காலை 9.30
…நுவரெலியா செல்லும் பஸ்ஸில் ஏறினேன். சாளர ஓர இருக்கையில் அமர்ந்திருந்த 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி என்னை கண்டதும் புன்னகை செய்தார். இதற்கு முன்னர் அவரை நான் கண்டதில்லை. சிவந்த நிறம். பட்டுப்புடவை அணிந்திருந்தார். ஏதோ ஒரு உந்துதலில் அவரின் அருகில் அமர்ந்தேன்.
அம்மா நுவரெலியா போறிங்களா?
ஆமா….நீங்க ?
நானும் அங்க தான். உங்கள நான் இதுக்கு முன்ன சந்திச்சதில்லையே ஆனா பார்த்த மாறி இருக்கு..
இந்த உலகத்துல எல்லாரும் எப்பவோ சந்திச்சிருப்போம் தம்பி. ஆனா ஒருத்தர் மாத்திரம் தான் முகத்த பாத்திருப்பாங்க. மத்தவங்க ஏதோ யோசனையில அவங்கள கடந்து சென்றிருப்பாங்க…
அப்போ நீங்கள் என்ன எப்போதாவது பாத்திருக்கிங்களா?
இல்ல தம்பி. சிலர பார்த்தவுடனே புன்னகையால கடந்து செல்வோம் இல்லியா அப்படித்தான்... .
நுவரெலியாவில உறவினர்கள் இருக்காங்களா அம்மா? உங்க கணவர் பிள்ளைகள்?
கணவர் இறந்து விட்டார். பிள்ளைகள் திருமணம் முடித்து வெளிநாட்டில செட்டிலாகிட்டாங்க. நான் எனது இறுதி காலத்த வாசிப்பு, ஆன்மிகம்னு கொண்டு போய்க்கிட்டிருக்கேன்.
பஸ் நகர ஆரம்பித்தது. அந்த அம்மாவுடன் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது.
‘அப்போ இன்றைக்கு நுவரெலியா காயத்ரி ஆலயம் போகின்றீர்களா அம்மா?
‘இல்ல தம்பி நான் இன்றைக்கு என்னோட போய் பிரண்ட பாக்க போய்கிட்டிருக்கேன்…
சிரிப்புடன் அவர் கூறியதும் முதலில் தூக்கி வாரி போட்டது. பின்பு ஏதோ நகைச்சுவை சொல்லியிருப்பார் என நினைத்தேன்.
'என்ன தம்பி ஜோக்குனு நினைச்சிங்களா?அதான் உண்மை. நாற்பது வருஷத்துக்கு முன்பு எனது 23 வயசில அவர் என்ன பெண் பார்க்க வந்திருந்தார். ஆனால் நாம் இருவரும் வாழ்க்கையில் இணைய முடியவில்லை. ஆனால் அவரை பார்த்த நாள் முதல் என் மனதில் பூத்த காதலை என்னால் மறக்க முடியவில்லை. அவராலும் தான். அவருக்கும் திருமணம் முடிந்து இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். நீங்க நம்பினா நம்புங்க தம்பி…..அவரை நான் 40 வருஷத்துக்குப் பிறகு இப்ப தான் பாக்க போறேன்.
அடுத்தடுத்து ஆச்சரியங்களை ஏற்படுத்தினார் அவர்.
நீங்க என்ன அம்மா சொல்றிங்க…..ஏன் உங்கள் திருமணம் நடக்கவில்லை? நான் இப்படி கேட்பதால் உங்களுக்கு கோபம் இல்லியே?
இல்லை தம்பி….உங்களிடம் சொல்ல வேண்டும் போல தோன்றியது. சொல்கிறேன். இப்ப அவரை நுவரெலியாவுக்கு பார்க்க போறதுக்கு ஒரு காரணம் இருக்கு தம்பி. அவரும் நானும் இணையாமல் போனதுக்கு அந்த நகரமும் அங்க நடந்த ஒரு சம்பவமும் ஒரு காரணம்.
1965 ஆம் ஆண்டு....அப்போது எனக்கு 23 வயது. என்னை பெண் பார்க்க அவர் வந்த நாள் பெப்ரவரி 14 தம்பி. அவர் குடும்பத்துடன் வந்திருந்தார். எமது ஊர் நானுஓயா. அவர்கள் மிகவும் கட்டுப்பாடான கூட்டுக்குடும்பத்தினர். அவர் தலை நிமிர்ந்து ஒரு தடவை தான் என்னைப்பார்த்தார். அவரின் சகோதரிகள் தான் என்னை சூழ்ந்து கொண்டு கேள்விகளால் துளைத்தெடுத்தனர். எனது அழகு அவர்களை பொறாமைப்படுத்தியதோ தெரியவில்லை. அவர்கள் சென்று விட்டனர். ஆனால் அவர் மட்டும் என் மனதில் குடி கொண்டு விட்டார்.
பின்னர் எனது அப்பாவிடம் முகவரி அறிந்து அவருக்கு கடிதம் எழுதினேன். எனக்கு நீண்ட நாட்களுக்குப்பிறகே பதில் கிடைத்தது. அது நாள் வரை நான் அவரை நினைத்து ஏங்கிய பொழுதுகள் அதிகம் தம்பி. அப்போது தொடர்பு கொள்ளக் கூடிய வசதிகள் இல்லை. அவரது கடிதத்தில் என்னை நலம் விசாரித்து அன்பை கொட்டியிருந்தார். தனது சகோதரிகள் இருவர் இன்னும் திருமணமாகாது இருப்பதால் அவர்களை கரையேற்றி விட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியதாகவும் தனக்கு வந்த கடிதத்தையே மறைத்து விட்டதாகவும் எழுதியிருந்த அவர் தற்செயலாக இக்கடிதம் தனது கைக்கு கிடைத்ததாகவும் அது இருவர் மனதிலும் பூத்த காதலின் வலிமை என்றும் கூறியிருந்தார். தனது நண்பர் ஒருவரின் முகவரியை அதில் குறிப்பிட்டு இனி அந்த முகவரிக்கு கடிதம் எழுதச் சொன்னார்.
சரி அம்மா பிறகு?
பிறகென்ன…சுமார் எட்டு மாதங்கள் கடிதங்கள் மூலமாகவே எமது காதலை வளர்த்தோம். அவரது தங்கைகள் இருவருக்கும் திருமண பேச்சு நடப்பதாகவும் 66 ஆம் ஆண்டு தை மாதம் எமது திருமணத்தை செய்யலாம் என்றும் அவரது தந்தையார் எமது தந்தைக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அது என்ன அம்மா எட்டு மாதங்கள், அதற்குப்பிறகு என்ன நடந்தது?
தம்பி..எனது அழகு குறித்த ஒரு பெருமை எனக்கிருந்தது. ஆனால் கர்வமில்லை. ஏதாவது ஒரு அழகிப்போட்டியில் பங்கு கொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் அது.
அப்போது தான் ராதா என்ற பத்திரிகை மலையக லஷ்மி என்ற பெயரில் ஒரு அழகு ராணி போட்டியை நடத்துவதாக அறிவித்தல் விட்டிருந்தது.
அந்தப் போட்டியில் வெற்றியீட்டும் பெண், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் கைகளால் கிரீடம் சூட்டப்படுவார் என்றும் அறிவித்திருந்தது. எனது தந்தையார் பயங்கரமான எம்.ஜி.ஆர் இரசிகர். விடுவாரா? அம்மா நீ கட்டாயம் இந்த போட்டியில கலந்துக்கனும் நிச்சயமாக நீ வெற்றி பெறுவ….அதுவும் வாத்தியார் கைகளில் பரிசு வாங்கவும் போற என எனது ஆழ்மனது ஆசைகளையும் தூண்டி விட்டார்.
நான் விண்ணப்பத்தை பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன்.
நான் இது குறித்து அவருக்கு கடிதம் எழுதினேன். போட்டி இடம்பெறும் நாளில் நுவரெலியாவுக்கு கட்டாயம் வருவேன். நீ தான் மலையக அழகு ராணி. உன்னை மனைவியாக அடையப்போவது எனக்கு பெருமை என பதில் கடிதம் எழுதியிருந்தார்.
பரபரப்பு அதிகமாகவே நான் ‘ போட்டி நடந்ததா நீங்கள் வெற்றி பெற்றீர்களா அம்மா’ என ஆர்வமாகக் கேட்டேன்.
எம்.ஜி.ஆரோடு நடிகை சரோஜா தேவியும் வந்திருந்தார். அடேயப்பா…. நுவரெலியா நகரில் கால் வைப்பதற்கு இடமில்லை தம்பி. போட்டியாளர்களுக்கு தனியாக மேடையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. நினைத்தது போன்றே நான் வெற்றி பெற்று விட்டேன். இலட்சோப இலட்சம் பேரின் மனதில் குடி கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர் கைகளில் கிரீடம் சூட்டப்பட்டேன்.
எனக்கு அதெல்லாம் ஒரு பொருட்டாக இல்லை …. அந்த ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் நான் என்னவரை தேடினேன் தம்பி.
அவர் எங்கோ ஓரிடத்திலிருந்து கொண்டு என்னை பார்க்கிறார் என்பதை மனஉணர்வில் விளங்கிக் கொண்டேன். அனைவரும் வாழ்த்து கோஷம் எழுப்பினர்.
எனக்கு அந்த நேரத்திலேயே 5 ஆயிரம் பரிசுப்பணம் கிடைத்தது. போட்டி முடிந்ததும் மேடையில் கீழே நானும் எனது குடும்பத்தினரும் இருக்குமிடம் தேடி வந்தார் அவர்.
சட்டைகள் கசங்கி தலை கேசம் எல்லாம் கலைந்து சிரித்தபடியே வந்து எனக்கு கைகுலுக்கினார். கண்களால் பல கதைகள் பேசினோம். பின்னர் வேதனையோடு வீடு சென்றோம்.
அதன் பிறகு நடந்ததெல்லாம் கனவு போலுள்ளது தம்பி. இந்த போட்டியில் கலந்து கொண்டதால் நான் குடும்பப் பெண் என்ற அந்தஸ்த்தை இழந்து விட்டேன் என்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு இது சரி வராது என்றும் அவரது தங்கைகள் சண்டை போட்டதாகவும் தனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லையென்றும் கடிதம் எழுதியிருந்தார்.
அப்பாவுக்கு அவரது தந்தை தனியாக கடிதம் எழுதியிருந்தார்.
அது தான் அவரிடமிருந்து வந்த இறுதி கடிதம் தம்பி..
அவரது நிலைமை எனக்கு விளங்கியது. ஏன் இந்த போட்டியில் கலந்து கொண்டோம் என நினைத்தேன். அப்பாவும் கலங்கிப் போனார்.
நான் தான்மா உன் வாழ்க்கைய பாழடிச்சிட்டேன் என அழுதார். எல்லாம் விதிப்படி தானே நடக்கும்?
காலங்கள் ஓடி விட்டன தம்பி. அவர் திருமணம் முடித்து விட்டதாக அறிந்தேன். எனக்கும் திருமணம் நடந்தது. இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். கணவர் ஒரு விபத்தில் காலமாகி விட்டார். நான் கடிதம் எழுதிய முகவரிக்கு சொந்தகாரரான அவரது நண்பர் என்னை தொடர்பு கொண்டு என்னை அவர் பார்க்க விரும்புவதாக கூறினார்.
இதோ போய்க் கொண்டிருக்கிறேன். என் மனதில் முதல் காதலை விதைத்த அவரை 40 வருடங்களுக்குப்பிறகு பார்க்கப் போகின்றேன். அந்த குரலை கேட்கப்போகின்றேன்....
ரதல்ல குறுக்கு வழியாக பஸ் போய்க்கொண்டிருந்தது. அவரது கதையை கேட்டு சற்று நேரம் கண்களை மூடிக்கொண்டேன்.
இனம் புரியாத வேதனையோடு ஒரு ஆனந்த நிலையும் ஏற்பட்டது. ஆஹா என்ன அருமையானதொரு காதல் கதை. இந்த காதல் உணர்வை என்னவென்று சொல்வது? இத்தனை வருடங்களுக்குப்பிறகு சந்திக்கப்போகும் அவர்களின் உணர்வுகள் எப்படி இருக்கும் ? அதை காண கண் கோடி வேண்டுமே…
நானும் இருக்கின்றேனே. சாந்தினியின் ஞாபகம் வந்தது. காதல் திருமணம் தான். ஆனால் இருவருக்குமிடையில் புரிந்துணர்வு இன்மையால் இறுதியில் விவாகரத்தில் முடிந்தது. அவளைப் பிரிந்து மூன்று வருடங்கள் ஆகின்றன.
பழைய நினைவுகளில் இருந்து விடுபட்டேன்.
'அம்மா தப்பா நினைக்காதிங்க….நானும் உங்களோட வந்து அவரை சந்திக்கலாமா?
நீங்களும் என்னுடன் வந்தால் அவருக்கு சங்கடமாக இருக்கும் தம்பி. வேண்டுமானால் இடத்தை கூறுகிறேன். அங்கு வந்து தெரியாதது போன்று நில்லுங்கள். அது வேற எந்த இடமுமில்லை. விக்டோரியா பூங்காவுக்கு போகும் பழைய வழி.
அவ்விடத்தில் தான் அழகு ராணி போட்டி நடந்தது .
பஸ் நுவரெலியாவை அடைந்தது. நானும் இறங்கிச் சென்றேன். அவர் எனக்கு கையசைத்தவாறு நடந்து சென்றார். மனதில் எக்காலத்திலும் இப்படி ஒரு ஆர்வமும் சந்தோஷமும் எனக்கு ஏற்பட்டதில்லை.
அவ்விடத்துக்கு சற்று தள்ளி நின்று கொண்டேன்.
அம்மா தனது கையடக்கத்தொலைபேசியை எடுத்து யாருடனோ கதைத்தார். முகத்தில் புன்னகை. பின்பு அங்குமிங்கும் நோட்டமிட்டார் அவரை நோக்கி ஒரு உருவம் வந்தது….
நான் எனது உணர்வுகளை அடக்கிக்கொண்டேன். இருவரும் சிறு பிள்ளைகள் போன்று கைகளை பிடித்துக்கொண்டனர். அம்மாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்திருக்க வேண்டும். துடைத்துக்கொண்டார்.
அட …ஏன் எனக்கு கண்கள் கலங்குகின்றன? நான் அழுகின்றேனா? உதட்டை கடித்து என்னை அடக்குகின்றேன்...
பின்பு இருவரும் சகஜ நிலைமைக்கு திரும்பினர். 40 வருடங்களுக்கு முன்பு அழகு ராணியை பார்க்க வந்தவருக்கும் இப்போதுள்ளவருக்கும் எவ்வளவு வித்தியாசங்கள். அவர் கைகளில் என்னவோ கொண்டு வந்திருந்தார்.
அதை வழங்கினார். 10 நிமிடங்கள் தான். அவர் அப்பால் சென்று விட்டார். போகும் போது கண்ணாடியை கழற்றி கண்களை துடைத்துக்கொள்வது விளங்கியது. நடையில் சிறிது தள்ளாட்டம். அவர் போகும் வரை பார்த்துக்கொண்டிருந்த அம்மா என்னை நோக்கி வந்தார்.
'அம்மா ஏன் அவரது தொலைபேசி இலக்கத்தை வாங்கவில்லை?
அதில் கதைப்பதை விட மனதுக்குள் நாம் கதைத்துக்கொள்வது அற்புதமானதப்பா….இத்தனை வருடங்கள் நான் அப்படித்தான் அவருடன் கதைத்தேன்.. அது சரி நீ ஏனப்பா கண்ணீர் விடுகின்றாய்? எனது கதை அந்தளவுக்கு உன்னை பாதித்து விட்டதா?
'இல்லை …இல்லை அம்மா….கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு'…..
நான் சமாளித்துக்கொண்டேன்.
'அம்மா உங்க இலக்கத்தை தாருங்கள்… உங்கள் பெயர் என்னம்மா?
'என் பெயர் ராஜம்மாள் . உங்க பெயர் என்ன தம்பி?
நான் குமார்.
தம்பி குமார் ….நீ ஏனப்பா அவர் பெயரை கேட்கல்ல….கேட்டாலும் நான் சொல்ல மாட்டேனே….அது கடவுளோட பெயர் தம்பி.
'தம்பி நான் அடுத்த வாரம் எனது மகனோடு தங்குவதற்கு அமெரிக்கா போகிறேன். இனி வருவதாக இல்லை. தனியாக இருக்க முடியாது தம்பி. நான் சாவதற்கு முன்பு அவரை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என நினைத்தேன். பார்த்து விட்டேன். விமானத்தில் போகும் போது அப்படியே எனது உயிர் பிரிந்தாலும் பரவாயில்லை....
அப்படி சொல்லக்கூடாது அம்மா. நான் உங்களுடன் கதைக்கிறேன்.
இனிய காதலர் தின வாழ்த்துகள் அம்மா…
அவரது முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி…காதல்..ஆனந்தம் , கண்களில் பரவசம். ' தேங்க்யூ ராஜா...என என் கைகளை இறுக பற்றி விடைபெற்றார் ராஜம்மா.
முதலில் சாந்தினியுடன் கதைக்க வேண்டும் என தீர்மானித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.
'தம்பி நீ கேட்டாலும் அவரோட பெயர நான் சொல்ல மாட்டேனே….....
மலையக அழகு ராணி ராஜம்மாவின் குரல் மனதில் ஒலித்துக்கொண்டே இருந்தது….
என் அப்பாவின் பெயரை நீங்கள் கூற வேண்டுமா அம்மா….
அப்பா.....ஏனப்பா இத்தனை நாட்கள் இந்த கதையை எனக்கு கூறவில்லை.....கண்ணீரை துடைத்துக்கொண்டே நடந்தேன்.