Friday, February 10, 2012

சர்வதேச தாய் மொழி தினம்


உயிர் நீத்த மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவு தூபி
சர்வதேச தாய் மொழி தினம் ((International Mother Language Day) இம்மாதம் 21 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. 2000ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச ரீதியாக இந்த தாய் மொழி தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.இலங்கையில் இந்த வருடத்திலிருந்து மும்மொழி அமுலாக்கம் தொடர்பில் பேசப்பட்டு வருகின்றன.இதை அமுல் படுத்தவும் அதில் உள்ள நன்மைகளை விளக்கவும் இந்திய குடியரசின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் கூட அண்மையில் எமது நாட்டுக்கு விஜயம் செய்திருந்தார். ஆகவே இத்தினம் குறித்து நாம் பார்க்க வேண்டியுள்ளது. சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்படும் தினங்களுக்கு பின்னால் ஏதோ ஒரு சம்பவம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் இதற்கு பின்னணியிலும் ஒரு சம்பவம் உள்ளது. சரி வாசகர்களே 1948 ஆம் ஆண்டுக்கு செல்வோமா?
1948 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் மொகமட் அலி ஜின்னா. அச்சந்தர்ப்பத்தில் பாகிஸ்தான் இரண்டு பிரிவுகளாக இருந்தது. மேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தான் ஆகிய பிரிவுகளே அவை. இப்போது கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷ் என்ற சுதந்திர நாடாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டத்தில் அலி ஜின்னா பாகிஸ்தான் நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக உருதை பிரகடனம் செய்தார். இது கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு பிடிக்கவில்லை,காரணம் அங்கு வாழ்ந்து வந்தோர் தமது தாய் மொழியாக வங்காள மொழியை கொண்டிருந்தனர். வங்காள மொழியானது இந்திய ஆரிய மொழி குடும்பத்திலிருந்து தோன்றியதொன்றாகும். வங்காள மொழி பேசப்பட்டதால் தான் வங்காளதேசம் என இந்நாடு பின்னாளில் இந்தியாவின் உதவியுடன் சுதந்திர நாடாகியது. இந்த மொழியை உலகின் 232 மக்கள் பேசுகிறார்கள் என்பது கூடுதல் தகவல். சரி இனி விடயத்திற்கு வருவோம் அலி ஜின்னாவின் இந்த பிரகடனத்தால் கிழக்கு பாகிஸ்தானில் வங்காள மொழியை தாய்மொழியாக பிரகடனம் செய்ய வேண்டும் என்ற மக்கள் இயக்கம் தோற்றம் பெற்றது. சுமார் நான்கு வருடங்கள் இந்த இயக்கத்தினரால் போராட்டங்கள் முன்னெடுத்துச்செல்லப்பட்டன. இதன் உச்சகட்டமாக 1952 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி டாக்கா பல்கலைகழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை பாகிஸ்தான் இராணுவமும் பொலிஸாரும் தமது இரும்பு கரங்களால் நசுக்கினர். இதன் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்டனர். உலகில் தாய் மொழியை பாதுகாப்பதற்காக இடம்பெற்ற ஒரே போராட்டம் என்ற பெருமை இதற்கு உண்டு அதே வேளை தாய் மொழியை காப்பதற்காக உயிர்கள் காவு கொள்ளப்பட்ட ஒரே சந்தர்ப்பமாகவும் இது விளங்குகிறது. உயிர் நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக டாக்கா பல்கலைகழகத்தின் முன்றலில் நினைவு தூபி ஒன்று எழுப்பப்பட்டது. இந்த மொழி வேறுபாடு காரணமாகவே கிழக்கு பாகிஸ்தானில் தனி நாடு கோரிக்கை வலுப்பெற்றது என்பதும் இந்தியாவின் உதவியுடன் 1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் என்ற பெயருடன் இது தனி சுதந்திர நாடாகியது என்பது வரலாறு. இந்த சம்பவத்தை முன்வைத்தே ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பான யுனஸ்கோ, 1999 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி இடம்பெற்ற தனது 30 ஆவது அமர்வின் போது பெப்ரவரி 21 ஐ சர்வதேச தாய் மொழி தினமாக அனுஷ்டிக்க வேண்டும் என பிரகடனம் செய்தது.
தமிழ் மொழி
ஆதி கால மனிதனின் மொழியானது சைகைகளாலும் ஓசைகளை வெளிப்படுத்தியும் தோற்றம் பெற்றது ,இன்று கருத்துப்பரிமாற்றங்களுக்கு மட்டுமல்லாது வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டு நிலைகளையும் வெளிப்படுத்தும் ஒரு சக்தி வாய்ந்த கருவியாக மொழி விளங்குகிறது. இன்றைக்கு உலகம் முழுவதிலும் 30006000 வரையான மொழிகள் பேசப்படுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மனிதனின் மொழியை இயற்கையின் மொழி என்று சிலாகிக்கின்றனர். பெரும்பாலான மொழிகள் ஏதோ ஒரு குடும்பத்தை சார்ந்தனவாகவே உள்ளன. ஒரு மொழிக்குடும்பத்தைச்சேர்ந்த மொழிகள் எல்லாம் இன்று வழக்கொழிந்து போய்விட்டன. அந்த வகையில் உலகின் புராதன மொழியாக விளங்கும் எமது தாய் மொழியான தமிழ் கூட இன்று அழிவுறும் நிலையில் உள்ளது என பல அறிஞர்கள் கூறி வருகின்றனர். சுமார் இரண்டாயிரம் வருடங்கள் பழமையான தமிழ் மொழி,திராவிட மொழி குடும்பத்தின் முதன்மையானதும் செம்மொழியாகவும் விளங்குகிறது. இந்தியா ,இலங்கை ,மலேசியா ,சிங்கபூர் ஆகிய நாடுகளில் பெரும்பான்மையாகவும் ஐக்கிய அரபு இராஜியம்,தென்னாபிரிக்கா,மொரீஷயஸ், பிஜி தீவுகள்,டிரினிடாட் ஆகிய நாடுகளில் சிறிய அளவிலும் பேசப்படுகிறது. உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட பத்து கோடி மக்களால் தமிழ் மொழி பேசப்படுகிறது. உலகலவில் தாய் மொழியை பேசும் மக்களின் எண்ணிக்கையில் பார்த்தால் எமது தமிழ் மொழி 18 ஆவது இடத்தில் உள்ளது. இன்று புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழும் தமிழர்கள் எமது மொழியைப்பேசியும் பரப்பியும் வருகின்றனர்,ஆனால் தமது பிள்ளைகளுக்கு ஏனோ அவர்கள் தமிழ் மொழி கல்வியை வழங்குவதில்லை என்பது கவலைக்குரியது.
வரலாற்றைப்பார்த்தால் எமது மொழி கி.மு.300 நூற்றாண்டைச்சேர்ந்த பிராமி எழுத்துக்களால் எழுதப்பட்டதாகும். வரலாற்று ரீதியாக எமது தமிழ் மொழி பல அந்தஸ்த்துகளைப்பெற்றுள்ளது. உதாரணத்திற்கு சிலவற்றைப்பார்ப்போம். இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் தமிழ் மொழியே ஆட்சி மொழியாகவுள்ளது. இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் 22 மொழிகளில் தமிழும் ஒன்று.மேலும் எமது நாடான இலங்கையிலும் மூன்று ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று (அது முறையாக அமுல்படுத்தப்படுகிறதா என்பது வேறு விடயம்) சிங்கபூரில் நாடளாவிய அங்கீகாரம் தமிழுக்கு உண்டு.மேலும் தென்னாபிரிக்காவில் தமிழ் மொழிக்கு அரசியல் அமைப்பு அங்கீகாரமே உள்ளது. மலேசியாவின் முதல் நான்கு ஆட்சி மொழிகளில் தமிழும் அடக்கம்.
செம்மொழி அங்கீகாரம்
இந்தியாவிலும் மற்றும் உலகெங்கனும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் அறிஞர்களின் இடைவிடாத முயற்சியின் காரணமாக தமிழ் மொழிக்கு இந்திய அரசினால் செம்மொழி அங்கீகாரம் கிடைத்தது. இந்த செம்மொழி அந்தஸ்த்து பெற்ற முதலாவது இந்திய மொழியாக தமிழ் விளங்குகிறது. 2004 ஆம் ஆண்டு ஜுன் மாதம் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டத்தொடரின் போது அப்போதைய குடியரசு தலைவரும் தமிழ் பற்றாளருமான டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ( ஆனால் தமிழ் நாட்டில் இடம்பெற்ற செம்மொழி மாநாட்டில்,ஏற்பாட்டாளர்களால் இவருக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை என்பது ஒரு சோக வரலாறு)
இன்று தமிழ் மொழி தமிழ் நாட்டின் பல இடங்களில் பல வித்தியாசமான பேச்சு மொழியாக உள்ளது.இலங்கையிலும் கூட யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு மற்றும் மலையகப்பகுதிகளில் தமிழ் வித்தியாசமான பேச்சு வழக்காகவே உள்ளது. சில வட்டார வழக்குச்சொற்களின் சேர்க்கையும் இதற்குக்காரணம் எனினும் பேச்சுத்தமிழ் என்று பார்க்கும் போது மேடைகளில் செந்தமிழையே அனைவரும் வழக்காக கொண்டு வருகின்றனர். காலங்காலமாக எமது தமிழ் மொழியை அறிஞர்களும் ,கவிஞர்களும் எழுதியும், பாடியும்,பேசியும் வந்திருக்கின்றனர். ஆனாலும் அந்தஸ்த்து ,தொழில் வாய்ப்பு என்ற ரீதியில் இன்று தமிழ் மொழி கல்வி அழிந்து வருகின்றது. தமிழ் நாட்டில் இது மிக அதிகம். நான் தமிழில் பேசி விட்டேன் என அங்கு பெருமைப்பட்டு கொள்வது ஒரு கலாசாரமாகி விட்டது.ஒருவன் தனது தாய் மொழியில் பேசுகிறேன் என்று ஆச்சரியப்படுவது எவ்வளவு மோசமான கலாசாரம்? அந்த வகையில் இலங்கை மக்களாகிய நாம் எமது தாய்மொழியை போற்றியும் வளர்த்தும் வருகின்றோம் என்பதை உறுதியாக சொல்லலாம். டாக்கா பல்கலைகழக மாணவர்கள் போல தாய் மொழிக்காக போராட்டம் செய்து உயிர் விடத்தயாராகும் படி சொல்லவில்லை. வீட்டிலும்,வீதியிலும் ஏன் தமிழர்களைக்கண்டால் தமிழிலேயே பேசுவோமே ,கல்லூரிகளில் தமிழ் இலக்கிய விழாக்களை நடத்தி எமது மொழியின் செழுமையை வலிமையை உணரச்செய்வோமே இது வரை செய்யாவிட்டால் பரவாயில்லை இந்த வருட சர்வதேச தாய் மொழி தினத்திலிருந்து திடசங்கற்பம் பூணுவோம். ஏனெனில் தாய் வேறு தாய் மொழி வேறு அல்ல நண்பர்களே!

வகைகள்
தமிழ்
செந்தமிழ்
கொடுந்தமிழ்
முத்தமிழ்
தனித்தமிழ்
நற்றமிழ்

பிரிவுகள் வாரியாகத் தமிழ்
தமிழிசை
நாடகத் தமிழ்
இயற்றமிழ்/இயல்தமிழ்
ஆட்சித் தமிழ்
சட்டத் தமிழ்
அறிவியல் தமிழ்
மீனவர் தமிழ்
மருத்துவத் தமிழ்
செம்மொழித் தமிழ்

வட்டார வழக்கு தமிழ் பிரிவுகள்
அரிசனப் பேச்சுத் தமிழ்
கொங்குத் தமிழ்
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
மட்டக்களப்பு பேச்சுத் தமிழ்
மலேசியத் தமிழ்
பிராமணத் தமிழ்
முஸ்லிம்கள் தமிழ்
திருநெல்வேலித் தமிழ்
தஞ்சாவூர்த் தமிழ்
மதுரைத் தமிழ்
நாஞ்சில் தமிழ்
செட்டிநாட்டுத் தமிழ்
குமரிமாவட்டத் தமிழ்
கரிசல் தமிழ்
சென்னைத் தமிழ்
மணிப்பிரவாளம்
தமிங்கிலம்
ஜுனூன் தமிழ் (இலக்கண விதிகளை மீறிய தமிழ்)


No comments: