உலகளாவிய தகவல் அணுகலுக்கான சர்வதேச தினம் இன்று செப்டெம்பர் 28 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. இவ்வருடத்துக்கான கருப்பொருளாக ‘டிஜிட்டல் யுகத்தில் சுற்றுச்சூழல் தகவல்களை அணுகுவதை உறுதி செய்தல் ‘ என்ற விடயத்தை யுனஸ்கோ அமைப்பு முன்மொழிந்துள்ளது. இது தொடர்பில் இரண்டு நாள் மாநாடு 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் இடம்பெறுகின்றமை முக்கிய விடயம்.
2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகளின் கல்வி,அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு (UNESCO), செப்டம்பர் 28 ஆம் தேதியை சர்வதேச தகவல் அணுகல் தினமாக அறிவித்தது. உலகில் உள்ள பல சிவில் சமூக அமைப்புகளும் அரசு அமைப்புகளும் இதை ஏற்று தகவல் பெறும் உரிமையானது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் ஒரு அம்சம் என பிரசாரங்களை மேற்கொண்டன. இதையடுத்து ஐ.நா. பொதுச் சபையானது செப்டம்பர் 28, 2019 அன்று இத்தினத்தை சர்வதேச தகவல் அணுகல் தினமாக ஏற்றுக்கொண்டது.
தகவல்களை பெறுவது மனித உரிமைகளில் ஒன்று என்ற அடிப்படையில் இன்று உலகளாவிய ரீதியில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களுக்கு தகவல்களை கொண்டு சேர்ப்பதில் வெகுஜன ஊடகங்கள் பிரதான இடத்தை வகித்தாலும் நவீன டிஜிட்டல் யுகத்தில் ஒவ்வொரு தனிநபரும் தமக்கு தேவையான தகவல்களை சட்டரீதியாகப் பெற்றுக்கொள்ளும் வழிவகைகளை அபிவிருத்தியடைந்த நாடுகள் செய்து வருகின்றன.
டிஜிட்டல் உலகில் உடனுக்குடன் சரியான தகவல்களைப் பெற்றுக்கொள்வதென்பது சவாலான விடயம் என்றாலும் இவ்வருடத்தின் கருப்பொருள்., சரியான தகவல்களை சரியான நேரத்தில் எல்லைகளை தாண்டி அணுகும் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக உள்ளது.
காலநிலை மாற்றம், சுற்றுச் சூழல் மாசு, பல்லுயிர் மற்றும் பேரிடர் அபாயங்களை உள்ளடக்கிய சுற்றுச்சூழல் தரவுகள் என்பன தேசிய எல்லைகளை கடந்து, வெளிப்படையான மற்றும் உலகளாவிய தகவல் பகிர்வை அவசியமாக்குகிறது.
காலநிலை மாற்றத்தால் சுற்றுச்சூழல் பேரழிவின் ஆபத்தில் உள்ள மக்களுக்கு தகவலுக்கான அணுகல் மிகவும் முக்கியமானது. டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் திறந்த தரவு தளங்கள் எவ்வாறு பொது அணுகலை மேம்படுத்துகின்றன,
வெளிப்படைத்தன்மையை வளர்க்கின்றன, மேலும் குடிமக்கள் மற்றும் பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு , சுற்றுச்சூழல் நிர்வாகம் மற்றும் அதன் நிலையான வளர்ச்சியில் பங்கேற்க எவ்வாறு அதிகாரம் அளிக்கப்படுகின்றன என்பதை இந்த கருப்பொருள் எடுத்துக்காட்டுகிறது.
உலக நாடுகளில் சட்டரீதியாக தகவல்களை அணுகுவதற்கு தகவல் அறியும் சட்டமூலமே ஒரு கருவியாக உள்ளது. ஆனால் அப்பொறிமுறை ஆட்சியாளர்களால் சரியாக முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகின்றன. தென்னாசியாவில் 2016 ஆம் ஆண்டு தகவல் அறியும் சட்டமூலத்தை கொண்டு வந்த நாடாக இலங்கை உள்ளது. 2017 ஆம் ஆண்டு தகவல் அறியும் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டு பொதுமக்கள் தகவல்களை அறியும் பொறிமுறை ஏற்படுத்தப்பட்டாலும் கூட, இன்னும் இச்சட்டம் குறித்த தெளிவு பெரும்பான்மையான மக்களை சென்றடையவில்லையென்பதை ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றனர்.
இதன் காரணமாக கூடுதலாக ஊடகவியலாளர்களே இச்சட்டத்தைப் பயன்படுத்தி பல சவால்களுக்கு மத்தியில் தகவல்களைப் பெற்று அவற்றை ஊடகங்கள் வாயிலாக (பெரும்பாலும் அச்சு ஊடகங்கள் வாயிலாக) மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர்.
தகவல்களை அணுகி அவற்றை அறிந்து கொள்ளும் பொறிமுறையானது ஒரு நாட்டில் யார் ஆட்சியமைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அளவுக்கு மக்களை வழிப்படுத்தும் வலிமை கொண்டது என யுனஸ்கோ கூறுகின்றது. தகவல்களை அணுகுதல் தொடர்பான சட்டங்களை ஏற்றுக்கொள்ளுல் , அதை செயற்படுத்தல் தொடர்பாக முன்னேற்ற அறிக்கைகளை மற்றும் தரவுகள் இவற்றை நிரூபித்துள்ளன.
தகவல்களை அறிந்த குடிமக்கள், உதாரணமாக தேர்தல் காலத்தில் வாக்களிக்கச் செல்லும் போது சில முடிவுகளை எடுக்க முடியும். குடிமக்கள் தாங்கள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறார்கள் என்பதை அறிந்தால் மட்டுமே, அவர்கள் தங்கள் ஆட்சியாளர்களை தங்கள் முடிவுகள் மற்றும் செயல்களுக்குப் பொறுப்பேற்க வைக்க முடியும். தகவல் என்பது ஒரு சக்தி. எனவே, தகவலுக்கான உலகளாவிய அணுகல் என்பது ஆரோக்கியமான , அறிவார்ந்த சமூகங்களின் ஒரு ஆதாரம் என யுனஸ்கோ அமைப்பு இவ்வருட தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தகவலுக்கான உலகளாவிய அணுகல் என்பது அனைவருக்கும் தகவல்களைத் தேட, பெற மற்றும் வழங்க உரிமை உள்ளது என்பதாகும். இந்த உரிமை கருத்து சுதந்திரத்திற்கான உரிமையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். ஆர்வமுள்ள பிரச்சினைகள் குறித்து பொதுமக்களுக்கு தகவல்களைத் தெரிவிப்பதில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன, எனவே, தகவல்களை அணுகுவதற்கான உலகளாவிய உரிமையும் பத்திரிகை சுதந்திரத்திற்கான உரிமையுடன் பிணைக்கப்பட்டுள்ளது என யுன்ஸ்கோ மேலும் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் தகவல் அறியும் சட்டமூலமானது ஊடகவியலாளர்கள் , ஊடக அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மாத்திரம் பயன்படுத்த கூடியதாக அல்லாது அனைத்து மக்களிடமும் சென்றடையும் பொறிமுறையை அரசாங்கம் உறுதிபடுத்த வேண்டும். மேலும் தகவல் அறியும் ஆணைக்குழு சுயாதீனமாக இயங்குவதற்குரிய வழிவகைகளையும் வளங்களையும் ஏற்படுத்தி கொடுத்தல் அவசியம். ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டு எட்டு வருடங்களையும் கடந்தும் நிரந்தரமான ஒரு அலுவலகம் இன்றி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இரண்டு அறைகளில் ஆணைக்குழு இயங்கி வருவதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
மேலும் ஊடக அமைச்சின் கீழ் ஆணைக்குழு இயங்குவதும் அதன் சுயாதீன தன்மையை பாதிப்பதாக சிவில் சமூகத்தினர் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் தகவல்களைப் வழங்குவதற்கு இலங்கையிலுள்ள பொது நிறுவனங்கள் இன்னும் தயாராக இல்லை. முதலாம் உலக நாடுகளில் உள்ள அரச நிறுவனங்களில் எத்தருணத்திலும் தகவல்களைப்பெறத்தக்கதாக டிஜிட்டல் முறையிலான வசதிகள் உள்ளன. அங்கு தகவல் அறியும் சட்டமூலம் இருந்தாலும் கூட எவரும் விண்ணப்பித்து பெறக் கூடிய அவசியம் இல்லை.
மக்களுக்கு தேயைான தகவல்கள் , தரவுகள் டிஜிட்டல் முறையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.தகவல்களைப் பெறுதல் என்பது ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தும் அதே வேளை எதிர்காலத்தில் மோசடிகளை கட்டுப்படுத்தும் எனலாம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது ஊழல் ,மோசடிகளுக்கு எதிரான யுத்தத்தை ஆரம்பித்துள்ளோம் என்கிறது. அவ்வாறாயின் பொது நிறுவனங்களில் இடம்பெறும் அல்லது இடம்பெற்ற மோசடிகளை அம்பலப்படுத்துவதற்கு தகவல் அறியும் சட்டமூலத்தை பயன்படுத்தத் தக்க அப்பொறிமுறையை வலுப்படுத்த வேண்டியுள்ளது. நாட்டின் அனைத்து பிரஜைகளும் ,பொது நிதிகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளும் உரிமை கொண்டவர்களாவர். அவற்றை உறுதி செய்வதற்கு தற்போதய அரசாங்கம் தகவல் அறியும் சட்டமூலத்தை அனைத்துத் தரப்பினரிடமும் கொண்டு செல்ல வேண்டிய கடப்பாட்டை கொண்டிருக்கும் அதே வேளை தகவல் அறியும் ஆணைக்குழுவின் சுயாதீன தன்மையை உறுதிசெய்ய வேண்டும்.