போர்க்குற்றங்களுக்கு அப்பால் ….!
சி.சிவகுமாரன்
இலங்கை உள்நாட்டுப் போரின் போது நீதிக்குப் புறம்பான கொலைகள் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகள் உட்பட கடுமையான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு பேர் மீது சொத்து முடக்கம் மற்றும் பயண தடைகளை விதித்துள்ளது பிரித்தானியா. புலம்பெயர் தமிழர்கள் மற்றும் அமைப்புகள் இதை வரவேற்றாலும் இலங்கையில் வழமை போன்றே படையினரின் மீதான அபாண்ட குற்றச்சாட்டாக இது பார்க்கப்படுகின்றது.
தடை விதிக்கப்பட்டுள்ள நான்கு பேரில் மூவர் முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளாவர். ஒருவர் விடுதலை புலிகளின் முன்னாள் தளபதியாக விளங்கி பின்னர் அரசாங்கத்தோடு இணைந்து செயற்பட்டவர்.
தடை விதிக்கப்பட்டுள்ளவர்களில் முன்னாள் கடற்படை தளபதியான வசந்த கரனாகொட. பிரித்தானியாவின் இந்த செயற்பாட்டுக்கு கூறியுள்ள காரணம் விசித்திரமாகவுள்ளது.
‘காலனித்துவ ஆட்சி காலத்தில் தனது செயற்பாடுகளுக்கு பிரித்தானியா
என்றுமே மன்னிப்பு கோரவில்லை. இந்திய மற்றும் இலங்கையில் இடம்பெற்ற காலனித்துவ கால
அட்டூழியங்கள் கவனிக்கப்படாத போதும், பிரித்தானியாவானது இலங்கையை குறி வைத்து மனித
உரிமை தடைகளை விதித்து வருகின்றது’ என்று அவர் கூறியுள்ளார்.
காலனித்துவ கால ஆட்சியில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை காலனித்துவ ஒடுக்கு
முறை என்கிறார்கள். ஆனால் இலங்கையில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் எந்த நாடும் இலங்கையை
ஆக்கிரமித்திருக்கவில்லை. சுதந்திரம் பெற்ற ஜனநாயக நாடான இலங்கையிலேயே கோர யுத்தம்
இடம்பெற்றது. இறுதி யுத்த காலகட்டத்தில் நினைத்துப்பார்க்க
முடியாத போர்க்குற்றங்கள் இலங்கை இராணுவத்தினர் மீதும் இராணுவ அதிகாரிகள் மீதும் சுமத்தப்பட்டன.
இதை எவ்வாறு வசந்த கரனகொட போன்றோர் நியாயப்படுத்தப்போகின்றார்கள்?
காலனித்துவ காலத்தில் இடம்பெற்றதை விட மோசமான
சம்பவங்களுக்கு இலங்கை இராணுவம் காரணமாக இருந்ததை நாட்டின் சிங்கள மக்களும் நன்கறிவர்.
நிறைவேற்றதிகாரமானது பிரித்தானிய காலனித்துவ
அதிகாரங்களை விட கொடுமையானது என்பதற்கு இதை விட வேறு என்ன உதாரணங்களை காட்ட முடியும்? இலங்கை இராணுவத்தினரின் செயற்பாடுகள் எப்படியானவை
என்பதை ஒரு தடவை பிரித்தானியாவே நேரடியாக பார்க்கும் சந்தர்ப்பம் இடம்பெற்றது. 2018
ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினமன்று இலண்டனில் உள்ள
இலங்கை தூதரகத்துக்கு முன்பாக புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
அச்சந்தர்ப்பத்தில் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட்ட பிரிகேடியர் பிரியங்க
பெர்ணான்டோ வெளியே வந்து ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி அலட்சியமான உடல்மொழியை வெளிப்படுத்தியது மாத்திரமல்லாது கழுத்தை
அறுத்து விடுவேன் என சைகை மூலம் அச்சுறுத்தியிருந்தார். இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புலம்பெயர் அமைப்புகள் பிரித்தானியாவிடம் கோரிக்கை
விடுத்தாலும் இலங்கை அரசாங்கமானது அவரை பாதுகாக்கும் முயற்சிகளிலேயே ஈடுபட்டது. பிரிகேடியர்
பிரியங்கா பெர்னாண்டோ, 1961 ஆம் ஆண்டு இராஜதந்திர உறவுகள் தொடர்பான வியன்னா மாநாட்டின்
படி இராஜதந்திர விலக்குரிமைக்கு உட்பட்டவர் என்பதுடன் அவர் மீது பிரித்தானியா சட்ட
நடவடிக்கைகள் எடுக்க முடியாது என தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது.
ICPPG என்ற அமைப்பு இலண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கொன்றை
தொடர்ந்தது. அவர் குற்றவாளியென நீதிமன்றம் இனம் கண்டதால் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது.
இலங்கை
அரசாங்கமானது பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கு வழங்கிய கடும் அழுத்தங்கள் காரணமாக பிடியாணை மீளப்பெறப்பட்டது. எனினும் குறித்த அமைப்பு
அவர் மீது மீண்டும் வழக்கு தொடர்ந்ததில் 2019 இல் அவர் குற்றவாளியென தீர்ப்பளித்த வெஸ்ட்
மினிஸ்டர் நீதிமன்றம் அவருக்கு 2400 பவுண்கள்
அபராதம் விதித்தது. இதை இலங்கை அரசாங்கம் ஒரு
பொருட்டாகவே எடுக்கவில்லை. முன்னதாக நாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்த பிரியங்க பெர்னாண்டோ
பின்னர் மேஜர் ஜெனரல் தரத்துக்கு பதவி உயர்த்தப்பட்டார்.
மட்டுமின்றி அவருக்கு விதிக்கப்பட்டிருந்த அபராதத் தொகையை செலுத்துவதற்கு
நாட்டு மக்களிடம் பணம் சேகரிக்கும் முயற்சிகளும் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
பிரியங்கவுக்கு ஆதரவாக அப்போது அட்மிரல் வசந்த கரனகொட ஆதரவான கருத்துக்களை வெளிப்படுத்திருந்தார்.
பயங்கவாதத்தை ஒழிப்பதற்கு தியாகங்கள் செய்த ஒத்துழைப்பு நல்கிய இராணுவ அதிகாரிகளை பாதுகாக்கவும்
அவர்களுக்கு ஆதரவாக செயற்படவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது அவர்
கூறியிருந்தார். இப்போதும் அதையே கூறுகின்றார்.
பிரித்தானியாவால் தடை விதிக்கப்பட்டுள்ள முன்னாள்
இராணுவத் தளபதியான சவேந்திர சில்வா மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனகொட ஆகியோர்
மீது ஏற்கனவே அமெரிக்காவானது பயணத்தடைகளை
விதித்துள்ளமை முக்கிய விடயம். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர்
2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை சவேந்திர சில்வா அமெரிக்காவில் அமைந்துள்ள
ஐ.நா. தலைமையகத்தில் இருக்கும் இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின்
அலுவலகத்தில் துணைத் தூதுவராக பணியாற்றியிருந்தார். அவர் இலங்கை திரும்பி
இராணுவத் தளபதியாக பொறுப்பேற்று ஆறு மாதங்களில் 2020 ஆம் ஆண்டு அவருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டது.
முன்னாள்
கடற்படை தளபதி வசந்த கரனகொடவுக்கு 2023 ஆம்
ஆண்டு பயணத்தடை விதிக்கப்பட்டது. 2008 ஆம்
ஆண்டு கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல்
ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வசந்த கரனகொட மீது வழக்கு தொடரப்பட்டுள்ளமையும் முக்கிய
விடயம்.
தடை விதிக்கப்பட்டுள்ள ஜகத் ஜெயசூரிய மற்றும்
வசந்த கரனகொட ஆகியோர் மீது முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா
பாராளுமன்றத்திலேயே பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருந்தார். 2021 ஆம் ஆண்டு அவர் பாராளுமன்று
உறுப்பினராக இருந்த போது, பாதுகாப்பு அமைச்சின் மீதான விவாதத்தில் மேற்கூறிய இருவரின்
பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் குற்றமிழைத்தவர்கள். இராணுவத்தின் ஒரு சில அதிகாரிகள்
செய்யும் தவறுகளுக்கு முழு இராணுவத்தையும் போர்க்குற்றவாளிகளாக்க முடியாது. ஆகவே அவர்கள்
தண்டிக்கப்படல் வேண்டும் எனக் கூறியிருந்தார்.
அநுர அரசாங்கமும் இவர்கள் மீதான தடையானது ஒரு
தலைப்பட்சமானது என்று கூறியுள்ளது. ஆனால் பிரித்தானியாவின் இந்த தடை விவகாரத்தை தனது எழுச்சிக்கு
பயன்படுத்திக்கொள்ளப்பார்க்கின்றார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த. யுத்தத்தை நடத்தியது
மட்டுமல்லாது தீர்மானங்களை எடுத்தது நானே ! அதை அமுல்படுத்திய பணிகளை செய்தது மாத்திரமே
இராணுவ அதிகாரிகள் என்று அவர் கூறியதன் மூலம் போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருந்தால்
அதற்கும் தானே பொறுப்பு என்ற அர்த்தத்தில் சிங்கள பெளத்த மக்களையும் இராணுவத்தினரையும்
ஈர்க்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார். போர்க்குற்றங்களை சுமந்து நின்ற அதிகாரிகளுக்கு தனது காலத்திலேயே பதவி உயர்வுகள்
வழங்கியவர் மகிந்த. இப்போது மிகவும் கீழிறங்கி தனது அரசியல் இருப்புக்காக தனது உண்மையான
சுயரூபத்தை வெளிப்படுத்த தயாராகின்றார்.
இவர்கள் அனைவருமே தற்போதைய தேசிய மக்கள் சக்தி
அரசாங்கத்தை ஏதாவதொரு வழியில் பலவீனமடையச்செய்யும்
தருணத்துக்காக காத்திருப்பவர்கள். இப்போது பிரித்தானியாவின் பயணத்தடை விவகாரம் அவர்களுக்கு
வெறும் வாய்க்கு அவலாக கிடைத்துள்ளது. போர்க்குற்றங்களை
சுமந்து நிற்கும் இராணுவத்தினரை விட, அவர்களுக்கு
கடுமையான உத்தரவுகளை பிறப்பித்த சூத்திரதாரிகளே
தண்டிக்கப்பட வேண்டியவர்களாவர்.
No comments:
Post a Comment