Wednesday, October 24, 2018




தடம் மாறிச்செல்லும் தாற்பரியம்

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையை தொடர்ந்து நடத்துவதா இல்லையா என்ற பரிசீலனையை கல்வி அமைச்சு மீண்டும் மேற்கொண்டுள்ளமையை பலரும் வரவேற்றிருக்கின்றனர். வருடத்தின் இறுதிப் பகுதியில் க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சைகளுக்கு மத்தியில் புலமை பரிசில் பரீட்சையையும் நடத்த வேண்டுமா என்ற கேள்வி அரசாங்கத்துக்கு எழுந்துள்ளது.  ஆனால் அதை விட இப்போது தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைகளுக்காக பெற்றோரும் பிள்ளைகளும் எந்தளவிற்கு தம்மை நெருக்கடிகளுக்கு உட்படுத்தி வருகின்றனர் என்ற கேள்வியே முக்கியமானது.
மேலும் தரம் ஐந்தில் கல்வி கற்கும் ஒரு மாணவனோ மாணவியோ அவ்வயதில் அனுபவிக்க வேண்டிய எத்தனையோ விடயங்களுக்கு தடை ஏற்படுத்தும் ஓர் அம்சமாகவே தற்போது இப்புலமைப் பரிசில் பரீட்சை மாறியுள்ளது. அது தொடர்பான ஓர் ஆய்வை மேற்கொள்ள தற்போது கல்வி அமைச்சால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை என்பது இலங்கை பாடசாலை கல்வியில் கடந்த 50 வருடங்களாக இருந்து வரும் ஒரு கல்வி முறையாகும். சிறு வயதில் கல்வி நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு  வறுமை ஒரு தடையாக இருந்தால் குறித்த புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைவதன் மூலம் அவர்களுக்கு உதவித்தொகை அல்லது சிறந்த பாடசாலைகளை பெற்றுக்கொடுக்கும் ஒரு வழிமுறையாகவே இப்புலமைப் பரிசில் பரீட்சை அறிமுகப்படுத்தப்பட்டது.
இரு தசாப்தங்களுக்கு முன்புவரை இப்பரீட்சையில் சித்தியடைந்த அல்லது சித்தியடையாத மாணவர்கள் எல்லோரும் ஒன்றாகவே நோக்கப்பட்டனர். அதாவது பெற்றோர்களும் பாடசாலை நிர்வாகங்களும் கூட இது பற்றி அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை. ஏனெனில் சித்தியடைந்த மாணவர்களில் ஒரு சிலரே வேறு பாடசாலைகளுக்குச் சென்றனர். ஏனையோர் தொடர்ந்தும் அதே பாடசாலைகளிலேயே கல்வியைத்தொடர்ந்தனர்.
ஆனால், இன்று நிலைமை மாறி விட்டது.தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை என்பது  தமது பிள்ளைகளின்  கல்வி நடவடிக்கையின் ஒரு பகுதி என்பதையும் தாண்டி பெற்றோரின்  கௌரவமாக மாறியுள்ளமையையும் அதற்காக பெற்றோர்கள் எந்த எல்லை வரையும் செல்வதற்கு தயாராக இருக்கும் அபாயத்தையும் கல்வி அமைச்சு உணராமலில்லை. மறுபக்கம் 10 வயதுடைய ஒரு பிள்ளையின் மனதில்  இந்தப் புலமை பரிசில் பரீட்சை தான் உலகம் என்ற எதிர்மறை எண்ணம் பெற்றோர்களினாலேயே விதைக்கப்படுவதானது மிகவும் ஆபத்தானது.
உயர்கல்வி நடவடிக்கைகளுக்காக தமது பிள்ளைகளை க.பொ.த. சாதாரணதரம் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்காக தயார்படுத்துவதை விட இக்காலத்தில் பெற்றோர்கள் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைகளுக்காக தமது பிள்ளைகளை தயார்படுத்துகின்றனர். இவ்விவகாரத்தில் கூடுதலாக   மன உளைச்சலுக்குள்ளாவது குறித்த வெட்டுப்புள்ளிகளை தாண்டாத மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களுமாவர்.
 மேலும் வெட்டுப்புள்ளிகளை தாண்டாத மாணவர்களைத் தவிர்த்து அதற்கு மேல் புள்ளிகளைப்பெற்ற மாணவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகம் ஆகியன மேற்கொள்ளும் பாராட்டுவிழாக்கள் ஏனைய மாணவர்களை மன உளைச்சலுக்குட்படுத்துகிறது என்பதை அறிந்தே கல்வி அமைச்சானது, 2015 ஆம் ஆண்டு இரு பாடங்களிலும் தலா 35 புள்ளிகளைப்பெற்று 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை சித்தியடைந்தவர்கள் என குறிப்பிட்டு சான்றிதழும் வழங்கி வந்தது.எனினும் நல்லாட்சி அரசாங்கத்தில் அத்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலையில், இப்பரீட்சையை நடத்துவது குறித்து கல்வி அமைச்சு அறிக்கையை எதிர்பார்த்துள்ளது. இப்பரீட்சை எதற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதன் தாற்பரியம் தடம் மாறிப்போன நிலையில்   பெற்றோர் மற்றும் மாணவர்கள் இருசாராருக்கும் ஒரு தலையிடியாக இது மாறியுள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. கால மாற்றத்திற்கேற்ப கல்வித்துறை மாற்றங்கள் மிகவும் அவசியமானதாகும். அதற்கேற்ப தற்போது தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக அரசாங்கத்துக்கு எழுந்துள்ள மன மாற்றமும் தேவையானதொன்றாகவே உள்ளது.



No comments: