Monday, November 28, 2011
உள்ளுறுப்புகளை இழந்து உயிரை விடவா எம் நாட்டு பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்?
இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு மற்றும் ஏனைய நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வோர் குறித்து கடந்த காலங்களில் பல அதிர்ச்சிகரமாக தகவல்களை ஊடகங்கள் வாயிலாக மக்கள் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. உடம்பில் ஆணிகள் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட பெண்மணிகளிலிருந்து மர்மமான முறையில் மரணித்தவர்கள் பற்றியும் தகவல்கள் வெளிவந்தன. ஒரு சில மரணங்கள் விசாரிக்கப்படாமல் அப்படியே மூடி மறைக்கப்பட்டன. மரணத்தை தழுவியவர்களின் உறவினர்களோ தமக்கு இறந்தவரின் உடல் கிடைத்தாலே போதும் என்ற ரீதியில் அதற்கான முயற்சிகளிலேயே ஈடுபட்டனர்.இதற்காக அவர்கள் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மற்றும் வேலைக்கு அனுப்பிய முகவர்களிடம் அலைந்து திரிவதிலேயே தமது காலத்தை கழிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டனர். ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக கடமையாற்றுவோரின் மரணத்தின் மற்றொரு பக்கம் கடந்த வாரம் வெளிவந்து பலரை பீதியடையச்செய்துள்ளது. குவைத் நாட்டில் வீட்டுப்பணிப்பெண்ணாக பணியாற்றச்சென்ற 28 வயதுடைய சியாமலி குமாரி குணவர்தன என்ற பெண் மர்மமான முறையில் மரணத்தை தழுயுள்ளார்.இவரது உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போதே அவரது உள்ளுறுப்புகள் பல மாயமாகியிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.இது அவரது உறவினர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. மேற்படி யுவதியின் சகோதரர் பிரியந்த பண்டார குணவர்தன தனது சகோதரியின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்தே நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு தனது சகோதரியின் உடலை பிரேத பரிசோதனைக்குட்படுத்த வேண்டும் என தமது குடும்ப வைத்தியரின் உதவியை நாடியுள்ளார். மரணித்தமைக்கான காரணத்தை ) அறியவே அவர் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார். நீர் கொழும்பு வைத்தியசாலையின் பணிப்பாளர் ஏ.தயாபாலவினால் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது இந்த யுவதியின் உள்ளுறுப்புகள் குவைத்தில் வைத்தே அகற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குவைத் வைத்தியசாலையில் சியாமலி குமாரியின் உடல் பிரேத பரிசோதனைக்கு ( Post Mortem) உட்படுத்தப்பட்டதாயினும் பரிசோதனை அறிக்கையில் உள்ளுறுப்புகள் அகற்றப்பட்டமை குறித்து எந்த வித குறிப்புகளும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.இதுவே இந்த மரணத்தில் சந்தேகம் ஏற்பட பிரதான காரணமாகும். கலாவௌ விஜித புர என்ற இடத்தைச்சேர்ந்த சியாமலி குமாரி 7 வயது சிறுமியின் தாயாராவார். கடந்த ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி இவர் திடீரென மரணித்ததாக குவைத்தில் பணி புரியும் வேறு ஒரு பணிப்பெண் மூலமாகவே இவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. சியாமலியின் உடல் கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கை வந்துள்ளது. இவர் அனுராதபுரத்திலுள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் ஒருவரின் மூலமாக கடந்த வருடம் ஏப்ரல் 23 ஆம் திகதி குவைத் சென்றுள்ளார். இவரின் பரிதாபகரமான மரணம் மத்திய கிழக்கில் பணி புரியும் ஏனைய பெண்களுக்கு உள்ள ஆபத்தினையும் பாதுகாப்பின்மையையும் அப்பட்டமாக இலங்கைக்கு தெரிவித்துள்ளது என்றே கூற வேண்டியுள்ளது.இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகமானது தம்மிடம் பதிவு செய்து கொள்ளாத முகவர்கள் மூலமாக வெளிநாடு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்தாலும் பலர் அதை உதாசீனப்படுத்துவதை மறுக்க முடியாது,எனினும் பதிவு செய்து கொள்ளாது இயங்கும் வேலை வாய்ப்பு முகவரமைப்புகளுக்கு எதிராக பணியகம், கடந்த காலங்களில் என்ன சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை ஆராய்ந்தால் பலன் பூஜ்யமே. இவ்வாறு இயங்கும் போலி முகவர்களை தடை செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே பலரினதும் கோரிக்கைகளாகும்.வெளிநாடுகளில் இலங்கை பணிப்பெண்கள்இலங்கைக்கு அந்நிய செலவாணியை பெற்றுத்தரும் முக்கியமான தொழிற்றுறையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது. இதில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வோர் பிரதான இடத்தை வகிக்கின்றனர். எனினும் இவர்களில் பணம் சம்பாதித்து சுகபோக வாழ்க்கை வாழ செல்லவில்லை , தமது குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாகவே சொந்த பந்தங்களை விட்டு தொலை தூரம் உழைக்கச்செல்கின்றனர். எனினும் இவர்களுக்கு அங்கு உரிய தொழில் பாதுகாப்பு வழங்கப்படுகின்றதா என்பது குறித்து குறிப்பிட்ட நாடுகளிலுள்ள இலங்க தூதரகங்கள் அக்கறையுடன் செயற்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. சியாமலியின் மரணம் கூட குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் மூலம் அவரது உறவினர்களுக்கு அறிவிக்கப்படவில்லை ,அதை அவர்கள் அறிந்திருந்தார்களா என்பதும் அவர்களுக்கே வெளிச்சம். தற்போது அங்குள்ள இலங்கை தூதரகம் மூலமாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவித்திருந்தாலும் சியாமலியின் மரணத்திற்கான காரணம் வெளியிடப்படுமா என்பது சந்தேகமே. இதற்கு முன்னர் உடம்பில் ஆணிகள் ஊசிகள் ஏற்றப்பட்டு வந்த பணிப்பெண்கள் குறித்து விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. மத்திய கிழக்கு நாடுகளைப்பொறுத்தவரை சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலேயே இலங்கை பணிப்பெண்கள் அதிகமாக பணியாற்றுகின்றனர். இவ்விரு நாடுகளில் மட்டும் சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வீட்டுப்பணிப்பெண்களாக பணியாற்றுகின்றனர். அதற்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு இராஜ்யம், மற்றும் கட்டார்,லெபனான் ஆகிய நாடுகளில் பணியாற்றுகின்றனர்.கூடுதலாக கிராம மற்றும் மலையகப்பகுதிகளிலிருந்து பல பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக உழைத்து வருகின்றனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் கடுமையான சட்டதிட்டங்கள் அமுலில் இருந்தாலும் வெளிநாடுகளில் இருந்து பணியாற்ற வருவோர் மீது தான் இவை செயல்படுத்தப்படுகின்றன என்று தான் கூற வேண்டியுள்ளது. காரணம் பணியாளர்கள் மீது மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்ளும் எஜமானர்களோ அல்லது எஜமானிகள் மீதோ இந்த சட்டங்கள் இது வரையில் பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்றால் இல்லை என்பதே பதில். மேலும் இதற்கு முன்பு குறிப்பிட்ட நாடுகளில் பணிபுரிந்து மர்மமான முறையில் மரணத்தைத் தழுவியவர்களின் உடலில் இருந்து உறுப்புகள் அகற்றப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இலங்கையின் பல பாகங்களிலிருந்து பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்றாலும் குறிப்பிட்ட சில இடங்களில் மாத்திரமே வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தனது பிராந்தி ய நிலையங்களை கொண்டுள்ளது. இதன் காரணமாக வெளிநாடுகளில் தொழில் புரியும் தமது பிள்ளைகள் குறித்த தகவல்களை உடனடியாக பெற்றுக்கொள்ள முடியாத நிலை பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு ஏற்படுகின்றது. ஆகவே இது தொடர்பில் பணியகம் அக்கறை செலுத்துமா என்பதையும் அறிய வேண்டும். அந்நிய செலாவணியைப்பெற்றுத்தரும் தொழில் என்ற வகையில் வெளிநாட்டு வேலை வாய்ப்புப்பெற்றுச்செல்லும் பெண்களின் பாதுகாப்பு குறித்து இலங்கை அரசாங்கத்திற்கும் பாரிய கடப்பாடு உள்ளதை மறுக்க முடியாது. காரணம் கடந்த காலங்களை எடுத்து நோக்கினால் வெளிநாடு செல்லும் பெண்களின் தொகை அதிகரித்து வண்ணமே உள்ளது. அந்த வகையில் அந்நிய செலாவணி அதிகரிப்புக்கும் இவர்கள் பங்களிப்பை நல்குவதை மறுக்க முடியாது. மறுபக்கம் இந்த விவகாரத்தை மனிதாபிமான ரீதியில் கையாள முன் வர வேண்டும். வறுமை சூழல் காரணமாக வெளிநாடு செல்லும் பெண்கள் எந்தளவிற்கு மன உளைச்சலுடன் இரவு பகல் பாராமல் உழைக்கின்றனர் என்பதை சொல்லி புரிய வைக்க வேண்டியதில்லை. மேலும் இவர்களின் ஊதியத்தில் எத்தனை பேர் தங்கியிருக்கின்றனர் என்பதும் முக்கிய விடயம். புதிதாக வெளிநாடு செல்வோர் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நலன் கருதி இவ்விடயத்தை சற்று கூடுதல் அக்கறை கொண்டு அரசாங்கம் அணுக வேண்டும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாத அனைத்து முகவர்கள் குறித்தும் உடன் நடவடிக்கைகள் எடுக்கப்படுதல் அவசியம்.இல்லாவிடின் எதிர் காலத்தில் பல சியாமலிகள் உறுப்புகளை இழந்து உயிரற்ற சடலங்களாகவே வர வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படுவதை தடுக்க முடியாது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment