை உருவாக்கும் எண்ணம் இப்பகுதி கிராம மக்களுக்கு எழுந்துள்ளது.






இலங்கையில் பௌத்த மதம் வேரூன்றிய பிறகு பௌத்தத்தை வளர்த்தெடுப்பதற்காக பண்டைய மன்னர்கள் நிர்மாணித்த விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகளை நாம் இன்று கண்குளிர கண்டு வருகிறோம். பண்டைய காலத்திலிருந்து அதாவது கி.பி 1235 ஆம் ஆண்டுக்குப்பிறகு அனுராத புரம் ,பொலனறுவை யுகங்கள் என அழைக்கப்பட்ட காலங்களே பௌத்தம் தலை தூக்கிய பொற்காலம் என குறிப்புகள் சொல்கின்றன. 12 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்திலும் மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்ட அவுகன புத்தர் சிலை, வெல்லவாயபுதுருவாகல சிலை, புத்தலமாளிகாவில சிலை, என்பவற்றை உதாரணங்களாகக்கூறலாம்.பண்டைய கால பௌத்த பாரம்பரியங்களை எமக்கு எடுத்துக்கூறும் வகையில் அமைந்துள்ள புத்தர் சிலைகள் மற்றும் விகாரைகள் என்பன இலங்கையின் பௌத்த வரலாற்றையும் பண்டையகால கட்டிடகலை நுணுக்கங்களையும் எமக்கு பாறை சாற்றுகின்றன.
இந்நிலையில் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மிக உயர்ந்து கருங்கல் சமாதி புத்தர் சிலை பற்றிய தகவல்களை இங்கு குறிப்பிடுதல் அவசியம். குருணாகல் பகுதியில் அமைந்துள்ள ரம்படகல,ரிதிகமமொனராகலை விகாரையில் அமைந்துள்ள கருங்கற்பாறையில் ஒரு சமாதி நிலை புத்தர் சிலை நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. 2001 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பணிகள் தற்போது முடிவடையும் கட்டத்தில் உள்ளதாக மேற்படி விகாரையின் பிரதம குருவான வணக்கத்துக்குரிய அமரமௌலி தேரோ எமக்குத்தெரிவித்தார்.




சிலை செதுக்கப்பட முன்னர் கருங்கற் பாறையின் உருவம்





இதில் குறிப்பிடப்படவேண்டிய முக்கிய அம்சம் என்னவெனில் இச்சிலையை இந்தியாவின் பிரபல சிற்பக்கலைஞரான பத்மஸ்ரீ சிற்ப கலாமணி எம்.முத்தையா ஸ்தபதியின் ஆலோசனையின் பேரில் அவரது குழுவினரே நிர்மாணித்து வருகின்றனர். சமாதி நிலையில் அமைந்தவாறு செதுக்கப்பட்டு வரும் இச்சிலை 67.5 அடி உயரத்தில் அமையுமாறு நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இச்சிலையை நிர்மாணிப்பதற்கு இரண்டரை கோடி ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தாலும் இவ்விடத்தை சீர்படுத்தி தனியான தியான மண்டபங்கள் அமைப்பதற்கு மேலும் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாவரை செலவாகும் என பிரதம குரு அமரமௌலி தேரோ தெரிவிக்கிறார். இது குறித்து அவர் கருத்துத்தெரிவிக்கையில் செலவீனத்தை பார்க்காமல் இந்த புத்தர் சிலையை நிர்மாணிப்பதற்குறிய வேலைகளை சிற்பக்குழுவினர் 2002 ஆம் ஆண்டு மனத்திடத்துடன் ஆரம்பித்து விட்டனர்.


வரலாற்றில் இடம்பிடிக்கப்போகும் இச்சிலை நிர்மாணப்பணிகளுக்காக அப்போதைய இந்தியத்தூதுவர் நிருபமா ராவ் ரூபா 25 இலட்சத்தை மனமுவந்து கொடுத்துதவினார். மேலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் ஒரு இலட்சததையும்,மலீக் சமரவிக்ரம ரூபா 5 இலட்சத்தையும், மற்றும் தாராள சிந்தையுடையோர் பலர் இந்நிர்மாணப்பணிகளுக்காக மனமுவந்த நிதியுதவி செய்துள்ளனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 25 இலட்சம் ரூபா கொடுத்துதவியதையும் எம்மால் மறக்க முடியாது.


இச்சிலை பற்றி குறிப்பிட்டுக்கூறவேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால் பண்டை காலத்திலிருந்து அதாவது 12 ஆம் நூற்றாண்டுக்கு பிற்பட்ட காலத்தில் வெளிநாட்டவரின் ஆதிக்கத்தின் கீழ் அக்காலப்பகுதியில் ஏற்பட்ட சமூக ,பொருளாதார மாற்றங்களினால் எமது பண்பாடு கலாசாரத்துடன் இணைந்து கலைகளும் படிப்படியாக வீழ்ச்சியுறத்தொடங்கின. சுதந்திரத்துக்கு பிற்பட்ட காலப்பகுதியில் குறிப்பிட்டுக்கூறப்படவேண்டிய கலைப்படைப்பு என்றால் 1950 களில் நிர்மாணிக்கப்பட்ட விகேரஹேன புத்தர் சிலையைக்குறிப்பிடலாம். இச்சிலையானது கருங்கல்லில் நிர்மாணிக்கப்படாதபோதும் சுதந்திரத்தின் பின்னர் உருவாகிய எமது கலைப்பண்பாட்டை எடுத்துக்கூறும் குறிப்பிடத்தக்க ஒரு வராற்று சின்னமாக விளங்குகிறது. இதற்குப்பின்னர் எமது இலங்கை தீவில் பரவலாக இச்சிலையை ஒத்த சிலைகள் ,கருங்கல்லில் செதுக்கப்படாத சிலைகள் என்பன எழுந்தள்ளதை அவதானிக்கமுடிகின்றது.


தற்போது எமது வித்தியா சாகர பிரிவென விகாரையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சமாதி நிலை புத்தர் சிலை அமைக்கப்படுவதற்கு பின்புலமாய் இருந்த காரணங்களை இவ்விடத்தில் கூறுவது சாலச்சிறந்தது என்றே நான் கருதுகிறேன்.2001 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள பாமியன் புத்தர் சிலைகள் தலிபான்களால் சேதமாக்கப்பட்ட சம்பவம் எமது கிராமத்தில் உள்ள மக்களை வெகுவாக பாதித்தது.இக்கசப்பான நிகழ்வினால் ஏற்பட்ட மனத்தாக்கத்தின் வெளிப்பாடே இம்மக்கள் திடசங்கற்பத்துடன் இக்கருங்கல் புத்தர் சிலை செதுக்கும் பணிக்கு ஆதரவளிக்க ஏதுவாயிற்று. இச்சிலையை நிர்மாணிக்கும் வேலைப்பணிகளுக்கு இக்கிராம மக்கள் அடிக்கடி தமது உடல் உழைப்பை வழங்கி அருஞ்சேவையாற்றி வருகின்றனர்.மேலும் சிலர் பண உதவிக்கு அப்பாற்பட்டு இப்பணிக்குத்தேவையான இயந்திர உபகரணங்களையும் வழங்கி உதவி செய்து வருகின்றனர் என்று கூறினார்.
எதிர்கால செயற்பாடுகள்இக்கருங்கல் சமாதி புத்தர் சிலை தொடர்பான எதிர்கால செயற்றிட்டங்கள் குறித்து அமரமௌலி தேரர் கூறுகையில் ‘இச்சிலை செதுக்குவதற்கு ஒதுக்கப்பட் பகுதியைச்சூழவுள்ள பாறையின் ஏனைய பகுதிகள் அகற்றப்பட்டுவிட்டன.குறிப்பிட்ட பாறையில் சிலையின் மேற்பகுதி அதாவது சிரசு பாகம் முழுமையாக செதுக்கப்பட்டு விட்டது. இச்சிலையை 2009ஆம் ஆண்டளவில் முழுமையாக செதுக்கி முடித்து விட முடியும் என பிரதான சிற்பி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இச்சிலை நிர்மாணம் தொடர்பில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்களும் கூட மிக உற்சாகத்துடன் தமது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றார்கள்.


இங்கு இன்னுமோர் விடயத்தை கூற வேண்டும். எமது பண்டைய மன்னர்கள் கற்பாறைகளில் செதுக்கி வைத்ததும்,இன்று சிதைவடைந்த நிலையில் உள்ளதுமான அனுராதபுரம் பொலன்னறுவை கால சிலைகள் உங்கள் பார்வையில் படும் போது ஏற்படும் மகிழ்சி உணர்வை உங்களால் மதிப்பிட முடியுமா? அதன் பெறுமதியை வெறும் பண அடிப்படையில் எடை போட முடியுமா? மொனராகலை பிரிவெனா விகாரையில் உள்ள இளம்பிக்குமாரும்,கிராமத்தவர்களும் அனுபவம் மிக்க இந்திய சிற்ப கலைஞர்களின் உதவியுடன் மொனராகலை இரம்பொடகலையில் அமைந்துள்ள ஓர் உயிரற்ற பாறைக்கு உயிரூட்டி மிகப்பிரமாண்டமான தனிக்கருங்கற் புத்தர் சிலை ஒன்றை உருவாக்கி வருகின்றனர். ஆகவே உயிரற்ற ஒரு பாறை புத்த பெருமானின் மேன்மையான இயல்புகள் வெளிப்படும் விதமாக படிப்படியாக உயிரூட்டப்படுவதை பார்த்து ஆனந்தமடைய உங்கள் அனைவரையும் குடும்பம் சகிதம் அன்போஐ அழைக்கின்றோம். தேசிய பொக்கிசமாகவும் எம் எதிர்காலச் சந்ததியினரின் சொத்தாகவும் விளங்கப்போகும் இப்பிரமாண்டமான சிலையை வெற்றிகரமாகக்செதுக்கி முடிக்க தங்கள் அனைவரதும் தாராளமான பங்களிப்பையும் பெறுமதி மிக்க ஒத்துழைப்பையும் இக்கருங்கற்சிலை நிர்மாண குழு மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றது’ என்கிறார் தேரர்.இலங்கையின் வரலாற்றில் இடம்பெறப்போகின்ற இக்கருங்கற் சமாதி புத்தர் சிலைநிர்மாணப்பணிகள் சிறப்பாக இடம்பெற நாமும் பிரார்த்திப்போம்.இச்சிலையின் நிர்மாணப்பணிகள் மற்றும் விகாரையின் வரலாறு குறித்து அறிந்து கொள்ள http://www.samadhibuddhastatue.org/ எனும் இணையத்தளத்தில் பிரவேசித்து தகவல்கள் படங்களை பெறமுடியும்.

Friday, November 7, 2008

காட்டு யானைகள், ஆதிவாசிகளை விட கேவலமாகப்போய் விட்ட மலையக மக்கள்

தலைப்பில் உதாரணம் காட்டி விட்டு விளைவுகளை கூறும் விதமாக அமையப்போவதில்லை இக்கட்டுரை. இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2009 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் மலையக மக்கள் எந்தளவுக்கு புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை விட எந்தளவிற்கு கேவலப்படுத்தப்பட்டிருக்கின்றனர் என்பது தான் இங்கு பேசப்பட வேண்டிய விடயம்.

இது ஒரு யுத்தகால வரவு செலவு திட்டம் என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயமே. இம்முறை பாதுகாப்பு செலவீனங்களுக்காக என்றுமில்லாதவாறு அதிக தொகையை ஒதுக்கியிருக்கும் அரசாங்கம் மக்களின் மீதான சுமையை அதிகப்படுத்தியுள்ளது. பொதுவாக அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் வரவு செலவு திட்டத்தில் தனியார் துறைக்கான ஒதுக்கீடுகள் எதுவும் இல்லாவிட்டாலும் யோசனைகள் சமர்ப்பிக்கப்படும்.ஆனால் இம்முறை அப்படியான ஒரு வாசகம் கூட இடம்பெறவில்லை. இதில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது பெருந்தோட்டத்தொழிலாளர்கள் தான். இலங்கையின் தேசிய வருமானத்தில் முக்கிய இடத்தைப்பெறும் தேயிலை ஏற்றுமதி தொழிற்றுறையோடு தொடர்பு பட்டுள்ள இவர்களின் எதிர்கால அபிவிருத்தி அல்ல இவர்களின் வேதன உயர்வு குறித்து எவ்வித யோசனைகளும் சமர்ப்பிக்கப்படவில்லை.


இதில் என்ன வேதனையான விடயம் எனில் நிதி அமைச்சராக இருக்கும் ஜனாதிபதிக்கு இலங்கையின் காட்டு யானைகள் மற்றும் ஆதிக்குடிகளின் மேல் இருக்கும் அக்கறை நூறு வருடங்களுக்கும் மேலாக இலங்கைக்கு அந்நிய செலாவணியை பெற்றுத்தருவதில் முன்னணியில் இருக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் மேல் இல்லை.


இலங்கையின் காட்டு யானைகளை பாதுகாக்கவென எதிர்வரும் வரும் வரவு செலவு திட்டத்தில் 300 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ள அரசாங்கம் இலங்கையின் ஆதிவாசிகளான வன்னியலா எத்தோக்களின் (வேடர்கள்) எதிர்காலம் மற்றும் அவர்களின் கிராமங்களை பாதுகாக்கவென 50மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இலங்கையின் இயற்கை வளம் தொடர்பிலும் ஆதிவாசிகளின் பால் அரசாங்கத்திற்கு உள்ள அக்கறையை வரவேற்கிறோம். மலையக மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? காலம் காலமாக தமது உயிரையும் உதிரத்தையும் மண்ணுக்கு காணிக்கையாக்கி ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கத்தையும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள். இவ்வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்ட பகுதி மக்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் பாரிய உபத்திரவம் ஒன்றை கொடுத்திருக்கின்றது அரசாங்கம்.
அது தான் கோதுமை மா மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு.


மலையக மக்களை பொறுத்தவரை அவர்களின் மூன்று நேர உணவாக இருப்பதே கோதுமை மாவின் மூலம் செய்யப்படும் உணவு பதார்த்தங்கள்;குறிப்பாக ரொட்டி. தற்போது அதிகரித்திருக்கும் வரியினால் அவர்களின் அன்றாட உணவு முறைகளிலும் மண் விழப்போகின்றது. கூட்டு ஒப்பந்தம் என்ற சங்கிலியினால் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பான உரிமைகளும் கட்டிப்போடப்பட்டுள்ளன.விலைவாசி என்பது அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் உயர்வர்க்கத்தினருக்குமான விடயம் அல்லவே.எல்லா பிரிவினரும் ஒரே அளவு பணம் கொடுத்துத்தானே பொருட்களை கொள்வனவு செய்யப்போகின்றனர்? அப்படியிருக்கும் போது மிக மோசமான வறுமை கோட்டுக்குள் தள்ளப்பட்டிருக்கும் மலையக மக்களிடம் மட்டும் ஏன் இந்த அரசாங்கம் இப்படி பாரபட்சமாக நடந்து கொள்கிறது?

இதற்கு பதில் இருக்கிறது.மலையக மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டிருக்கும் சிலர் அரசாங்கத்தின் அமைச்சர் பதவி எனும் பிச்சையைப்பெற்றுக்கொண்டு வாய் மூடி மௌனியாக இருக்கும் வரை மலையக மக்களுக்கு விமோசனம் என்பதே கிடையாது. மேலும் தமக்குரிய உரிமைகளை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் வழங்கத்தவறும் பட்சத்தில் தொழிலாளர்களை அது போராட்ட களத்தில் குதிக்கவே ஆயுத்தப்படுத்துகிறது என்று தான் கூற வேண்டியுள்ளது. தொழிலாளர்களுக்கு இந்த சம்பளம் தான் வழங்கப்படவேண்டும் என்று வரையறை செய்ய எவருக்கும் உரிமையில்லை . ஆனால் தேயிலை தோட்டங்களின் உரிமையாளர்களான முதலாளிமார் சம்மேளனத்துடன் குறிப்பிட்ட தொழிற்சங்கங்கள் இந்த கூட்டு ஒப்பந்தத்தை செய்து கொண்டு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை புதிப்பித்துக்கொண்டு இந்த நாடகங்களையெல்லாம் அந்த இறைவனும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்.


அமெரிக்கர்கள் கறுப்பினத்தவரை அடிமைகளாக நடத்திய காலம் போய் அதே அமெரிக்கர்கள் இன்று ஒரு கறுப்பினத்தவரையே ஜனாதிபதியாக தெரிவு செய்யும் காலமும் வந்து விட்டது.
ஆனால் உலகில் தமது இனத்தை தாமே ஆண்டு அவர்களை அடிமைப்படுத்தி அவர்களுக்கு சுதந்திர காற்றை சுவாசிக்க விடமுடியாது முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருக்கும் நிலை இலங்கையில் மலையகத்தில் மட்டும் தான் உள்ளது.

Thursday, October 30, 2008

இலங்கை தமிழ் அமைச்சர்கள் பதவி விலகுவார்களா?

இலங்கையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் யுத்தத்தின் காரணமாக அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு ஆதரவாக தமிழக அரசு இந்திய மத்திய அரசிடம் முன்வைத்த கோரிக்கைகள்,நிபந்தனைகள் ,பதவி விலகல் மிரட்டல்கள்,பேச்சுவார்த்தைகள் போன்றனவும் தமிழ் திரை உலகத்தினரின் இராமேஸ்வர ஆர்ப்பாட்டங்களும் ஆவேச பேச்சுகளும், தமிழகத்தின் ஏனைய அமைப்புக்கள் நடத்திய ஆர்ப்பாட்ட பேரணிகள் அது தொடர்பான கைதுகள் இவை தான் இலங்கையில் வெளி வரும் மும்மொழி பத்திரிகைகளில் கடந்த இரண்டு வார கால தலைப்புச்செய்திகள்.
செய்திகளுக்கு என்ன பலன் என்று ஆராய்வதோ அது தொடர்பான விமர்சனமோ அல்ல இவ்வாக்கம். நேரடியாக விடயத்திற்கு வந்து விடுகிறேன்.



இலங்கையில் வடக்கு கிழக்கு பிரதசேத்திலும் மத்திய பிரதேசமான பெருந்தோட்டப்பகுதிகளிலும் தமிழர்கள் செறிந்து வாழ்வது அனைவரும் அறிந்த விடயம் தான். அண்மைக்காலமாக மிகவும் ஆக்ரோஷமாக முன்னெடுத்துச்செல்லப்படும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள, கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்காக எமது அண்மைய நாடும் ஆசிய பொலிஸ்காரனாக உருவெடுக்க துடித்துக்கொண்டிருக்கும் இந்திய நாட்டின் தமிழக மாநிலத்தில் ஏற்பட்ட உணர்ச்சிக்கொந்தளிப்புகள் பற்றி உலகமே அறியும்.

இதில் உச்சகட்டமாக மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழக கட்சிகளை சார்ந்த 40 பேர் தமது நாடாளுமன்ற பதவிகளை துறக்கவும் தயார் என்று அறிவித்தமையை குறிப்பிடலாம். இதன் பிறகு இலங்கையிலிருந்து டெல்லி பறந்த பசில் இராஜபக்ச பற்றியோ தமிழக முதல்வர் கருணாநிதி திடீரென நாற்பதாண்டு கால பிரச்சினையை நான்கு நாட்களில் தீர்க்க முடியுமா? என்று அறிக்கை விட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு இலட்சம் தருகிறேன் என்று பல்டி அடித்ததை பற்றியும் நான் பேச வரவில்லை.


இலங்கையில் துயருறும் தமிழ் மக்களுக்காக தமிழகத்தில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவோம் என்று அறிவித்தபோது இலங்கை அரசிடம் ஒட்டிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் என்ன செய்து கொண்டிருந்தன? அவற்றின் நிலைப்பாடு தான் என்ன?தற்போதுள்ள அரசாங்கமே கொடிய யுத்தத்தை கட்டவிழ்த்து விட்டு தமிழினத்தை அழிக்கும் கைங்காரியத்தை செய்து கொண்டிருக்கின்றது என்றால் அந்த அரசாங்கத்திற்கு முட்டு கொடுத்துக்கொண்டு அமைச்சுப்பதவிகள் மூலம் சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு மாதம் மாதம் தமது இன மக்களுக்கு எதிரான அவசரகால சட்ட நீடிப்புக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் கையை உயர்த்திக்கொண்டிருக்கும் இவர்கள் பதவி விலகத்தயாரா?


எத்தனை அவமானங்களுக்கு உட்பட்டும் இந்த அரசாங்கத்திடம் தான் ஒட்டிக்கொண்டிருப்போம் என்பது இவர்களது எந்த இன ஜனநாயகமோ தெரியவில்லை. தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகித்து அமைச்சர் பிரதி அமைச்சர் பதவிகளை வகித்துக்கொண்டிருக்கும் சிறுபான்மை இன மக்கள் பிரதிநிதிகள் இந்திய வம்சாவளியினர் என்று கூறவே கேவலமாகவுள்ளது என ஒரு மூத்த மலையக கலைஞர் என்னிடம் கூறி வேதனையுற்றார்.


வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் பிரச்சினைகள் பற்றி சூடாக விவாதம் நடந்துக்கொண்டிருந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினை வேறு மலையகம் வாழ் தமிழ் மக்களின் பிரச்சினைகள் வேறு என்று கூறியே காலங்கடத்திவிட்டார்களே, மலையக மக்களின் பிரச்சினைகள் என்னவென்று இத்தனை நாட்களாய் பட்டியல் போட்டுக்கொண்டா இருந்தார்கள் இவர்கள்? யுத்த சூழ்நிலையில் வடக்கு கிழக்கு மக்கள் அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் காலகட்டங்களில் நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக மக்கள் மகிழ்ச்சியாகவா வாழ்ந்துக்கொண்டிருந்தனர்?

ஐயா பிரித்தானிய காலத்து லயங்களும் மாட்டுக்கொட்டில்களும் தானே ஐயா இங்குள்ள மக்கள் சிலருக்கு இது வரை வீடுகளாக இருக்கின்றன. இதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்
இலங்கையின் மத்திய பிரதேசமான மலையகத்தில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளி மக்கள் 21 வருட கால யுத்தத்தினால் பாதிக்கப்படவில்லை என்பது எவ்வளவு முட்டாள்தனமான கருத்து?இன்றைய தினத்தில் யுத்தம் மற்றும் 1983 வன்செயல்களால் இந்தியாவில் அகதிகளாக இருக்கும் இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களின் தொகை 28,500 என்று சொன்னால் சந்தேகமேயில்லை நீங்கள் நம்பமாட்டீர்கள். இலங்கை தமிழர்களுக்காக இந்தியாவில் ஏற்பட்ட எழுச்சி இப்படியிருக்க நீங்கள் உள்ளூரில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் ஒன்றுமே சொல்ல மாட்டீர்கள் தமிழர்கள் வந்தேறு குடிகள் என பெரும்பான்மை இனத்தவரால் ஒவ்வொரு நாளும் பாராளுமன்றத்தில் துவேஷம் அள்ளி வீசப்படும் போது கூட புன்சிரிப்போது அதை ஏற்றுக்கொண்டவர்கள் தானே நீங்கள். பாவம் உங்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தவர்கள். இருந்தாலும் ஒன்றை மற்றும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள் வரலாற்றில் நீங்கள் என்ன பெயர் கொண்டு அழைக்கப்படப்போகின்றீர்கள் என்று அறிந்து நான் உண்மையில் மனவேதனை அடைகின்றேன்,காரணம் நான் ஒரு தமிழன்!

Wednesday, October 29, 2008

தெரிந்த கிரிக்கெட்டில் தெரியாத விடயங்கள் (3)

டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான இளம் வீரர்கள் பற்றி நாம் அறிவோம். எனினும் அதிக வயது வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்கள் எவரையாவது அறிந்திருக்கிறீர்களா? அவர்களைப்பற்றி பார்ப்போம். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 50 வயதுக்கு மேல் விளையாடியவர்கள் நான்கு பேரே உள்ளனர்.இதில் முதலிடம் பிடிப்பவர் இங்கிலாந்தின் முன்னாள் சகல துறை வீரர் வில்பிரட் ரோட்ஸ். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக கிங்ஸ்டனில்1929ஆம் ஆண்டு தனது இறுதிப்போட்டியில் விளையாடும் போது அவரது வயது 52 வருடங்கள் 165 நாட்களாகும்.


இதே போட்டியில் விளையாடிய மற்றுமோர் இங்கிலாந்து வீரரான ஜோர்ஜ் கன்னுக்கு அப்போது வயது 50 வருடங்கள் 303 நாட்கள். ஆனாலும் இந்தப்பட்டியலில் முதன் முதலில் 50 வயது வரை கிரிக்கெட் விளையாடிய வீரர் என்ற பெருமையைப்பெறுகின்றவர் இங்கிலாந்து அணியின் பிரபல வீரர் டபிள்யூ கிரேஸ். அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக 1899 ஆம் ஆண்டு தனது இறுதி டெஸ்டில் விளையாடும் போது அவரது வயது 50 வருடங்கள் 320 நாட்கள். இறுதியாக இப்பட்டியலில் இணைந்து கொள்கிறார் அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் பேர்ட் ஐயர்ன்மோர்கர். 1932 ஆம் ஆண்டு சிட்னியில் இடம்பெற்ற பொடிலைன் தொடரில் அவர் தனது இறுதிப்போட்டியில் விளையாடும் போது அவரது வயது 50 வருடங்கள் 327 நாட்கள்.ஆக இதற்குப்பிறகு இது வரை கிரிக்கெட் விளையாடிய எந்த வீரரும் 50 வயது வரை ஏன் 41 வயதைக்கூட தாண்டி விளையாடியதில்லை.
பின் குறிப்பு: இடது பக்க மேல் மூலையில் தாடியுடன் இருப்பவர் தான் டபிள்யூ கிரேஸ்.முதல் தர போட்டிகளில் இவரது சாதனைகள் மூர்ச்சையடைய வைக்கும். 870 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 54,211 ஓட்டங்களை குவித்துள்ளார்.சதங்கள் 124,அரைச்சதங்கள் 251.மேலும் 2809 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

Thursday, October 23, 2008

குருவியை கொன்ற கிரிக்கெட் வீரர்

ஒரு வருடத்திற்கு முன்பு மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் அந்த நாள் ஞாபகம் என்ற தலைப்பில் சில சுவாரஸ்யமான கிரிக்கெட் தகவல்களை சேகரித்து தொடராக எழுதி வந்தேன். அதில் எனக்கு மறக்க முடியாத ஒரு சம்பவமாக இந்திய கிரிக்கெட் அணியின் ஜஹாங்கீர் கான் என்ற பந்து வீச்சாளருக்கு நடந்த அனுபவம் மனதில் பதிந்து விட்டது.இப்படி ஒரு சம்பவம் நடந்தது குறித்து இந்தியாவிலுள்ள எத்தனை கிரிக்கெட் இரசிகர்களுக்குத்தெரியும் என்பது எனக்குத்தெரியாது. எனினும் கிரிக்கெட் வரலாற்றில் பதிவாகி விட்ட இந்த விடயத்தை என் சக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


விடயத்திற்கு வருவோம்,

இந்தியாவின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் அணி குறித்து நான் புதிதாக எதுவும் கூறப்போவதில்லை.1932 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தனது முதல் டெஸ்ட் சுற்றுலாவை மேற்கொண்டு இங்கிலாந்து சென்ற இந்திய அணிக்கு சி.கே.நாயுடு தலைமை தாங்கினார். அந்த முதல் டெஸ்ட் அணியில் பங்கு கொண்ட பந்து வீச்சாளர் தான் மொகமட் ஜஹாங்கீர் கான். 1910 ஆம் ஆண்டு பெப்ரவரி 1ஆம் திகதி பஞ்சாப் மாநிலத்தின் ஜுலாந்துர் (இப்போது ஜலாந்தர்) எனும் இடத்தில் பிறந்தவர்.
முதல் தர போட்டிகளில் 3327 ஓட்டங்களையும் பெற்றிருப்பதோடு 328 விக்கெட்டுகளையும் வீழத்தியிக்கிறார். உள்ளூர் போட்டிகளில் திறமை காட்டிய இவர் இந்திய தேசிய அணியில் இடம்பிடித்து இங்கிலாந்துக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. லோர்ட்சில் இடம்பெற்ற முதல் போட்டியில் இவர் 60 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் இங்கிலாந்தின் ஜாம்பவான் துடுப்பாட்ட வீரர்களான ஹொல்மஸ், வூலி,வெல்லி ஹமண்ட் ஆகியோரும் அடங்குவர். முதல் தொடருக்குப்பின்னர் ஜஹாங்கீர் கானுக்கு இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக அணிக்கு விளையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது.1936 ஆம் ஆண்டு இந்தியா தனது இரண்டாவது டெஸ்ட் தொடரை இங்கிலாந்துக்கு மேற்கொண்ட பிறகு இவர் மேற்படி பல்கலைகழக அணிக்காக விளையாடி வந்தார். இவ்வாண்டு ஜுலை மாதம் லோர்ட்ஸ் மைதானத்தில் எம்.சி.சி அணிக்கு எதிராக ஒரு போட்டியில் விளையாடினார் ஜஹாங்கீர்.
போட்டியில் பந்து வீச ஆயத்தமானார்.மறுபுறம் இவரது பந்துக்கு முகங்கொடுக்க தயாரானார் டி.என்.பியர்ஸ் என்ற வீரர். தனது இடத்திலிருந்து ஓடி வந்து நடுவரை கடந்து பந்து வீசினார் ஜஹாங்கீர், என்ன அதிசயம் பந்து துடுப்பாட்ட வீரரை சென்றடைய முன்னர் ஆடுகளத்தின் குறுக்காக பறந்து சென்ற ஒரு அப்பாவி சிட்டுக்குருவியை பதம் பார்த்தது. அந்தோ பரிதாபம் சிட்டுக்குருவி அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தது.
கிரிக்கெட் விளையாட்டின் நடுவே இடம்பெற்ற இச்சம்பவம் அனைவரையும் ஒரு கணம் அதிர்ச்சியடைய வைத்தது என்வோ உண்மை தான் .அதற்குப்பிறகு ஜஹாங்கீர் தனது பந்து வீச்சில் குருவியை கொன்ற விடயம் பரவி பிரபலமானார்.அந்த சிட்டுக்குருவியும் லோர்ட்ஸ் அருங்காட்சியகத்தில் இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது, குருவியை கொன்ற பந்தும் தான். இச்சம்பவம் நடந்து 72 வருடங்களாகி விட்டன. இது போன்ற சம்பவம் இது வரை கிரிக்கெட்டில் இடம்பெறவில்லை என்று நினைக்கிறேன் அப்படியிருந்தால் சொல்லுங்களேன்?
குறிப்பு: இங்கிலாந்துக்கு சென்ற முதல் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் கட்டம் போட்டு காட்டியிருப்பவர் தான் ஜஹாங்கீர் கான். லோர்ட்ஸ் கிரிக்கெட் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சிட்டுக்குருவியும் பந்தும்.
பின்குறிப்பு: 1988 ஜுலை 23 ஆம் திகதி தனது 78ஆவது வயதில் லாகூரில் காலமானார் ஜஹாங்கீர் கான். இவரது மகன் தான் பிற்காலத்தில் பாகிஸ்தான் அணியின் தலைவராக பிரகாசித்த மஜீட் கான். இம்ரான் கான் இவரது மருமகனாவார்.

தெரிந்த கிரிக்கெட்டில் தெரியாத விடயங்கள்(2)



அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் சச்சின் டெண்டுல்கர் உலகில் அதிக டெஸ்ட் ஓட்டங்களைப்பெற்ற வீரர் என்ற பெருமையைப்பெற்றது அனைவரும் அறிந்த விடயமே.




இச்சந்தர்ப்பதில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறுகிய காலத்தில் 3000ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ள இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் 4000ஓட்டங்களை நெருங்கியுள்ளார்.
தென்னாபிரிக்காவில் பிறந்து வளர்ந்த பீட்டர்சன் அங்கு தனக்கு சரியான சந்தர்ப்பம் இல்லாத காரணத்தினாலேயே இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார். தற்போது இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரராக வலம் வரும் பீட்டர்சன் உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக பரிணமித்து வருகிறார். மூவாயிரம் டெஸ்ட் ஓட்டங்களை பெற இவர் எடுத்துக்கொண்ட காலம் 884 நாட்கள் மட்டுமே.



தனது முதல் டெஸ்ட்டை அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2005ஆம் ஆண்டு ஜுலை மாதம் 21ஆம் திகதி லோர்ட்ஸ் மைதானத்தில் விளையாடினார் இவர். இதற்கு முன்னதாக இச்சாதனையை தன் வசம் வைத்திருந்தவர் இங்கிலாந்து அணியின் மற்றுமொரு சிறந்த துடுப்பாட்ட வீரர் அன்ரூ ஸ்ட்ரஸ்.இவரும் தென்னாபிரிக்காவை பிறப்பிடமாகக்கொண்டவர் என்பது விசேட அம்சம்.இவர் மூவாயிரம் ஓட்டங்களை 1124 நாட்களில் பெற்றார். இதே வேளை டெஸ்ட் போட்டிகளில் மிகக்குறுகிய காலத்தில் 4000ஓட்டங்களை எடுத்த வீரர் என்ற பெருமையும் இங்கிலாந்து வீரர் ஒருவருக்கே உண்டு. அவர் மார்க்கஸ் திரஸ்கோதிக். மிகச்சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளங்கிய இவர் சில தனிப்பட்ட காரணங்களுக்காக அணியில் இருந்து முற்றாக நீங்கியுள்ளார். இவர் 1597 நாட்களில் மேற்படி இலக்கை அடைந்தார்.





தற்போது 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பீட்டர்சன் 3890 ஓட்டங்களை பெற்றுள்ளார். ஆக இவருக்கு இன்னமும் 110 ஓட்டங்களே சாதனைப்படைக்க தேவை. மேலும் ஒன்பது மாதங்கள் கைவசம் உள்ளன.தற்போது தென்னாபிரிகாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முடித்துக்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அடுத்த வருடம் ஜனவரி மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு டெஸ்ட் சுற்றுலா ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.அதன் போது பீட்டர்சனுக்கு புதிய சாதனை படைக்க வாய்ப்புண்டு.

இது சுப்ரமணியபுரம் அல்ல


சிம்சோனும் தெலீலாவும்





பெஞ்சமின் அண்ணா கொடுத்த குறிப்புகளைக்கொண்டு எனது தேடல் மூலம் சிம்சோன் மற்றும் அவனது காதலி தெலீலா ஆகியோரின் சரித்திரத்தை ஒருவாறு கண்டு பிடித்து விட்டேன். நன்றி பெஞ்சமின் அண்ணா.








இதை எனது நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளாவிட்டால் மறுபடி தலை வலி வந்து விடும்.
இதை நான் கிரேக்க நாவல் என்று கூறியது தவறு என்று தான் நினைக்கிறேன்.காரணம் பைபிளில் கூறப்படும் இந்த கதை யூதர்கள் மற்றும் பெலிஸ்தினியர்களுக்கிடையில் ஆரம்ப காலந்தொட்டு இடம்பெற்று வரும் பகைமையை கூறுகிறது. இதில் ஓரிடத்தில் கிரேக்க ஜாம்பவான் ஹேர்குலிஸுக்கு இணையான வீரன் சிம்ஸோன் என வர்ணிக்கப்பட்டுள்ளது.
சாம்சன் அல்லது சிம்சோன் என வர்ணிக்கப்படும் இக்கதையின் நாயகன் யூத வமிசத்தை சேர்ந்தவன். இவனது தந்தை பெயர் மனோஹா. இவர் இஸ்ரேலின் அப்போதைய பழங்குடி இனங்களில் ஒன்றான டான் (Dan) எனும் இனத்தைச்சேர்ந்தவர். இப்பழங்குடியினரை Tribe of Dan என்று அழைக்கின்றனர்.
ஆறு முக நட்சத்திரத்தின் மத்தியில் உள்ளஒரு பாம்பு தான் இவர்களின் சின்னம்.இவர்கள் அனைவரும் ஹிப்ரு மொழியை பேசுபவர்கள் என குறிப்புகள் கூறுகின்றன.
சிமியோன் ,லெவி,ரீபன்,ஜுடா என்பன இக்காலத்தில் இங்கு வாழ்ந்த ஏனைய பழங்குடி இனங்களாகும்.
இவர்களின் குடும்பம் வாழ்ந்த இடத்தின் பெயர் ஸோரா.இது ஜெருசலேத்திலிருந்து 8 மைல்கள் மேற்கே அமைந்துள்ள ஒரு பிரதேசம். சிம்சோன் காதலித்த தெலீலா இஸ்ரேலின் சொரக் வெளி என்றழைக்கப்பட்ட இடத்தைச்சேர்ந்தவள்.இவள் பெலிஸ்த்தினியர் வம்சத்தை சேர்ந்தவள்.இரு இனங்களுக்கிடையில் பகைமை பாராட்டப்பட்டாலும் காதலுக்கு முன்னே அவையெல்லாம் தூசு தானே?
ஆனால் அதற்கு முன்பாக சிம்சோன் மற்றுமொரு பெலிஸ்தீன் இனப்பெண்ணை காதலித்து மணப்பதற்கு தயாராகவிருந்தான். அந்த வரலாற்றை சுருக்கமாக பார்த்து விடுவோம்.
கட்டிளங்காளையாக வளர்ந்த சிம்சோன் பெலிஸ்தீனின் டிம்னா எனும் இடத்தைச்சேர்ந்த ஒரு அழகிய யுவதி சீது காதல் கொண்டு தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்ய ஆயத்தமானான். ஆனால் இது இறைவனின் பேரால் நடந்தது என கூறப்படுகிறது.
பெலிஸ்தீனியர்களை முற்று முழுதாக அழிக்கும் படலத்தின் ஆரம்பமே இத்திருமணம் சம்பவம் என்று பெற்றோர்கள் உணர்ந்தனர்.அதன் படி தான் நடந்தது.

குறிப்பிட்ட பெலிஸ்தீன பெண்ணை அவள் இருக்கும் இடத்திற்கே சென்று மணம் புரிந்து வருகிறேன் என்று வீராவேசத்தோடு புறப்பட்ட சிம்சோனை இடையில் ஒரு இராட்சத சிங்கம் எதிர்கொண்டது.மிக இலகுவாக அதை வீழத்திய சிம்சோன் அதன் தாடையை கிழித்துப்போட்டு அப்பால் சென்றான். இச்சம்பவத்தை சிம்சோன் யாரிடமும் கூறவில்லை.
வெற்றிகரமாக தனது மனைவியை அழைத்துக்கொண்டு திருமணத்திற்காக திரும்பும் வழியில் சிம்சோன் ஒரு காட்சியை காண்கிறான். அவன் கொன்று போட்ட சிங்கத்தின் உடலில் தேன் பூச்சிகள் கூடு கட்டி சுவை மிகு தேனை சொரிந்து கொண்டிருந்தன. இந்த தேனை சேகரித்த சிம்சோன் அதை தனது பெற்றோருக்குக்கொண்டு வந்து கொடுத்தான்.
திருமண நாள் நெருங்கியது. அப்போது மணப்பெண் தோழர்களாக வந்திருந்த 30 பெலஸ்தினீயர்களிடமும் ஒரு புதிர் போட்டான் சிம்சோன். இப்புதிருக்கான விடைசரியாக கூறினால் அனைவருக்கும் உயர்தர உடுதுணிகள் தருவதாக அவன் வாக்களித்தான்.
அந்தப்புதிர் அவன் சிங்கத்தை வீழத்தியதையும் பின்னர் தேன் கூட்டை கண்டதையும் தொடர்புகொண்டதாக இருந்தது.
இந்தப்புதிரை பெலஸ்தினியர்களால் கண்டறிய முடியவில்லை.மெதுவாக அவர்கள் சிம்ஸோனின் மனைவியை அணுகினர். எமது குலப்பெருமை உன்னிடத்தில் தான் தங்கியுள்ளது எப்படியாவது அந்தப்புதிருக்கான விடையை தெரிந்து வா இல்லையேல் உன்னையும் உனது தந்தையையும் எரித்து சாம்பராக்கி விடுவோம் என்று மிரட்டினர். அவளும் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கண்ணீருடன் சிம்சோனை நெருங்கினாள்.
அவன் புதிருக்கான விடையைக்கூற அவள் தனது தோழர்களுக்கு கூறி விட்டாள்.
இங்கு தான் துரோகம் ஆரம்பமாகிறது.
விடையை அவர்கள் சிம்சோனிடம் கூற அவன் வாக்கு கொடுத்தாற்போல் அஸ்கலோன் நகருக்குச்சென்று அங்குள்ள 30 பெலிஸ்தீனியர்களை கொன்று உயர்தர ஆடைஅணிகளை கொண்டு வந்து கொடுக்கிறான். ஆனால் தனது தந்தையின் வீட்டிற்கு வரும் போது எதிர்பாராத விதமாக அவனின் மனைவியை தோழர்களில் ஒருவனுக்கு அவளது தந்தை மணம்முடித்து கொடுத்துவிட கர்ஜனையோடு வீருகொண்டெழும் சிம்சோன் பெலஸ்தீனியர்களின் நிலங்களை கொளுத்தி விடுகிறான். இதற்குக்காரணத்தை கண்டறியும் பெலஸ்தீனியர்கள் சிம்சோனின் மனைவி மற்றும் அவளது தந்தையை உயிரோடு எரித்து விடுகின்றனர். இதுவே சிம்சோன் பெலஸ்த்தீனியர்களை அனைவரையும் வேறோடு அழிப்பதற்கு காரணமாயிற்று.கண்ணில் படும் அவ்வினத்தவர் அனைவரையும் கொன்று தீர்த்தான் சிம்சோன்.

இப்படியான சந்தர்ப்பத்தில் தான் தெலைலா இவனது கண்ணில் பட்டாள்.அவள் பெலஸ்த்தீன இனத்தவள் என்று அறிந்தும் தனது காதலை சொன்னான். உயிருக்குயிராய் காதலித்தான்.
இருந்தாலும் தெலீலா அதை நினைத்துப்பார்த்தாளா என்பது தான் கேள்வி.பெலிஸ்தினியர்கள் ஆசை காட்டி இவளுக்குக்கொடுத்த பணம் மற்றும் நிலபுலன்களுக்காக ஒரு வீரதீரனை காட்டிக்கொடுக்கும் வேலையைச்செய்து வரலாற்றில் காதல் துரோகி என்ற பட்டத்தைப் பெற்று விட்டாள்.

முடிவை முதல் பதிவில் கூறி விட்டாலும் ஒருமுக்கியமான விடயத்தை இங்கு பதிவிட வேண்டும். அதாவது சிம்சோனின் வலிமை இரகசியத்தை அறிந்த தெலீலா பின்னர் அதை பெலஸ்தீனியர்களிடம் கூறியது மட்டுமல்லாது சிம்சோன் தூங்கும் போது அவனை தனது மடியில் கிடத்தி அவன் தலைமயிரை வெட்ட எதிரிகளுக்கும் உதவி புரிந்தாளாம். எப்படிப்பட்ட துரோகியாக அவள் இருந்திருப்பாள்? இதை வாசிக்கும் போது மனது வலிக்கிறது என்றால் அந்த சம்பவத்தை ஓவியமாக பார்க்கும் போது உங்கள் மனது எப்படி இருக்கிறது தோழர்களே?

வேதனை குறிப்பு: சிம்சோன் கண்தோண்டப்பட்டு இராட்சத மண்டப தூண்களை இழுப்பதையும் சிங்கத்தை சம்ஹாரம் செய்வதையும் காதல் துரோகி தெலீலா சிம்சோனை மடியில் கிடத்தி தலைமயிரை வெட்டுவதையும் சித்தரிக்கும் ஓவியங்களை தேடிப்பிடித்து தந்துள்ளேன்.

Wednesday, October 22, 2008

சுப்ரமணியபுரமும் காதல் துரோகமும்

திரைப்படம் வெளிவந்து இத்தனை நாட்களுக்குப்பிறகு அதைப்பறி எழுதுவதென்றால் விடயம் உள்ளது. இத்தனை நாட்களாக இத்திரைப்படத்தைப்பற்றி வந்த விமர்சனம் மற்றும் திறனாய்வு அனைத்தையும் முடிந்தவரை தேடிப்படித்து விட்டேன். பல இணையத்தளங்கள் ஏன் வலைப்பதிவுகளில் கூட இத்திரைப்பட வெளிப்படுத்தல்களை சுவாசித்து முடித்து விட்டேன்.ஆனால் நான் எதிர்பார்த்த ஒரு விடயம் வரவில்லை.
ஆனால் நான் எதிர்ப்பார்த்த அந்த விடயத்திற்கு கொஞ்சம் தீனி போடுமாற்போல இத்திரைப்படம் பற்றி எழுத்தாளர் சாருநிவேதிதா தனது வலைப்பதிவில் கூறியிருக்கிறார்.
சுப்ரமணியபுரம் படத்தில் காதல் துரோகத்தை சிலாகித்து கூறியிருக்கும் அவர் ஓரிடத்தில் ஜுலியஸ் சீசர் கதையில் புரூட்டஸின் துரோகத்தை உதாரணம் காட்டியிருந்தார்.
எதிரிகளின் கத்திக்குத்துக்கு முன்னால், புரூட்டஸ் தனக்கு துரோகியாக மாறி விட்டதே சீஸரின் வேதனையை அதிகப்படுத்தியது என்பது யதார்த்தம்.இது நட்பின் துரோகத்தை கூறும் சம்பவமாக வரலாற்றில் பதிவான விடயம். இச்சந்தர்ப்பத்தில் சுப்ரமணியபுரம் படத்தில் கூட நாயகன் தனது காதலியின் துரோகத்தின் வெளிப்பாட்டை அதிர்ச்சி மூலம் காட்டும் இடம் முக்கியமானது.அந்த அதிர்ச்சியை விட எதிரிகளின் கத்தி வெட்டுகள் அவனை பெரிதாக ஒன்றும் பாதிக்கவில்லை என்பதை அக்காட்சி விளக்குகிறது.
சரி இனி விடயத்திற்கு வருவோம் இப்படத்தை நான் பார்த்தபிறகும் இத்திரைப்படம் பற்றிய கருத்துக்களை கண்ட பிறகும் எனக்கு சிறு வயதில் (9 வயது இருக்கும் என்று நினைக்கிறேன் இப்போது எனக்கு வயது 30) வாசித்த ஒரு கிரேக்க நாவல் ஞாபகம் வந்தது. இதன் நாயகன் பெயர் சிம்ஸோன்.சிம்ஸோனின் வீரகாவியம் என இந்நாவல் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. இக்கதையை மிகச்சுருக்கமாக சொல்கிறேன்.
சிம்ஸோன் பிறந்த நாளில் இருந்து அசகாய சக்தி பெற்ற ஒருவனாக விளங்கினான். இவனது சக்திக்கு பிரதான காரணம் பிறந்ததிலிருந்து சிரைக்கப்படாத அவனது தலைமயிர். இந்த இரகசியம் அவனுக்கும் அவனது தாய்க்கும் மட்டுமே தெரியும். தனது 10 வயதிலேயே காட்டில் சிங்கத்துடன் போரிட்டு அதை வென்ற வீரன் சிம்ஸோன். இப்படியிருக்கும் போது வாலிப வயதை அடைந்தான் சிம்ஸோன்.ஒரு கட்டத்தில் இவனது எதிரிகள் எப்படியாவது இவனை கொல்ல வேண்டும் என்பதற்காக சதி திட்டம் தீட்டினர்.
ஆனால் சிம்ஸோனிடம் உள்ள அசுர பலத்தால் எதிரிகளின் திட்டங்கள் தவிடு பொடியாகின.இந்நிலையில் எதிரிகள் ஓர் அழகியை கண்டு பிடித்து அவனிடம் உள்ள அசுர சக்தி என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக அவனிடம் காதலியாக நடிக்கும்படியும் இதற்கு பெருந்தொகை பணம் தருவதாகவும் கூறினர்.

அதன்படி அந்த இரகசியத்தை தெரிந்து கொள்வதற்கு தன்னையே சிம்ஸோனிடம் கொடுத்தாள் அந்த அழகி (இவளது கதாபாத்திரப்பெயர் மறந்து விட்டது)ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இவள் சிம்ஸோனிடம் அவனது அசுர பலம் பற்றி கேட்ட அவன் புன்னகைத்து விட்டு ஒரு பொய்யை சொல்லுவான். இதை ஒவ்வொரு முறையும் அதை எதிரிகளிடம் கூறி அதன் படி செயற்படகூற இறுதியில் தோல்வியையே தழுவுவார்கள் எதிரிகள். ஒரு கட்டத்தில் இவள் கண்ணீருடன் சிம்ஸோனிடம் என் மேல் உங்களுக்கு அன்பே கிடையாதா உங்களுக்கா என்னையே கொடுத்தேனே உங்கள் வலிமையின் இரகசியத்தை கூறமாட்டீர்களா என கண்ணீர் வடிப்பாள்.
இச்சந்தர்ப்பத்தில் சிம்ஸோன் அவளிடம் உண்மையை மிகவும் வருத்தத்தின் மத்தியிலேயே கூறுவான்.காரணம் அவன் அவளை உண்மையாக நேசித்தான்.தனது உயிருக்கு வலை பின்னப்படுவதை அவர் அறிந்திருக்கவில்லை.மேலும் தனது காதலி தனக்கு என்றுமே காதலியாகத்தான் இருப்பாள் என்ற நம்பிக்கைஅவனுக்கு இருந்தது.இருப்பினும் தனது தாய்க்கும் தன்னை படைத்த கடவுளுக்கும் மட்டும் தெரிந்த இரகசியத்தை காதலிக்கு கூறிய அன்றைய இரவு அதிக மது அருந்தி நித்திரைக்கு சென்றான்.
ஆனால் துரோகியான காதலி இவ்விடயத்தை எதிரிகளிடம் கூற அவர்கள் சிம்ஸோன் தூங்கும் போது மொட்டையடித்து விடுவர். அதிகாலை நித்திரை விட்டெழுந்த சிம்ஸோன் வலுவிழந்த சாதாரண மனிதனாகி விடுவான். தன் காதலியின் துரோகத்தை நினைத்து கண்ணீர் வடித்தான் அந்த அசகாய சூரன்.ஆனால் எதிரிகள் அதற்கும் சந்தர்ப்பம் கொடுக்கவில்லை அவனது கண்களை தோண்டி எடுத்து விட்டு ஒரு பெரிய மண்டபத்தில் இரும்புச்சங்கிலி கொண்டு அவனை கட்டி வைத்தனர். இப்படியே இரண்டு நாட்களுக்கு மேல் உணவு நீர் கொடுக்காது அவனை கொடுமைப்படுத்தினர். சிம்ஸோனுக்கு தண்டனை அறிவிக்கும் நாள் வந்தது. அவனது எதிரிகள் அனைவரும் அந்த பெரிய மண்டபத்தில் நிறைந்திருந்தனர். இச்சந்தர்ப்பத்தில் அந்த மூன்று நாட்களில் சிம்ஸோனின் தலையில் சற்று மயிர் வளர்ந்திருந்தது. இதை உணர்ந்து கொண்ட சிம்ஸோன் தனது பலம் அனைத்தையும் திரட்டி தன்னை பிணைத்து வைத்திருக்கும் சங்கிலிகளை இழுக்க அந்த மண்டபத்தின் பிரமாண்ட தூண்கள் சரிந்து மண்டபமே இடிந்து விழுந்தது. இதில் சிம்ஸோன் உட்பட அவனது எதிரிகள் அனைவரும் நசுங்கி மடிந்தனர்.

அந்த வயதில் எனக்கு இக்கதை மனதில் பாதிப்பை ஏற்படுத்தியது என்றால் உண்மை.இதை விட ஒரு காதல் துரோகக்கதையை நான் பின்னாளில் ஏன் இது வரை கூட வாசித்தது கிடையாது.இருப்பினும் சுப்ரமணியப்புரம் படத்தை பார்த்ததும் எனக்கு அக்கதை மனதில் நிழலாடியது. உடனடியாக ஓடிச்சென்று அந்நாவலை வீடெங்கினும் தேடிப்பார்த்தேன்.ஏமாற்றமே மிஞ்சியது. இக்கதையை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளாவிட்டால் எனது தலை வெடித்து விடும் போல் உள்ளது.இணையத்திலும் சிம்ஸோன் குறித்த ஒரு குறிப்புகளும் இல்லை. இது உண்மையாக நடந்த கதையா அல்லது கற்பனையா என்பதை தாண்டவம் மூலம் நண்பர்களிடம் தான் கேட்க வேண்டும். அது மட்டுமல்லாது எனது நண்பர்கள் இத்திரைப்படத்தைப்பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்பதையும் அறிய விரும்புகிறேன். மேலும் இத்திரைப்படத்தை விட காதல் துரோகத்தை சித்திரிக்கும் தமிழ் படத்தை பார்த்திருக்கிறீர்களா நண்பர்களே?அதையும் கூறுங்களேன்
குறிப்பு: காதலியால் துரோகத்துக்குள்ளாக்கப்படும் காதல் படங்கள் மட்டும்.

Saturday, October 11, 2008

நீ+ நான்= நினைவுகள்


அலைகள் வந்து கால்கள் நனைத்த போது

கொன்று விடும் கோபம் வந்தது,

உன் பெயரை மணலில் எழுதி அமர்ந்திருக்கும் அந்த தருணத்தில்!
உனக்கு கடற்கரை ஞாபகம் வருமா?

வரும் என்று நினைக்கிறேன்,இதை வாசித்தப்பிறகு சரி!
காதல் கரை சேர காதலர்கள் சேரும் இடம் கடற்கரையாம்

என்ன வேடிக்கை பார்த்தாயா?
நாமும் அப்படித்தான் நினைத்தோம்

இன்று கரையில்லா கடலாய் நம் வாழ்க்கை!
காலைச்சூரியன்,பளிச்சிடும் பனித்துளிகள்

அனைத்திலும் நீ…மனதிற்குள் மகிழ்ச்சி
ஆனால் இரவுகள் நரகம்

நிலவாய் நீ கடலாய் நான்

பார்த்துக்கொண்டு மட்டுமேஇருக்கின்றேன்
நினைப்பாயா என்று கேட்டால் உன் மனசு திறக்கிறாய்

நான் நிறைந்து விடுகிறேன்
ஆனால் உன்னை நான்…

இப்படிச்சொன்னால் கோபிப்பாயா?

மரணித்தால் தானே மறக்க

சுவாசமே நீ தானே பெண்ணே

காதலித்துப்பார்; கல்யாணம் முடித்து



மனிதா காதலித்துப்பார் கல்யாணம் முடித்து!முன்னொரு போதும் பார்க்காத முகம் பார்த்து மணநாளன்று பார்த்த முகம் பார்த்து பின் எந்நாளும் அவளுடன் சேர்ந்திருக்கும் சுகம் எண்ணி காதலித்துப்பார் கல்யாணம் முடித்து!
காதல்கள் எல்லாம் கரை சேர்வதில்லை;சேர்ந்தவைகளெல்லாம் தேர்ந்தவைகளில்லை
காதலின் அர்த்தம் புரிந்துணர்வேபுரிந்து கொள்!உன் புது வாழ்க்கையில் ஆரம்பிக்கும் புரிந்துணர்வு புத்துணர்ச்சியானதுஆகையால் காதலித்துப்பார் கல்யாணம் முடித்து!
அனுபவமில்லாத ஆரம்பம் அடிசறுக்கும்என்று தயங்காதே தளராதே அடிக்கடி நீ காணும் புளித்துப்போன புன்னகையை விட உன் புதுத்துணையின் புன்னகை புதுமையானதாகவிருக்கும் காதலித்துப்பார் கல்யாணம் முடித்து!
இங்கு காத்திருத்தல் இல்லை ;தவிப்பில்லை தண்டனையில்லைஇறுதி வரை அவள் எனக்குத்தானா என்ற ஏக்கமுமில்லை!
படகு மறைவிலும் குடையை கவசமாக்கியும்மனதையும் மகிழ்சியையும் பகிர்ந்துகொள்ளத்தேவையில்லை! காதலித்துப்பார் கல்யாணம் முடித்து!
காதலிப்பதை விட காதலிக்கப்படுவதில் தானே சுகம்?
எவரின் தலையீடும் இல்லாமல் நீ காதலிக்கப்படுவதை விரும்புகிறாயா?இன்றே தொடங்கு காதலிப்பதைஆனால் கல்யாணம் முடித்து விட்டு காதலி உன் புதுத்துணையை! இறுதி மூச்சு வரை காதலிக்கப்படுவாய் காதலின் களிப்பை கண்டுணர்வாய்!
2002

Friday, October 10, 2008

எழுத வாசிக்க திறனற்றவர்கள் 781 மில்லியன் மக்கள்

இன்று உலகின் பல நாடுகள் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்ந்து கல்விச்செயற்பாடுகளில் அதிக அக்கறை காட்டி வருகின்றன.இதற்குக்காரணம் பூகோளமயமாக்கத்தின் விளைவு தான் என்றால் மிகையில்லை. அதி நவீன தொழில்நுட்ப திறனும் கணிணிப்பயன்பாடும் இன்றைய உலகை ஆக்கிரமித்தருக்கும் காலகட்டத்தில் எந்தவொரு நாடும் தனது மக்கள் எழுத்தறிவில் பின்தள்ளப்பட்டுள்ளனர் என்று கூற வெட்கப்படும் என்பதே நிதர்சனம்.
ஆனாலும் வறுமை, போஷாக்கின்மை, அரசியல் நெருக்கடிகள், கலாசார பாகுபாடு, அடிமைப்படுத்தல் போன்ற காரணங்களினால் இன்று உலகில் வயது வந்த சுமார் 781 மில்லியன் மக்கள் அடிப்படை எழுத்தறிவு இன்றி உள்ளனர் என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டியுள்ளது. அதாவது சனத்தொகையில் ஐந்தில் ஒருவருக்கு எழுத்தறிவு இல்லை,இதில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள்.மேலும் 103 மில்லியன் சிறார்கள் இன்று பாடசாலை கல்வியைப்பெறமுடியாது வெளியே புறந்தள்ளப்பட்டுள்ளனர் என்பது இன்னொரு சோகமான விடயம்.கல்வியறிவு அல்லது எழுத்தறிவின் முக்கியத்துவம் தான் என்ன? சர்வதேசரீதியாக இது தொடர்பான செயற்றிட்டங்கள் எவ்வாறு முன்னெடுத்துச்செல்லப்படுகின்றன? இவற்றை கொண்டு செல்வது யார் என்ற கேள்விகளுக்கு நாம் பதில் காணவேண்டியவர்களாக உள்ளோம்.
எழுத்தறிவு ஏன் முக்கியம்?
எழுத்தறிவு என்பது மனித உரிமைகளுடன் தொடர்பு பட்ட ஒரு விடயம்.தனிநபர் ஆளுமையிலிருந்து சமூக மனித வள அபிவிருத்தி மற்றும் கல்வி செயற்பாடுகள் அதற்கான சந்தர்ப்பங்கள் என்பன எழுத்தறிவிலேயே தங்கியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி மற்றும் அறிவியல் பண்பாட்டு அமைப்பான யுனஸ்கோவானது ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் 8ஆம் திகதியை சர்வதேச எழுத்தறிவு தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. ‘எந்த ஒரு மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியமல் இருத்தலே எழுத்தறிவின்மையாகும்’ என ஐக்கிய நாடுகள் சபை எழுத்தறிவின்மையை தனது சாசனத்தில் வரையறை செய்துள்ளது.அடிப்படை கல்வியின் இதயம் என எழுத்தறிவை கூறலாம்.இதில் வறுமையை அழித்தல்,சிறுவர் இறப்பு வீதத்தை குறைத்தல்,ஜனத்தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்தல்,பால் சமத்தவத்தை கட்டியெழுப்பல், முறையான அபிவிருத்தியை உறுதி செய்தல்,சமாதானம் மற்றும் ஜனநாயகம் என பல விடயங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன. எழுத்தறிவு என்பது கல்விக்கு எந்தளவில் முக்கியமான ஒரு மையப்புள்ளியாக விளங்குகிறது என்பதற்கு பல நல்ல வழுவான உதாரணங்களைக்கூறலாம்.ஒரு சிறந்த அடிப்படை கல்வியானது மக்களுக்கு வாழ்க்கைக்கு எந்தளவிற்கு முக்கியமோ அதேயளவிற்கு ஏனைய பிற தேவைகளுக்கும் காரணகர்த்தாவாக இருக்கின்றது. எழுத்தறிவின் பயனை அறிந்த பெற்றோர் தான் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புகின்றனர். எழுத்தறிவு பெற்றோர் கல்வி வாய்ப்புக்களை இலகுவாக பெற்றுக்கொள்கின்றனர்,மேலும் ஒரு கல்வி கற்ற சமுதாயமானது அபிவிருத்தி இலக்குகளை இனங்கண்டு சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டது. ஆனால் உலகில் இன்று பல நாடுகள் பல பிரச்சினைகள் காரணமாக எழுத்தறிவை பெறமுடியாதுள்ளனர்.
1965 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதியன்று யுனெஸ்கோவினால் செப்டெம்பர் 8 ஆம் திகதி சர்வதேச எழுத்தறிவு நாளாக பிரகடனம் செய்யப்பட்டது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும் சமூகத்திற்கும்,அமைப்புக்களுகும் அறிய வைப்பது இதன் நோக்கமாகும்.யுனெஸ்கோவின் ‘அனைவருக்கும் கல்வி பற்றிய உலக அறிக்கையின் படி(2006) தென் மற்றும் மேற்கு ஆசிய பகுதிகளிலேயே மிகக்குறைந்த (58.9%)வீதமானோர் (வயது வந்தோரில்)படிப்பறிவில்லாமல் உள்ளனர்.இதற்கடுத்தப்படியாக ஆபிரிக்காவில் 59.7 வீதமும் அரபு நாடுகளில் 62.7 வீதமுமாக உள்ளது.இதில் சுட்டிக்காட்டப்படவேண்டிய விடயம் என்னவெனில் இந்த அறிக்கைக்கும் நாடுகளில் வறுமைக்கும் உள்ள நெருங்கிய தொடர்புகளாகும். ஒரு நாட்டின் கல்வியறிவு வீதத்தை தீர்மானிக்கும் காரணியாக இன்று வறுமை பூதகரமாக எழுந்து நிற்கின்றது. ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தலிபான் போன்ற அமைப்புக்களின் கடுமையான சட்டதிட்டங்களால் அங்குள்ள பெண்கள் பாடசõலை கல்வியை பல வருட காலமாக இழந்து நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வருடத்திற்கான கருப்பொருள்ஒவ்வொரு வருடமும் சர்வதேச எழுத்தறிவு தினம் ஒரு பிரகடனத்தை தாங்கி வரும்.இம்முறை யுனெஸ்கோவினால் ‘எழுத்தறிவே சிறந்த பரிகாரம்’ ("Literacy is the best remedy")என்ற கருப்பொருள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இம்முறை சுகாதாரம் மற்றும் கல்விக்கிடையில் உள்ள தொடர்புகளை விளக்குவதாகவும் இக்கருப்பொருள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.இன்று உலகை அச்சுறுத்தி வரும் எயிட்ஸ்,காசம்,மலேரியா மற்றும் ஏனைய நோய்கள் தொடர்பில் மக்களும் வளர்ந்து வரும் சமுதாயமும் அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்களை இம்முறை கருப்பொருள் உணர்த்தி நிற்கின்றது. கொடிய உயிர்க்கொல்லி நோயான எயிட்ஸ் குறித்தான விழிப்புணர்வு செயற்றிட்டங்கள் மக்களிடையே சென்று சேராததற்குப்பிரதான காரணங்களில் ஒன்றாக எழுத்தறிவின்மை சுட்டிக்காட்டப்படுகிறது. இதற்காக யுனெஸ்கோவினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தான் EDUCAIDS என்று அழைக்கப்படுகிறது. எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தொடர்பான அறிவூட்டல்களை உலகெங்கும் எடுத்துச்செல்வது இதன் பிரதான நோக்கம். இத்திட்டத்தின் இரண்டு பிரதான இலக்குகள் உள்ளன.1) கல்வியறிவின் ஊடாக எச்.ஐ.வி பரவுவதை தடுக்கும் செயற்பாடு2) மோசமாக பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் கல்வியறிவை கொண்டு செல்வதன் மூலம் கட்டுப்படுத்தல்.
உலக நாடுகளின் எழுத்தறிவு விகிதங்கள்
1998 ஆம் ஆண்டு ஐ.நாவின் கணிப்பீட்டின் படி உலக சனத்தொகையில் 20வீதமானோர் எழுத்தறிவற்றவர்களாக இருந்தனர்.இந்தத்தொகையினர் எந்த மொழியிலும் அமைந்த மிக இலகுவான வாக்கியங்களை எழுதவோ வாசிக்கவோ முடியாதவர்கள்.எனினும் அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை முகவர் அமைப்பின்(சீ.ஐ.ஏ) 2007 அறிக்கையின் படி தற்போது உலக சனத்தொகையின் எழுத்தறிவு வீதம் 82 ஆகும். நாடுகள் ரீதியாக பார்க்கும் பொழுது 100 சதவீத எழுத்தறிவை பெற்றுள்ள நாடு என்ற பெருமையை ஜோர்ஜியா பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் முறையே கியூபா ,எஸ்தோனியா,நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.எமது இலங்கை தாய்நாடு இப்பட்டியலில் 87 ஆவது இடத்தைப்பிடித்துள்ளது. எழுத்தறிவு விகிதம்90.7ஆகும்.இப்பட்டியலில் இந்தியாவானது 147ஆவது இடத்தைப்பிடித்துள்ளது.எழுத்தறிவு விகிதம் 61 ஆகும். இந்தியாவிலுள்ள மக்கள் தொகை அதிகரிப்பே அது எழுத்தறிவு விகிதத்தில் பின்தள்ளப்பட்டுள்ளதற்குக்காரணம் என கூறப்படுகிறது.

இலங்கையும் எழுத்தறிவு வீதமும்
எழுத்தறிவை பொறுத்தவரை தென்னாசியாவில் இலங்கை ஒரு முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது.இலங்கையானது யுனெஸ்கோவின் கல்வி சார் அபிவிருத்தித்திட்டங்களில் இணைந்து செயற்படுவதற்காக 1949ஆம் ஆண்டு நவம்பர்14ஆம் திகதி யுனெஸ்கோ அமைப்பில் இணைந்து கொண்டது. இன்று இலங்கையின் எழுத்தறிவு வீதமானது நகரப்புறங்களிலேயே முன்னேற்றங்கண்டுள்ளது எனலாம்.சுதந்திரம் கிடைத்து 50வருடங்களுக்குப்பிறகும் கூடபெருந்தோட்டப்பகுதிகளில் அடிப்படை கல்வி வசதியை பெறத்தவறியுள்ளவர்கள் எத்தனையோ பேர்.இவ்வருடத்திவ் முதல் காலாண்டில் குடிசன மதிப்பீட்டு புள்ளி விபர திணைக்களத்தின் அறிக்கையின் படி இலங்கையின் நகர்ப்புறங்களில் எழுத்தறிவு வீதம் 95 ஆகவும் கிராமப்புறங்களில் 93 வீதமாகவும் பெருந்தோட்டப்பகுதிகளில் 76 வீதமாகவும் உள்ளது.பால் வேறுபாட்டில் ஆண்கள் 94 சதவீத கல்வியறிவையும் பெண்கள் 91.1வீத கல்வியறிவையும் பெற்றுள்ளனர்.யுனெஸ்கோவின் அவிவிருத்தித்திட்டங்களில் எழுத்தறிவித்தல் ஒரு முக்கிய இடத்தைப்பிடிக்கின்றது.ஒவ்வொரு நாடுகளிலும் இத்திட்டங்கள் முன்னெடுத்துச்செல்லப்படுகின்றமை முக்கிய அம்சம்.இதில் முதியோர்களுக்கு கல்வி போதித்தல் பிரதான இடத்தை வகிக்கின்றது.
சர்வதேச எழுத்தறிவு விருதுகள்
யுனெஸ்கோ அமைப்பானது ஒவ்வொரு வருடமும் சர்வதேச எழுத்தறிவு தினமன்று எழுத்தறிவு விருதுகளை (Literacy Prizes) பரிந்துரை செய்கின்றது இவ்வாண்டு இவ்விருதானது பிரேஸில் ,எத்தியோப்பியா,தென்னாபிரிக்கா,ஸாம்பியா ஆகிய நாடுகளில் யுனெஸ்கோவினால் முன்னெடுத்து செல்லப்பட்ட கல்வி செயற்பாடுகளுக்காக கிடைத்துள்ளது.மேலும் மொரோக்கோவிலும் பி.பி.சி நிறுவனத்தினாலும் தயாரிக்கப்பட்ட இரு திட்டங்களுக்கு கௌரவ விருதுகள் கிடைத்துள்ளன.

வேலையில்லா திண்டாட்டமும் இளைய சமுதாயத்தின் மன்றாட்டமும்











*பல நாடுகளில் வசிக்கும் இளையோர் பலர் தன்னிறைவு பெற்ற பொருளாதார சூழலில் வாழ்ந்து இன்று உலகம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆயத்தமாகிக்கொண்டிருக்கும் போது நாம் இது வரையிலும் வேலையில்லா பிரச்சினைக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.





* இலங்கையைப்பொறுத்தவரை பல்வேறு கல்வித்தகைமையுடைய சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் பேர் ஒவ்வொரு வருடமும் தொழில் சந்தையில் நுழைய ஆயத்தமாகின்றனர். ஆனால் இவர்களில் எத்தனைபேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கின்றது?


‘காலநிலை மாற்றமானது இன்று உலகை அச்சுறுத்தும் ஒரு விடயமாக மாறியுள்ளது. இந்த பூமி பந்தை பாதுகாப்பான எவ்வித சூழல் பாதிப்புகளும் இல்லாத ஒன்றாக மாற்றுவதற்குரிய வழிவகைகளை முன்னெடுத்துச்செல்ல இளைஞர்கள் தமது சக்தியை முதலீடு செய்ய முன் வரவேண்டும், காலநிலை மாற்றங்குறித்து விழிப்புணர்வை பெறவேண்டும்.அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் உள்ள இளையோர்,குறிப்பாக இளம்யுவதிகளும் பெண்களும் விவசாயம், உணவு, நீர்,விறகு சேகரித்தல் என்பவற்றில் கூடுதல் பங்காற்றுகின்றனர். ஆனால் எதிர் காலத்தில் இதற்கு பற்றாக்குறை நிலவும் அபாயம் அதிகமாகவே உண்டு.ஆகவே புதிய தொழில்நுட்பம் மற்றும் பழக்கவழக்கங்களை (கல்வியறிவு) கொண்டு இளையோர் எதிர்கால அபாயமான காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் இப்போதிருந்தே தமது பங்களிப்பை நல்க வேண்டும்’



பான் கீன் மூன் (செயலாளர் நாயகம் ஐக்கிய நாடுகள் சபை)



சர்வதேச இளையோர் தினமான ஓகஸ்ட் 12 ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அவர்கள் தனது விசேட அறிக்கையில் தெரிவித்திருந்த கருத்துக்களின் சாரமே இது.அவர் ஏன் காலநிலை மாற்றம் குறித்து உலக வாழ் இளையோருக்குக்கூறியுள்ளார்? காரணம் இல்லாமலில்லை. இவ்வாண்டு அனுஷ்டிக்கப்பட்ட சர்வதேச இளையோர் தினத்தின் பிரதான கருப்பொருள் என்ன தெரியுமா? ‘ இளையோரும் காலநிலை மாற்றமும் ; செயற்படுத்துவதற்கன தருணம் (YOUTH AND CLIMATE CHANGE: TIME FOR ACTION) என்பதாகும். ஐக்கிய நாடுகள் சபையினால் வருடாவருடம் குறிப்பிட்ட ஒரு கருப்பொருள் பிரகடனப்படுத்தப்பட்டு அதற்கேற்ப அவ்வருடம் செயற்றிட்டங்கள் முன்னெடுத்துச்செல்லப்படும். சரி இதை ஏன் இச்சந்தர்ப்பத்தில் கூற வந்தேன் என்கிறீர்களா? ஐக்கிய நாடுகள் சபையானது தனது மில்லேனிய அபிவிருத்தி இலக்குகளுக்கேற்பவே திட்டங்களை முன்னெடுத்துச்செல்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் அங்குள்ள நாடுகளுக்கும் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதே நோக்கு. ஆனால் அபிவிருத்திடைந்து வரும் நாடுகளில் உள்ள இளைஞர் யுவதிகள் இன்று எதிர்நோக்கியுள்ள பெரும் பிரச்சினை வேலையின்மையாகும். இது ஒரு பூகோள பிரச்சினை என ஐ.நாவும் ஏற்றுக்கொள்கிறது.
இச்சந்தர்ப்பத்தில் முதலாம் உலக நாடுகளிலும் இப்பிரச்சினை இல்லை என்று கூறமுடியாது ஆனால் அங்குள்ளவர்கள் மூன்றாம் உலக நாடுகளில் வாழும் இளம் சமுதாயத்தினர் போல் பொருளாதார ரீதியிலும் அடக்குமுறையிலும் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்பதே உண்மை. இந்நிலையில் ஐ.நா கூட தனது இலக்குகளை முன்னெடுத்துச்செல்ல இளையோரை எவ்வாறு அதில் பங்குகொள்ளச்செய்கிறது என்பதை அறியக்கூடியதாகவுள்ளது. உதாரணமாக மேலே கொடுக்கப்பட்டுள்ள சர்வதேச இளையோர் தினத்தின் இவ்வருட கருப்பொருளும் ஐ.நாவின் பிரகடனமும்.ஆனால் எமது இலங்கை போன்ற நாடுகளில் வாழும் இளம் சமுதாயத்தினருக்கு இது பொருந்துமா என்பதை நினைத்துக்கூட பார்க்கமுடியாதுள்ளது. நமது நாட்டின் பொருளாதார சூழல், யுத்த நிலைமை,அரசியல் ஸ்திரமற்ற தன்மை என்பவற்றால் ஏற்பட்டிருக்கும் வேலையில்லா திண்டாட்டம் அது தொடர்பில் இளைஞர் யுவதிகளின் ஏக்கம், போராட்டம் என்பன குறித்து புதிதாக ஒன்றும் கூறத்தேவையில்லை. இப்படி ஒரு நிலையில் இருக்கும் இளைஞர் கூட்டத்திடம் சென்று காலநிலை மாற்றத்திற்கு உதவுங்கள் என்றால் என்ன நடக்கும் ? இச்சந்தர்ப்பத்தில் நாம் ஐ.நாவை குற்றம் கூறவில்லை. மாறாக பல நாடுகளில் வசிக்கும் இளையோர் பலர் தன்னிறைவு பெற்ற பொருளாதார சூழலில் வாழ்ந்து இன்று உலகம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆயத்தமாகிக்கொண்டிருக்கும் போது நாம் இது வரையிலும் வேலையில்லா பிரச்சினைக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.
இலங்கையும் இளையோரும்இலங்கையின் மொத்த சனத்தோகையில் கால் பங்கினர் இளையோராவர்.இளையோரை எந்த வயதுக்குள் அடக்கலாம் என்பது பல நாடுகளுக்கும் உள்ள ஒரு தடுமாற்றம்.எனினும் 1529 வயதுக்குட்பட்டோரே இளையோர் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கணக்கு. இளைஞர் யுவதிகள் இலங்கையின் அபிவிருத்தியில் எந்தளவிற்கு பங்களிப்பை வழங்குகின்றனர் என்பது ஒரு பக்கம் இருக்க மறுபுறம் கல்வி கற்று பட்டதாரிகளாகியும் வேலையில்லாதவர்களின் நிலையும் கணக்கிலெடுக்கப்படவேண்டியதொன்று. இவர்களின் தொடர்ச்சியான போராட்டத்தை நாம் அவ்வப்போது ஊடகங்கள் வாயிலாக அவதானித்துக்கொண்டு தான் வருகிறோம் ஆனால் என்ன பயன்? இறுதியில் நாட்டின் அபிவிருத்தியில் பங்களிப்பு நல்காது இருக்கும் ஒரு கூட்டம் என்ற பெயர் தான் இவர்களுக்கு கிட்டப்போகின்றதா என்று கவலையுடன் நினைக்கத்தோன்றுகின்றது. இதற்கு அரசாங்கங்களின் உரிய கொள்கை வகுப்பின்மையே என காரணங்காட்டப்படுகிறது. தொடர்ச்சியாக இவர்கள் அலட்சியப்படுத்தப்பட்டுக்கொண்டே வந்தால் இவர்களுக்கு அடுத்தபடியாக களமிறங்க காத்திருக்கும் கூட்டத்திற்கு என்ன பதில் சொல்வது? இவர்கள் கற்க கல்வி ஒரு சதவீதத்திற்கும் பயன்படாமல் போகப்போகின்றதா? 2006ஆம் ஆண்டு அமைச்சரவை தீர்மானத்தின் படி இளைஞர் வேலை வாய்ப்பிற்கான தேசிய செயற்பாட்டு திட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. இதன் பிரதான திட்டங்களில் ஒன்று 2010 ஆம் ஆண்டில் வேலையில்லாத இளையோர் தொகையை 15 வீதமாக குறைத்தல்,இதுவே 2015ஆம் ஆண்டில் 8 வீதமாக்கப்படவேண்டும் என்பதாகும்.இந்த திட்டமானது ஐ.நாவின் YEN எனப்படும் பூகோள இளையோர் வேலைவாய்ப்பு வலைப்பின்னல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் அமுல் படுத்தப்பட்டதொன்றாகும். இதற்கு சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனமும் உலக வங்கியும் ஆதரவு வழங்குகின்றன. 2007ஆம் ஆண்டின் படி இலங்கையில் வேலையில்லா இளையோரின் சதவிகிதம் 20 ஆகும். ஆக இன்னுமொரு சர்வதேச இளையோர் தினமும் வந்து போய்விட்டது,நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?இத்திட்டத்தை ஒரேடியாக நாடு முழுவதிலும் செயற்படுத்த முடியாது எனக்கூறப்படுகிறது. சர்வதேச தொழில் ஸ்தாபனம் நாடு முழுவதிலும் முதலில் இது தொடர்பான ஆய்வொன்றை மேற்கொள்ள வேண்டும் என இளைஞர் விவகார அமைச்சு கூறியுள்ளது.
இலங்கையைப்பொறுத்தவரை பல்வேறு கல்வித்தகைமையுடைய சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் பேர் ஒவ்வொரு வருடமும் தொழில் சந்தையில் நுழைய ஆயத்தமாகின்றனர். ஆனால் இவர்களில் எத்தனைபேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கின்றது? 2008 ஆம் ஆண்டின் ஒரு ஆய்வின் படி இலங்கையில் வேலையற்றிருப்போரில் அரைவாசி பேர் இளையோர் தானாம்.இது சதவிகிதத்தில் 41 ஆகும். இவர்கள் 1524 வயதுக்கிடைப்பட்டவர்கள் என்பது இன்னுமொரு சோகம்.
வேலையில்லாதோரின் கல்வித்தராதரங்களைப்பார்க்கும் போது இலங்கையில் வேலை வாய்பொன்றை பெற்றுக்கொள்ளும் வகையில் தொழிற்கல்வி முறை இல்லாதது ஒரு பிரதான குறைபாடாகத்தெரிகிறது. வேலையில்லாதிருப்பவர்களில் க.பொ.த சா/ தரத்திற்கு குறைந்த தகைமை கொண்டோர் 3.2 வீதமாகும். க.பொ.த சா/தரம் கொண்டவர்கள் 6.4 வீதம்ஆனால் வேலையில்லா இளையோரில் உயர் தரம் மற்றும் அதற்கு மேலான தகைமைகளை கொண்டோர் 11 வீதமென் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அப்படி பார்க்கும் போது வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டம் நியாயமாகவே படுகின்றது.
கல்வி கற்று வீட்டில் இருக்கும் யுவதிகள்இலங்கையில் வேலையில்லாதோர் தொகையில் இளைஞர்களின் தொகையை விட (14.9%) இருமடங்கு இளம் யுவதிகளின் தொகையாகும் (28.4%வயது 1524) இது ஒரு பாரதூரமான விடயம்.இதில் குறிப்பிட்டுக்கூறவேண்டிய மற்றுமோர் விடயம் ஒரே பணியே இருபாலருக்கும் கொடுக்கப்பட்டாலும் பெண்ணிற்கு வழங்கப்படும் ஊதியத்தொகை குறைவாகும்.இதனால் இவர்களில் பலர் உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாததால் வேலைக்குச்செல்லாமல் வீட்டில் இருக்கின்றனர். நிர்மாணம் மற்றும் விவசாயத்தோட தொடர்புபட்ட பல தொழில் வாய்ப்புகள் பெண்களுக்கென்று இருந்தாலும் அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொதுவாக இன்று இளையோர் அரசாங்க வேலைகளை மட்டும் எதிர்ப்பார்த்திருப்பதாக ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது.ஆனால் அதை விட ஊதியம் கிடைக்கும் தனியார் துறை வேலைக்கு ஏற்றவாறு தங்களை உருவாக்கிக்கொள்ள பல தடைகள் உள்ளதாகத்தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் அரச மற்றும் தனியார் துறை இரண்டும் இணைந்ததாக முன்னெடுத்துச்செல்லப்படும் வேலைத்திட்டங்கள் மூலம் இவர்களின் கனவை நனவாக்கலாம் என்கின்றனர் சில ஆய்வாளர்கள். அரசாங்க தொழில் வாய்ப்புகள் மூலம் ஏனைய சலுகைகளையும் பெறலாம் ஆனால் தற்போதுள்ள இளையோர் ஊதியம் மற்றும் தொழில் பாதுகாப்பு போன்ற விடயங்களில் மாத்திரம் அக்கறை காட்டுபவர்கள் அல்ல என்கின்றது ஒரு ஆய்வு. எனினும் அரசாங்கமும் ஒவ்வொரு வருடமும் தொழில் சந்தைக்கு உள் நுழைய காத்திருக்கும் இளையோரின் எண்ணிக்கையைப்பார்த்து சரி அவர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத்தரும் திட்டங்களை முன்னெடுக்கவேண்டும். இதில் வெளி நாட்டு வேலை வாய்ப்பும் முக்கிய இடத்தைப்பிடிக்கலாம். இல்லாவிடின் அடுத்த தலைமுறை வாரிசுகளும் போராட்டத்தில் தான் காலத்தை கடத்த வேண்டியேற்படும்.

Thursday, October 9, 2008

தெரிந்த கிரிக்கெட்டில் தெரியாத விடயங்கள்(1)

ஒரு நாள் சர்வதேச போட்டி, டெஸ்ட் இரண்டிலும் சந்தர்ப்பம் கிடைத்து விளையாடுவதற்கு வீரர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு இரண்டும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் வித்தியாசமாக கையாளப்படும் என்பதை பலரும் அறிந்திருப்பர்.சரி விடயத்திற்கு வருவோம். டெஸ்ட் போட்டி ஒன்றில் கூட விளையாடாது தொடர்ச்சியாக அதிக ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர் யார் தெரியுமா? அவுஸ்திரேலிய அணியின் சகல துறை வீரர் இயன் ஹார்வியே(Ian Harvey) அவர். இது வரை 73 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவருக்கு ஒரு டெஸ்டில் கூட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 36வயதாகும் ஹார்வி 73 போட்டிகளில் 715 ஓட்டங்களைப்பெற்றிருப்பதோடு 85 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இவருக்கு முன்பதாக இச்சாதனையை கைவசம் வைத்திருந்தவர்கள் பாகிஸ்தானின் சகீட் அப்றிடி, அவுஸ்திரேலியாவின் அடம் கில்கிறிஸ்ட் மற்றும் அன்ரூ சைமண்ட்ஸ். இதை விட டெஸ்ட் அந்தஸ்த்து பெறாத கென்யா அணியின் தலைவர் ஸ்டீவ் டிக்கலோ இது வரை 105 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

தொடர்ந்து வரும்

Wednesday, October 8, 2008

கொட்டிக்கிடக்கும் அழகு







புகைப்படம் எடுத்தல் எனக்குப்பிடித்தவற்றில் ஒன்று. பத்திரிகையாளன் என்ற படியால் என்னிடம் ஒரு டிஜிட்டல் புகைப்படக்கருவி உள்ளது. எங்கள் பகுதியில் இயற்கை அழகுக்கு பஞ்சமே இல்லை. இயற்கை அன்னை நிரந்தரமாய் உறைந்து விட்ட இடமோ என எண்ணத்தோன்றும் அளவுக்கு இங்கு அழகு கொட்டிக்கிடக்கின்றது. செய்தி சேகரிக்கச்செல்லும் போது மனதை பறிகொடுத்து நான் எடுத்த சில படங்களை நண்பர்களுக்காக இங்கு தருகிறேன்.
வேதனை குறிப்பு: இங்கு காணப்படும் சென்கிளயர் (St.Clair) நீர் வீழச்சி இன்னமும் சிறிது காலத்தில் முற்றாக மறைந்து விடும் காரணம் இங்கு அமைக்கப்பட்டு வரும் கொத்மலை நீர் மின் திட்டம்.

எங்களூர் மாரியம்மன் ( ஒரு வேதனை குறிப்பு)

இலங்கையின் பெருந்தோட்டப்பகுதிகளில்காணப்படும் அம்சங்களில் பிரதானமாக விளங்குபவை ஆலயங்கள், தோட்டமுகாமையாளரின் (ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் துரை என்று அழைப்பர்) பங்களாக்கள் மற்றும், மலைப்பிரதேசம். மலையகப்பகுதிகளில் ஆலயங்கள் இல்லாத பெருந்தோட்டங்களே இல்லை எனலாம்.ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் திருவிழா இப்பகுதி மக்களின் வாழ்க்கையில் ஒன்றிவிட்டதொன்று. நான் பிறந்த இடமான வட்டகொடையில் ஓர் அம்மன் ஆலயம் உண்டு.இலங்கையில் வேறெந்த பெருந்தோட்டப்பகுதிகளிலும் இல்லாத ஒரு அமைப்பு எமது ஆலயத்திற்கு உண்டு. அதாவது ஆலயத்தின் ஒரு பாதி நீரிலும் மறுபாதி நிலத்திலும் அமையுமாறு இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இவ்வாலயத்திற்கும் எமது குடும்பத்தாருக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. 1920 களில் தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்களை அழைத்து வரும் பணியை பிரதானமாக ஏற்று செய்தவர்கள் Head Kanganies என்று அழைக்கப்படும் பெரிய கங்காணிமார். அக்காலத்தில் ஒரு தோட்டத்துரைக்கு அடுத்து சகல அதிகாரங்களும் கொண்டு விளங்கியவர்கள் இந்த பெரிய கங்காணிமார். இப்படி வட்டகொடை பிரதசத்திற்கு இந்தியாவின் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பலரை அழைத்து வந்தவர் எனது பாட்டனார் திருமலை வேலுப்பிள்ளை அவர்கள். பெருந்தோட்டப்பகுதிகளில் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்திலும் அதற்குப்பிறகும் இந்த பெரியகங்காணிமாரின் அட்டூழியங்களை தனி அத்தியாயமாக எழுதலாம். அதை பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன். ஆனால் எனது பாட்டனார் தொழிலாளர் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கொண்டவர். அவர் நிரந்தரமாக இங்கு குடியேறிய பிறகு தான் இக்கோயிலின் நிர்வாகத்தை பொறுப்பேற்றார். மற்ற கோயில்களை விட இங்கு நடக்கும் திருவிழா சற்று வித்தியாசமானது. தேர் போன்ற ஒரு அலங்கார அமைப்பை உருவாக்கி அதில் அம்மன் சிலையை வைத்து இக்கோயில் அமைந்துள்ள குளத்தில் திருவிழா அன்று இரவு வலம் வரச்செய்வர். இதற்கு தெப்பத்தேர் என்பர். இதை தெப்பத்திருவிழா என்று அழைப்பர். அலங்கார மின்விளக்குகள் மின்ன,மேளதாளம் முழங்க அம்மன் தெப்பத்தில் இரவு நேரம் உலா வரும் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. சரி விடயத்திற்கு வருவோம் எனது பாட்டனார் அக்காலத்தில் இக்கோயிலின் நிர்வாக பொறுப்பை ஏற்று தெப்பத்திருவிழாவை மிக அமர்க்களமாக செய்திருக்கிறார். இக்கதைகளை நாம் ஆத்தா என்று அழைக்கும் அப்பாவின் அம்மா திகட்ட திகட்ட சொல்வார். அந்நேரம் நீரில் சாகஸங்கள் நிகழத்தும் குழுவினரை இந்தியாவிலிருந்து பாட்டனார் அழைத்து வருவாரம். அவர்கள் நீரில் சைக்கிள் ஓட்டி வியக்கவைப்பார்களாம். மேலும் தெப்பம் குளத்தில் உலா வர ஆயத்தமாகும் போது வானத்தில் ‘வட்டகொடை தெப்பத்திருவிழா’ என்று ஒளிரும் வர்ண வான வெடிகள் வெடிக்குமாம். பாட்டனாருக்குப்பிறகு பரம்பரையாக இப்பணி தொடர வேண்டும் என எனது தந்தைக்கு இந்த நிர்வகப்பொறுப்பு வந்தது. திருவிழா காலங்களில் தெப்பத்தில் அம்மன் சிலையை எடுத்து வைக்கும் பொறுப்பு எமது குடும்பத்தாருக்கு. அந்த இரவு நேர குளிரில் அப்பாவின் கையைபிடித்துக்கொண்டு நான் நின்றது இன்னமும் ஞாபகம் உள்ளது. அம்மா தடுத்தும் என்னை தெப்பத்தில் ஏற்றி விட்டார்கள் அம்மனுடனும் பக்தர்களுடனும் சேர்ந்து நானும் ஒரு முறை தெப்பத்தில் வலம் வந்ததை மறக்க முடியாது. காலங்கள் சென்றன. பெருந்தோட்டப்பகுதிகளில் மாற்றங்கள் ஆரம்பித்தன. பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்றவுடன் பிரித்தானியா சார்ந்த துரைமார்கள் இங்கிலாந்திலேயே தஞ்சமடைந்தனர். ஒரு கட்டத்தில் அப்பா கோயில் நிர்வாகம் முழுதையும் தோட்டத்திற்கே ஒப்படைத்தார். ஆனால் அதற்குப்பின்னும் வழிவழியாக வந்த பாரம்பரியத்தை மாற்ற விரும்பாத தோட்டமக்கள் ஒவ்வொரு திருவிழாவின் போதும் அம்மன் சிலையை எடுத்து வைக்க அப்பாவையே அழைத்துச்செல்வர். எனக்கு தான் அந்த கொடுப்பினை இல்லாது போய்விட்டதோ? இப்போது இக்கோயிலில் திருப்பணிகள் இடம்பெற்று வருகின்றன. எமது பரம்பரை வீடு அங்கேயே இருந்தாலும் இன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்கில் இருக்கிறோம். அண்மையில் எமது தோட்டத்தை சேர்ந்த ஒருவர் என்னை சந்தித்து கோயில் திருப்பணிக்கு நிதி வசதி போதாதுள்ளது என்றார். அம்மன் சிலையை எடுத்து வைக்கும் பாக்கியம் கிடைக்காவிட்டாலும் இப்படியாவது இவ்வாலயத்திற்கு உதவ வேண்டும் என நினைத்தேன்.ஒருமுறை அங்கு சென்று கோயிலை படம் எடுத்தேன். அதை இப்போது உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்… வேதனையோடு!

Tuesday, October 7, 2008

எதிர் கேள்வி(சிறுகதை)


இன்னமும் இரண்டு நபர்களே பாக்கி அடுத்து தனது பெயர் அழைக்கப்படப்போகிறது.மனதின் திக்திக் சற்றே அதிகமாகியது அதிரனுக்கு. தனக்கு இது 10 ஆவது நேர்முகத்தேர்வு என்பது அவனுக்கு மறந்து போனது. ஒரு குழப்ப சூழலில் தான் தள்ளப்பட்டுள்ளதை போல் உணர்ந்தான் அவன். அதற்கு காரணம் இருந்தது.கடைசி ஆளாகத்தான் தன்னை அழைக்கப்போகின்றார்கள் என்பது ஒன்று மற்றது? தனக்கு முன்னே உள்ளே சென்று வந்தவர்களில் பலரும் சற்று வாய் விட்டு கதைத்துப்போன விடயம் அது.‘என்னடா இது இந்தத்தொழிலுக்கும் இவன்கள் கேட்ட கேள்விக்கும் சம்பந்தமில்லாம இருக்கு’ என்று ஒருவன் முணுமுணுத்தவாறே எரிச்சலோடு வெளியேறினான். ‘மேலிடத்திருந்து போன் வந்திருக்கும் ஏற்கனவே தெரிவு செய்தாச்சு பிரதர் நாம எல்லாம் சும்மா இங்கே வந்து காத்திருக்கோம்ஏதோ எதிர்ப்பார்த்துப்போனால் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுற மாதிரி இல்ல கேள்வி கேட்கிறாங்க’ இது மற்றொருவன் அருகில் வந்து தோள் தொட்டு சொல்லிப்போன ஒன்று. உனக்கும் அப்படி த்தான் மச்சான் என்று ஆறுதல் கூறுவது போல் இருந்தது. உள்ளே சென்ற 15 பேரில் 10 பேர் இப்படி முணுமுணுத்து விட்டு போனது தான் மிச்சம்.அட அப்படி என்ன தான் சம்பந்தமில்லாம கேட்கிறார்கள் உள்ளே?
‘லஷ்மன் அதிரன்’ பெயர் கூப்பிடப்பட்டது.சரி வருவது வரட்டும் என்று எழுந்து சென்று கதவை இலேசாக திறந்தான் அதிரன்.‘மே ஐ கம் இன் சேர்?
‘யெஸ்’
ஒற்றை வார்த்தை பதிலை அவன் எதிர்ப்பார்க்கவில்லை.உள்ளே மூவர். மைதான தலையோடு நடுநாயகமாக வீற்றிருப்பவர்தான் பெரியவரோ? மூவருக்கும் வணக்கம் செலுத்தினான்.
‘ப்ளீஸ் சிட்’
பைலை வாங்கி புரட்டினார் நடுநாயகம்.பின்பு சற்று உதட்டை பிதுக்கினார் அதிரனை நோக்கினார்.
ம்ம்ம்…மிஸ்டர் அதிரன் நீங்க தான் இந்த நேர்முகத்தேர்வில் கடைசி நபர் அப்படித்தானே?
முதலாவதாக வந்தவனிடம் இதே கேள்வியை மாற்றிகேட்டிருப்பார்களோ என்று நினைத்த அதிரன் ஆமாம் சார் என்றான்.
‘ஓ.கே இப்போ கேள்வி நேரம்’
படபட வானான் அதிரன்.
முடிந்தது அவ்வளவு கேள்விக்கும் பதில் கூறியாயிற்று ஆனால் என்ன பிரயோசனம் தனது முன்னோர்கள் (அது தாங்க அவனுக்கு முன் உள்ளே வந்து போனவங்க) கூறியது போல் தான் இருந்தது. விண்ணப்பித்திருக்கும் வேலை தொடர்பில் ஒரு கேள்வி கூட இல்லையே. அட மைதான தலை உதட்டை வேறு பிதுக்குகின்றதே?
‘என்ன அநியாயம் சார் இது முதலிலேயே சொல்லியிருந்தால் காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லையே எங்களையெல்லாம் பார்த்தா இளிச்சவாய் மாதிரி தெரியுதா? உங்களுக்கு தேவையான ஒருவரை தெரிவு செய்து விட்டு காலங்கடத்துவதற்காகத்தான் இந்த இண்டர்வியூவா’
வாய் வரை வந்த வார்த்தைகளை அடக்கிக்கொண்டான் அதிரன்.
‘நாங்கள் அறிவிக்கிறோம்’ ரெண்டில் ஒன்று பார்த்து விட வேண்டியது தான்
‘எக்ஸ்கியூஸ்மி சார் மே ஐ ஆஸ்க் எ கொய்சன்?’
சற்று புருவம் உயர்த்திய நடுநாயகம் ‘யெஸ்’ என்றது.
‘சார் தப்பா நினைக்காதிங்க எனக்கு ஒரு சந்தேகம் இந்த வேலைக்கும் நீங்க கேட்ட கேள்விக்கும் சம்பந்தமே இல்லையே சார்? இருந்தும் நான் அவ்வளவு கேள்விக்கும் பதில் கூறினேன் ஆனால் அது முக்கியம் இல்லை, நீங்கள் ஏன் இப்படி சம்பந்தமில்லாம கேள்வி கேட்டீங்க அது தான் எனக்கு தேவை?
‘மிஸ்டர் அதிரன் இங்கு வந்த 15 பேரில் 9 பேர் நாங்க கேட்ட சம்பந்தமில்லாத எல்லா கேள்விக்கும் பதில் சொன்னாங்க அதில் நீங்களும் ஒருவர். ஆனால் உங்களைப்போல யாரும் இப்படி எங்களை கேள்வி கேட்கவில்லை’
புன்முறுவலோடு கூறிய அவர் அருகிலிருந்த இரண்டு பேரையும் பார்த்து கண் சிமிட்டினார்.
என்ன நடக்கின்றது இங்கே?
‘மிஸ்டர் அதிரன் வெளிநாடுகளில் இருந்து வரும் நிவாரணங்கள் உரிய விதத்தில் பொது மக்களிடம் போய் சேருகின்றதா என்பதை கண்காணிக்கும் வேலை இது .பல ஊழல்கள் நடக்க இடமுண்டு. பலரிடம் பல கேள்விகளை கேட்டு விசாரணைகளை நடத்த வேண்டும் ஆகையால் சொன்னதை மட்டும் செய்து கொண்டிராமல் விழிப்பாக இருக்கவேண்டும் எதிர் கேள்விகள் கேட்க தைரியம் வேண்டும் அப்படியான ஒருவரை தெரிவு செய்யத்தான் இப்படி ஒரு வித்தியாச இண்டர்வியூ.நாங்க எதிர்ப்பார்த்த யாரும் எங்களை ஏன் சம்பந்தமில்லாம கேள்வி கேட்கிறிங்க என்று கேட்க திரணியற்று முணுமுணுத்து விட்டு போய்விட்டனர்.
பட் யூ?
அதே புன்முறுவல்
‘யெஸ்’ எங்க முயற்சி வீணாகவில்லை கடைசி ஆளா வந்தாலும் நாங்க எதிர்ப்பார்த்த தகுதி உங்ககிட்ட தான் இருக்கு யூ ஆர் அப்பாய்ண்ட்டட்’



பின்குறிப்பு: இந்த கதையில் வரும் நாயகன் என் நண்பன் தேவஅதிரன் தான் ஆனால் அவனுக்கும் இப்படி எதிர் கேள்வி கேட்கும் விடயத்திற்கும் சம்பந்தமே இல்லைங்கோ…!

சொல்லுங்கள் நிர்ஷன்….!

வலைப்பக்கம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற அவா நெடுநாட்களாக இருந்த போதிலும் வேலைப்பளு காரணமாக அது கைகூடவில்லை. இப்போது மட்டும் சும்மா இருக்கிறேனா என்று கேட்காதீர்கள்.எனினும் என்னை இவ்விடயத்தில் ஈடுபாடு காட்ட உதவிய எனது அன்புச்சகோதரனும் என்னுடன் வீரகேசரி தலைமைகாரியாலயத்தில் பல விடயங்களை பகிர்ந்து கொண்ட இளரத்தம் நிர்ஷனுக்கு எனது நன்றிகள் பல.மேலும் வந்தியதேவனுக்கும் தான்.சரி ஆரம்பித்து விட்டேன் இனி ஆடப்போகிறேன் தாண்டவம்.நிர்ஷன் எதிலிருந்து ஆரம்பிக்கலாம்? இல்லாத ஒரு பாத்திரத்தை சிருஷ்டித்து அதற்கு ‘அண்ணன் “ எனபபெயரிட்டு நாம் செய்த அட்டகாசங்களையா?அல்லது எமது பாடல் கேட்டு செவியை மூடிய புத்தர் சிலை கதையையா சொல்லுங்கள் நிர்ஷன் சொல்லுங்கள்….!

ஊடகத்தாண்டவம்


தாண்டவம் என்ற பெயரில் இப்பக்கத்தை ஆரம்பித்ததற்குக்காரணத்தை பலர் கேட்கலாம்.அதற்குப்பதில் தொடர்ச்சியான எனது பதிவுகளில் கிடைக்கும்.எனது முதல் பதிவு பேனா போராளிகளாக விளங்கி ஊடக சுதந்திரத்திற்காக தமது உயிரை தியாகம் செய்த பத்திரிகையுலக நண்பர்களுக்காகவும் இலத்திரனியல் ஊடகவியலாளர்களுக்கும் அஞ்சலியாக விளங்கட்டும். மேலும் கடந்த திங்கட்கிழமை அனுராதபுரத்தில் செய்தி சேகரிக்கச்சென்ற போது குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட சிரச வலைப்பின்னல் பிராந்திய நிருபர் அன்புச்சகோதரன் ரஷ்மி மஹ்ரூப்புக்கும் எனது வீர வணக்கங்கள். அருகில் காணப்படும் படத்தை உற்றுநோக்குங்கள்.இது அனுராதபுரம் குண்டு வெடிப்பில் உயிர் துறந்த பிரதேச செய்தியாளருடையது தான். சேதமுற்றாலும் செய்தி சேகரித்து விட்ட இறுமாப்பில் இருக்கும் இந்த கமராவுக்கு ஒரு சல்யூட். என்ன தான் எம்மை நசுக்கி பிழிந்தாலும் தொடர்ந்தும் ஆடுவோம் …… ஊடகத்தாண்டவம்!