Monday, July 19, 2010

இந்திய வம்சாவளியினரா மலையகத்தமிழர்களா நாங்கள்?

இத்தனை காலமும் இல்லாத சந்தேகம் இப்போது ஏன் திடீரென ஏற்பட வேண்டும் என்று பலர் நினைக்கக்கூடும் ஆனால் தமிழர்கள் என்ற பொதுவான அடையாளப்படுத்துதலின் கீழ் மலையக மக்கள் என்று கூறப்படுவோர் இன்று இல்லை அல்லது அவர்கள் வேறு விதமாக புரிந்து கொள்ளப்படுகின்றார்கள் என்ற சர்ச்சைகளுக்கு மத்தியிலேயே இப்படி ஒரு கேள்வியை கேட்கத்தோன்றியது. அண்மையில் கோவையில் இடம்பெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கூட மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்து கொண்ட குழுவினருக்கும் இதே அனுபவம் தான் ஏற்பட்டிருக்கிறது. நாங்கள் மலையகத்தமிழர்கள் என்று ரீதியில் ஒரு சமுக அந்தஸ்த்தோடு கூற விழைந்த போது மலையகமாக அது எங்குள்ளது நீங்கள் மலைச்சாதியினரா என்ற வகையில் வினா எழுப்பப்பட்டுள்ளது. மேற்படி குழுவுக்கு தலைமை தாங்கிய கவிஞர் சு.முரளிரதன் இச்சம்பவத்தை ஒரு நிகழ்வில் வேதனையோடு கூறியதை எவர் அலட்சியப்படுத்தினாலும் எம்மால் இருக்க முடியாது என்ற நிலையிலேயே விவாதத்திற்குரிய இவ்விடயம் பற்றி எல்லோரும் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறோம், காரணம் இன்னும் ஆயிரம் வருடங்களுக்குப்பிறகு நாம் குறிப்பிடும் மலையக சமுகம் அந்தப்பெயருடனேயா அல்லது வேறு பெயருடனேயா இருக்கப்போகின்றது, இயங்கப்போகின்றது என்பதை தீர்மானிக்கும் சக்திகளாக ஏன் இப்போதுள்ளவர்கள் விளங்கக்கூடாது என்ற கேள்வியும் எழாமலில்லை.
இச்சந்தர்ப்பத்தில் மேற்கூறிய விடயம் பற்றி அலசி ஆராய்வதற்குப் பல காரணங்கள் முன்னிற்கின்றன.

1)தென்னிந்தியாவிலிருந்து உழைக்கும் வர்க்கமாக இலங்கை வந்த ஒரு மக்கள் கூட்டம் இன்னமும் இங்கு வாழ்ந்து கொண்டிருப்பது பற்றி இந்தியாவில் உள்ள பெரும்பாலனவர்களுக்கு ஏன் தமிழ் நாட்டினருக்கே தெரியாமலிருப்பது.


2) இலங்கை தமிழர்கள் அல்லது இலங்கை தமிழ், இலக்கியம்,கலாசாரம்,பாரம்பரியம் என்றால் அது ஒன்று தான் இருக்கின்றது இருக்க வேண்டும் என்ற ரீதியில் இன்று உலகம் முழுக்க பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றமை.


3)இப்படி ஒரு தமிழ் பேசும் சமுகம் இருக்கும் பட்சத்தில் அவர்களின் எங்கிருந்து வந்தார்கள் அவர்களின் அடையாளப்படுத்தல் என்ன ஏன் அப்படி இருக்க வேண்டும் என்ற அக்கறை எவருக்கும் இல்லாது போனமை.


4) இந்நிலையில் மலையகம் என்ற பதம் பலருக்கு விளங்காத ஒரு சொல்லாகவும் கேலிக்குரிய விடயமாகவும் ஆக்கப்பட்டிருக்கின்றமை.


அண்மையில் புதிதாக வெளிவந்திருக்கும் ஒரு தமிழ் வாரமலரின் ஆசிரியத்தலையங்கத்திலேயே மலையக மக்கள் மலைபிரதேச மக்கள் என்று விளிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் ஒரு மக்கள் கூட்டத்தினரை அப்பிரதேச புவியியல் அம்சங்களை வைத்து பெயர் சூட்டி அழைக்கும் பண்பு என்பது வேறு அதை இதோடு ஒப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். சங்க காலத்தில் மலையும் மலை சார்ந்த மக்களை குறிஞ்சி நில மக்கள் என்று அழைத்ததுண்டு. இப்போது அப்படியல்லவே? ஆபிரிக்காவின் சகாரா பகுதி வாழ் மக்களை பாலைவனக்கூட்டம் என்றா அழைக்கிறோம் அல்லது இமயமலை நேபாளம் பகுதி வாழ் மக்களை பனி மலை பகுதி வாழ் மக்கள் என்றா அழைக்கிறோம்? தமிழ் நாட்டைப்பொறுத்த வரை மலைசாதியினர் அல்லது மலைப்பகுதி மக்கள் என்று குறிப்பிடப்படுவோர் பூர்வீகக்குடிகள் அல்லது ஆதிவாசிகள் என்றே பொருள்படும். இந்தியாவில் 416 வகையான ஆதிவாசிகள் உள்ளனர். சரி விடயத்திற்கு வருவோம். மலையக மக்கள் என்ற பதம் எவ்வாறு உருவானது?
1844 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து இலங்கை கோப்பி தோட்டங்களில் பணி செய்வதற்காக லுதினன் கேர்னல் ஹென்றி சி.போர்ட் என்பவர் 14 பேரை அழைத்து வந்ததோடு வரலாறு ஆரம்பிக்கின்றது. ( ஆனால் 1818 ஆம் ஆண்டே இந்தியாவிலிருந்து இலங்கையின் மத்திய மலைப்பிரதேசத்திற்கு மக்கள் வந்ததாக ஒரு குறிப்பு கூறுகிறது)
இவர்கள் இலங்கையின் மத்திய மலைப்பிரதேசங்களுக்கே முதன் முதலில் வந்தனர் என்று வரலாறு கூறுகிறது.மலைகள் சூழந்த பிரதேசமாகையால் இப்பகுதி வாழ் மக்கள் மலைய மக்கள் என்று அழைக்கப்பட்டனர் என குறிப்பிடப்பட்டாலும் 1950 களுக்குப்பிறகே மலையகம் என்ற பதம் தோற்றம் பெற்றது. புவியியல் ரீதியில் சப்ரகமுவ குன்றுகளை தவிர்த்து கடல் மட்டத்திலிருந்து 300 மீற்றருக்கு மேல் அமைந்துள்ள பகுதிகள் மலையகம் என வரையறுக்கப்படுகிறது. ஆனால் சமுகம் சார்ந்து பார்க்கும் போது மாத்தளை,கண்டி,பதுளை,இரத்தினபுரி,கேகாலை, ஏன் தென் பகுதியின் காலி மாவட்டத்திலும் தென்னிந்தியாவிலிருந்து வந்த மக்கள் வாழ்கின்றார்கள். அப்படியானால் அவர்களை மலையகத்தவர்கள் என்று அழைப்பது சரியாகுமா?
மலையகம் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வருகின்றன ஆனால் எமது அடையாளம் என்பது இந்திய வம்சாவளி தமிழர்கள் தான் அதை எப்படி மாற்ற முடியும் என்ற பதில் குரல்களும் எழாமலில்லை.இந்தியாவின் அடைமொழியோடு நாம் வாழ விரும்பவில்லை இப்படி ஒரு மக்கள் கூட்டம் இருப்பதை அவர்கள் அறியாமலிருக்கும் போது ஏன் அந்தப்பெயரை நாம் சூட்டிக்கொள்ள வேண்டும் என்ற இளந்தலைமுறையினரின் கோபத்திலும் நியாயம் இல்லாமலில்லை. இது குறித்து ஒரு சந்தர்ப்பத்தில் சிரேஷ்ட தொழிற்சங்கவாதியான ஓ.ஏ.இராமையாவுடன் கலந்துரையாடிக்கொண்டிருக்கும் போது அவர் சில விளக்கங்களை கூறினார்.
‘ஒவ்வொரு சமுகத்திற்கும் ஒரு வரலாறு உண்டு ,வரலாற்றை திரிபுபடுத்த எவராலும் முடியாது.தென்னிந்தியாவிலிருந்து பணி செய்வதற்காக வந்த மக்கள் இலங்கைக்கு மட்டுமா வந்தார்கள்? மலேஷியா ,மொரிஷியஸ் நாடுகளுக்கும் சென்றார்கள்.அவர்கள் தாம் வாழ்ந்த பிரதேசத்திற்கு ஏற்ப சமுகப்பெயர்களை சூட்டிக்கொள்ள வில்லை.இன்றும் மலேஷியாவில் இந்திய வம்சாவளி தமிழர்கள் என்ற பதத்தை தான் பாவிக்கின்றனர். ஆகவே எமது வேர் இந்தியா தான் என்பதில் சந்தேகமில்லை. தொழில் ரீதியாக பார்க்கும் போது பெருந்தோட்டத்தொழிலாளர்கள் என்று கூறுவதில் தப்பில்லை. ஆனால் மலையகத்தவர் என்ற பதத்தை எப்படி ஏற்றுக்கொள்வது? இன்னும் ஆயிரம் வருடங்கள் சென்றாலும் எம்மை இந்திய வம்சாவளி தமிழர்கள் தான் என்றே வரலாறு கூறும் காரணம் அது தான் உண்மை. ஏன் எமது பிறப்பத்தாட்சி சான்றிதழ்களில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது? மலையகத்தமிழர் என்றா உள்ளது? அப்படி மலையக சமுகம் என்று நாம் கூறிக்கொண்டாலும் அதை அரசாங்கத்திடம் கூறி சான்றிதழலில் மாற்றிக்கொள்ளத்தான் முடியுமா? இந்திய வம்சாவளி மக்களை ஓரங்கட்டுவதற்கும் அவர்களை கேலிப்பொருளாக சித்திரிப்பதற்கும் பலர் இன்று முனைப்பாக உள்ளனர்.ஒரு பேராசிரியர் சி.வி.வேலுப்பிள்ளையை தோட்டக்கவிஞர் என்று வர்ணிக்கிறார் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியுமா? எமக்கென்று ஒரு வரலாறு உள்ள போது இடையில் ஏற்படுத்திக்கொண்ட ஒரு பெயரை வைத்துக்கொண்டு வாழ்தல் சரியா என்பதை சிந்திக்க வேண்டும்” என்றார்
எங்கள் சமுகத்தை நாம் எப்பெயர் கொண்டு அழைக்க வேண்டும் என்பது வாத பிரதிவாதங்களுக்கு உட்டபட்ட விடயம் எனினும் காலத்தின் தேவை அறிந்து இது குறித்து நாம் உடனடியாக செயற்பட வேண்டிய விடயமாகி விட்டது. கல்விமான்கள் ,புத்தி ஜீவிகள் , அரசியல் தொழிற்சங்க பிரதிநிதிகள் இது குறித்து ஆக்கபூர்வமான கருத்துகளை முன் வைக்க வேண்டும் என்பது எமது தாழ்மையான வேண்டுகோள்.


சிவலிங்கம் சிவகுமாரன்

1 comment:

இறக்குவானை நிர்ஷன் said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்லதொரு காத்திரமான படைப்பாக்கத்தை இங்கே பார்க்கிறேன்.

ஏனைய ஊடகவியலாளர்களிடமிருந்து வித்தியாசமானவர் என்பதை நீங்கள் மறுமுறையும் ஒப்புவித்திருக்கிறீர்கள்.

இந்த விடயம் தொடர்பில் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஏற்றுக்கொள்ள முடியாத பல்வேறு விடயங்களை சொல்ல வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஆனால் சில காலம் மற்றவர்களின் கருத்துகளுக்கு செவிமடுக்க வேண்டும் எனத் தீர்மானித்திருக்கிறேன்.

காலத்துக்குத் தேவையான பதிவு. விரைவில் பதிலோடு சந்திக்கிறேன்.