எதிரணியின் பலகீனங்களை அம்பலப்படுத்திய மே தினம்..!
சர்வதேச மே தினம் எதற்காக, யாருக்காக அனுஷ்டிக்கப்படுகின்றது
என்ற கேள்வி இன்று அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. மே தினத்தின் தாற்பரியங்களை மறைத்து முழுக்க முழுக்க அரசியல் நிகழ்வாகவே உழைப்பாளர் தினத்தை
மாற்றியமைத்த பெருமை இலங்கையின் பாரம்பரிய
கட்சிகளுக்கே உள்ளது. ஆனால் உழைக்கும் வர்க்கத்தினரின் தோழர்கள் என்றும் தொழிற்படையின்
மூலமே நாட்டை கட்டியெழுப்பலாம் என்ற கோஷங்களோடு
ஆட்சியமைத்த தேசிய மக்கள் சக்தியும் இம்முறை மே தினத்தை அரசியல் நிகழ்வாகவும் உள்ளூராட்சி
தேர்தலின் பிரசார களமாகவும் பயன்படுத்திக் கொண்டதையும் மறுக்க முடியாது.
இலட்சக்கணக்கானோரின்
பிரசன்னத்துடன் காலி முகத்திடலை செந்நிறமாக்கிய தேசிய மக்கள் சக்தியானது இந்நாட்டின்
உழைக்கும் வர்க்கத்தினரின் பிரச்சினைகளையும் அவர்களின் எதிர்கால சவால்கள் பற்றியும்
காத்திரமாக எதையும் பேசவில்லை. ஆனால் தமக்கு
இன்னும் மக்கள் பலம் உள்ளது என்ற செய்தியை எதிரணியினருக்கு உணர்த்தி அவர்களை மக்கள்
மத்தியில் மேலும் பலவீனமாக்கியுள்ளனர் என்று தான் கூற வேண்டியுள்ளது.
அதே வேளை எதிர்க்கட்சிகளும்
மே தினத்தின் தாற்பரியம் உணர்ந்து அதை அனுஷ்டிக்காது, ஆளும் கட்சியினருக்கு எதிரான
அரசியல் கூட்டங்களாக அதை நடத்தி முடித்துள்ளன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு
தலைநகரில் தனது மே தின நிகழ்வை நடத்த முடியவில்லை.
ஆரம்பத்தில் குருணாகலில் மே தினத்தை நடத்துவதற்கான
பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் அது சாத்தியப்படவில்லை. இந்நிலையில், தொழிலாளர்
தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய மூன்று கட்சிகளும்
இணைந்த தமிழ் முற்போக்குக் கூட்டணி தலவாக்கலையில் ஏற்பாடு செய்த மே தின நிகழ்விலேயே
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஏனைய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
உண்மையில் தலவாக்கலை கூட்டம் ஐக்கிய மக்கள் சக்தியினது மேதின கூட்டமா அல்லது
தமிழ் முற்போக்குக் கூட்டணியுடையதா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் உள்ளது.

இந்நிகழ்வில் பதுளை
,கண்டி, இரத்தினபுரி ஆகிய பகுதிகளிலிருந்து கணிசமான ஆதரவாளர்கள் பஸ்களில் வருகை தந்து கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தாலும் நுவரெலியா மாவட்ட மக்களின்
பிரசன்னமே அதிகமாக இருந்தது. எதிரணி வரிசையில்
பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திர கட்சியினர் தனித்தனியாக தலைநகரில் மே தின கட்டங்களை ஏற்பாடு செய்திருந்தனர். எனினும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பலகீனம் இம் மேதினத்தில்
நன்கு வெளிப்பட்டது எனலாம். எதிர்கட்சி தலைவர்
என்ற வகையில் எப்போதும் உறுதியான அழுத்தமான
கருத்துக்களை முன்வைக்காதவர் என்ற குறைபாடு
சஜித்துக்கு உள்ளது. தலவாக்கலை மே தினத்திலும்
அவ்வாறே அவரது உரை அமைந்தது.
‘ எதிர்வரும் உள்ளூராட்சி
மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து அரசாங்கத்துக்கு சிவப்பு எச்சரிக்கையை
வழங்க அணி திரளுங்கள் ‘ என அவர் இங்கு பேசிக்கொண்டிருக்க, தலைநகரில் இலட்சக்கணக்கில் திரண்ட
தேசிய மக்கள் சக்தியினர் காலி முகத்திடலையே
சிவப்பு நிறமாக்கி விட்டனர். இங்கு உரையாற்றிய
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித்து தலைவர் திகாம்பரம் எம்.பி ‘உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றுவதன் மூலம் சஜித்தின் கரங்களைப் பலப்படுத்துவோம் ‘ என்றார்.
ஆக இப்போதைய நிலைமையில் உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றுவது கூட தமக்கு சவாலான இலக்கு
என்பதை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ள கூட்டணிகளும் விளங்கிக்கொண்டுள்ளன.
இதே வேளை மலையகத்தின்
பிரதான மற்றுமொரு கட்சியான இலங்கை தொழிலாளர்
காங்கிரஸ், பிரதேச ரீதியான மே தின கூட்டங்களை
ஏற்பாடு செய்து தமது ஆதரவாளர்களிடம் தேர்தல் பிரசாரங்களையே முன்னெடுத்திருந்தது. உள்ளூராட்சித்
தேர்தல்களை கவனத்திற்கொண்டே இம்முறை மே தின
நிகழ்வுகளானது பிரதேச ரீதியாக முன்னெடுக்கப்படுகின்றது என இ.தொ.காவும் அறிவித்திருந்தமை
முக்கிய விடயம்.
ராஜபக்ச சகோதரர்களின்
அடையாளமாக இருந்து அவர்களை உச்சத்துக்கு கொண்டு சென்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்
மே தினக் கூட்டம் நுகேகொட ஆனந்த சமரகோன் திறந்த வெளியரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு
தலைமை தாங்கிய நாமல் ராஜபக்வின் உரையும் அநுர
அரசாங்கத்துக்கு எதிரானதாக இருந்தது மாத்திரமல்லாது, தனது தந்தை மகிந்த மீது அநுர அரசு
சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்திலிருந்தும் அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக
தனது குடும்ப அரசியல் பிரச்சினைகளையே மே தின மேடையில் பேசியிருந்தார்.
இலங்கை தமிழரசுக்
கட்சியின் மே தின நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற நிலையில் அக்கட்சியின்
பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் யாழ் மண்ணின் காணி ஆக்கிரமிப்பு பற்றி கருத்துத் தெரிவித்திருந்தார். ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை மீண்டும் மக்களுக்கு
வழங்குவோம் என ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கம் அதைச்செய்யாமல் காணிகளை ஆக்கிரமித்து வருகின்றது. இந்நிலை தொடர்ந்தால்
யாழ் மண்ணில் ஜனாதிபதி கால வைக்க முடியாத நிலையை ஏற்படுத்துவோம்’ என்று உரையாற்றியிருந்தார். ஆனால் அன்றைய தினமே அநுர
அரசாங்கம் தெல்லிப்பழை மற்றும் பருத்தித்துறை பிரதேசத்தின் உயர் பாதுகாப்பு பகுதியில்
அமைந்துள்ள 40 ஏக்கர் காணியை உத்தியோகபூர்வமாக
விடுத்தித்திருந்தது. தமிழரசுக்கட்சி இப்படியெல்லாம் பேசும் எனத் தெரிந்து அரசாங்கம் இப்படி
நடந்து கொள்கின்றதா அல்லது காணி விடுவிப்பு
அறிந்து வைத்திருந்து சுமந்திரன் அவ்வாறு பேசினாரா
என்பது கடவுளுக்கே வெளிச்சம்.
எனினும் தேசிய மக்கள்
சக்தியின் தலைநகர் மே தினக் கூட்டம் நாட்டு மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது. இத்தனை
காலமும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு அதிக எண்ணிக்கையான மக்களை ஒன்று திரட்டி மே தின
கூட்டங்களை நடத்திய மக்கள் விடுதலை முன்னணி,
முதன் முறையாக அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் தேசிய மக்கள் சக்தியாக பரிணமித்து அதிக எண்ணிக்கையான
மக்களை ஒன்று திரட்டி வெற்றிகரமான மே தினத்தை அனுஷ்டித்துள்ளது.
தற்போதைய அரசாங்கத்தை
‘எல் போர்ட்’ என வர்ணித்த ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி மே தின கூட்டங்களை
நடத்தவில்லை. அவர்களின் அமைப்பாளர்கள் உள்ளூராட்சி சபை வேட்பாளர்களுடன் பிரதேச ரீதியாக மக்களிடம் சென்று தமது நிலைப்பாட்டை எடுத்துக் கூறினர்.
மேலும் தேசிய மக்கள் சக்தியின் நிர்வாகத்தை ஊடகங்களின் முன்பாக விமர்சித்தும் குறை
கூறியும் வரும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் தமது கட்சிகளின் ஊடாக மே தினத்தை
நடத்தாத அதே வேளை, வேறு கட்சிகளின் மே தின நிகழ்வுகளிலும் பங்குகொள்ள வில்லையென்பது
குறிப்பிடத்தக்கது.
தேசிய மக்கள் சக்தியின்
மே தின நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிரணியினருக்கு மாத்திரமல்லாது நாட்டு
மக்களுக்கும் ஒரு செய்தியைக் கூறியுள்ளார். தற்போது நாட்டில் அரசியல் இயக்கமாக இருப்பது
நாம் மாத்திரமே என்று வலிறுத்திய அவர் நாட்டின் ஏனைய கட்சிகள் அனைத்தும் சிதறிப் போய்விட்டன
என்றார். அதன் காரணமாகவே நாட்டின் எதிர்காலம் எங்கள் கைகளில் உள்ளது என்பதை அவர் நாட்டு
மக்களுக்கு தைரியமாக அறிவித்திருந்தார். ஆட்சியிலிருக்கும் போது எதிரணி உறுப்பினர்களை
தம்பக்கம் இழுத்து அவர்களுக்கான சலுகைகளை வழங்கி பிரித்தாளும் தந்திரங்களை முன்னெடுத்த மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் கட்சிகள் இன்று சிதறிப்போயுள்ளன. மே தின நிகழ்வுகளைக்
கூட நடத்த முடியாமல் அவை மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தி
ஆட்சியமைத்த பின்னர் நடத்திய முதலாவது மே தினத்தில் மக்கள் இன்னும் தம்பக்கம் என்பதை வெளிப்படுத்திய
அதே வேளை எதிரணியினரின் பலவீனத்தை அப்பட்டமாக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியுள்ளது
என்று தான் கூற வேண்டும்.