Wednesday, October 8, 2008
எங்களூர் மாரியம்மன் ( ஒரு வேதனை குறிப்பு)
இலங்கையின் பெருந்தோட்டப்பகுதிகளில்காணப்படும் அம்சங்களில் பிரதானமாக விளங்குபவை ஆலயங்கள், தோட்டமுகாமையாளரின் (ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் துரை என்று அழைப்பர்) பங்களாக்கள் மற்றும், மலைப்பிரதேசம். மலையகப்பகுதிகளில் ஆலயங்கள் இல்லாத பெருந்தோட்டங்களே இல்லை எனலாம்.ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் திருவிழா இப்பகுதி மக்களின் வாழ்க்கையில் ஒன்றிவிட்டதொன்று. நான் பிறந்த இடமான வட்டகொடையில் ஓர் அம்மன் ஆலயம் உண்டு.இலங்கையில் வேறெந்த பெருந்தோட்டப்பகுதிகளிலும் இல்லாத ஒரு அமைப்பு எமது ஆலயத்திற்கு உண்டு. அதாவது ஆலயத்தின் ஒரு பாதி நீரிலும் மறுபாதி நிலத்திலும் அமையுமாறு இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இவ்வாலயத்திற்கும் எமது குடும்பத்தாருக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. 1920 களில் தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்களை அழைத்து வரும் பணியை பிரதானமாக ஏற்று செய்தவர்கள் Head Kanganies என்று அழைக்கப்படும் பெரிய கங்காணிமார். அக்காலத்தில் ஒரு தோட்டத்துரைக்கு அடுத்து சகல அதிகாரங்களும் கொண்டு விளங்கியவர்கள் இந்த பெரிய கங்காணிமார். இப்படி வட்டகொடை பிரதசத்திற்கு இந்தியாவின் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பலரை அழைத்து வந்தவர் எனது பாட்டனார் திருமலை வேலுப்பிள்ளை அவர்கள். பெருந்தோட்டப்பகுதிகளில் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்திலும் அதற்குப்பிறகும் இந்த பெரியகங்காணிமாரின் அட்டூழியங்களை தனி அத்தியாயமாக எழுதலாம். அதை பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன். ஆனால் எனது பாட்டனார் தொழிலாளர் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கொண்டவர். அவர் நிரந்தரமாக இங்கு குடியேறிய பிறகு தான் இக்கோயிலின் நிர்வாகத்தை பொறுப்பேற்றார். மற்ற கோயில்களை விட இங்கு நடக்கும் திருவிழா சற்று வித்தியாசமானது. தேர் போன்ற ஒரு அலங்கார அமைப்பை உருவாக்கி அதில் அம்மன் சிலையை வைத்து இக்கோயில் அமைந்துள்ள குளத்தில் திருவிழா அன்று இரவு வலம் வரச்செய்வர். இதற்கு தெப்பத்தேர் என்பர். இதை தெப்பத்திருவிழா என்று அழைப்பர். அலங்கார மின்விளக்குகள் மின்ன,மேளதாளம் முழங்க அம்மன் தெப்பத்தில் இரவு நேரம் உலா வரும் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. சரி விடயத்திற்கு வருவோம் எனது பாட்டனார் அக்காலத்தில் இக்கோயிலின் நிர்வாக பொறுப்பை ஏற்று தெப்பத்திருவிழாவை மிக அமர்க்களமாக செய்திருக்கிறார். இக்கதைகளை நாம் ஆத்தா என்று அழைக்கும் அப்பாவின் அம்மா திகட்ட திகட்ட சொல்வார். அந்நேரம் நீரில் சாகஸங்கள் நிகழத்தும் குழுவினரை இந்தியாவிலிருந்து பாட்டனார் அழைத்து வருவாரம். அவர்கள் நீரில் சைக்கிள் ஓட்டி வியக்கவைப்பார்களாம். மேலும் தெப்பம் குளத்தில் உலா வர ஆயத்தமாகும் போது வானத்தில் ‘வட்டகொடை தெப்பத்திருவிழா’ என்று ஒளிரும் வர்ண வான வெடிகள் வெடிக்குமாம். பாட்டனாருக்குப்பிறகு பரம்பரையாக இப்பணி தொடர வேண்டும் என எனது தந்தைக்கு இந்த நிர்வகப்பொறுப்பு வந்தது. திருவிழா காலங்களில் தெப்பத்தில் அம்மன் சிலையை எடுத்து வைக்கும் பொறுப்பு எமது குடும்பத்தாருக்கு. அந்த இரவு நேர குளிரில் அப்பாவின் கையைபிடித்துக்கொண்டு நான் நின்றது இன்னமும் ஞாபகம் உள்ளது. அம்மா தடுத்தும் என்னை தெப்பத்தில் ஏற்றி விட்டார்கள் அம்மனுடனும் பக்தர்களுடனும் சேர்ந்து நானும் ஒரு முறை தெப்பத்தில் வலம் வந்ததை மறக்க முடியாது. காலங்கள் சென்றன. பெருந்தோட்டப்பகுதிகளில் மாற்றங்கள் ஆரம்பித்தன. பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்றவுடன் பிரித்தானியா சார்ந்த துரைமார்கள் இங்கிலாந்திலேயே தஞ்சமடைந்தனர். ஒரு கட்டத்தில் அப்பா கோயில் நிர்வாகம் முழுதையும் தோட்டத்திற்கே ஒப்படைத்தார். ஆனால் அதற்குப்பின்னும் வழிவழியாக வந்த பாரம்பரியத்தை மாற்ற விரும்பாத தோட்டமக்கள் ஒவ்வொரு திருவிழாவின் போதும் அம்மன் சிலையை எடுத்து வைக்க அப்பாவையே அழைத்துச்செல்வர். எனக்கு தான் அந்த கொடுப்பினை இல்லாது போய்விட்டதோ? இப்போது இக்கோயிலில் திருப்பணிகள் இடம்பெற்று வருகின்றன. எமது பரம்பரை வீடு அங்கேயே இருந்தாலும் இன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்கில் இருக்கிறோம். அண்மையில் எமது தோட்டத்தை சேர்ந்த ஒருவர் என்னை சந்தித்து கோயில் திருப்பணிக்கு நிதி வசதி போதாதுள்ளது என்றார். அம்மன் சிலையை எடுத்து வைக்கும் பாக்கியம் கிடைக்காவிட்டாலும் இப்படியாவது இவ்வாலயத்திற்கு உதவ வேண்டும் என நினைத்தேன்.ஒருமுறை அங்கு சென்று கோயிலை படம் எடுத்தேன். அதை இப்போது உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்… வேதனையோடு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment