Tuesday, December 27, 2011

இந்திய வம்சாவளி மக்களை அடிமைகளாக சித்திரிக்கும் போக்கு மாற வேண்டும்
இந்திய வம்சாவளி மலையக மக்கள் என்போர் பல்வேறு நெருக்குவாரங்களுக்கு மத்தியில் வாழந்து வருகின்றனர் என்பதை மறுக்க முடியாது தான் . தென்னிந்தியாவிலிருந்து தொழில் தேடி வந்த இந்த மக்கள் கூட்டத்தினாலேயே மலையகம் எனும் பிரதேசம் உருவாகியது. தமது இடைவிடாத உழைப்பின் மூலம் காடுகளை அழித்து பெருந்தோட்டங்களை உருவாக்கினர். எனினும் இவர்களை அடிமைகளாக சித்திரிக்கும் அதே நேரம் இன்னமும் இந்த மக்கள் கூட்டம் எந்த வித அடிப்படை உரிமைகளும் இன்றியே வாழ்ந்து வருகின்றனர் என்றும் இவர்கள் அரசியல் அனாதைகள் என்றும் பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இச்செய்கை ஒரு விதத்தில் இந்த மக்கள் கூட்டத்தினரை பரிதாபமாக பார்க்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. மலையகத்திலிருந்து உருவான இலக்கியவாதிகள் சிலரும் பத்திரிகையாளர்களும் கூட இன்னமும் இந்த மக்கள் அடிமை வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் என்ற போக்கிலேயே பேசியும் எழுதியும் வருகின்றனர். இலங்கையின் ஏனைய சமுகத்தினரைப்போல அல்லாது எல்லா அம்சங்களுமே இந்த மக்களுக்கு மிக தாமதமாகவே கிடைத்தன என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு நாட்டில் வாழ்வதற்குரிய பிரஜா உரிமை கிடைத்ததே இம்மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். கல்வி ,குடியிருப்பு,சுகாதாரம் மற்றும் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்ட காலகட்டத்தில் கூட எதிர் நீச்சல் போட்டு முன்னேறி இன்று பெயர் சொல்லும் படியான ஒரு அந்தஸ்த்தை இந்த மக்கள் பெற்றுள்ளதை மறுக்க முடியாது.எனினும் பல சந்தர்ப்பங்களில் இந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய, படுத்தி வரும் தலைவர்களை கேலிக்குரிய பொருளாக்கி பார்ப்பதிலும் ஏனைய பிரதேச தலைவர்களின் சேவைகளை இவர்களோடு ஒப்பிட்டு விமர்சனம் செய்வதுமாக தமது காலத்தை போக்கி வருகின்றனர் சிலர். இந்தளவிற்கு இவர்களுக்கு பேசுவதற்குரிய சுதந்திரமும் கல்வியும் அந்த பழைய தலைவர்களாலேயே கிடைத்தது என்பதை இவர்கள் எக்காலமும் ஏற்றுக்கொள்வதில்லை.

தேங்காயும் மாசியும் ஒரு பொய்யான தகவல்
இலங்கையின் பெருந்தோட்டப்பயிர்ச்செய்கையில் பிரதான இடத்தை வகிப்பது தேயிலை. தேயிலை பயிரிடுவதற்கு முன்பாக கோப்பி,கொக்கோ மற்றும் சிங்கோனா ஆகிய பயிர்களே பெருந்தோட்டப்பகுதிகளை அலங்கரித்தன. வரலாற்றை எடுத்துப்பார்த்தோமானால் 1769 இல் இருந்து 1830 வரை கறுவாவே இலங்கையின் பிரதான ஏற்றுமதி பயிராக இருந்தது. எனினும் இது எதிர்பார்த்தளவு இலாபத்தை கொடுக்காததால் 1825களிலேயே மாற்றுப்பயிராக கோப்பியை பயிரிடுவது என முடிவாயிற்று. ஒரு சில இடங்களில் பரீட்சார்த்தமாக கோப்பி பயிரிடப்பட்டிருந்தது. அதன் படி வர்த்தக நோக்கிற்காக இலங்கையில் முதன் முதலாக கோப்பியானது காலி மாவட்டத்தின் பத்தேகம எனும் இடத்தில் பயிரிடப்பட்டது. தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு மக்கள் வருகை தரத்தொடங்கியது இக்காலகட்டத்தில் தான். 1824 களிலேயே அவர்கள் வந்தமைக்கான சான்றுகள் இருந்தாலும் 1827 ஆம் ஆண்டே அவர்கள் இங்கு வந்ததற்கான பதிவுகளும் குறிப்புகளும் இருக்கின்றன. அதற்குப்பிறகு 1867 ஆம் ஆண்டு தேயிலை பயிர்ச்செய்கை பற்றிய எண்ணக்கரு ஆரம்பிக்கும் வரை இலங்கைக்கு வந்த இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்துக்கும் மேல். இவர்களில் பெரும்பாலானோர் நேரடியாக கோப்பிப்பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்தப்பட்டனர். 1824ஆம் ஆண்டு சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தேயிலைச்செடி ஒன்று பேராதனை பூங்காவில் நடப்பட்டது. 1934 களில் கிழக்கிந்திய கம்பனி (பிரிட்டிஷ்) மூலம் இந்தியாவின் அசாம் மற்றும் கல்கத்தா ஆகிய இடங்களில் தேயிலை வர்த்தக பயிராக பயிரிடப்பட்டது.அதே முயற்சியை இலங்கையிலும் மேற்கொண்டால் என்ன என்று பிரித்தானியருக்கு தோன்றியது. கோப்பிப் பயிரை ஒரு வித நோய் தாக்கியதால் மாற்றுப்பயிர் ஒன்றுக்கான அவசியம் எழுந்தது. அதன் படி ஜேம்ஸ் டெயிலரினால் கண்டி மாவட்டத்தின் லூல்கந்துர எனும் இடத்தில் 19 ஏக்கர்களில் தேயிலை பயிரிடப்பட்டது. வர்த்தக நோக்கிற்காக தேயிலை பயிரிடப்பட்ட முதல் சந்தர்ப்பம் அதுவாகும். வரலாறு இப்படியிருக்க தேயிலைக்கடியில் மாசியும் தேங்காயும் பருப்பும் இருப்பதை நம்பி தான் தென்னிந்தியாவிலிருந்து மக்கள் இலங்கைக்கு வந்தனர் என்ற கட்டுக்கதையை இன்றளவும் சிலர் சொல்லி வருகின்றனர். தேயிலையே பயிரிடப்படாத காலகட்டத்தில் அது குறித்து எவ்வாறு பேசப்பட்டிருக்கும்? தேயிலைபயிரிடப்படுவதற்கு 40 வருடங்களுக்கு முன்னரே இந்த மக்கள் இலங்கைக்கு வந்து விட்ட சான்றுகள் தாராளமாகவே உள்ளனவே? ஆகவே வரலாற்றை ஆராயாமல் எதையுமே அறுதியிட்டு சொல்ல முன் வரக்கூடாது. தென்னிந்தியாவில் அக்காலகட்டத்தில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் மழையின்மை காரணமாகத்தான் மக்கள் வேறு தேசங்களுக்கு தொழில் தேடி பயணித்தனர். இலங்கைக்கு மட்டுமல்லாது இக்காலகட்டத்தில் அவர்கள் மலேசியா, மொரிஷியஸ்,மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளுக்கும் பயணித்தனர்.

மலையக மக்கள் அடிமைகளா?
அடிக்கடி இந்திய வம்சாவளி மலையக மக்களை பற்றி கூறப்படும் வாக்கியம் அடிமைகள் என்பதாகும். முதலில் அடிமைகள் என்றால் என்ன என்பதை பலரும் விளங்கிக்கொள்ளல் அவசியம். புராதன கிரேக்க,ரோம எகிப்து நாடுகளில் அடிமை முறை நிலவியது. ஒரு மனிதனை அவனது அனுமதி இல்லாது வலுக்கட்டாயமாக பிடித்து வைத்து வேலை வாங்குவது அவனை கொடுமை படுத்துவது அவனின் குடும்பத்தையும் ஆட்டிப்படைத்தல் தான் அடிமை தொழில்.அடிமைகள் என்றதுமே எமக்கு ஞாபகத்திற்கு வருவது ஆபிரிக்கா தான் . மத்திய ஆபிரிக்காவின் கொங்கோ எனும் நாட்டை தன் வசம் வைத்திருந்த பெல்ஜியம் இலட்சக்கணக்கானோரை அடிமைகளாக நடத்தியது. கைகள் கால்களை சங்கிலிகளால் பிணைத்து வேலை வாங்கப்பட்டது. இங்கிருந்து பல நாடுகளுக்கு அடிமைகள் விற்கப்பட்டனர். இடையில் தப்பித்து சென்று விடக்கூடாது என்பதற்காக சங்கிலியால் பிணைத்தே அழைத்துச்செல்லப்பட்டனர். 19 ஆம் நூற்றாண்டின் மத்திய காலகட்டத்திற்கு முன்பாகவே அடிமை முறை கிட்டத்தட்ட 95 வீதம் ஒழிக்கப்பட்டு விட்டது, 1835 ஆம் ஆண்டு காலகட்டம் எனலாம்.இலங்கைக்கு தொழில் தேடி வந்த மக்கள் இப்படியா வந்தனர் அல்லது இப்படியா அழைத்து வரப்பட்டனர்? அவர்கள் சுதந்திரமாக வருகை தந்தனர்,பிற்பாடு தேயிலை தொழிற்றுறைக்கு அதிக தொழிலாளர்கள் தேவைப்பட்டதால் கப்பல்களில் அழைத்து வரப்பட்டனர். பின்னர் கால்நடையாக மாத்தளை ,கண்டி ,நுவரெலியாவுக்கு வந்தனர். இவர்களை அழைத்து வருவதில் பெரும்பங்காற்றிய பெரியகங்காணிமார்களே இவர்களை தமது அதிகாரத்தால் நசுக்கி பிழிந்தனர். ஆனால் அடிமையாக நடத்தினர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா? 1960களில் பெரியகங்காணி முறையும் ஒழிக்கப்பட்டு விட்டது.

இப்போதைய காலகட்டம்
தென்னிந்தியாவிலிருந்து தொழில் தேடி இலங்கை வந்த இந்திய வம்சாவளினர் அல்லது தொழிலாளர் வர்க்கத்தினர் இங்கு குடியேறி சுமார் 188 ஆண்டுகள் ஓடி விட்டன. எனினும் இலங்கை சுதந்திரத்திற்கு பிற்பட்ட காலத்திலேயே இவர்களுக்கு ஓரளவிற்கேனும் சலுகைகள் கிடைக்கப்பெற்றன. அது வரையிலும் இவர்கள் அரசியல் அனாதைகளாக இருந்திருக்கலாம்.ஆனால் இப்போது அப்படியல்ல கல்வி உட்பட பல துறைகளில் இச்சமூக மக்கள் பெயர் சொல்லும் படியாக முன்னேற்றம் கண்டிருக்கின்றனர்.இவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதங்கள் சலுகைகளின் காலகட்டங்களை வைத்துப்பார்த்தால் இது ஒரு மிகப்பெரிய வளர்ச்சி தான். எனினும் பழைய பஞ்சாங்கங்களையே கூறிக்கொண்டு காலங்கழித்து வரும் ஒரு சில அரைவேக்காட்டு நபர்களினால் இம்மக்களின் முன்னேற்றமும் வளர்ச்சியும் கிடப்பிலேயே போடப்படுகிறது. ஒரு சிலர் வடபகுதி மக்களை இவர்களோடு ஒப்பிட்டு எழுதுகின்றனர்.யுத்த சூழ்நிலைக்குப்பின்னர் வடபகுதி வாழ் மக்கள் பீனிக்ஸ் பறவைகளாக உயிர்த்தெழுந்திருக்கின்றனராம்.அது போல் இவர்களும் விழித்தெழ வேண்டுமாம் இது எவ்வளவு அபத்தமான விடயம்? வடபகுதி வாழ் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் மலையக மக்களின் பிரச்சினைகளையும் விளங்கிக்கொள்ளாத முட்டாள்களின் உளறல்களாகவே இவற்றை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. மலையகத்தைப்பொறுத்த வரை அமரர் தொண்டமானுக்குப்பிறகு ஒரு தலைவர் உருவாகவில்லை என்கின்றனர் ஒரு சிலர்.உலகத்தில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மகாத்மா காந்திக்குப்பிறகு தன்னலமற்ற ஒரு தலைவர் ஏன் உருவாகவில்லை? இதற்கு விடை கூறுவார்களா? காலம் தான் அனைத்தையும் தீர்மானிக்கின்றது. காலமாற்றத்திற்கேற்ப சமூகம் .அரசியல் , பொருளாதாரம் ,கல்வி என அனைத்தும் மாறிக்கொண்டிருக்கும் போது மக்களின் மாற்றங்களுக்கேற்ப புதிய தலைமைத்துவங்களும் உருவாகும் ,மாற்றம்பெறும். இதை உணர்ந்து கொண்டு செயற்படுதலே சாணக்கியமாகும். முதலில் ஒரு குறிப்பிட்ட சமுகத்தின் பிரச்சினைகளை விளங்கிக்கொள்ளல் அவசியம் .அதை விடுத்து ஏனைய சமுகங்களோடு ஒப்பீடு செய்து இதை ஏன் இந்த சமுகத்திற்கு செய்யமுடியாது என்று கேள்வி கேட்பது இயலாமையின் வெளிப்பாடாகவே அமையும். மலையகத்திலோ , தலைநகரிலோ அல்லது இலங்கையின் எப்பாகத்திலேனும் இந்திய வம்சாவளி மலையகத்தமிழர்களைப்பற்றி கொச்சையாகப்பேசுவது சிலருக்கு வாடிக்கையாகி விட்டது. இம்மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை ஒன்றுமே கிடைக்கவில்லை என்று கூறுபவர்கள் இந்த சமுகத்திற்கு என்ன பங்காற்றியிருக்கின்றனர் என்பதை கூற மாட்டார்கள்.காரணம் இப்படி கதைத்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருப்பது தான் இவர்களின் தொழில். அரசியல் ரீதியாக இம்மக்கள் அனாதைகளாக இருக்கின்றனர் என்று கூறுபவர்கள் இம்மக்களுக்கு தலைமை தாங்க முன் வருவார்களா? மலையக இலக்கியம் இம்மக்களின் சோக வரலாற்றையே இசைக்கிறது என்பவர்கள் இம்மக்களின் மகிழ்ச்சியான பக்கத்தை எழுதுவார்களா? முதலில் வரலாற்றை தெரிந்து புரிந்து சில விடயங்களை கதைக்கவும் எழுதவும் முன் வர வேண்டும். அதை விடுத்து ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக ஆதாரமில்லாமல் உளறக்கூடாது. இந்த நாட்டில் மூவின மக்களுக்கும் ஏதோ ஒரு பிரச்சினை இருந்து கொண்டு தான் இருக்கிறது.இதில் மலையக மக்கள் மட்டும் விதிவிலக்கல்லர் என்பதை புரிந்து கொள்ளல் அவசியம்.

சிவலிங்கம் சிவகுமாரன்

No comments: