உள்ளே ஆதரவு வெளியே விமர்சனம்?
நோர்வூட் பிரதேச சபையில் இலங்கை
தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ஆதரவளிக்க
முன் வராத நிலையில், தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்கள் தாம் ஆதரவளிக்க முன்
வந்ததுடன் உபதலைவர் பதவியையும் பெற்றுக்கொண்டனர். ஆனால் கூட்டணியின் இரண்டு கட்சிகளான
தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் தலைமைகள் தற்போது
அரசாங்கத்தை குறை கூறத்தொடங்கியுள்ளனர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின் போது நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய இரண்டு பிரதான மலையக அமைப்புகளுக்கும் பொது எதிரியாக இருந்த கட்சி தேசிய மக்கள் சக்தியாகும். தேர்தல் பிரசார மேடைகளில் இவ்விரு அமைப்புகளும் தேசிய மக்கள் சக்தியை வறுத்தெடுத்தன.
தொழிலாளர்களின் சம்பள விவகாரம், வீடமைப்பு போன்ற
விடயங்களில் தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையென இலங்கை தொழிலாளர்
காங்கிரஸ் மக்கள் சந்திப்புகளின் போது கடும்
விமர்சனத்தை முன்வைத்து வந்தது. மறு பக்கம் மலையக பெருந்தோட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளை
தீர்ப்பதில் தேசிய மக்கள் சக்திக்கு எந்த எதிர்கால திட்டங்களும் கிடையாது என தமிழ்
முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தொழிலாளர் தேசிய முன்னணி மற்றும் மலையக
மக்கள் முன்னணி என்பன தமது ஆதரவாளர்கள் மத்தியில் பிரசாரத்தை மேற்கொண்டது.
எது எப்படியானாலும் நுவரெலியா மாவட்டத்தின்
12 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிட்ட தேசிய
மக்கள் சக்தி, சில சபைகளில் அதிக ஆசனங்களையும் ஏனையவற்றில் மலையக கட்சிகளுக்கு சரிசமனான
ஆசனங்களையும் பெற்றதுடன் மலையக கட்சிகள் தனித்து ஆட்சியமைக்க முடியாத அளவுக்கு தனது
செல்வாக்கை தக்க வைத்துக்கொண்டது. இதனிடையே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பல தேசிய மக்கள்
சக்தியுடன் இணைந்து மாவட்டத்தில் சபைகளை கைப்பற்ற முடிவெடுத்தது. தமிழ் முற்போக்குக்
கூட்டணி சாணக்கியமான நகர்வுகளை மேற்கொள்ள தவறியது. இதன் காரணமாக அதற்கு எந்த சபைகளையும்
கைப்பற்ற முடியவில்லை.
ஆனால் நோர்வூட் பிரதேச சபையில் இலங்கை தொழிலாளர்
காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ஆதரவளிக்க முன் வராத
நிலையில், தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்கள் தாம் ஆதரவளிக்க முன் வந்ததுடன்
உபதலைவர் பதவியையும் பெற்றுக்கொண்டனர். அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில்
போட்டியிட்டனர். ஆனால் தேசிய மக்கள் சக்திக்கு
ஆதரவளித்தமை குறித்து அக்கட்சியின் தலைவரான
சஜித் பிரேமதாச மற்றும் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் எந்த பிரதிபலிப்புகளையும்
வெளிப்படுத்தவில்லை. அநேகமாக இது குறித்து தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைமைகள் சஜித்திடம் பேசியிருக்கலாம்.
நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு
ஆதரவளித்து சில சபைகளை கைப்பற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதற்குப்பிறகு எச்சந்தர்ப்பத்திலும்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவையோ அல்லது கட்சியையோ விமர்சித்து எங்கேயும் பேசவில்லை.
இனியும் அவ்வாறு பேச முடியாது என்று தான் கூற வேண்டியுள்ளது. ஆனால் நோர்வூட் பிரதேச
சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்க உதவிய
முற்போக்குக் கூட்டணியின் இரண்டு கட்சிகளான தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும்
மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் தலைமைகள் தற்போது அரசாங்கத்தை விமர்சிக்கத் தொடங்கியுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
அண்மையில் அட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில்
உரையாற்றிய மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.ராதாகிருஷ்ணன் தேசிய மக்கள் சக்தியின்
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்துமே பொய்யானவை என்றும் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில்
திருப்தியடைய முடியாத அளவுக்கு கொலைகளும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக
கூறியுள்ளார். மேலும் கடந்த ஒன்பதாம் திகதி பாராளுமன்றில் உரையாற்றிய அவர் அத்தியாவசிய
பொருட்களின் விலைகள் அனைத்துமே உயர்ந்துள்ளன.
இதே வேளை தோட்டத்தொழிலாளர்களுக்கு நாட் சம்பளம் 1700 ரூபாய் வழங்கப்படும் என
அரசாங்கம் கூறினாலும் அதை பெற்றுக்கொடுக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று
கூறியிருந்தார்.
அதே வேளை நுவரெலியா மாவட்டத்தின் அட்டன் கல்வி
வலயத்துக்கு பெரும்பான்மையின அதிகாரி ஒருவரை நியமிக்க இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது
என பாராளுமன்றத்தில் வே.ராதாகிருஷ்ணன் எம்.பி கூறியுள்ளதுடன் அது குறித்து
பழனி திகாம்பரம் எம்.பியும் தனது அதிருப்பதியை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ்
பாடசாலைகள் அதிகம் கொண்ட அட்டன் கல்வி வலயத்துக்கு தராதரத்தினை காட்டி பெரும்பான்மை
அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கு இந்த அரசாங்கம் முயற்சி செய்கின்றது என்பது இவர்களின்
குற்றச்சாட்டு. ஆனால் குறித்த வலயக் கல்வி பணிமனைக்கு இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம்
1 ஐ கொண்ட எவரும் விண்ணப்பிக்கலாம் என்றே விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. மேற்படி
தரத்தினை கொண்ட தமிழ் அதிகாரிகள் எவரும் மத்திய மாகாணத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் முதல் தரத்தினை கொண்ட தமிழ் பெண் அதிகாரி
ஒருவர் இரண்டரை வருடங்களாக மேற்படி வலயக் கல்வி பணிமனையில் பிரதி கல்வி பணிப்பாளராக
பணியமர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற
உறுப்பினர்களுடன் அரசியல் நட்பை பேணி வருகின்றது
தமிழ் முற்போக்குக் கூட்டணி. அவ்வாறான ஒரு நட்பு இல்லையென்றால் நோர்வூட் பிரதேச சபையில்
அவர்களுக்கு ஆதரவளித்திருக்கவும் முடியாது, உப தவிசாளர் பதவியை பெற்றிருக்கவும் முடியாது.
எனவே உள்ளே நட்பையும் ஆதரவையும் பேணிக்கொண்டு வெளியே விமர்சன அரசியலை இவர்கள் முன்னெடுத்து
வருவதானது ஒரு தெளிவற்ற போக்கை காட்டி நிற்கின்றது. நோர்வூட் பிரதேச சபை விவகாரத்தில் தாம் ஏன் தேசிய
மக்கள் சக்திக்கு ஆதரவளித்தோம் என்பது குறித்து இதுவரை தமிழ் முற்போக்குக் கூட்டணி
எந்த விளக்கத்தையும் எங்கேயும் கூறவில்லை. ஆனால் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கின்றோம்
என வெளிப்படையாக கூறிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸை இதில் பாராட்டலாம். தமிழ் முற்போக்குக்
கூட்டணிக்கு 2018 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் மாவட்டத்தில்
எந்த சபையையும் கைப்பற்ற முடியாது போயிற்று. இம்முறை நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.காவை
ஆட்சியமைக்க விடாது தடுத்து நிறுத்தியமையை சாணக்கியமான நகர்வு என்று கூற முடியாது.
ஏனென்றால் தமது கொள்கைக்கு எதிராக செயற்பட்ட மேற்படி சபையின் உறுப்பினர்களுக்கு எதிராக
நடவடிக்கை எடுக்கப்போவதாக ஏற்கனவே நுவரெலியா மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற
உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராச்சி தெரிவித்திருந்தமை முக்கிய விடயம்.