Thursday, July 2, 2009

இலங்கைக்கு தேயிலையை அறிமுகப்படுத்தியவர்



ஜேம்ஸ் டெய்லர் என்றதும் எமக்கு ஞாபகம் வருவது இலங்கையில் தேயிலையை அறிமுகப்படுத்தியவர் என்பது தான். இவரைப்பற்றி விரிவாக அறிந்து கொள்ள வேண்டியது இந்த தலைமுறையினருக்கு மிக அவசியமானதொன்று. பிரித்தானியரான ஜேம்ஸ் டெய்லர் 1835 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திகதி இங்கிலாந்தில் பிறந்தார். 1852 ஆம் ஆண்டு இவர் இலங்கைக்கு வந்த போது கண்டி மாவட்டத்தின் லூல்கந்துர தோட்டத்தில் நிரந்தரமாகத்தங்கி விட்டார். தேயிலை தொழிற்றுறை மற்றும் தேயிலைச்செய்கை பற்றியும் அறிந்து கொள்வதற்காக இவர் 1866 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு பயணம் செய்து அங்கு பல விடயங்களைக்கற்றார். பின்பு 1867 ஆம் ஆண்டு நாடு திரும்பிய இவர் தான் கற்ற விடயங்களையே மூலதனமாக்கொண்டு தான் வசித்த லூல்கந்துர தோட்டத்தில் 19 ஏக்கரில் தேயிலைப்பயிர்ச்செய்கையை ஆரம்பித்தார். அத்தோடு சிங்கோனாவையும் பயிரிட்டனர். இலங்கையில் முதன் முதலாக தேயிலை பயிரிடப்பட்ட இடமாக லூல்கந்துர தோட்டமே விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் 1872 ஆம் ஆண்டு இங்கு அவர் ஒரு தேயிலை தொழிற்சாலையையும் ஆரம்பித்தார். தேயிலை தொழிற்றுறையை இலங்கையில் அபிவிருத்தி செய்யும் பொருட்டு அச்சந்தர்ப்பத்தில் இங்கு வந்த ஸ்கொட்லாந்து நாட்டவரான தோமஸ் லிப்டனிடம் இணைந்து தேயிலையை பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பில் கலந்துரையாடினார் டெய்லர். ஐக்கிய இராச்சியத்தின் கோடீஸ்வரராக விளங்கிய தோமஸ் லிப்டன் 1890 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு செல்லவிருந்த பயணத்தை இடை நிறுத்தி இலங்கை வந்தார்.அதற்குக்காரணம் அப்போது இலங்கையின் தேயிலை உற்பத்தி பற்றி எழுந்த கதைகள் தான். டெய்லரை சந்தித்த தோமஸ் லிப்டன் அவரிடம் இலங்கைக்தேயிலையை வாங்கி பிரித்தானியாவில் விற்பனை செய்ய சம்மதம் தெரிவித்தார்.இதன் பிறகு டெய்லர் இலங்கையிலிருந்து தேயிலையை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு இத்துறையை முன்னேற்றினார். 23 பவுண்ட்களில் ஆரம்பித்த இவரது தேயிலை ஏற்றுமதி 81 தொன்களாக அதிகரித்து 1890 ஆம் ஆண்டின் இறுதியில் 22,900 தொன்களாக உச்சத்தை தொட்டது. அதன் பின்னர் டெய்லர் ஹேவாஹெட்ட பிரதேசத்தின் காட்டுப்பகுதியை சுத்தப்படுத்தி 19 ஏக்கரில் தேயிலை விதைகள் மூலம் தேயிலை பயிரிட்டார். தனது அயராத முயற்சி காரணமாக 1875 ஆம் ஆண்டு இலண்டனில் இடம்பெற்ற தேயிலை ஏல விற்பனையில் இலங்கைத்தேயிலையை இடம்பெறச்செய்தார்.இலங்கையின் தேயிலைத்தொழிற்றுறை அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டது. பல தேயிலை கம்பனிகள் இதன் இலாபத்தை அனுபவிக்க தயாராகின.சிறிய தேயிலை தோட்டங்கள் பலதை இந்த கம்பனிகள் விலை கொடுத்து வாங்கின. டெய்லர் இருந்த லூல்கந்துர தோட்டமும் இதற்கு இரையானது. இலங்கையில்முதன் முதலாக தேயிலையை பயிரிட்டவர் என்ற பெருமைக்குரிய டெய்லர் மிகுந்த மனவேதவையுடன் லூல்கந்துர தோட்டத்தை விட்டு வெளியேறினார்.தனது வாழ்நாளில் அரைவாசியை இலங்கையிலேயே கழித்தார்.அதாவது 57 வருடங்கள். 1892 ஆம் ஆண்டு உயிர் நீக்கும் வரை அவர் இலங்கை மண்ணை விட்டு நீங்கவில்லை. லூல்கந்துர தோட்டத்தை விட்டு நீங்கிய ஜேம்ஸ் டெய்லர் வயிற்று உபாதை நோயால் பாதிக்கப்பட்டு அவ்வாண்டே காலமானார். அவரது உடல் கண்டி மகியாவ மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.அவரது கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ள வாசகங்கள் இவை;


"In pious memory of James Taylor of Loolecondera Estate Ceylon, the pioneer of the cinchona and tea enterprise in this island, who died May 2, 1892, aged 57 years"..


ஜேம்ஸ் டெய்லர் இறந்து சரியாக ஒரு வருடம் கழித்து அதாவது 1893 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து சுமார் பத்து இலட்சம் தேயிலை பைக்கற்றுகள் இலண்டனுக்கு கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டு அமெரிக்காவின் சிக்காக்கோவில் இடம்பெற்ற உலக சந்தையில் விற்பனை செய்யப்பட்டது. 1867 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் உள்ள தேயிலை தோட்டங்களில் 80 வீதமானவை பிரித்தானிய கம்பனிகள் வசம் இருந்தன. 1971 ஆம் ஆண்டே இலங்கை அரசாங்கம் நிலவுரிமை சட்டத்தை அறிமுகப்படுத்தி பல தேயிலை தோட்டங்களை தன்வசமாக்கியது. 1992 ஆம் ஆண்டு ஜேம்ஸ் டெய்லர் இறந்து நூறாண்டுகள் நினைவு கூறப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் அப்போதைய பிரித்தானிய உயர்ஸ்தானிகராக இருந்த ஜோன் பீல்ட் (ஒணிடண ஊடிஞுடூஞீ) கூறிய வார்த்தைகள் உண்மையில் அர்த்தம் வாய்ந்ததாகத்தான் அமைந்தது.இலங்கையின் மத்திய மலை நாட்டை செதுக்கியவர்களுள் பல தனிப்பட்ட நபர்களும் தொழிலாளர்களும் அடங்கலாம், ஆனால் மத்திய மலை நாட்டை அழகு படுத்தியதில் ஜேம்ஸ் டெய்லர் என்ற மனிதரின் பங்கு அளவு கடந்தது. தேயிலையைப் பயிரிட்டதன் மூலம் அவர் இதை செய்தார், இவ்வாறு அவர் கூறினார்.


"It can be said of very few individuals that their labors have helped to shape the landscape of a country. But the beauty of the hill country as it now appears owes much to the inspiration of James Taylor, the man who introduced tea cultivation to Sri Lanka".


ஜேம்ஸ் டெய்லர் வாழ்ந்த இடத்தில் அவ்வாண்டு நூதன சாலை ஒன்றும் அமைக்கப்பட்டது. இன்று தேயிலைத்தொழிற்றுறையில் உலகில் தனித்துவமிக்க நாடாக விளங்குகிறது இலங்கை. மேலும் தேசிய வருமானத்தில் பெரும்பங்கு வகிக்கின்றது. இத்தனைக்கும் காரணமான ஜேம்ஸ் டெய்லர் என்ற மனிதரை நாமும் ஞாபகப்படுத்திக்கொள்வது தான் நாம் அவருக்கு செய்யும் நன்றிக்கடன்.

No comments: