Wednesday, October 29, 2008

தெரிந்த கிரிக்கெட்டில் தெரியாத விடயங்கள் (3)

டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான இளம் வீரர்கள் பற்றி நாம் அறிவோம். எனினும் அதிக வயது வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்கள் எவரையாவது அறிந்திருக்கிறீர்களா? அவர்களைப்பற்றி பார்ப்போம். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 50 வயதுக்கு மேல் விளையாடியவர்கள் நான்கு பேரே உள்ளனர்.இதில் முதலிடம் பிடிப்பவர் இங்கிலாந்தின் முன்னாள் சகல துறை வீரர் வில்பிரட் ரோட்ஸ். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக கிங்ஸ்டனில்1929ஆம் ஆண்டு தனது இறுதிப்போட்டியில் விளையாடும் போது அவரது வயது 52 வருடங்கள் 165 நாட்களாகும்.


இதே போட்டியில் விளையாடிய மற்றுமோர் இங்கிலாந்து வீரரான ஜோர்ஜ் கன்னுக்கு அப்போது வயது 50 வருடங்கள் 303 நாட்கள். ஆனாலும் இந்தப்பட்டியலில் முதன் முதலில் 50 வயது வரை கிரிக்கெட் விளையாடிய வீரர் என்ற பெருமையைப்பெறுகின்றவர் இங்கிலாந்து அணியின் பிரபல வீரர் டபிள்யூ கிரேஸ். அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக 1899 ஆம் ஆண்டு தனது இறுதி டெஸ்டில் விளையாடும் போது அவரது வயது 50 வருடங்கள் 320 நாட்கள். இறுதியாக இப்பட்டியலில் இணைந்து கொள்கிறார் அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் பேர்ட் ஐயர்ன்மோர்கர். 1932 ஆம் ஆண்டு சிட்னியில் இடம்பெற்ற பொடிலைன் தொடரில் அவர் தனது இறுதிப்போட்டியில் விளையாடும் போது அவரது வயது 50 வருடங்கள் 327 நாட்கள்.ஆக இதற்குப்பிறகு இது வரை கிரிக்கெட் விளையாடிய எந்த வீரரும் 50 வயது வரை ஏன் 41 வயதைக்கூட தாண்டி விளையாடியதில்லை.
பின் குறிப்பு: இடது பக்க மேல் மூலையில் தாடியுடன் இருப்பவர் தான் டபிள்யூ கிரேஸ்.முதல் தர போட்டிகளில் இவரது சாதனைகள் மூர்ச்சையடைய வைக்கும். 870 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 54,211 ஓட்டங்களை குவித்துள்ளார்.சதங்கள் 124,அரைச்சதங்கள் 251.மேலும் 2809 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

2 comments:

mirunalan said...

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் வயதானவர்கள்தான் கதாநாயகர்களாக வந்தனர். சங்கீத சாஸ்திரங்களை கற்றுத் தேரியவர்களுக்குத்தான் இடம் என்பதால் அப்படி இருந்திருக்கலாம். அதே நிலைதான் கிரிக்கெடடிலும் இருந்திருக்கும்.

ம்.. இப்போதெல்லாம் 50 வயதில் விளையாடுவதைவிட அதுவரை உயிருடனிருப்பதே சாதனைதானே சிவா...

சிவலிங்கம் சிவகுமாரன் said...

நீங்கள் சொல்வது சரி தான் ஆனால் எங்கள் நாட்டில் 50 வயது வரை உயிருடன் இருப்பது கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமல்ல சாதனை பொது மக்களுக்கும் தான்….!