நுவரெலியாவில் கடந்த கால ஊழல்கள் அம்பலப்படுத்தப்படுமா?
தேசிய மக்கள் சக்தியானது பாரம்பரிய கட்சி ஒன்றோடு இணைந்து உள்ளூராட்சிசபைகளை கைப்பற்றியுள்ளது என்றால் அது இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் என்று தான் கூற வேண்டும். இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்ததன் மூலம் அது நுவரெலியா மாவட்டத்தில் ஏழு சபைகளில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஏழாவது சபையான நோர்வூட் பிரதேச சபையில் மாத்திரம் இ.தொ.காவுக்கு எதிராக அங்குள்ள தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் செயற்பட்டு,ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் ஆதரவோடு சபையை கைப்பற்றியுள்ளனர்.
ஊழல்வாதிகளோடு சேரமாட்டோம் என ஆரம்பத்திலிருந்தே தேசிய மக்கள் சக்தியினர் கூறி வந்தாலும் அதை செயற்படுத்தியவர்கள் என்னவோ நோர்வூட் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் என்று தான் கூற வேண்டும். இதற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கலாம், எவ்வாறு இருதரப்பு இணக்கப்பாடுகளுக்கு ஏற்ப இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் பொறுப்பை பெற்றுக்கொடுக்கலாம் என்ற சிந்தனையில் நுவரெலியா மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
இதே வேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற அமைப்பின் மீதே தமக்கு நம்பிக்கையில்லையென்றும் வெற்றி பெற்ற ஆறு உறுப்பினர்களில் வேறு எவரை தவிசாளர் பொறுப்புக்கு தெரிவு செய்திருந்தாலும் தமது உறுப்பினர்கள் அனைவரும் அதற்கு இணங்கியிருக்க மாட்டோம் என நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்துள்ளமை முக்கிய விடயம்.நுவரெலியா மாவட்ட அபிருவித்திக்குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர ஆராச்சி கடந்த வாரம் ஊடகமொன்றுக்கு தெரிவித்த கருத்தில் தாம் எவருடனும் எந்த டீல்களையும் வைத்துக்கொள்ளவில்லையென்றும் நிச்சியாக திருடர்களை நாம் பிடிப்போம் என்றும் கூறியிருந்தார். ஜனாதிபதி அநுரவும் அதையே தனது தேர்தல் பிரசாரத்தின் பிரதான ஆயுதமாக பயன்படுத்தினார். அவர் கூறியது போன்று கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற ஊழல்கள் மற்றும் குற்றச்சம்பவங்கள் பற்றிய விசாரணைகளை அநுர அரசாங்கம் ஆரம்பித்துள்ள அதே வேளை பல முன்னாள் சிரேஷ்ட அமைச்சர்கள், எம்.பிக்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
ஆனால் நுவரெலியா மாவட்டத்தில் அவ்வாறு இடம்பெறுமா என்ற சந்தேகம் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த வாக்காளர்கள் மத்தியில் எழுந்துள்ளமைக்குக் காரணம், அவர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸோடு இணைந்து சபைகளை கைப்பற்றியுள்ளமையாகும். 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது பொதுஜன பெரமுனவின் உதவியுடன் ஆறு சபைகளை கைப்பற்றியது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். சில சபைகளில் நிர்வாக சீர்கேடுகள் ஊழல் சம்பவங்கள் இடம்பெற்றதை ஊடகங்கள் ஆதாரங்களோடு செய்தி வெளியிட்டிருந்தன.
காணி ஊழல் விவகாரத்தில் நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் 2022 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதன் தலைமையால் நீக்கப்பட்டு அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளும் இடம்பெற்றிருந்தன. ஆனால் விசாரணை அறிக்கைகள் பற்றி எந்த விடயங்களும் வெளிவராத நிலையில் அவர் சில நாட்களில் கட்சியின் நிகழ்வுகளில் சர்வசாதரணமாக கலந்து கொள்ள ஆரம்பித்திருந்தார். இம்முறை அவரே அச்சபையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போன்று நோர்வூட் பிரதேச சபையால் முன்னெடுக்கப்பட்ட கெசல்கமுவ ஓயா ஆற்றை அகலப்படுத்தும் திட்டமானது மாணிக்கக்கல் அகழ்வாக பின்பு மாற்றம் பெற்றது. இந்த விவகாரத்தில் நுவரெலியா மாவட்டத்தின் பல எம்.பிக்கள், மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டிருந்தனர்.
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத கட்டிடங்கள் அமைத்தல் மற்றும் காணி அபகரிப்புகள் என பல மோசடி சம்பவங்கள் இடம்பெற்றன. சில சம்பவங்களுக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. அக்கரபத்தனை பிரதேச சபைக்குட்பட் பகுதிகளில் அரச நிதியில் அமைக்கப்பட்டு பிரதேச சபைக்கு உரித்தாக வேண்டிய கட்டிடங்கள் இன்று தனி நபர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. சில சபைகளில் மிக மோசமான நிர்வாக சீர்கேடுகள் இடம்பெற்றதில் நகர அபிவிருத்தியென்பது பூஜ்ய நிலைமைக்கு சென்றது. குறிப்பாக தமிழர்கள் செறிந்து வாழ்ந்து வரும் அட்டன்–டிக்கோயா நகரசபையானது கழிவகற்றல் செயற்பாடுகளில் படுதோல்வியை சந்தித்த சபையாக விளங்கியது. அமைச்சர் ஆறுமுகன் உயிருடன் இருந்த காலத்திலேயே அவரின் கட்டுப்பாட்டில் இருந்த மேற்படி நகரசபையின் கழிவகற்றல் பிரச்சினைக்கு அவரால் தீர்வு காணமுடியவில்லை.
சில சபைகளின் அதிகாரிகள் மிகவும் அலட்சியப்போக்குடன் நடந்து கொண்டதுடன் அரசியல்வாதிகளின் ஊழல்களுக்கு துணை போயினர். 2020 இற்குப்பிறகு நாட்டில் உருவான கொரோனா தொற்று மற்றும் நெருக்கடிகள் காரணமாக அரசியல்வாதிகளின் ஊழல் செயற்பாடுகளைப் பற்றி அறிந்து கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை.
அதை தமக்கு சாதகமாக்கிக்கொண்ட சில அரசியல்வாதிகள் தமது கட்டுப்பாட்டில் இருந்த உள்ளூராட்சி சபைகளின் மூலம் பல சட்டவிரோத செயற்பாடுகளில் அச்சமின்றி ஈடுபட ஆரம்பித்தனர்.
2018 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் பதவி காலம் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதமே முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் மேற்படி சபைகள் உள்ளூராட்சி மன்ற உதவி ஆணையாளரின் நிர்வாகத்தின் கீழும் சபை செயலாளர்களின் கட்டுப்பாட்டிலும் இயங்கத் தொடங்கினாலும், முன்னாள் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், எம்.பிக்களின் ஆதிக்கம் தொடர்ந்தும் அங்கு நிலவியதை மறுக்க முடியாது. இந்த சூழ்நிலைகளுக்கு மத்தியில் 2024 ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தி ஆட்சியைப் பிடித்ததும் பல ஊழல் அரசியல்வாதிகள் தாம் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் உறைந்தனர். இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் விசாரணைகள் ,கைதுகளை அநுரவின் அரசாங்கம் ஆரம்பித்திருந்தது. மே மாதம் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் முடிவுற்றவுடன் ஆட்சியமைப்பதில் ஏற்பட்ட நெருக்கடிகளால் இந்த கைது விவகாரம் சற்று கிடப்பில் போடப்பட்டது.
ஆனால் ஜுன் மாதம் 2 ஆம் திகதி எவரும் எதிர்பாராத வகையில் இறைச்சி கடை கேள்வி கோரல் விவகாரத்தில் அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்திய சம்பவத்துக்காக தலவாக்கலை –லிந்துலை நகரசபையின் முன்னாள் தவிசாளர் அசோக்க சேபால இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தையடுத்து நுவரெலியா மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளின் கடந்த கால ஊழல்கள் விசாரிக்கப்பட்டு பலரும் கைது செய்யப்படுவர் என்ற எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டது. ஏனென்றால் அசோக்க சேபால கைதான பின்பே அவர் ஒரு குற்றச்சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற விடயம் மக்கள் மத்தியில் அம்பலமானது. ஆனால் ஏனைய கட்சிகளை சேர்ந்த முன்னாள் தவிசாளர்கள் மற்றும் உபதவிசாளர்கள் சிலரின் மீது பகிரங்கமாகவே பல குற்றச்சாட்டுகள் இருந்தமையை மக்கள் நன்கறிவர். எனவே இவர்களை கைது செய்வதற்கு தேசிய மக்கள் சக்தி அதிக சிரமப்படவேண்டிய அவசியமிருக்காது என்றே மக்கள் நினைத்தனர்.
ஆனால் அப்படியொன்றும் இடம்பெறவில்லை. இறுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவை வழங்க முன்வந்தது. இதன் காரணமாக கட்சி உறுப்பினர்கள் சிலரின் கடந்த கால ஊழல் செயற்பாடுகள் கிடப்பில் போடப்பட்டதொன்றாகவே இருக்கப்போகின்றதா என நுவரெலியா மாவட்ட மக்கள் புருவம் உயர்த்தியுள்ளனர். ஆனால் நாம் திருடர்களைப் பிடிப்போம் என்றே தேசிய மக்கள் சக்தியினர் தொடர்ந்தும் கூறி வருகின்றனர். ஆனால் நுவரெலியா மாவட்டத்தில் ஆட்சியமைத்துள்ள அவர்களுக்கு சில சபைகளில் புதிய நெருக்கடிகள் உருவாகியுள்ளதை
மறுக்க முடியாது. சில சபைகளின் ஊழல் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு எதிரான போக்கை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. அண்மையில் அட்டன்–டிக்கோயா நகர சபையின் தவிசாளர் மேற்கொண்ட சில செயற்பாடுகளுக்கு அச்சபையின் அதிகாரிகள் சிலர் முணுமுணுப்பை வெளிப்படுத்தியுள்ளமை முக்கிய விடயம். பல ஆண்டுகள் கழிவுகளோடு கழிவுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நகர சபையின் வாகனங்களை மீண்டும் இயங்கச் செய்யும் நடவடிக்கைகளை எடுத்துள்ள சபைத் தவிசாளர் , கழிவகற்றும் செயன்முறைகள் மற்றும் பொது மலசல கூட வருவாயில் நிலவி வந்த ஊழல் செயற்பாடுகளைப் பற்றி ஆராய்வதற்கு முடிவு செய்துள்ளதாகவும் நகரசபையின் கடந்த கால நிதி பயன்பாடுகள் பற்றிய முழுமையான கணக்காய்வுகளை மேற்கொள்ள ஆயத்தமாகி வருவதாகவும் தெரிய வருகின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரசோடு இணைந்து ஆட்சியமைத்தாலும் ஊழல்களுக்கு எதிரான செயற்பாடுகளில் தமது கட்சியின் கொள்கைகளை பின்பற்றுமாறு தேசிய மக்கள் சக்தியின் தலைமைகள் தமது உறுப்பினர்களுக்கு கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகவும் தெரிகின்றது.
அவ்வாறு நடக்கும் பட்சத்தில் நுவரெலியா மாவட்டத்தின் பல சபைகளில் கடந்த காலங்களில் இடம்பெற்ற முறைகேடுகள், ஊழல் செயற்பாடுகள், மோசடிகள் அம்பலத்துக்கு வருமா என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளதையும் மறுப்பதற்கில்லை.