Thursday, October 23, 2008

குருவியை கொன்ற கிரிக்கெட் வீரர்

ஒரு வருடத்திற்கு முன்பு மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் அந்த நாள் ஞாபகம் என்ற தலைப்பில் சில சுவாரஸ்யமான கிரிக்கெட் தகவல்களை சேகரித்து தொடராக எழுதி வந்தேன். அதில் எனக்கு மறக்க முடியாத ஒரு சம்பவமாக இந்திய கிரிக்கெட் அணியின் ஜஹாங்கீர் கான் என்ற பந்து வீச்சாளருக்கு நடந்த அனுபவம் மனதில் பதிந்து விட்டது.இப்படி ஒரு சம்பவம் நடந்தது குறித்து இந்தியாவிலுள்ள எத்தனை கிரிக்கெட் இரசிகர்களுக்குத்தெரியும் என்பது எனக்குத்தெரியாது. எனினும் கிரிக்கெட் வரலாற்றில் பதிவாகி விட்ட இந்த விடயத்தை என் சக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


விடயத்திற்கு வருவோம்,

இந்தியாவின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் அணி குறித்து நான் புதிதாக எதுவும் கூறப்போவதில்லை.1932 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தனது முதல் டெஸ்ட் சுற்றுலாவை மேற்கொண்டு இங்கிலாந்து சென்ற இந்திய அணிக்கு சி.கே.நாயுடு தலைமை தாங்கினார். அந்த முதல் டெஸ்ட் அணியில் பங்கு கொண்ட பந்து வீச்சாளர் தான் மொகமட் ஜஹாங்கீர் கான். 1910 ஆம் ஆண்டு பெப்ரவரி 1ஆம் திகதி பஞ்சாப் மாநிலத்தின் ஜுலாந்துர் (இப்போது ஜலாந்தர்) எனும் இடத்தில் பிறந்தவர்.
முதல் தர போட்டிகளில் 3327 ஓட்டங்களையும் பெற்றிருப்பதோடு 328 விக்கெட்டுகளையும் வீழத்தியிக்கிறார். உள்ளூர் போட்டிகளில் திறமை காட்டிய இவர் இந்திய தேசிய அணியில் இடம்பிடித்து இங்கிலாந்துக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. லோர்ட்சில் இடம்பெற்ற முதல் போட்டியில் இவர் 60 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் இங்கிலாந்தின் ஜாம்பவான் துடுப்பாட்ட வீரர்களான ஹொல்மஸ், வூலி,வெல்லி ஹமண்ட் ஆகியோரும் அடங்குவர். முதல் தொடருக்குப்பின்னர் ஜஹாங்கீர் கானுக்கு இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக அணிக்கு விளையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது.1936 ஆம் ஆண்டு இந்தியா தனது இரண்டாவது டெஸ்ட் தொடரை இங்கிலாந்துக்கு மேற்கொண்ட பிறகு இவர் மேற்படி பல்கலைகழக அணிக்காக விளையாடி வந்தார். இவ்வாண்டு ஜுலை மாதம் லோர்ட்ஸ் மைதானத்தில் எம்.சி.சி அணிக்கு எதிராக ஒரு போட்டியில் விளையாடினார் ஜஹாங்கீர்.
போட்டியில் பந்து வீச ஆயத்தமானார்.மறுபுறம் இவரது பந்துக்கு முகங்கொடுக்க தயாரானார் டி.என்.பியர்ஸ் என்ற வீரர். தனது இடத்திலிருந்து ஓடி வந்து நடுவரை கடந்து பந்து வீசினார் ஜஹாங்கீர், என்ன அதிசயம் பந்து துடுப்பாட்ட வீரரை சென்றடைய முன்னர் ஆடுகளத்தின் குறுக்காக பறந்து சென்ற ஒரு அப்பாவி சிட்டுக்குருவியை பதம் பார்த்தது. அந்தோ பரிதாபம் சிட்டுக்குருவி அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தது.
கிரிக்கெட் விளையாட்டின் நடுவே இடம்பெற்ற இச்சம்பவம் அனைவரையும் ஒரு கணம் அதிர்ச்சியடைய வைத்தது என்வோ உண்மை தான் .அதற்குப்பிறகு ஜஹாங்கீர் தனது பந்து வீச்சில் குருவியை கொன்ற விடயம் பரவி பிரபலமானார்.அந்த சிட்டுக்குருவியும் லோர்ட்ஸ் அருங்காட்சியகத்தில் இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது, குருவியை கொன்ற பந்தும் தான். இச்சம்பவம் நடந்து 72 வருடங்களாகி விட்டன. இது போன்ற சம்பவம் இது வரை கிரிக்கெட்டில் இடம்பெறவில்லை என்று நினைக்கிறேன் அப்படியிருந்தால் சொல்லுங்களேன்?
குறிப்பு: இங்கிலாந்துக்கு சென்ற முதல் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் கட்டம் போட்டு காட்டியிருப்பவர் தான் ஜஹாங்கீர் கான். லோர்ட்ஸ் கிரிக்கெட் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சிட்டுக்குருவியும் பந்தும்.
பின்குறிப்பு: 1988 ஜுலை 23 ஆம் திகதி தனது 78ஆவது வயதில் லாகூரில் காலமானார் ஜஹாங்கீர் கான். இவரது மகன் தான் பிற்காலத்தில் பாகிஸ்தான் அணியின் தலைவராக பிரகாசித்த மஜீட் கான். இம்ரான் கான் இவரது மருமகனாவார்.

3 comments:

முரளிகண்ணன் said...

சுவராசியமான பதிவு.

1985 ஆஸ்திரேலிய தொடரில் கபில்தேவ் அடித்த ஒரு பந்து சீகல்ஸ் என்னும் பறவையை கொன்றது.

அடிலெய்ட் மைதானம் என நினைக்கிறேன். அப்போது நான் சிறுவன் என்பதால் மைதானமும்,ஆட்டமும் நினைவில்லை

rapp said...

super:):):) நீங்களும் முரளிக்கண்ணன் சாரும் சொல்லிருக்க விஷயம் எனக்குப் புதுசு:):):)

mirunalan said...

நல்ல தகவல். ஆனால் இதேபோன்ற சம்பவம் 1999 ஆம் ஆண்டும் நடைபெற்றதையும் குறிப்பிடலாம்.

1999 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா, இந்திய அணிகளுக்கிடையில் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின்போது 2 பறவைகள் பலியாகின. அவற்றில் ஒரு பறவை ஆஸி. வீரர் போல் ரைபல் பந்தை எறிந்தபோது அடிபட்டு பலியாகியது. மற்றையது அஜய் ஜடேஜாவின் துடுப்பாட்டத்தால் பலியாகியது.