Friday, November 7, 2008

காட்டு யானைகள், ஆதிவாசிகளை விட கேவலமாகப்போய் விட்ட மலையக மக்கள்

தலைப்பில் உதாரணம் காட்டி விட்டு விளைவுகளை கூறும் விதமாக அமையப்போவதில்லை இக்கட்டுரை. இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2009 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் மலையக மக்கள் எந்தளவுக்கு புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை விட எந்தளவிற்கு கேவலப்படுத்தப்பட்டிருக்கின்றனர் என்பது தான் இங்கு பேசப்பட வேண்டிய விடயம்.

இது ஒரு யுத்தகால வரவு செலவு திட்டம் என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயமே. இம்முறை பாதுகாப்பு செலவீனங்களுக்காக என்றுமில்லாதவாறு அதிக தொகையை ஒதுக்கியிருக்கும் அரசாங்கம் மக்களின் மீதான சுமையை அதிகப்படுத்தியுள்ளது. பொதுவாக அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் வரவு செலவு திட்டத்தில் தனியார் துறைக்கான ஒதுக்கீடுகள் எதுவும் இல்லாவிட்டாலும் யோசனைகள் சமர்ப்பிக்கப்படும்.ஆனால் இம்முறை அப்படியான ஒரு வாசகம் கூட இடம்பெறவில்லை. இதில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது பெருந்தோட்டத்தொழிலாளர்கள் தான். இலங்கையின் தேசிய வருமானத்தில் முக்கிய இடத்தைப்பெறும் தேயிலை ஏற்றுமதி தொழிற்றுறையோடு தொடர்பு பட்டுள்ள இவர்களின் எதிர்கால அபிவிருத்தி அல்ல இவர்களின் வேதன உயர்வு குறித்து எவ்வித யோசனைகளும் சமர்ப்பிக்கப்படவில்லை.


இதில் என்ன வேதனையான விடயம் எனில் நிதி அமைச்சராக இருக்கும் ஜனாதிபதிக்கு இலங்கையின் காட்டு யானைகள் மற்றும் ஆதிக்குடிகளின் மேல் இருக்கும் அக்கறை நூறு வருடங்களுக்கும் மேலாக இலங்கைக்கு அந்நிய செலாவணியை பெற்றுத்தருவதில் முன்னணியில் இருக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் மேல் இல்லை.


இலங்கையின் காட்டு யானைகளை பாதுகாக்கவென எதிர்வரும் வரும் வரவு செலவு திட்டத்தில் 300 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ள அரசாங்கம் இலங்கையின் ஆதிவாசிகளான வன்னியலா எத்தோக்களின் (வேடர்கள்) எதிர்காலம் மற்றும் அவர்களின் கிராமங்களை பாதுகாக்கவென 50மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இலங்கையின் இயற்கை வளம் தொடர்பிலும் ஆதிவாசிகளின் பால் அரசாங்கத்திற்கு உள்ள அக்கறையை வரவேற்கிறோம். மலையக மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? காலம் காலமாக தமது உயிரையும் உதிரத்தையும் மண்ணுக்கு காணிக்கையாக்கி ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கத்தையும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள். இவ்வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்ட பகுதி மக்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் பாரிய உபத்திரவம் ஒன்றை கொடுத்திருக்கின்றது அரசாங்கம்.
அது தான் கோதுமை மா மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு.


மலையக மக்களை பொறுத்தவரை அவர்களின் மூன்று நேர உணவாக இருப்பதே கோதுமை மாவின் மூலம் செய்யப்படும் உணவு பதார்த்தங்கள்;குறிப்பாக ரொட்டி. தற்போது அதிகரித்திருக்கும் வரியினால் அவர்களின் அன்றாட உணவு முறைகளிலும் மண் விழப்போகின்றது. கூட்டு ஒப்பந்தம் என்ற சங்கிலியினால் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பான உரிமைகளும் கட்டிப்போடப்பட்டுள்ளன.விலைவாசி என்பது அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் உயர்வர்க்கத்தினருக்குமான விடயம் அல்லவே.எல்லா பிரிவினரும் ஒரே அளவு பணம் கொடுத்துத்தானே பொருட்களை கொள்வனவு செய்யப்போகின்றனர்? அப்படியிருக்கும் போது மிக மோசமான வறுமை கோட்டுக்குள் தள்ளப்பட்டிருக்கும் மலையக மக்களிடம் மட்டும் ஏன் இந்த அரசாங்கம் இப்படி பாரபட்சமாக நடந்து கொள்கிறது?

இதற்கு பதில் இருக்கிறது.மலையக மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டிருக்கும் சிலர் அரசாங்கத்தின் அமைச்சர் பதவி எனும் பிச்சையைப்பெற்றுக்கொண்டு வாய் மூடி மௌனியாக இருக்கும் வரை மலையக மக்களுக்கு விமோசனம் என்பதே கிடையாது. மேலும் தமக்குரிய உரிமைகளை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் வழங்கத்தவறும் பட்சத்தில் தொழிலாளர்களை அது போராட்ட களத்தில் குதிக்கவே ஆயுத்தப்படுத்துகிறது என்று தான் கூற வேண்டியுள்ளது. தொழிலாளர்களுக்கு இந்த சம்பளம் தான் வழங்கப்படவேண்டும் என்று வரையறை செய்ய எவருக்கும் உரிமையில்லை . ஆனால் தேயிலை தோட்டங்களின் உரிமையாளர்களான முதலாளிமார் சம்மேளனத்துடன் குறிப்பிட்ட தொழிற்சங்கங்கள் இந்த கூட்டு ஒப்பந்தத்தை செய்து கொண்டு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை புதிப்பித்துக்கொண்டு இந்த நாடகங்களையெல்லாம் அந்த இறைவனும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்.


அமெரிக்கர்கள் கறுப்பினத்தவரை அடிமைகளாக நடத்திய காலம் போய் அதே அமெரிக்கர்கள் இன்று ஒரு கறுப்பினத்தவரையே ஜனாதிபதியாக தெரிவு செய்யும் காலமும் வந்து விட்டது.
ஆனால் உலகில் தமது இனத்தை தாமே ஆண்டு அவர்களை அடிமைப்படுத்தி அவர்களுக்கு சுதந்திர காற்றை சுவாசிக்க விடமுடியாது முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருக்கும் நிலை இலங்கையில் மலையகத்தில் மட்டும் தான் உள்ளது.

2 comments:

தங்க முகுந்தன் said...

அருமையான பதிவு இன்று தான் பார்த்தேன்!

யாழ்ப்பாணத்தவர்கள்மீது (நானும் யாழ்ப்பாணத்தவன்தான்) எனக்கு ரொம்பவும் பொறாமை. காரணம் இருந்த வசதி யெல்லாவற்றையும் தெரியாமல் அழித்த குற்றத்துக்குரியவர்கள்!
உண்மையிலேயே போராட வேண்டியவர்கள் லயங்களில் வாழும் எம் மலையக சகோதரர்கள்.
ஆரம்ப காலத்தில் ஓரளவு பொறுப்புணர்வுடன் செயற்பட்ட மலையகத் தலைவர்கள் 1977 அரசியலின் பின் அரச மந்திரிப் பதவிகளைப் பெறுவதிலேயே ஆர்வம் காட்டி வந்தள்ளார்கள்! புதிதாக மலையக மக்கள் முன்னணியும் இதற்குள் போய்விட்டது துர்ப்பாக்கியமே!
உங்கள் பகுதிகளில் உள்ள விடயங்களைத் துணிந்து எழுதுங்கள். இன்றைக்கு வீரகேசரியிலும் தினக்குரலிலும் மலையகச் செய்திகள் வெளிவருவது வரவேற்கத் தக்கது. ஆனாலும் வாழ்க்கை நிலை இன்னும் அப்படித்தானே இருக்கிறது! இதற்கு ஏதேனும் முயற்சிகள் எடுப்பீர்களானால் எம்மால் முடிந்ததை நாமும் செய்வோம்.

சிவலிங்கம் சிவகுமாரன் said...

நன்றி முகுந்தன்