Monday, February 6, 2012

மரங்களை தறிப்பதற்கு அனுமதி வழங்கிய அரசாங்கம்தேயிலை மீள் நடுகை பற்றி வாய்திறப்பதேயில்லை





மலையக பெருந்தோட்டப்பகுதிகளை கம்பனிகள் பொறுப்பேற்றுக்கொண்டவுடன் மீள்நடுகை, தேயிலை மலைகளை பராமரித்தல் போன்றவற்றில் அதிக அக்கறை காட்டப்படுவதில்லை என்ற விமர்சனங்கள் ஆரம்பத்திலிருந்தே இருந்து வந்துள்ளன.முக்கியமாக தரிசு நிலங்களில் புதிய தேயிலை கன்றுகளை நடுவதில்லை என்றும் ஆரம்ப காலத்தில் பயிரிடப்பட்ட மிகவும் வயது கூடிய தேயிலைச்செடிகளை நீக்கி விட்டு அவ்விடத்தில் புதிய கன்றுகளை நடுவதில் எந்த தோட்ட நிர்வாகமும் அக்கறை காட்டவில்லை என்று பரவலாகவே கூறப்பட்டு வந்தது. இதற்காக அதிக பநணத்தை செலவளிப்பதை சில நிர்வாகங்கள் விரும்பவில்லை என்பதே உண்மை.அதற்கு மாற்றீடாக குறைந்த செலவில் அதிக இலாபத்தை தரும் வழிமுறைகளையே சில கம்பனிகள் கையாண்டன. இதில் முக்கியமான ஒருவிடயம் பெறுமதி வாய்ந்த மரங்களை தறித்து வெளியாருக்கு விற்பதாகும். பெருந்தோட்டப்பகுதிகளில் அதிகம் காணப்படும் கருப்பந்தேயிலை,சவுக்கு மற்றும் காட்டு வேப்பம் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் பலகைகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதன் காரணமாக பல இலட்சக்கணக்கான மரங்கள் தறித்து விற்கப்பட்டன. ஒரு சில தோட்டப்பகுதிகளில் தரிசு நிலங்களாக இருந்த இடங்களில் தேயிலைக்குப்பதிலாக மரக்கன்றுகளே நடப்பட்டன. காரணம் தேயிலையைப் போல் இதற்கு பராமரிப்பு செலவு எதுவும் இல்லை என்ற காரணம் தான். இதற்கு தொழிலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது,எனினும் 22 கம்பனிகளுக்கு 56 வருடங்கள் என்ற அடிப்படையில் தோட்டப்பகுதிகள் கையளிக்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட காலப்பகுதி வரை சில விடயங்களுக்கும் விட்டு கொடுப்புகளுக்கும் அரசாங்கம் உட்பட வேண்டியதாயிற்று.இதன் காரணமாக தொழிலாளர்களின் குரல் வெளிவரவேயில்லை. பெருந்தோட்டப்பகுதிகளில் மரங்கள் தறிக்கப்பட்டு வெளியாருக்கு விற்படுதல் பற்றி எவருமே வாய் திறக்க வில்லை.இதை ஒரு வர்த்தக நோக்காக அன்றி சூழலியல் தாக்கம் என்ற வகையில் கூட இலங்கையில் உள்ள எந்த ஒரு நிறுவனமே அமைப்போ கருத்து கூற வில்லை. இச்சந்தர்ப்பத்தில் தான் கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் இவ்வாறு மரங்கதள தறிப்பதற்கான தடை உத்தரவை அரசாங்கம் கொண்டு வந்தது. இதற்கு பெருந்தோட்டப்பகுதி வாழ் தொழிலாளர் சமூகம் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகிய வற்றின் எதிர்ப்புக்குரல்கள் வழிசமைத்தன எனலாம். அதன் பிறகு மரங்ஙகள் தறிப்பது முடிவுக்கு வந்தது . இச்சந்தர்ப்பதில் பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனிகளின் நிர்வாகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்க்கப்படும் மரங்களை எரிபொருளுக்காக மட்டும் தறிப்பதற்கான அனுமதியை அரசாங்கத்திடம் கேட்டிருந்தது முதலாளிமார் சம்மேளம். இந்த அனுமதியை பெருந்தோட்டத்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க ஊடாகவே மேற்படி சம்மேளனம் கேட்டிருந்தது. கடந்த ஒரு வருட காலமாக இது குறித்து பேசப்பட்டு வந்தது இதற்கான அனுமதியை அரசாங்கம் கடந்த வாரம் வழங்கியிருக்கிறது. இதை வரவேற்றுள்ள முதலாளிமார் சம்மேளனம் இந்த தடையுத்தரவு தளர்த்தப்பட்டுள்ளதன் காரணமாக பெருந்தோட்ட கம்பனிகள் தமது தொழிற்சாலைகளுக்கு தேவயான எரிபொருள் விறகுகளை இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பதுடன், இதற்காக இனிவரும் காலங்களில் பெருமளவு தொகையை செலவிட தேவையில்லை எனவும் அறிவித்துள்ளது. முக்கியமான விடயம் என்னவெனில் தறிக்கப்படும் மரங்கள் எரிபொருளுக்காக பயன்படுத்தப்படுகின்றனவா அல்லது விற்கப்படுகின்றனவா என்பது அவர்களுக்கே வெளிச்சம். மரங்களை தறிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டவுடன் முதலாளிமார் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையின் சில வசனங்களை வாசித்துப்பாருங்கள்இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதன் மூலமாக, அதிகளவு செலவீனங்களின் மூலம் பயன்படுத்தப்படும் எரிபொருள்களுக்கு பதிலாக மிகவும் இலகுவாக கிடைக்கக்கூடிய இந்த விறகுகளை பயன்படுத்திக் கொள்ள முடியும். எரிபொருள் விலைகள் அதிகரித்த வண்ணமுள்ளன. இந்நிலையில் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு மாற்றுவழிகளில் வருமானமீட்டக்கூடியதாகவும் இது அமையும். பெருமளவான பெருந்தோட்ட கம்பனிகள் நிதி நெருக்கடியை எதிர் கொண்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் முற்றிலும் வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது. இந்த மரங்கள் விசேடமாக எரிபொருள் தேவைக்காகவே வளர்க்கப்படுகின்றன. அதாவது இந்த மரங்கள் நடப்படும் பொழுதே தெரியும் என்றோ ஒரு நாள் தறிக்கப்படப்போகிறது என. இவற்றை தறிக்கும் பொழுது கூட முறையான விதிமுறைகள் கைக்கொள்ளப்படுகின்றன .
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரங்கள் தறிக்கப்படும் போது முறையான விதிமுறைகள் கையாளப்படுகின்றன எனக்கூறும் முதலாளிமார் சம்மேளனம் தறிக்கப்பட்ட இடத்தில் உடனடியாக மற்றுமோர் மரக்கன்று நடப்படும் என்று தெரிவிக்கவில்லை. மலையகப் பெருந்தோட்டப்பகுதிகளைப்பொறுத்தவரை இயற்கை வளங்களுக்கு பஞ்சமில்லை. எனினும் தேயிலைச்செடிகளுக்கு பாதுகாப்பாக மட்டுமன்றி மலையகத்துக்கு அழகு சேர்க்கும் ஒரு அம்சமாகவும் மழை வீழ்ச்சிக்கு பெரும் பங்காற்றும் காரணியாகவும் உள்ள மரங்கள் தறிக்கப்படுவது பற்றி எவருமே அக்கறை கொள்ளாதிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். மேலும் பெருந்தோட்டப்பகுதிகளில் இன்று கைவிடப்பட்ட நிலையில் பல தேயிலைமலைகள் காடு மன்றி கிடக்கின்றன. இப்பகுதிகளில் மீள் நடுகை செலவை காரணங்காட்டி சில நிர்வாகங்களும் அக்கறையின்றி செயற்பட்டு வருகின்றன. இதன் காரணமாகவே இன்று தோட்டப்பகுதிகளில் அதிக வேலை நாள் இன்மை மற்றும் இன்னோரன்ன பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன. பெருந்தோட்டப்பகுதிகளில் நிலவும் பிரச்சினைகள் பற்றி அரசாங்கம் எந்த வித அக்கறையுமின்றி செயற்படுவதற்குக் காரணம் இங்கு வாழ்வோர் சிறுபான்மையினத்தவர் என்பதினாலோ தெரியவில்லை. காரணம் இதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் அமைச்சர் மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட தூதுவராக கடமையாற்றி வருகின்றார். தற்போது நாட்டில் தலைதூக்கியுள்ள தேசிய பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேசங்களுக்கு விளக்கும் பதிலளிக்கும் பெரும் நெருக்கடியான பணியையே இதற்கு பொறுப்பான அமைச்சர் மேற்கொண்டு வருகின்றார்.இச்சந்தர்ப்பத்தில் உள்ளூர் விவகாரங்கள் குறித்து அக்கறைப்பட அவருக்கு காலநேரம் இல்லை அதாவது பெருந்தோட்டத்துறை பற்றிய சிக்கல்களை தீர்ப்பதற்கும் இனங்காணுவதற்கும் இவருக்கு நேரமில்லை என்பதே யதார்த்தமாகும். மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அரசாங்கத்தின் பக்கம் இருக்கும் எவருக்காவது இந்த பொறுப்பை கொடுத்திருக்கலாம் என்றால் அதற்கு சாத்தியமே இல்லாத நிலையே உள்ளது. கடந்த வருடத்தில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க கம்பனிகள் வசம் உள்ள பெருந்தோட்டப்பகுதிகளில் தேயிலை மீள் நடுகை ஆரம்பிக்கப்படல் வேண்டும் என்றும் இல்லாவிடின் குறித்த பகுதிகள் மீண்டும் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்படும் என்றும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.அத்தோடு சரி ஒன்றுமே நடக்கவில்லை. மறுபக்கமோ அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ள தேயிலை தோட்டங்கள் நஷ்டத்தில் படுபாதாளத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றன. இந்த தகவலையும் அரசாங்கமே வெளியிட்டுள்ளது. தற்போது பெருந்தோட்டப்பகுதி தொழிற்றுறையானது மிகவும் அபாயகரமான ஒரு காலகட்டத்தை சந்தித்து வருகின்றது. தோட்ட நிர்வாகங்கள் தன்னிச்சையாக இயங்கி வருகின்றன.தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன.இருக்கும் வளங்களை விஸ்தரித்து மேற்படுத்தும் நடவடிக்கைகளுக்குப் பதிலாக வளங்களை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் செயற்பாடுகளே ஆங்காங்கு இடம்பெற்று வருகின்றன. சில வாரங்களுக்கு முன்பு இலங்கையில் வர்த்தக நோக்கிற்காக தேயிலை பயிரிடப்பட்டு 145 வருடங்களாகின்றன என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வரைந்திருந்தேன். இதை வாசித்த ஒரு அன்பர் ஒரு காலத்தில் இலங்கையில் தேயிலை பயிரிடப்பட்டிருந்தது என்று எழுதும் காலகட்டம் விரைவில் வரும் என்று கவலையுடன் தெரிவித்தார். நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பது எமக்கே தெரியவில்லை. ஊடகங்கள் வாயிலாக நாம் எமது சமூகம் எதிர்நோக்கி வரும் ஆபத்துக்கள் பற்றி பல தடவைகள் சுட்டிக்காட்டினாலும் அக்கறை உள்ளவர்கள் இந்நிதலை குறித்து வாய் திறப்பார்களா?

1 comment:

Anonymous said...

உண்மையில் சிறந்த விடயம். இந்த விபரங்கள் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். இது குறித்து அவர்கள் அக்கறை செலுத்துவார்களா? பார்ப்போம் - ச.சேகர்.