Monday, February 1, 2021

 தரம் 5 புலமை பரிசில் பெறுபேறுகளும்

பாடசாலை அனுமதி வெட்டுப்புள்ளி சர்ச்சைகளும்


தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் கடந்த காலங்களில் உருவான சர்ச்சைகள் இன்னும் தொடர்ந்தவண்ணமேயுள்ளன. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பல விதத்திலும் மன உளைச்சல்களை தருவதாக இந்த பரீட்சை அமைந்துள்ளதால் இதை நிறுத்தி விடுவதற்குக் கூட கல்வி அமைச்சு கடந்த காலங்களில் பல தீர்மானங்களை எடுத்திருந்தது.

குறித்த வெட்டுப்புள்ளிகளை கடந்து புள்ளிகளைப்பெறாத மாணவர்கள் மனரீதியான உளைச்சல்களுக்கு முகங்கொடுத்து வருவதாக பல முறைப்பாடுகள் பெற்றோர்கள் மற்றும் கல்வி சமூகங்களிடமிருந்து எழுந்ததால் கல்வி அமைச்சானது 70 புள்ளிகளுக்கு மேல் பெறும் அனைவருமே சித்தி பெற்றவர்களாகவே கணிக்கப்படுவர் என அறிவித்திருந்தது.

எனினும் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்களே உதவுத்தொகை மற்றும் பிரபல பாடசாலைகளில் கல்வி கற்பதற்கான தகுதியை பெற்றுக்கொள்கின்றனர் என்பதே உண்மையாகும். அந்த வகையில் தற்போது வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளவது தொடர்பிலும் சர்ச்சைகள் உருவாகியுள்ளன.

நீண்ட காலமாக எந்த அடிப்படையில் இந்த முறை செயற்படுத்தப்படுகின்றது என்பது குறித்து தெளிவுகள் இல்லை என முன்னாள் கல்வி அமைச்சரும் தற்போதைய அரசாங்கத்தின் வர்த்தக அமைச்சருமான பந்துல குணவர்தன விசனம் வெளியிட்டிருக்கின்றார். ஒரு சில பாடசாலைகளை தரமுயர்த்தும் வகையில் இந்த வெட்டுப்புள்ளிகள் தயாரிக்கப்படுவதாகவே உள்ளது எனத் தெரிவித்துள்ள அவர், இதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும் இது குறித்து கல்வி அமைச்சு சார் அதிகாரிகள் விளக்கம் தர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் கல்வி அமைச்சருக்கே இந்த விடயத்தில் தெளிவுகள் இல்லையென்றால் பாடசாலை சமூகத்துக்கு இது குறித்து விளக்கங்கள் நிச்சயமாக இருக்காது. ஆனால் இந்த வெட்டுப்புள்ளி முறையின் காரணமாக குறித்த பிரதேசத்தின் நகர பாடசாலைகளில் கல்வியைத் தொடர வேண்டும் என்ற கனாவிலிருக்கும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ஏனெனில் பிரபல பாடசாலைகள் சிலவற்றின் வெட்டுப்புள்ளிகள் 180 இற்கும் மேல் இருப்பதால் 180 இற்கும் குறைவாக புள்ளிகளைப்பெற்ற ஒரு மாணவனோ மாணவியோ அப்பாடசாலையில் கற்கும் சந்தர்ப்பத்தை இழக்கின்றனர். அதே வேளை வெளிமாவட்டத்தில் 180 புள்ளிகளுக்கு மேல் பெற்ற ஒரு மாணவனோ மாணவியோ இலகுவாக இந்த பாடசாலைக்கு உள்ளீர்க்கப்படுகின்றார். பின்பு உயர்தரம் வரை அதே பாடசாலையில் கற்று பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்று தனது சொந்த இடத்துக்கே சேவையாற்ற போய் விடுகின்றனர்.

தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்கள், தமது பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலைகளிலேயே உயர்கல்வி வரை கற்க வேண்டும் என்ற கனவை பாடசாலை வெட்டுப்புள்ளி முறை சிதைத்து விடுகின்றது என்பதே உண்மை. இதையே முன்னாள் கல்வி அமைச்சரும் சுட்டிக்காட்டியுள்ளார். இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பெருந்தோட்டப்பகுதியில் தரம் ஐந்து வரை வகுப்புகளைக் கொண்ட பாடசாலைகளில் சிறந்த சித்தியைப்பெற்ற மாணவர்களாவர்.

ஒரு வகையில் அவர்களின் கல்வி உரிமையை மறுக்கும் ஒரு செயற்பாடாகவே இந்த முறை விளங்குவதாக பல பாடசாலைகளின் அதிபர்கள் ,ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும் இந்த சிக்கல்களை ஆரம்பத்திலேயே அறிந்தும் புரிந்தும் கொண்ட சில பிரபல நகர பாடசாலைகள் முன்னெச்சரிக்கையாக இந்த பாடசாலை வெட்டுப்புள்ளி முறைக்கு தமது பாடசாலைகளை உள்ளடக்கவில்லை.

ஆனால் அதிக வெட்டுப்புள்ளிகளைக் கொண்டிருக்கக் கூடிய சில பாடசாலை நிர்வாகங்கள் தமது பாடசாலைகளின் கல்வித் தரத்தை இதனோடு ஒப்பிட்டுப் பார்ப்பது எந்தளவுக்கு பொருத்தமானது என்பது புரியவில்லை. தலைநகரில் அமைந்துள்ள பல பிரபல பாடசாலைகளுக்கு இந்து முறை சாத்தியமாகலாம். ஏனென்றால் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அங்கு மாணவர்கள் படையெடுக்கின்றனர். ஆனால் மலையக நகரப் பாடசாலைகள் அமைந்திருக்கும் சுற்று வட்டாரத்திலுள்ளவர்களுக்கே குறித்த கல்லூரிகளில் வாய்ப்புகள்அளிக்கப்படல் வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்ப்பார்ப்பாகும்.

சில வருடங்களுக்கு முன்னர் மலையக நகரங்களிலுள்ள பிரபல பாடசாலைகள், மாணவர்களை உள்ளீர்ப்பதில் பல கட்டுப்பாடுகளை தன்னிச்சையாக கொண்டு வந்திருந்தன. அதில் மிகவும் பாதிக்கப்பட்ட வர்க்கத்தினர்களாக நகர சுத்திகரிப்பு தொழிலாளர்கள் விளங்கினர். அவர்களின் பிள்ளைகளை தரம் ஒன்றுக்கு அனுமதிப்பதில் சில பாடசாலை நிர்வாகங்கள் கடும் போக்குடன் நடந்து கொண்டதை மறுக்க முடியாது. இருப்பினும் அந்த மாணவர்களையும் அரவணைத்து கல்வி கற்பதற்கான சந்தர்ப்பத்தை சில நகர பாடசாலைகள் வழங்குவதற்கு தவறவில்லை.

எனினும் முன்னாள் கல்வி அமைச்சரின் கேள்விக்கு இன்னும் கல்வி அதிகாரிகளின் தரப்பிலிருந்து எந்த பதில்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த அனுமதி வெட்டுப் புள்ளி முறை என்பது சில பாடசாலைகளின் தரத்தை உயர்த்துவதற்காஅல்லது கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக என்பதை இந்த அதிகாரிகள் தெளிவுபடுத்த
வேண்டும்.

No comments: