தமிழ் சினிமா பற்றிய பல்வேறு அலசல்களில் இந்திய திறனாய்வு மற்றும் விமர்சனங்களில் கையாளப்படும் பல விடயங்கள் குறித்து நாம் பொழுது போக்காகக்கூட கதைப்பதில்லை விவாதிப்பதில்லை. இதற்குக்காரணம் நல்ல சினிமா எது என்ற விடயம் பற்றிய அறிவை நாம் வளர்த்துக்கொள்ளாததுதான். ஒரு சினிமாவை நாம் எதற்குப்பார்க்கவேண்டும் அதிலிருந்து என்னென்ன விடயங்களை கற்றுள்ளோம், அவ்விடயங்களை நம் நண்பர்களுடன் விவாதத்திற்கு உட்படுத்துகின்றோமா குறிப்பிட்ட படத்தில் இயக்குனர் என்ன விடயத்தை முன்னிலைப்படுத்துகிறார் அல்லது எதை மறைமுகமாக குத்திகாட்டுகிறார் இது பற்றிய தேடல்கள் நம்மிடம் குறைவு. ஒரு தமிழ் படத்தில் நகைச்சுவை காட்சிகளுக்கும் சண்டை காட்சிகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் வேறு பல நல்ல விடயங்களுக்கு கொடுப்பதில்லை. இப்போது வெளி வரும் தமிழ்த்திரைப்படங்களில் முக்கியமாக பலரும் பேச விரும்பாத விடயம் சினிமா இலக்கணவிதிகள் பற்றிய தவறுகளாகும். இதை ஆங்கிலத்தில் Logical Mistakes என்று கூறுகின்றனர். ஒரு சினிமா இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறை சினிமா பாடத்தில் இல்லையென்றாலும் ஒரு சினிமாவை பார்க்க திரையரங்கு செல்லும் இரசிகனை எப்படியெல்லாம் காட்சியமைப்புக்களில் ஏமாற்றலாம் என்பதற்கு இன்று வெளிவரும் திரைப்படங்கள் சான்று பகர்கின்றன. இதில் இந்தியாவிலிருந்து வெளிவரும் சகல மொழி திரைப்படங்களும் அடக்கம் சரி இந்த லொஜிக்கல் தவறுகள் என்றால் என்ன? ஒரு படத்தில் இடம்பெறும் சன்டை,நகைச்சுவை,ஆடல் ,பாடல்,சம்பவங்கள் அனைத்திலும் இந்த தவறுகள் ஆக்கிரசித்துள்ளன. இதை தான் இன்றைய இரசிகர்கள் விரும்புகிறார்கள் என்றால் ஒரு வகையில் இது அவர்களை ஏமாற்றுவதற்கு ஒப்பானது. நவீன தொழில்நுட்பம் என்ற பெயரில் சண்டை ,பாடல் காட்சிகளை கற்பனைக்கு எட்டாத விதத்தில் எடுத்தல் ஒரு நல்ல சினிமாவுக்கான பண்புகள் என்று கூற முடியாது. சண்டை காட்சிகளை எடுத்துக்கொண்டால் ஒரு நாயகன் என்னதான் அசாத்திய உடல் திறன் கொண்டவனாக இருந்தாலும் ஒரே தடவையில் வெறுங்கையில் இருபது அரிவாள் ரவுடிகளை சமாளிப்பது என்பது சினிமாவில் மட்டுமே நிஜம் என்பது அதைப்பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தெரியும். ஆனால் இக்காட்சியல் யதார்த்தம் என்பது இல்லை.சண்டை காட்சியில் பிண்ணியில் ஒலிக்கும் சத்தங்கள் கூட பொய்யானவை என்பது கண்கூடு. தற்போது வெளி வரும் தமிழ் சினிமாவில் உள்ள சண்டை காட்சிகள் நூற்றுக்கு நூறு வீதம் பொய்யானவை என்பதே உண்மை. ஆனால் இதே காலகட்டத்தில் சண்டை காட்சிகளில் கூட யதார்த்தத்தை காட்ட விரும்பும் இயக்குனர்கள் இல்லாமலில்லை.