Sunday, March 1, 2009

விளம்பர படத்திலிருந்து ஒஸ்கார் விருது வரை

1967 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் திகதி தமிழ்நாட்டின் சென்னையில் திலீப்குமாராக பிறந்த இந்த பையனா பின்னர் ஏ.ஆர்.ரகுமானாக மாறி தனது இசையின் மூலம் உலகை திரும்ப வைத்திருகிறார் என்றால் நம்பமுடியவில்லை. சர்வதேசத்தின் பார்வையை இந்திய சினிமா பக்கம் திரும்பவைத்தவர் இயக்குனர் சத்தியஜித்ரே என்றால் மிகையாகாது. இவர் இயக்கிய படங்கள் பல விருதுகளை வென்றாலும் ஒஸ்கார் பிரிவில் விருதுகள் கிடைக்கவில்லை.எனினும் அவருக்கு 1992 ஆம் ஆண்டு வாழ் நாள் சாதனையாளருக்காக ஒஸ்கார் விருது சிபாரிசு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.அவர் நோயுற்று வைத்தியசாலையில் இருக்கும் போது பரிசு குழுவினர் அங்கு நேரடியாகச்சென்று இவ்விருதை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்பதாக 1982 ஆம் ஆண்டு ரிச்சர்ட் அடன்பெரோ இயக்கி பென் கிங்ஸ்லி நடித்த காந்தி திரைப்படத்தின் ஆடை வடிவமைப்புக்கான ஒஸ்கார் விருதை இந்தியபெண்மனியான பானு ஆதைய்யா பெற்றுக்கொண்டார்.இவை இரண்டு மட்டுமே இந்திய திரைப்படத்துறைக்கு கிடைத்த ஒஸ்கார் விருதுகள்.


வைத்தியசாலையில் ஒஸ்கார் விருதுடன் இயக்குனர் சத்தியஜித்ரே

அதன் பிறகு சுமார் இரண்டு தசாப்த காலத்திற்குப்பிறகு அமீர்கான் நடித்து அசுதோஷ் கவ்ரிகர் இயக்கத்தில் வெளியான லகான் ஹிந்தித்திரைப்படம் 2002 ஆம் ஆண்டு சிறந்த வெளிநாட்டு படப்பிரிவிற்கான ஒஸ்கார் விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட போதும் விருது கிடைக்கவில்லை.இப்படத்திற்கும் ரகுமானே இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது இசையில் இரண்டு ஒஸ்கார் விருதுகளைப்பெற்று தமிழினத்திற்கும் இந்திய இசை பாரம்பரியத்திற்கும் பெருமை சேர்த்து விட்டார் ஏ.ஆர்.ரகுமான் . இவர் இசையமைத்த சிலம்டோக் மில்லியனியர் (Slumdog Millionaire)


என்ற பிரித்தானிய தயாரிப்புப்படத்திற்கு கிடைத்திருக்கும் எட்டு விருதுகளில் இரண்டு பிரிவுகளுக்கான (சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பாடல் இசைக்கான விருது) விருதுகள் இப்போது ரகுமான் வசம். ரகுமானுக்கு ஒஸ்கார் விருதை பெற்றுத்தந்திருக்கும் ஸ்லம்டோக் மில்லியனியர் என்ற படம் இந்திய எழுத்தாளர் விக்காஸ் சுவரூப் எழுதிய கியூ அண்ட் ஏ (Q and A) என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.மேலும் இந்தியாவில் இரட்டை ஒஸ்கார் விருதுகளைப்பெறும் முதல் நபர் என்ற பெருமைக்கு அப்பாற்பட்டு ஒஸ்கார் விருதைப்பெற்றுள்ள முதல் தமிழர்
இந்தியாவில் முதல் ஒஸ்கார் விருது பெற்ற பானு ஆதைய்யா

என்ற பெருமை தான் பேசப்படவேண்டியது. அதுவும் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்ற கொடக் அரங்கில் அவர் தனது தாயின் ஆசிர்வாதத்தை சிலாகித்து கூறி, தமிழில் எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொல்லி முடித்தார்.இது அவரின் தாய் கரீமா பேகம் மற்றும் தாய்மொழி மேல் வைத்துள்ள பற்றை காட்டி நிற்கின்றது.
திரைப்படத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ஒஸ்கார் விருதுக்கு முன்பதாக இதே திரைப்பட இசைக்காக, ரகுமான் குளோடன் குளோப் மற்றும் பப்டா விருதுகளைப்பெற்றார்.குளோடன் குளோப் விருது வெல்லும் திரைப்படத்திற்கு நிச்சியமாக ஒஸ்கார் விருது கிடைக்கும் சாத்தியகூறுகள் அதிகம் என்பதை வரலாறு எமக்கு புலப்படுத்துகின்றது.

