Sunday, December 12, 2021

கண் இருந்தும் பார்வையை இழந்தவர்கள்…..!



பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் சியால்கோட்டில் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட இலங்கையர் பிரியந்த குமாரவுக்கு ஏற்பட்ட நிலைமையானது, தொழில் நிமித்தம் வேறு நாடுகளில் தங்கி வாழ்ந்து வரும் எந்த நாட்டவருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது.

இதை ஒரு துன்பியல் நிகழ்வாக கடந்து செல்ல முடியாதுள்ளது. சம்பவத்தின் பின்னணி மிக முக்கியமானது. பிரியந்த குமார முகாமையாளராக பணியாற்றிய ஆடை தொழிற்சாலையில் ஒரு குழுவினர் பதாதைகளை ஒட்டியதாகவும் அதை அகற்றக் கோரியமைக்காக, அவர் இஸ்லாம் மதத்தை நிந்தித்ததாகக் கூறியே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஆரம்ப கட்டவிசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானை விட கடும் மத கட்டுப்பாடுகள் நிலவும் மத்திய கிழக்கு நாடுகளில் கூட இலங்கையர்களுக்கு இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதில்லை எனலாம். எனினும் ஒரு சில இனவாத குழுக்களின் இந்த மிலேச்சத்தனமாக செயற்பாட்டினால் இன்று ஒரு நாடேவெட்கித்தலைகுனிந்து நிற்கின்றது.

இதை விட இலங்கை நாட்டிலிருந்து மனிதாபிமான ரீதியான உதவிகளில் ஒன்றை அதிகம் பெற்ற நாடுகளில் பாகிஸ்தான் முதலிடம் வகிக்கின்றது. அது இலங்கையிடமிருந்து பெற்ற கண்தானமாகும். இதை பாகிஸ்தானின் முன்னணி கண் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் நியாஸ் ப்ரோகி உறுதிப்படுத்தியுள்ளார். அவர் இலங்கையிடமிருந்து கண்களை தானமாக பெறும் அமைப்பின் பாகிஸ்தான் நாட்டுக்குரிய உறுப்பினராக விளங்குகிறார்.

‘ 1967 ஆம் ஆண்டிலிருந்து இது வரை இலங்கை எமக்கு சுமார் 35 ஆயிரம் கருவிழிகளை தானமாக வழங்கியுள்ளது...எமது நாட்டில் இலங்கையர் ஒருவருக்கு ஏற்பட்ட சம்பவத்தால் நாமும் துயரத்தில் இருக்கின்றோம், இச்சம்பவத்தால் நாம் வெட்கி தலை குனிறோம் ‘ என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் கண் தான சங்கத்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இப்படி குறிப்பிடுகிறார்,

‘ இலங்கையர் எமக்கு கண் தானம் செய்தார், ஆனால் நாம் பார்வையை இழந்தவர்களாகி விட்டோம் ‘

பிரியந்த குமாரவுக்கு ஏற்பட்ட சம்பத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானில் பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ‘ எம்மை மன்னித்து விடு இலங்கை நாடே’ என்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர். இந்த சம்பவங்கள் எமக்கு ஒரு பாடத்தை உணர்த்துகின்றன. அங்கு கண் இருந்தும் பார்வையில்லாதவர்களாக இருப்போர் சாதாரண மக்கள் அல்லர்…இன, மதவாதத்தால் காருண்யமும் மனிதாபிமானமும் மறைக்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட்ட தீவிரவாத எண்ணப்போக்கு கொண்டவர்களே இவ்வாறான சம்பவங்களுக்குக் காரணகர்த்தாக்கள்.

இவ்வாறானவர்கள் சிறிய எண்ணிக்கையானோரே..ஆனால் சமூகங்களுக்கு மத்தியில் பெரும்கலவரத்தை தூண்டி விடுபவர்களாகவும் சந்தேகங்களை விதைப்பவர்களாகவும் உள்ளனர்.

பாகிஸ்தான் சம்பவத்துக்கு பிரதமர் இம்ரான்கான் பகிரங்கமாகவே மன்னிப்பு கோரியுள்ளார். இந்த சம்பவத்தோடு தொடர்பு பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட 250 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அந்நாட்டின் பயங்கரவாத தடைச்சட்டத்துக்குக் கீழ் வழக்கு தொடரப்பட்டு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

ஆப்கானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்களைப் பற்றி உலகமே அறியும். அவர்களது ஆட்சியில் இப்படியான சம்பவங்கள் பழகிப்போனதொன்று. அதே போன்று மதத்தில் பெயரால் உலகெங்கினும் மோசமான தாக்குதல்கள் நடத்தியும் அப்பாவி வெளிநாட்டவர்களை கொடூரமாக கொலை செய்தும் வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பற்றியும் அனைவரும் அறிவர். ஆனால் பிரதமர் இம்ரான் கானின் ஆட்சியில், பாகிஸ்தானில் ஜனநாயக பண்புகளை எதிர்ப்பார்த்திருந்த சர்வதேசத்துக்கு இவ்வாறான சம்பவங்கள் அதிர்ச்சியையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளன.

பாகிஸ்தான் மறைமுகமாக தீவிரவாதத்தையும் மதவாதத்தையும் ஊக்குவிக்கின்றதா என்ற சந்தேகம் இப்போது ஆசிய நாடுகளிடையே உருவாக ஆரம்பித்து விட்டது. கடந்து ஆகஸ்ட் மாதம் இதே பஞ்சாப் மாநிலத்தில் இந்துக்கள் அதிகம் வாழ்ந்து வரும் போங் எனும் நகரில் அமைந்துள்ள சித்தி விநாயகர் ஆலயம் முழுவதுமாக உடைத்து சேதமாக்கப்பட்டது. குறித்த நகரில் உள்ள மனநலம் குன்றிய 9 வயது இந்து சிறுவன், இஸ்லாமியரின் புனித இடமொன்றுக்கு வெளியே சிறுநீர் கழித்துள்ளார். எனினும் முறைப்பாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சிறுவன் பின்பு பிணையில் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஆலயம் சேதமாக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவத்துக்கும் பிரதமர் இம்ரான் தனது கண்டனங்களைதெரிவித்தது மட்டுமல்லாது அரச செலவில் ஆலயத்தை புனரமைப்பைதற்கும் உத்தரவிட்டிருந்தார்.

எனினும் பிரியந்த குமாரவோடு தொடர்புபட்ட சம்பவத்தின் பின்னணி பாரதூரமானது. அவரது இழப்புக்கு நட்டஈடு பெற்றுக்கொடுப்பதன் மூலம் அவரது குடும்பத்தினரின் நிரந்தர சோகத்தைஈடு செய்ய முடியாது. அதே வேளை பாகிஸ்தான் நாட்டின் ஒரு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த படுபாதக செயலை வைத்து முழு பாகிஸ்தானியர்கள் மீதும் எவரும் தமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவார்களாயின் அதை விட மடமைத்தனம் வேறோன்றுமில்லை.

இந்த சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் அதிகளவான இளையோர் கலந்து கொண்டு தமது கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தனர். மத மற்றும் இனவாத செயற்பாடுகளை இளைய சமூகம் எந்தளவுக்கு வெறுக்கின்றது என்பதை இது எடுத்துக் காட்டும் அதே வேளை நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் சம்பவத்தின் எதிரொலியாக இலங்கையில் கண்டனங்களும் எதிர்ப்பார்ட்டங்களும் இடம்பெற்றிருந்தன. மற்றும்படி அனைவருமே இவ்விடயத்தில் பக்குவமாக நடந்து கொண்டமை முக்கிய விடயம். இச்சம்பவத்தில் இலங்கை மக்களினது பிரதிபலிப்புகள், பாகிஸ்தான்
சம்பவத்துக்குக் காரணமானவர்களுக்கு நல்ல படிப்பினையையும் தந்துள்ளது என்றால் மிகையாகாது.

No comments: