Thursday, October 23, 2008

இது சுப்ரமணியபுரம் அல்ல


சிம்சோனும் தெலீலாவும்

பெஞ்சமின் அண்ணா கொடுத்த குறிப்புகளைக்கொண்டு எனது தேடல் மூலம் சிம்சோன் மற்றும் அவனது காதலி தெலீலா ஆகியோரின் சரித்திரத்தை ஒருவாறு கண்டு பிடித்து விட்டேன். நன்றி பெஞ்சமின் அண்ணா.
இதை எனது நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளாவிட்டால் மறுபடி தலை வலி வந்து விடும்.
இதை நான் கிரேக்க நாவல் என்று கூறியது தவறு என்று தான் நினைக்கிறேன்.காரணம் பைபிளில் கூறப்படும் இந்த கதை யூதர்கள் மற்றும் பெலிஸ்தினியர்களுக்கிடையில் ஆரம்ப காலந்தொட்டு இடம்பெற்று வரும் பகைமையை கூறுகிறது. இதில் ஓரிடத்தில் கிரேக்க ஜாம்பவான் ஹேர்குலிஸுக்கு இணையான வீரன் சிம்ஸோன் என வர்ணிக்கப்பட்டுள்ளது.
சாம்சன் அல்லது சிம்சோன் என வர்ணிக்கப்படும் இக்கதையின் நாயகன் யூத வமிசத்தை சேர்ந்தவன். இவனது தந்தை பெயர் மனோஹா. இவர் இஸ்ரேலின் அப்போதைய பழங்குடி இனங்களில் ஒன்றான டான் (Dan) எனும் இனத்தைச்சேர்ந்தவர். இப்பழங்குடியினரை Tribe of Dan என்று அழைக்கின்றனர்.
ஆறு முக நட்சத்திரத்தின் மத்தியில் உள்ளஒரு பாம்பு தான் இவர்களின் சின்னம்.இவர்கள் அனைவரும் ஹிப்ரு மொழியை பேசுபவர்கள் என குறிப்புகள் கூறுகின்றன.
சிமியோன் ,லெவி,ரீபன்,ஜுடா என்பன இக்காலத்தில் இங்கு வாழ்ந்த ஏனைய பழங்குடி இனங்களாகும்.
இவர்களின் குடும்பம் வாழ்ந்த இடத்தின் பெயர் ஸோரா.இது ஜெருசலேத்திலிருந்து 8 மைல்கள் மேற்கே அமைந்துள்ள ஒரு பிரதேசம். சிம்சோன் காதலித்த தெலீலா இஸ்ரேலின் சொரக் வெளி என்றழைக்கப்பட்ட இடத்தைச்சேர்ந்தவள்.இவள் பெலிஸ்த்தினியர் வம்சத்தை சேர்ந்தவள்.இரு இனங்களுக்கிடையில் பகைமை பாராட்டப்பட்டாலும் காதலுக்கு முன்னே அவையெல்லாம் தூசு தானே?
ஆனால் அதற்கு முன்பாக சிம்சோன் மற்றுமொரு பெலிஸ்தீன் இனப்பெண்ணை காதலித்து மணப்பதற்கு தயாராகவிருந்தான். அந்த வரலாற்றை சுருக்கமாக பார்த்து விடுவோம்.
கட்டிளங்காளையாக வளர்ந்த சிம்சோன் பெலிஸ்தீனின் டிம்னா எனும் இடத்தைச்சேர்ந்த ஒரு அழகிய யுவதி சீது காதல் கொண்டு தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்ய ஆயத்தமானான். ஆனால் இது இறைவனின் பேரால் நடந்தது என கூறப்படுகிறது.
பெலிஸ்தீனியர்களை முற்று முழுதாக அழிக்கும் படலத்தின் ஆரம்பமே இத்திருமணம் சம்பவம் என்று பெற்றோர்கள் உணர்ந்தனர்.அதன் படி தான் நடந்தது.

குறிப்பிட்ட பெலிஸ்தீன பெண்ணை அவள் இருக்கும் இடத்திற்கே சென்று மணம் புரிந்து வருகிறேன் என்று வீராவேசத்தோடு புறப்பட்ட சிம்சோனை இடையில் ஒரு இராட்சத சிங்கம் எதிர்கொண்டது.மிக இலகுவாக அதை வீழத்திய சிம்சோன் அதன் தாடையை கிழித்துப்போட்டு அப்பால் சென்றான். இச்சம்பவத்தை சிம்சோன் யாரிடமும் கூறவில்லை.
வெற்றிகரமாக தனது மனைவியை அழைத்துக்கொண்டு திருமணத்திற்காக திரும்பும் வழியில் சிம்சோன் ஒரு காட்சியை காண்கிறான். அவன் கொன்று போட்ட சிங்கத்தின் உடலில் தேன் பூச்சிகள் கூடு கட்டி சுவை மிகு தேனை சொரிந்து கொண்டிருந்தன. இந்த தேனை சேகரித்த சிம்சோன் அதை தனது பெற்றோருக்குக்கொண்டு வந்து கொடுத்தான்.
திருமண நாள் நெருங்கியது. அப்போது மணப்பெண் தோழர்களாக வந்திருந்த 30 பெலஸ்தினீயர்களிடமும் ஒரு புதிர் போட்டான் சிம்சோன். இப்புதிருக்கான விடைசரியாக கூறினால் அனைவருக்கும் உயர்தர உடுதுணிகள் தருவதாக அவன் வாக்களித்தான்.
அந்தப்புதிர் அவன் சிங்கத்தை வீழத்தியதையும் பின்னர் தேன் கூட்டை கண்டதையும் தொடர்புகொண்டதாக இருந்தது.
இந்தப்புதிரை பெலஸ்தினியர்களால் கண்டறிய முடியவில்லை.மெதுவாக அவர்கள் சிம்ஸோனின் மனைவியை அணுகினர். எமது குலப்பெருமை உன்னிடத்தில் தான் தங்கியுள்ளது எப்படியாவது அந்தப்புதிருக்கான விடையை தெரிந்து வா இல்லையேல் உன்னையும் உனது தந்தையையும் எரித்து சாம்பராக்கி விடுவோம் என்று மிரட்டினர். அவளும் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கண்ணீருடன் சிம்சோனை நெருங்கினாள்.
அவன் புதிருக்கான விடையைக்கூற அவள் தனது தோழர்களுக்கு கூறி விட்டாள்.
இங்கு தான் துரோகம் ஆரம்பமாகிறது.
விடையை அவர்கள் சிம்சோனிடம் கூற அவன் வாக்கு கொடுத்தாற்போல் அஸ்கலோன் நகருக்குச்சென்று அங்குள்ள 30 பெலிஸ்தீனியர்களை கொன்று உயர்தர ஆடைஅணிகளை கொண்டு வந்து கொடுக்கிறான். ஆனால் தனது தந்தையின் வீட்டிற்கு வரும் போது எதிர்பாராத விதமாக அவனின் மனைவியை தோழர்களில் ஒருவனுக்கு அவளது தந்தை மணம்முடித்து கொடுத்துவிட கர்ஜனையோடு வீருகொண்டெழும் சிம்சோன் பெலஸ்தீனியர்களின் நிலங்களை கொளுத்தி விடுகிறான். இதற்குக்காரணத்தை கண்டறியும் பெலஸ்தீனியர்கள் சிம்சோனின் மனைவி மற்றும் அவளது தந்தையை உயிரோடு எரித்து விடுகின்றனர். இதுவே சிம்சோன் பெலஸ்த்தீனியர்களை அனைவரையும் வேறோடு அழிப்பதற்கு காரணமாயிற்று.கண்ணில் படும் அவ்வினத்தவர் அனைவரையும் கொன்று தீர்த்தான் சிம்சோன்.

இப்படியான சந்தர்ப்பத்தில் தான் தெலைலா இவனது கண்ணில் பட்டாள்.அவள் பெலஸ்த்தீன இனத்தவள் என்று அறிந்தும் தனது காதலை சொன்னான். உயிருக்குயிராய் காதலித்தான்.
இருந்தாலும் தெலீலா அதை நினைத்துப்பார்த்தாளா என்பது தான் கேள்வி.பெலிஸ்தினியர்கள் ஆசை காட்டி இவளுக்குக்கொடுத்த பணம் மற்றும் நிலபுலன்களுக்காக ஒரு வீரதீரனை காட்டிக்கொடுக்கும் வேலையைச்செய்து வரலாற்றில் காதல் துரோகி என்ற பட்டத்தைப் பெற்று விட்டாள்.

முடிவை முதல் பதிவில் கூறி விட்டாலும் ஒருமுக்கியமான விடயத்தை இங்கு பதிவிட வேண்டும். அதாவது சிம்சோனின் வலிமை இரகசியத்தை அறிந்த தெலீலா பின்னர் அதை பெலஸ்தீனியர்களிடம் கூறியது மட்டுமல்லாது சிம்சோன் தூங்கும் போது அவனை தனது மடியில் கிடத்தி அவன் தலைமயிரை வெட்ட எதிரிகளுக்கும் உதவி புரிந்தாளாம். எப்படிப்பட்ட துரோகியாக அவள் இருந்திருப்பாள்? இதை வாசிக்கும் போது மனது வலிக்கிறது என்றால் அந்த சம்பவத்தை ஓவியமாக பார்க்கும் போது உங்கள் மனது எப்படி இருக்கிறது தோழர்களே?

வேதனை குறிப்பு: சிம்சோன் கண்தோண்டப்பட்டு இராட்சத மண்டப தூண்களை இழுப்பதையும் சிங்கத்தை சம்ஹாரம் செய்வதையும் காதல் துரோகி தெலீலா சிம்சோனை மடியில் கிடத்தி தலைமயிரை வெட்டுவதையும் சித்தரிக்கும் ஓவியங்களை தேடிப்பிடித்து தந்துள்ளேன்.

5 comments:

Bee'morgan said...

ஹா.. பகிர்ந்தமைக்கு நன்றி தோழரே.. உங்களின் சுப்ரமணியபுரம் பதிவைப் படித்ததிலிருந்து நானும், இணையத்தில் இக்கதையைத் தேடிக்கொண்டிருந்தேன்.. :)

supersubra said...

I have seen the movie when I was a small boy Samson and Delilah

http://www.imdb.com/title/tt0041838/

இறக்குவானை நிர்ஷன் said...

சிரமத்துடன் தகவல் தேடி எழுதியிருக்கிறீர்கள்.
காதலில் இப்படியொரு துரோகமும் இருக்கிறதா என வியக்கவைக்கும் சம்பவம்.
உங்கள் தரமான எழுத்து தொடரட்டும்!

சிவலிங்கம் சிவகுமாரன் said...

நன்றி நிர்ஷன் இது காதல் தாண்டவம்

R. பெஞ்சமின் பொன்னையா said...

உங்களின் மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா, எனக்கு ஒரு சில உதவிகள் தேவைப்படுகிறது. எனது முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

rb.ponnaih@gmail.com