Thursday, October 23, 2008

குருவியை கொன்ற கிரிக்கெட் வீரர்

ஒரு வருடத்திற்கு முன்பு மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் அந்த நாள் ஞாபகம் என்ற தலைப்பில் சில சுவாரஸ்யமான கிரிக்கெட் தகவல்களை சேகரித்து தொடராக எழுதி வந்தேன். அதில் எனக்கு மறக்க முடியாத ஒரு சம்பவமாக இந்திய கிரிக்கெட் அணியின் ஜஹாங்கீர் கான் என்ற பந்து வீச்சாளருக்கு நடந்த அனுபவம் மனதில் பதிந்து விட்டது.இப்படி ஒரு சம்பவம் நடந்தது குறித்து இந்தியாவிலுள்ள எத்தனை கிரிக்கெட் இரசிகர்களுக்குத்தெரியும் என்பது எனக்குத்தெரியாது. எனினும் கிரிக்கெட் வரலாற்றில் பதிவாகி விட்ட இந்த விடயத்தை என் சக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


விடயத்திற்கு வருவோம்,

இந்தியாவின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் அணி குறித்து நான் புதிதாக எதுவும் கூறப்போவதில்லை.1932 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தனது முதல் டெஸ்ட் சுற்றுலாவை மேற்கொண்டு இங்கிலாந்து சென்ற இந்திய அணிக்கு சி.கே.நாயுடு தலைமை தாங்கினார். அந்த முதல் டெஸ்ட் அணியில் பங்கு கொண்ட பந்து வீச்சாளர் தான் மொகமட் ஜஹாங்கீர் கான். 1910 ஆம் ஆண்டு பெப்ரவரி 1ஆம் திகதி பஞ்சாப் மாநிலத்தின் ஜுலாந்துர் (இப்போது ஜலாந்தர்) எனும் இடத்தில் பிறந்தவர்.
முதல் தர போட்டிகளில் 3327 ஓட்டங்களையும் பெற்றிருப்பதோடு 328 விக்கெட்டுகளையும் வீழத்தியிக்கிறார். உள்ளூர் போட்டிகளில் திறமை காட்டிய இவர் இந்திய தேசிய அணியில் இடம்பிடித்து இங்கிலாந்துக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. லோர்ட்சில் இடம்பெற்ற முதல் போட்டியில் இவர் 60 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் இங்கிலாந்தின் ஜாம்பவான் துடுப்பாட்ட வீரர்களான ஹொல்மஸ், வூலி,வெல்லி ஹமண்ட் ஆகியோரும் அடங்குவர். முதல் தொடருக்குப்பின்னர் ஜஹாங்கீர் கானுக்கு இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக அணிக்கு விளையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது.1936 ஆம் ஆண்டு இந்தியா தனது இரண்டாவது டெஸ்ட் தொடரை இங்கிலாந்துக்கு மேற்கொண்ட பிறகு இவர் மேற்படி பல்கலைகழக அணிக்காக விளையாடி வந்தார். இவ்வாண்டு ஜுலை மாதம் லோர்ட்ஸ் மைதானத்தில் எம்.சி.சி அணிக்கு எதிராக ஒரு போட்டியில் விளையாடினார் ஜஹாங்கீர்.
போட்டியில் பந்து வீச ஆயத்தமானார்.மறுபுறம் இவரது பந்துக்கு முகங்கொடுக்க தயாரானார் டி.என்.பியர்ஸ் என்ற வீரர். தனது இடத்திலிருந்து ஓடி வந்து நடுவரை கடந்து பந்து வீசினார் ஜஹாங்கீர், என்ன அதிசயம் பந்து துடுப்பாட்ட வீரரை சென்றடைய முன்னர் ஆடுகளத்தின் குறுக்காக பறந்து சென்ற ஒரு அப்பாவி சிட்டுக்குருவியை பதம் பார்த்தது. அந்தோ பரிதாபம் சிட்டுக்குருவி அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தது.
கிரிக்கெட் விளையாட்டின் நடுவே இடம்பெற்ற இச்சம்பவம் அனைவரையும் ஒரு கணம் அதிர்ச்சியடைய வைத்தது என்வோ உண்மை தான் .அதற்குப்பிறகு ஜஹாங்கீர் தனது பந்து வீச்சில் குருவியை கொன்ற விடயம் பரவி பிரபலமானார்.அந்த சிட்டுக்குருவியும் லோர்ட்ஸ் அருங்காட்சியகத்தில் இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது, குருவியை கொன்ற பந்தும் தான். இச்சம்பவம் நடந்து 72 வருடங்களாகி விட்டன. இது போன்ற சம்பவம் இது வரை கிரிக்கெட்டில் இடம்பெறவில்லை என்று நினைக்கிறேன் அப்படியிருந்தால் சொல்லுங்களேன்?
குறிப்பு: இங்கிலாந்துக்கு சென்ற முதல் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் கட்டம் போட்டு காட்டியிருப்பவர் தான் ஜஹாங்கீர் கான். லோர்ட்ஸ் கிரிக்கெட் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சிட்டுக்குருவியும் பந்தும்.
பின்குறிப்பு: 1988 ஜுலை 23 ஆம் திகதி தனது 78ஆவது வயதில் லாகூரில் காலமானார் ஜஹாங்கீர் கான். இவரது மகன் தான் பிற்காலத்தில் பாகிஸ்தான் அணியின் தலைவராக பிரகாசித்த மஜீட் கான். இம்ரான் கான் இவரது மருமகனாவார்.

தெரிந்த கிரிக்கெட்டில் தெரியாத விடயங்கள்(2)



அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் சச்சின் டெண்டுல்கர் உலகில் அதிக டெஸ்ட் ஓட்டங்களைப்பெற்ற வீரர் என்ற பெருமையைப்பெற்றது அனைவரும் அறிந்த விடயமே.




இச்சந்தர்ப்பதில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறுகிய காலத்தில் 3000ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ள இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் 4000ஓட்டங்களை நெருங்கியுள்ளார்.
தென்னாபிரிக்காவில் பிறந்து வளர்ந்த பீட்டர்சன் அங்கு தனக்கு சரியான சந்தர்ப்பம் இல்லாத காரணத்தினாலேயே இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார். தற்போது இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரராக வலம் வரும் பீட்டர்சன் உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக பரிணமித்து வருகிறார். மூவாயிரம் டெஸ்ட் ஓட்டங்களை பெற இவர் எடுத்துக்கொண்ட காலம் 884 நாட்கள் மட்டுமே.



தனது முதல் டெஸ்ட்டை அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2005ஆம் ஆண்டு ஜுலை மாதம் 21ஆம் திகதி லோர்ட்ஸ் மைதானத்தில் விளையாடினார் இவர். இதற்கு முன்னதாக இச்சாதனையை தன் வசம் வைத்திருந்தவர் இங்கிலாந்து அணியின் மற்றுமொரு சிறந்த துடுப்பாட்ட வீரர் அன்ரூ ஸ்ட்ரஸ்.இவரும் தென்னாபிரிக்காவை பிறப்பிடமாகக்கொண்டவர் என்பது விசேட அம்சம்.இவர் மூவாயிரம் ஓட்டங்களை 1124 நாட்களில் பெற்றார். இதே வேளை டெஸ்ட் போட்டிகளில் மிகக்குறுகிய காலத்தில் 4000ஓட்டங்களை எடுத்த வீரர் என்ற பெருமையும் இங்கிலாந்து வீரர் ஒருவருக்கே உண்டு. அவர் மார்க்கஸ் திரஸ்கோதிக். மிகச்சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளங்கிய இவர் சில தனிப்பட்ட காரணங்களுக்காக அணியில் இருந்து முற்றாக நீங்கியுள்ளார். இவர் 1597 நாட்களில் மேற்படி இலக்கை அடைந்தார்.





தற்போது 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பீட்டர்சன் 3890 ஓட்டங்களை பெற்றுள்ளார். ஆக இவருக்கு இன்னமும் 110 ஓட்டங்களே சாதனைப்படைக்க தேவை. மேலும் ஒன்பது மாதங்கள் கைவசம் உள்ளன.தற்போது தென்னாபிரிகாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முடித்துக்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அடுத்த வருடம் ஜனவரி மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு டெஸ்ட் சுற்றுலா ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.அதன் போது பீட்டர்சனுக்கு புதிய சாதனை படைக்க வாய்ப்புண்டு.

இது சுப்ரமணியபுரம் அல்ல


சிம்சோனும் தெலீலாவும்





பெஞ்சமின் அண்ணா கொடுத்த குறிப்புகளைக்கொண்டு எனது தேடல் மூலம் சிம்சோன் மற்றும் அவனது காதலி தெலீலா ஆகியோரின் சரித்திரத்தை ஒருவாறு கண்டு பிடித்து விட்டேன். நன்றி பெஞ்சமின் அண்ணா.








இதை எனது நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளாவிட்டால் மறுபடி தலை வலி வந்து விடும்.
இதை நான் கிரேக்க நாவல் என்று கூறியது தவறு என்று தான் நினைக்கிறேன்.காரணம் பைபிளில் கூறப்படும் இந்த கதை யூதர்கள் மற்றும் பெலிஸ்தினியர்களுக்கிடையில் ஆரம்ப காலந்தொட்டு இடம்பெற்று வரும் பகைமையை கூறுகிறது. இதில் ஓரிடத்தில் கிரேக்க ஜாம்பவான் ஹேர்குலிஸுக்கு இணையான வீரன் சிம்ஸோன் என வர்ணிக்கப்பட்டுள்ளது.
சாம்சன் அல்லது சிம்சோன் என வர்ணிக்கப்படும் இக்கதையின் நாயகன் யூத வமிசத்தை சேர்ந்தவன். இவனது தந்தை பெயர் மனோஹா. இவர் இஸ்ரேலின் அப்போதைய பழங்குடி இனங்களில் ஒன்றான டான் (Dan) எனும் இனத்தைச்சேர்ந்தவர். இப்பழங்குடியினரை Tribe of Dan என்று அழைக்கின்றனர்.
ஆறு முக நட்சத்திரத்தின் மத்தியில் உள்ளஒரு பாம்பு தான் இவர்களின் சின்னம்.இவர்கள் அனைவரும் ஹிப்ரு மொழியை பேசுபவர்கள் என குறிப்புகள் கூறுகின்றன.
சிமியோன் ,லெவி,ரீபன்,ஜுடா என்பன இக்காலத்தில் இங்கு வாழ்ந்த ஏனைய பழங்குடி இனங்களாகும்.
இவர்களின் குடும்பம் வாழ்ந்த இடத்தின் பெயர் ஸோரா.இது ஜெருசலேத்திலிருந்து 8 மைல்கள் மேற்கே அமைந்துள்ள ஒரு பிரதேசம். சிம்சோன் காதலித்த தெலீலா இஸ்ரேலின் சொரக் வெளி என்றழைக்கப்பட்ட இடத்தைச்சேர்ந்தவள்.இவள் பெலிஸ்த்தினியர் வம்சத்தை சேர்ந்தவள்.இரு இனங்களுக்கிடையில் பகைமை பாராட்டப்பட்டாலும் காதலுக்கு முன்னே அவையெல்லாம் தூசு தானே?
ஆனால் அதற்கு முன்பாக சிம்சோன் மற்றுமொரு பெலிஸ்தீன் இனப்பெண்ணை காதலித்து மணப்பதற்கு தயாராகவிருந்தான். அந்த வரலாற்றை சுருக்கமாக பார்த்து விடுவோம்.
கட்டிளங்காளையாக வளர்ந்த சிம்சோன் பெலிஸ்தீனின் டிம்னா எனும் இடத்தைச்சேர்ந்த ஒரு அழகிய யுவதி சீது காதல் கொண்டு தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்ய ஆயத்தமானான். ஆனால் இது இறைவனின் பேரால் நடந்தது என கூறப்படுகிறது.
பெலிஸ்தீனியர்களை முற்று முழுதாக அழிக்கும் படலத்தின் ஆரம்பமே இத்திருமணம் சம்பவம் என்று பெற்றோர்கள் உணர்ந்தனர்.அதன் படி தான் நடந்தது.

குறிப்பிட்ட பெலிஸ்தீன பெண்ணை அவள் இருக்கும் இடத்திற்கே சென்று மணம் புரிந்து வருகிறேன் என்று வீராவேசத்தோடு புறப்பட்ட சிம்சோனை இடையில் ஒரு இராட்சத சிங்கம் எதிர்கொண்டது.மிக இலகுவாக அதை வீழத்திய சிம்சோன் அதன் தாடையை கிழித்துப்போட்டு அப்பால் சென்றான். இச்சம்பவத்தை சிம்சோன் யாரிடமும் கூறவில்லை.
வெற்றிகரமாக தனது மனைவியை அழைத்துக்கொண்டு திருமணத்திற்காக திரும்பும் வழியில் சிம்சோன் ஒரு காட்சியை காண்கிறான். அவன் கொன்று போட்ட சிங்கத்தின் உடலில் தேன் பூச்சிகள் கூடு கட்டி சுவை மிகு தேனை சொரிந்து கொண்டிருந்தன. இந்த தேனை சேகரித்த சிம்சோன் அதை தனது பெற்றோருக்குக்கொண்டு வந்து கொடுத்தான்.
திருமண நாள் நெருங்கியது. அப்போது மணப்பெண் தோழர்களாக வந்திருந்த 30 பெலஸ்தினீயர்களிடமும் ஒரு புதிர் போட்டான் சிம்சோன். இப்புதிருக்கான விடைசரியாக கூறினால் அனைவருக்கும் உயர்தர உடுதுணிகள் தருவதாக அவன் வாக்களித்தான்.
அந்தப்புதிர் அவன் சிங்கத்தை வீழத்தியதையும் பின்னர் தேன் கூட்டை கண்டதையும் தொடர்புகொண்டதாக இருந்தது.
இந்தப்புதிரை பெலஸ்தினியர்களால் கண்டறிய முடியவில்லை.மெதுவாக அவர்கள் சிம்ஸோனின் மனைவியை அணுகினர். எமது குலப்பெருமை உன்னிடத்தில் தான் தங்கியுள்ளது எப்படியாவது அந்தப்புதிருக்கான விடையை தெரிந்து வா இல்லையேல் உன்னையும் உனது தந்தையையும் எரித்து சாம்பராக்கி விடுவோம் என்று மிரட்டினர். அவளும் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கண்ணீருடன் சிம்சோனை நெருங்கினாள்.
அவன் புதிருக்கான விடையைக்கூற அவள் தனது தோழர்களுக்கு கூறி விட்டாள்.
இங்கு தான் துரோகம் ஆரம்பமாகிறது.
விடையை அவர்கள் சிம்சோனிடம் கூற அவன் வாக்கு கொடுத்தாற்போல் அஸ்கலோன் நகருக்குச்சென்று அங்குள்ள 30 பெலிஸ்தீனியர்களை கொன்று உயர்தர ஆடைஅணிகளை கொண்டு வந்து கொடுக்கிறான். ஆனால் தனது தந்தையின் வீட்டிற்கு வரும் போது எதிர்பாராத விதமாக அவனின் மனைவியை தோழர்களில் ஒருவனுக்கு அவளது தந்தை மணம்முடித்து கொடுத்துவிட கர்ஜனையோடு வீருகொண்டெழும் சிம்சோன் பெலஸ்தீனியர்களின் நிலங்களை கொளுத்தி விடுகிறான். இதற்குக்காரணத்தை கண்டறியும் பெலஸ்தீனியர்கள் சிம்சோனின் மனைவி மற்றும் அவளது தந்தையை உயிரோடு எரித்து விடுகின்றனர். இதுவே சிம்சோன் பெலஸ்த்தீனியர்களை அனைவரையும் வேறோடு அழிப்பதற்கு காரணமாயிற்று.கண்ணில் படும் அவ்வினத்தவர் அனைவரையும் கொன்று தீர்த்தான் சிம்சோன்.

இப்படியான சந்தர்ப்பத்தில் தான் தெலைலா இவனது கண்ணில் பட்டாள்.அவள் பெலஸ்த்தீன இனத்தவள் என்று அறிந்தும் தனது காதலை சொன்னான். உயிருக்குயிராய் காதலித்தான்.
இருந்தாலும் தெலீலா அதை நினைத்துப்பார்த்தாளா என்பது தான் கேள்வி.பெலிஸ்தினியர்கள் ஆசை காட்டி இவளுக்குக்கொடுத்த பணம் மற்றும் நிலபுலன்களுக்காக ஒரு வீரதீரனை காட்டிக்கொடுக்கும் வேலையைச்செய்து வரலாற்றில் காதல் துரோகி என்ற பட்டத்தைப் பெற்று விட்டாள்.

முடிவை முதல் பதிவில் கூறி விட்டாலும் ஒருமுக்கியமான விடயத்தை இங்கு பதிவிட வேண்டும். அதாவது சிம்சோனின் வலிமை இரகசியத்தை அறிந்த தெலீலா பின்னர் அதை பெலஸ்தீனியர்களிடம் கூறியது மட்டுமல்லாது சிம்சோன் தூங்கும் போது அவனை தனது மடியில் கிடத்தி அவன் தலைமயிரை வெட்ட எதிரிகளுக்கும் உதவி புரிந்தாளாம். எப்படிப்பட்ட துரோகியாக அவள் இருந்திருப்பாள்? இதை வாசிக்கும் போது மனது வலிக்கிறது என்றால் அந்த சம்பவத்தை ஓவியமாக பார்க்கும் போது உங்கள் மனது எப்படி இருக்கிறது தோழர்களே?

வேதனை குறிப்பு: சிம்சோன் கண்தோண்டப்பட்டு இராட்சத மண்டப தூண்களை இழுப்பதையும் சிங்கத்தை சம்ஹாரம் செய்வதையும் காதல் துரோகி தெலீலா சிம்சோனை மடியில் கிடத்தி தலைமயிரை வெட்டுவதையும் சித்தரிக்கும் ஓவியங்களை தேடிப்பிடித்து தந்துள்ளேன்.

Wednesday, October 22, 2008

சுப்ரமணியபுரமும் காதல் துரோகமும்

திரைப்படம் வெளிவந்து இத்தனை நாட்களுக்குப்பிறகு அதைப்பறி எழுதுவதென்றால் விடயம் உள்ளது. இத்தனை நாட்களாக இத்திரைப்படத்தைப்பற்றி வந்த விமர்சனம் மற்றும் திறனாய்வு அனைத்தையும் முடிந்தவரை தேடிப்படித்து விட்டேன். பல இணையத்தளங்கள் ஏன் வலைப்பதிவுகளில் கூட இத்திரைப்பட வெளிப்படுத்தல்களை சுவாசித்து முடித்து விட்டேன்.ஆனால் நான் எதிர்பார்த்த ஒரு விடயம் வரவில்லை.
ஆனால் நான் எதிர்ப்பார்த்த அந்த விடயத்திற்கு கொஞ்சம் தீனி போடுமாற்போல இத்திரைப்படம் பற்றி எழுத்தாளர் சாருநிவேதிதா தனது வலைப்பதிவில் கூறியிருக்கிறார்.
சுப்ரமணியபுரம் படத்தில் காதல் துரோகத்தை சிலாகித்து கூறியிருக்கும் அவர் ஓரிடத்தில் ஜுலியஸ் சீசர் கதையில் புரூட்டஸின் துரோகத்தை உதாரணம் காட்டியிருந்தார்.
எதிரிகளின் கத்திக்குத்துக்கு முன்னால், புரூட்டஸ் தனக்கு துரோகியாக மாறி விட்டதே சீஸரின் வேதனையை அதிகப்படுத்தியது என்பது யதார்த்தம்.இது நட்பின் துரோகத்தை கூறும் சம்பவமாக வரலாற்றில் பதிவான விடயம். இச்சந்தர்ப்பத்தில் சுப்ரமணியபுரம் படத்தில் கூட நாயகன் தனது காதலியின் துரோகத்தின் வெளிப்பாட்டை அதிர்ச்சி மூலம் காட்டும் இடம் முக்கியமானது.அந்த அதிர்ச்சியை விட எதிரிகளின் கத்தி வெட்டுகள் அவனை பெரிதாக ஒன்றும் பாதிக்கவில்லை என்பதை அக்காட்சி விளக்குகிறது.
சரி இனி விடயத்திற்கு வருவோம் இப்படத்தை நான் பார்த்தபிறகும் இத்திரைப்படம் பற்றிய கருத்துக்களை கண்ட பிறகும் எனக்கு சிறு வயதில் (9 வயது இருக்கும் என்று நினைக்கிறேன் இப்போது எனக்கு வயது 30) வாசித்த ஒரு கிரேக்க நாவல் ஞாபகம் வந்தது. இதன் நாயகன் பெயர் சிம்ஸோன்.சிம்ஸோனின் வீரகாவியம் என இந்நாவல் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. இக்கதையை மிகச்சுருக்கமாக சொல்கிறேன்.
சிம்ஸோன் பிறந்த நாளில் இருந்து அசகாய சக்தி பெற்ற ஒருவனாக விளங்கினான். இவனது சக்திக்கு பிரதான காரணம் பிறந்ததிலிருந்து சிரைக்கப்படாத அவனது தலைமயிர். இந்த இரகசியம் அவனுக்கும் அவனது தாய்க்கும் மட்டுமே தெரியும். தனது 10 வயதிலேயே காட்டில் சிங்கத்துடன் போரிட்டு அதை வென்ற வீரன் சிம்ஸோன். இப்படியிருக்கும் போது வாலிப வயதை அடைந்தான் சிம்ஸோன்.ஒரு கட்டத்தில் இவனது எதிரிகள் எப்படியாவது இவனை கொல்ல வேண்டும் என்பதற்காக சதி திட்டம் தீட்டினர்.
ஆனால் சிம்ஸோனிடம் உள்ள அசுர பலத்தால் எதிரிகளின் திட்டங்கள் தவிடு பொடியாகின.இந்நிலையில் எதிரிகள் ஓர் அழகியை கண்டு பிடித்து அவனிடம் உள்ள அசுர சக்தி என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக அவனிடம் காதலியாக நடிக்கும்படியும் இதற்கு பெருந்தொகை பணம் தருவதாகவும் கூறினர்.

அதன்படி அந்த இரகசியத்தை தெரிந்து கொள்வதற்கு தன்னையே சிம்ஸோனிடம் கொடுத்தாள் அந்த அழகி (இவளது கதாபாத்திரப்பெயர் மறந்து விட்டது)ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இவள் சிம்ஸோனிடம் அவனது அசுர பலம் பற்றி கேட்ட அவன் புன்னகைத்து விட்டு ஒரு பொய்யை சொல்லுவான். இதை ஒவ்வொரு முறையும் அதை எதிரிகளிடம் கூறி அதன் படி செயற்படகூற இறுதியில் தோல்வியையே தழுவுவார்கள் எதிரிகள். ஒரு கட்டத்தில் இவள் கண்ணீருடன் சிம்ஸோனிடம் என் மேல் உங்களுக்கு அன்பே கிடையாதா உங்களுக்கா என்னையே கொடுத்தேனே உங்கள் வலிமையின் இரகசியத்தை கூறமாட்டீர்களா என கண்ணீர் வடிப்பாள்.
இச்சந்தர்ப்பத்தில் சிம்ஸோன் அவளிடம் உண்மையை மிகவும் வருத்தத்தின் மத்தியிலேயே கூறுவான்.காரணம் அவன் அவளை உண்மையாக நேசித்தான்.தனது உயிருக்கு வலை பின்னப்படுவதை அவர் அறிந்திருக்கவில்லை.மேலும் தனது காதலி தனக்கு என்றுமே காதலியாகத்தான் இருப்பாள் என்ற நம்பிக்கைஅவனுக்கு இருந்தது.இருப்பினும் தனது தாய்க்கும் தன்னை படைத்த கடவுளுக்கும் மட்டும் தெரிந்த இரகசியத்தை காதலிக்கு கூறிய அன்றைய இரவு அதிக மது அருந்தி நித்திரைக்கு சென்றான்.
ஆனால் துரோகியான காதலி இவ்விடயத்தை எதிரிகளிடம் கூற அவர்கள் சிம்ஸோன் தூங்கும் போது மொட்டையடித்து விடுவர். அதிகாலை நித்திரை விட்டெழுந்த சிம்ஸோன் வலுவிழந்த சாதாரண மனிதனாகி விடுவான். தன் காதலியின் துரோகத்தை நினைத்து கண்ணீர் வடித்தான் அந்த அசகாய சூரன்.ஆனால் எதிரிகள் அதற்கும் சந்தர்ப்பம் கொடுக்கவில்லை அவனது கண்களை தோண்டி எடுத்து விட்டு ஒரு பெரிய மண்டபத்தில் இரும்புச்சங்கிலி கொண்டு அவனை கட்டி வைத்தனர். இப்படியே இரண்டு நாட்களுக்கு மேல் உணவு நீர் கொடுக்காது அவனை கொடுமைப்படுத்தினர். சிம்ஸோனுக்கு தண்டனை அறிவிக்கும் நாள் வந்தது. அவனது எதிரிகள் அனைவரும் அந்த பெரிய மண்டபத்தில் நிறைந்திருந்தனர். இச்சந்தர்ப்பத்தில் அந்த மூன்று நாட்களில் சிம்ஸோனின் தலையில் சற்று மயிர் வளர்ந்திருந்தது. இதை உணர்ந்து கொண்ட சிம்ஸோன் தனது பலம் அனைத்தையும் திரட்டி தன்னை பிணைத்து வைத்திருக்கும் சங்கிலிகளை இழுக்க அந்த மண்டபத்தின் பிரமாண்ட தூண்கள் சரிந்து மண்டபமே இடிந்து விழுந்தது. இதில் சிம்ஸோன் உட்பட அவனது எதிரிகள் அனைவரும் நசுங்கி மடிந்தனர்.

அந்த வயதில் எனக்கு இக்கதை மனதில் பாதிப்பை ஏற்படுத்தியது என்றால் உண்மை.இதை விட ஒரு காதல் துரோகக்கதையை நான் பின்னாளில் ஏன் இது வரை கூட வாசித்தது கிடையாது.இருப்பினும் சுப்ரமணியப்புரம் படத்தை பார்த்ததும் எனக்கு அக்கதை மனதில் நிழலாடியது. உடனடியாக ஓடிச்சென்று அந்நாவலை வீடெங்கினும் தேடிப்பார்த்தேன்.ஏமாற்றமே மிஞ்சியது. இக்கதையை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளாவிட்டால் எனது தலை வெடித்து விடும் போல் உள்ளது.இணையத்திலும் சிம்ஸோன் குறித்த ஒரு குறிப்புகளும் இல்லை. இது உண்மையாக நடந்த கதையா அல்லது கற்பனையா என்பதை தாண்டவம் மூலம் நண்பர்களிடம் தான் கேட்க வேண்டும். அது மட்டுமல்லாது எனது நண்பர்கள் இத்திரைப்படத்தைப்பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்பதையும் அறிய விரும்புகிறேன். மேலும் இத்திரைப்படத்தை விட காதல் துரோகத்தை சித்திரிக்கும் தமிழ் படத்தை பார்த்திருக்கிறீர்களா நண்பர்களே?அதையும் கூறுங்களேன்
குறிப்பு: காதலியால் துரோகத்துக்குள்ளாக்கப்படும் காதல் படங்கள் மட்டும்.

Saturday, October 11, 2008

நீ+ நான்= நினைவுகள்


அலைகள் வந்து கால்கள் நனைத்த போது

கொன்று விடும் கோபம் வந்தது,

உன் பெயரை மணலில் எழுதி அமர்ந்திருக்கும் அந்த தருணத்தில்!
உனக்கு கடற்கரை ஞாபகம் வருமா?

வரும் என்று நினைக்கிறேன்,இதை வாசித்தப்பிறகு சரி!
காதல் கரை சேர காதலர்கள் சேரும் இடம் கடற்கரையாம்

என்ன வேடிக்கை பார்த்தாயா?
நாமும் அப்படித்தான் நினைத்தோம்

இன்று கரையில்லா கடலாய் நம் வாழ்க்கை!
காலைச்சூரியன்,பளிச்சிடும் பனித்துளிகள்

அனைத்திலும் நீ…மனதிற்குள் மகிழ்ச்சி
ஆனால் இரவுகள் நரகம்

நிலவாய் நீ கடலாய் நான்

பார்த்துக்கொண்டு மட்டுமேஇருக்கின்றேன்
நினைப்பாயா என்று கேட்டால் உன் மனசு திறக்கிறாய்

நான் நிறைந்து விடுகிறேன்
ஆனால் உன்னை நான்…

இப்படிச்சொன்னால் கோபிப்பாயா?

மரணித்தால் தானே மறக்க

சுவாசமே நீ தானே பெண்ணே

காதலித்துப்பார்; கல்யாணம் முடித்து



மனிதா காதலித்துப்பார் கல்யாணம் முடித்து!முன்னொரு போதும் பார்க்காத முகம் பார்த்து மணநாளன்று பார்த்த முகம் பார்த்து பின் எந்நாளும் அவளுடன் சேர்ந்திருக்கும் சுகம் எண்ணி காதலித்துப்பார் கல்யாணம் முடித்து!
காதல்கள் எல்லாம் கரை சேர்வதில்லை;சேர்ந்தவைகளெல்லாம் தேர்ந்தவைகளில்லை
காதலின் அர்த்தம் புரிந்துணர்வேபுரிந்து கொள்!உன் புது வாழ்க்கையில் ஆரம்பிக்கும் புரிந்துணர்வு புத்துணர்ச்சியானதுஆகையால் காதலித்துப்பார் கல்யாணம் முடித்து!
அனுபவமில்லாத ஆரம்பம் அடிசறுக்கும்என்று தயங்காதே தளராதே அடிக்கடி நீ காணும் புளித்துப்போன புன்னகையை விட உன் புதுத்துணையின் புன்னகை புதுமையானதாகவிருக்கும் காதலித்துப்பார் கல்யாணம் முடித்து!
இங்கு காத்திருத்தல் இல்லை ;தவிப்பில்லை தண்டனையில்லைஇறுதி வரை அவள் எனக்குத்தானா என்ற ஏக்கமுமில்லை!
படகு மறைவிலும் குடையை கவசமாக்கியும்மனதையும் மகிழ்சியையும் பகிர்ந்துகொள்ளத்தேவையில்லை! காதலித்துப்பார் கல்யாணம் முடித்து!
காதலிப்பதை விட காதலிக்கப்படுவதில் தானே சுகம்?
எவரின் தலையீடும் இல்லாமல் நீ காதலிக்கப்படுவதை விரும்புகிறாயா?இன்றே தொடங்கு காதலிப்பதைஆனால் கல்யாணம் முடித்து விட்டு காதலி உன் புதுத்துணையை! இறுதி மூச்சு வரை காதலிக்கப்படுவாய் காதலின் களிப்பை கண்டுணர்வாய்!
2002

Friday, October 10, 2008

எழுத வாசிக்க திறனற்றவர்கள் 781 மில்லியன் மக்கள்

இன்று உலகின் பல நாடுகள் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்ந்து கல்விச்செயற்பாடுகளில் அதிக அக்கறை காட்டி வருகின்றன.இதற்குக்காரணம் பூகோளமயமாக்கத்தின் விளைவு தான் என்றால் மிகையில்லை. அதி நவீன தொழில்நுட்ப திறனும் கணிணிப்பயன்பாடும் இன்றைய உலகை ஆக்கிரமித்தருக்கும் காலகட்டத்தில் எந்தவொரு நாடும் தனது மக்கள் எழுத்தறிவில் பின்தள்ளப்பட்டுள்ளனர் என்று கூற வெட்கப்படும் என்பதே நிதர்சனம்.
ஆனாலும் வறுமை, போஷாக்கின்மை, அரசியல் நெருக்கடிகள், கலாசார பாகுபாடு, அடிமைப்படுத்தல் போன்ற காரணங்களினால் இன்று உலகில் வயது வந்த சுமார் 781 மில்லியன் மக்கள் அடிப்படை எழுத்தறிவு இன்றி உள்ளனர் என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டியுள்ளது. அதாவது சனத்தொகையில் ஐந்தில் ஒருவருக்கு எழுத்தறிவு இல்லை,இதில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள்.மேலும் 103 மில்லியன் சிறார்கள் இன்று பாடசாலை கல்வியைப்பெறமுடியாது வெளியே புறந்தள்ளப்பட்டுள்ளனர் என்பது இன்னொரு சோகமான விடயம்.கல்வியறிவு அல்லது எழுத்தறிவின் முக்கியத்துவம் தான் என்ன? சர்வதேசரீதியாக இது தொடர்பான செயற்றிட்டங்கள் எவ்வாறு முன்னெடுத்துச்செல்லப்படுகின்றன? இவற்றை கொண்டு செல்வது யார் என்ற கேள்விகளுக்கு நாம் பதில் காணவேண்டியவர்களாக உள்ளோம்.
எழுத்தறிவு ஏன் முக்கியம்?
எழுத்தறிவு என்பது மனித உரிமைகளுடன் தொடர்பு பட்ட ஒரு விடயம்.தனிநபர் ஆளுமையிலிருந்து சமூக மனித வள அபிவிருத்தி மற்றும் கல்வி செயற்பாடுகள் அதற்கான சந்தர்ப்பங்கள் என்பன எழுத்தறிவிலேயே தங்கியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி மற்றும் அறிவியல் பண்பாட்டு அமைப்பான யுனஸ்கோவானது ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் 8ஆம் திகதியை சர்வதேச எழுத்தறிவு தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. ‘எந்த ஒரு மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியமல் இருத்தலே எழுத்தறிவின்மையாகும்’ என ஐக்கிய நாடுகள் சபை எழுத்தறிவின்மையை தனது சாசனத்தில் வரையறை செய்துள்ளது.அடிப்படை கல்வியின் இதயம் என எழுத்தறிவை கூறலாம்.இதில் வறுமையை அழித்தல்,சிறுவர் இறப்பு வீதத்தை குறைத்தல்,ஜனத்தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்தல்,பால் சமத்தவத்தை கட்டியெழுப்பல், முறையான அபிவிருத்தியை உறுதி செய்தல்,சமாதானம் மற்றும் ஜனநாயகம் என பல விடயங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன. எழுத்தறிவு என்பது கல்விக்கு எந்தளவில் முக்கியமான ஒரு மையப்புள்ளியாக விளங்குகிறது என்பதற்கு பல நல்ல வழுவான உதாரணங்களைக்கூறலாம்.ஒரு சிறந்த அடிப்படை கல்வியானது மக்களுக்கு வாழ்க்கைக்கு எந்தளவிற்கு முக்கியமோ அதேயளவிற்கு ஏனைய பிற தேவைகளுக்கும் காரணகர்த்தாவாக இருக்கின்றது. எழுத்தறிவின் பயனை அறிந்த பெற்றோர் தான் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புகின்றனர். எழுத்தறிவு பெற்றோர் கல்வி வாய்ப்புக்களை இலகுவாக பெற்றுக்கொள்கின்றனர்,மேலும் ஒரு கல்வி கற்ற சமுதாயமானது அபிவிருத்தி இலக்குகளை இனங்கண்டு சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டது. ஆனால் உலகில் இன்று பல நாடுகள் பல பிரச்சினைகள் காரணமாக எழுத்தறிவை பெறமுடியாதுள்ளனர்.
1965 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதியன்று யுனெஸ்கோவினால் செப்டெம்பர் 8 ஆம் திகதி சர்வதேச எழுத்தறிவு நாளாக பிரகடனம் செய்யப்பட்டது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும் சமூகத்திற்கும்,அமைப்புக்களுகும் அறிய வைப்பது இதன் நோக்கமாகும்.யுனெஸ்கோவின் ‘அனைவருக்கும் கல்வி பற்றிய உலக அறிக்கையின் படி(2006) தென் மற்றும் மேற்கு ஆசிய பகுதிகளிலேயே மிகக்குறைந்த (58.9%)வீதமானோர் (வயது வந்தோரில்)படிப்பறிவில்லாமல் உள்ளனர்.இதற்கடுத்தப்படியாக ஆபிரிக்காவில் 59.7 வீதமும் அரபு நாடுகளில் 62.7 வீதமுமாக உள்ளது.இதில் சுட்டிக்காட்டப்படவேண்டிய விடயம் என்னவெனில் இந்த அறிக்கைக்கும் நாடுகளில் வறுமைக்கும் உள்ள நெருங்கிய தொடர்புகளாகும். ஒரு நாட்டின் கல்வியறிவு வீதத்தை தீர்மானிக்கும் காரணியாக இன்று வறுமை பூதகரமாக எழுந்து நிற்கின்றது. ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தலிபான் போன்ற அமைப்புக்களின் கடுமையான சட்டதிட்டங்களால் அங்குள்ள பெண்கள் பாடசõலை கல்வியை பல வருட காலமாக இழந்து நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வருடத்திற்கான கருப்பொருள்ஒவ்வொரு வருடமும் சர்வதேச எழுத்தறிவு தினம் ஒரு பிரகடனத்தை தாங்கி வரும்.இம்முறை யுனெஸ்கோவினால் ‘எழுத்தறிவே சிறந்த பரிகாரம்’ ("Literacy is the best remedy")என்ற கருப்பொருள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இம்முறை சுகாதாரம் மற்றும் கல்விக்கிடையில் உள்ள தொடர்புகளை விளக்குவதாகவும் இக்கருப்பொருள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.இன்று உலகை அச்சுறுத்தி வரும் எயிட்ஸ்,காசம்,மலேரியா மற்றும் ஏனைய நோய்கள் தொடர்பில் மக்களும் வளர்ந்து வரும் சமுதாயமும் அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்களை இம்முறை கருப்பொருள் உணர்த்தி நிற்கின்றது. கொடிய உயிர்க்கொல்லி நோயான எயிட்ஸ் குறித்தான விழிப்புணர்வு செயற்றிட்டங்கள் மக்களிடையே சென்று சேராததற்குப்பிரதான காரணங்களில் ஒன்றாக எழுத்தறிவின்மை சுட்டிக்காட்டப்படுகிறது. இதற்காக யுனெஸ்கோவினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தான் EDUCAIDS என்று அழைக்கப்படுகிறது. எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தொடர்பான அறிவூட்டல்களை உலகெங்கும் எடுத்துச்செல்வது இதன் பிரதான நோக்கம். இத்திட்டத்தின் இரண்டு பிரதான இலக்குகள் உள்ளன.1) கல்வியறிவின் ஊடாக எச்.ஐ.வி பரவுவதை தடுக்கும் செயற்பாடு2) மோசமாக பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் கல்வியறிவை கொண்டு செல்வதன் மூலம் கட்டுப்படுத்தல்.
உலக நாடுகளின் எழுத்தறிவு விகிதங்கள்
1998 ஆம் ஆண்டு ஐ.நாவின் கணிப்பீட்டின் படி உலக சனத்தொகையில் 20வீதமானோர் எழுத்தறிவற்றவர்களாக இருந்தனர்.இந்தத்தொகையினர் எந்த மொழியிலும் அமைந்த மிக இலகுவான வாக்கியங்களை எழுதவோ வாசிக்கவோ முடியாதவர்கள்.எனினும் அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை முகவர் அமைப்பின்(சீ.ஐ.ஏ) 2007 அறிக்கையின் படி தற்போது உலக சனத்தொகையின் எழுத்தறிவு வீதம் 82 ஆகும். நாடுகள் ரீதியாக பார்க்கும் பொழுது 100 சதவீத எழுத்தறிவை பெற்றுள்ள நாடு என்ற பெருமையை ஜோர்ஜியா பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் முறையே கியூபா ,எஸ்தோனியா,நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.எமது இலங்கை தாய்நாடு இப்பட்டியலில் 87 ஆவது இடத்தைப்பிடித்துள்ளது. எழுத்தறிவு விகிதம்90.7ஆகும்.இப்பட்டியலில் இந்தியாவானது 147ஆவது இடத்தைப்பிடித்துள்ளது.எழுத்தறிவு விகிதம் 61 ஆகும். இந்தியாவிலுள்ள மக்கள் தொகை அதிகரிப்பே அது எழுத்தறிவு விகிதத்தில் பின்தள்ளப்பட்டுள்ளதற்குக்காரணம் என கூறப்படுகிறது.

இலங்கையும் எழுத்தறிவு வீதமும்
எழுத்தறிவை பொறுத்தவரை தென்னாசியாவில் இலங்கை ஒரு முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது.இலங்கையானது யுனெஸ்கோவின் கல்வி சார் அபிவிருத்தித்திட்டங்களில் இணைந்து செயற்படுவதற்காக 1949ஆம் ஆண்டு நவம்பர்14ஆம் திகதி யுனெஸ்கோ அமைப்பில் இணைந்து கொண்டது. இன்று இலங்கையின் எழுத்தறிவு வீதமானது நகரப்புறங்களிலேயே முன்னேற்றங்கண்டுள்ளது எனலாம்.சுதந்திரம் கிடைத்து 50வருடங்களுக்குப்பிறகும் கூடபெருந்தோட்டப்பகுதிகளில் அடிப்படை கல்வி வசதியை பெறத்தவறியுள்ளவர்கள் எத்தனையோ பேர்.இவ்வருடத்திவ் முதல் காலாண்டில் குடிசன மதிப்பீட்டு புள்ளி விபர திணைக்களத்தின் அறிக்கையின் படி இலங்கையின் நகர்ப்புறங்களில் எழுத்தறிவு வீதம் 95 ஆகவும் கிராமப்புறங்களில் 93 வீதமாகவும் பெருந்தோட்டப்பகுதிகளில் 76 வீதமாகவும் உள்ளது.பால் வேறுபாட்டில் ஆண்கள் 94 சதவீத கல்வியறிவையும் பெண்கள் 91.1வீத கல்வியறிவையும் பெற்றுள்ளனர்.யுனெஸ்கோவின் அவிவிருத்தித்திட்டங்களில் எழுத்தறிவித்தல் ஒரு முக்கிய இடத்தைப்பிடிக்கின்றது.ஒவ்வொரு நாடுகளிலும் இத்திட்டங்கள் முன்னெடுத்துச்செல்லப்படுகின்றமை முக்கிய அம்சம்.இதில் முதியோர்களுக்கு கல்வி போதித்தல் பிரதான இடத்தை வகிக்கின்றது.
சர்வதேச எழுத்தறிவு விருதுகள்
யுனெஸ்கோ அமைப்பானது ஒவ்வொரு வருடமும் சர்வதேச எழுத்தறிவு தினமன்று எழுத்தறிவு விருதுகளை (Literacy Prizes) பரிந்துரை செய்கின்றது இவ்வாண்டு இவ்விருதானது பிரேஸில் ,எத்தியோப்பியா,தென்னாபிரிக்கா,ஸாம்பியா ஆகிய நாடுகளில் யுனெஸ்கோவினால் முன்னெடுத்து செல்லப்பட்ட கல்வி செயற்பாடுகளுக்காக கிடைத்துள்ளது.மேலும் மொரோக்கோவிலும் பி.பி.சி நிறுவனத்தினாலும் தயாரிக்கப்பட்ட இரு திட்டங்களுக்கு கௌரவ விருதுகள் கிடைத்துள்ளன.