Monday, June 29, 2009

ஐரோப்பியரால் உருவாக்கப்பட்ட அம்மன் ஆலயம்




சுமார் 200 வருடங்கள் பழமையான ஹங்வெல ஸ்ரீ அங்காளப்பரமேஸ்வரி ஆலயம்



இலங்கையில் காலனித்துவ ஆட்சி காலத்தில் பெருந்தோட்டப்பகுதிகளில் அமைந்த ஆலயங்கள் பல இன்று உரு தெரியாமல் போய்விட்டன. அவை குறித்த ஆராய்ச்சிகளும் கிடப்பில் போடப்பட்டு விட்டன. எனினும் ஐரோப்பியர் ஆட்சி காலத்தில் அவர்களாலேயே பெருந்தோட்டப்பகுதிகளில் உருவான ஒரு சில ஆலயங்கள் குறித்து இன்று நாம் அறிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. அப்படி உருவான ஒரு ஆலயம் தான் ஹங்வெல ஸ்ரீ அங்காளப்பரமேஸ்வரி ஆலயம்.
அவிசாவளையிலிருந்து கொழும்புக்குச்செல்லும் புதிய பாதையில் ஹங்வெல எனும் இடத்தில் அமைதியாக இருந்து அருள் பாலிக்கும் இந்த ஆலயத்தின் வரலாறு தொன்மை வாய்ந்ததாகும்.


சுமார் 200 வருடங்கள் பழமை வாய்ந்ததாக கருதப்படும் இந்த ஆலயம் இறப்பர் மரங்கள் சூழவுள்ள இயற்கை அன்னை ஆட்சி செய்யும் அமைதியான இடத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் விசேடம் என்னவெனில் இங்கு சுமார் 300 வருடங்கள் பழமையான ஆலமரம் ஒன்று வீற்றிருக்கின்றது. இதுவே இவ்வாலயத்தின் சரித்திரம் கூறுவதாக அமைந்துள்ளது. சுமார் 150 வருடங்களுக்கு முன்னர் இப்பகுதியில் தேயிலை தோட்டங்கள் இருந்ததாகவும் மேற்படி விருட்சத்தின் அடியில் இருந்த சக்தி வாய்ந்த கல்லையே அம்மனாக நினைத்து இப்பகுதி மக்கள் வழிபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இருநூறு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் கேரளா மாவட்டத்தில் இருந்து இங்கு வந்த மக்களின் வழிபாட்டுத்தலமாக இவ்விடம் இருந்திருக்கலாம் என்றும் எனினும் அதற்கு முன்னதாக இவ்விடத்தில் ஆலயம் இருந்திருக்கக்கூடிய ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அக்காலத்தில் இப்பகுதியில் சுமார் மூவாயிரம் குடும்பங்களுக்கு மேல் இருந்ததாகவும் கூடுதலாக பிராமணர்கள் பூஜை செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முக்கியமாக பிராமண ஜாதி என்று குறிப்பிடப்பட்ட பிறப்புச்சான்றிதழ்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.
ஹங்வெல என்ற பெயரில் இருந்து அங்காளப்பரமேஸ்வரி உருவானதா அல்லது அங்காளப்பரமேஸ்வரி எனும் பதத்திலிருந்த ஹங்வெல எனும் இடம் உருவானதா என்பது இன்று வரை கேள்விக்குறியாகவே உள்ளது. ஆரம்பத்தில் தேயிலை தோட்டங்கள் இருந்த இடத்தில் பின்னர் இறப்பர் தோட்டங்கள் உருவாகின. இங்கு வேலை செய்வதற்காக இந்தியாவின் திருச்சி மாவட்டத்தின் கரூர் எனும் இடத்தில் இருந்து மக்கள் வரவழைக்கப்பட்டனர் என்கிறார் இலங்கையின் பாரம்பரிய இந்து கோயில்கள் பற்றி ஆராய்ச்சி செய்து அற்புதமான பல உண்மைகளை வெளிப்படுத்தி வரும் என்.கே.எஸ்.திருச்செல்வம்.
தோட்டத்துரைக்கு காட்சி கொடுத்த அம்மன்
இங்கமைந்த இறப்பர் தோட்டத்தின் உரிமையாளராக இருந்தவர் இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த ஹோடன் புரூக் என்பவராவார். ஒருமுறை இவர் இத்தோட்டத்தின் வழியே நடந்து வரும் போது ஒரு பெண்ணை இவர் அவதானித்திருக்கிறார். இப்பகுதிக்கு புதிய முகமாக இருக்கின்றதே என அவர் இப்பெண்ணை பின்தொடர்ந்துள்ளார். ஒருகட்டத்தில் ஆலமரத்தடிக்கு வந்த பெண் மாயமாய் மறைந்துள்ளார். இக்காட்சியை கண்டு அதிசயித்த ஹோடன் புரூக் இதை தோட்டக்கங்காணிமார் மற்றும் வேலையாட்களிடம் இது குறித்து கூறியுள்ளார். இங்கு குடியிருக்கும் அம்மன் தான் பெண்ணுருவில் வந்திருப்பார் என பயபக்தியோடு தோட்ட மக்கள் கூற உடனடியாக அவ்விடத்தில் ஆலயம் ஒன்றை எழுப்ப அந்த வெள்ளைக்கார தோட்டத்துரை முடிவெடுத்தார்.
அதன் படி தோட்டத்தின் முக்கியஸ்தர்களை அழைத்து இது குறித்து அவர் கலந்துரையாடி இந்தியாவில் அமைந்துள்ள மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு ஒரு குழுவினரை அனுப்பி அவ்வாலய தோற்றம் குறித்து அறிந்து வரும்படியும் மேலும் அங்கிருந்து சிற்ப கலைஞர்களை அழைத்து வரும்படியும் கூறியுள்ளார். இதன்படி ஆலயம் அமைப்பதற்குரிய பொருட்கள் இந்தியாவிலிருந்து கொண்ட வரப்பட்டன.சிற்பாசாரியார்களும் அங்கிருந்து வந்தனர். மிகப்பழமையான ஆலமரத்தின் கீழ் அமைந்த கோயில் 1875 ஆம் ஆண்டு பெரிய கோயிலாக கட்டப்பட்டு கும்பாபிஷேகமும் இடம்பெற்றது.
இதற்குப்பிறகு சில வருடங்களில் ஹோடன் புரூக் இந்த தோட்டத்தை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டு இங்கிலாந்து சென்று விட்டார். தோட்டத்தொழிலாளர்களும் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து விட்டனர்.சுமார் நூறு வருடங்கள் வரை இவ்வாலயம் கைவிடப்பட்டு கவனிப்பாரறின்றி கிடந்தது.காலப்போக்கில் சிதைவடைந்து விட்டது. பின்னர் இத்தோட்டத்தைச்சேர்ந்த டி.செல்வநாயகம் என்பவர் கடந்த 15 வருடங்களாக இத்தோட்ட மக்களின் ஆதரவில் பரிபாலன சபை ஒன்றை உருவாக்கி இக்கோயிலை புனருத்தாரனம் செய்யும் முயற்சியில் இறங்கினார். தலைநகர் வாழ் வர்த்தகப்பெருமக்கள் மற்றும் அவிசாவளை மலையகத்தின் ஏனைய பகுதிகளைச்சேர்ந்த வர்த்தகர்கள்,தனவந்தர்கள் ஆகியோரின் பண மற்றும் பொருள் உதவியினால் படிப்படியாக இக்கோயில் புது மெருகுப்பெற்றது. அங்காளப்பரமேஸ்வரியின் அருள் கடாட்சத்தினால் கடந்த வருடம் 06-06-2009 அன்று இவ்வாலயத்தின் மகா கும்பாபிஷேகம் இடம்பெற்றது.
சுமார் 130 வருடங்களுக்குப்பிறகு இவ்வாலயத்தில் இரண்டாவது தடவையாக கும்பாபிஷேகம் இடம்பெற்றுள்ளது. இவ்வாலயத்திற்கு இன பேதம் பாராது அனைவரும் வந்து போகின்றமை மற்றுமோர் முக்கிய அம்சம். ஆலயத்தின் உட்பிரகாரத்தில் பக்கவாட்டின் இருபுறமும் அமைந்துள்ள சிலைகள் புதுமையான ஆலய அமைப்பினை எமக்குக்கூறுகின்றன. ஆரம்பத்தில் இங்கு சர்ப்பங்கள் உலாவித்திரிந்ததாகவும் இங்குள்ளோர் கூறுகின்றனர். ஆலயத்தின் பாரம்பரியம் கூறும் பழமை வாய்ந்த ஆல மர விருட்சத்தின் கீழ் தற்போது பிள்ளையார் வீற்றிருக்கிறார்.
நெடுநாட்களாக திருமணம் ஆகாத பெண்கள் ,குழந்தை பேறில்லாதவர்கள் இக்கோயிலை தரிசித்தால் உடன் பலன் கிட்டுவதாக இங்கு வருகை தந்த பக்தர்கள் மூலமாக அறியக்கிடைத்தது. பெருந்தோட்டப்பகுதிகளில் ஆங்கிலேயர்களால் பங்களாக்கள் தான் கட்டப்பட்டன.ஆனால் ஒரு வெள்ளைக்கார துரை ஆலயம் ஒன்றையே அமைத்துள்ளார் என்று நினைக்கும் போது நெகிழ்ச்சியாகத்தான் உள்ளது. ஆலயத்தின் சுற்றுப்புறத்தில் நிலவும் ஒரு வித சாந்தம் மனதை இலகுவாக்குகிறது என்பது மட்டும் உண்மை.
படம்,தகவல்சிவலிங்கம் சிவகுமாரன்

1 comment:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்