Friday, September 25, 2009

சர்வதேச முதியோர் தினம்



அரசாங்க உத்தியோகத்தர்கள் போல் பெருந்தோட்டப்பகுதி மூத்த பிரஜைகளுக்கு மாதாந்த ஓய்வூதியம் இல்லை. ஓய்வூதிய பணத்தை கூட முறையõக பெற்றுக்கொள்ளக்கூடிய வழிவகைகள் இங்கு இல்லை,அப்படி இருந்தாலும் தரகர்களுக்கு தாரை வார்த்தது போக மிகுதியை பிள்ளைகள் பிடிங்கிக்கொள்வார்கள்.




ஓக்டோபர் முதலாம் திகதி சர்வதேச முதியோர் தினமாகும். மூத்த பிரஜைகள் என்று அழைக்கப்படும் முதியோர்கள் ஒவ்வொரு சமூகத்திலும் கௌரமிக்க பார்வையில் நோக்கப்படவேண்டியவர்கள் என்ற அர்த்த புஷ்டியுடன் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை மூலம் 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி கொண்ட வரப்பட்ட தீர்மானத்திற்கமைய (பிரிவு 45/106)ஒக்டோபர் 1 ஆம் திகதி சர்வதேச முதியோர் தினம் அனுஷ்டிக்கப்பட முடிவு செய்யப்பட்டது. இதன் படி முதன் முதலாக 1991 ஆம் ஆண்டு சர்வதேச முதியோர் தினம் உலகெங்கினும் கொண்டாடப்பட்டது. உலகெங்கும் வாழும் முதியோர்களின் நலன் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதும் அவர்களுக்கென ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்குவதுமே இந்த நாளின் நோக்கம். ஐக்கிய அமெரிக்காமற்றும் கனடா ஆகிய நாடுகளில் இத்தினம் தேசிய விடுமுறை நாளாகவும் ஜப்பானில் மூத்ததோருக்கு கௌரவம் செலுத்தும் நாளாகவும் இது கொண்டாடப்படுகிறது. தற்போது உலகெங்கும் வாழ்ந்து வரும் முதியோர்களின் எண்ணிக்கை (2009 ஆம் ஆண்டில் நடுக்கூற்றில்) 516 மில்லியன்களாகும்,இதுவே 2050 ஆம் ஆண்டு 1.53 பில்லியன்களாக அதிகரிக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.இது 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோரின் எண்ணிக்கையாகும்.


இலங்கையும் முதியோர்களும்


இலங்கையைப்பொறுத்தவரை உலக அளவில் அதிக முதியோர்களைக்கொண்ட நாடு என்ற பெருமை உள்ளது. 2006 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இலங்கையில் அண்ணளவாக 22 இலட்சம் மூத்த பிரஜைகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதுவே 2031 ஆம் ஆண்டில் 50 இலட்சமாக இருக்கும் என்று தெரிவிக்கிறது அந்த கணக்கெடுப்பு. 2011 ஆம் ஆண்டளவில் இலங்கையி“ல 60 வயதுக்கு மேற்பட்டோரின் தொகை 27 இலட்சமாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இது அப்போதைய மொத்த சனத்தொகையில் 13 வீதமாக இருக்கும். இலங்கையைப்பொறுத்தவரையில் முதியோர்கள் தமது பிள்ளைகளில் தங்கியிருக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றால் மிகையாகாது. ஒரு சிலர் தமது பிள்ளைகளாலேயே முதியோர் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.ஏனையோர் பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர். புள்ளி விபரங்களைப்பார்க்கும் போது இலங்கையில் 48.3 சதவீதமான முதியோர்கள் தமது பிள்ளைகளின் பராமரிப்பில் வாழ்ந்து வருகின்றனர். ஓய்வூதியம் மூலம் 13.5 வீதத்தினரும் விவசாயம் மற்றும் ஏனைய தொழில்கள் மூலம் 10.3 வீதத்தினரும் தமது சொத்துகளின் வருமானம் மூலம் 7.7 வீதத்தினரும் வாழ்க்கையை நடத்துகின்றனர். இலங்கையில் உள்ள முதியோர்களில் 6070 வயதுக்கிடைப்பட்டோர் 54.4 வீதமாக உள்ளனர்.7080 வயதுக்கிடைப்பட்டோர் 32.3 வீதமும் 8090 வயதுக்கிடைப்பட்டோர் 10 வீதமும் 90 வயதுக்கு மேற்பட்டோர் 1.3 வீதமுமாக உள்ளனர். இதே வேளை இலங்கையில் அதிகரித்து வரும் முதியோர்கள் தொடர்பில் அவர்களுக்குரிய பல செயற்றிட்டங்கள் முன்வைக்கப்படல் அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காரணம் அதிகரித்து வரும் முதியோர்களை வைத்து பராமரிக்கும் அளவிற்கு இங்கு முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் அவ்வில்லங்களுக்குரிய போதிய வருமானங்கள் நன்கொடைகள் கிடைப்பதில்லை என்ற காரணங்களாகும்.


பெருந்தோட்டப்பகுதி முதியோர்கள்


இலங்கையில் உள்ள முதியோர்களில் 70 வீதமானோர் வறுமை கோட்டிற்கு கிழே வாழ்ந்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன,எனினும் இலங்கையில் மிக அதிகமான (34 வீதம்) வறுமை வீதத்தை கொண்டிருக்கக்கூடிய பெருந்தோட்டப்பகுதி முதயோர்களின் நிலை எப்படி இருக்கும் என்பதற்கு வியாக்கியானங்கள் தேவையில்லை. அரசாங்க உத்தியோகத்தர்கள் போல் இவர்களுக்கு மாதாந்த ஓய்வூதியம் இல்லை.தமது ஓய்வூதிய பணத்தை கூட முறையõக பெற்றுக்கொள்ளக்கூடிய வழிவகைகள் இங்கு இல்லை,அப்படி இருந்தாலும் தரகர்களுக்கு தாரை வார்த்தது போக மிகுதியை பிள்ளைகள் பிடிங்கிக்கொள்வார்கள். ஒரு கட்டத்தில் அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு இவர்கள் யாசகம் எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவதே உண்மை.எனவே பெருந்தோட்டப்பகுதி முதியோர்கள் தொடர்பில் பலரும் அக்கறை கொள்ளல் அவசியம்.

1 comment:

இறக்குவானை நிர்ஷன் said...

தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.
http://www.nirshan.blogspot.com/