தற்போது காலாவதியாகிய அரசியல்வாதியாக விளங்கும் ஜீ.எல்.பீரிஸ் எனும் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கத் தயாராகும் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் முதலில் அவர் யாருடன் இணைந்துள்ளார் என்பதை தேடிப்பார்க்க வேண்டும்.பீரிஸ் இப்போது தனது 80 ஆவது வயதில் ஓய்வு காலத்தை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார். இந்த வயதில் அவர் மீண்டும் அரசியலுக்கு வந்து சர்வதேச நாடுகளுடன் தொடர்பை பேணி இலங்கை நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கப் போகின்றாரா? இதை அவருடன் இணையப்போகும் அரசியல்வாதிகள் தான் தமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும்.ஆனால் இவர்கள் அனைவரும் இணைந்து சஜித்தை நடுவீதியில் நிற்க வைக்கும் அதே வேளை தாமும் அவ்வாறே நடுவீதியில் நிற்கப்போகின்றனர். 159 பெரும்பான்மை ஆசனங்களை பாராளுமன்றத்தில் கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எவ்வாறு இவர்கள் கவிழ்க்கப் போகின்றனர் என்பதே ஒரு கேள்வி.
அநுரகுமார திசாநாயக்க தலைவராக உள்ள தேசிய மக்கள் சக்தியின் ஊழலுக்கெதிரான செயற்பாடுகளால் எதிர்க்கட்சி வரிசையில் உள்ளவர்களும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடும் அச்சத்தை எதிர்நோக்கியுள்ளனர்.ஏதாவதொரு வகையில் அநுர அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருவதை தமது பிரதான பணியாக அவர்கள் கொண்டிருந்தாலும் மிகவும் பலகீனமான எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளில் சிக்கிக்கொண்டுள்ள முன்னாள்அமைச்சர்களால் அதை செயற்படுத்த முடியாத நிலைமைகள் காணப்படுகின்றன.
எதிர்க்கட்சித் தலைவராக உள்ள சஜித் பிரேமதாச பாராளுமன்றத்துக்குள்ளேயும்வெளியேயும் காத்திரமாக செயற்பட முடியாத ஒருவராக விளங்குகின்றார். ரணில் விக்ரமசிங்கவை போன்று அவருக்கு சர்வதேச ரீதியான தொடர்புகள் இல்லாத அதே நேரம் உள்ளூரிலும் ஆளுமையற்ற தன்மையை வெளிப்படுத்தும் ஒருவராக உள்ளார்.
இதன் காரணமாக எதிரணியில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ள பலரும்இப்போது தமக்கு பொருத்தமான எதிர்க்கட்சித் தலைவரை தேட ஆரம்பித்து விட்டார்கள் என்று தான் கூற வேண்டியுள்ளது.
மகிந்த தரப்பில் உள்ள பல முன்னாள் அமைச்சர்கள் எம்.பிக்களே தற்போது அதிக ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளனர். ரணில் விக்ரமசிங்க இனி நேரடி அரசியலில் ஈடுபடுவார் என்று கூற முடியாது. அவர் அவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுவார் என்பதை அறிந்தே தேசிய மக்கள் சக்தியினர் அவசர அவசரமாக பட்டலந்த வதை முகாம் விவகாரத்தை கையிலெடுத்து அதை பாராளுமன்றம் வரை கொண்டு வந்தனர்.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடா விட்டாலும் ஊடகங்களுக்கு இனவாதகருத்துகளை அவ்வப்போது கூறி வரும் உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் சரத் வீரசேகர போன்றவர்களின் கதைகளை நாட்டு மக்கள் காடு கொடுத்து கேட்பதில்லை.
இவர்களை தூண்டி விடும் தரப்பினராக மகிந்த மற்றும் நாமல் தரப்பினர் விளங்குகின்றனர். சஜித்தின் ஜனாதிபதி கனவு இனிமேல் பலிக்காது என்ற நிலையிலேயே நாமல் ராஜபக்சவை அடுத்த ஜனாதிபதி என்ற ரீதியில் மொட்டுகட்சியினர் கதைகளை பரப்பி வந்தனர். ஆனால் நாமல் ராஜபக்ச மீது இளையோருக்கு இருக்கும் ஈர்ப்பு நாட்டு மக்களில் ஏனையோருக்கு இல்லை. ஏனென்றால் அவர் மீதும் பல குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்நிலையில் எதிரணியில் உள்ள சிலர் திடீரென முன்னாள் நிதி அமைச்சரும்புத்திஜீவியுமாக வலம் வந்த ஜீ.எல்.பீரிஸை வைத்து அனைத்து எதிர்க் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியை ஆரம்பித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவராக சஜித் ஒரு ஆளுமையற்றவராக விளங்குவதால் அவரை வெறுக்கும் எதிரணியினர் தனியே இயங்கி வருகின்றனர். அவரது தலைமைத்துவத்தை கேலி செய்யும் சரத் பொன்சேக்கா , பாட்டலி சம்பிக்க ரணவக்க, உதய கம்மன்பில் போன்றோரை வேறு வழியில் ஒன்றிணைக்க வேண்டுமானால் சஜித்தை விட அனுபவமும் அறிவும் பெற்ற வெளிநபர் ஒருவரை அணுக வேண்டிய தேவை எதிரணியினருக்கு ஏற்பட்டது. அதற்கு அவர்கள் தேடி கண்டு பிடித்த நபரே பேராசிரியர் பீரிஸ்.
கடந்த வாரம் கொழும்பிலுள்ள பீரிஸின் இல்லத்தில் எதிரணி உறுப்பினர்கள் பலர் ஒன்று கூடி சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர். கலந்து கொண்ட சில அரசியல் பிரமுகர்கள் கூறிய கருத்து குழப்பகரமானதாகவும் நகைச்சுவையானதாகவும் இருந்தது.
இது தேசிய மக்கள் சக்திக்கு எதிரான கூட்டணி அல்ல, எதிரணிகளை ஒன்றிணைக்க ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டணியே என சில சஜித் தரப்பு தமிழ் எம்.பிக்கள் கூறினர். அப்படியானால் இப்போது எதிரணி பிளவு பட்டு தான் இருக்கின்றது என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.
மேலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தின் பலவீனத்தையும் இதுஅம்பலப்படுத்தியுள்ளது. எல்லாவற்றையும் விட அரசியலில் காலாவதியான பீரிஸ் போன்றோரை தலைவராக் கொண்டு எதிரணியை ஒன்று திரட்டும் இந்த முயற்சி எதற்கு என்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. என்ன தான் பேராசிரியர் ஆக இருந்தாலும் ஜீ.எல்.பீரிஸின் கல்விப் புலமையை இலங்கை பெற்றது என்று கூற முடியாது. சந்திரிகா மூலம் தேசிய பட்டியல் ஊடாக அரசியலுக்கு பிரவேசித்த பீரிஸ் இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு எந்த பிரச்சினைகளும் இல்லையென சர்வதேச ஊடகங்களுக்கு இலங்கை சார்பாக குரல் கொடுக்கும் ஒரு அரசியல் ஊதுகுழலாகவே விளங்கினார். வெளிவிவகார அமைச்சராக இருந்த போது அவர் தாராளமாக தனது கருத்துகளை கூறியும் இலங்கை அரசை பாதுகாப்பதிலும் தனது புலமையைப் பாவித்துக்கொண்டார்.
சந்திரிகா பண்டாரநாயக்க அவரை அரசியலுக்கு கொண்டு வந்தமைக்கு பிரதானகாரணம் அவர் ஒரு சட்டத்துறை பேராசிரியராவார். தனது ஆட்சியில் சட்டரீதியான நகர்வுகளை மேற்கொள்ளவும் ஆலோசனைகளைப் பெறவுமே அவர் பீரிஸ் போன்றோரை தனது அமைச்சரவையிலும் இணைத்தார். ஆனால் சந்திரிகாவின் பதவி காலம் முடிந்து மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவானவுடன் அவருடன் சென்று இணைந்து அங்கேயும் அமைச்சராகி சகல சொகுசுகளையும் அனுபவித்த ஓரு அரசியல்வாதியாக மாறிப் போனார்.
தற்போது 80 ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கவுள்ள பீரிஸ் தனது இறுதி காலத்தில் அமைச்சராகவோ அல்லது திடீர் அரசியல் மாற்றத்தால் பிரதமர் பதவியையோ வகிக்க ஆசைப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது. கடந்த சில வாரங்களாக தேசிய மக்கள் சக்திக்குள் பிளவு என்ற செய்தி அடிபடத் தொடங்கியது. பிரதமர் ஹரிணி, ரோகித்த ராஜபக்ச விண்வெளிக்கு அனுப்பியதாகக் கூறப்படும் செயற்கை கோள் தொடர்பில் தவறான தகவல்களை பாராளுமன்றத்தில் வழங்கினார் என்பதை முன் வைத்து அவர் மீது மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குற்றம் சுமத்தி அவரை பிரதமர் பதவியிலிருந்து அகற்றுவதற்கு செயற்படுகின்றார்கள் என்ற கதைகள் பரவின. ஆனால் அப்படியொன்றும் இல்லையென்பதை தேசிய மக்கள் சக்தியினரே ஒரு நிகழ்வில் உணர்த்தினர். சிரேஷ்டஅமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஒன்றாக தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிகழ்வொன்றின் படம் அனைவரினதும் வாய்களை அடைத்து விட்டது.
தேசிய மக்கள் சக்தியில் எப்போது பிளவு வரும் என்று காத்துக் கிடந்தவர்கள் பீரிஸை பிடித்து பொது கூட்டணி அமைக்க முடிவு செய்து விட்டனர். ஆனால் யார் எங்கு கூட்டணி அமைத்தாலும் அல்லது அது தொடர்பான சந்திப்புகள் இடம்பெற்றாலும் ஓடோடிச் சென்று கலந்து கொள்ளும் தரப்பினராக தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகள் விளங்குகின்றனர். ஜீ.எல்.பீரிஸின் வீட்டில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் வெளியேறிய தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனிடம் கேள்விகள் எழுப்பிய ஒரு சிங்கள ஊடகவியலாளர் ஏன் சஜித்தின் தலைமைத்துவம் கசந்து விட்டதோ என்று கேள்வியெழுப்பிய போது அதற்கு ஒன்றும் கூறாது வாகனத்தில் ஏறிச் சென்றார் மனோ கணேசன்.
தற்போது காலாவதியாகிய அரசியல்வாதியாக விளங்கும் ஜீ.எல்.பீரிஸ் எனும் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கத் தயாராகும் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் முதலில் அவர் யாருடன் இணைந்துள்ளார் என்பதை தேடிப்பார்க்க வேண்டும். மாறாக தமது அற்ப அரசியல் ஆசைகளுக்காக இவ்வாறு ஓடோடிச் சென்று அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சிகளை செய்து கொண்டிருந்தால் ஏற்கனவே அவர்களை எதிர்க்கட்சியில் உட்கார வைத்த வாக்காளர்கள் அவர்களின் அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கி விடுவர் என்பதை அவர்கள் உணர வேண்டும்.
பீரிஸ் இப்போது தனது ஓய்வு காலத்தை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார். இந்த வயதில் அவர் மீண்டும் அரசியலுக்கு வந்து சர்வதேச நாடுகளுடன் தொடர்பை பேணி இலங்கை நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கப் போகின்றாரா? இதை அவருடன் இணையப்போகும் அரசியல்வாதிகள் தான் தமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும்.
ஆனால் இவர்கள் அனைவரும் இணைந்து சஜித்தை நடுவீதியில் நிற்க வைக்கும் அதே வேளை தாமும் அவ்வாறே நடுவீதியில் நிற்கப்போகின்றனர். 159 பெரும்பான்மை ஆசனங்களை பாராளுமன்றத்தில் கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எவ்வாறு இவர்கள் கவிழ்க்கப் போகின்றனர் என்பதே ஒரு கேள்வி.