Wednesday, July 1, 2009

உங்களுக்குத்தெரியாத கிரிக்கெட்



டெஸ்ட் போட்டியொன்றில் சதம் பெறுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. போட்டியின் தன்மைக்கேற்ப வேகமாகவும் மிக தாமதமாகவும் டெஸ்ட் சதங்கள் பெறப்பட்டிருக்கின்றன. ஆனால் டெஸ்ட் வரலாற்றில் அதிக நேரம் எடுத்துப்பெறப்பட்ட சதம் எது தெரியுமா? 1978 ஆம் ஆண்டு இது பெறப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிராக இவ்வாண்டு லாகூரில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் முதாசர் நஸார் 557 நிமிடங்கள் களத்திலிருந்து சதம் பெற்றார். அதே போல் பவுண்டரிகளே பெறாது டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்ட எண்ணிக்கைப்பெறப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. 1979 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜெப்ரி பொய்கொட் 77 ஓட்டங்களைப்பெற்றார். இவ்வோட்ட எண்ணிக்கையில் ஒரு நான்கு ஓட்டங்கள் பதிவாகியிருக்கின்ற போதிலும் அது ஓடிப்பெறப்பட்டதாகும்.


அபூர்வ நிகழ்வுகள்
கிரிக்கெட்டில் அவ்வப்போது ஒரு சில அபூர்வ நிகழ்வுகள் இடம்பெறுவதுண்டு. இது ஒரு சில சந்தர்ப்பங்களில் பந்து வீச்சாளருக்கு பாதகமாகவும் துடுப்பாட்ட வீரரருக்கு சாதகமாகவும் அமைந்து விடுவதுண்டு. பந்து ஸ்டம்புகளுக்கிடையில் சென்றும் பேல்ஸ்கள் கீழே விழாத சந்தர்ப்பம் ஒன்று கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ளது. இது ஒரு அபூர்வமான நிகழ்வாகும். 1998ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருந்தது தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி. பைசலாபாத்தில் இடம்பெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னங்ஸில் தென்னாபிரிக்கா துடுப்பெடுத்தாடியது. 98 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது தென்னாபிரிக்கா.ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கேரி கேர்ஸ்டனுடன் 8 ஆவது விக்கெட்டுக்காக இணைந்தார் சுழற்பந்து வீச்சாளர் பெட் சிம்கொக்ஸ். மிக வேகமாக துடுப்பெடுத்தாடினார். 56 ஓட்டங்களைப்பெற்றிருந்த போது பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் முஷ்டாக் அகமட் வீசிய பந்து ஓப் திசை மற்றும் மத்திய ஸ்டம்பின் இடையே வேளியேறியது,என்ன அதிசயம் பேல்ஸ்கள் அசையவே இல்லை. நடுவர் ஸ்டீவ் டன்னுக்கு தனது கண்களையே நம்ப முடியவில்லை. அதன் பிறகு தனது வழமையான துடுப்பாட்டத்தை தொடர்ந்த சிம்கொக்ஸ் 10 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 81 ஓட்டங்களைப்பெற்றார். இப்போட்டியில் தென்னாபிரிக்கா 53 ஓட்டங்களள்ல வெற்றி பெற இவரின் இந்த இன்னிங்ஸ் பெரிதும் உதவியது. இப்போட்டியின் ஆட்ட நாயகனாகவும் அவரே தெரிவு செய்யப்பட்டார்.



முறியடிக்கப்படாத சாதனைகள்


நியூசிலாந்து அணியின் சகல துறை வீரர் புரூஸ் டெய்லரின் ஒரு சாதனை இது வரை எவராலம் முறியடிக்கப்படவில்லை. 1965 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் இடம்பெற்ற இந்திய அணிக்கு எதிரான போட்டியே அவரது முதல் டெஸ்ட் போட்டி.இப்போட்டியில் துடுப்பெடுத்தாடிய டெய்லர் தனது முதல் போட்டியிலேயே சதம் பெற்றார் (105).பின்னர் பந்து வீச்சில் 86 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழத்தினார். டெஸ்ட் போட்டி ஒன்றில் சதம் பெற்ற வீரர் ஒருவர் பந்த வீச்சில் 5 விக்கெட்டுகளைப்பெற்ற சந்தர்ப்பங்கள் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 26 தடவைகள் இடம்பிடித்துள்ளன. ஆனால் புரூஸ் டெய்லருக்குப்பிறகு எவரும் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் இதை நிகழ்த்தவில்லை. ஆக டெய்லரின் சாதனை 44 வருடங்களாக முறியடிக்கப்படாம்ல உள்ளது.

No comments: