Thursday, October 30, 2008

இலங்கை தமிழ் அமைச்சர்கள் பதவி விலகுவார்களா?

இலங்கையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் யுத்தத்தின் காரணமாக அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு ஆதரவாக தமிழக அரசு இந்திய மத்திய அரசிடம் முன்வைத்த கோரிக்கைகள்,நிபந்தனைகள் ,பதவி விலகல் மிரட்டல்கள்,பேச்சுவார்த்தைகள் போன்றனவும் தமிழ் திரை உலகத்தினரின் இராமேஸ்வர ஆர்ப்பாட்டங்களும் ஆவேச பேச்சுகளும், தமிழகத்தின் ஏனைய அமைப்புக்கள் நடத்திய ஆர்ப்பாட்ட பேரணிகள் அது தொடர்பான கைதுகள் இவை தான் இலங்கையில் வெளி வரும் மும்மொழி பத்திரிகைகளில் கடந்த இரண்டு வார கால தலைப்புச்செய்திகள்.
செய்திகளுக்கு என்ன பலன் என்று ஆராய்வதோ அது தொடர்பான விமர்சனமோ அல்ல இவ்வாக்கம். நேரடியாக விடயத்திற்கு வந்து விடுகிறேன்.



இலங்கையில் வடக்கு கிழக்கு பிரதசேத்திலும் மத்திய பிரதேசமான பெருந்தோட்டப்பகுதிகளிலும் தமிழர்கள் செறிந்து வாழ்வது அனைவரும் அறிந்த விடயம் தான். அண்மைக்காலமாக மிகவும் ஆக்ரோஷமாக முன்னெடுத்துச்செல்லப்படும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள, கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்காக எமது அண்மைய நாடும் ஆசிய பொலிஸ்காரனாக உருவெடுக்க துடித்துக்கொண்டிருக்கும் இந்திய நாட்டின் தமிழக மாநிலத்தில் ஏற்பட்ட உணர்ச்சிக்கொந்தளிப்புகள் பற்றி உலகமே அறியும்.

இதில் உச்சகட்டமாக மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழக கட்சிகளை சார்ந்த 40 பேர் தமது நாடாளுமன்ற பதவிகளை துறக்கவும் தயார் என்று அறிவித்தமையை குறிப்பிடலாம். இதன் பிறகு இலங்கையிலிருந்து டெல்லி பறந்த பசில் இராஜபக்ச பற்றியோ தமிழக முதல்வர் கருணாநிதி திடீரென நாற்பதாண்டு கால பிரச்சினையை நான்கு நாட்களில் தீர்க்க முடியுமா? என்று அறிக்கை விட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு இலட்சம் தருகிறேன் என்று பல்டி அடித்ததை பற்றியும் நான் பேச வரவில்லை.


இலங்கையில் துயருறும் தமிழ் மக்களுக்காக தமிழகத்தில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவோம் என்று அறிவித்தபோது இலங்கை அரசிடம் ஒட்டிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் என்ன செய்து கொண்டிருந்தன? அவற்றின் நிலைப்பாடு தான் என்ன?தற்போதுள்ள அரசாங்கமே கொடிய யுத்தத்தை கட்டவிழ்த்து விட்டு தமிழினத்தை அழிக்கும் கைங்காரியத்தை செய்து கொண்டிருக்கின்றது என்றால் அந்த அரசாங்கத்திற்கு முட்டு கொடுத்துக்கொண்டு அமைச்சுப்பதவிகள் மூலம் சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு மாதம் மாதம் தமது இன மக்களுக்கு எதிரான அவசரகால சட்ட நீடிப்புக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் கையை உயர்த்திக்கொண்டிருக்கும் இவர்கள் பதவி விலகத்தயாரா?


எத்தனை அவமானங்களுக்கு உட்பட்டும் இந்த அரசாங்கத்திடம் தான் ஒட்டிக்கொண்டிருப்போம் என்பது இவர்களது எந்த இன ஜனநாயகமோ தெரியவில்லை. தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகித்து அமைச்சர் பிரதி அமைச்சர் பதவிகளை வகித்துக்கொண்டிருக்கும் சிறுபான்மை இன மக்கள் பிரதிநிதிகள் இந்திய வம்சாவளியினர் என்று கூறவே கேவலமாகவுள்ளது என ஒரு மூத்த மலையக கலைஞர் என்னிடம் கூறி வேதனையுற்றார்.


வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் பிரச்சினைகள் பற்றி சூடாக விவாதம் நடந்துக்கொண்டிருந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினை வேறு மலையகம் வாழ் தமிழ் மக்களின் பிரச்சினைகள் வேறு என்று கூறியே காலங்கடத்திவிட்டார்களே, மலையக மக்களின் பிரச்சினைகள் என்னவென்று இத்தனை நாட்களாய் பட்டியல் போட்டுக்கொண்டா இருந்தார்கள் இவர்கள்? யுத்த சூழ்நிலையில் வடக்கு கிழக்கு மக்கள் அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் காலகட்டங்களில் நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக மக்கள் மகிழ்ச்சியாகவா வாழ்ந்துக்கொண்டிருந்தனர்?