இந்த மைல்கல்லை அடைய ரகுமான் எடுத்துள்ள முயற்சிகள் கடுமையானவை.ரகுமான் ஒரு இசைக்குடும்பத்தில் பிறந்தவர்.இவரது தந்தை ஆர்.கே.சேகர் தமிழரானாலும் மலையாள படவுலகின் இசையமைப்பாளரா திகழ்ந்தவர்.22 படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் 100 படங்களுக்கு மேல் இசைப்பணியாற்றியுள்ளார். ரகுமான் 9 வயதாக இருக்கும் போது அவரது தந்தை மரணத்தை தழுவ ரகுமானின் குடும்பம் வறுமையில் தள்ளப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் அவருக்கு உதவ எவருமே முன்வரவில்லை.இதன் காரணமாக ரகுமானின் குடும்பம் இசை உபகரணங்களை வாடகைக்கு விட்டு அந்த வருமானத்தில் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.அந்நேரத்தில் அவரது குடும்பத்திற்கு பல்வேறு வகையில் உதவிகள் புரிந்து வந்த இஸ்லாமிய அன்பரின் மனித நேயத்தை மதித்து 1989 ஆம் ஆண்டு தனது சகோதரிகளுடன் இஸ்லாம் மதத்தை தழுவியது குடும்பம்.அதிலிருந்து அவரது பெயரையும் ஏ.ஆர்.ரகுமான் என்று மாற்றிக்கொண்டார். தனது 11 ஆவது வயதில் தனராஜ் மாஸ்டரிடம் கீபோட் வாசிக்கப்பழகினார் ரகுமான். ஆரம்பத்தில் தனது சிறுவயது நண்பர்களான டரம்ஸ் சிவமணி,சுரேஷ் பீட்டர்ஸ், ஜோன் அந்தனி.ஜோ ஜோ ஆகியோரிடமும் இசை பற்றிய விடயங்களø பகிர்ந்து கொள்ள அவர் தயங்கவில்லை. இவர்கள் அனைவரும் உருவாக்கிய ரூட்ஸ் என்ற இசைக்குழுவில் ரகுமான் கீபோட் வாத்திய கலைஞராக விளங்கினார்.
அதன் பின்னர் இசைஞானி இளையராஜா,எம்.எஸ்.விஸ்வநான் ஆகியோருடன் பணியாற்றும் வாய்ப்பு இவருக்குக்கிடைத்தது.மேலம் தபேலா கலைஞர் ஜாகிர் உசேன்,வயலின் வித்துவான் குன்னக்குடி ஆகியோருடன் இணைந்து பல நாடுகளுக்கு இசைப்பயணம் மேற்கொண்டுள்ளார். புலமை பரிசில் மூலம் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு இலண்டனில் அமைந்துள்ள டிரினிடி இசை கல்லூரியில் மேலைத்தேய இசையில் பட்டம் பெற்றார்.
தனது 25 ஆவது வயதில் தனியõக இசையமைக்கத்தொடங்கினார் ரகுமான்.தனது வீட்டிலேயே ஒலிப்பதிவு கூடத்தை ஆரம்பித்தார். விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த இவரின் வித்தியாசமான இசைப்பாணி பலரை கவர்ந்தது. இவரது இசையில் கவரப்பட்ட இயக்குனர் மணிரத்னம் தனது ரோஜா திரைப்படத்திற்கு இசையமøக்கும் பொறுப்பை வழங்கினார். தனது முதல் பட வாய்ப்பை பலமாக பற்றிக்கொண்ட ரகுமான் அற்புதமான பாடல்களை தந்ததன் மூலம் முதல் திரைவுலக பிரவேசத்திலேயே சிறந்த இசைக்கான தேசிய விருதை பெற்றார்.அதிலிருந்து இயக்குனர் மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளரா விளங்கினார். ரகுமான் இது வரை ரோஜா உட்பட நான்கு தேசிய விருதுகளை சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் வென்றுள்ளார். ரோஜா (1992) மின்சாரகனவு (1996) லகான் (2001) கன்னத்தில் முத்தமிட்டால் (2001) இதைத்தவிர தமிழ் நாடு அரசு விருதுகள் ஆறை பெற்றுள்ளார்.
இது வரை தமிழ் ,ஹிந்தி, ஆங்கிலம் ஏனைய மொழிகள் உட்பட 103 படங்களுக்கு ரகுமான் இசையமைத்துள்ளார். 11 படங்கள் கைவசம் உள்ளன.இதில் இயந்திரன், அசோகவனம்,சென்னையில் ஒருமழைகாலம்,விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய தமிழ் படங்களும் அடங்குகின்றன. அமெரிக்காவின் பிரபல வோல்ட் டிஸ்னி தயாரிப்பில் அடுத்த ஆண்டு வெளிவரவுள்ள ஆங்கில ,தமிழ்,ஜப்பானிய மொழிகளில் தயாரிக்கப்பட்டு வரும் The 19th Step என்ற படத்திற்கும் ரகுமானே இசை.இத்திரைப்படமும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விளம்பர படங்கள் மூலம் தனது இசை பிரவேசத்தை ஆரம்பித்த ரகுமான் இன்று ஒஸ்கார் எனும் சிகரத்தை தொட்டுள்ளார். இவரது இளமை கால வாழ்க்கையும் விடாமுயற்சியும் பலருக்கு ஒரு பாடமாக அமையட்டும்.
சிவலிங்கம் சிவகுமாரன்

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (01-02-2009)