பிரதேச சபைகள் திருத்தச் சட்டத்தை
எத்தனை மலையக கட்சிகள் பயன்படுத்திக் கொண்டன?
மலையக பெருந்தோட்ட மக்களை செறிவாகக் கொண்டிருக்கக் கூடிய மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அமைந்துள்ள உள்ளூராட்சி சபைகளான பிரதேச சபைகளுக்கு அதிகளவில் பெருந்தோட்ட மக்களே தமது வாக்குகளை அளித்து வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு வரை அவ்வாறு வாக்களித்த மக்களுக்கு ஒரு சதத்தையேனும் பயன்படுத்த முடியாத கட்டுப்பாடுகளை பிரதேச சபைகள் கொண்டிருந்தன.
ஆனால் மேற்படி பிரதேச சபைகளுக்குள் வரும் கிராமப்புற அபிவிருத்திக்கு பிரதேச சபை நிதியை பயன்படுத்துவதில் எந்த சட்டச் சிக்கல்களும் இருக்கவில்லை. இந்த பாகுபாட்டை கருத்திற்கொண்டு பல சுற்று பேச்சுவார்த்தைகள், கலந்துரையாடல்களின் இறுதியிலேயே நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் 2018 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க பிரதேச சபைகள் (திருத்தச்) சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு அப்போது அமைச்சுப்பதவிகளைக் கொண்டிருந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதிநிதிகளும் அவர்களின் ஆலோசகர்களாக இருந்தபு த்திஜீவிகளும் தமது பங்களிப்பை நல்கியிருந்தனர்.
அதன் படி மலையகப் பகுதிகளில் உள்ள பிரதேச சபைகள் தமது எல்லைக்குட்பட்ட பெருந்தோட்ட பிராந்தியங்களில் சில உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள தமது நிதிகளை பயன்படுத்துவதற்கு முப்பது வருடங்களாக இருந்து வந்த தடைகள் நீங்கின.
குறித்த திருத்தச் சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்பதாக பிரதேச சபை நிதியை சட்ட வரம்புகளை மீறி தோட்டப்பகுதி அபிவிருத் திக்கு பயன்படுத்தியது தொடர்பில் எழுந்த சர்ச்சையால் உடபலாத்த பிரதேச சபையானது 2008 ஆம் ஆண்டு அப்போதைய மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவால் கலைக்கப்பட்டமை ஒரு வரலாற்று சம்பவமாகும். அவ்வாறு உடபலாத்த பிரதேச சபை கலைக்கப்பட்டமைக்கு முன்வைக்கப்பட்ட காரணங்களாக அச்சபையின் நிலவரம்புக்கு உட்பட்ட நியூபீக்கொக்,செல்வகந்த,மெல்போர்ட் ஆகிய தோட்டப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகளாகும்.
பிரதேச சபைகளை விஸ்தரிப்பின் ஊடாகவே மக்களுக்கு சேவைகளையும் அதிகரிக்க முடியும் என்ற கோரிக்கை நல்லாட்சி காலத்தில் எழுந்ததால் நுவரெலியா மாவட்டத்தில் மேலதிகமாக நான்கு பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டன. அவை அனைத்துமே பெருந்தோட்டப்பகுதியை உள்ளடக்கிய சபைகளாகும். கொட்டகலை பிரதேச சபை, அக்கரபத்தனை பிரதேச சபை, நோர்வூட் பிரதேச சபை , மஸ்கெலியா பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி நிறுவனங்களின் நிலப்பரப்புகள் பெருந்தோட்டப்பகுதிகளை அதிகமாகக் கொண்டவை. நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகளும் அவ்வாறே. ஆனால் பிரதேச சபை திருத்தச்சட்டம் தடையாக இருந்ததால் அச்சந்தர்ப்பத்தில் நிதியைப் பயன்படுத்த முடியவில்லை.
2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தல்களின் பின்னர் இந்த திருத்தச் சட்டமூலத்தை பயன்படுத்தி மேற்படி பிரதேச சபைகள் எத்தனை தோட்டப்பிரதேசங்களுக்கு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டிருக்கின்றன என்பதை குறித்த தோட்டப்பகுதி மக்களே ஆராய வேண்டும்.
சில பிரதேச சபைகளின் உறுப்பினர்களாக வெற்றி பெற்று வந்தவர்கள் அப்பிரதேசத்தின் தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகளாவர். ஆனால் அவர்களால் பிரதேச சபை நிதியின் மூலம் வடிகாண்களை அமைக்கவோ அல்லது தோட்டத்திலுள்ள மைதானத்தை சுத்தப்படுத்தக் கூட முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. இதற்குக் காரணம் தோட்ட நிர்வாகம் இழுத்தடிப்புகளை செய்ததாகும். தோட்ட நிர்வாகம் ஏன் இதில் தலையிட வேண்டும் என்ற கேள்வி எழலாம். திருத்தச் சட்டத்தின் (2) உட்பிரிவு இவ்வாறு கூறுகின்றது;
'பெருந்தோட்டப் பிராந்தியங்களின் விடயத்தில், பிரதேச சபைகள் விசேட தீர்மானமொன்றை சேர்த்துக் கொண்டதன் மேல் அத்துடன் இயைபான தோட்டத்தின் நிருவாக அதிகாரிகளுடனான கலந்தாலோசனையுடனும், அந்தந்த பெருந்தோட்ட பிராந்தியங்களில் வதிவோரின் சேமநலனுக்கென அவசியமான வீதிகள், கிணறுகள் மற்றும் வேறு பொது வாழ்வசதிகளை அத்தகைய வதிவோருக்கு வசதியளிப்பதற்கு பிரதேச சபை நிதியத்தை பயன்படுத்தலாம்.'
தோட்ட நிர்வாக அதிகாரிகள் என்றால் முகாமையாளர்களே விளங்குகின்றனர். சில தோட்டப்பகுதிகளின் முகாமையாளர்கள் கடும்போக்குக் கொண்டவர்களாக விளங்கியதால் உறுப்பினர்களால் மைதானத்தை சுத்தப்படுத்தும் பணிகளை கூட முன்னெடுக்க முடியவில்லை. இதற்குப் பின்னணியில் பல காரணங்கள் இருந்தன.
சபைகளில் ஆட்சியமைத்த கட்சியானது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தோட்டப்பகுதிகளில் அபிவிருத்தி பணிகளை செய்வதற்கு தடையாக இருந்தமை முக்கியமானது. இதற்குப் பல உதாரணங்களை காட்டலாம். தோட்ட முகாமையாளர்களுக்கு அதற்கான அனுமதியை வழங்க வேண்டாம் என மறைமுகமாக கூறப்பட்டது.
ஆனால் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டிருந்த கட்சியின் உறுப்பினர்கள் தமது தோட்டப்பகுதிகளில் அபிவிருத்திகளை தங்கு தடையின்றி முன்னெடுத்தனர். பலர் தமது குடியிருப்புகளுக்கு முன்பாக செல்லும் வீதிகளை கொங்றீட் இட்டு செப்பனிட்டது மாத்திரமின்றி வடிகாண்களையும் ஸ்திரமாக அமைத்துக்கொண்டனர்.
பெயருக்காக தமது தோட்டத்தின் சில வடிகாண்களை சிறிது தூரத்துக்கு அமைத்துக்கொண்டதுடன் வீதிகளை அரைகுறையாக செப்பனிட்டு படம் காட்டினர்.
இதற்கும் பல ஆதாரங்களை காட்டலாம்.பிரதேச சபையின் நிதியை தோட்டப்பகுதிக்கு பயன்படுத்தலாம் என்ற விடயத்தை சில உறுப்பினர்கள் தமக்கு வாக்களித்த மக்களுக்கே மறைத்து செயற்பட்டனர். சில திட்டங்களை தமது கட்சித் தலைவர், செயலாளரின் தனிப்பட்ட நிதி ஒதுக்கீடு என்றெல்லாம் பெயரிட்டு மகிழ்ந்து கொண்டனர். இந்த செயற்பாடுகளை எதிர்வரும் தேர்தல்களுக்குப்பிறகு அமையப்போகும் சபைகளின் உறுப்பினர்கள் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பது மக்களினதும் கருத்தாக உள்ளது. பிரதேச சபை நிதியின் மூலம் தமது குடியிருப்பு பாதைகளை செப்பனிட்டு கொண்டவர்களும் வடிகாண்களை அமைத்துக் கொண்டவர்களும் இ தமது காணிகளை பெக்கோ இயந்திரங்கள் மூலம் சுத்தப்படுத்தியவர்களும் புதிய சபையின் ஆட்சிக்கு முன்பதாக பதில் கூற வேண்டிய நிலைமைகள் ஏற்படலாம். அநேகமாக மேற்படி சபைகளின் கடந்த கால ஆட்சியின் நிதி பயன்பாடுகள் பற்றிய கணக்காய்வுகள் மேற்கொள்ளப்படும் என்பது முக்கிய விடயம்.
அதன் போது பிரதேச சபையின் நிதியைப் பயன்படுத்தி தோட்டப்பிராந்தியங்களில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் பற்றிய உண்மைத் தகவல்கள் வெளிவரக்கூடும். அவற்றை முறைகேடாக பயன்படுத்திய பிரதிநிதிகள் இம்முறை தெரிவு செய்யப்பட்டாலும் படாவிட்டாலும் அவர்கள் சட்டத்துக்கு பதில் கூற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் இது ஊழலுக்கு எதிரான தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி என்பதையும் மறந்து விடக் கூடாது.
சிவலிங்கம் சிவகுமாரன்