Monday, November 17, 2008

லோஷனின் கைது

வெற்றி எப் எம் நிகழ்சி முகாமையாளரும் அறிவிப்பாளருமான எனது இனிய நண்பன் லோஷனின் கைதானது இலங்கையில் சர்வசாதாரணமாகிப்போய்விட்ட ஊடக அடக்குமுறை மற்றும் அது சார்ந்த கைதுகளின் வரிசையில் இடம்பிடித்துவிட்ட ஒரு சம்பவமாகிப்போய்விட்டதில் வருத்தம் அதிகம் தான்.ஆனால் அதை விட வருத்தம் என்னவென்றால் ஒரு சிரேஷ்ட தமிழ் அறிவிப்பாளரின் கைது தொடர்பில் தமிழ் ஊடகங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லையே என்பதுதான். லோஷன் ஆரம்பத்தில் சக்தி எப்.எம்மில் பணிபுரிந்து அதற்குப்பின்னர் சூரியன் எப்.எம்மில் இணைந்து தனது அசாத்திய சகலதுறை திறமையினால் சூரியன் எப்.எம் நிகழச்சி முகாமையாளராக உயர்ந்தவர்.தற்போது வெற்றிகரமாக வெற்றி எப்.எம்மில் பொறுப்பான பணியில் இருக்கும் போது இப்படி நடந்து விட்டது.இலங்கையில் ஊடகத்துறையினர் கைது செய்யப்படுவது அல்லது தாக்கப்படுவது கொலைசெய்யப்படுவது என்பது அண்மைக்காலமாக சாதாரணமாகிவிட்ட விடயம். இது தொடர்பில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஊடக அமைப்புக்கள் ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டு விட்டு கோட்டை புகையிரத நிலையம் அருகில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்துவதோடு முடிந்து விடும். இலங்கை ஊடகத்திற்கு இது ஒரு சாபக்கேடான காலம் போல் உள்ளது.எனினும் ஊடக சொந்தங்கள் அனைவரும் ஒன்றிணைந்து லோஷனின் விடுதலைக்காக பிரார்த்திப்பதை தவிர வேறு வழியில்லை. ஊடகத்தாண்டவம் ஊழித்தாண்டவமாக சற்று பொறுத்துத்தான் இருக்கவேண்டியுள்ளது.கவலை வேண்டாம் லோஷன் வெற்றி பெறுவீர்கள் நீங்கள்.