ஐயா பிரித்தானிய காலத்து லயங்களும் மாட்டுக்கொட்டில்களும் தானே ஐயா இங்குள்ள மக்கள் சிலருக்கு இது வரை வீடுகளாக இருக்கின்றன. இதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்
இலங்கையின் மத்திய பிரதேசமான மலையகத்தில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளி மக்கள் 21 வருட கால யுத்தத்தினால் பாதிக்கப்படவில்லை என்பது எவ்வளவு முட்டாள்தனமான கருத்து?இன்றைய தினத்தில் யுத்தம் மற்றும் 1983 வன்செயல்களால் இந்தியாவில் அகதிகளாக இருக்கும் இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களின் தொகை 28,500 என்று சொன்னால் சந்தேகமேயில்லை நீங்கள் நம்பமாட்டீர்கள். இலங்கை தமிழர்களுக்காக இந்தியாவில் ஏற்பட்ட எழுச்சி இப்படியிருக்க நீங்கள் உள்ளூரில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் ஒன்றுமே சொல்ல மாட்டீர்கள் தமிழர்கள் வந்தேறு குடிகள் என பெரும்பான்மை இனத்தவரால் ஒவ்வொரு நாளும் பாராளுமன்றத்தில் துவேஷம் அள்ளி வீசப்படும் போது கூட புன்சிரிப்போது அதை ஏற்றுக்கொண்டவர்கள் தானே நீங்கள். பாவம் உங்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தவர்கள். இருந்தாலும் ஒன்றை மற்றும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள் வரலாற்றில் நீங்கள் என்ன பெயர் கொண்டு அழைக்கப்படப்போகின்றீர்கள் என்று அறிந்து நான் உண்மையில் மனவேதனை அடைகின்றேன்,காரணம் நான் ஒரு தமிழன்!

5 comments:

இறக்குவானை நிர்ஷன் said...

//இதில் உச்சகட்டமாக மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழக கட்சிகளை சார்ந்த 40 பேர் தமது நாடாளுமன்ற பதவிகளை துறக்கவும் தயார் என்று அறிவித்தமையை குறிப்பிடலாம். இதன் பிறகு இலங்கையிலிருந்து டெல்லி பறந்த பசில் இராஜபக்ச பற்றியோ தமிழக முதல்வர் கருணாநிதி திடீரென நாற்பதாண்டு கால பிரச்சினையை நான்கு நாட்களில் தீர்க்க முடியுமா? என்று அறிக்கை விட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு இலட்சம் தருகிறேன் என்று பல்டி அடித்ததை பற்றியும் நான் பேச வரவில்லை.
//

இப்படி நடக்கும் என நாம் ஏற்கனவே அறிந்ததுதானே?

//நீங்கள் ஒன்றுமே சொல்ல மாட்டீர்கள் தமிழர்கள் வந்தேறு குடிகள் என பெரும்பான்மை இனத்தவரால் ஒவ்வொரு நாளும் பாராளுமன்றத்தில் துவேஷம் அள்ளி வீசப்படும் போது கூட புன்சிரிப்போது அதை ஏற்றுக்கொண்டவர்கள் தானே நீங்கள். பாவம் உங்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தவர்கள். இருந்தாலும் ஒன்றை மற்றும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள் வரலாற்றில் நீங்கள் என்ன பெயர் கொண்டு அழைக்கப்படப்போகின்றீர்கள்//

எல்லோர் மனதிலும் உள்ள வேதனைகளை உங்கள் எழுத்து வெளிக்கொண்டுவந்திருக்கிறது.
உண்மையில் எமது அரசியல் தலைவர்களை(அப்படி சொல்லவேண்டிய நிலை) பற்றிப் பேசுவது கூட வெட்கம் என நினைக்கிறேன்.

தமிழன் என்ற அடையாளத்தையே இல்லாதொழிக்க வேண்டும் என யுத்தவெறியில் களமிறங்கியிருக்கும் துவேஷிகளுக்கு தமிழ் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள்தானே குடைபிடிக்கிறார்கள். வெளியில் தமிழ் உணர்வுபற்றிப் பேசும் இவர்களது உள்ளக நடவடிக்கைகள் வெளிவரும் காலம் வெகுதொலைவில் இல்லை.

இவர்கள் தரும் வரலாற்றுக்கறையை போக்க முடியாத துரதிர்ஷ்ட சமுதாயமாகிவிடுவோமே தெரியவில்லை. ஏனென்றால் மக்கள் பிரதிநிதிகள் என்றுதானே அவர்கள் சொல்லுகிறார்கள்.

கல்வெட்டு said...

இறக்குவானை நிர்ஷன் பதிவில் சில கேள்விகள் கேட்டிருந்தேன். நேரம் இருப்பின் பதில் சொல்லலாம். நன்றி

கல்வெட்டு said...

சிவலிங்கம் சிவகுமாரன் ,
உங்கள் பதிவுகளை படித்து விரிவாக பின்னர் எழுதுகிறேன்.

தங்க முகுந்தன் said...

இது எல்லாம் நடக்க முடியாத கதைகள்!

நேரத்தை ஏன் வீணடிக்கிறீர்கள்!

பொது மக்களைப்பற்றி யாருக்காவது அக்கறை இருக்கிறதா???

Anonymous said...

ஆனந்த சங்கரிக்கு அக்கறை இருக்கின்றது தங்கமுகுந்தன் அவர்களே