இதில் பாலா,அமீர்,மிஷ்கின், ஏன் அக்காலத்து பாலு மகேந்திரா,மகேந்திரன் என்போரை குறிப்பிடலாம். இயக்குனர் பாலா தனது படத்தில் வரும் சண்டை காட்சிகல் கூட யதார்த்தத்தை எதிர்ப்பார்ப்பவர்.பிண்ணனியில் பொய்யான சப்தங்களை எழுப்ப விரும்பாத இவர் தனது படங்களில் இருவர் சண்டையிடும் போது அவர்களில் இருந்து எழும் உணர்ச்சிகள் ஆவேசம் சப்தம் என்பன உண்மையானதாகவும் தொழில் நுட்ப கலப்பில்லாததாகவும் இருக்க வேண்டும் என விரும்புபவர். இவரின் நந்தா,பிதாமகன்,தற்போது வெளிவந்துள்ள நான் கடவுள் என்பவற்றைக்கூறலாம். சண்டை காட்சிகளை விடுத்து ஒரு படத்தில் இடம்பெறும் சம்பவங்களில் எத்தனையோ தவறுகள் இடம்பெறுகின்றன. இதற்கு உதாரணம் காட்டத்தொடங்கினால் இங்கு இடம்போதாது.எனினும் ஒரு சில விடயங்களைப்பார்க்கலாம். மகத்தான வெற்றி பெற்ற பல தமிழ் திரைப்படங்களில் கூட ஆரம்பம் முதல் முடிவு வரை தவறுகள் காட்சியமைப்பிலும் திரைக்கதையிலும் இடம்பிடித்துள்ளதை அவதானிக்கலாம்.விஜய் சிம்ரன் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தை எடுத்துக்கொண்டால் இறுதி வரை நாயகிக்கு இவன் தான் நாயகன் என்பது தெரியாமல் இருப்பதற்கு இயக்குனர் எழில் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் இறுதி தருணங்கள் பொய்யானவை. நாயகி தனது வாழக்கையில் முக்கியமான இடத்தைப்பிடித்த நாயகன் ஒரு பொய் குற்றச்சாட்டுக்கு ஆளாகி ஏழு வருடங்கள் சிறைவாசம் அனுபவிக்க போய் விடுகிறான்.அந்த காலகட்டத்தில் இவனது உயிர் நண்பர்கள் நாயகியிடம் இருக்கின்றார்கள்.அப்போது நாயகனின் ஒரு புகைப்படம் கூட அவர்கள் மத்தியில் இல்லாததை நம்ப முடியாது உள்ளது. இது ஓர் உதாரணம் தான் இப்படி எத்தனையோ. இயக்குனர் சங்கரின் படங்களில் பிரமாண்டம் இருக்கும் ஆனால் காட்சியமைப்புக்களை நம்ப முடியாது. கதையையே நம்ப முடியாதுள்ளது. ஆரம்பத்தில் இயக்குனர் மணிரத்னம் கூட தனது படங்களில் யதார்த்தம் இழையோடுவதை விரும்பினார் எனினும் வர்த்தக நோக்கத்தை கொண்டு படம் தாயாரிக்கும் எண்ணம் இப்போது மேலோங்கியுள்ளதால் அவரிடம் இருந்து இப்படியான படங்களை அண்மைக்காலங்களில் எதிர்ப்பார்க்கமுடியாததாகவுள்ளது. இறுதியாக வெளிவந்த கமலின் தசாவதாரம் திரைப்படத்திலும் ஏகப்பட்ட தவறுகள்.இப்படத்தில் பலரால் சுட்டிக்காட்டப்பட்ட விடயம் இறுதி காட்சியில் சுனாமி ஏற்பட்டு மக்களின் மரண ஓலங்களின் மத்தியில் கமலும் அசினும் கடற்கரையில் காதல் வசனங்களை பேசியபடி வருவது. ஹொலிவுட் திரைப்படங்களை Drama, action, thriller, science fiction, animation என்ற வகைக்குள் உள்ளடக்குவர். கற்பனா அதிசயங்கள் நிறைந்த விஞ்ஞான புனைகதைகள் என்றால் science fiction என்ற முத்திரையுடன் தான் அவை வெளிவரும்.இதில் ஸ்பைடர்மேன்,சூப்பர் மேன்,ஹரி பொட்டர் ஆகிய படங்களை உள்ளடக்கலாம்.இப்படங்களை பார்ககும் ஒரு இரசிகன் ஏமாற்றப்படுவதில்லை என்பதே உண்மையாகும். எனினும் இன்று வெளிவரும் பெரும்பாலான தமிழ்த்திரைப்படங்கள் தழுவல்களாக இருப்பதுவும் கூட இரசிகர்களை ஏமாற்றும் வேலைதான். அதற்கு உலக சினிமா குறித்து ஆர்வமும் அக்கறையும் தேவை. இச்சந்தர்ப்பத்தில் ஒன்றை குறிப்பிடல் அவசியம். ஹிந்தித்திரை உலகில் நடிப்பு இயக்கம் ஆகியவற்றில் தனிமுத்திரை பதித்த நடிகர் அமீர்கான்.இவர் இயக்கி நடித்த லகான்,ரங் தே பாசந்தி என்பன சர்வதேச விருதுகளை பெற்றன. இவர் ஒரு கட்டத்தில் கூறும் போது ஆங்கில திரைப்படங்களை தழுவி நாம் படம் எடுத்து அதே படத்தை அவர்களுக்குப்போட்டுக்காட்டி விருது கேட்டால் கொடுப்பார்களா என்றார். ஆனால் அவரே ஆங்கிலத்திரைப்படத்தை அப்பட்டமாக அப்படியே தமிழில் எடுத்து வெற்றி பெற்ற கஜினி ஹிந்தி படத்தில் நடித்திருக்கிறார்.கஜினி 2001 ஆம் ஆண்டு வெளியான மொமென்டோ (Memento) என்ற ஹொலிவுட் திரைப்படத்தின் நேரடி தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தமிழிலும் ஹிந்தியிலும் முருகதாஸ் இயக்கியிருந்தார். ஒரு திறனாய்வாளனுக்கும் சாதாரண இரசிகனுக்கும் ஒரு திரைப்படத்தை பார்ப்பதில் உள்ள வித்தியாசங்கள் முக்கியமானவை. ஒரு திறனாய்வாளன் ஒரு பக்க சார்பாளனாக இருக்க முடியாது.ஆனால் ஒரு இரசிகனால் அப்படியிருக்கமுடியாது, தனது மனதுக்குப்பிடித்த நாயகன் திரைப்படத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டாலும் கொடூரமானவனாக இருந்தாலும் கூட அவனை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலையிலேயே அவன் இருப்பான். தமிழ்த்திரைப்படங்களில் வரும் தவறுகள் ஒரு சராசரி இரசிகனுக்கும் விளங்கவேண்டும் என்ற அவாவில் எழுதப்பட்டதே இவ்விடயங்கள்.இது ஆரம்பம் மட்டுமே. இரசிகர்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களே வெளிப்படுத்த வேண்டும்.தமிழ்த்திரைப்படங்களில் யதார்த்தம் இருக்கக்கூடாதா இப்படியான படங்களைத்தான் அவர்கள் விரும்புகிறார்களா? உங்கள் கண்களுக்குப்பட்ட தவறுகள் எவை?எழுதுங்களேன் இப்பக்கத்துக்கு?
நன்றி:வீரகேசரி வாரவெளியீடு( 22-02-2009)
No comments:
Post a Comment