திரைப்படம் வெளிவந்து இத்தனை நாட்களுக்குப்பிறகு அதைப்பறி எழுதுவதென்றால் விடயம் உள்ளது. இத்தனை நாட்களாக இத்திரைப்படத்தைப்பற்றி வந்த விமர்சனம் மற்றும் திறனாய்வு அனைத்தையும் முடிந்தவரை தேடிப்படித்து விட்டேன். பல இணையத்தளங்கள் ஏன் வலைப்பதிவுகளில் கூட இத்திரைப்பட வெளிப்படுத்தல்களை சுவாசித்து முடித்து விட்டேன்.ஆனால் நான் எதிர்பார்த்த ஒரு விடயம் வரவில்லை.
ஆனால் நான் எதிர்ப்பார்த்த அந்த விடயத்திற்கு கொஞ்சம் தீனி போடுமாற்போல இத்திரைப்படம் பற்றி எழுத்தாளர் சாருநிவேதிதா தனது வலைப்பதிவில் கூறியிருக்கிறார்.
சுப்ரமணியபுரம் படத்தில் காதல் துரோகத்தை சிலாகித்து கூறியிருக்கும் அவர் ஓரிடத்தில் ஜுலியஸ் சீசர் கதையில் புரூட்டஸின் துரோகத்தை உதாரணம் காட்டியிருந்தார்.
எதிரிகளின் கத்திக்குத்துக்கு முன்னால், புரூட்டஸ் தனக்கு துரோகியாக மாறி விட்டதே சீஸரின் வேதனையை அதிகப்படுத்தியது என்பது யதார்த்தம்.இது நட்பின் துரோகத்தை கூறும் சம்பவமாக வரலாற்றில் பதிவான விடயம். இச்சந்தர்ப்பத்தில் சுப்ரமணியபுரம் படத்தில் கூட நாயகன் தனது காதலியின் துரோகத்தின் வெளிப்பாட்டை அதிர்ச்சி மூலம் காட்டும் இடம் முக்கியமானது.அந்த அதிர்ச்சியை விட எதிரிகளின் கத்தி வெட்டுகள் அவனை பெரிதாக ஒன்றும் பாதிக்கவில்லை என்பதை அக்காட்சி விளக்குகிறது.
சரி இனி விடயத்திற்கு வருவோம் இப்படத்தை நான் பார்த்தபிறகும் இத்திரைப்படம் பற்றிய கருத்துக்களை கண்ட பிறகும் எனக்கு சிறு வயதில் (9 வயது இருக்கும் என்று நினைக்கிறேன் இப்போது எனக்கு வயது 30) வாசித்த ஒரு கிரேக்க நாவல் ஞாபகம் வந்தது. இதன் நாயகன் பெயர் சிம்ஸோன்.சிம்ஸோனின் வீரகாவியம் என இந்நாவல் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. இக்கதையை மிகச்சுருக்கமாக சொல்கிறேன்.
சிம்ஸோன் பிறந்த நாளில் இருந்து அசகாய சக்தி பெற்ற ஒருவனாக விளங்கினான். இவனது சக்திக்கு பிரதான காரணம் பிறந்ததிலிருந்து சிரைக்கப்படாத அவனது தலைமயிர். இந்த இரகசியம் அவனுக்கும் அவனது தாய்க்கும் மட்டுமே தெரியும். தனது 10 வயதிலேயே காட்டில் சிங்கத்துடன் போரிட்டு அதை வென்ற வீரன் சிம்ஸோன். இப்படியிருக்கும் போது வாலிப வயதை அடைந்தான் சிம்ஸோன்.ஒரு கட்டத்தில் இவனது எதிரிகள் எப்படியாவது இவனை கொல்ல வேண்டும் என்பதற்காக சதி திட்டம் தீட்டினர்.
ஆனால் சிம்ஸோனிடம் உள்ள அசுர பலத்தால் எதிரிகளின் திட்டங்கள் தவிடு பொடியாகின.இந்நிலையில் எதிரிகள் ஓர் அழகியை கண்டு பிடித்து அவனிடம் உள்ள அசுர சக்தி என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக அவனிடம் காதலியாக நடிக்கும்படியும் இதற்கு பெருந்தொகை பணம் தருவதாகவும் கூறினர்.
அதன்படி அந்த இரகசியத்தை தெரிந்து கொள்வதற்கு தன்னையே சிம்ஸோனிடம் கொடுத்தாள் அந்த அழகி (இவளது கதாபாத்திரப்பெயர் மறந்து விட்டது)ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இவள் சிம்ஸோனிடம் அவனது அசுர பலம் பற்றி கேட்ட அவன் புன்னகைத்து விட்டு ஒரு பொய்யை சொல்லுவான். இதை ஒவ்வொரு முறையும் அதை எதிரிகளிடம் கூறி அதன் படி செயற்படகூற இறுதியில் தோல்வியையே தழுவுவார்கள் எதிரிகள். ஒரு கட்டத்தில் இவள் கண்ணீருடன் சிம்ஸோனிடம் என் மேல் உங்களுக்கு அன்பே கிடையாதா உங்களுக்கா என்னையே கொடுத்தேனே உங்கள் வலிமையின் இரகசியத்தை கூறமாட்டீர்களா என கண்ணீர் வடிப்பாள்.
இச்சந்தர்ப்பத்தில் சிம்ஸோன் அவளிடம் உண்மையை மிகவும் வருத்தத்தின் மத்தியிலேயே கூறுவான்.காரணம் அவன் அவளை உண்மையாக நேசித்தான்.தனது உயிருக்கு வலை பின்னப்படுவதை அவர் அறிந்திருக்கவில்லை.மேலும் தனது காதலி தனக்கு என்றுமே காதலியாகத்தான் இருப்பாள் என்ற நம்பிக்கைஅவனுக்கு இருந்தது.இருப்பினும் தனது தாய்க்கும் தன்னை படைத்த கடவுளுக்கும் மட்டும் தெரிந்த இரகசியத்தை காதலிக்கு கூறிய அன்றைய இரவு அதிக மது அருந்தி நித்திரைக்கு சென்றான்.
ஆனால் துரோகியான காதலி இவ்விடயத்தை எதிரிகளிடம் கூற அவர்கள் சிம்ஸோன் தூங்கும் போது மொட்டையடித்து விடுவர். அதிகாலை நித்திரை விட்டெழுந்த சிம்ஸோன் வலுவிழந்த சாதாரண மனிதனாகி விடுவான். தன் காதலியின் துரோகத்தை நினைத்து கண்ணீர் வடித்தான் அந்த அசகாய சூரன்.ஆனால் எதிரிகள் அதற்கும் சந்தர்ப்பம் கொடுக்கவில்லை அவனது கண்களை தோண்டி எடுத்து விட்டு ஒரு பெரிய மண்டபத்தில் இரும்புச்சங்கிலி கொண்டு அவனை கட்டி வைத்தனர். இப்படியே இரண்டு நாட்களுக்கு மேல் உணவு நீர் கொடுக்காது அவனை கொடுமைப்படுத்தினர். சிம்ஸோனுக்கு தண்டனை அறிவிக்கும் நாள் வந்தது. அவனது எதிரிகள் அனைவரும் அந்த பெரிய மண்டபத்தில் நிறைந்திருந்தனர். இச்சந்தர்ப்பத்தில் அந்த மூன்று நாட்களில் சிம்ஸோனின் தலையில் சற்று மயிர் வளர்ந்திருந்தது. இதை உணர்ந்து கொண்ட சிம்ஸோன் தனது பலம் அனைத்தையும் திரட்டி தன்னை பிணைத்து வைத்திருக்கும் சங்கிலிகளை இழுக்க அந்த மண்டபத்தின் பிரமாண்ட தூண்கள் சரிந்து மண்டபமே இடிந்து விழுந்தது. இதில் சிம்ஸோன் உட்பட அவனது எதிரிகள் அனைவரும் நசுங்கி மடிந்தனர்.
அந்த வயதில் எனக்கு இக்கதை மனதில் பாதிப்பை ஏற்படுத்தியது என்றால் உண்மை.இதை விட ஒரு காதல் துரோகக்கதையை நான் பின்னாளில் ஏன் இது வரை கூட வாசித்தது கிடையாது.இருப்பினும் சுப்ரமணியப்புரம் படத்தை பார்த்ததும் எனக்கு அக்கதை மனதில் நிழலாடியது. உடனடியாக ஓடிச்சென்று அந்நாவலை வீடெங்கினும் தேடிப்பார்த்தேன்.ஏமாற்றமே மிஞ்சியது. இக்கதையை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளாவிட்டால் எனது தலை வெடித்து விடும் போல் உள்ளது.இணையத்திலும் சிம்ஸோன் குறித்த ஒரு குறிப்புகளும் இல்லை. இது உண்மையாக நடந்த கதையா அல்லது கற்பனையா என்பதை தாண்டவம் மூலம் நண்பர்களிடம் தான் கேட்க வேண்டும். அது மட்டுமல்லாது எனது நண்பர்கள் இத்திரைப்படத்தைப்பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்பதையும் அறிய விரும்புகிறேன். மேலும் இத்திரைப்படத்தை விட காதல் துரோகத்தை சித்திரிக்கும் தமிழ் படத்தை பார்த்திருக்கிறீர்களா நண்பர்களே?அதையும் கூறுங்களேன்
குறிப்பு: காதலியால் துரோகத்துக்குள்ளாக்கப்படும் காதல் படங்கள் மட்டும்.
குறிப்பு: காதலியால் துரோகத்துக்குள்ளாக்கப்படும் காதல் படங்கள் மட்டும்.
9 comments:
ம்ம்.. நானும் இன்னும் இந்த கோணத்தில் இப்படத்தின் விமர்சனத்தைப் படிக்கவில்லை.. நன்று..
அந்த கிரேக்க கதையும், எங்கேயோ கேட்ட மாதிரியான ஒரு பிரமையைத் தோற்றுவிக்கிறது.. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி..
ஒரு சின்ன ஆலோசனை.. அனைத்தையும் இப்படி ஒரே பத்தியாக போடாமல், சின்ன சின்ன பத்திகளாகப் பிரித்து இடையில் கொஞ்சம் இடைவெளி கொடுத்தால் படிக்க இலகுவாக இருக்கும்.
சாம்சனின் காதலியின் பெயர் " டிலைலா". தமிழில் இதை "தெலீலாள்" என்று கூறுவார்கள்.
இது ஒரு கிரேக்க நாவலா என்று தெரியவில்லை. ஆனால் இது பைபிளில் சொல்லப்பட்ட ஒரு உண்மை சம்பவம். சாம்சன் ஒரு எபிரேய வம்சத்தை சேர்ந்தவன். அந்நாட்களில் இஸ்ரவேலர்களை பெலிஸ்த்தியர்கள் அடக்கி ஆண்ட பொழுது, இஸ்ரவேலர்களை மீட்பதற்காக பிறந்தவன் தான் இந்த சாம்சன். ஆனால் இவனும் ஒரு பெண்ணால் வஞ்சிக்கப்பட்டான் என்பதுதான் உண்மை.
சுப்பிரமணியபுரத்திற்கு வருவோம். எனது பதிவில் " உண்மையாகவே உண்மை இதுதானா????" வை வாசியுங்கள்.
ஒரு வித்தியாசமான கோணத்திலான பார்வை. அழகாக எழுதியிருக்கிறீர்கள்.
//காதலியால் துரோகத்துக்குள்ளாக்கப்படும் காதல் படங்கள் மட்டும்.//
நல்லவேளை காதல் துரோக திரைப்படங்களைக் கேட்டீர்கள். அனுபவங்களைக் கேட்டிருந்தால் பலரது அனுபவங்களையும் பக்கம் பக்கமாக எழுதியிருப்பேன்.
'விதி' மாதிரி ஏராளமான படங்கள் இருக்கின்றனவே சிவா. அது சரி இந்த 'வெரிபிகேஷன்' இல்லாட்டி கருத்துக்களை ஏற்க மாட்டீர்களோ. ஏபிசிடி தெரியாத ஜுீவராசிகளும் உங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடுவதாக எண்ணுகிறீர்களோ?
நன்றி பெஞ்சமின் அண்ணா உங்களின் குறிப்புகளுக்குப்பின்னர் இப்போது எனக்கு அந்த கதையின் பாத்திரங்களின் பெயர்கள் ஞாபகம் வருகின்றது. தாங்களின் உண்மையாகவே உண்மை இதுதானா பார்த்தேன் நீங்களும் வித்தியாசமாக கிராமிய படங்களை அணுகியிருக்கிறீர்கள் இந்தியாவின் கிராமப்புற வாழக்கைப்பற்றி இலங்கையிலிருக்கும் எங்களுக்குத்தெரியாது காரணம் இங்கு கிராமங்கள் இல்லை அதாவது தமிழ்க்கிராமங்கள் இல்லை என்று சொல்ல வந்தேன். எமது முன்னோர் இந்தியாவிலிருந்து இலங்கை வந்தவர்கள்தான் (எனது தாத்தா திருநெல்வேலி மாவட்டத்ததைச்சேர்ந்தவர்) ஆனால் அப்போதும் இப்போதும் இந்தியாவிலுள்ள கிராமங்கள் பற்றி நாம் திரைப்படங்கள் வாயிலாகத்தான் அறிந்து கொண்டு வருகிறோம்.
இலங்கையில் கிராமங்கள் என்றால் சிங்களவர்கள் வசிக்கும் இடங்கள் தான் இதை சிங்களத்தில் ‘கம’ என்று அழைப்பர். ஆனால் இங்கு வசிக்கும் மனிதர்கள் மிக அருமையானவர்கள். அப்பழுக்கற்ற மனம் கொண்டவர்கள்.இவர்களின் எளிமை வாழ்க்கையும் வாயை சப்புகொட்ட வைக்கும் சமையலும் மறக்க முடியாதவை. கிராமப்புற உணவு
அதாவது சிங்களத்தில் ‘கமே கேம’ இதற்கு எல்லா இனத்தவர்களும் இங்கு அடிமைகள் தான்.ஆனால் இப்போது ஒரு சில தீய சக்திகளால் கிராமப்புறங்களில் ஊடுருவி இருக்கும் இனவõதமும் அதன் விளைவுகள் பற்றியும் இங்கு எழுத இடம் போதாது. சரி விடயத்திற்கு வருவோம்.
நீங்கள் குறிப்பிட்ட அத்தனை விடயங்களும் இங்குள்ள கிராமங்களுக்கு பொருந்தும் ஆனால் மொழியும் கலாசாரமும் வேறு. இது தொடர்பான ஒரு நீண்ட விளக்கத்தை நான் பிறகு எனது வலைப்பதிவில் இடுகிறேன்.
//ஒரு சின்ன ஆலோசனை.. அனைத்தையும் இப்படி ஒரே பத்தியாக போடாமல், சின்ன சின்ன பத்திகளாகப் பிரித்து இடையில் கொஞ்சம் இடைவெளி கொடுத்தால் படிக்க இலகுவாக இருக்கும்.//
repeatuuu...இது படிப்பவர்களை சோர்வடைய செய்து விடும்
கிரேக்கக்கதை எனக்குப் புதிதெனினும், சுப்ரமணியபுரத்தோடு இணைத்து எழுதியிருப்பது ரசிக்கச் செய்தது.
நன்றி ரிஷான் அது கிரேக்கக்கதை அல்ல எனது அடுத்த பதிவை பாருங்கள் விளக்கமாக பதிவிட்டுள்ளேன்
Post a Comment