Friday, February 10, 2012

லதா அக்கா....!



வீரகேசரி ஆசிரியப்பீடத்தில் மெட்ரோ நியூஸ் பத்திரிகைக்கு பொறுப்பாக இருந்த போது எங்கிருந்தோ வந்து எம்முடன் இணைந்து கொண்டவர் லதா அக்கா. மிகவும் கடும்போக்கான குணத்தையுடையவர் என்று ஆரம்பத்தில் நினைத்திருந்தாலும் நாட் செல்ல செல்ல எங்கள் வழிக்கு வந்து விட்டார். அவர் வளர்ந்த சூழநிலை அவரைச்சுற்றி ஒரு வேலியை போட வைத்திருக்கலாம். இசைக்கும் நகைச்சுவைக்கும் இவர் அடிமை ,அது தான் இவரது பலவீனமும் என்று கூட சொல்லலாம்,காரணம் அவர் மிகக்கோபமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் அவருக்கு பிடித்த பாடலை மெதுவாக இசைக்க விடுவேன் தூரத்திலிருந்து அவர் முகத்தை பார்ப்பேன் முகம் மலரத்தொடங்கும் கீச்சு குரலில் அந்த பாடலை வாய் முணுமுணுக்கும் பிறகு என்ன வழமையான லதா அக்கா தான். நகைச்சுவைக்கு வாய் விட்டு சிரிக்கும் அவர் சில நேரங்களில் கண்ணீர் வரும் அளவுக்குக்கூட ரசித்து சிரிப்பார். சர்ச்சைக்குரிய செய்திகள் வரும் போதும் அது விவாதத்திற்குட்படும் சந்தர்ப்பங்களிலும் அவர் தனது நிலையிலிருந்து பின் வாங்கமாட்டார். தீவிரமான பெண்ணியவாதியான இவர் ஒரு சில சந்தர்ப்பங்களில் நான் முன்னுதாரணம் காட்டும் சில விடயங்களை வேண்டா வெறுப்பாக ஏற்றுக்கொண்டு விடுவார். பின்பு என்ன அவரை வழிக்கு கொண்டு வரத்தான் இருக்கிறதே பாரதி கண்ணம்மா பாடல் ,எனக்குத்தெரிய அவர் மிகவும் இரசித்து கேட்கும் பாடல்கள் நிழல் நிஜமாகிறது படங்களில் வரும் அனைத்துப்பாடல்களும் , கம்பன் ஏமாந்தான் , பாரதி கண்ணம்மா, மற்றும் மூங்கிலிலே பாட்டிசைத்து ,என் இனிய பொன் நிலாவே , இப்படி பல ...! இப்போதும் கூட இந்த பாடல்களை எனது கணிணி வழியாக கேட்கும் போது உங்கள் ஞாபகங்கள் வந்து போகும் லதா அக்கா! போராட்டம் ஒன்று தான் வாழ்க்கை என்று அடிமை தளையை தூக்கியெறிந்து விட்டு எமது ஆசிரியப்பீடத்திலிருந்து வெளியேறி விட்டீர்கள் நீங்கள். உங்களது காலகட்டத்தில் பலரது மௌனங்களை மொழிபெயர்த்து மொழிபெயர்க்கப்பட்ட மௌனங்கள் என்ற நூலை வெளிக்கொணர்ந்த நீங்கள் இப்போது மௌனத்தையே கடைபிடிப்பது ஏன் என்று தெரியவில்லை நான் ரஜீவன் ,சார்ல்ஸ், ரவி அண்ணா, நிரஞ்சனி அவ்வப்போது உங்கள் பேப்பர் பந்தில் திடீர் அடி வாங்கும் எமது ஒப்பு நோக்காளர் பாலசிங்கம் என நல்ல ஒரு குழு இப்போது பிரிந்து எங்கெங்கோ இருக்கிறோம். எமது குழுவில் மூத்த சகோதரி என்ற வகையில் அவ்வப்போது பல நல்ல அறிவுரைகளை கூறியிருக்கிறீர்கள் எங்களை ஞாபகம் இருக்கிறதோ தெரியவில்லை ஆனால் நீங்கள் பாங்கொங் போய் வந்த நேரம் எனக்கு ஆசையாய் வாங்கி வந்த தாய்லாந்து என்ற பெயர் பொறித்த வெள்ளை டீ சேர்ட்டை நான் இன்னமும் பாதுகாத்து வருகிறேன் லதா அக்கா!

No comments: