Tuesday, November 23, 2021

நாட்டின் கடனை அடைப்பதற்கு தேயிலைக்கு மாற்றீடாக கஞ்சா ?


இவ்வருடம் மார்ச் மாதம் ஆங்கில வாரப்பத்திரிகையொன்று, பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித்தகைமைகள் குறித்து தகவல் அறியும் சட்டம் ஊடாக எழுப்பப்பட்ட கேள்விகளை பாராளுமன்ற செயலாளர் நிராகரித்திருந்தமை குறித்து செய்தி வெளியிட்டிருந்தது. தகவல் அறியும் ஆணைக்குழு பதில் அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தும் கூட , பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகுதி பற்றி கேள்விகள் எழுப்புவது பொது நலன் சார்ந்த விடயமல்ல என்று பதில் வழங்கப்பட்டிருந்தது. அது பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட விடயம் என்றும் பதில் வழங்கப்பட்டுள்ளது.

சில உறுப்பினர்களின் நடத்தைகள், அவர்கள் கூறும் கருத்துக்களை அடிப்படையாகக்கொண்டே எவ்வாறான தகைமை கொண்டவர்கள் நாட்டின் உயரிய சபையில் அங்கம் வகிக்கின்றார்கள் என்பது குறித்து ஆராய வேண்டியேற்பட்டது. ஆனால் அந்த நிலைமை இன்னும் தொடர்வதையே சிலரின் பேச்சுக்கள் எமக்கு உணர்த்துகின்றன. அதில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் எம்.பி. டயானா கமகேயின் அண்மைக்கால கூற்றுக்கள் பலரை முகஞ்சுளிக்க செய்துள்ளன. எனினும் தனது கருத்திலிருந்து பின்வாங்காது மீண்டும் மீண்டும் அதையே கூறி தன்னை பேசுபொருளாக்க முயற்சி செய்கின்றாரோ தெரியவில்லை.

கடன் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையை அதிலிருந்து மீட்க கஞ்சாவை பயிரிட்டு ஏற்றுமதி செய்ய வேண்டும் என கடந்த வாரம் அவர் பாராளுமன்றில்

உரையாற்றியிருந்தார். மேலும் இலங்கையின் பிரதான ஏற்றுமதி பயிரான தேயிலையின் பாரம்பரியம் தற்போது மறைந்து விட்டது என்றும் சீனா உட்பட பல நாடுகள் தமது நாடுகளில் தேயிலையை பயிரிட்டு வருவதால் இனியும் இலங்கையில் அதை நம்பிக்கொண்டிருப்பதில் பயனில்லை என்றும் பொருளாதார ஆய்வு முயற்சிகளில் ஈடுபட்டு கலாநிதி பட்டம் பெற்றவர் போன்று கருத்துக்களை முன் வைத்து வருகின்றார் அவர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் எம்.பியாக அவர் தெரிவானாலும் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்ததன் காரணமாக, கட்சியின் கொள்கையை மீறியமைக்கு அவரது பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்கும் படி ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது. மேலும் கட்சி உறுப்புரிமையிலிருந்தும் நீக்கியுள்ளது. எனினும் அவர் அதை எதிர்த்து உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளமை முக்கிய விடயம். தமக்கு ஆதரவாக செயற்பட்டமையால் அவருக்கு அரசாங்கத் தரப்பு ஆலோசனைகளையும் ஆதரவையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் இப்படியானவர்களை பாராளுமன்றில் பேச வைத்து உயரிய சபையை பரிகாசத்துக்குள்ளாக்கும் நிலைமை பற்றி அரசாங்கம் யோசிப்பதில்லை. இதே டயானா கமகே தான் இவ்வருடம் ஏப்ரல் மாதம் இணையமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது எமது நாட்டில் பாலியல் தொழிலை சட்டமாக்க வேண்டும் என்றும் இலங்கையை தாய்லாந்து போன்று மாற்றியமைத்து இரவு நேர வாழ்க்கை முறை மற்றும் கலாசாரத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான நடைமுறைகளை அமுல்படுத்த பெளத்த தர்மமும் கலாசாரமுமே தடையாகஇருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தாய்லாந்து ஒரு பெரிய பெளத்த நாடு என்றும் அங்கு இவ்வாறு இருக்கையில் இங்கு ஏன் அப்படி இருக்க முடியாது என்று யாருக்கும் பதில் கூற முடியாத ஒரு அறிவுபூர்வமான கேள்வியை எழுப்பியிருந்தார். இத்தனைக்கும் அவரும் ஒரு பெளத்தர் தான். ஆனால் கடந்த வாரம் அவர் கஞ்சா பயிர் வளர்த்து ஏற்றுமதி செய்வதை சட்டமாக்குவதற்கும் அது தேயிலையின் மாற்றீடாக இருக்கும் என்பதற்கும் கூறிய விளக்கங்கள் முக்கியமானவை. அதாவது நாட்டின் கடனை அடைப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் போன்று அமைப்புகளிடம் கையேந்தி யாசகம் எடுக்கத் தேவையில்லை என்றும் கஞ்சாவை பயிரிட்டு ஏற்றுமதி செய்தால் 3 வருடங்களில் நாட்டின் கடனை அடைத்து விடலாம் என்றும் குறிப்பிட்ட அவர் தேயிலையை இனி வணிக பயிராக ஏற்க முடியாது என்றும் கூறியிருந்தார்.

இயற்கையினாலும் கடவுளினாலும் நாம் கஞ்சா செடிகளை ஆசிர்வாதமாகப் பெற்றிருக்கிறோம். 1800 களில் பிரித்தானியரால் கொண்டு வரப்பட்ட கஞ்சா பயிர் தொடர்பான சட்டங்களை இரத்து செய்ய வேண்டும். அதை இலங்கையில் சட்டபூர்வமாக்க நீதி அமைச்சர் வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும் என பரிந்துரையும் செய்கிறார்.

இவ்வருடம் ஏப்ரல் மாதம் பாராளுமன்றில் டயானா கமகே எம்.பி இதே விவகாரத்தை பேசியிருந்தார். எனினும் தற்போது பெருந்தோட்ட பயிரான தேயிலைக்கு மாற்றீடாக அவர் கஞ்சா பயிர்ச்செய்கையை சுட்டிக்காட்டியிருப்பது சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அவர் தேயிலை ஏற்றுமதி வருமானத்தை விட கஞ்சா பயிரை ஏற்றுமதி செய்தால் கிடைக்கும் வருமானத்தைப் பற்றியும் புள்ளி விபரமாகக் கூறியுள்ளார்.

ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் (EIB) கணிப்புகளை எல்லாம் இவர் உதாரணம் காட்டுகின்றார். அடுத்த பத்து வருடங்களில் உலகளாவிய ரீதியில் கஞ்சாவின் சந்தை பங்கு ஆயிரம் வீதம் அதிகரிக்கும் என்றும் 2027 இல் அது 140 பில்லியன் அமெரிக்க டொலர் சந்தைப் பெறுமதியை பெற்றிருக்கும் என்றும் கூறுகிறார்.

கஞ்சாவை ஒரு மருத்துவ பொருளாக ஏற்றுமதி செய்வதன் மூலம் கிடைக்கப்போவது ஒன்றுமில்லை. ஏனென்றால் உலகில் அதை மருத்துவ மூலிகையாக பாவிப்பதை விட போதை பொருளாக பாவிப்பதே அதிகம். இதன் பிரதான மூன்று வகைகளே இன்று உலகெங்கும் பாவிக்கப்பட்டு வருகின்றன. ஆரம்ப காலத்தில் நாருக்காகவும் வித்து உற்பத்திக்காகவுமே இவை பயன்படுத்தப்பட்டன. எனினும் இதன் தாவர குடும்பத்தில் அதிபோதையூட்டும் வகைகள் கண்டு பிடிக்கப்பட்ட பின்னரே இதை ஒரு போதை தாவரமாக உலகமே பார்க்கின்றது.

இன்று போதை பொருளை உற்பத்தி செய்வதில் முதலிடத்திலிருக்கும் ஆப்கானிஸ்தானின் நிலைமைகள் பற்றி ஒன்றும் கூறத்தேவையில்லை. நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதி வருமானமானது அபின் ,மோபைன், ஹாசிஸ் போன்ற போதை பொருட்கள் மூலமே கிடைக்கின்றமை பகிரங்க உண்மை. அங்கு அபின் தோட்டங்களை இங்குள்ள காய்கறி தோட்டங்கள் போன்று எங்கும் காணலாம். அச்செய்கையிலேயே கவனம் செலுத்தியதால் அங்கு தொழில்சார் பயிற்சியில்லாது உருவாகிய இளம் சமூகத்தினரின் எண்ணிக்கை மட்டும் 30 இலட்சத்துக்கும் அதிகமாகும். மிகவும் விலை கூடியதும் அதிக போதையை தருவதுமான அபினை தரும் ஓபியம் செடியை வளர்ப்பதிலேயே அந்நாட்டின் ஒரு தலைமுறை சீரழிந்து விட்டது. இதிலிருந்தே ஹெரோயின் உள்ளிட்ட வேறு போதை பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. இன்று ஆப்கானை கைப்பற்றியிருக்கும் தலிபான்களின் வருமானம் இதிலேயே தங்கியுள்ளது.

ஆப்கானை போன்று ஒரு நிலைமையை இலங்கைக்கும் ஏற்படுத்த முயற்சிசெய்கின்றாரோ டயானா என்று கேட்கத்தோன்றுகின்றது. எனினும் ஆப்கானையும் இலங்கையையும் எவ்விதத்திலும் ஒப்பிட முடியாது. எந்த சந்தர்ப்பத்திலும் மலையக பிரதேசங்களுக்கு விஜயம் செய்திராத டயானா போன்றவர்கள் இவ்வாறு வாய்க்கு வந்தபடி பிதற்றுவதும் பொருளாதார நிபுணர்கள் போன்று நாட்டின் கடன் சுமையை குறைப்பதற்கு நகைப்புக்கிடமான கருத்துக்களை பாராளுமன்றில் கூறுவதும் புதிய விடயங்கள் அல்ல. ஆனால் சுதந்திரத்துக்கும் முன்னரும் பின்னரும்., இது வரையிலும் கூட நாடு பொருளாதார ரீதியில் ஸ்திரதன்மையோடு முன்னேற காரணம் தேயிலை ஏற்றுமதி மூலம் நாட்டுக்குக் கிடைத்த வருமானம் தான். அப்பொருளாதாரத்தை பெற்றுத்தந்த தேயிலை பயிர்ச்செய்கையை இவ்வாறு விமர்சனம் செய்வதை அத்தொழிலோடு இணைந்துள்ள சமூகத்தின் வாக்குகளைப் பெற்று வந்தவர்கள் கேட்டு மெளனம் காப்பதே இங்கு கொடுமையானது. நாடு செல்லும் நிலைமையைப் பார்த்தால், ‘சிலோன் டீ’ என்ற வர்த்தக நாமம் மாறி ‘சிலோன் கஞ்சா’ என்ற விடயத்தை ஊக்குவிக்கும் நிலைமை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

No comments: