Saturday, December 4, 2021

தொடர்ச்சியான புறக்கணிப்புக்குள்ளாகி வரும் அட்டன் புனித கப்ரியல் மகளிர் கல்லூரி தமிழ்ப்பிரிவு !


 காலனித்துவ ஆட்சி காலத்தில் நுவரெலியா மாவட்டத்தின் அட்டன் பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற ஆங்கில மகளிர் கல்வி நிறுவனமாக விளங்கிய பாடசாலையே புனித கப்ரியல் மகளிர் கல்லூரி.  10/10/1931 ஆம் ஆண்டு , அட்டன் புனித திருச்சிலுவை ஆலயத்தின் மிஷனரி பாடசாலையாக பிரான்ஸ்சிஸ்கன் சபை அருட்சகோதரி  வூஸ்டன் என்பவரால் 5 மாணவிகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இக்கல்லூரியின் பெயர் புனித கப்ரியல் ஆங்கில பாடசாலையாகும்.

பெருந்தோட்டப்பகுதி மாணவர்களுக்கு ஆங்கில வழி கல்வியையும் , சிறந்த பண்புகளையும்  கற்பிப்பதில், அன்பும், கருணையும்  மிகுந்த அருட்சகோதரிகள் தம்மை அர்ப்பணித்தனர். பிற்காலத்தில் இக்கல்லூரி மகளிர் பாடசாலையாக மாற்றம்பெறுவதற்கு முன்பதாக இங்கு ஆண் மாணவர்களும் (தரம் 1,2)  கல்வி கற்றனர் என்பது முக்கிய விடயம். 1934 ஆம் ஆண்டு திருச்சிலுவை ஆலயத்தின் அருட்தந்தை பஸில் ஹைட் அவர்களால் , புனித   ஜோசப் சமூக  அருட்சகோதரர்களின் நிர்வாகத்தின் கீழ் புனித ஜோன் பொஸ்கோ ஆண்கள் ஆங்கில கல்லூரி ஆரம்பிக்கப்பட்டவுடன் பெருமளவு ஆண் மாணவர்கள் இங்கு கற்கும்  வாய்ப்பைப் பெற்றனர். மத்தியில் புனித திருச்சிலுவை ஆலயம் பிரமாண்டமாய் விளங்க,  ஒருபுறம்  பொஸ்கோ ஆண்கள் கல்லூரி,    மறுபக்கம் புனித கப்ரியல் மகளிர் கல்லூரி ஆகிய இரு கல்வி நிறுவனங்களும் , அருட்சகோதரர்கள் –அருட்சகோதரிகளின் அர்ப்பணிப்பிலும் கண்டிப்பிலும்   கல்வி, ஓழுக்கம், விளையாட்டு, சீரிய பண்புகளினால் மாவட்டத்தில் புகழ் பூத்த கல்லூரிகளாக வளர்ச்சி பெற்று வந்தன.  

தமிழ் மற்றும் சிங்கள ஆங்கில பிரிவுகளை கொண்டு இப்பாடசாலை வளர்ச்சி பெற்று வந்த காலத்திலேயே மிஷனரி பாடசாலைகளை பொறுப்பேற்கும் திட்டத்தின் கீழ்  1963 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் மேற்படி பாடசாலை  பொறுப்பேற்கப்பட்டு,  புனித கப்ரியல் பாலிகா  வித்தியாலயம் என பெயரிடப்பட்டது. ஆரம்பத்தில் 1 c தர பாடசாலையாக விளங்கிய கல்லூரி 2005 ஆம் ஆண்டு 1 AB தரத்துக்கு உயர்த்தப்பட்டது. 

அரசாங்கத்தின் கீழ் வரும் போது இது  சிங்கள பாடசாலையாக பொறுப்பேற்கப்பட்டதால், சிங்கள அதிபர்களே இதன் பிரதான பாத்திரத்தை வகிக்க தமிழ்ப்பிரிவுக்கு பொறுப்பாக ஒரு அதிபர் (பிரிவுத்தலைவர்)  நியமிக்கப்பட்டு வருகின்றார். பின்னர் மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் மாகாண பாடசாலையாக விளங்கியதுடன், தற்போதைய அரசாங்கத்தில்,  தேசிய பாடசாலைகள் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.


  அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்ட பின்னர், சிங்கள, தமிழ்ப்பிரிவுகள் சிறப்பாக இயங்கி வந்தாலும் கூட மாகாண பாடசாலையாக மாற்றம் பெற்ற பின்னர் இப்பாடசாலையின் தமிழ்ப்பிரிவானது வளப்பகிர்வில் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வரும் ஒன்றாக விளங்கி வருவதை அனைவரும் பார்த்தும் பேசியுமே வருகின்றனரே ஒழிய அதற்கான தீர்வுகளை இது வரை தேடிப்பெறுவதாக இல்லை. ஏனென்றால் மாகாணத்தின் பிரதான கல்வி அமைச்சு பாத்திரத்தை வகிக்கக் கூடிய மாகாண முதலமைச்சர்களின் கட்டுப்பாட்டிலேயே இப்பாடசாலை காலா காலத்துக்கு வளர்ச்சி பெற்று வந்துள்ளது. இதன் காரணமாக தமிழ்க் கல்வி அமைச்சு என்ற பிரிவின் கீழ் இக்கல்லூரியின் தமிழ்ப்பிரிவுக்குத் தேவையான வளங்களைப் பெற்றுக்கொடுப்பதில்,  கடந்த காலத்தில் தமிழ்க் கல்வி அமைச்சர்களாக விளங்கிய அனைவருமே தோல்வியைத் தழுவியவர்களாகவே தமது பதவி காலம் முழுக்க இருந்து விட்டு போய் விட்டனர். 

அல்லது இக்கல்லூரியின் தமிழ்ப்பிரிவு பிரச்சினைகள்  பற்றி வாய் திறப்பதற்கு அச்சங்கொண்டு கண்டும் காணாதது போன்று தமது பதவி காலத்தை முடித்துக்கொண்டனர். இவர்களே இப்படி இருக்கும் போது தமிழ்ப்பிரிவுக்கு நியமிக்கப்படும் அதிபர்களின் நிலைகள் பற்றி கூற வேண்டிய அவசியம் இல்லை. அதே வேளை வலயக்கல்வி பணிமனையும் முதலமைச்சரின் ஆணைப்படியே நடக்க வேண்டிய நிர்பந்தமும் உள்ளது.  கட்டிடங்கள் ,தளபாடங்கள், பாட ஆசிரியர்கள் என சகல வளங்களிலும் புறந்தள்ளப்பட்ட ஒரு பிரிவாக தமிழ்ப்பிரிவு விளங்க, கிடைக்கும் அனைத்து வளங்களும் சிங்களப் பிரிவுக்கே சென்றடைந்தன. பொறுப்பு கூற வேண்டிய தரப்பினரே இவ்விடயத்தில்  வாய் மூடி மெளனமாக பாடசாலையை கடக்கையில் பாவம் மாணவிகள் என்ன செய்வர்? 

தற்போது சுமார் 1500 மாணவிகள் 77 ஆசிரியர்களுடன் இயங்கி வரும் இக்கல்லூரியில்  தொடர்ச்சியாக தரம் ஐந்து ,க.பொ. த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப்பிரிவுகளில் அதிக சித்திகளையும் பெறுபேறுகளையும் பெற்றுக்கொடுத்து வருபவர்கள் தமிழ்ப்பிரிவு மாணவிகளே. ஆனால் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வரும் தரப்பினரும் அவர்களே.   இந்நிலையில் இக்கல்லூரியின்  சிங்கள மற்றும் தமிழ்ப்பிரிவின் கடந்த 10 வருட கால,  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை , க.பொ.த. சா/தரம் மற்றும் உயர்தர பெறுபேறுகளை ஒப்பீட்டு ரீதியில் அறிந்து கொள்ள தகவல் அறியும் சட்டம் ஊடாக நாம் கேள்விகளை இவ்வருடம் மார்ச் மாதமளவில் கல்லூரி அதிபரிடம் கேட்டிருந்தோம்.  

எனினும் இதற்கான பதில்கள் கிடைக்காத பட்சத்தில் வலயக்கல்வி பணிமனையிடம் கேட்டபோது, தகவல் வழங்கும் சட்டத்தின் அடிப்படைகள் விளங்காத காரணங்களினால் கல்லூரி அதிபரிடமே பதில்களை கேட்குமாறு பதில் வழங்கப்பட்டிருந்தது. அடுத்த கட்டமாக நாம்  மேற்படி சட்டத்தின் வழிமுறைகளை பின்பற்றி தகவல் வழங்கும் ஆணைக்குழுவுக்கு மேன் முறையீடு செய்த போது,  இத்தகவல்களைப் பெற்றுக்கொடுக்க வலயக்கல்வி பணிமனையே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணைக்குழுவின் உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி கிஷாலி பிண்டோ ஜெயவர்தன,  வலயக் கல்வி பணிமனையின் தகவல் வழங்கும் அதிகாரிக்கு நேரடியாக உத்தரவிட்டிருந்தார். 

அதன் படி கல்லூரியின் அதிபர் திருமதி வீரதுங்கவின் உறுதிப்படுத்தலின் கீழ், பின்வரும் தகவல்கள் எமக்கு கிடைக்கப்பெற்றன. 


தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்களின்  விபரம் (2010–2020) 

ஆண்டு சிங்களப்பிரிவு தமிழ்ப்பிரிவு மொத்தம்    

2010                     05                         11                         16    

2011                     06                         13                         19    

2012                     03                         09                         12    

2013                     06                         12                         18    

2014                     05                         22                         27    

2015                     02                         13                         15    

2016                     03                         12                         15    

2017                     02                         16                         18    

2018                     03                         13                         16    

2019                     05                         26                         31    

2020                     03                         17                         20  


க.பொ,த சாதாரண தரப்பரீட்சையில் உயர்தரத்துக்கு நேரடியாக தகுதி பெற்ற மாணவிகள்

 ஆண்டு சிங்களப்பிரிவு தமிழ்ப்பிரிவு மொத்தம்    

2010                     31                            43                         74    

2011                     46                            50                         96    

2012                     34                            54                         88    

2013                     34                             62                 96    

2014                     27                             42                 69    

2015                     26                             54                 80    

2016                     31                             45                 76    

2017                     53                             46                 99    

2018                     47                             60                 107    

2019                     42                             78                 120    

2020  




க.பொ,த உயர்தரப்பரீட்சையில் சித்தி  பெற்ற மாணவிகள் (கலைப்பிரிவு)
 

 ஆண்டு சிங்களப்பிரிவு தமிழ்ப்பிரிவு மொத்தம்    

2010                 18                                 53                         71    

2011                 14                                 40                         54

2012                 10                                 42                         52    

2013                 12                                 56                         68    

2014                 19                                 58                         77    

2015                 16                                 40                         56    

2016                 25                                 42                         67    

2017                 21                                 40                         61    

2018                 21                                  26                     47    

2019                 19                                  23                         42    

2020                 40                                  24                         64  


பெறுபேறுகள் கூறும் பாடம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளைப் பார்க்கும் போது, கடந்த பத்து வருடங்களில் கல்லூரியின் சிங்களப்பிரிவில்  ஆகக்கூடிய அளவில் 6 மாணவிகளே வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தி பெற்றுள்ளனர். தமிழ்ப்பிரிவு மாணவிகளின் சித்தியடைந்தோர் வீதம் மிகவும் சிறப்பாக உள்ளது. 2019 ஆம் ஆண்டு ஆகக்கூடுதலாக 26 பேர் சித்தி பெற்றுள்ளனர். அதே வேளை கடந்த 10 ஆண்டுகளின் க.பொ. த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை அவதானிக்கும் போது,  அதிக எண்ணிக்கையான தமிழ்ப்பிரிவு மாணவிகள் சித்தியடைந்திருப்பதையும் உயர்தரத்தில், 2010 ஆம் ஆண்டிலிருந்து அதிக எண்ணிக்கையான மாணவிகள் சித்தியடைந்து வந்தாலும் 2018 ஆம் ஆண்டிற்குப்பிறகு எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தொடர்ச்சியான  புறக்கணிப்புகள் ,வளப்பற்றாக்குறைகள் காரணமாக, தற்போது பெற்றோர்கள் தமது பிள்ளைகளை உயர்தரம் கற்க வேறு பாடசாலைகளை தெரிவு செய்யும் போக்கு காணப்படுகின்றது. 

நல்லாட்சி காலத்தில் ஒதுக்கப்பட்ட பணத்துக்கு என்ன நடந்தது? 

நல்லாட்சி காலத்தில் கல்வி இராஜாங்க அமைச்சராக விளங்கிய வே.இராதாகிருஷ்ணன் வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட மத்திய ,ஊவா ,சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சின் நிதிகளைப் பெற்றுக்கொடுத்து பல பாடசாலை கட்டிடங்கள் உருவாக காரணமாக விளங்கினார். அவரது சொந்த தேர்தல் தொகுதியான நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அட்டன் கப்ரியல் கல்லூரிக்கு 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி அவர் விஜயம் செய்த போது, தமிழ்ப்பிரிவின் உயர்தர மாணவிகள் தமது பிரிவில் நிலவும் குறைகளை ஒரு அறிக்கையாக அவரிடம் கையளித்திருந்தனர். இதை முழுவதுமாக உள்வாங்கிய அவர் உடனடியாக தமிழ்ப்பிரிவுக்கு 4 மாடி கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கு  நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். மட்டுமின்றி இப்பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பில் தனக்கு தவறான அறிக்கைகளை அது வரை வழங்கி வந்த அதிகாரிகளின் அலட்சிய போக்கையும் கண்டித்திருந்தார்.  எனினும் இந்த நிதி ஒதுக்கீட்டுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. வலயக்கல்வி பணிமனையும் அதை கண்டு கொள்ளவில்லை. மாறாக தமது பிரச்சினைகளை இராஜாங்க அமைச்சருக்கு எடுத்துக்கூறிய மாணவிகள், பின்பு விசாரிக்கப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. இதற்கு முன்பதாக மத்திய மாகாண சபை உறுப்பினராக விளங்கிய ஆர்.ராஜாராம் இக்கல்லூரி நிகழ்வொன்றுக்கு சென்றிருந்த போதும், தமிழ்ப்பிரிவு  மாணவிகள் அவரை அழைத்துச்சென்று வளப்பற்றாக்குறைகள் பற்றி சுட்டிக்காட்டியிருந்தனர். அதன் பிறகே அவர் இவ்விவகாரத்தை கல்வி இராஜாங்க அமைச்சரிடம் முன்வைத்திருந்தார் என்பது முக்கிய விடயம்.

அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு முன்னர்

  மிஷனரிகள் மற்றும் கத்தோலிக்க ஆலயங்களின் நிர்வாகங்களின் கீழ் இயங்கி வந்த கல்வி நிறுவனங்களை அரசாங்கம் பொறுப்பேற்கும், 1961 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க சட்டத்தின் கீழ்,  (Assisted Schools & Training Colleges (Supplementary provisions) Act No 8 of 1961 –Vesting Order)  இக்கல்லூரி பொறுப்பேற்கப்பட முன்னர் சிங்கள கலவன், ஆங்கில மற்றும் தமிழ்க் கலவன்  என்ற மூன்று பிரிவுகளாக  இயங்கி வந்தது. ஆரம்பப்பிரிவில் 1 மற்றும் ௨ ஆம் தரங்கள் வரை ஆண் மாணவர்களும் கல்வி கற்று வந்தனர். பின்னரே மகளிர் கல்லூரியாக பெயர் மாற்றம் கண்டது. 1972 ஆம் ஆண்டு இப்பாடசாலை வளாகம் நில அளவை திணைக்களத்தினால் அளவீடு செய்யப்பட்ட போது தமிழ்ப்பிரிவுக்கு உரித்தான நிலையான 9 கட்டிடங்கள் இருந்ததாக புள்ளி விபரங்கள் தெளிவாகக் கூறுகின்றன. சிங்களப்பிரிவுக்கு நிரந்தரமாக இருந்த கட்டிடங்களின் எண்ணிக்கை 3 ஆகும். ஆங்கிலப்பிரிவுக்கு 4 கட்டிடங்கள். எனினும் தற்போது தமிழ்ப்பிரிவுக்கு இருக்கும் கட்டிடங்கள் எத்தனை? இதில் புதிய கட்டிடங்கள் உள்ளனவா? போன்ற கேள்விகள் முக்கியமானவை. தமிழ்ப்பிரிவுக்கு காட்டப்படும் பாரபட்சமும், அலட்சியப்போக்குகள் பற்றி மட்டுமே இங்கு பேசப்படுகின்றது. மாறாக  சிங்களப்பிரிவுக்கு அதிக வளங்கள் உள்ளமை பற்றி  இங்கு பிரஸ்தாபிக்கப்படவில்லை. அதையும் பெற்றுக்கொடுத்தது அரசியல்வாதிகளும் கல்வி அதிகாரிகளும் தான். ஆனால் அவர்கள் ஏன் தமிழ்ப்பிரிவுக்கு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்து கொள்கின்றனர் என்பதே இங்கு எழுந்திருக்கும் கேள்வி. இந்த கேள்விகளில் உள்ள  நியாயத்தன்மைகளைப் பற்றி வாய் மூடி மெளனமாக இருக்கும் பழைய மாணவிகள், பெற்றோர்களுக்கு நன்கு புரியும். இந்த விவகாரம் குறித்து தைரியமாக பேசக்கூடிய தமிழ் அரசியல் பிரமுகர்கள் எவரும் நுவரெலியா மாவட்டத்தில் இல்லையென்பது முக்கிய விடயம். இனி இப்பாடசாலை  தமிழ்ப்பிரிவின் எதிர்காலம் பற்றி கல்லூரி பழைய மாணவர் சங்கம் மற்றும் பெற்றோர்களுமே அக்கறை கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.   

 


No comments: