தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது சகல பண்டிகைகளையும் சமய நிகழ்வுகளையும் தேசிய ரீதியாக அனுஷ்டிக்கும் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இனங்களிடையே தேசிய நல்லுறவை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாக இதை கருதலாம். கடந்த வருடம் தேசிய வெசாக் தினம் நுவரெலியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. அதே போன்று தேசிய தீபாவளி பண்டிகை அட்டன் மாநகரில் கடந்த வரும் அரசாங்கத்தின் அனுசரணையோடு கொண்டாடப்பட்டது.
இந்த வரிசையில் தேசிய பொங்கல் விழா கடந்த 17 ஆம் திகதி அட்டன் மாநகரில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு தேசிய பொங்கல் விழா எனக் கூறப்பட்டாலும் அரசாங்கம் நேரடியாக இதில் அனுசரணை வழங்கியிருக்கவில்லை. இந்த நிகழ்வானது தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ‘ ஒற்றுமையை விதைப்போம் நாடு முழுவதும் அறுவடை செய்வோம் ‘ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றது. நாட்டின் இளைஞர் சமூகங்களின் அபிவிருத்திக்காகவும் மேம்பாட்டுக்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு அரச நிறுவனமாக இளைஞர் சேவைகள் மன்றம் விளங்குவதால்இ மன்றம் முன்னெடுக்கும் தேசிய ரீதியான நிகழ்வுகளுக்கு அரசாங்கமே பின்புலமாக செயற்படுகின்றது எனக் கூறலாம். ஒன்பது மாகாணங்களிலும் இயங்கும் இளைஞர் குழாமினை ஓரிடத்தில் ஒன்றிணைத்து இந்த பொங்கல் விழாவை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. எங்கு நடத்துவது என சில மாகாணங்களில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் சில இடங்களில் அதற்கான சம்மதங்கள் பெறப்படவில்லையென அறிகிறோம்.
இறுதித்தருணத்திலேயே மத்திய மாகாணத்தின் அட்டன் நகரில் நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டது. வடக்கு கிழக்குக்கு வெளியே அதிகம் தமிழர்கள் வாழ்ந்து வரும் மாகாணமாக மத்திய மாகாணம் விளங்குகின்றது. அதில் தமிழர்கள் செறிந்து வாழக் கூடிய மாவட்டமாக நுவரெலியா விளங்குவதால் அங்குள்ள பிரதான நகரான அட்டனில் இதை நடத்துவதற்கு இறுதித் தருணத்தில் தீர்மானிக்கப்பட்டு 13 ஆம் திகதி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. நிகழ்வை 17 ஆம் திகதி நடத்துவதற்கு முடிவு காணப்பட்டு அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் சமய அனுஷ்டானங்களையும்இ கலை நிகழ்வுகளை ஆலய வளாகத்திலும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அன்றைய தினம் இரவு அட்டன் பஸ் தரிப்பிட வளாகத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இசைக்குழுவினதும் நடன குழுவினரதும் பங்களிப்புடனான இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
தேசிய சேவைகள் மன்றம் மற்றும் அதனோடு இணைந்து செயற்படும் இளைஞர்கள் கழகங்களின் பங்களிப்போடு இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச இளைஞர் அணியினரின் தலையீடுகளும் பங்களிப்புகளும் இதில் இடம்பெற்றிருந்தன. ஒரு மாகாணத்துக்கு ஐம்பது பேர் என்ற கணக்கில் ஒன்பது மாகாணங்களிலிருந்தும் நானூறுக்கும் அதிகமான இளைஞர் யுவதிகள் பஸ்களில் அட்டனுக்கு வருகை தந்திருந்தமை முக்கிய விடயம். மட்டுமின்றி அட்டன் புகையிரத நிலைய மேடையில் சுமார் ஆயிரம் பேருக்கு வாழை இலையில் மதிய உணவும் பரிமாறப்பட்டது.
மேற்படி நிகழ்வு ஏனைய மாகாணங்களிலிருந்து வருகை தந்திருக்கக் கூடிய இளைஞர்களுக்கு புதிய அனுபவங்களை தந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் தமிழர்கள் செறிந்து வாழ்ந்து வரும் அட்டன் பிரதேச இளைஞர்களுக்கும்இ மக்களுக்கும் பெருந்தோட்ட சமூகத்தினருக்கும் இந்த நிகழ்வு சில கசப்பான உணர்வுகளையும் ஏற்படுத்த தவறவில்லை.
இந்த நிகழ்வுக்கான அழைப்பிதழிலேயே தொனிப்பொருள் உணர்த்திய ஒற்றுமை காணாமல் போயிருந்தமை முக்கிய விடயம். தொனிப்பொருள் மாத்திரமே தமிழில் எழுத்துப் பிழையுடன் காணப்பட்ட அதே வேளை ஏனைய தகவல்கள் சிங்கள மொழியில் இருந்தன. நிகழ்வு இடம்பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பதாக அட்டன் நகரின் சில பகுதிகளுக்கு மாத்திரம் இந்த அழைப்பிதழ்கள் விநியோகிக்கப்பட்டன. அழைப்பிதழில் தமிழை காணவில்லையே என சில தமிழ் இளைஞர்கள் தமது கொதிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். சமூக ஊடகங்களில் இது பேசு பொருளாகியிருந்தது. தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவம் செய்யும் பிரதேச இளைஞர் ஒருங்கிணைப்பாளர்கள் இதற்கு பொறுப்பான பதில்களை தரவில்லை.
அழைப்பிதழை தலைநகர் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற நிர்வாகிகளே அச்சிட்டனர் என்றும் தமக்கும் அதற்கும் சம்பந்தமில்லையென தமது பொறுப்பிலிருந்து நழுவிச்செல்லவே முயன்றனர். முழுமையான தமிழ் மொழியில் வேண்டுமென்றால் மறுநாள் அழைப்பிதழ் அச்சிட்டு தருகிறோம் என்ற சமாளிப்பு வார்த்தைகளும் வெளியாகியிருந்தன. அழைப்பிதழில் மொழி பிரச்சினை இவ்வாறு இருந்த அதே நேரம் நகரில் பல முக்கியஸ்தர்களுக்கும் அரச நிறுவனங்களுக்கும் அழைப்பிதழே வழங்கப்படவில்லையென்பது மற்றுமொரு சர்ச்சையானது. அட்டன் நகரின் முக்கியஸ்தர்கள் பல பேர் தமது பிரதேசத்தில் இப்படி ஒரு நிகழ்வு இடம்பெறுவது குறித்து அறிந்திருக்கவில்லையென்றும் எவரும் அழைப்பிதழ் தரவில்லையென்றும் தெரிவித்தனர். மிக முக்கியமாக இந்நிகழ்வு குறித்து ஊடகங்களுக்கு தெளிவூட்டலோ அல்லது அழைப்பிதழோ வழங்கப்படவில்லை.
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் பெருந்தோட்டப்பகுதி மக்கள் மற்றும் அங்கு வாழ்ந்து வரும் இளைஞர் சமூகத்தினரின் பிரசன்னம் இந்நிகழ்வில் இடம்பெற்றிருக்கவில்லை. காரணம் அவர்களுக்கும் இது குறித்த எந்த தகவல்களும் தெரிந்திருக்கவில்லை. நாட்டின் ஒன்பது மாகாணங்களிலுமுள்ள இளைஞர் யுவதிகள் அட்டன் நகருக்கு வந்தடைந்தாலும் அட்டன் பிரதேசத்தை அண்மித்த நகரங்கள் மற்றும் பெருந்தோட்டப்பகுதிகளிலிருந்து எவருக்கும் இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை.
இவ்வாறான சில குறைபாடுகளுக்குப்பின்னரே இந்த நிகழ்வு மிகவும் அவசர அவசரமாக இறுதித் தருணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டமை வெளிச்சத்துக்கு வந்தது. பொங்கல் பண்டிகையின் பாரம்பரியம்இ அது உணர்த்தும் தத்துவங்களை ஏனைய இனத்தவர்கள் புரிந்து அறிந்து கொள்ளும் வகையில் இந்த நிகழ்வு இடம்பெறவில்லையென்ற குறை முன்வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வின் கருப்பொருளுக்கமைய ஒற்றுமையை எங்கு விதைப்பது யார் அதை அறுவடை செய்யப்போவது என்ற கேள்விகள் பலருக்கும் எழுந்திருந்தன.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முயற்சியையும் அர்ப்பணிப்பையும் நிச்சியம் பாராட்டத்தான் வேண்டும். ஆனால் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையை அதுவும் தமிழர்கள் செறிந்து வாழ்ந்து வரும் ஒரு பிரதேசத்தில் கொண்டாடும் போது எத்தகைய முன் ஏற்பாடுகளை முன்னெடுத்திருக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருத்தல் அவசியம். நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள பத்து பிரதேச செயலகங்களிலும் கடமையாற்றும் பத்து இளைஞர் சேவைகள் அதிகாரிகளில் மூன்று பேர் மாத்திரமே தமிழர்கள். நுவரெலியாஇ தலவாக்கலை மற்றும் நோர்வூட் பிரதேச செயலகங்களில் இவர்கள் கடமையாற்றுகின்றனர். இந்நிகழ்வை வெற்றிகரமாக்குவதற்கு தம்மால் இயன்ற பங்களிப்பை இவர்கள் வழங்கியிருந்ததையும் சுட்டிக்காட்ட வேண்டும். மேற்படி நிகழ்வை முன்னெடுப்பதற்கான மனித வளம்இ நிதிஇ போக்குவரத்து ஆகியவற்றில் நிலவிய பற்றாக்குறைகள் இந்நிகழ்வு உரியோரை சென்றடைவதற்கு தடையாக இருந்திருக்கலாம்.
ஆனால் அரசாங்கம் இதற்கு பிரத்தியேகமாக சில பங்களிப்புகளை வழங்கியிருக்கலாம் என்பது பலரினதும் கருத்தாக உள்ளது. இலங்கையில் சமாதான நகரம் என்ற பெயர் அட்டனுக்கு உள்ளது. மலையக மக்களின் நீண்ட கால பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக தேசிய மக்கள் சக்தியினரால் உருவாக்கப்பட்ட தீர்வுகள் அடங்கிய ஆவணத்தொகுப்பின் பெயர் ‘அட்டன் பிரகடனம்’ என்பதாகும். அதை அட்டனில் வைத்து வெளியிட்டவர் இப்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆவார். எனவே அட்டன் நகரில் ஏற்பாடு செய்யப்படும் தேசிய நிகழ்வுகளுக்கு அதன் முக்கியத்துவம் கருதி ஒரு வகையில் அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டிய தேவை ஒன்று உள்ளது.
தேசிய இளைஞர் பொங்கல் நிகழ்வின் கருப்பொருள் ஒற்றுமையை விதைப்போம் நாடு முழுவதும் அறுவடை செய்வோம் என்பதாக இருந்தது. ஒன்பது மாகாணங்களிலிருந்தும் வருகை தந்த சுமார் ஐநூறு பேர் ஒன்பது பானைகளில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். தமக்குள் அவர்கள் கருத்துப் பரிமாற்றங்களை ஏற்படுத்தியிருக்கலாம். ஒற்றுமையையும் விதைத்திருக்கலாம்இ ஆனால் பொங்கல் விழா இடம்பெற்ற அட்டன் மற்றும் அதனை சூழவுள்ள பெருந்தோட்டப்பகுதி இளைஞர்கள் எத்தனைப் பேரை இவர்கள் சந்தித்தனர்இ ஒற்றுமையை விதைத்தனர் என்ற கேள்வி இப்பகுதி மக்களிடையே உள்ளது. நுவரெலியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். ஆனால் எதிர்க்கட்சி வரிசையில் எவரும் இதில் கலந்து கொண்டிருக்கவில்லை. அவர்களுக்கு உரிய முறையில் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டனவா என்பது தெரியவில்லை. ஒற்றுமையை விதைப்பது பற்றி எவரும் பேசலாம்இ கருத்துத் தெரிவிக்கலாம். ஆனால் அதை எங்கு எப்படி விதைப்பது என்பது பற்றிய தெளிவு மிக அவசியம். விதைத்த பின்னர் அதை எவ்வாறு வளர்த்தெடுப்பது என்பது அதை விட பிரதானமான செயல். விதைக்கவே இல்லை எனும் போது எவ்வாறு அறுவடையைப் பற்றி பேசுவது?